Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 19.2

Advertisement

AshrafHameedaT

Administrator
நதியோட்டம் – 19

தான் இரண்டாந்தாரமா? நினைக்கவே குமட்டிக்கொண்டு வந்தது. எப்படியெல்லாம் தன்னை நடித்து ஏமாற்றியிருக்கிறான். அவனது சுயரூபம் தெரிந்து அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அந்த நொடி தன்னுடைய கர்வம் மொத்தமும் அழிந்தது. ஆம் கர்வமே. அவளிடம் எப்போதும் தான் எடுக்கும் முடிவுகள் தீர்க்கமாகவும், தன்னுடைய செயல்கள் அனைத்தும் தெளிவாகவும் இருப்பதாக ஒரு கர்வம் இருந்துகொண்டே இருக்கும்.
இதுவரை அதை அவள் யாரிடமும் வெளிக்காட்டிக்கொண்டதே இல்லை. அனைவரும் தன்னை புத்திசாலி என பாராட்டும் போதெல்லாம் மனதிற்குள் இறுமாந்து போவாள்.

இப்போது அதற்கெல்லாம் சேர்த்துவைத்து மரண அடி விழுந்துவிட்டதை எண்ணி துடித்துபோனாள். எந்த இடத்தில் தவறவிட்டேன்? எது தன்னுடைய புத்தியை மழுங்கடித்தது? என நினைக்க அதற்குள் அடுத்த பேச்சு அவளை ஒரேடியாக சாய்த்தது.

“அவளை குழந்தை பெத்ததும் அனுப்பிடுவீங்க தானே ஆகாஷ்?...” இப்போதும் கொஞ்சம் தயக்கத்தோடு கேட்டவளுக்கு ஏனோ கோவமாக கேட்க தோன்றவில்லை.
“குழந்தைக்காகவா இந்த நாடகம்?...”அவன் மேல் வைத்திருந்த காதலும் நம்பிகையும் இப்போது தீட்சண்யாவின் உயிரை அணு அணுவாக அறுத்தது.

“என்னை இன்னுமா நீ நம்பலை ஷைலு. என்னோட ஷைலுவை நான் ஏமாத்துவேனா? நீ என்னோட உயிர்டா. உன்னால மட்டும் குழந்தை பெத்துக்க முடிஞ்சா நான் எதுக்காக கண்டவளையும் ரெண்டாவதா கல்யாணம் செய்துக்க போறேன்...”

“குழந்தை பிறந்ததும் அவளை இங்கிருந்து அனுப்பிடுவேன். எனக்கு நீயும் நம்ம குழந்தையும் மட்டும் போதும்டா. உனக்கு பிடிக்கலைனா சொல்லு. இப்போவே அவளை நான் அனுப்பிடறேன். எனக்கு என்னோட ஷைலு நிம்மதியும், சந்தோஷமும் தான் முக்கியம். அதை விட வேற எதுவும் வேண்டாம்...”

அவனது பேச்சை உண்மை என நம்பிய ஷைலஜா ஆகாஷின் நடிப்பில் உருகியேவிட்டாள்.

“ச்சே, ச்சே. நான் உங்களை நம்பாம இதை கேட்கலை ஆகாஷ். என்னை தவிர உங்களை யாருக்கு நல்லா தெரியும்? நீங்க தான் என்னோட உலகமே. ஐ லவ் யூ ஆகாஷ்...” என காதலில் பிதற்றிய ஷைலஜாவின் குரலில் அப்பாவித்தனம் நிரம்பி வழிந்தது.
ஓரளவு தெளிவாகவே தெரிந்த அந்த ஷைலஜாவின் முகத்தை பார்த்து இன்னமும் அதிர்ந்துபோனாள் தீட்சண்யா.

கொஞ்சமும் சதைப்பிடிப்பே இல்லாத கொஞ்சம் இறுக்கினாலும் பொலபொலவென ஒடிந்துவிடுவளோ என்னும் அளவிற்கு அந்த மெல்லிய உடலில் ஒட்டிக்கொண்டிருந்த உயிர் இப்போ போவேனோ அப்போ போவேனோ என்பது போல் பரிதாபமான தோற்றத்தில் இருந்தாள்.

அவளது சிவந்த விழிகளே பறைசாற்றியது அவளது விடாத போதை பழக்கத்தை. இப்படி இங்கே இவள் எண்ணிக்கொண்டிருக்க ஆகாஷ் ஒரு கண்ணாடி குவளையில் மதுவை ஊற்றி அந்த ஷைலஜாவிற்கு புகட்டிக்கொண்டிருந்தான்.

அதில் இன்னமும் அதிர்ந்துபோனாள் தீட்சண்யா. அவளுக்கு தெரிந்துவிட்டது. இப்போது ஆகாஷின் கண்களில் பளபளக்கும் அந்த கயமை தனத்தை நன்றாகவே கண்டுகொண்டாள்.

ஆத்திரம் கண்ணை மறைக்க வேகமாக அறையின் கதைவை தட்ட நினைத்தவளது கரத்தை இழுத்த மங்களம் சத்தம் போடாதே என்பது போல தலையசைத்து அங்கிருந்து அழைத்துசென்றுவிட்டார்.

அவரது கையை உதறிக்கொண்டு வேகமாக கீழே செல்ல ஆரம்பித்தாள் தீட்சண்யா. அவளது வேகத்தை பார்த்து மிரண்ட மங்களம் பயத்தில் வெடவெடக்க திரும்பி வந்து அவரை நெருங்கியவள்,
“சத்தியமா உங்களை பத்தி நான் மூச்சு விடமாட்டேன் மங்களம்மா. பயப்படாதீங்க. உங்களுக்கு ரொம்ப நன்றி. நீங்க போங்க...” என அவரின் பயத்தை போக்கிவிட்டு தன் பெற்றோர் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.

அங்கே சுசீலா சுகமான நித்திரையில் இருக்க நடேசன் டிவி பார்த்துகொண்டிருந்தார். தினகரும் மஞ்சரியும் கூட உறங்கிவிட்டிருந்தனர்.
தந்தையை பார்த்தது அடக்கிவைத்த ஆத்திரம் எல்லாம் அழுகையாக வெடிக்க, “அப்பா...” என பாய்ந்துவந்து அவரது காலடியில் விழுந்து அழ ஆரம்பித்தாள்.

பதறிய நடேசன், “தீட்சண்யா என்னாச்சும்மா? ஏன் அழற?...”

“நம்மளை நல்லா ஏமாத்திருக்காங்க அப்பா. இனி ஒரு நிமிஷம் கூட இங்க நாம இருக்க வேண்டாம். நாம முதல்ல இங்க இருந்து கிளம்பிடுவோம். எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை...” என தேம்பியபடி பிடிவாதமாக கூற அவளது சத்தத்தில் சுசீலாவும் மஞ்சரி தினகரும் கூட விழித்துவிட்டிருந்தனர்.

“உனக்கு இன்னைக்குத்தான்மா கல்யாணமே ஆகிருக்கு. என்ன நடந்துச்சுன்னு இப்போ நீ கிளம்பனும்னு சொல்ற? அப்படி என்ன நம்மளை ஏமாத்திட்டாங்க?...”

“மாப்பிள்ளைக்கு ஏற்கவே கல்யாணமானது தெரிஞ்சிருக்கும் உங்க பொண்ணுக்கு. அதுக்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம்...”
தீட்சண்யா பேசுவதற்கு முன் முந்திக்கொண்டு சுசீலா காரணத்தை கூற ஒரே நாளில் இத்தனை அதிர்ச்சிகளை தாங்கமுடியாமல் தலைசுற்றிப்போனாள்.

“அம்மா உங்களுக்கு இது முன்னமே தெரியுமா? தெரிஞ்சுமா இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னீங்க?...” அவளது குரலில் சொல்லொண்ணா வேதனை பொங்கியது.
“ஆமா தெரியும். அதுக்கென்ன? தினகரோட ப்ரெண்ட் மூலமா தெரிஞ்சது. அதை கேட்டதும் அவங்களே காரணத்தை சொன்னாங்க. அந்த பொண்ணு சரியான குடிகாரியாம்...”

“அந்த பையனோட வாழ்க்கையே போய்டுமோன்னு பயந்துதான் ரெண்டாவது கல்யாணம் செஞ்சுவைக்க முடிவு பண்ணினாங்க. உன்னை பிடிச்சதும் வந்து பேசி நிச்சயம் செய்துக்கறோம்னு சொல்லிட்டாங்க. அதுக்கு பதிலா அப்பா பேர்ல அடுக்குமாடி கட்டடத்துல ஒரு பெரிய வீடு வாங்கி குடுத்திருக்காங்க...”

“ரிஜிஸ்ட்ரேஷன் கூட போன வாரம் தான் முடிஞ்சது. இப்படி வலிய வர சீதேவிய வாசலோட விரட்டி அனுப்ப சொல்றியா? வெட்டி கௌரவம் பார்க்காம ஒழுங்கா போய் வாழற வழியை பாரு...” எனவும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தீட்சண்யாவிற்கு.

வீடு வாங்கி கொடுத்திருக்கிறாரா? அதற்கு மேல் தாளமாட்டாமல்,
“நீயெல்லாம் ஒரு தாயா?ஏன்மா இப்படி ஒரு துரோகத்தை உன்னால எனக்கு செய்ய முடிஞ்சது?அதுவும் கேவலம் வெறும் செங்கலும் சாந்தும் கலந்து கட்டின உயிரில்லாத கட்டடத்துக்காக உயிரோட இருக்கிற நீ பெத்த பொண்ணையே காவு குடுத்துட்டியே?”

தன் மனக்குமுறல்களை கொட்டியும் கல்லு போல நிற்கும் தாயை எண்ணி மனம் வெறுத்தாள்.அவர்களின் கனவுகளுக்கு தன்னை ஏன் இரையாக்கவேண்டும்? என எண்ணி தவித்தாள்.

“நீ என்னவேணும்னாலும் பேசிக்கோ தீட்சு. அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை.இந்த வாழ்க்கைதான் உனக்காக விதிச்சதுன்னு நினச்சிக்கிட்டு பொறுத்துபோ. புத்திசாலியா பொழைக்க பாரு...”

சுலபமாக வழி கூறிய சுசீலா தன் மகளின் இதயத்தை வெட்டி கூறுகளாக்கி அவரது பணத்தாசைக்கு தீனிபோட்டுக்கொண்டிருந்தார்.

யாரோ ஒரு வேலைக்காரிக்கு இருக்கும் இரக்கம் கூட இல்லாத தன் தாயை வெறுமையோடு பார்க்க அவரோ அவளது பார்வையை அலட்சியப்படுத்தினார்.

“அம்மா அக்கா பாவம். அவளை விடேன். இத்தனை நாள் இந்த வசதியிலையா நாம வாழ்ந்தோம். அக்காவுக்கு பிடிக்கலைல. ஏன்மா கட்டாயப்படுத்தற?...”என மஞ்சரி தனக்காக பரிந்து பேச அவளை வாஞ்சையோடு பார்த்தாள் தீட்சண்யா.

“என்னடி அக்காவுக்கு சப்போர்ட்டா? வாயை மூடிக்கிட்டு பேசாம இரு. இவ்வளோ நாள் நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கலை. இப்போ கிடச்சதை நழுவவிட சொல்றீயா? அவ இந்த வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகனும்.

“சரி நீங்க யாரும் வரவேண்டாம். நான் போறேன் இங்க இருந்து. அதை உங்க யாராலையும் தடுக்கமுடியாது...” என கூறிவிட்டு திரும்ப அவளை வழிமறித்த தம்பி தினகர்,

“உனக்கென்ன பைத்தியமா அக்கா? அத்தான் எவ்வளோ நல்லவரு தெரியுமா? உனக்காக எங்களுக்கு வீடு வாங்கி கொடுத்தாரு. இந்த ரெண்டாவது கல்யாண விஷயம் தெரிஞ்சு நாங்க கேட்டப்போ எனக்கு லட்சரூபாய்க்கு பைக் வாங்கி கொடுத்தாரு...”

“உன் மேல எந்தளவுக்கு அன்பு வச்சிருக்காரு. யோசிச்சு பாரு. நீ போய்ட்டா குடுத்ததெல்லாம் திரும்ப வாங்கிடுவாறே. நாங்க என்ன பன்றது. அதனால பேசாம அம்மா பேச்சை கேளு...”

தன்னிடம் அதிகாரமாக கூறியவனை விடுத்து தந்தையை பார்க்க அவரும் அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டு தினகரு ஓங்கி ஒரு அறை குடுத்தவள்,
“உனக்கு பைக் வீடு வேணும்னா கஷ்டப்பட்டு படிச்சு சம்பாதிச்சு எல்லாம் வாங்கு. அதுக்கு உன் கூட பொறந்தவளை வித்து நோகாம வசதியா வாழனும்னு நினைக்கிறியே அசிங்கமா இல்லை?...” என காரி உமிழ்ந்துவிட்டாள்.

அதற்கெல்லாம் சளைத்தவனா தினகர்? “சரி நீ போ. நான் மஞ்சரியை அத்தானுக்கு கட்டிவைக்க சொல்லிடுவேன். அத்தான் நான் சொன்னா கேட்பாங்க. என்னம்மா சொல்றீங்க?...”

அறைவாங்கிய ஆத்திரத்தில் என்ன பேசவென தெரியாமல் ஏதோ ஒரு வேகத்தில் உளற அதையே பிடித்துகொண்டார் சுசீலா.
“ஆமா நான் மாப்பிள்ளைக்கு மஞ்சரியை கட்டிவைப்பேன். அவங்களுக்கு தேவை ஒரு வாரிசு. அது உன் மூலமா வந்தா என்ன? அவ மூலமா வந்தா என்ன?...”

அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை தீட்சண்யாவால். இப்படியும் ஒரு தாயா? என எண்ணியவளது கால்கள் அந்த இடத்திலேயே வேரோடிபோய்விட்டது.

அந்தநொடி மஞ்சரியை தவிர அங்கிருப்பவர்கள் அவளின் கண்களுக்கு பிணம் தின்னும் கழுகுகளாக தெரிந்தார்கள். அவர்களின் மேல் இருந்த பாசம் மொத்தமும் அற்றுப்போனது.

எந்த வசதியான வாழ்க்கைக்காக தன் மகளையே தாரைவார்த்தனரோ அந்த வாழ்க்கையை முழுதாக ஒரு நாள் வாழமுடியாமல் போகபோவதை அறியாமல் தீட்சண்யாவை வெற்றிக்களிப்போடு பார்த்தனர்.

ஏதாவது செய் செய் என மூளைக்கு உத்தரவிட தங்கையை பார்த்தாள். பார்வையில்லாத அவளை ஏன் பரிதவிக்கவிடவேண்டும் என எண்ணியவள் நொடியில் முடிவெடுத்தாள்.
அது ஆகாஷிற்கு சாதகமா? பாதகமா?

நதி பாயும்...
 
Top