Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 15.3

Advertisement

Part 3

அப்போதாவது புருஷோத்தமன் யோசித்திருக்க வேண்டும். ஸ்கூட்டியை கூட எடுக்காமல் ஏன் சென்றுவிட்டாள் என்று?
ஒன்பது மணியளவில் பரமேஷ்வரன் ஷக்தியின் மொபைலுக்கு அழைக்க,

“சொல்லுங்க மாமா, என்ன இந்நேரம் கூப்பிட்டிருக்கீங்க? ஏதாவது முக்கியமான விஷயமா?...” கையிலிருந்த கோப்பில் அவசரமாக பார்வையை ஓட்டிக்கொண்டே அவரிடம் பேசினான் ஷக்தி.

“மாப்பிள்ளை.... அது.... வந்து... ஹர்ஷூவோட போன் ரீச் ஆகலை. அதான் உங்ககிட்ட கேட்கலாமேன்னு கூப்பிட்டேன். வேற ஒண்ணுமில்லை. சோமனோட போன் கூட நாட் ரீச்சபிள். வீட்டு போன் ரிங் போய்ட்டே இருக்கு. அதான்...”

இரவு நடந்த வாக்குவாதத்தில் அவளது போனை தூக்கி வீசி எறிந்ததில் அது சுக்குநூறாக உடைந்துவிட்டது அப்போதுதான் நியாபகத்திற்கு வந்தது.

“ஓ சாரி மாமா, ஹர்ஷூ போன் நேத்து கீழே விழுந்து உடைஞ்சுபோச்சு. என்கிட்டே புது போனுக்கு சொல்லியிருக்கா. ஈவ்னிங் போகும் போது வாங்கிட்டு போகனும். அப்பா இந்நேரம் கோவிலுக்கு போய்ருப்பாங்க. அதான் லேண்ட்லைன் காலை அட்டென் செஞ்சிருக்க மாட்டாங்க. ஒரு அரைமணிநேரம் கழிச்சு பேசுங்க...”

“மாப்பிள்ளை ஹர்ஷூ வீட்ல தானே இருக்கா? இல்ல வெளில எங்கையாவது போறதா சொன்னாளா? வீட்ல இருக்காளா? நீங்க பேசினீங்களா?...”

அவரது குரலில் மகளிடம் பேசமுடியவில்லை என்கிற சாதாரண தேடலை தாண்டி ஒருவிதமான பயமும், தவிப்பும் அப்பட்டமாக ஷக்திக்கு தெரிந்தது. அது ஏன் என்று அவனுக்கு அப்போது புரியவில்லை.

“நான் வரும் போது தூங்கிட்டு இருந்தா மாமா.இன்னைக்கு முக்கியமான மீட்டிங். அதனால நான் சீக்கிரமே வரவேண்டியதா போச்சு. நீங்க ஒரு அரைமணி நேரம் கழிச்சு போன் பண்ணி பாருங்க. நான் ஈவ்னிங் உங்களுக்கு பேசறேன்...” என்றவன் அவரது அழைப்பை துண்டித்துவிட்டு தன் தந்தைக்கு அழைத்து பார்க்க அப்போதும் அது தொடர்பு எல்லைக்குள் அப்பால் இருந்தது.

மீண்டும் வேலையில் ஆழ்ந்தவன் சரியாக அரைமணி நேரம் கழித்து புருஷோத்தமனுக்கு அழைக்க அவர் எடுத்தவுடன், “டாட், ஹர்ஷூ என்ன செய்யறா? உங்களோட மொபைல் ரீச் ஆகலைன்னு மாமா எனக்கு போன் பண்ணியிருந்தாங்க. அதான்...”

“ஈஷ்வர் பேசிட்டான்டா. நானும் தகவல் சொல்லிட்டேன். ஹர்ஷூ இங்க பக்கத்துல கடைக்கு போய்ருக்கான்னு சொன்னதும் என்னமோ நம்பாத மாதிரியே பேசறான்...”

அவரது பேச்சில் ஹர்ஷூ வெளியில் சென்றிருக்கிறாள் என புரிந்துகொண்டான். ஆனால் ஏன் இவ்வளவு காலையிலேயே என யோசிக்க, அவனது யோசனையை நீட்டிக்க விடாமல் அவனது தந்தையின் குரல் தொடர்ந்தது.

“சாப்ட்டாளா? ஏதாவது பேசினாளா? கோவைக்கு வரேன்னு எதுவும் சொன்னாளா? எப்படி இருக்கான்னு? கேட்டு குடைஞ்செடுத்துட்டான். பொண்ணை எல்லாம் பெத்தவன் பாவம்டா. கட்டிக்குடுத்துட்டு இப்படி கவலைப்பட்டுட்டு இருக்கான்...”

புருஷோத்தமன் என்னவோ பரமேஷ்வரன் எதார்த்தமாக கேட்பதாக எண்ணி அவர் கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஹர்ஷூ எப்போவும் போல பேசினாள், தன்னோடே அமர்ந்து சாப்பிட்டாள் என கூறியது.

ஆனால் இதை கேட்ட ஷக்திக்கு இது சாதாரணமான விசாரிப்பாக தெரியவில்லை. இதில் ஏதோ மர்மம் பொதிந்திருப்பதாகவே எண்ணினான். அவனது சிந்தனையை மேலும் விரிவாக்க முடியாத படி வில்லியம்ஸின் அழைப்பு அவனை இழுத்துக்கொண்டது.

“அப்பா, நான் மீட்டிங் கிளம்பறேன். முடிஞ்சதும் கால் பன்றேன். ஹர்ஷூ வரவும் அவளை மாமாவோடு பேச சொல்லிடுங்க. பை டாட்...” என தொடர்பை துண்டித்துவிட்டு தன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு வில்லியம்ஸின் காரில் சென்று அமர்ந்தான்.

மீட்டிங் முடிய மாலையாகிவிட்டது. மீண்டும் ஆபிஸ் சென்று தன்னுடைய காரை எடுத்துகொண்டு தான் வீட்டிற்கு வரமுடியும் என நினைத்தவாறே கிளம்ப காரில் அலுவலகம் சம்பந்தமாக வில்லியம்ஸ் இவனோடு விவாதித்துக்கொண்டே வந்தார்.

அலுவலகம் வந்தவன் தன்னுடைய கேபினுக்கு சென்று கொண்டுவந்திருந்த சில ஃபைல் அனைத்தையும் பத்திரமாக வைத்து லாக் செய்துவிட்டு ஆசுவாசமானான்.

அப்போதுதான் காலையில் பரமேஷ்வரன் பேசியது நியாபகத்திற்கு வர தன்னுடைய மொபைல் எங்கே என தேடினான். அதை சைலண்ட் மோடில் போட்டு லேப்டாப் பேக்கினுள் வைத்திருப்பதை நினைவு கூர்ந்தவன் அதை எடுத்து பார்க்க ஏகப்பட்ட அழைப்புகள் புருஷோத்தமனிடமிருந்தும், தன் நண்பன் உமா மகேஷ்வரனிடமிருந்தும்.

யோசனையோடே தன் தந்தைக்கு அழைத்துக்கொண்டே பார்க்கிங்க்கு சென்று காரை உயிர்ப்பித்த போதே அழைப்பை ஏற்ற புருஷோத்தமனின் பதட்டமான பேச்சில் மீண்டும் அதை உயிரிழக்க செய்தான்.

“என்ன டாட்? எதுக்காக இவ்வளோ பதட்டம்? நிறைய கால் பண்ணிருக்கீங்க?...”

“ஷக்தி நம்ம ஹர்ஷூவை காணோம்ப்பா...” என ஷக்தியின் தலையில் இடியை இறக்கினார்.

“காலையில வெளில போனவ. இன்னும் வீடு திரும்பலை. உனக்கு ட்ரை பண்ணி பார்த்தேன். கிடைக்கலைன்னதும் உமாமகேஷ்வரனுக்கு கூப்பிட்டேன். அவனும் உன்னை பிடிக்க ட்ரை பண்ணினான். ஆனா முடியலை...” அவரது குரலில் தென்பட்ட பதட்டம் ஷக்தியையும் தொற்றிக்கொண்டது.

முதலில் மீண்டும் அந்த சிவதாஸ் பிரச்சனையில் தான் வெளியில் சென்றிருப்பாளோ என எண்ணியவனுக்கு மறுநொடியே தான் பேசிய வார்த்தையின் வீரியம் கண்முன் தோன்றியது.

ஒருவேளை அதனால் கோவித்துக்கொண்டு எங்கும் போய்விட்டாளா? இல்லை வேறு எதுவும் பிரச்சனையா? காலையில் பரமேஷ்வரனது பதட்டமான அடுக்கடுக்கான கேள்விகள் நியாபக அடுக்கில் வலம்வர ஷக்தியின் ரத்தஅழுத்தம் எகிறியது.

காரை கிளப்பியவன் அசுரவேகத்தில் ஓட்ட ஆரம்பித்தான். தன்னால் தானோ ஹர்ஷூ தன்னை விட்டு சென்றுவிட்டாள். தான் பேசியா பேச்சு அந்தளவிற்கு அவளை காயப்படுத்திவிட்டதோ என எண்ணியவன் மொத்தமாக கலங்கிப்போனான்.

எப்படியோ வீட்டை அடைந்தவன் தோற்றம் பெற்றவருக்கு சொல்லொண்ணா வலியை கொடுத்தது. தன் வேதனையை விழுங்கியவர் அவனை ஆசுவாசப்படுத்த முயல,
“எப்டிப்பா காலையில வெளில போனவ இன்னும் வரலைன்னு சொல்றீங்க?. அவளுக்கு. அவளுக்கு...” அதற்கு மேல் பேசமுடியாமல் தொண்டையடைக்க அவனை அமைதிப்படுத்திய உமா மகேஷ்வரன்,

“கொஞ்சம் அமைதியா இரு ஷக்தி. நீயே பதட்டப்பட்டா எப்படி? நாங்க முடிஞ்சளவுக்கு தேடிட்டோம். உன்னோட ப்ரெண்ட் சேகர் கிட்டயும் சொல்லிருக்கோம். அவரும் ஒரு பக்கம் தேடிட்டு இருக்காரு...” என்ற நொடி சேகருக்கு அழைத்தான் ஷக்தி.

அவனது எண்ணம் புரிந்தவன் போல சேகரும் கால் அட்டென் செய்த நொடியில், “ஷக்தி இது சிவதாஸ் வேலையில்லை. நல்லாவே தெரிஞ்சிடுச்சு. இப்போன்னு இல்லை அந்த சிவதாஸ் எப்போவுமே ஹர்ஷூக்கிட்ட வம்பு செய்த்தாதபடி அவனுக்கு செக் வச்சிட்டேன்...”

“என்னாலதான் சேகர். நேத்து அவளோட மனசு நோகும்படி ரொம்ப வார்த்தையை விட்டுட்டேன்டா. அதான் அவ கோவத்துல என்னை இப்படி விட்டு போய்ட்டா போல...” சிறுபிள்ளை போல தேம்பியவனை நினைத்து சேகருக்கு ஆச்சர்யமும் பரிதாபமும் ஒருங்கே எழுந்தது.

“ஒன்னும் பெருசா நடந்திடலை. ஹர்ஷூவுக்கு ஒன்னும் ஆகிருக்காது. சிவதாஸ் சம்பந்தப்படலைன்னு தெரிஞ்சிடுச்சு. அதனால நாம வேற வழியில தான் முயற்சிக்கனும். நேத்து அவ்வளோ சொன்னேன்லடா. கோவப்படாம இருன்னு. சரி விடு. எப்படியாவது கண்டுபிடிக்கலாம்...”

“சிவதாஸ் இல்லைனா என்ன? என் பொண்டாட்டிதான் ஊரெல்லாம் வம்பை விலைக்கு வாங்கி வச்சிருக்காளோ?...” புலம்பியவன் வேகமாக வீட்டிற்குள் வந்துவிட்டான்.

இதயத்துடிப்பு முழுவதும் ஹர்ஷூ ஹர்ஷூ என கதறிக்கொண்டிருக்க அவள் இந்நேரம் எங்கே இருக்கிறாளோ? என்ன நிலையோ அவளது? என நினைத்து நினைத்து இங்கே உயிரோடு செத்துக்கொண்டிருந்தான் ஷக்தி.

அப்போதும் எதற்கு பரமேஷ்வரன், “ஹர்ஷூ கோயம்புத்தூர் வருகிறேன் என்று எதுவும் சொன்னாளா?...” என தன் தந்தையிடம் ஏன் கேட்டார் என்பது ஷக்திக்கு நியாபத்திற்கு வரவே இல்லை.

அவள் கிடைத்தால் போதும், இனி ஒரு நிமிடம் கூட அவளை வார்த்தைகளால் காயப்படுத்த மாட்டேன். என்னிடம் எப்படியாவது சேர்ப்பித்துவிடு கடவுளே என வேண்டுதலோடு மன்றாடிக்கொண்டிருந்தான்.

ஆனால் இன்னும் சிலமணி நேரங்களில் அவளின் பூப்போன்ற கன்னத்தில் தன் முரட்டுகரத்தினை இடியென இறக்க போகிறான் என்பதை அறியவில்லை.

அதனால் அனைவரும் மறக்கவும், ஷக்தியிடம் மறைக்கவும் நினைக்கும் ஹர்ஷூவின் கடந்த காலமும், அவளது இருண்ட காலமும் தனக்கு தெரியவரபோகிறதென உணரவில்லை.

அதை உணரும் போது??????


நதி பாயும்...
Nice
 
Top