Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 16.2

Advertisement

Admin

Admin
Member

குளித்துக் கிளம்பி கீழே வந்தவன், நேற்று நடந்ததைப் பற்றி வீட்டில் மூச்சு விடவில்லை. முன் தினமும் ஹோட்டலில் இருந்து சீக்கிரம் வந்திருந்ததால்... சாப்பிட்டதும் ஹோட்டலுக்குச் சென்றுவிட்டான். ஹோட்டல் சென்றதும் வலிக்குக் கொடுத்திருந்த மாத்திரையைப் போட்டுக்கொண்டான்.

மகனின் முகம் சோர்வாக இருப்பது செல்வராணிக்குத் தெரிந்தாலும், முன் தினம் நண்பர்களோடு இருந்துவிட்டு இரவு தாமதமாக உறங்கி இருப்பான் என்று அவராகவே நினைத்துக் கொண்டார்.

விஜய் மாலை வீட்டிற்கு வரும்முன் மருத்துவமனை சென்று காயத்திற்கு மருந்து போட்டு விட்டு வந்தான். காயம் நன்றாக ஆறி இருப்பதால்.... இனி வர வேண்டாம் என்று மருத்துவமனையில் சொல்லி அனுப்பினர்.

மாலை வந்திருந்த மகனின் முகம் தெளிந்திருந்ததைப் பார்த்த செல்வராணி “உன் பிறந்தநாளுக்கு ஜெனிய பார்க்க போகவில்லையா விஜய்... அவள் உன்னை ரொம்ப ஆவலா எதிர்பார்த்திருப்பா இல்லையா...” என்றார்.
அவ தானே எதிர்பாரத்திட்டாலும்.... பிறந்தநாளுன்னே தெரியாது என்று மனதிற்குள் நொடித்தவன் “நாளைக்குக் காலையில போறேன் மா... ஜெனிகிட்ட சொல்லிடாதீங்க சர்ப்ரைஸ்.” என்றான்.

“கவலைப்படாதே சொல்லமாட்டேன். ஆனா நீ இருக்கப்பாரு... உனக்கு உன்னோட ஹோட்டல்தான் முக்கியம் இல்லையா... அதனாலதான காலையில போற...” செல்வராணி மகனை முறைக்க... விஜய் பதில் சொல்லாமல் புன்னகைக்க...

“போய்ட்டு அவசரமா கிளம்பி வராத... இருந்து மதியம் சாப்பிட்டு வா... நான் அப்பாவை ஹோட்டல பார்த்துக்கச் சொல்றேன்.” என்றார். விஜயும் சரி என்று தலையசைத்தான்.

இவன் சொல்லாமல் திடிரென்று அவர்கள் வீட்டில் போய் நின்றால் நன்றாகவா இருக்கும். ஒருவேளை அவர்கள் எங்காவது வெளியில் சென்றுவிட்டால் என்று பலவாறு யோசித்த செல்வராணி, மகனுக்குத் தெரியாமல் ஜெனியின் அன்னையை அழைத்து விஜய் வருவது பற்றிச் சொல்லிவிட்டார். ஜெனியிடம் சொல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இன்றாவது அழைப்பானா என்று எதிர்பார்த்து செல்லை கையில் வைத்தபடி ஜெனி இருந்தாள். அவளாக அழைக்கவும் பயந்துக்கொண்டு இருந்தாள். கோபத்தில் திட்டிவிடுவானோ என்று அச்சம். முகத்தில் புன்னகையுடன் மகளைக் கடந்து சென்ற லீனா ஸ்டீபனிடம் ரகசியம் பேசினார்.

மறுநாள் காலை எட்டுமணிக்கே குளித்துத் தயாராக வந்த மகனைப் பார்த்து செல்வராணி கிண்டலாகச் சிரிக்க... ஜெனியை பார்க்கப் போகும் சந்தோஷத்தை விஜய் மறைக்கவே முயலவில்லை... செல்வராணி அவனுக்கு வேகமாகச் சிற்றுண்டியை தயாரித்துக் கொடுக்க... சாப்பிட்டு விட்டு உடனே கிளம்பினான்.

ஜெனிக்கு நிறையப் பரிசு பொருட்கள் வாங்கி இருந்ததால்.... காரில் தான் சென்றான். ஞாயிறு என்பதால் காலை தாமதமாக எழுந்து வந்த ஜெனி.... வீடு எப்போதையும் விட இன்று அதிகமாகப் பிரகாசிப்பதை பார்த்து வியந்தபடி சமையல் அறைக்குச் செல்ல... அங்கே செல்வராணி தீவிரமாகச் சமைத்துக்கொண்டு இருந்தார்.

“இன்னைக்கு நம்ம வீட்டுக்குக் கெஸ்ட் வராங்களா மா....” ஜெனியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல்... அவள் கையில் காபீயை கொடுத்த லீனா “சீக்கிரம் போய்க் குளிச்சிட்டு வா... உங்க அப்பா வந்தா கத்தப்போறார்.” என்றவர், ஜெனியை பிடித்து அவள் அறையின் பக்கம் தள்ள... ஜெனி முனங்கிக்கொண்டே சென்றாள்.

விடுமுறை நாள் என்பதால் நிதானமாகத் தலைக்குக் குளித்து வெளியே வந்து பார்த்தபோது ஸ்டீபன்னும், லீனாவும் வெளியே கிளம்பிக்கொண்டு இருந்தனர்.

“நானும் அப்பாவும் மட்டும் இன்னைக்குச் சர்ச்க்கு போறோம். நீ சீக்கிரம் சாப்டிட்டு வேற நல்ல டிரஸ் போடு...” மகள் அணிந்திருக்கும் முழு நீள பாவாடை சட்டையைப் பார்த்துக்கொண்டே லீனா சொல்ல... ஜெனி சரி என்றாள்.



அவர்கள் கிளம்பி சென்றதும் கதவை மூடிவிட்டு உள்ளே வந்தாள். இன்னைக்குக் கண்டிப்பா யாரோ கெஸ்ட் வராங்க, ஜெனி கண்டுபிடித்துவிட்டாள். யார் என்று தான் தெரியவில்லை... ஒரு வேலை செல்வராணி ஆன்டி வராங்களோ.... யோசித்தபடி சாப்பிட சென்றாள்.

ஜெனி தட்டை எடுத்துக்கொண்டிருக்கும் போது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. பெற்றோர்தான் எதையோ மறந்து வைத்துவிட்டு திரும்ப வந்திருப்பதாக நினைத்து, ஜெனி வேகமாகப் போய்க் கதவை திறக்க... அங்கே விஜய் நின்று கொண்டிருந்தான்.

எதிர்பாராமல் அவனைச் சந்தித்ததும் ஜெனிக்கு இன்ப படபடப்பு. “வாங்க அத்தான்...” அதைச் சொல்லிமுடிக்கவே திணறினாள்.... “ஹாய் ஜெனி...” என்றபடி விஜய் உள்ளே நுழைந்தான்.

விஜய் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்ததும், ஜெனிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை... நிச்சயம் முடிந்து இன்றுதான் அவனை நேரில் பார்க்கிறாள். அவளுக்கு வெட்கமாக இருந்தது. சமையல் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.

சிறிது நேரம் ஜெனியின் பெற்றோர்கள் வருவார்கள் என்று காத்திருந்த விஜய்... யாரும் வரவில்லை என்றதும்தான் அவனுக்குப் புரிந்தது, ஜெனி மட்டும் தனியாக இருக்கிறாள் என்று....

விஜய் “ஜெனி...” என்று குரல் கொடுக்க... கையில் பழரசத்தோடு வந்த ஜெனி, அவன் முகம் பார்க்காமல் கையில் கொடுக்க... அதை வாங்கிக்கொண்டே “அத்தை மாமா எங்க ஜெனி?” தான் நினைத்ததை உறுதிபடுத்திக்கொள்ள விஜய் கேட்க...

“சர்ச்சுக்கு போய் இருக்காங்க அத்தான்.” ஜெனியின் பதில் விஜய்க்கு மகிழ்ச்சியைக் கொடுக்க... அவன் ஜெனியை ரசித்தபடி நிதானமாக அவள் கொடுத்ததைக் குடித்தான்.

அவனின் பார்வை ஜெனியை முகம் சிவக்க வைக்க... உள்ள போய்டலாமா அவள் நினைக்கும் போது.... “ஏன் நின்னுட்டே இருக்க? உட்காரு ஜெனி...” விஜய் சொன்னதும், ஜெனி சென்று சோபாவில் உட்கார்ந்தாள்.

பக்கத்தில் உட்காராமல் எதிரில் சென்று உட்கார்ந்தவளை பார்த்து மனம் சிணுங்கினாலும் அதை ஒதுக்கிவிட்டு, அவளுக்காக வாங்கி வந்திருந்த பரிசு பொருட்களை வரிசையாக விஜய் கொடுக்க... அவற்றைப் பார்த்து ஜெனி திகைத்தாள்.

விலை உயர்ந்த சாக்லேட், அழகான புடவை, நகைகள் என்று பரிசுகளால் அவளைத் திணறடித்தான்.

“உங்களுக்குத் தான பிறந்தநாள். எனக்கு எதுக்கு இவ்வளவு வாங்கி இருக்கீங்க?” ஜெனி முதல்முறையாக வாயைத்திறந்து கேள்வி கேட்க...

“ம்ம்... நீயும் கொடு வாங்கிக்றேன்.” விஜயின் பார்வை அவள் இதழில் இருக்க... அதைக் கவனிக்காத ஜெனி பரிசு ஒன்றும் வாங்கவில்லையே என்று வருந்த ஆரம்பித்தாள்.


ஜெனி விஜய் கொடுத்த சாக்லேட்டை பிரித்துச் சாப்பிட... விஜய் எழுந்து அவர்கள் வீட்டு ஹாலை சுற்றிப் பார்த்தவன், அங்கிருந்த மூங்கில் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடியபடி ஜெனியை பார்த்து வா என்று கை நீட்ட... அவளும் எழுந்து அவன் அருகில் சென்றாள்.

அருகில் வந்தவளை திருப்பி இடையில் கை கொடுத்து தூக்கி தன் மடி மீது விஜய் உட்கார வைக்க....

“ஐயோ ! என்ன பண்றீங்க விடுங்க. ஊஞ்சல் அறுந்து விழப்போகுது...” ஜெனி திமிறியபடி சொல்ல... விஜயின் பிடி இறுகியதே தவிர விலகவில்லை.... இவன் விடமாட்டன் என்று புரிந்த ஜெனி அமைதியாக இருக்க... அவளைத் தன் மீது நன்றாகச் சாய்த்துக்கொண்டு விஜய் பேச ஆரம்பித்தான். வெட்கம் பிடுங்கி தின்றாலும், ஜெனி அவன் கேள்விகளுக்குப் பதில் சொன்னாள்.

விஜய் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஜெனியின் கன்னத்தில் முத்தமிட்டபடிதான் பேசினான். என்ன பேசினார்கள் என்று இருவருக்கும் தெரியாது.

“என்ன சோப் போட்டிருக்க? இவ்வளவு வாசனையா இருக்க...” விஜய் ஜெனியின் கழுத்து வளைவில் முகம் புதைத்தபடி கேட்க... ஜெனிக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.

“அரைச்ச சந்தனம் போட்டு குளிச்சேன்.” பதில் சொன்ன ஜெனி திரும்பி விஜயின் முகம் பார்க்க... “இனிமே என் பொண்டாட்டிகாக நான் சந்தன மரம் கடத்திட மாட்டேன்.” என்றபடி அவளைத் தன் கரங்களில் சாய்த்தவன், குனிந்து அவள் இதழில் முத்தமிட்டான்.

உடனே விலகி விட வேண்டும் என்றுதான் நினைத்தான். ஆனால் ஜெனியில் இதழ்கள் அவனைக் காந்தம் போல் ஈர்த்ததே தவிர... விலக முடியவில்லை... சற்று முன் அவள் சாப்பிட்ட சாக்லேட்டின் சுவையை அவள் இதழ்களில் அறிந்தான்.

மூச்சுக்காக இருவரும் விலக... ஜெனி அவளின் சிவந்த முகத்தை அவன் மார்பில் மறைக்க.... விஜய் அவளைத் திரும்ப முத்தமிட முயல... அப்போது அவன் கைப்பேசி அழைத்தது.

எடுத்து பார்த்த விஜய் அழைப்பது ஜெப்ரி என்று தெரிந்ததும் புன்னகையுடன் அழைப்பை ஏற்றான். ஜெனி அவனிடம் இருந்து நழுவி அறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டாள்.
“ஹாய் கரடி...” விஜய் உற்சாகமாக அழைக்க....

“யாருடா கரடி? என்னைப் பார்த்தா கரடி மாதிரியா இருக்கு.” ஜெப்ரிக்குக் கோபம் வந்து விட்டது.

“பின்ன கரடி வேலை பார்த்தா கரடின்னு சொல்லாம குரங்குன்னா சொல்ல முடியும்.” விஜய் அவனை மேலும் வம்பிழுக்க....

“அம்மா போன் பண்ணி இருந்தாங்க. உன் கல்யாணத்துக்கு நாள் குறிக்கணும். எப்ப உன்னால வர முடியும்ன்னு கேட்டாங்க. எனக்கு இந்த வருஷம் வர முடியும்ன்னு தோணலை...” ஜெப்ரி விஜயை மடக்குவதற்காகக் கெத்தாகப் பேச... விஜய்யா அசருவான்.

“அப்படியா சரி ஒன்னும் பிரச்சனை இல்லை... நீங்க பொறுமையா அடுத்த வருஷமே வாங்க பிரதர்.... அப்பவே என் கல்யாணத்தை வச்சுப்போம். என்ன உங்களை ஏர்போர்ட்கு கூப்பிட நானும் என்னோட பையனும் வருவோம் பரவாயில்லையா....அவன் உன்னைப் பார்த்து பெரியப்பான்னு ஓடி வர... நீ அவனைப் பார்த்து மகனேன்னு ஓடி வர.... பார்க்க சூப்பரா இருக்கும் இல்ல.....” விஜய் அசராமல் அடிக்க...

“உன்னிடம் மனுஷன் பேசுவானாடா...” ஜெப்ரி டென்ஷனாகி போன்னை வைத்து விட்டான்.

விஜய் பேசியதை கேட்டபடி அறைக்குள் முகம் கழுவி, தலை வாரி உடை மாற்றிய ஜெனி.... “இருந்தாலும் இவனுக்கு இருக்கத் திமிருக்கு...” என்று நினைத்தபடி வெளியில் வந்தாள்.

ஜெனியை பார்த்ததும் விஜய் கண் சிமிட்ட... ஜெனி புன்னகையுடன் அவனைக் கடந்து செல்ல... விஜய் அவளைப் பிடித்து அருகில் இழுக்க....

“விடுங்க அம்மா அப்பா வந்திடுவாங்க.” ஜெனி மறுக்க...

“ஒரு போட்டோ மட்டும் எடுத்திப்போம் வா...” என்றவன், முன்பு போலவே அவளைத் தன் மடியில் வைத்து செல்பி எடுத்துக்கொண்டான்.



“இன்னைக்கு நாளை நான் என் வாழ்க்கையில மறக்கவே மாட்டேன் ஜெனி.” விஜய் அவள் காதில் கிசுகிசுக்க.... ஜெனியும் அப்படித்தான் நினைத்தாள். அப்போது வீட்டு வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும், இருவரும் ஊஞ்சலில் இருந்து இறங்கி சோபாவில் சென்று அமர்ந்தனர்.

ஸ்டீபன் தன் இளைய மருமகனை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் அனைத்து வரவேற்க...

“அப்பவே வந்துடீங்களா... வழியில டிராபிக் லேட் ஆகிடுச்சு...” லீனா தயக்கத்துடன் சொல்ல...

“இருக்கட்டும் அத்தை அதுதான் ஜெனி இருந்தாளே...” விஜய் இயல்பாகச் சொன்னான்.

லீனா விஜய்காக ஏற்கனவே பாதிச் சமைத்து இருந்தார். மீதியை சமைக்க அவர் உள்ளே செல்ல... விஜய் ஸ்டீபனோடு பேசிக்கொண்டிருந்தான். ஜெனி அவள் அம்மாவுக்கு உதவச் சென்றாள்.

விஜய் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்றதால்... சமையல் முடித்தவுடன் சாப்பிட அமர்ந்தனர்.


லீனாவுக்கு விஜய்க்கு சமைக்கவே பயமாக இருந்தது. அவன் சமையலில் சகலகலாவல்லவன் ஆயிற்றே..... இவர் சமைத்தது அவனுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ என்று தயக்கமாக இருந்தது. ஆனால் விஜய் அவனுக்குச் சமையல் தெரியும் என்பதைப் போலவே காட்டிக்கொள்ளவில்லை.... எதைச் சாப்பிட்டாலும் அதை ரசித்துச் சாப்பிட்டான். பாராட்டவும் மறக்கவில்லை.

விஜய் கிளம்பும் போது ஜெனிக்கு இவ்வளவு சீக்கிரம் அவன் போகனுமா என்பது போல் இருந்தது. அதை வாயைத் திறந்து சொல்லி இருந்தால் விஜயும் சந்தோஷப்பட்டிருப்பான்.
 
Top