Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 13.2

Advertisement

Admin

Admin
Member


அதன் பிறகு விஜய்யும், ஜெனியும் நின்று புகைப்படங்கள் எடுக்க... அவர்களின் ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருந்தது. விஜய் பார்மல் உடையில் இருந்தான். அவனின் புன்னகை வசீகரிக்க... லின்சிக்கு தான் எதையோ இழந்து விட்டது போல் இருந்தது.



பெரியவர்கள் எல்லோரும் சாப்பிட செல்ல... இளையவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர். விஜய்யும் ஜெனியும் அருகருகில்தான் நின்றிருந்தனர். விஜய்யும் அவன் நண்பர்களும் கலாட்டாவாகப் பேசிக் கொள்வதை... ஜெனி புன்னகையுடன் பார்த்திருந்தாள்.
“சிஸ்டர் .... ஜெப்ரி அண்ணா கல்யாணத்தில நான் உங்ககிட்ட விஜய்யை பத்தி சொன்னதும், நீங்க பேசாம போய்டீங்களா... நான் ரொம்ப டென்ஷன் ஆகிட்டேன்.” என்று எதேட்சையாக மைக்கேல் சொல்ல... ஜெனிக்கு அவள் அப்படி நடந்து கொண்டதற்கான காரணம் நினைவுக்கு வர... நொடியில் அவள் முகம் மாறிவிட்டது.

விஜய் மைக்கேல்லிடம் “இப்ப எதுக்குடா அதை நியபகப்படுத்துற....” என்று கோபிக்க... ஜெனி கஷ்டப்பட்டு இயல்பாக இருப்பது போல் கட்டிக்கொண்டாள். அவளே மறந்தாலும் கடந்தகால நினைவுகள் அவளை விட்டு விலகாது போல...

விஜய் அவளிடம் வேறு எதோ கதைகள் பேசி சிரிக்க வைத்தான். அவர்கள் இருவரும் இரவு உணவு சாப்பிட்டு முடித்த போது... நேரம் பத்து மணிக்கும் மேல் ஆகி இருந்தது. விஜய் மனமில்லாமல் ஜெனியை விட்டு கிளம்பி சென்றான்.

சென்னை விமான நிலையம் அந்த நள்ளிரவு நேரத்திலும் பரபரப்புக் குறையாமல் இருந்தது. அப்போது மலேஷியாவில் இருந்து வந்த விமானம் தரை இறங்க... அதிலிருந்தவர்கள் ஆர்வத்துடன் வெளியே வர... முக்கால் பேண்ட்டும், டி- ஷர்ட்டும் அணிந்து, கூந்தலை மொத்தமாகப் பெரிய கிளப்பில் அடக்கி, அலட்சியமான பார்வையுடன் நடந்து வந்தாள் ரூபிணி.



தனக்காக யாரும் வந்திருப்பார்கள் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.... நடந்து வந்தவள், வெளி வாயிலை கடக்கும் போது... ரூபிணி என்று அழைக்கும் குரல் கேட்டு திரும்ப... அங்கே நின்றிருந்தவனை அவளுக்கு யார் என்று சுத்தமாகத் தெரியவில்லை... அதனால் அவள் புருவத்தைக் கேள்வியாக உயர்த்த...

“I’m Rajesh. உங்க அப்பாகிட்ட வொர்க் பண்றேன்.” என்றவனிடம், தன்னை எப்படி அடையாளம் தெரிந்தது என்று ரூபிணி கேட்கவே வேண்டாம். ஏன்னென்றால் அவனோடு அவர்கள் வீட்டில் அதிக வருடங்களாக வேலை செய்யும் டிரைவர் வடிவேல் இருந்தான்.

ரூபிணி அப்படியா என்பது போல் கூடப் பார்க்கவில்லை.... தன்னிடம் வைத்திருந்த லக்கேஜை வடிவேலிடம் கொடுத்து விட்டு முன்னாள் வேகமாக நடக்க... ராஜேஷ் பறந்து எல்லாம் அவளுடன் செல்லவில்லை.... நிதானமாகப் பின் தொடர்ந்தான்.

காருக்காகக் காத்திருந்த நேரத்தில்... முதலாளியின் மகள் என்ற போலி பணிவு இல்லாமல் ராஜேஷ் இயல்பாக இருந்ததே... ரூபிணியை அவனைத் திரும்பி பார்க்க வைத்தது.

ராஜேஷ் கல்லூரியில் படித்த போது இருந்த சாக்லேட் பாய் தோற்றத்தில் இப்போது இல்லை... உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் முகத்தில் வைத்திருந்த லேசான தாடி அவனின் மேல் ஒரு மரியாதையான தோற்றத்தை கொண்டு வந்திருந்தது. வாழ்க்கையின் அனுபவங்கள் உள்ளேயும், வெளியேயும் அவனை நிறையவே மாற்றி இருந்தது.

முன்பிருந்த ராஜேஷாக இருந்திருந்தால்... ரூபிணியின் அலட்சியத்தை பார்த்ததும்... உங்க வேலையே வேண்டாம் என்று கொதிப்புடன் சென்றிருப்பான். ஆனால் இப்போது இருக்கும் ராஜேஷ்க்கு வாழ்க்கையின் நிதர்சனங்கள் புரியும். அவனின் குறிக்கோளே தன்னைக் கேலியாகப் பார்த்தவர்கள் முன்பு உயர்ந்து காட்டி விட வேண்டும் என்பது தான்.

வடிவேல் காருடன் வந்ததும், ரூபிணி பின்னால் ஏற... ராஜேஷ் முன்புறம் டிரைவரோடு அமர்ந்து கொண்டான். காரில் சென்ற நேரம் இருவருமே பேச எந்த ஆர்வமும் காட்டவில்லை. ரூபிணி அவளின் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டு வர... ராஜேஷ் வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தான்.

வீடு வந்ததும் ரூபிணியோடு ராஜேஷும் உள்ளே செல்ல... அங்கே ஹாலில் வசந்தனும் அவர் மனைவி திலோவும் அந்த நேரத்திலும் அவளுக்காகக் காத்திருந்தனர். தன் பெற்றோரிடமும் ரூபிணி பேச ஆர்வம் காட்டவில்லை...

அவளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் வரவேற்ற தந்தையிடம் கஷ்ட்டப்பட்டுப் புன்னகைத்தவள், ஆசையாக நெருங்கி வந்த தாயை “I’m so tired… எனக்குத் தூங்கணும் நாளைக்குப் பார்க்கலாம்.” என்றபடி விலகி அவள் அறைக்குச் செல்ல... திலோவின் முகம் கருத்தது.

முதல் முறையாக ராஜேஷ் நிமிர்ந்து ரூபிணியைப் பார்த்தான். பெற்றோரிடத்தில் அவள் காட்டிய அலட்சியம் அவனுக்குக் குழப்பத்தைத் தந்தது. ஒரு நொடி ரூபிணியைக் கூர்மையாக ஆராய்ந்தவன், பின்பு இது தனக்குத் தேவையில்லாத வேலை என்று தோன்றிவிட... வசந்தனை கிளம்பட்டுமா என்பது போல் பார்க்க...

பெரிய கோடிஸ்வரனாக இருந்த போதிலும்... ஒரு தந்தையாக மனதில் அடி வாங்கியதை வெளிகாட்டிக் கொள்ளாமல் “சரி நீ கிளம்பு ராஜேஷ். நாளைக்குச் சீக்கிரம் வரணும்னு இல்லை... ஆனால் கொஞ்சம் நேரமே வந்துட்டா பரவாயில்லை... செங்கல்பட்டு இடத்தைக் கஸ்டமர்ஸ் பார்க்க வராங்க.” முதலாளியின் தோரணையில் சொன்னவர், எழுந்து அவர் அறைக்குச் செல்ல... ராஜேஷும் வீட்டிற்குக் கிளம்பினான்.

மறுநாள் காலை எழுந்தது முதல் விஜய்க்கு ஜெனியின் நினைவாகவே இருந்தது. அவன் அவளைச் செல்லில் அழைக்க... ஜெனி எடுக்கவில்லை... இரண்டு மூன்று முறை முயன்ற பின்னர்தான், அவள் கல்லூரியில் இருப்பாள் என்பது நினைவுக்கு வர... சரி அவளே அழைக்கட்டும் என்று விட்டுவிட்டான்.

ஜெனி கல்லூரி முடிந்த பின்பு தான் தனது செல்லை எடுத்து பார்த்தாள். அதில் இருந்த எண் விஜயுடையது என்று தெரியாததால்.... அவள் திரும்ப அழைக்கவில்லை... மாலை விஜய்யே ஜெனியை அழைத்தான்.

“மேடம் மிஸ்ட் கால் பார்த்தா கூடப் போன் பண்ண மாட்டீங்களா...” விஜய் மிரட்டுவது போல் பேச...

“சாரி யாருன்னு தெரியலை... அது தான் கூப்பிடலை ” என்றாள் ஜெனி பாவமாக...

“சுத்தம் என் நம்பர் கூடத் தெரியாதா... இனியாவது சேவ் பண்ணு.” என்றவன் “நேத்து புடவையில பெரிய பொண்ணா தெரிஞ்ச ஜெனி...” என்று மட்டும் சொல்ல...

நல்லா இருந்ததா... இல்லையா... ஜெனிக்கு தெரிந்து கொள்ளும் ஆர்வம் உண்டாக... அதை அப்படியே வாய்விட்டு கேட்க...

“ம்ம்... இதுவரை உன்னை வெஸ்டர்ன் டிரெஸ்ஸதான் பார்த்திருக்கேன்னா... அதனால வித்தியாசமா இருந்தது.” இப்போதும் விஜய் நன்றாக இருந்தது என்று சொல்லவில்லை... வேண்டுமென்றேதான் அப்படிச் சொன்னான். ஜெனிக்கு ஏமாற்றமாக இருந்தது.

விஜய் வேறு எதோ பேச... நல்லா இல்லை போல... அதனாலதான் சொல்ல மாட்றாங்க.... ஜெனி இன்னும் அதிலேயே நின்றாள். அவள் விஜய் என்ன பேசுகிறான் என்று கூடக் கவனிக்கவில்லை...

விஜய் பேசிக்கொண்டே இருந்தான். நடுவில் திடிரென்று “நான் இனி புடவையே கட்ட மாட்டேன்.” ஜெனி அறிவிப்பது போல் சொல்ல.... விஜய்க்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை... வாய்விட்டு சிரித்தவன்

“ஹே... லூசு புடவையில அழகா இருந்தடி போதுமா... எனக்கு உன்னை அப்படியே கடத்திட்டு போயிடலாமான்னு இருந்தது. எப்பவும் சின்னப் பொண்ணா தெரிவியா... வேற எதுவும் தோணாது. நேத்து புடவையில செமையா இருந்த... வேற என்னென்னமோ தோனுச்சு... என்னன்னு சொல்லவா....” விஜய் ஆர்வமுடன் கேட்க...

“ப்ளீஸ் போதும்... தெரியாம சொல்லிட்டேன்.” ஜெனி உண்மையிலேயே மிரண்டு விட்டாள். நல்லா இருக்கான்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டது தப்பா... என்னலாம் பேசுறான் பாரு... மனதிற்குள் விஜய்யை திட்டினாள்.

ஜெனியின் மனதில் விஜய் இடம் பிடிக்க ஆரம்பித்து இருந்தான். அதனால்தான் அவனுக்குப் பிடித்திருந்ததா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும், பிடித்திருக்க வேண்டுமே என்ற கவலையும் தோன்றியது... அதை ஜெனி உணர்வாளா...

ராஜேஷ் இரவு வீட்டிற்குச் செல்வதற்கு முன் வசந்தனை பார்த்து அன்று அலுவலகத்தில் நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டே செல்வான். வசந்தன் ஒரு ஆளுங்கட்சி அரசியல்வாதியின் பினாமி.

ரியல் எஸ்டேட் தான் முக்கியத் தொழில். எதிலும் அந்த அரசியல்வாதி நேரடியாகத் தலையிட மாட்டார். எல்லாம் வசந்தன்தான். நிலம் வாங்கி விற்பது எல்லாம் வசந்தனின் பெயரில் தான். அதில் வசந்தனுக்குக் கணிசமான கமிஷன் கிடைக்கும்.

வசந்தனிடம் சொல்லிக்கொண்டு ராஜேஷ் வீட்டிற்குக் கிளம்பும் போதே மணி பத்திற்கும் மேல்.... அப்போது ரூபிணி எங்கோ வெளியில் செல்ல கிளம்பி கொண்டிருந்தாள். இந்த நேரத்தில இந்தப் பொண்ணு தனியா எங்க போறா என்று ராஜேஷால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ரூபிணி அவளே காரை எடுக்கச் செல்ல... ராஜேஷ் வடிவேலை பார்த்து நீங்க போங்க என்பது போல் ஜாடை செய்ய... அவர் சென்று ரூபிணியிடம் “நான் கார் ஓட்றேன்.” என்றார்.

“எனக்குப் போய்க தெரியும்...” ரூபிணி திமிராகப் பதில் சொல்ல... வடிவேலு இப்போ என்ன செய்வது? என்பதைப் போல் ராஜேஷை பார்க்க...

இவன் வேலையா என்பது போல் ராஜேஷை முறைத்து பார்த்த ரூபிணி காரை அவளே ஓட்டிக்கொண்டு சென்றாள். ராஜேஷும் எனக்கென்ன வந்தது என்பது போல் தோளை குலுக்கி விட்டுச் சென்றான்.
 
Top