Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Neeyindri Vaaazhveno 1 2

Advertisement

Admin

Admin
Member

அவனுக்கு அவளை அழைத்துக்கொண்டு எங்குச் செல்வது என்று தெரியவில்லை.... யாரவது அவர்கள் இருவரையும் சேர்ந்து பார்த்தால் பிரச்சனை ஆகும். அதனால் காரிலேயே திருச்சி வரை சென்றுவிட்டு வரலாம் என நினைத்து ஓடிக்கொண்டு இருந்தான்.

தன் தங்கை ரிஷியுடன் இருப்பது நல்லது இல்லை.... அவன் தான் சொன்னால் கேட்க மாட்டன். இனி தந்தையிடம் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை எனபதை உணர்ந்த வெற்றி, அப்போது தான் சென்று படுத்திருந்த தன் தந்தையை எழுப்பி நடந்ததைச் சொல்ல.... அவன் எதிர்ப்பார்த்தது போலவே சந்தானம் அவனைத் தான் கடிந்து கொண்டார்.

“உனக்குத் திறமை இருந்தா அவனை நேரா மோதி ஜெய்க்கனும். இது என்ன மறைஞ்சு நின்னு கோழை போலத் தாக்கிறது. இப்ப நீ பண்ணதையே அவனும் செய்றான். ஆனா பாதிக்கப்படப் போறது நம்ம பொண்ணு வாழ்க்கை தான். இது மட்டும் வெளிய தெரிஞ்சா... நம்ம சாதனா பேரு தான் கெடும்.” என்றவர், ஒரு நொடியும் தாமதிக்காமல் உடனே ராஜ்மோகனை செல்லில் அழைத்தார்.

சந்தானம் ராஜ்மோகனிடம் நடந்த அனைத்தையும் சொல்லி... இப்போது சாதனா ரிஷியுடன் இருப்பதைச் சொன்னவுடன் “சாதனா பத்திரமா வீடு வந்து சேர்றது என் பொறுப்பு. அவ இன்னும் கொஞ்ச நேரத்தில உங்க வீட்ல இருப்பா....”



“எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா... அதனால எனக்கு உன் நிலைமை புரிஞ்சிக்க முடியும். ஆனா உன் பையன் என் பையனை செய்ய நினைச்சதுக்கு, உன் பையனுக்குக் கண்டிப்பா திரும்பக் கிடைக்கும்.” என்று எச்சரித்து விட்டே ராஜ்மோகன் போன்னை வைத்தார். சந்தானம் வெற்றியை முறைத்தார்.

காரில் இருந்த ரிஷியின் செல் அடித்தது. தன் தந்தை இந்நேரம் அழைக்கிறார் என்றால் விஷயம் அவர் காதுக்கும் போய்விட்டது எனத் தெரிந்தே அவன் போன்னை எடுத்தான்.

“ஹலோ சொல்லுங்கப்பா....”


“....”

“அதெல்லாம் உடனே வர முடியாது. நான் திருச்சி போயிட்டு இருக்கேன்.”

“....”

“போதும் அறுக்காதீங்க. சரி கொண்டு போய் விடுறேன்.” ரிஷி சொல்லிவிட்டுப் போன்னை வைத்தவன், திரும்பி சாதனாவை பார்த்து முறைத்தான்.

அவன் பேசியதை வைத்தே தன்னைத் தான் அவன் தந்தை கொண்டு விடச் சொல்கிறார் என அவளுக்குப் புரிந்தது. அதனால் அதுவரை இருந்த பதட்டம் மறைந்து இயல்பானாள்.

ரிஷி கோபத்துடன் முனு முணுத்துக்கொண்டே காரை திருப்பினான். சாதனா நன்றாகச் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். போகும் போது இருந்த வேகம் திரும்பும் போது இல்லை... ரிஷி மெதுவாகக் காரை ஓடிக்கொண்டு இருந்தான்.

“ஆமாம், உனக்கு என்ன என் மேல இவ்வளுவு அக்கறை?”

“அக்கறைன்னு எதுவும் இல்லை.... எங்க அண்ணனால ஒரு உயிர் போய்ட கூடாதுன்னு நினைச்சேன் அவ்வளவு தான்.”

“டாக்டர் இல்லையா.... அதனால இருக்கும்.”

“உங்களுக்கு என்னைத் தெரியுமா....” சாதனா ஆச்சர்யப்பட....

“நம்மோட நண்பர்களை விட எதிரியை நல்லா தெரிஞ்சு வச்சிருக்கணும். அப்படித் தெரிஞ்சிகிட்டது தான் உங்க குடும்பத்தைப் பத்தி.”

“நாம ரெண்டு பேரும் ஒரு ஸ்கூல் தான் தெரியுமா.... நீங்க என்னை விட நாலு வருஷம் சீனியர். நான் உங்களை ஸ்கூல்ல நிறையத் தடவை பார்த்திருக்கேன்.”

சாதனா சொன்னதற்கு ரிஷி “ஓ...அப்படியா...” என்றதோடு முடித்துக் கொண்டான்.

சிறிது நேரம் சென்று....

“நான் நல்லவன்னா இருக்கிறதுனால போச்சு... இல்லன்னா உன் நிலைமை...இனி இது மாதிரி எல்லாம் வராத....”

ரிஷி சொன்னதக் கேட்டு திரும்பி பார்த்த சாதனா “ஆமாம் நீங்க ரொம்ப நல்லவர் தான்.” என்றாள் வேண்டுமென்றே அழுத்தி.....

அவள் பேசியது ரிஷியின் கோபத்தைத் தூண்ட “என்ன கிண்டல் பண்றியா? காரை இப்படியே திருப்பிட்டு போய்டுவேன். எவன் என்ன சொன்னா என்னன்னு?” என்றான் கடுமையாக....

“நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்க இருந்து வந்தீங்க? ஒரு நல்லவர் செய்ற வேலையா இது....” சாதனா கேட்க....

அவள் குரல் அமைதியாக ஒலித்தது. அவள் ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுக் கத்தவெல்லாம் இல்லை.... அவளிடம் எப்போதுமே ஒரு நிதானம் இருந்தது.

“அது என்னோட தனிப்பட்ட விஷயம். அதைப் பத்தி கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை....”

“நீங்களும் அந்த நடிகையும் லவ் பண்றதா பேப்பர்ல வந்ததே உண்மையா....”

இதை வேறு யாரும் கேட்டிருந்தால் ரிஷி பதில் சொல்லி இருக்கவே மாட்டான். சாதனா என்பதால் சொன்னான்.


“ஆமாம், அவ இப்ப நிறையப் படம் நடிச்சிட்டு இருக்கா..... அதனால கொஞ்சம் வருஷம் போனதும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்.”

“இங்க மதுரை பக்கத்தில தான் அவளுக்கு ஷூட்டிங். நாங்க என்னைக்கோ ஒருநாள் தான் இப்படிச் சந்திச்சு பேசிப்போம். உங்க அண்ணனுக்கு எப்படி நான் இங்க வரேன்னு தெரிஞ்சதுன்னு தெரியலை....”

அவன் யாரோடு எப்படி இருந்தால் அவளுக்கு என்ன என்றுதான் சாதனாவால் இருக்க முடியவில்லை.... அவன் பேசியது அவளுக்கு மிகவும் வலித்தது. அதன் பிறகு அவள் எதுவும் கேட்கவில்லை.

சிறிது நேரம் காரில் அமைதி நிலவியது. பிறகு ரிஷியே மீண்டும் பேச்சை ஆரம்பித்தான்.

“எதுக்குக் கண்ணாடி போட்டிருக்க?”

“ம்ம்... எனக்கு லாங் சைட் ப்ராப்ளம் இருக்கு.”

“அதுக்கு லென்ஸ் போட வேண்டியது தான.... எதுக்குக் கண்ணாடி?”

“லென்ஸ் போட்டிருக்கேன். ஆனா தூசி எதுவும் கண்ணுல விழாம இருக்கதான் கண்ணாடி. வெளிய வரும் போது மட்டும்தான் போடுவேன்.” என்றவளை ரிஷியின் பார்வை ஆராய்ந்தது.

ஆள் நல்ல உயரம். ஆனால் உயரத்திற்கு ஏற்ற உடல் இல்லை... சற்று மெலிவான உடலமைப்பு தான். தேன் நிறம், சிறிய நெற்றி... நீள கண்கள்... அடர்த்தியான கண் இமைகள், சிப்பி இதழ்கள், பட்டு போல் கூந்தள் பாதி முதுகு வரைதான், இருந்தாலும் நல்ல அடர்த்தி.... காட்டன் சுடிதாரில் பாந்தமாக இருந்தாள். ஆக மொத்தம் ஆள் அழகு தான்.

அவன் அவளை எடை போடுவது தெரியாது சாதனா வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். அப்போது அவர்கள் காரை இரவு நேர வாகன பரிசோதனையில் இருந்த போலீசார் நிறுத்த.... “நீ எதுவும் பேசாத நான் பார்த்துகிறேன்.” என்றான் ரிஷி.

ரிஷி மட்டும் காரில் இருந்து இறங்கினான். அவனை அவர்களுக்கு நன்றாகத் தெரிந்தது. “ஓ நீங்களா சார்.... யாரு சார் கூட?” அந்தப் போலீஸ்காரர் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்க....

“சொந்தகாரங்க தான் அவங்க வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கோம்.” ரிஷி சமாளிக்க.... சாதனாவின் பக்க கதவை தட்டி அவளை வெளியே அழைத்த போலீஸ்காரர், அவளை ஆராயும் பார்வை பார்த்தார்.

“இவர் உங்களுக்குத் தெரிஞ்சவரா....” அவர் ரிஷியை காட்டி கேட்க... அவள் ஆமாம் என்றாள். அவளின் மரியாதையான தோற்றத்தை வைத்து மேற்கொண்டு எதுவும் கேட்காமல் அவர்களைப் போகச் சொன்னார்.

போலீஸாரால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அங்கு நின்று கொண்டிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் அவர்கள் இருவரையும் அவர்களுக்குத் தெரியாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அவருக்கே சாதனா சந்தானத்தின் பெண் என்பது தெரியாது.

ரிஷியோடு யாரோ ஒரு பெண் இரவு நேரத்தில் தனியாகப் பயணம் செய்வதே அவருக்குப் பெரிய செய்திதான். இந்த விஷயம் நாளை அவர்கள் செய்திதாளில் வந்தால்.... அவர்கள் செய்தித்தாள் பரபரப்பாக விற்பனை ஆகும் என்ற சந்தோஷத்தில் அவர் இருந்தார்.

ரிஷி சாதனாவை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது.... வெளி வாசல் கதவு திறந்தே இருந்ததால் காரை நேராக உள்ளே கொண்டு நிறுத்தினான்.

ரிஷியை பார்த்ததும் வெற்றி அவனை அடிக்கப் பாய... அவனைச் சந்தானம் தடுத்தார். உடனே வெற்றியின் கோபம் சாதனாவின் மீது திரும்பியது. காரில் இருந்து இறங்கியவளிடம் சென்றவன் அவளை ஓங்கி அறைந்தான்.

அதைப் பார்த்ததும் ரிஷிக்குக் கோபம் வந்தது. காரில் இருந்து இறங்கி அவனை நாலு சாத்து சாத்துவோமா என நினைக்கும் போது... சந்தானம் வெற்றியை திட்டி அவனை உள்ளே அனுப்பினார்.

ரிஷி காரை திருப்பிக்கொண்டு செல்லும் போது சாதனாவை பார்த்தான். அப்போது அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உதடு கிழிந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

ஏற்கனவே வெற்றியின் மீது கொலை வெறியில் இருந்த ரிஷி இதையும் வெற்றியின் கணக்கில் சேர்த்துக்கொண்டான். இருடா உனக்கு இருக்கு எனக்கு மனதிற்குள் வன்மத்துடன் அங்கிருந்து சென்றான்.

 
Top