Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nee Enai Neengaathae Anbae 1

Advertisement

நீயெனை நீங்காதே அன்பே



பகுதி – 1

சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் கிறிஸ்த்துவக் கல்லூரிக்குள் நுழையும் போதே... சுற்றிலும் இளமையின் சாரல் இதமாய் வீசியது. கல்லூரியின் கல்ச்சுரல்ஸ் நடப்பதால்... அந்தக் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி மற்ற கல்லூரி மாணவர்களும் அங்கே வந்திருந்தனர்.

கல்லூரி முழுக்க இளமையின் கொண்டாட்டம். அதுவும் இன்று மெல்லிசை போட்டி வேறு... அதற்காக மாணவர்கள் அங்கங்கே நின்று இசைக்கருவிகளை வாசித்தும், பாடல்களைப் பாடியும் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

வானில் எப்படி வெண்ணிலவு தனியாகத் தெரிகிறதோ... அதோ போல் அத்தனை பெண்களுக்கு நடுவிலும் சிவப்பு நிற முழு நீள பாவடையும், வெள்ளை நிறத்தில் ஷார்ட் டாப்பும் அணிந்து... சுருளான கேசம் காற்றில் துள்ள... நடந்து இல்லை... மிதந்து வருவது போல் வந்த ஜெனி தனியாகத் தெரிந்தாள்.

கல்லூரிக்குள் நுழைந்ததும் அவளையும் அங்கிருந்த உற்சாகம் தொற்றிக்கொள்ள... சுற்றிலும் தன் நண்பர்கள் எங்கே என்று தேட....

அப்போது “ஜெனி... இங்க இருக்கோம் வா...” என்ற குரல் கேட்டு அந்தப் பக்கம் திரும்பியவள்... அங்கே தன் நண்பர்களைப் பார்த்ததும் துள்ளி குதித்து அவர்களிடம் சென்றாள்.

“அழகா இருக்க ஜெனி... இந்த டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு.” என்ற தன் நண்பர்களின் வாழ்த்துக்களை அழகான புன்னகையுடன் ஏற்றவள் முகத்தில், தான் அழகு என்ற கர்வம் துளியும் இல்லை.

கல்ச்சுரல்ஸ் காரணமாகக் கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் உடைக்கு விதித்திருந்த கட்டுபாடுகளைத் தளர்த்தியிருந்ததால்... இந்த உடையில் வந்திருந்தவள்... பால் போல் வெள்ளை நிறத்தில் வட்ட முகமும்... அழகிய கரு விழிகளும்... ரோஜா நிற இதழ்களும் உடைய... சராசரி உயரத்தில் இருக்கும் அழகு தேவதை.

“நம்ம காலேஜ் தாண்டி இன்னைக்கு நடக்கிற போட்டியில ஜெயிக்கணும்...” தன் தோழியின் வேண்டுதலை கேட்டபடி.... திரும்பிய ஜெனியின் பார்வையில் மேடையில் இருந்த ராஜேஷும் அவன் நண்பர்களும் விழுந்தனர்.

Laila Like-a Like My Laila

Like-a Like Your Laila

Like-a Like My Laila

என்ற பாடலின் ஆரம்ப வரிகளைக் கேட்டதும், அங்கிருந்தவர்களையும் உற்சாகம் தொற்றிக்கொள்ளச் எல்லோரும் சேர்ந்து கைதட்டினார்கள்.

மன மன மன மெண்டல் மனதில்
லக லக லகப் பொல்லா வயதில்
டக டக டக கொட்டும் இசையில்
ஓகே என் கண்மணி மடியில்

மன மன மன மெண்டல் மனதில்
லக லக லகப் பொல்லா வயதில்
டக டக டக கொட்டும் இசையில்
ஓகே என் கண்மணி மடியில்

நேற்று என்பது இன்று இல்லை
நாளை நினைப்பதே ஓ.. தொல்லை

Like-a Like My Laila Laila

இன்று மட்டும் King And Queena

என்று பாடல் முடிந்த போது அங்கிருந்த அனைவர் மனதிலும் உற்சாகம் நிரம்பி வழிந்தது. ராஜேஷ் மேடையில் இருந்து இறங்கிய போது அவன் கல்லூரி நண்பர்கள் அவனுக்குக் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.


ராஜேஷ் அவர்கள் கல்லூரியில் மிகவும் பிரபலமானவன். உயரமாகச் சிவந்த நிறத்தில் பார்க்க கலையாக இருப்பான். அவனிடம் பெண்கள் விரும்பி வந்து பழகிய போதும், நட்பென்ற என்ற எல்லையை அவன் இதுவரை தாண்டியதில்லை.... ஒரு வேலை ஜெனியை சந்தித்தால் மாறுவானோ.....
ஜெனிக்கு ராஜேஷை தங்கள் கல்லூரி மாணவன் என்று தெரியும். ராஜேஷ் கடைசி வருடம் B.B.A படிக்கிறான். ஜெனியின் நண்பர்கள் சென்று ராஜேஷ்க்கு வாழ்த்து தெரிவிக்க... ஜெனி விலகி நின்று அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ராஜேஷ்க்கு இன்னும் ஜெனியை தெரியாது. ஜெனி இரண்டாம் வருடம் B.SC., படிக்கிறாள்.

அன்று முழுவதும் பாட்டு நடனம் என்று சென்றது. மாலையில் வீட்டிற்குச் செல்ல ஜெனியும் அவள் தோழி ஸ்வாதியும் பேருந்து ஏறினார்கள்... ஜெனி வழக்கம் போல் ஜன்னல் ஓரம் உட்கார்ந்தவள் ஸ்வதியுடன் பேசி சிரித்தபடி வந்தாள்.

ஸ்வாதி எதோ சொன்னதற்கு ஜெனி சிரித்தபடி ஜன்னல் வழியாக வெளியே பார்க்க... அப்போது பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஒருவன் ஜெனி அவனைப் பார்த்து தான் சிரிக்கிறாள் என்று தவறாக நினைத்து பதிலுக்குப் புன்னகைக்க.... ஜெனி முதலில் கவனிக்கவில்லை...

அவன் ஜெனியின் கவனத்தைக் கவருவதற்காகக் கை அசைக்க... அதைப் பார்த்த ஜெனி பார்க்காதது போல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவன் இவர்கள் பேருந்திலேயே வந்து ஏற... ஜெனி அதைப் பார்க்கவில்லை.

பேருந்து கிளம்பியதும் ஜெனி எப்போதும் போல் ஸ்வதியுடன் பேச... அடுத்த நிறுத்தத்தில் ஸ்வாதி இறங்கிவிட... ஜெனி மட்டும் இருக்க... இப்போது அவன் ஜெனியின் இருக்கைக்கு அருகில் வந்து நின்று கொண்டான்.

அவனைப்பார்த்ததும் ஜெனி மிகவும் பயந்து விட்டாள். யாரவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று விழிகளால் பேருந்தை ஆராயந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்ச... அப்போது கடைசி இருக்கையில் இருந்த ராஜேஷும், அவன் நண்பர்களையும் பார்த்தவள் எழுந்து அங்கே சென்றாள்.

தயங்கி... தயங்கி ராஜேஷின் அருகில் சென்றவள் “ஹாய்... இன்னைக்கு நல்லா பாடினீங்க....” என்று வரவழைத்த புன்னகையுடன் ஜெனி சொல்ல...

திடிரென்று ஒரு பெண் வந்து பேசியதும் குழம்பிய ராஜேஷ் “தேங்க்ஸ்...” என்றான். அவனுக்கு ஜெனி அவர்கள் கல்லூரி என்பது கூடத் தெரியவில்லை.... அப்போது ராஜேஷின் அருகில் இருந்த இருக்கை காலியாக... ஜெனி அதில் அமர்ந்து கொண்டாள்.

ராஜேஷும் அவன் நண்பர்களும் ஜெனியை ஒரு மாதிரி பார்த்துவிட்டு அவர்கள் பேச்சை தொடர... ஜெனி அவர்களை நன்றாகத் தெரிந்தது போல்... அவர்கள் பேசுவதைக் கவனித்தவள்... அவர்கள் சிரிக்கும் போது அவளும் சிரித்தாள்.

ராஜேஷுக்குக் கோபம் வந்து விட்டது. அவன் பக்கவாட்டில் திரும்பி ஜெனியை பார்த்து முறைக்க... அவனிடம் விழிகளால் அந்த ஜொள்ளு பார்ட்டியை அவள் காட்ட... ஜெனி காட்டிய திசையில் பார்த்த ராஜேஷ்க்கும் அவன் நண்பர்களுக்கும் அவள் ஏன் வழிய வந்து பேசினாள் என்று புரிந்தது.

ராஜேஷ் அந்த ஜொள்ளுப் பார்ட்டியை பார்த்து முறைத்தவன்... கோபமாக எந்திரிக்க.... அடுத்த நிறுத்தத்தில் விட்டால் போதும் என்று அவன் இறங்கி சென்று விட்டான்.

ஹப்பாடா... என்று நிம்மதியான ஜெனி புன்னகையுடன் “தேங்க்ஸ்...” என்றாள்.

“ஹாய் நீங்க எங்க காலேஜ் தானா......” ராஜேஷின் நண்பன் ஹரி கேட்க....

“ஆமாம்... physics department.” என்ற ஜெனி அடுத்து வந்த நிறுத்தத்தில் இறங்க எழுந்தவள், அவர்களிடம் ஒரு தலையசைப்புடன் விடைபெற்று செல்ல... ராஜேஷ் செல்லும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“டேய்... இத்தனை நாளா இப்படி ஒரு பொண்ண பார்க்காம எப்படி டா... மிஸ் பண்ணோம்.” என்று ஹரி வழிய... அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் ராஜேஷ் இல்லை... அவன் பேருந்தின் பின் பக்க கண்ணாடி வழியாக ஜெனியையே பார்த்துக்கொண்டிருந்தான்.

நடையில் துள்ளலுடன் வீட்டிற்குச் சென்ற ஜெனி, வாசலில் அவளின் அப்பாவின் வண்டியை பார்த்ததும் அடக்கமாக வீட்டிற்குள் சென்றாள். ஹாலில் ஜெனியின் அப்பா ஸ்டீபன் அமர்ந்து பேப்பர் படித்தபடி காபி குடித்துக்கொண்டிருந்தார்.

ஜெனியை பார்த்தவர் அடுத்துக் கடிகாரத்தைப் பார்த்தார். அதோடு அவரின் வேலையைக் கவனிக்க... ஜெனி மெதுவாக உள்ளே சென்றாள். சமையல் அறையில் இருந்த அவள் அம்மா அவளைப் பார்த்ததும் காபி கலக்கி கையில் கொடுக்க... அதை அவள் குடிக்கும் போதே... ஜெனியின் அக்கா புனிதா அங்கே வந்தாள்.

மகள்கள் இருவரும் தங்கள் தாயோடு வெளியே அமர்ந்திருக்கும் ஸ்டீபன் காதில் விழாதவாறு பேசி சிரித்தனர். ஸ்டீபன் மிகவும் கோபக்காரர் அதோடு கண்டிப்பானவர். அந்த வீட்டில் அவர் வைத்தது தான் சட்டம். இருவருமே பெண் பிள்ளைகள் என்பதால் வீட்டில் கட்டுப்பாடு அதிகம்.

ஜெனியின் அக்கா புனிதா மேரி படித்து முடித்து ஒரு தனியார் உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறாள். அவளுக்குத் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது.

அக்காவும், தங்கையும் தங்கள் தந்தை வீட்டில் இருக்கும் நேரத்தில் தங்கள் அறையிலேயே அடைந்து கிடப்பதும், தங்கள் தந்தை வெளியே சென்றதும் வீட்டில் தங்கள் இஷ்ட்டம் போல் இருப்பதும் வாடிக்கை தான்.

அன்றும் அது போல் ஸ்டீபன் மாலை வெளியே சென்றதும், புனிதா வீட்டின் பின் புறம் உள்ள தோட்டத்தில் அமர்ந்து தன் வருங்காலக் கணவனுடன் செல்லில் பேச... ஜெனி ஹாலில் அமர்ந்து டீவியில் சினிமா பாடல்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் சென்று தெரு முனையில் தங்கள் தந்தையின் வண்டி வரும் சத்தம் கேட்டதும், ஜெனி டீவியை அனைத்து விட்டுப் படிப்பது போல் புத்தகத்துடன் அமர... புனிதா அடித்துப் பிடித்து உள்ளே வந்தவள், தன் அம்மாவுக்குச் சமையலில் உதவுவது போல் சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

இரவு உணவு அனைவரும் சேர்ந்து சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள். அன்றும் அது போல் கடவுளுக்கு நன்றி செலுத்தி விட்டு இரவு உணவை அருந்தினர்.

புனிதா உணவு மேஜைக்குக் கீழ் தன் செல்லை வைத்து பார்த்துக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்து விட்ட ஸ்டீபன் “புனிதா சாப்பிடும் போது கைல செல் எதுக்கு?” என்று அதட்டலாகக் கேட்டதும், புனிதா அரண்டு விட்டாள்.

“இல்லப்பா... சும்மா தான்...”

“சும்மானாலும் எதுக்கு?”
“இல்ல அவரு தான் மெசேஜ் அனுப்பியிருக்காரு...” என்று புனிதா இழுக்க...

“கல்யாணம் நிச்சம் ஆகி இருந்தாலும் எல்லாம் ஒரு அளவோடு இருந்தா தான் நல்லா இருக்கும். கல்யாணத்துக்குப் பிறகு காலமெல்லாம் பேசிட்டு தானே இருக்கப் போறீங்க. இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இருக்கக் கூடாதா...”

“உனக்கு அடுத்து ஒரு தங்கச்சி இருக்கா... அவளுக்கு நீ ஒரு எடுத்துக்காட்டா இருக்க வேண்டாமா....”

“எவ்வளவு பெரிய இடத்தில உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கேன். மாப்பிள்ளை M.E கோல்ட் மெடலிஸ்ட். US ல பெரிய வேலையில இருக்கார். நீயும் சீக்கிரம் US போகப்போற... ஜெனிக்கும் உனக்குப் பார்த்த மாதிரி ஒரு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிட்டா... என்னோட கடமையை நல்லபடியா முடிச்ச நிம்மதி எனக்குக் கிடைக்கும்.”

“நீ என்னன்னா சின்னப் பிள்ளை மாதிரி நடந்துக்கிற... மாப்பிள்ளை வீட்ல தெரிஞ்சா என்ன நினைப்பாங்க? நான் பொண்ணுங்களை ஒழுங்கா வளர்க்கலைன்னு நினைக்க மாட்டாங்க...” என்று ஸ்டீபன் ஒரு பெரிய லெக்ச்சர் கொடுக்க... உண்மையிலேயே அவர் ஒரு கல்லூரியின் HOD என்பதால் அவரை மன்னித்து விட்டு விடுவோம்.

புனிதா அவர் சொன்னதிற்கு எல்லாம் நன்றாக மண்டையை ஆட்டிவிட்டு வேகமாகச் சாப்பிட்டு விட்டு அறைக்குள் சென்றவள், அதே வேகத்தில் திரும்பி வந்து செல்லை ஹாலில் வைத்து விட்டு சென்றாள். ஜெனியும் படுப்பதற்கு முன் தன் செல்லை கொண்டு வந்து ஹாலில் வைத்து விட்டு சென்றாள்.

படுப்பதற்கு முன் இருவரும் தங்கள் செல்லை ஹாலில் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்பது அந்த வீட்டின் எழுத படாத விதி....

அறைக்குள் வந்த புனிதா ஜெனியிடம் புலம்பினாள்.

“நான் அவரை நேர்ல கூடப் பார்த்தது இல்லை. போட்டோல தான் பார்த்திருக்கேன். அவங்க அப்பா அம்மா மட்டும் சொந்தகளோட வந்து நிச்சயம் பண்ணிட்டு போனாங்க. என்னை அவர் கூடப் போன்லையவது பேச விடுறாரா...”
“என்னவோ அத்தான் இங்க இருந்த மாதிரி பேசுற... அவர் US ல இருக்கிறதுனால வரலை.... நீ எதோ அப்பாவுக்குப் பயந்து பேசாம இருக்கிற மாதிரி சொல்ற... நைட் நீயும் அத்தானும் ஸ்கைப்ல பேசிக்கறீங்க தான....”

“ஏய் ! நாங்க பேசுறது உனக்கு அப்படித் தெரியும்?”

“நடு ராத்திரியில பேய் உலாவுற நேரத்தில... நீ ரூம் உள்ள சுத்திட்டு இருந்தா தெரியாதா... அதுவும் நீங்க ரெண்டு பேரும் பேசுறது இருக்கே... அதைக் காதை கொண்டு கேட்கவே முடியலை....”

“நானும் எத்தனை நாளுக்குத் தூங்கிற மாதிரியே நடிக்கிறது. உனக்கு எப்படா கல்யாணம் முடியும்ன்னு இருக்கு?”

“கர்த்தாவே என்னைச் சீக்கிரம் இவ கிட்ட இருந்து காப்பாத்துப்பா ....” ஜெனி உண்மையிலேயே கண் மூடி மேலே பார்த்து வேண்ட... புனிதா வெட்கம் கொண்டு போர்வையைத் தலை வரை மூடிக்கொண்டு படுத்து விட்டாள்.

எப்போதும் போல் காலை பொழுது அழகாக மலர.... ஜெனி கல்லூரிக்கு கிளம்பி சென்றாள்.

கல்லூரி நுழைவாயில் அருகே இருந்த மரத்தடியிலேயே ராஜேஷ் அவன் நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தான். ஜெனி பச்சை நிற சல்வாரில் ஸ்வதியுடன் பேசிக்கொண்டே வர... ராஜேஷின் பார்வையும், ஜெனியின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்து விலகியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து லேசாகப் புன்னகைத்துக்கொண்டனர்.

ஜெனி அவர்களைக் கடந்ததும், ராஜேஷும் அவன் நண்பர்களிடம் பேசியபடி ஜெனியின் பின்னே நடந்து வர.... ஜெனி தன் டிபார்ட்மென்ட் வந்ததும் திரும்பி ராஜேஷை ஒரு முறை பார்த்து விட்டு சென்றாள்.

கல்லூரியில் இருந்து திரும்பி செல்லும் போதும், ஜெனி வரும்வரை வெளி வாயிலின் அருகே காத்திருக்கும் ராஜேஷ்... அவள் அவனைக் கடந்து சென்றதும், அவள் பின்னே நண்பர்களுடன் பேசியபடி வருவான். இருவரும் ஒரே பஸ்சில் தான் ஏறுவார்கள்.

ஜெனிக்கு ராஜேஷ் தன் பின்னே வருவது தெரியும். அவள் இதழில் எப்போதும் ஒரு மெல்லிய புன்னகை இருக்கும். இப்படியே ஒரு வாரம் கடக்க....

“டேய் ராஜேஷ் ! மிடியளைடா... லவ் பண்ணா சொல்லித்தொலையேன்டா.... இப்படிக் காலையும், சாயந்திரமும் வாட்ச்மேன் மாதிரி பின்னாடியே போறது அசிங்கமா இருக்குடா...”

“இந்நேரம் காலேஜ் முழுசும் நீ அந்தப் பொண்ணு பின்னாடி சுத்துறது தெரிஞ்சிருக்கும்.”

“ராஜேஷ் போதும் விளையாட்டு... நீ அந்தப் பெண்ணைச் சீரியஸா லவ் பண்ணா சொல்லிடு... இல்லை விட்டு விலகு...” என்று அவன் நண்பர்கள் ஆளாளுக்குக் கொதிக்க....

“டென்ஷன் ஆகதீங்கடா..... சீக்கிரம் பேசுறேன்.” என்றான் ராஜேஷ்.

பேருந்து நிலையம் நோக்கி நடந்து கொண்டிருந்த ஜெனிக்கு அவர்கள் பேசியது அனைத்தும் காதில் விழுந்தது. காதல் என்ற வார்த்தையைக் கேட்டதும் அவளுக்குப் பயம் வந்து விட்டது.

அவளுக்கு ராஜேஷை பிடிக்கும். ஆனால் அது காதலா என்றால் தெரியாது. அதுவும் அவள் அப்பாவுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான்.

அவள் அந்த நொடியிலிருந்து ராஜேஷை தவிர்க்க ஆரம்பித்தாள். காலை கல்லூரிக்குச் சீக்கிரம் வந்தவள், மாலையும் கல்லூரி முடிந்த நொடி காணாமல் போனாள். எதிர்பாராமல் இருவரும் சந்தித்தாலும் ஜெனி நிமிர்ந்து ராஜேஷை பார்ப்பதும் இல்லை. ராஜேஷ் காரணம் தெரியாமல் தவித்தான்.

ஜெனி ராஜேஷிடம் பாராமுகமாக இருந்தாலும் உள்ளுக்குள் அவனை எண்ணி தவிக்கத்தான் செய்தாள். அதே அவன் மீது அவளுக்கு இருப்பது ஈர்ப்பையும் தாண்டி காதல் என்பதைப் புரிய வைத்தது.

ஒரு நாள் காலை சீக்கிரமே கல்லூரிக்கு வந்த ஜெனி அவர்கள் கல்லூரியின் நுழைவாயிலின் அருகேயே அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்த ராஜேஷை பார்த்ததும் முகம் மாற....


அதைப் பார்த்த ராஜேஷுக்கு வருத்தமாக இருந்தது. இருந்தாலும் “ஜஸ்ட் டூ மினிட்ஸ் உன்னோட பேசணும். நான் எதுக்கும் உன்னைப் போர்ஸ் பண்ண மாட்டேன்.” என்றான்.

ஜெனி வாயை திறந்து பதில் சொல்லவில்லை... ஆனால் சம்மதமாக அவனுடன் இணைந்து நடந்தாள்.

“ஜெனி I LOVE YOU. இது உனக்குக் கேட்க பிடிச்சிருக்கோ... இல்லையோ ஆனா என்னால சொல்லாம இருக்க முடியாது.”

“நீயும் என்னை லவ் பண்ற தான...” என்று ராஜேஷ் கேட்டதும், மறுத்து எதோ சொல்ல ஜெனி வாயை திறக்க...

“இல்லைன்னு பொய் சொல்லாத... உன் கண்ணே உன்னைக் காட்டி கொடுக்குது. நான் உன் கண்ணைப் பார்க்கும் போது அதுல காதல் தான் தெரியுது ஜெனி.”

“நான் பதிலுக்கு நீயும் லவ் சொல்லனும்ன்னு உன்னை வற்புறுத்த மாட்டேன். உனக்கு எப்ப சொல்லனும்ன்னு தோணுதோ அப்ப வந்து சொல்லு போதும்.” என்றதும், ஜெனியின் கண்களில் பயம் தெரிய....

“நீ என்னைப் பார்த்துப் பயப்படுறது எனக்குக் கஷ்ட்டமா இருக்கு ஜெனி. பயப்படதா நான் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன். ப்ரீயா இரு....” என்ற ராஜேஷ் வேகமாக அங்கிருந்து சென்று விட.... ஜெனி அங்கேயே சிலையாக நின்றாள்.

ராஜேஷ் சொன்ன வாக்கை காப்பாற்றினான். அவன் ஜெனியை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அதே சமயம் தூரத்தில் இருந்து ஜெனியை பார்ப்பதையும் விடவில்லை.

ஜெனி கல்லூரிக்குள் நுழைந்த நொடி ராஜேஷின் பார்வை ஜெனி மீது தான் இருக்கும். அவள் அவன் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்திருப்பான். அவன் நண்பர்கள் செய்யும் கேலியை ஒரு புன்னகையுடன் கேட்டிருப்பான்.

நாட்கள் செல்ல செல்ல ஜெனிக்கு தன் அப்பாவின் மீது இருந்த பயம் குறைந்து ராஜேஷின் மீதிருந்த காதல் அதிகமாக... அவளே ராஜேஷ் இருக்குமிடம் தேடி சென்றாள்.



ஒரு நாள் ராஜேஷ் அவன் நண்பர்களோடு உட்கார்ந்திருந்தான். அப்போது அங்கே வந்த ஜெனியிடம் அவன் நண்பர்கள் கதை அடிக்க... அவளும் நின்று பேசினாள். அவள் விழிகள் தவிப்புடன் ராஜேஷை பார்க்க... ராஜேஷ் அவளைக் கண்டுகொள்ளாமல் இருந்தான்.

“ஜெனி இனிமே உன் பேரு ஜெனிதா மேரி இல்ல... ஜெனிலியா... ஓகே வா... ரொம்ப ஓல்ட் நேம் அதனால நாங்க மாத்திட்டோம்.” என்று ஹரி சொல்ல... ஜெனி சரி என்று தலை ஆட்டினாள்.

“அப்புறம் உனக்குத் தலை வார டைம் இல்லையா.... ஏன் உன் தலை எப்பவுமே சிக்கு பிடிச்சே இருக்கு...” ஜெனியின் சுருளான கேசத்தைப் பார்த்து ஹரி சந்தேகம் கேட்க.... ஜெனி அவனைப் பார்த்து முறைத்து விட்டு சென்றாள்.

“கொஞ்சம் ஓவரா பேசிட்டேனோ...” என்று அவன் நண்பர்களைப் பார்த்துக் கேட்க.... “கொஞ்சம் இல்லை ரொம்பவே...” அவர்கள் அவன் முதுகில் முதுகில் மொத்தினார்கள்.

காதலை சொல்ல ராஜேஷீன் அருகில் செல்லும் ஜெனி, அதைச் சொல்ல தைரியம் இல்லாமல் ஒவ்வொரு முறையும் சோர்ந்து திரும்பி வர... மூன்று நான்கு முறை பொறுத்த ராஜேஷ் அதற்குமேல் முடியாமல் அவனே ஜெனியை தேடி சென்றான்.

மாலை வகுப்பில் இருந்த ஜெனி திரும்பி வரும் போது எதிரில் ராஜேஷ் வருவதைப் பார்த்து அங்கேயே தயங்கி நிற்க... அவள் அருகில் வந்ததும் “என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்க?” ராஜேஷ் கேட்டும் ஜெனிக்கு சட்டென்று உன்னை லவ் பண்றேன் என்று சொல்ல வரவில்லை...

அவளின் தவிப்பை பார்த்தவன் “என்ன ஓகே வா....” என்றதும், ஜெனி அவனை நிமிர்ந்து பார்க்க... “இல்லையா...” என்றான் மீண்டும்.

ஜெனி அப்போதும் பதில் சொல்லவில்லை... “சரி நான் போறேன்..” ராஜேஷ் திரும்பி நடக்க...

“இல்ல... போகாதீங்க எனக்கு ஓகே.” என்றாள் ஜெனி வேகமாக....

“யஹ்ஹா...உஹூ...” சத்தமாக ராஜேஷ் கத்த...

“ஐயோ ! கத்தாதீங்க...எல்லோரும் பார்கிறாங்க..” ஜெனி ராஜேஷின் கைபிடித்து இழுத்துக்கொண்டு செல்ல... ராஜேஷின் கை மட்டும் இல்லை... இதயமும் விருப்பமாக ஜெனியிடம் சிறைபட்டது.
இனிதான ஆரம்பம்
 
Top