Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 12

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம் – 12

ஜீவாவின் திட்டமானது அன்பரசியை கூடிய விரைவில் மணக்க வேண்டும் என்பதை நோக்கியே இருந்தது. அதற்காக அவள் பின் அலைந்தால், கண்டிப்பாக தனக்கு அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும் என்பதில் உறுதியாக இருந்தான்!

எதையும் நினைத்தவுடன் நடத்திக்காட்ட வேண்டும் என்று ஆசைப்படுபவன் ஜீவா. அதனால், மேலும் காலம் தாழ்த்தாமல், இதைப் பற்றி அவன் பெற்றோர்களிடம் கூறி சீக்கிரமாக அவளை தன்னவளாக்கிக் கொள்ள வேண்டும் என்று திட்டம் வகுத்தான்.

அவன் பெற்றோர்கள் ராகவனும் லட்சுமியும் காதலுக்கு எப்போதும் எதிரியாக இருந்ததில்லை… அதனால், எந்த பிரச்சனையும் வராது என்று எண்ணியே அவன் பெற்றோர்களிடம் பேச வேண்டும் என்று கூப்பிட்டான்.

“அப்பா… கொஞ்சம் உங்க கூட பேசனும். ரெண்டு பேரும் இங்க உட்காருங்க!”

சோபாவை தட்டிக் காட்டி மகன் கேட்ட விதத்தில், அவனின் முகத்தையே கூர்ந்து நோக்கினார் ராகவன். ஒரு ஆவலுடன் அவன் பேசவிருப்பதை புரிந்துக் கொண்டவர், புருவங்கள் நெரிய அமர்ந்தார்.

லட்சுமிக்கும் என்னவாக இருக்கும் என்று யோசனையே ஓடியது! “அப்பா… அம்மா.. நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்!” கேட்ட தாயின் முகம் அதிர்ச்சியை காட்டியது என்றால், தந்தையின் முகம் மேலும் கூர்ந்து மகனின் வாக்கியத்தை உள்வாங்கியது.

அன்பரசியை முதன் முதலில் பார்த்தது முதல் முந்தின நாள் அவளை வெறுப்பேற்றியது வரை படமாக ஓட்டினான் மகன். தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு காத்திருக்கும் இயக்குனர் போல, ஜீவா பெற்றோர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். லட்சுமி அமைதியாக இருக்க, ராகவனோ “ஏன்டா, ஒன் சைட் லவ் ஸ்டோரியை தான் இவ்வளவு நேரம் சொல்லிட்டு இருந்தியா? அது தான் அந்த பொண்ணு உன்னை பிடிக்கலனு சொல்லிட்டால? அப்புறம் என்ன??” என்றார்.

“அப்பாபாபா…. என்னபா இவ்வளவு ஈசியா சொல்றீங்க? அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு! வினோத் சொன்னான். நான் சொன்னதை கேட்டு அவ அழுவ எல்லாம் செஞ்சுருக்கா தெரியுமா? பிடிக்கலனா எதுக்கு அழனும்?”

“ஹ்ம்ம்ம்... அப்படியா சொல்ற?” பேசிக் கொண்டே தன் மனைவியை பார்த்தவருக்கு லட்சுமி ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. “அம்மா என்னமா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க? உங்களுக்கு…”

ஜீவாவினால் முடிக்க கூட இயலவில்லை. அம்மாவும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், அவனால் மேற்கொண்டு யோசனை செய்ய முடியாமல் போனது. மகன் வருந்துவதை தாங்காமல் உடனே அவன் அருகில் வந்து, அவனின் சிகையை கோதினார்.

“எனக்கு லவ் பிடிக்காதுனு இல்லடா… உனக்கு தெரியாததா… பட், பொண்ணு எப்படியிருப்பா? எப்படி பழகுவா? இப்படி கொஞ்சம் யோசனையா இருந்துச்சு. அவ்வளோ தான். வேற ஒண்ணுமில்ல. நீ சொல்றத வெச்சு பார்த்தா, நல்ல பொண்ணு மாதிரி தான் இருக்கா. ஆனா, அவள ஒரு தடவ நேர்ல பார்க்கனும் போல இருக்குடா… நீங்க என்னங்க சொல்றீங்க??”

மனைவி கூறியதை கேட்டு சம்மதமாக தலையசைத்து, “எனக்கும் பொண்ணை ஒரு தடவ பார்க்கனும் போல இருக்கு ஜீவா. ஹெல்ப் பண்ணனும்னு நடுராத்திரி தைரியமா வந்திருக்கானா, அந்த பொண்ணை பார்த்தே ஆகனும்! எப்போ கூட்டிட்டு போற??” என்றார் ராகவன்.

பெற்றோர் இருவரின் மனதிலிருப்பதை ஓரளவிற்கு புரிந்துக் கொண்டான் ஜீவா. “நாளைக்கே கூட கூட்டிட்டு போறேன்பா… கண்டிப்பா அவள பார்த்தா உங்களுக்கு பிடிக்கும். அப்புறம், அவளுக்குனு இருக்கறது வினோத் மட்டும் தான். அதனால, அவள நாம தான்மா நல்லா பார்த்துக்கனும்! ஓகே வா?”

இதை கேட்டு ஓரக் கண்ணால் முறைத்து ஜீவாவின் காதுகளை இழுத்தார் லட்சுமி! “நான் உனக்கு அம்மாடா! எனக்கே சொல்லித்தரியா? நீ அந்த பொண்ணுகிட்ட ஒழுங்கா நடந்துக்கோபா… அது போதும்!”

சிரித்து மழுப்பினாலும் அந்த வார கடைசியில் பெற்றோர்களை அன்பரசியிடம் அழைத்துச் சென்றான் ஜீவா. அன்று அவர்களின் ப்ரோகிராமை வினோத்தின் மூலம் தெரிந்ததால், சரியான நேரத்துக்கு அழைத்துச் செல்ல முடிந்தது.

ஆனால், வினோத்திடம் கூட தான் வருவதை கூறவில்லை. ‘அந்த ஆல் இன்டியா ரேடியோ உளறிடுச்சுனா? வேற வேலையே வேணாம்!’ என்பதே அவன் எண்ணம். மாலை வேளையில், அன்புவும் வினோத்தும் ஒரு ஆசிரமத்தில் இருந்தனர். அது சவீதா சிஸ்டர் நடத்தும் ஆசிரமமில்லை. மாற்றுதிறனாளிகள் வயது வரம்பு இல்லாமல், இருக்கும் ஆசிரமம்.

உள்ளே நுழைந்ததும் ஜீவா ராகவனிடம் திரும்பி, “அப்பா நான் கொஞ்சம் தூரத்திலயே இருக்கேன். நீங்க என்னோட பேர எடுக்காம அவகிட்ட பேசுங்க. நான் அப்புறமா வரேன்.” என்று அறிவுறித்தினான்.

“எதுக்குடா? நீயும் வாடா உனக்காக அவ கிட்ட பேச மாட்டேனா என்ன?”

“அதில்லபா… அவளுக்கு நீங்க தான் என்னோட அப்பா அம்மானு தெரிஞ்சா ஒழுங்கா பேச கூட மாட்டா! அதனால தான் சொல்றேன்…” அவன் பேசும் போதே அன்பரசி அங்கு வரவும், அவளை காட்டினான் ஜீவா. “அதோ அங்க ப்ளூ கலர் சுடிதார் போட்டுருக்கால, அவ தான். கூட இருக்கறவன் தான் வினோத்.”

காட்டிவிட்டு அங்கு இருந்த ஒரு மரத்தின் பின் மறைந்தும் கொண்டான். ஒரு பெருமூச்சுடன் அன்பரசியிடம் விரைந்தனர் ராகவன் தம்பதியர். அவர்களை பார்த்ததும் புன்முறுவலுடன் வரவேற்றாள் அன்பு.

“வாங்க சார். வாங்க மேடம். உங்களுக்கு எதாவது ஹெல்ப் வேணுமா?”

“வணக்கம்மா. இப்போ தான் இங்க முதல் தடவ வரோம். என்னோட பேர் ராகவன். இவ என்னோட வைப்ஃ லட்சுமி. நீ இங்க தான் வேலை செய்றீயாமா? எங்களுக்கு இங்க இருக்கறவங்களை பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா?”

“கண்டிப்பா சார்... தென், இவன் என்னோட பிரெண்ட் வினோத்.”

வினோத்தை அறிமுகம் செய்து வைத்து, அங்கு உள்ள அறைக்களுக்கு கூட்டிச் சென்று ராகவன் தம்பதியருக்கு எல்லாவற்றையும் விளக்கினாள் அன்பு. அவளின் எளிய அழகான தோற்றத்திலும், மரியாதை கலந்த தெளிவான பேச்சிலும் பாதி அவளிடம் விழுந்து விட்டனர்.

பேசிக் கொண்டே மீண்டும் வினோத் இருந்த இடத்திற்கு வந்ததும், ராகவன் மெதுவாக பேச்சை வளர்த்தார். “நான் ‘லட்சுமி குரூப் ஆப் கம்னீஸ்’யை என்னோட பையனோட சேர்ந்து நடத்திட்டு வர்ரேன்மா. எனக்கு ஒரே ஒரு பையன் தான். நீங்க ரெண்டு பேரும் இங்க ரொம்ப நாளா ஹெல்ப் பண்றீங்களா??”

“ஆமா சார், நிறைய வருஷமா இங்க வந்துட்டு இருக்கோம்…” அன்பரசி அத்துடன் நிறுத்திக் கொள்ள மேலே என்ன பேசுவது என தெரியாமல் ராகவன் திணற, லட்சுமி கைக் கொடுத்தார். “நீங்க ரெண்டு பேரும் சின்ன வயசுலிருந்தே ஃபிரெண்ஸாமா??”

அவ்வளவு தான் வினோத் கல் எடுத்து அடித்தது முதல் போன வார ஷாப்பிங் சண்டை வரை அனைத்தையும் ஒப்பிக்களானான். சிறு புன்னகையுடன் அன்பு நடுவில் புகுந்து அவனுக்கு கவுன்டர் கொடுக்கும் வேலையை செவ்வனே செய்துக் கொண்டிருந்தாள்!

இருவர் பேசுவதையும் கேட்டு ஒரு நிறைவான உணர்வை கொண்டனர் ராகவன் தம்பதியர். அடுத்த கட்டத்திற்கு அன்பரசியை நோக்கி எடுத்து வைத்தார் லட்சுமி. “அப்போ அடுத்து என்னமா உன்னோட கல்யாணம் தான??” இதற்கு அன்பரசி பதில் அளிப்பதற்குள் வழக்கம் போல வினோத்தே முந்தினான்.

“ஹா…. கரக்டா சொன்னீங்க ஆன்டி! மாப்பிள்ளை கூட ரெடி. மேடம் தான் ரொம்ப பிகு பண்ணிட்டு ஓகே சொல்ல மாட்றாங்க! நீங்க கொஞ்சம் சொல்லுங்க…”

வினோத் பக்கம் முழுமையாக திரும்பி கண்களில் அனல் அடிக்க, இடுப்பில் கை வைத்து முறைத்தாள் அன்பு. “என்னடா… உனக்கு வேலை மிச்சம்னு பார்க்கறீயா? நான் சொல்லும் போது எனக்கு மாப்பிள்ளை பார்த்தா போதும்! இப்போ வேற எதாவது உருப்படியா வேலை இருந்தா போய் பாரு போ!”

அன்புவின் கோபமான குரலை கேட்டு குழம்பி, எதற்காக திருமணம் வேண்டாம் என்று கூறுகிறாள், என வினவினார் ராகவன். “அப்படி கேளுங்க அங்கிள். அவளுக்கு அந்த ஜீவாவை பிடிக்கலனா கூட பரவாயில்ல. பட், பிடிச்சிருக்கு! ஆனா, கல்யாணம் பண்ணிக்க மாட்டாளாம்!”

“வினோத், கொஞ்ச நேரம் சும்மா இருப்பா… நான் கேக்கறேன்.” லட்சுமியின் குரலை கேட்டு வினோத் அமைதியானான், என்றால் அன்பு விளக்கம் கூற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாள்.

ஒரு பெருமூச்சுடன் லட்சுமியை நோக்கி தன் மனதிலிருப்பதை கூறினாள். “ஆன்டி.. கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. நான் ஆசிரமத்துல இருக்கும் போது எனக்கு யமுனாம்மா தான் பேங்க் லோன் வாங்க ஹெல்ப் பண்ணாங்க. அப்படி தான் பி.எஸ்.சி. படிச்சேன்.

அப்புறம் ஸ்கோலர்ஷிப் கிடைச்சுது… சோ, அதே காலேஜ்ல எம்.எஸ்.சி. படிக்க முடிச்சுது. இவன் தான் லோன்னுக்கு இன்டரெஸ்ட் பே பண்ணான். அத முடிக்க கூட இல்ல, உடனே ரொம்ப கம்பெல் பண்ணி பி.எட். படிக்க வெச்சான்…”

“இப்போ இதெல்லாம் ஆன்டி கேட்டாங்களா? எதுக்கு இதெல்லாம் சொல்ற?” வினோத் எரிச்சலாகவும் அவனை கையமர்த்திவிட்டு மீண்டும் தொடர்ந்தாள் அன்பு. “இப்போ கூட இவனை விட்டா எல்லாத்தையும் கட்டிடுவான். ஆனா, எனக்கு நான் லோன் பே பண்ணனும்னு தோனுது… அதுக்கப்புறம் தான் இந்த கல்யாணம் எல்லாம். அதனால தான் வேண்டாம்னு சொல்றேன்.”

அவளின் பக்கம் இருக்கும் நியாயத்தையும் புரிந்துக் கொண்டார்கள் ராகவனும் லட்சுமியும். “உன்னோட ஃபீளிங்க்ஸ் புரியுதுமா. வர மாப்பிள்ளையே எல்லாத்தையும் பார்த்துப்பானா அப்போ உனக்கு ஓகே வா? நீ பண்ண வேண்டியத அவன் பண்ண போறான்.. அவ்வளவு தான??”

லட்சுமி சொன்னதை கேட்டதும் ஜீவா மனக்கண்ணில் தோன்றினான்! ஆனால் சிரித்தபடியே, “ஆன்டி அப்படி யார் இருக்கா இப்போ?” என கேலியாக கேட்டாள்.

“என்னோட பையன் இருக்கான்மா… ஹே ஜீவா போதும்டா வா!” ராகவனின் குரலை கேட்டு மரத்தின் மறைவிலிருந்து வெளி வந்தவனை பார்த்து அன்பரசி திகைத்து நின்றாள் என்றால், வினோத்தோ ஒரு விசிலுடன் ஜீவாவை போய் கட்டிக் கொண்டான்.

இருவரும் அன்பரசி, ராகவன் தம்பதியர் அமர்ந்திருந்த இடத்திற்க்கு நெருங்க, ஜீவாவின் முகத்தை தவிர வேறு எதையும் அன்பரசியால் பார்க்க முடியவில்லை. அவனையே கண்ணேடுக்காமல் அவள் பார்த்த கணத்தில் தான், அவனை காணாமல் எவ்வளவு தவித்திருக்கிறோம் என உணர்ந்தாள்.

ஆனால், ஜீவாவோ ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை… “என்னமா வினோத் நான் சொன்ன மாதிரியே இருக்கானா?” வினோத்தின் தோளில் கையை போட்டு ஜீவா கேட்க, அன்புவின் வயிற்றேரிச்சல் புகை அனைவரையும் அடைந்தது.

“ஜீ எனக்கு இப்போ ஏதோ பி.பி.க்யூ. அடுப்பு எரியுர ஸ்மெல் வருது… உனக்கு வருதா?”

“எனக்கு ஒண்ணும் வரலியே!” ஜீவா அப்போதும் அன்புவின் பக்கம் திரும்பவில்லை. அழுகை கண்ணாமூச்சி ஆட மேலும் பொறுக்க முடியாமல், அன்பு திரும்பி நடக்க எத்தனித்த வேளை அவளின் கைகளை பற்றினார் லட்சுமி.

இதில் “ஒண்ணுமே சொல்லாம போறீயேமா?” என கேள்வி வேறு. ஜீவாவையே பஸ்பம் ஆக்குவது போல பார்த்து, “என்னை எதுக்குமா கேக்கறீங்க? வந்ததுலந்து ஒரு வார்த்த கூட பேசாம இருக்காருல.... இவர கேளுங்க முதல்ல! பிடிச்சிருக்கானு?!” என்று கடிந்த பற்களுக்கு இடையே வார்த்தைகளை துப்பினாள்.

அப்போது தான் அவளின் புறம் திரும்பினான் ஜீவா. “ஹே புரிஞ்சு தான் பேசறீயா? பிடிக்காம தான் அப்பா அம்மாவ கூட்டிட்டு வந்துருக்கேனா?” இதை கேட்டும் நூறு மீட்டருக்கு முகத்தை அவள் தூக்கி வைக்க, வினோத்திற்கே சிலிர்த்தேழுந்தது!

“விடு ஜீ… இதேல்லாம் ஔவையார் மாதிரி ஆனாலும் கூட இந்த மாதிரி லூசா தான் திரியும்! நீ வேற நல்லலலல பொண்ணா பாரு.... இவளாம் சரிப்பட்டு வர மாட்டா!”

வினோத் கூறியதை கேட்டு கோபம் கிடுகிடுவென ஏற, அது எந்த நிமிடத்தில் அழுகையாக மாறியது என அன்பரசியே அறியாள். கண்களை அவள் துடைக்கவும், ஜீவாவுக்கும் அவன் பெற்றோருக்கும் ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. புரிந்த பொழுது, சமாதானம் வில்லம்பாக பாய்ந்து வந்தது.

“ஹே சும்மா உன்னை கலாய்க்க தான்டா இப்படி பண்ணேன்! சாரி சாரி இனிமே இப்படி பண்ண மாட்டேன்! அழறத நிறுத்துமா…”

“அவன் சும்மா உன்கிட்ட விளையாடுனாமா… அப்போ தான நீ பேசுவ அவன்கிட்ட?! சரி விடு நான் வேணும்னா வினோத்த ரெண்டு போடறேன்…” ஜீவா மற்றும் ராகவன் கூறியதை கேட்டு, அமைதியாக இருந்தாள் அன்பரசி… ஒரு நொடி! ஒரே நொடி தான்! அடுத்து அவள் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை கேட்டு வின்னில் பறக்க ஆரம்பித்தான் ஜீவா.

“என்னை கல்யாணம் பண்ணிக்கறீங்களா?” குழந்தைத்தனமான முகத்துடன் அவள் வினவ, அதை கேட்டு ஜீவா ‘எஸ்! எஸ்!’ என குதுக்க ஆரம்பிக்க, வினோத்தால் பேசுவது அன்பரசி தானா என நம்ப முடியாமல் போயிற்று. “அடிப்பாவி! நீ தானா இப்படி பச்சை புள்ளை லுக்கோட கேக்கறது? அப்பா அம்மாவோட வந்தவுடனே அப்படியே கவுந்துட்டியே! தெரிஞ்சுயிருந்தா முதல்லையே இத பண்ணிருப்போம்… என்னடா??”

ஏன்னென்று அறியாமல், ஜீவாவின் மனதில் இவ்வாக்கியங்கள் அழுத்தமாக பதிந்து போயின. ராகவனும் லட்சுமியும் அவர்களை ஆசிர்வதித்து தங்கள் வாழ்த்துக்களை சொல்ல, அப்போது பிடித்த கையை போகும் வரையிலும் விடவில்லை, ஜீவா.

அந்த வாரமே சவீதா சிஸ்டரிடம் கலந்தாலோசித்து ஒரு மாதம் கழித்து இருக்கிற ஒரு நல்ல முகூர்த்த தேதியை முடிவேடுத்தனர். அதற்கே ஜீவா, “வாட்… ஒரு மாசம் கழிச்சா? இதெல்லாம் ரொம்ப ஓவர்மா!” என பொங்க, அன்பரசி தான் அவனின் கைகளை தட்டிக் கொடுத்து தேற்றினாள்.

அந்த ஒரு மாத காலமும் தினமும் ஒரு மணி நேரமாவது இருவரும் ஒன்றாக செலவழித்தனர். வினோத்தையும் ஜீவா கூப்பிட அவனோ, “நான் வந்தன்னா நான் கவுன்டர் அடிக்கறதுக்கும், லவ்ஸ் முறைக்கிறதுக்கும், நீ சிரிக்கறதுக்குமே நேரம் பத்தாதுடா! சோ, நீங்க போங்க!” என்றான் நக்கலாக.

அப்படி அவர்கள் தனியே பேசும் நேரத்தில் பாதி பொழுது ‘ராணி, ராணிமா’ என்பதிலேயே கழிந்தது. முதன் முதலில் ஆனந்த அதிர்ச்சியுடன், எதற்காக அப்படி அழைக்கிறான் என கேட்டதிற்கு அழகாக விளக்கமளித்தான் ஜீவா.

“எல்லாரும் உன்னை அன்பு, லவ்ஸ் இப்படி தான் கூப்பிடறாங்க… அதனால, அன்பை ஓரம் கட்டிட்டு பின்னாடி இருக்குற ‘அரசி’யை தூக்கிட்டேன். அரசினா ராணி தான? என்னோட மனசுல எப்போவும் இருக்குற ராணி! என்னோட ராணிமா நீ தான்டி” கூறிவிட்டு அவன் அன்போடு அணைத்துக் கொள்ளவும் அனல் அடித்த பீச் மணலும், பிருந்தாவனமாகியது அன்புக்கு!

அப்படி பேசும் போது தான் ஒரு நாள் எதர்ச்சையாக சொல்லவது போல், அவளின் லோனை தான் அடுத்த நாள் வட்டியுடன் கட்ட போவதாக கூறினான், ஜீவா. கேட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல், அமைதியாக அவள் இருக்கவும் ஜீவா அடுத்து ஒரு அழுத்தமான குரலில் அவளை ஆழம் கண்டான்.

“நீயும் நானும் வேற வேறயா ராணி? எதுக்கு இவ்வளோ யோசிக்கற? ஹ்ம்ம்??” கேள்விக்கு பதிலாய் எதிர்கேள்வியை முன் வைத்தாள் அவனின் இதயராணி.

“நீங்க சொல்றதுக்கு ஓகே சொல்லனும்னா நான் சொல்லப் போறதுக்கும் நீங்க ஓகே சொல்லனும்! சரியா?”

“என்ன விஷயம் சொல்லு..”

“நான் கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போகல…” கேட்ட ஜீவாவுக்கு இது புது நீயூஸ்! எதற்காக அவளுக்கு பிடித்த வேலையை விடப் போகிறாள்? பதிலும் அவளே அளித்தாள்.

“உங்களோட வீட்டுல எல்லாம் இந்த மாதிரி சின்ன வேலைக்கு எல்லாம் போக மாட்டாங்கனு எனக்கு தெரியும். அதனால தான் வேண்டாம்னு சொல்றேன். ப்ளீஸ், இதுல என்னை கம்பெல் பண்ணாதீங்க!”

“இல்லடா, அதுக்காக உனக்கு பிடிச்ச வேலையை விடப் போறீயா? வேண்டாமே…”

“பிடிச்ச வேலை தான். இல்லைனு சொல்லல.. ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம், உங்கள அப்பாவ அம்மாவ, எல்லாரையும் கவனிச்சக்கனும்! ஆசிரமம் வேலை போதாதுனு, நிறைய வேலை இருக்கும் வீட்டுலயும்… அதனால, எனக்கு பெருசா மிஸ்ஸிங்கா இருக்காது!”

இந்த பதிலை கேட்டு குறும்பு கொப்பளிக்கும் பார்வையுடன் ஆமோதிப்பாக தலையசைத்தான் ஜீவா. “ஆமா ஆமா… கல்யாணம் ஆன கையோட குழந்தைங்க வேற வந்துருவாங்க… நாம என்ன ஒண்ணா பெத்துக்க போறோம்? எனக்கும் சரி, உனக்கும் சரி குழந்தைகங்கனா ரொம்ப பிடிக்கும்…

சோ மினிமம் நாலாவது பெத்துக்கனும்! என்ன ஓகே தான??” கண்ணடித்து அவன் முடிக்கையில், சரமாரியாக அவனை மொத்த ஆரம்பித்திருந்தாள் அன்பு. “நாலு கேக்குதா உங்களுக்கு??”

கூறியபடியே அவன் காதை நறுக்கிய வேளையில், அவள் மனதில் எப்போதும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு மட்டுமே உதித்தது. ஆனால், திருமணம் ஆனவுடன் இந்த புரிதலும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் காற்றோடு காற்றாக பறந்து போகும் என அன்பரசி அறியவில்லை!
 
Top