Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 6

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 6

மீராவுடன் வெளியே வந்த விமலா, “சமீரா, இன்னிக்கு உங்களுக்கு என்ன ஆச்சு? பெர்சனலா கேள்வி கேட்க உங்களுக்கு வேற கேள்வியே கிடைக்கலையா? ஆர் யூ ஆல்ரைட்?” என்று கேட்ட விமலாவிடம் ஒரு வெற்றுப் பார்வையை வெளியிட்டவாறே தன்னுடைய வண்டி நிறுத்தியிருக்கும் இடத்திற்கு சென்றாள்.
“மாம், உன் மருமான் பதவியெல்லாம் ஏத்துண்டாச்சு.. பிரஸ் மீட்டிங்ல..” என்று ஆரம்பித்த கோவிந்த் அங்கே வண்டியை எடுக்க வந்த சமீராவைப் பார்த்தான். அவள் முகத்தில் நீண்ட நாள் பழகினதைப் போன்ற தோற்றத்தைக் கண்டவுடன், “மாம், சித்த நாழி கழிச்சு உன்னை கூப்பிடறேன்.” என்று காலை கட் செய்து விட்டு, “எக்ஸ்க்யூஸ் மீ” என்று அவளை அழைத்தான். அவனை திரும்பிப் பார்த்த சமீரா, “எஸ்.” என்றாள்.
“நீங்..க” என்று இழுத்த கோவிந்தைப் பார்த்த விமலா “இவங்க ச..மீ..” என்ற விமலாவை அவளின் கையைப் பிடித்து நிறுத்தி, “அயம் ரிப்போட்டர் ப்ரம் டெய்லி நியூஸ்.”அந்தப் பத்திரிக்கையின் பெயரை கேட்டதுமே, “ ம்..ம் சூப்பர், மே ஐ நோ யுவர் நேம்?” என்ற கோவிந்திடம் வழிந்தபடியே, “இவங்க..” என்று ஆரம்பித்து ஜொள்ள வந்த விமலாவை நிறுத்திய சமீரா, “வெல் சார், நீங்க யார்ன்னு தெரிஞ்சுக்கலாமா?”
“ஷ்யூர்.. நான் கோவிந்த் ப்ரம் சென்னை.. சமர்த் கூட இங்க வந்தேன் அவன் என்னோட ரிலேடிவ்.” என்றவன் நாக்கை கடித்து “சாரி அவர்” என்று திருத்தி கொண்டான்.
சமர்த்தை உறவுக்காரன் என்றதும் சமீரா அவனை நன்றாகப் பார்த்தாள். அவனை எங்கேயும் பார்த்ததாக தெரியவில்லை. ஆனாலும் அவனை தெரிந்ததை போலவே இருந்தது. ஒன்றும் புரியாத குழப்பத்துடன் அவனிடம் தலை அசைத்து விடை பெற முயன்றாள்.
“இன்னும் நீங்க உங்களைப் பத்தி சொல்லவேயில்லை.”
“என்னைப் பற்றி சொல்ல பெரிசா எதுவும் இல்லை.. வில் மீட் யூ சூன் மிஸ்டர். கோவிந்த்.” என்றபடியே தன் வண்டியை நோக்கி நகர்ந்தாள். விமலாவும் அவனிடம் இன்னும் ஜொள்ள முடியாமல் பல்லைக் கடித்தப் படியே சமீராவுடன் கிளம்பினாள்.
வண்டியில் ஏறி அமர்ந்ததுமே, “சமீரா இவரை நீங்க மீட் செய்யும் போது நானும் வரேன்.” என்ற விமலாவிடம் சரி என்பதைப்போல தலையை ஆட்டி விட்டு மனதினுள், ‘இவளோட மறுபடியும் சென்று, என் மானத்தை நானே வாங்கிக்ககூடாது.’ என்று சொல்லிக்கொண்டாள்.
எப்போது விமலாவை இறக்கிவிட்டு தன்னுடைய அறைக்கு செல்வோம் என்றிருந்தது சமீராவுக்கு. அவளுக்கு முதன் முதலில், ‘சமர்த்’, சமீர் ஆக அறிமுகமான நாளையும், அதற்குப் பிறகு அவள் வாழ்க்கையில் நடந்ததையும் எண்ணிப்பார்க்க வேண்டியிருந்தது. அது அவள் வண்டியை உதைத்து கிளப்பிய வேகத்துலேயே தெரிந்தது.
வேகத்துடன் கிளம்பிய சமீராவைப் பார்த்த கோவிந்த், “இப்போ எப்படி இவளைப் பற்றி தெரிஞ்சுக்கிறது..?, சீக்கிரமே பார்க்கலாம்னு அவளே சொல்லியிருக்காதான், ஆனா நேக்கு அதுவரைக்கும் பொறுமை இல்லையே, என்ன பண்றது?” என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டான்.
அவ்வழியாக சென்ற யாரோ ஒருவர், தனியா புலம்பிக்கொண்டிருக்கும் கோவிந்தைப் பார்த்து பயந்து தள்ளி சென்றதைப் பார்த்தும் தனக்கு தானே பேசிக்கொள்வதை நிறுத்தவில்லை.
தனக்கு தானே பேசியபடியே திரும்பி பார்த்த கோவிந்திற்கு, விமலா ஒரு வேக பெருமூச்சுடன் அவனைப் பார்ப்பது தெரிந்தது. உடனே முடிவெடுத்து, தன் கையை தூக்கி டாட்டா காண்பித்து கூடவே ஒரு பறக்கும் முத்தத்தையும் பறக்கவிட்டான். அதைப் பார்த்த விமலா மிகுந்த குஷியாகி ‘நாளை இங்கே நான் வரேன்.. 4 மணி.’ என்று கையாலும், வாயாலும் ஜாடை செய்தாள். இவனும் பதிலுக்கு கட்டை விரலை தூக்கி ‘சூயூர்’ என்றான் அவளைப் போலவே.
இதையெல்லாம் ரியர்வியு கண்ணாடி மூலமாகப் பார்த்த சமீரா மனதுக்குள், ‘நோ மிஸ்டர் நாளைக்கு இந்த விமலா உங்களைப் பார்க்க வரமாட்டா, நான் வரவிடவும் மாட்டேன்.’ என்று சொல்லிக்கொண்டாள்.
விமலாவை இறக்கிவிட்டு தன்னறைக்கு வந்த சமீராவிற்கு எதையும் நினைத்துப் பார்க்க விடாமல் அவளுடைய அலைபேசி அழைத்தது. அது அவளுடைய தனிப்பட்ட எண்ணின் அழைப்பு. அந்த எண் அவளுடைய பத்திரிக்கையின் ஆசிரியர் விஸ்வநாதனுக்கு மட்டுமே தெரியும் என்பதால், தன்னுடைய எண்ணங்களை தவிர்த்து உடனடியாக அதை உயிர்ப்பித்தாள்.
“சொல்லுங்க சார்.”
“இன்னிக்கு ரெடியா இரு சமீரா, நாம காத்துக்கிட்டு இருந்த நாள் வந்துவிட்டது..”
“எத்தனை மணிக்கு சார், எங்க வரணும்..?”
“இத்தனை நாள் உன்னை லோக்கல் நியூஸ் மட்டுமே கவர் பண்ண வச்சிட்டேன்னு எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருந்தது.. ஆனா அப்படி பண்ணலைன்னா உன் உயிருக்கு ஆபத்துன்னு தான் நான் அப்படி செஞ்சேன்னு உனக்கே தெரியும்.. “
“அதெல்லாம் விடுங்க சார்.. எப்போ எங்க வரணும்? அதை மட்டும் சொல்லுங்க.”
“ஹா..ஹா.. என்கிட்டேயே உன்னோட நிருபர் புத்தியை காண்பிக்க ஆரம்பிச்சுட்ட.. பரவாயில்லை குருவையே மிஞ்சிய சிஷ்யனாகிட்ட.”
“இதெல்லாம் நீங்க கத்துகொடுத்தது தான்.. நீங்க மட்டும் இல்லன்னா நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல.. நன்றின்னு சொல்லி உங்களை தள்ளி வைக்க மாட்டேன்.. என் அப்பா போல நீங்க.. என்னோட வாப்பா போனதுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே நீங்க தான் சார்..”
“இன்னும் அப்பா போல தான் சொல்லிட்டு இருக்க, அப்பான்னு சொல்ல மாட்டேங்கற.., சரி விடு இப்போ நாம நம் விஷயத்திற்கு வருவோம்.”
“சொல்லுங்க.”
“இன்னிக்கு நைட் 12 மணிக்கு மேல வால்பாறைல கடைசி ஹேர்பின் பென்ட் தாண்டியதும் ஒரு பாழடைஞ்ச வீட்டுல அந்த மினிஸ்டர் மீட்டிங் வச்சிருக்கான்னு தகவல் வந்து இருக்கு.. அதை மட்டும் போடோஸ் எடுத்துட்டோம்ன்னா, அவனை ஒரேடியா ஒழிச்சுக் கட்டிடலாம்.. நான் ரொம்ப நல்லவன்..வல்லவன் ன்னு சொல்லிக்கிட்டு நாட்டுல இருக்கிற எல்லா குற்றங்களை செஞ்சுட்டு இருக்கான்.. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவன மட்டும் ஒண்ணுமே செய்யறதில்லை. யாராலேயும் எதுவும் செய்ய முடியறதில்லை. இவனையெல்லாம்---” என்று பல்லைக் கடித்தார்.
“இன்னிக்கு எதுக்கு அங்க மீட்டிங்..?”
“அது கோவை குண்டு வெடிப்பு வழக்குல கைதாகி, வெளிய வந்த குற்றவாளி கூட மீட்டிங்.. அவனோட சேர்ந்து நாட்ட காப்பத்தவா போறான்..?, எங்க அடுத்த குண்டு வைக்கலாம்னு தானே இருக்கும்..”
கோவை குண்டுவெடிப்பு என்று ஆசிரியர் பேச ஆரம்பித்த உடனேயே அவள் கண்களில் கண்ணீர் வழிய தொடங்கியது.
அந்தப்பக்கத்திலிருந்து சத்தம் எதுவும் வரவில்லை என்றதும், “சமீரா இருக்கியா?” என்றவரிடம் “ம்ம் சொல்லுங்க” என்றாள் சமீரா.
“இங்க பாரும்மா உன்னோட வருத்தம் சோகம் எல்லாம் எனக்கு புரியுது, இதிலேர்ந்து உன்னை மீட்டு கொண்டுவரதுக்கு நாம பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல.. அதெல்லாம் இப்போ பேசறதுக்கு நேரம் குறைச்சலா தான் இருக்கு நமக்கு.”
“புரியுது சார். சாரி.”
“விடும்மா, இங்க பாரு நீ பாட்டுக்கு உன்னோட வண்டில கிளம்பிடாத.. ரெடியா இரு நானே வந்து கூட்டிக்கிட்டு போறேன்.. அது தான் உனக்கு பாதுகாப்பு.”
“சரி சார்.”
“நைட் ஒரு எட்டு மணிக்கு வந்துடறேன்.”
“சார் லோகுண்ணா தானே கார் ஓட்டிட்டு வருவாங்க.”
“ஆமாம்மா, ரெடியா இரு வச்சிடறேன்.” என்று துண்டித்தார்.
சமீரா திரும்பி மணியைப் பார்த்தாள். அது ஆறை காட்டியது. மனதிற்குள் எதையெதையோ எண்ணியபடியே கிளம்ப ஆயத்தமானள்.
இப்பொழுது அவள் மனதில் எந்தவித சலனமும் எழவில்லை.. மீண்டும் தன் மனதை ஒருநிலைப் படுத்தியிருந்தாள். இது போல் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர அவள் கற்றிருந்த யோகா அவளுக்கு உதவியது.
மணி ஏழரையை நெருங்கும் போது அவள் ஒரு காரியம் செய்தாள். ஏன் செய்தாள், எதற்கு செய்தாள் என்று கேட்டால் நிச்சயமாக அவளிடம் காரணம் இருக்காது. மனதிற்குள் ஏதோ உந்த அவள் அந்த காரியத்தை செய்திருந்தாள்.
ஆம்! அவள் அம்மாவட்ட ஆட்சியரை அழைத்திருந்தாள். அதுவும் அவளுடைய பிரத்யேக எண்ணிலிருந்து.
அந்தப் பக்கம் “ஹலோ” என்றவுடன் தான் அவளுக்கு தான் செய்த காரியம் புரிந்தது. எந்த செயலிலிருந்தும் பின்வாங்கி பழக்கமில்லாததால் ஒரு நிமிர்வுடன் பேச ஆரம்பித்தாள்.
“கலக்டர் சார்.. உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல தான் உங்களை அழைத்தேன்.. இன்று” என்று ஆரம்பித்து சுருக்கமாக அந்த மந்திரியைப் பற்றியும் குண்டு வழக்கில் கைதான குற்றவாளியைப் பற்றியும் கூறியவள், பின் நடக்கவிருந்த சந்திப்பையும் கூறினாள்.
“இனிமே யார் பேசறாங்கன்னு கேட்டுகிட்டு விஷயத்தை சொல்லுங்க..” என்ற குட்டுடன் ஆரம்பித்தான் சமர்த். (நமக்கு இனிமே சமர்த் மற்றும் கலக்டர் தான். வரதராஜன் அவனுடைய அபிசியல் நேம் அதை நாம் உபயோகிக்க வேண்டாம்)
அவளுடைய தவறு புரிந்தாலும், “இனிமே அப்படியே செய்கிறேன் சார்.. இப்போ நமக்கு டைம் இல்லை.. நீங்க என்ன செய்ய போறீங்க? பிறகு..” என்று பேசிக்கொண்டே போனவளை இடையில் நிறுத்தினான் சமர்த்.
“வெயிட்.. அதைப் பத்தியெல்லாம் உங்களிடம் என்னால் சொல்ல முடியாது.. இந்த நாட்டின் மேல் அக்கறை வைத்து சொன்னதுக்கு நன்றி.. மேலும் இதெல்லாம் உண்மையா, பொய்யான்னும் எனக்கு தெரிஞ்சிக்கணும்.. நீங்க யாருன்னும் எனக்கு தெரியாது.. அதெல்லாம் உறுதி செய்தப் பிறகு தான் நான் நடவடிக்.. ” என்று சொல்லிக்கொண்டு போனவனை சமீரா இடை மறித்தாள்.
“அய்யா உண்மை விளம்பி அவர்களே, நீங்க மெதுவா அடுத்த எடத்துல குண்டு வெடிச்சதுக்கு பிறகே நடவடிக்கை எடுங்க.. இல்லை எடுக்காம என்னமோ பண்ணுங்க.. மக்களுக்காக எதையும் செய்வேன்னு காலைலே அந்த கூவு கூவிட்டு இப்போ இப்படி பேசறத பாரு.. என்னைப் பத்தி ஆராயறத விட்டுட்டு உருப்படியா ஏதாச்சும் செய்ங்க.. நான் ஏன் உங்க கிட்ட சொன்னேன்னு இருக்கு..” என்று கண்டபடி பேசிட்டு அழைப்பை துண்டித்தாள்.
அந்தப்பக்கம் இந்தப் பேச்சைக் கேட்டு ஒரு நொடி திகைத்து விட்டு, பின் கோபமாக அவனும் தன்னுடைய அலைபேசியை தூக்கி எறிந்தான். அது சுவற்றின் மேல் பட்டு உடைந்தது. அங்கிருந்தவர்கள் அவனை ஒரு மாதிரிப் பார்த்தார்கள்.
ஒரு உயர் பதவியில் இருந்துக்கொண்டு தான் கோபப்பட்டு நடந்துக் கொண்டது குறித்து அவமானமாக உணர்ந்தான். அவனுடைய மனது, ‘பொது இடத்தில் எந்தவித உணர்சிகளுக்கும் இடம் அளிக்காதே!’ என்று எச்சரிச்சது.
அவனுக்கு இப்போ என்ன செய்வது என்றே தெரியவில்லை.. இன்று தான் பதவியேற்றிருந்தான்.. இந்த விஷயத்தில் யாரை நம்பி சொல்லி, எந்த விதமான நடவடிக்கை எடுப்பதென்று சுத்தமாக புரியவில்லை..
அதுமட்டுமில்லாமல் இந்த விஷயம் உண்மையா, பொய்யா? என்று தெரியாமல் எவரிடமும் சொல்வது தவறென்று தோன்றியது. இதையெல்லாம் யோசிக்க யோசிக்க அங்கே சென்றுப் பார்க்கவும் ஏதோ ஒன்று அவனை தூண்டியது.
கையை திருப்பி மணியைப் பார்த்தான். அது ஏழே முக்காலை காட்டியது. உடனே கிளம்ப யத்தனித்தான். அங்கிருந்தவர்களுள் ஒருவர், “சார், ஏதாவது பிரச்சினையா? ரொம்ப கோபமா பேசினீங்க?”
தான் செய்த தவறை மீண்டும் நொந்துக்கொண்டு, “ஒண்ணுமில்ல, நான் பார்த்துக்கறேன்.. நாளைக்கு மீட்டிங்க்கு வேண்டியதை சீக்கிரம் ரெடி பண்ணுங்க..” என்றவாறே அவன் அவ்விடத்தை விட்டு கிளம்பினான்.
போனை வைத்த சமீராவை வேறேதும் நினைக்கவிடாமல் மறுபடியும் அழைப்பு வந்தது. ஒரு நொடி அவன் தான் திரும்பவும் அழைக்கிறானோ என்று நினைத்து பயந்தாள். அதிலிருந்த எண்ணைப் பார்த்ததும் தான் அவளுக்கு மூச்சே வந்தது.
“சொல்லுங்க சார்.”
“என்னமா, ரெடியா? கீழ வா.”
“ஓகே சார், சாப்பிட்டீங்களா?”
“இன்னும் இல்லை மா, வா போகும்போது அதைப் பார்த்துக்கலாம்.”
இவரிடம் சமர்த்திற்கு கால் செய்ததை சொல்வோமா என்று யோசித்தவள், பின் வேண்டாம் என்று அதை ஒதுக்கினாள்.
அவள் கீழே இறங்கி ஜீப்பில் ஏறி அமர்ந்ததும் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த லோகு அவளுக்கு கையை தூக்கி வணக்கம் வைத்தான். அவனால் ஜாடையில் மட்டுமே சொல்ல முடியும். வாய் பேச முடியாதவன்.
அவனது ஒரே சொந்தமான மனைவியை குண்டுவெடிப்பில் பலிக்கொடுத்தவன். அதன் பிறகு தான் இவர்களுடன் இணைந்தவன். பத்திரிகை துறையில் இல்லாவிட்டாலும், இவர்களின் கூடவே இருப்பவன். இவர்களுக்கு ஒரு அடியாள் போல.
“எப்படி இருக்கீங்க லோகுண்ணா?”
தான் நலமாக இருப்பதைப்போல காண்பித்து விட்டு வண்டியை இயக்கினான். மூவரும் ஊரை விட்டு சற்று தள்ளியிருந்த உணவகத்தில் உண்டப் பின் வேறெங்கும் நிறுத்தாமல் சென்றதால் மூன்றே மணி நேரத்தில் அங்கு போய் சேர்ந்திருந்தனர்.
“லோகு காரை மறைவா நிறுத்திக்க.. சமீரா இந்தா இதெல்லாம் பிடி.. லோகு இதை நீ வச்சிக்க.” என்று சிறிய பையை இருவரிடமும் நீட்டினார். அவரும் அதேப்போன்றிருந்த மற்றொரு பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்.
“சமீரா அதோ அந்த வீட்டுல தான் நடக்க போகுது.. லோகு முதல்ல அங்க போகட்டும். நான் வீட்டுக்கும் உனக்கும் நடுவுல ஏதாவது ஒரு இடத்துல நிக்கறேன். நீ இதோ முன்னாடியே இருக்கிற மரங்கள் கிட்ட ஒளிஞ்சுக்கிட்டு முதல்ல இருந்தே ரெகார்ட் பண்ண ஆரம்பிச்சிரு. சரியாம்மா.”
மூவரும் அவரவர் இடங்களில் ஒளிந்துக் கொள்ளவும்.., ஒரு கார் அங்கு வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அதிலிருந்து இறங்கிய சமர்த்தைப் பார்த்ததும் உள்ளே நன்றாக சென்று மறைந்து நின்றுக்கொண்டனர்.
இறங்கிய சமர்த், டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து காரை திருப்பி அனுப்பினான்.
“இவங்களை யாரு தனியா வர சொன்னாங்க.. பெரிய மாவீரனாட்டம் தனியா வந்து நிக்கிறாங்களே! தயிர்சாதம்..தயிர்சாதம்.. சரியான தயிர்சாதம்..| இவங்கெல்லாம் எப்படி படிச்சு கலெக்டர் ஆனாங்களோ.. ஐயோ! போய் ஒளிஞ்சு நிக்காம இங்கே நிக்கறாங்களே.|” என்று எண்ணிக்கொண்டாள் சமீரா.
சிறிது நேரத்துலேயே சற்று தொலைவில் கார் வரும் ஓசையும், வெளிச்சமும் வர அப்பொழுதும் ஒளிந்துக்கொள்ளாமல் இருக்கும் அவனைப் பார்த்து கோபப்பட்ட சமீரா நொடியும் தாமதிக்காமல் அவனின் கையைப் பிடித்திழுத்தாள்.
“ஹே! யாரு?” என்று பேச ஆரம்பித்தவனின் வாயில் தன் ஒரு கையை வைத்து மூடி, மற்றொரு கையால் “ஷ்..ஷ்” என்று ஜாடை செய்தவாறே அவள் மறைந்திருந்த இடத்திற்கு அவனையும் கூட்டி சென்றாள்.
”ஹே! யூ.. நீ..” என்று பேச ஆரம்பித்தவனை மறுபடியும் வாயில் கைவைக்க போனவளின் கையைப் பிடித்து தடுத்து அவனே தன் வாயில் கையை வைத்துக்கொண்டான்.
லோகு சற்று உள்ளே தள்ளியிருந்ததால் இதையெல்லாம் பார்க்கவில்லை. ஆனால் ஆசிரியருக்கு எல்லாமே தெரிந்தது. சமீரா சென்று உதவியதிலிருந்தே அவள் தான் அவனை வர வைத்திருக்கவேண்டும் என்றும் யூகித்துக்கொண்டார்.
சிறிது நேரத்திற்கெல்லாம் இன்னோவா வந்து நிற்க அதிலிருந்து இறங்கியது அந்த மந்திரி தான். இதைப்பார்த்த சமீரா மிக மெதுவான குரலில், “அய்யா, உண்மைவிளம்பி அவர்களே! இப்போவாவது இது உண்மைன்னு தெரிஞ்சுதுங்களா?” என்றாள்.
“அப்போ நீ தான் கால் செய்திருந்த.. ம்ம் என்ன கரெக்டா?” என்றான் அவனும் மிக மெதுவாக.
போனில் பேசியதைப் போன்றே பேசியது புரிந்தவுடன் தன் நுனி நாக்கை கடித்துக்கொன்டாலும், “அப்போ உங்களுக்கே புரிஞ்சிடிச்சிங்களா, நான் எதையும் விளக்க தேவையில்லை..” என்றாள் நிமிர்வுடன்.
“ஏய் உன்னை!” என்ற சமர்த்தைப் பார்த்து, “நம்ம பஞ்சாயத்தை பிறகு வைத்துக்கொள்ளலாம்.. இப்போ வந்த விஷயத்தை கவனிங்க.. நான் எங்கேயும் ஓடிட மாட்டேன்.” என்றாள் சமீரா.
இருவரும் அதை கவனிக்க தொடங்கினார்கள்.
வண்டியை விட்டு இறங்கிய மந்திரியின் பெயர் சகாயம், “டேய் அங்க போய் பார்த்துட்டு வாங்கடா, பகல்ல பக்கம் பார்த்து பேசு இரவுல அதுவும் வேண்டாம்ன்னு பழமொழியே இருக்கு. ஆனாலும் என்ன செய்ய நம்ம பொழப்பு இப்படி அர்த்த ராத்திரில தான் ஒடனும்ன்னு இருக்கு.. அதையாவது பார்த்து சூதனமா செய்யலாம்.. போங்கடா போய் பாருங்க.” என்று தன் ஆட்களை அனுப்பினான்.
அவர்கள் சென்று பார்த்துவிட்டு யாரும் இல்லையென்றதும் உடனே போனை கையில் எடுத்து, “விக்கி உடனே கிளம்பி வா, யாருமில்லை.” என்றான் சகாயம்.
விக்கி அவனின் முழுப் பெயரே அதுதான்.. யார் வைத்தார்கள் என்று அவனுக்கு தெரியாது.. அவனொரு அனாதை.. சிறு வயதில் வயிற்றுப் பிழைப்புக்காக செய்த திருட்டு இப்பொழுது தீவிரவாதம் வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது.
பணத்திற்காக எதையும் செய்வான். இந்த மந்திரியுடன் இணைந்ததால், அவனுடைய பணப்புழக்கமெல்லாம் கோடிகளில் மட்டுமே என்றானது. கூடவே அவனுக்காக உயிரையே கொடுக்கும் அடியாட்களையும் பெருக்கிக்கொண்டான்.
அதில் இருப்பவர்கள் பெரும்பாலும் இவனைப் போலவே யாருமற்ற அனாதைகள் தான். அவன் ஆட்களை சேர்ப்பதே பின்னணி ஏதுமில்லாமல் இருப்பவர்களை மட்டும் தான்.
இப்பொழுது இந்தக்கூட்டத்தில் இருக்கும் ஒருவன் பத்திரிகை ஆசிரியர் விஸ்வநாதனால் அனுப்பப்பட்டவன். அவனுக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லையென்றாலும் விஸ்வநாதனை தந்தையாகவே நினைத்துக்கொண்டிருப்பவன். அவர் தான் அவனை நன்கு படிக்க வைத்தவர். விஸ்வநாதன் கேட்டு கொண்டதால் மட்டுமே இந்த கூட்டிற்கு வந்தவன்.
மிகவும் குறுகிய காலத்திலேயே விக்கியின் நற்பெயரைப்(?) சம்பாதித்துக்கொண்டதால் விக்கியின் நெருங்கிய வட்டத்தில் இருந்தான். அவன் மூலம் தான் இந்த தகவல் ஆசிரியருக்கு கிடைத்தது. அவனும் அவர்களுடன் வருவதாகவும் கூறியிருந்தான்.
அவனையும் எதிர்ப்பார்த்து தான் அந்த ஆசிரியர் காத்திருந்தார். முதலில் லோகுவை தான் இந்த வேலைக்கு அனுப்ப நினைத்திருந்தார். லோகுவிற்கு இதில் விருப்பம் இல்லை என்றானதும் தான், இவனை இதில் இழுத்திருந்தார். இதெதுவும் சமீராவிற்கு தெரியாது.
சகாயம் அழைத்து பத்து நிமிடங்கள் ஆனதும், மேலும் ஒரு கார் வந்தது. அதிலிருந்து இறங்கியவனைப் பார்த்ததும், மந்திரி கையசைத்து கிட்டே சென்று தழுவிக்கொண்டார்.
“வா விக்கி உள்ள போகலாம்.”
அவனுடன் இருப்பதை உடனே தன் காமிராவில் பதிவு செய்துக்கொண்ட சமீரா, “கலெக்டர் சார், கொஞ்சம் இந்தப் பையை பிடிங்க.. ஜூம் செய்வதற்கு இடையூரா இருக்கு ப்ளீஸ்.” என்றாள்.
“இதுக்கு தான் என்னை வர சொன்னியா?” என்றவனைப் பார்த்து “ஆம்” என்றாள்.
“திமிர்”
“இருக்கட்டும் தப்பில்லை.”
“அதை நான் சொல்லணும்.”
“இப்போ நாம பேச்சை குறைச்சுக்கிட்டு வேலையை கவனிச்சா நல்லா இருக்கும்.”
“நான் யாருன்னு தெரியுமில்லை.” என்ற சமர்த்தை பார்த்து “ம்ம் நல்லா தெரியும். ப்ளீஸ் இப்போ நாம சண்டை போடவேண்டாம் முடிஞ்சா ஹெல்ப் செய்ங்க இல்லேன்னா விடுங்க நானே பார்த்துகிறேன்.”
இருக்கும் சூழ்நிலை புரிந்து அவளுக்கு உதவத் தொடங்கினான் சமர்த்.
விக்கியும், சகாயமும் பாழடைந்த வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்ததும் இவர்களும் பதுங்கியவாறே அவர்களை பின் தொடர்ந்தனர்.
உள்ளே சென்றதும், “இங்க பாரு விக்கி, இப்போ எதுக்கு என்னை வர சொன்ன?” என்று கேட்ட சகாயத்தைப் பார்த்து சிரித்தான் விக்கி.
“சகாயம் நம்ம கேசு விஷயம் என்னாச்சு?”
“இதுக்கு தான் என்னை கூப்பிட்டியா? நான் தான் சீக்கிரம் முடிச்சுடறேன்னு சொன்னேன் இல்லை.”
“எது கேசையா இல்லை என்னையா?”
ஒரு நொடி அதிர்ந்து, “என்ன விக்கி இப்படி கேட்டுட்ட? உன்னை எதுக்கு நான் முடிக்கணும்.”
“அது நீ தான் சொல்லணும் சகாயம்.”
“உனக்கு யாரோ தப்பா சொல்லியிருக்காங்க.. இந்த கேசை முடிக்க தான் நான் போராடிட்டு இருக்கேன்.”
“இல்லை நீ என்னை முடிக்க தான் போராடுற.. இது எனக்கு நல்லா தெரியும்.. இங்கப் பாரு உனக்கு இன்னும் ஒரு வாரம் டைம் தரேன் சீக்கிரம் என்னோட கேசை முடிக்கற இல்லன்னா உன்னைப் பத்தின எல்லா விஷயத்தையும் மீடியா கிட்ட சொல்லிட்டு உன்னையும் முடிச்சுடுவேன்.“
“விக்கி ரொம்ப பேசற.”
“நீ தான் என்னை பேச வைக்கிற.. நான் என்ன செய்யட்டும்?”
“உனக்கெதுக்கு இப்போ என் மேல திடீர் சந்தேகம்.?”
“நான் செய்யாத குண்டு வெடிப்பு வழக்குல சரணடைய சொன்ன, அங்கே இருந்து தப்பிக்கவும் சொன்ன எல்லாமே செஞ்சேன். அது நடந்தே ஆறேழு வருஷம் ஆச்சு.. ஆனா இன்னும் பாதிப் பணம் வந்து சேரல.”
“அது தான் விக்கி சொன்னேனே இப்போ ரொம்ப கெடுபிடியா இருக்கு.. பிளாக்ல இருக்கிறதை வெளில கொண்டு வரமுடியலைன்னு.”
“ஓ! அப்படியா அப்போ இதென்ன?” என்று கேட்டான். அவன் கையில் இருந்த படத்தில் யாருக்கோ பணப்பெட்டிகளை கொடுத்துக்கொண்டிருந்தான் சகாயம்.
“ஹா..ஹா.. சகாயம் இவன் என்னோட ஆளுன்னு உனக்கு தெரியாதில்ல.. அவன் கிட்ட இவ்ளோ பணத்தைக் கொடுத்து என்னை கொல்ல சொல்லியிருக்க.. ம்ம் உன்னை என்ன செய்யலாம்?” என்றான் யோசித்தபடி.
அவனிடம் இருக்கும் திட்டத்தால் சகாயத்தை அடுத்த இடத்திற்கு கொண்டுசெல்ல முடியும் என்று சொன்னதை நம்பி, பேராசைப் பட்டு தனியே வந்து மாட்டிக்கொண்டது சகாயத்திற்கு புரிந்தது. “இங்கப் பாரு விக்கி இது நல்லாயில்லை.”
“எது சகாயம் இந்தப் படமா? ஜூம் பண்ணி எடுக்க தெரியலை எனக்கு. என்ன செய்ய?”
“வேண்டாம் விக்கி.. நான் யாருன்னு தெரியுமில்லை? என் கிட்ட மோதினா அரசாங்கத்திற்கு பதில் சொல்ல வேண்டி வரும் தெரியுமில்லை.”
“இரு சகாயம், இப்போ தான் உனக்கு ஒரு வாரம் டைம் கொடுத்தேன் அது வேஸ்ட் போல இருக்கே?”
“என்னது? என்ன செய்ய போற? நானும் எங்க ஆளுங்களோட தான் வந்து இருக்கேன்.. டேய் எல்லாரும் உள்ள வாங்கடா, இவனைப் பிடிச்சு கட்டுங்கடா..”
“ஹா..ஹா..” என்று பெரிதாக குரலிட்டு சிரிக்க தொடங்கியவாறே கையால் அங்கேப் பார்க்கும்படி கூறினான் விக்கி.
அங்கே சகாயத்தின் ஆட்களை ஒருத்தர் விடாமல் விக்கியின் ஆட்கள் சிறைப் பிடித்திருந்தைப் பார்த்து சகாயத்திற்கு வேர்க்க தொடங்கியது.
“சகாயம் நீ இனிமே இருக்க போறது சில நிமிடங்கள் தான்.. உன்னோட கடைசி ஆசை எதாச்சும் இருந்தா சொல்லு.”
மண்ணாசை, பெண்ணாசை மற்றும் பொன்னாசை என்று சகாயத்தின் ஆசைகள் இல்லையில்லை பேராசைகள் பெரிது. இதில் ஏதாவது ஒன்று இருந்தாலே அழிவு நிச்சயம் என்று பாவம் சகாயத்திற்கு புரியவில்லை. இதில் எதை கேட்பது எதை விடுவதும் என்றும் தெரியவில்லை.
“விக்கி, என்னோட கடைசி ஆசையே இன்னும் கொஞ்ச நாள்.. இல்ல..இல்ல நிறைய நிறைய நாட்கள் வாழ்வது தான்.”
“சகாயம் நீ ரொம்ப பேசற..”
“விக்கி இந்த முறை என்னை மன்னிச்சுடு.”
“உன்னை மாதிரி ஆட்களையெல்லாம் விடக்கூடாது சகாயம்..” என்ற விக்கி தன் கை துப்பாக்கியை எடுத்தான்.
இதைப்பார்த்த சகாயம் வெளியே ஓடத் தொடங்கினான். விக்கியின் ஆட்களும் பின்னாலேயே துரத்த சகாயம் இன்னும் வேகமாக ஓடத் தொடங்கினான்.
சமீராவும் சமர்த்தும் நன்றாக ஒளிந்துக் கொண்டனர். அவர்களை தாண்டி ஓட முயன்ற சகாயத்தை சட்டென்று பிடித்திழுத்த சமீரா, ஒரு கையால் அவனின் வாயை இருக்க மூடி, மற்றொரு கையால் தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி அவனது மூக்கின் மேல் குத்து விட்டாள். அதில் சகாயம் மூர்ச்சையாகி கீழே விழுந்தான்.
சமர்த் அதை திறந்த வாய் மூடாமல் பார்த்திருந்தான்.
“இவன் இவ்வளவு எளிதாக சாகக்கூடாது.. வேற யார் கையாலேயும் சாகக் கூடாது.. அதுக்கு தான் நான் இருக்கேனே.. டேய்! நீ என் கையாலே தான் சாகணும்.. என் கையால தான் சாகணும்..!” என்று வெறிப் பிடித்தவள் போல கத்த ஆரம்பித்தாள்.
சமர்த்திற்கு எதுவும் புரியவில்லை என்றாலும் இருக்கும் இடம் கருதி சட்டென்று அவள் வாயை இறுக மூடி “ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர்ஸெல்ப்.” என்றான்..
கண்களை மூடித்திறந்த சமீரா, சகாயத்தை நன்றாக உள்ளே இழுத்து அங்கிருந்த சருகுகளால் மூடிவிட்டு அவளும் மறைந்து நின்றாள். எதற்குமே அவள் சமர்த்தை அழைக்கவில்லை. அவனொருவன் அங்கிருப்பதை துளியும் எண்ணவில்லை.
.லோகு சகாயத்தை தேடும் ஆட்களோடு சேர்ந்து அவனும் தேடுவதைப் போல அவர்களுடன் இணைந்து தப்பித்தான். சகாயத்தை தேடி வந்த ஆட்களிடம் விஸ்வநாதன் மட்டும் மாட்டிக்கொண்டார்.
“யார் நீ?” என்றான் விக்கி.
“ப்ரெஸ்.”
“இவனைப் பிடிச்சு வைங்க.. யோவ்! இன்னும் உன் கூட எத்தனைப் பேரு வந்து இருக்காங்க?”
“இல்லை நான் மட்டும் தான்.”
“இந்த வயசுல இதெல்லாம் தேவையா உனக்கு.. இரு அவனை முடிச்சுட்டு வந்து உன்னை கவனிச்சுக்கறேன்.”
மீண்டும் எல்லோரும் தேட தொடங்கினார்கள். சற்று தொலைவில் நின்றிருந்த ஜீப் கண்ணில் பட, அதனருகே சென்றுப் பார்த்தனர். கண்ணாடியில் ப்ரெஸ் என்று எழுதியிருப்பதை பார்த்த விக்கி,
 
“இது அந்த ஆளு வந்த வண்டி போல.. போங்க ஒழுங்கா தேடுங்க.. இங்கேயிருந்து அந்த சகாயம் உயிரோடவே போகக்கூடாது.”
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தேடியும் அவன் கிடைக்காததைக் கண்டு சிரிக்கத் தொடங்கினான் விக்கி.
“ஹா..ஹா..! டேய் அவனை கொல்ற வேலையை நமக்கு கொடுக்கலை வெறித்தனமா ஓடிப் போனபோது எங்கயாவது கீழ விழுந்திருக்கணும்.. அப்படியே இல்லாட்டாலும் இங்கயே கொஞ்ச நேரம் இருந்தாலும் ஏதாவது மிருகத்துக்கிட்ட மாட்டிப்பான். வாங்கடா போலாம்.”
லோகுவும் அவர்களுடனேயே சென்றான். விஸ்வநாதனின் அருகில் வந்ததும் கண்களால் சமிக்ஞை செய்யத் தொடங்கினான். விஸ்வநாதனும் கண்களாலேயே சரி என்று மூடித் திறக்கும் போது அவனை கவனித்த விக்கி,
“என்ன சாமியை கும்பிடறயா? கவலைப் படாதே உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன்.. நான் உன்னை விட்டுடறேன்.. நீ என்ன பண்றன்னா இந்த சகாயத்தை பத்தி சொல்லி நான் தர படத்தை உன் பத்திரிகையில் போட்டு அங்கு நடந்த கைகலப்பில் சகாயம் இறந்தான்னு எழுதணும். இதில் எங்கயாவது என்னைப் பத்தி வந்துச்சு நீ கூண்டோட காலி..”
விஸ்வநாதனும் சரி என்று தலையை ஆட்டினார்.
“இந்தாப் பிடி, இது தான் வரணும்.. நீ எடுத்த காமிராவை அவன்ட்ட கொடுத்துட்டு போ.” என்றான் விக்கி.
அந்த அவன் விஸ்வநாதானால் அனுப்பப்பட்டவன். அவர் கொடுப்பதற்கு முன் அதை சென்று பிடுங்கிக்கொண்டவனை பார்த்து, “நம்மாளு டா நீ..” என்று கட்டித் தழுவிக் கொண்டான். பின் எல்லோரையும் கூட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான். அவர்களுடனே சென்ற லோகு சற்றேப் பின் தங்கி மறைந்து நின்றுக்கொண்டான்.
அவர்கள் சென்றதுமே விஸ்வநாதனிடம் சென்றான்.
“லோகு வா நாம போய் சீக்கிரம் சமீராவை போய் தேடணும்.. “
இருவரும் சேர்ந்து சமீராவைத் தேடத் தொடங்கினர். “சமீரா, சமீரா! எங்கம்மா இருக்க?” வாம்மா அவன் போய்ட்டான்..”
சில நிமிடங்களுக்கு அங்கே நிசப்தம் மட்டுமே குடிக்கொண்டிருந்தது. சற்று தூரத்தில் “கீழ இறங்கு, இப்படி மிதிக்காத.. செத்துக்கித்து போனா நீ தான் ஜெயிலுக்கு போகணும். இறங்கு..ஏய்! இறங்குன்னு சொல்றேன் இல்லை.” என்று கத்திக்கொண்டிருந்தான் சமர்த்.
“இல்லை இவனைக் கொல்லாம விடமாட்டேன். உன் சாவு என் கைல தான் டா” என்று பிதற்றியவாறே இருந்தவளை ஓங்கி ஒரு அறை விட்டான் சமர்த். அதில் அவள் மயங்கி கீழே விழுந்தாள்.
இருவரும் மாற்றி மாற்றி கத்திக்கொண்டிருந்ததால் விஸ்வநாதன் அவளை அழைத்த குரல் அவர்களுக்கு கேட்கவில்லை.. இப்பொழுது அவள் மயங்கவும் மறுபடியும் விஸ்வநாதன் சமீராவை அழைத்த குரல் சமர்த்திற்கு கேட்டது. சமீரா என்று அவர் கூப்பிட்டது முழுவதும் அவன் காதில் விழாமல் ‘மீரா’ என்று மட்டுமே விழுந்தது.
பக்த மீராவிடம் இருக்கும் பொறுமையும் அமைதியும் இவளிடம் இல்லையே.. இந்தப் பெயரை வைத்துக்கொண்டு இப்படி காளி அவதாரம் எடுக்கிறாளே, என்று திட்டிவிட்டு, “சார், இங்க இருக்கோம் வந்து கொஞ்சம் ஹெல்ப் செய்ங்க.” என்றான்.
அவர்களின் அருகே விரைந்தவர்களின் கண்களுக்கு சகாயமும் சமீராவும் மயங்கி இருப்பது தெரிய, “இவளுக்கு என்ன ஆச்சு? இவன் எப்படி இங்க வந்தான்?” என்று கேட்டார் விஸ்வநாதன்.
“இவன் பாட்டுக்கு ஓடிட்டு இருக்கும் போது திடீர்ன்னு பிடிச்சு இழுத்து, அடிச்சு துவைச்சு காயப்போட்டுட்டு இருந்தா, இன்னும் கொஞ்சம் பிழிஞ்சிருந்தா அவன் இப்போவே காலியாகி இருப்பான்னு, நான் தான் அவளை ஒரு அறை விட்டேன். ஒண்ணும் பயமில்லை சாதாரண மயக்கம் தான். இவனை தான் ஹாஸ்பிடல் சேர்க்கணும்.. ஒரு வழி பண்ணீட்டா..”
“லோகு இவனை கொண்டு ஜீப்பில் போட்டுட்டு, வந்து இவளை தூக்கிட்டு போ.” என்றவரிடம் “லோகு சார் நீங்க அவனை தூக்குங்க.. இவளை நான் தூக்கிட்டு வரேன்.. சீக்கிரம் ஊர் போய் சேரலாம்.. என்று சொல்லிவிட்டு சட்டென்று அவளைத் தூக்கிக் கொண்டான். விஸ்வநாதனும் லோகுவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலும் ஒன்றும் சொல்லாமல் அவனை பின் தொடர்ந்தனர்.
‘இவளா! அவனை ஒரே அடியில் மயங்க வைத்தவள்.. கைகள் எல்லாம் மெத்துன்னு இருக்கு.. நல்லா சப்பாத்தி மாவு பிசைஞ்சு வச்சா மாதிரி.. இது தான் சாது மிரண்டால் காடு கொள்ளாதுன்னு சொல்றாங்களோ! இருக்கும்.. இவளுக்கு வாய் தான் கொஞ்சம் நீளம்ன்னு நினைச்சா கையும் ரொம்ப நீளம் தான் போலிருக்கு.. பாவம் இவ ஆத்துக்காரன்.’ என்று மனதிற்குள்ளேயே பேசிவிட்டு கால்களில் மிஞ்சி (மெட்டி) இருக்கிறதாவென்று ஆராய்ந்தான். அவள் அணிந்திருந்த அடிடாஸ் ஷு அவனைப் பார்த்து சிரித்தது.
இப்பொழுது அவளை நன்றாகப் பார்த்தான். முடியை ஓட்ட வெட்டியிருந்தாள். பேன்ட் ஷர்ட் போட்டிருந்தாலும் அவனுக்கு நன்றாகவே தெரிந்தது அவளின் பெண்மையும், மென்மையும். முகம் மிக லட்சணமாக இருந்தது.. நிலவொளியில் அவளின் முகத்தைப் பார்த்தது அவனுக்கு மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது. ‘இன்னும் கொஞ்சம் நீளமா மூடி வளர்த்து நெத்தியில் பொட்டு வச்சுண்டா ரொம்ப நன்னாயிருப்பா’. என்று மனதிலே வழிந்துக்கொண்டான்.
ஜீப்பின் அருகில் சென்றதும், “ஏன் சார் இவங்க இப்படி நடந்துக்கிட்டாங்க?” என்று கேட்டான்.
லோகுவும் விஸ்வநாதனும் அதிர்ந்தனர். “இவளுடைய அப்பா, அம்மாவைக் கொன்றவன் அவன். இவ்வளவு தான் என்னால சொல்ல முடியும். மீதியை நீங்க இவகிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கோங்க.” என்று முடித்துக்கொண்டார்.
“ஆமா அவ என் கிட்ட சொல்லிட்டு தான் மறுவேலைப் பார்ப்பா’’ என்று நினைத்துக்கொண்டவனுக்கு, அவள் அன்று கேட்ட கேள்வி நியாபகத்திற்கு வந்தது.. ”என்னோட பேரைப் பற்றி கேட்டாளே.. என்னை எப்படி தெரியும் இவளுக்கு.. அதை மட்டுமாவது இவ கிட்ட தெரிஞ்சுக்கிட்டு தான் ஆகணும்.” என்று முடிவெடுத்துக்கொண்டான்
 
Top