Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 2

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 2




உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.​
1.1

வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்த பின் திண்ணையில் அமர்ந்து நம்மாழ்வாரின் திருவாய்மொழியை திருவை (மனப்பாடம் செய்தல்) செய்துக்கொண்டிருந்தாள் சுமி. அப்பொழுதான் நம்மாழ்வாரின் தனியன்களை சேவித்து முதல் பாடலை சேவிக்க ஆரம்பித்தாள்.

“தொழுதெழென் மனனே” என்று சுமி முடிப்பதற்கும் “டி சுமி” என்று அலமு அழைப்பதற்கும் சரியாய் இருந்தது.

இருந்த இடத்திலேர்ந்தே “அம்மா சொல்லுங்கோ”. என்றாள் சுமி.

“என்னடி உன் தங்கய (தங்கை) இன்னும் காணலியேடி, ஒருவேளை பஸ் கிடைக்க நாழியாயிடுத்தோ?” என்று அலமு கேட்கும் போதே திண்ணையில் இருந்து உள்ளே வந்தாள் சுமி.

“தெரியலை மா, அப்படித்தான் இருக்கும் போலிருக்கு.”

“இன்னும் சித்த நாழி பார்க்கலாம்.. அதுக்குள்ள வரலைன்னா காயத்ரிக்கு போன(போனை) பண்ணி கேட்டுடு.. வந்துட்டு அவா ஊருக்கு வேற கிளம்பணுமே..”

“சரிமா” என்றபடியே நகர்ந்தாள் சுமி.

மருத்துவமனையில் கண்விழித்த கண்ணனுக்கு தான் எங்கு இருக்கிறோம் என்றே சில நொடிகள் புரியவில்லை. அடுத்த நொடியே தன் தங்கை காயத்ரியின் வீட்டில் இருந்து புறப்பட்டதும் ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்த விபத்தும் புரிந்தது. “பெருமாளே! பவித்ராவும், குழந்தை மீராவும் என்ன ஆனார்களோ?” என்றபடியே வேகமாக எழுந்த கண்ணனுக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்ததால் சில நிமிடங்களிலேயே மீண்டும் மயக்கமானான். கண்ணன் மீண்டும் முழுவதுமாக மயக்கம் தெளிந்து எழ இரண்டு நாட்கள் ஆனது. அந்த இரண்டு நாட்களும் சில நேரங்களில் விழிப்பு தட்டினாலும் உடனடியாகவே மயக்க நிலையை அடைந்தான் கண்ணன்.

கண் விழித்துப் பார்த்த கண்ணன், அருகில் அவனின் குடும்ப உறுப்பினர் அனைவரும் இருந்ததைப் பார்த்து நிம்மதியடைந்தான். “அம்மா, பவி எங்கேமா?” என்றான் தன் அம்மாவைப் பார்த்து.

“பவி தான, அவளுக்கு இன்னும் மயக்கம் தெளியலை.. ஆனா நன்னா இருக்கா.. நீ பயப்படாம உன் உடம்ப பார்த்துக்கோ..”

“நீங்க எல்லாம் எப்படி வந்தேள்?, விஷயம் எப்படி தெரிஞ்சுது?”

“இதோ சுமியே வந்துட்டாளே.. அவளண்டையே கேட்டுக்கோ டா அம்பி..”

“மாப்பிள்ள இப்போ எப்படி இருக்கு?” என்ற சுமியைப் பார்த்து தன் அம்மாவிடம் கேட்ட கேள்வியையே திரும்ப கேட்டான் கண்ணன்.

கண்ணனோ, பவித்ராவோ இப்படி கேட்பதற்காகத் தான் காத்திருந்தாப் போலே மட மட வென்று இரண்டு நாட்களில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள் சுமி.

இரண்டு நாட்களுக்கு முன்:

“மதியம் மூன்று மணி ஆகியும் கூட பவித்ராவும், மாப்பிள்ளையும் வரலையே” என்று மனதிற்குள்ளேயே பேசிக்கொண்டு போனை எடுத்து காயத்ரியிடம் பேச ஆரம்பித்தாள் சுமி.

அந்தப் பக்கம் போனின் மணி ஒலித்த அடுத்த நொடியே எடுத்து, “யாரு பேசறது?” என்ற காயத்ரியின் மாமியாரிடம் “மாமி நான் தான் சுமி பேசறேன்.. சௌக்கியமா இருக்கேளா? மாமா உடம்பு வெர்னே(நன்னா) இருக்காளோன்னோ?” என்று பேச ஆரம்பித்தாள் சுமி.

“ஆத்துல எல்லாரும் சுகம்தாண்டி மா, சித்த இரு.. நான் இப்ப தான் எழுந்துண்டேன் அவசரமா கொல்லைக்கு வந்துடுத்துடி.. காயத்ரிட்ட தந்துடறேன்.. நான் வந்து பேசறேன்..” என்றபடியே போனை காயத்ரியிடம் கொடுத்து விட்டு சென்றார்.

“சுமிக்கா, சொல்லுங்கோ ஆத்துல எல்லாரும் சௌக்கியம் தானே?”

“காயு எல்லாரும் நன்னா இருக்கா.. நீ உண்டாயிருக்கேன்னு பவி சொன்னா.. உடம்ப நன்னா பார்த்துக்கோ..”

“சரிக்கா.”

“உன் அண்ணாவும் மன்னியும் இன்னும் கிளம்பலையா? ஊருக்கு வேற கிளம்ப நாழியாயிடுத்தே..”

“என்னக்கா சொல்றேள்? அவா சாதம் சாப்ட கையோடயே தாம்பூலம் வாங்கிண்டு கிளம்பிட்டாளே.., இன்னுமா வரலை? என்ன ஆச்சுன்னு தெரியலையே?” என்று படபடக்க ஆரம்பித்தாள் காயத்ரி.

காயத்ரியின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு, “காயு, நீ கவலைப் படாதே.. பஸ் பிரேக்டவுன் ஆகியிருக்கும்.. வந்துடுவா.. அவா இங்க வந்தவுடனேயே உனக்கு பேச சொல்றேன்.. நான் வைக்கட்டா? மாமியோட அப்பறமா பேசறேன்னு சொல்லிடு.. அவா எல்லாம் வராளான்னு பார்க்கறேன்.. உடம்ப பார்த்துக்கோ.. போனை வைக்கறேண்டி..” என்றபடியே போனை வைத்த சுமி தன் மாமியார் இருக்குமிடம் நோக்கி சென்றாள்.

காயத்ரியிடம் பேசி ஒரு மணி நேரம் கடந்தும் அவர்கள் வந்து சேராதது சுமிக்கு மிகவும் கவலையாகிவிட, பெருமாளை தியானித்தப்படியே வீட்டு வாசலிலேயே அமர்ந்திருந்தாள் சுமி.

மேலும் முப்பது நிமிடங்கள் கடந்த போது வீட்டின் உள்ளே போன் ஒலித்தது காதில் விழ, பதறியடித்து ஓடி உள்ளே சென்று போனை எடுத்தாள்.

“ஹ...ஹ...ஹ..லோ! யாரு பேசறது?” என்றாள்.

“அம்மா நான் இங்க ஸ்ரீபெரும்பூதூர் ஹாஸ்பிட்டல் பக்கத்துலேர்ந்து பேசறேன்மா.. இங்க ஒரு பஸ் அக்சிடன்ட் நடந்திருக்கு.. அதுல பயணம் செஞ்ச ஒருத்தர் கூடையிலிருந்த பேப்பரில் இந்த நம்பர் ‘அக்கா’ என்ற பெயரிலும், இன்னொரு நம்பர் ‘காயு’ என்ற பெயரிலும் எழுதியிருந்ததுமா.., அடிப்பட்டவருக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைமா அதனால பதறாதீங்க.. மயக்கத்துல தான் இருக்கார்.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க.. நீங்க சீக்கிரம் கிளம்பி வாங்கமா..” என்றார் யாரோ ஒருவர்.

“அ..அ ..வா எல்லாம் நன்னா இருக்காளோன்னோ?, அவா கிட்ட ஒரு வயது பெண் குழந்தை இருந்ததே.. குழந்தை எப்படியிருக்கு? நாங்க சீக்கிரமா வந்துடறோம்.” என்ற கேள்வியை கேட்டதுமே அந்தப்பக்கம் போன் வைக்கப் பட்டது.

சுமியும் அதை பெரிது பண்ணாமல் உடனே காயத்ரிக்கு அழைத்து சொல்லிய அவள், காயத்ரியின் அம்மாவிற்கு காயத்ரியையே சொல்ல சொன்னாள். பேசி முடித்த பின் உடனடியாக கிளம்புவதற்கு ஆயத்தமானாள்.

இதையெல்லாம் சுமி கண்ணனிடம் சொல்லி முடித்தாள்.

“தக்க நேரத்துக்கு அவா மட்டும் தகவல் சொல்லலைலேன்னா எங்களுக்கு விஷயம் தெரிய இன்னும் நேரம் ஆகியிருக்கலாம்.” என்றாள் சுமி.
கண்ணனுக்கு அந்த சமயத்தில் பவித்ராவின் மேலிருந்த காதல் அதிகமானது. ஏனென்றால், எப்பொழுதுமே பவித்ராவிடம் ஒரு பழக்கம் உண்டு.. அது, எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊர்களில் இருக்கும் உறவினர்களின் போன் நம்பரை பேப்பரில் எழுதி அதைப் பத்திரமாக கூடையில் வைத்திருப்பாள் ‘இது ரொம்ப அவசியமோ?’ என்றெல்லாம் கண்ணன் அவளை கேலி செய்திருக்கிறான்.

அதற்கு ஒரு புன்சிரிப்பை தவிர வேறு பதில் கொடுக்கமாட்டாள் பவித்ரா. கூடவே நம்பரை எடுத்துச் செல்லவும் மறக்க மாட்டாள். அதையெல்லாம் ஒரே நொடியில் நினைத்துப்பார்த்ததால் தான் அவன் மனதில் அவள் மீதான காதல் அந்த நொடியில் அதிகரித்தது.

“குழந்தை எப்படியிருக்கா?, அவளுக்கு ஒண்ணும் அடிபடலையே?”

கண்ணன் குழந்தையைப் பற்றி கேட்டதுமே அங்கிருந்தவர்களின் முகம் பேயறைந்தால் போல் ஆனது. அதிலும் கண்ணனின் அம்மாவிற்கு, மிகுந்த வெறுப்பு, கோபம், கவலை எல்லாம் சேர்ந்தால் போல் இருந்ததால் அவரின் முகம் கர்ண கொடூரமாக காட்சியளித்தது.

அவருக்கு இருக்கும் கோபத்திற்கு இப்பொழுது வாயை திறந்தால் சண்டையில் தான் முடியும் என்பதால் அவர் வாயை நன்றாக இருக்க மூடிக்கொண்டு, அனல் பார்வையை சுமியின் மேல் வீசினார்.

அதுவரை தலையை குனிந்துக் கொண்டிருந்த சுமி, தன்னை யாரோ உற்று பார்ப்பது போல் தோன்ற தலை நிமிர்ந்தாள். பவியின் மாமியாரின் அனல் பார்வையை எதிர்கொண்ட சுமிக்கு அந்தப் பார்வைக்கான அர்த்தம் புரிபடவில்லை.

“அக்கா நீங்களே சொல்லுங்கோ..” என்ற காயத்ரியை ஏறிட்ட சுமி ஒன்றும் பேசாமலே இருந்தாள்.

“என்ன ஆச்சு குழந்தைக்கு?, அவளுக்கு ஒன்றுமில்லையோன்னோ?” என்றான் கண்ணன். அவனின் குரலிலிருந்தே அவனுடைய பதட்டத்தையும், கவலையையும் கண்டுக்கொண்ட சுமி பேச ஆரம்பித்தாள்.

“மாப்பிள்ளை, குழந்தையை காணோம்.. பவியும் மயக்குத்துல தான் இருக்கா.. இன்னும் எழுந்துக்கலை.. சொல்லப் போனா, நாங்க வந்ததும் உங்களை தான் பார்க்க முடிந்தது.. பவியையும் குழந்தையையும் காணலை.. கடைசில அவளுக்கு தான் அடி பலம்மா பட்டிருக்கு..
அதனால ஐ.சி.யு. ல தான் அவ இருந்தா.. நாங்க எல்லாரும் அவாளை தேடிண்டு இருந்தபோது தான் அங்கேயே இருந்த நர்ஸ் எங்களின் உடைகளைப் (எல்லோருக்கும் திருமணம் முடிந்திருந்ததால் மடிசார் புடவையே அணிந் திருந்தனர்) பார்த்தே அடையாளம் கண்டுக்கொண்டு பவி இருக்குமிடத்திற்கு கூட்டி சென்றாள்.
அவள் அருகிலேயும் குழந்தை இல்லை. குழந்தைப் பற்றி யாருக்குமே ஒன்றும் தெரியவில்லை.. பஸ்சில் அடிப்பட்டவா எல்லாருமே நன்னா தான் இருக்கா... கண்டிப்பா குழந்தை மீராவும் சௌக்கியமா இருப்பா.. போலீஸ்ல சொல்லியிருக்கோம்.. நீங்க உடம்பு சுகமாகி வாங்கோ அதுக்குள்ள குழந்தையை கண்டு பிடிச்சுடலாம்..” என்றாள் சுமி.

“ஐயோ! அம்மா என் குழந்தையை காணோமே.. நான் என்ன செய்வேன்.. நீ அப்போவே சொன்னியேமா நீ மட்டும் போய் காயத்ரியைப் பார்த்துட்டு வா.. அவாளை அப்புறம் அழைச்சுண்டு போன்னு சொன்னியே... நான் தான் உன் பேச்சை கேட்காம அவாளை அழைச்சுண்டு போய் இப்போ கொழந்தையை பறிகொடுத்துட்டு நிக்கறேன்.. பவி.. பவி.. உனக்கு நான் என்ன சமாதானம் சொல்லப் போறேனோ?” என்றபடியே எழுந்து பவி இருக்கும் அறை இருந்த திசையில் செல்ல ஆரம்பித்தான்.

இரண்டு நாட்கள் மயக்கமாக இருந்ததால் கண்ணனின் நடையில் சிறிது தடு மாற்றம் ஏற்பட, உடனே அருகில் இருந்த சுமியின் கணவர் கிருஷ்ணன், கண்ணனின் கையைப் பிடித்துக்கொண்டார்.

கிருஷ்ணன் கண்ணனை பவித்ரா இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றார். அங்கே பவியோ இன்னும் மயக்க நிலையிலேயே இருந்தாள். அவளின் கையைப் பிடித்துக்கொண்ட கண்ணன், “பவி, நீ எழுந்து வரதுக்குள்ளயாவது கொழந்தையைப் பத்தி ஏதாவது விஷயம் தெரிஞ்சிடனும்.. பெருமாளே! நீ தான் எங்களுக்கு துணையா இருக்கனும்.. எங்க மீரா குட்டி நன்னா ஷேமமா இருக்கணும்.. “ என்று பேசிக்கொண்டே இருந்தான்.

போனில் அந்த பெண்மணி, பெண் குழந்தை அதுவும் ஒரு வயது குழந்தைப் பற்றி கேட்டதும் போனில் தகவல் சொல்லியவருக்கு தூக்கிவாரிப் போட்டது. கேட்ட கேள்விக்கு பதிலேதும் கூறாமல் படக்கென்று வைத்தார் அவர். அவர் வேறு யாருமில்லை அந்த குழந்தையை எடுத்துச் சென்ற இப்ராஹீம் தான்.

வீட்டிருக்கு சென்று தன் மனைவியிடம் குழந்தையை கொடுத்த அவருக்கு வீட்டில் இருப்பு கொள்ளவில்லை.. அதனால் திரும்பவும் வீட்டிலிருந்து கிளம்பி விபத்து நடந்த பகுதிக்கே வந்தார். அப்பொழுது தான் அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற விஷயம் தெரிய.. குழந்தையின் பெற்றவர்களைப் பற்றி அறிய அவரும் அங்கே சென்றார்.

அங்கே சென்றதும் ஆம்புலன்சிலிருந்து இறக்கப்பட்ட ஒருத்தரின் கையிலிருந்த கூடை நழுவி விழ அதை ஓடி சென்று பிடித்தார் இப்ராஹீம். அவரின் உடல் நிலையைப் பற்றி கேட்டு அறிந்துக்கொண்டார்.

பிறகு கூடையை திறந்துப் பார்த்து அதில் இருந்த எண்ணிற்கு தகவல் சொன்னார். சொல்லும்போதே அதை பாதியில் கட் செய்ய வேண்டி வந்தது அவருக்கு மிகுந்த கவலையைக் கொடுத்தது. இப்பொழுது மீண்டும் கூடையை நன்றாக பரிசோதனை செய்து பார்த்தார்.

அதில் இருந்த குழந்தை துணிகள் எல்லாம் அவர் வீட்டில் விட்டு விட்டு வந்த குழந்தையை நினைவு படுத்தியது. கூடையின் அடியில் அவருக்கு கையில் ஒரு போட்டோ ஆல்பம் கிடைத்தது. அதில் இப்பொழுது தன் வீட்டில் இருக்கும் குழந்தையின் ஆயுஷ்ஹோமம் என்று போட்டிருந்த பத்திரிக்கையுடன் அந்த குழந்தையின் போட்டோக்களும், குழந்தையை பெற்றவர்களின் போட்டோக்களையும் பார்த்தார்.

அந்தப் பத்திரிக்கையில் குழந்தையின் பெயர் மீரா என்று போட்டிருக்க அவர்களும் அந்த குழந்தைக்கு சமீரா என்று பெயர் வைத்ததை நினைத்துப் பார்த்தார்.

ஏதோ தோன்றியவராக உடனே கூடையுடன் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

“பேகம்.. பேகம்.. எங்க இருக்க?” என்று கூப்பிட்டுக்கொண்டே தன் வீட்டிற்குள் நுழைந்தார் இப்ராஹீம்.

“என்னங்க? இங்க தான் இருக்கேன்?”

“பேகம், இந்த குட்டியை அவங்க கிட்டே கொடுத்துடலாம்மா.. இப்போ அவங்களை பார்த்துட்டு தான் வரேன்.. மயக்கத்துல தான் இருக்காங்க.. முழிச்சதும் குழந்தையை ரொம்ப தேடுவாங்க இல்ல.. நமக்கு பிறக்கும் போது பிறக்கட்டும்.. மீராவ கொடு நான் போய் கொடுத்துட்டு வரேன்.” என்றவரை வேற்று கிரக வாசி போல பார்த்து வைத்தார் பேகம்.

“எதுக்கு இப்படி ஒரு பார்வை?”

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க? வருவாராம் இந்தா வச்சுக்கோன்னு குழந்தையை கொடுப்பாராம்.. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து திரும்ப கொடுன்னு கேட்டா உடனே நான் கொடுக்கணுமா? நல்லா இருக்குங்க உங்க நியாயம்..”

“பேகம் இது தான் நியாயம்... முன்னாடி நான் செய்தது தப்பு ம்மா.. அதை புரிஞ்சுக்கிட்டதால் தான் இப்போ இப்படி சொன்னேன்.. நீ கூட முன்னாடி தப்பில்லையான்னு தானே கேட்ட? இப்போ இப்படி பேசிட்டு இருக்க.. சரி சரி விடு நான் போய் மீரா குட்டியை விட்டுட்டு வரேன்.”

பேகத்திற்கு கையில் தனக்கு மிகவும் பிடித்த இனிப்பை கொடுத்து அதை வாய் கிட்டே கொண்டு போகும் போது யாரோ கையை தட்டி விட்டார் போல இருந்தது. அவருக்கு கோபமும் ஆத்திரமும் பெருகியது.

அக்கம் பக்கம் எல்லோரும் மாதாமாதம் வந்து, ‘என்ன இந்த மாசமாவது விசேஷம் உண்டா?’ என்று கேட்கும்போது அவருக்கு அழுகையே வந்துவிடும். ‘அல்லா தான் சீக்கீரம் கருணை புரியணும்’ என்று நிதமும் வேண்டிக் கொள்வார்.

இந்த குழந்தையை கையில் ஏந்தும் போதே அல்லாவின் பார்வை தன் மீது விழுந்து விட்டதென்றே நம்பினார். இந்த குழந்தை வந்த நேரமும் நல்லநேரம் என்றும் மனதில் நினைத்துக்கொண்டார்.

ஆனால், குழந்தையை திரும்ப கேட்டதும், ஏதோ கேட்க கூடாததை தன்னிடம் கேட்டது போல இப்ராஹிமிடம் நடந்துக்கொண்டார் பேகம்.

“இல்லைங்க இந்த குழந்தை நம்மோடவே இருக்கட்டுமே.” என்று பேகம் ஆரம்பிக்கும்போதே “நிறுத்து பேகம், நான் தான் ஏதோ தெரியாம முட்டாள் தனமா குழந்தையை வச்சிக்கலாம்னு சொல்லிட்டேன்.. இப்போ எனக்கு புரிஞ்சுடுச்சு இது சரி வராதுன்னு.. புரிஞ்சிக்க பேகம்...” என்றார் இப்ராஹீம்.

பேகத்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. திடீரென்று யோசித்தவராக ஏதோ பேச ஆரம்பித்தார். “நான் சொல்றேன்னு கோவிக்காதீங்க.. இந்த குழந்தை, என் வயத்துல ஒரு புழு, பூச்சி வரவரைக்குமாவது நம்ம கூட இருக்கட்டுங்க..” என்று சொல்லும்போதே இப்ராஹிமின் முகம் போன போக்கைப் பார்த்து,

“சரிங்க உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம், ஒரு வருடம் இந்த குழந்தையை வச்சிக்கலாமுங்க.. இந்த குழந்தை வந்த நேரம் நமக்கு அடுத்த மாதமே குழந்தை பாக்கியம் கிடைத்தாலும் கிடைக்குமுங்க.. அப்படி கிடைச்சா நீங்க உடனேயே குழந்தையை கூட்டிட்டு போயிடலாம்.. அப்படி ஒருவருடம் ஆகியும் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கலைனாலும் நீங்க குழந்தையை கூட்டிட்டு போயிடலாம்.. நான் பேச்சு மாற மாட்டேன்.” என்றார் குரல் தழுக்க தழுக்க.

இப்ராஹீமிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருந்தாலும் பேச ஆரம்பித்தார். “பேகம், கொழந்தை அய்யர் வீட்டு கொழந்தைமா.. நாம எப்படி வச்சிக்க முடியும்?, சொன்னா கேளுமா.. கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்க..” என்று அவர் முடிக்கும் போதே பேகத்திடமிருந்து ஒரு பெரிய கேவல் வெளிப்பட்டது.

“இது..இது..இதுக்கு நீங்க ஒத்துக்கலைன்னா, என்னை நீங்க உ...உ....உயிரோடவே பார்க்க முடியாது..” என்று அழுதப்படியே குழந்தை மீராவை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றார்.

மனைவியின் மிரட்டல் இப்ராஹீமை அவர்களுக்கு சாதகமாக முடிவெடுக்க வைத்தது. அதனால் அந்த ஆல்பத்தையும் போன் நம்பர் எழுதிய பேப்பரையும் எடுத்து பத்திரமாக வைத்தார்.

பின் மனைவியை அழைத்து தன் சம்மதத்தையும் கூறி பின் போட்டோ ஆல்பத்தைப் பற்றியும் கூறினார். கண்ணில் பெருகிய ஆனந்த கண்ணீருடன் அவரை ஆற தழுவிக்கொண்டார் பேகம்.

எப்பொழுது தன் மனைவிக்கு சம்மதம் தெரிவித்தாரோ அப்பொழுதே மனதிற்குள் “இனி அந்த மருத்துவமனைக்கே செல்லக் கூடாதென்ற முடிவையும் எடுத்திருந்தார் இப்ராஹீம்.

ஒரு வேளை இப்ராஹீம் அங்கே போய் பார்த்திருந்தால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பாரா?, நிச்சயம் அப்படி முடிவெடுத்திருக்கமாட்டார் தான். ஆனாலும் என்ன செய்ய? விதி வலியது என்று சொல்லுவதை தவிர.

அங்கே மருத்துவமனையில் கண்ணனின் மயக்கம் தெளிந்ததும், சுமிக்கும், பவித்ராவின் மாமியாருக்கும் ஒரு பெரிய மனஸ்தாபம் ஏற்பட்டதால் அங்கிருப்பவர்களின் மன நிலை மதில் மேல் பூனையாக இருந்தது. மனஸ்தாபத்திற்கு மூல காரணம் பவித்ராவின் மாமியார் தான்.
 
இதில் சுமி மீது என்ன தவறு இருக்கிறது.... ஏன் கோபம்.....nice ud..
 
Top