Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMA? - 3

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 3

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே

ன்ற ஆண்டாளின் வாரணமாயிரத்தின் கடைசி பாசுரத்தை மனதினுள்ளேயே சேவித்துக் கொண்டு இருந்தான் கண்ணன். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் வரும் திருப்பல்லாண்டை எழுதிய பெரியாழ்வாரின் தவப் புதல்வியான கோதை என்னும் ஆண்டாள் எழுதிய ‘நாச்சியார் திருமொழி’ யில் வரும் வாரணமாயிரத்தை சேவித்தால் நல்ல மக்கள் (குழந்தை) செல்வத்தை பெற்று மகிழ்வர் என்று முடியும் அந்த கடைசி பாசுரத்தை மனமுறுகி சேவித்துக் கொண்டிருந்தான்.
சேவித்து முடித்ததும், ‘பெருமாளே!, என் கொழந்த மீரா நல்லவா கிட்ட போய் சேர்ந்து இருக்கணும்.. சீக்கிரம் என் குழந்தையை கண்ணுல காட்டிடு, பகவானே! பவித்ராவுக்கும் சீக்கிரம் குணமாயிடனும்..’ என்றும் வேண்டிக்கொண்டான்.
தன்னை சுற்றி நடப்பதை அறியாமல் அல்லது அறிய முற்படாமல், தான் உண்டு தன் ஸ்லோகம் உண்டென்று கண்ணை மூடி, தியானித்தப் படி இருந்த கண்ணனை, “அம்பி இங்க சித்த பாருடா.” என்ற குரல் அவனை கண்ணைத் திறந்து தன் அம்மாவைப் பார்க்க வைத்தது.
“இவா சொல்றதயெல்லாம் கேட்டியோன்னோடா அம்பி?” என்று வராத கண்ணீரை துடைப்பது போலவும், தன் மடிசார் புடவையினால் மூக்கை சிந்தியப்படியேயும் கண்ணனைப் பார்த்து கேட்டாள் அவனின் தாய்.
“அம்மா, நீ பண்றது, செய்யறது, பேசறது ஒண்ணுமே நன்னாவேயில்லை மா, உடம்பு சரியில்லாதவாட்ட எப்படி பேசிப் பழகணும்ன்னு நோக்கு தெரியாதா? இல்ல தெரியாத மாதிரி நடிக்கறியா?” என்று தன் அம்மாவிடம் கோபித்துக் கொண்டாள் கண்ணனின் தங்கையான காயத்ரி.
“காயு, இப்போ நோக்கு தான் பெரியவாட்ட எப்படி நடந்துக்கணும்ன்னு தெரியல. அம்மாட்ட இப்படியா பேசறது?” என்று அவளை கோபித்துக் கொண்டான் கண்ணன்.
“அண்ணா, நீ தெரியாம பேசற.. இப்போ அம்மா என்ன பேசினா, எப்படி நடந்துண்டா? ன்னு நோக்கு தெரியுமா?” என்றாள் காயத்ரி.
“பெரியவா உன்னை அடிச்சே இருந்தாலும் அவாளை இந்த மாதிரி நிக்க வச்சுண்டு கேள்வி கேட்டுண்டு இருக்கக்கூடாதுமா காயு... என்ன புரிஞ்சதோன்னோ?”
“சரிண்ணா.. ஆனா அம்..” என்று ஆரம்பித்தவளை ஒரு கையை உயர்த்திக் காட்டி நிறுத்தினான் கண்ணன்.
“காயு, எதுக்குமே இடம், பொருள், ஏவல்ன்னு இருக்கு.. இப்படி ஹாஸ்பிடல் ரூம்ல வாக்குவாதம் பண்ணிண்டு இருப்பது நேக்கு துளி கூட பிடிக்கலை.. எதுவாயிருந்தாலும் நாம நம் ஆத்துக்கு(வீட்டிற்கு) போனதும் பேசிக்கலாம்..” என்றவனை
“அப்போ என் தங்க (தங்கை) கதி?” என்ற சுமியின் அழு குரல் தடுத்தது. “ஏன் என் பவிக்கு என்ன? அவளை நான் நன்னா பார்த்துப்பேனே..” என்று கேட்கவும் செய்தான் கண்ணன்.
“நீங்க நன்னா பார்த்துப்பேள், ஆனா அவ உங்காத்துல இருந்தா தானே பார்த்துக்கமுடியும்?” என்ற சுமியின் கணவர் கிருஷ்ணனை வெறித்துப் பார்த்தான் கண்ணன்.
“அவ எங்காத்துல இல்லாம வேற எங்க இருப்பா? என்ன பேசறேள் ன்னு யோசிச்சுண்டு தான் பேசினேளா?” என்ற கண்ணனின் குரலில் கோபம் கொப்பளித்தது.
“கண்ணன், இங்க என்ன நடந்துண்டு இருக்குன்னு தெரியாம நீங்க தான் பேசிண்டு இருக்கேள்.” என்றார் கிருஷ்ணன்.
“இப்போ இங்க என்ன நடந்துண்டு இருக்கு?, நானே கவலைலே பெருமாள சேவிச்சுண்டிருக்கேன்.. அதை கூட நிம்மதியா பண்ண விட மாட்டேங்கறேளே.!!” என்று கடிந்த கண்ணன் தன் அம்மாவைப் பார்த்து, “இங்க என்னம்மா நடந்துண்டிருக்கு?” என்றான்.
“டேய் அம்பி, என்னன்னா கேட்டுண்டிருக்க? நீ கேட்ப டா கேட்ப.. என் பேச்ச நீயும் உன் ஆத்துக்காரியும் கேட்டிருந்தா, இதெல்லாம் நடந்திருக்குமா?” என்று சலித்துக்கொண்டாள் கண்ணனின் அம்மா.
“ம்மா உடம்புலயும், மனசுலயும் நேக்கு தெம்பில்லை மா, நீ சொல்றது நேக்கு ஒண்ணும் புரியலை, சொல்ல வர்றதை நேரா சொல்லேன் மா. இப்போ எதுக்கு பழசெல்லாம் பேசிண்டிருக்க?”
“ஆமாண்டா நான் தான் பழம் பஞ்சாங்கமாச்சே.. நான் வேற எப்படி பேசுவேன்..?”
“ம்மா, இப்போ தான் நான் உன் கிட்ட சொன்னேன்.. நேக்கு தெம்பில்லைன்னு.. திரும்பவும் குதர்க்கமாவே பேசிண்டிருக்கியேமா, சீக்கிரம் விஷயத்தை சொல்லிட்டு, என்னை சித்த நாழி தனியா விட்டுட்டு எல்லோரும் ஆத்துக்கு போய்டுங்கோ..” என்று தன்னை சுற்றி இருந்தவர்களைப் பார்த்து சொன்னான் கண்ணன்.
“அம்பி, உன் ஆத்துக்காரி வயத்துல இருந்த கரு கலஞ்சுடுத்தாம்.. அவ விழுந்த வேகத்துல கர்ப்பப்பைல நல்ல அடியாம்.. அதை எடுத்தா தான் அவ உயிர் பிழைக்க முடியுமாம்..” என்றவரை
“அப்போ சீக்கிரம் எடுக்க சொல்லிடுங்கோ.. அதை விட்டுட்டு இங்க என்னத்துக்கு எல்லாரும் சண்டைப் போட்டுண்டு இருக்கேள்?” என்ற கண்ணனின் குரல் தடுத்தது.
“அம்பி, நீ கண் முழிக்க ரெண்டு நாள் ஆயிடுத்துடா நினைவிருக்கோன்னோ?, அதெல்லாம் அவ வயித்தை நன்னா சுத்தம் பண்ணியாயிடுத்து.. இருந்த ஒண்ணே ஒண்ணையும் தொலைச்சாச்சு.. இனிமேலும் பிறக்க இருந்த வழியையும் அடைச்சாயிடுத்து.. என்னத்தடா சொல்றது அம்பி?” என்றவரின் குரலில் தன் குலம் தழைக்க வழியே இல்லையே என்ற ஆதங்கம் நிறைய இருந்தது.
“ம்மா” என்ற கண்ணனால் மேலே பேச முடியாமல் அழுகை தொண்டையை அடைத்தது.
கண்ணனுக்கு தாங்கள் தங்கள் ஊரிலிருந்து தங்கையைப் பார்க்க கிளம்பும் போது அம்மா சொன்னது எல்லாம் நினைவில் ஆடியது.
“அம்மா, நான் காயத்ரியைப் பார்க்க போறச்சே பவியையும் அழைச்சுண்டு போகப் போறேன்மா..”
“அம்பி வேண்டாண்டா, அவளுக்கு நாள் தள்ளியிருக்குடா, நேக்கு என்னமோ அவ உண்டாயிருக்கான்னு தோணுது டா.”
“ம்மா, மீரா பொறக்கறச்சயே டாக்டர் சொல்லிட்டாளேமா, இரண்டாவது சந்தேகந்தான்னு.. அப்புறம் நீ இப்படி சொல்றியேம்மா?” என்றான் கண்ணன்.
“டேய் அவா சொல்லலாம் டா, அவா ஒண்ணும் பெருமாள் இல்லையே.. சந்தேகம்ன்னு தானே சொன்னா.. பொறக்கவே பொறக்காதுன்னு ஒண்ணும் சொல்லலியே.. அவ கண்ணும் மூஞ்சியும் வகையாய் இருக்கு டா.. மீராவ பிள்ளையாண்டிருக்கறச்சே அவளுக்கு அப்படி தான் இருந்தது.. அதான் நான் சொல்றேன் அவ உண்டாயிருக்கான்னு.. நீ மட்டும் கிளம்பி காயுவ பார்த்துட்டு வா.. பவி வேண்டாம்..” என்றாள் கண்ணனின் அம்மா.
கண்ணனுக்கு பவியை விட்டு தனியே செல்ல விருப்பமில்லை.. அதனால் தன் அம்மாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். “ம்மா, பவியை நான் நன்னாப் பார்த்துக்கிறேன்.. காயு இப்போ பிள்ளயாண்டிருக்கா.. அவளுக்கு என்ன வேணும்னு என்னால எப்படிமா கேட்க முடியும்? அதான் பவியையும் அழைச்சுண்டு போறேன்னு சொல்றேன்.” என்றெல்லாம் பேசி ஒருவழியாக தன் அன்னையின் சம்மதம் பெற்றான்.
“அம்பி, நீ சொல்றதும் ஒரு விதத்துல சரி தான்.. சம்பந்தி ஆத்துக்கு போறச்ச, உன் ஆம்படையாளும்(மனைவி) இருக்கறது தான் முறை.. ஆனாலும், என் மனசு கிடந்து அடிச்சுக்கறதே.. பார்த்து பத்ரமா அவளை அழைச்சுண்டு போயிட்டு வாடா அம்பி. ஆனா கொழந்தை மீரா என்னோடவே இருக்கட்டும்.. கொழந்தை தான் பால் குடியை மறந்துடுத்தே..” என்று தன் சம்மதத்தை தெரிவித்தாள் கண்ணனின் அன்னை.
குழந்தையை விட்டு விட்டு எப்படி செல்வது? என்று யோசித்த பவி, கண்ணனை பாவமாகப் பார்த்தாள். அதைப் பார்த்த கண்ணனும், “ம்மா, காயுவைப் பார்த்துட்டு அன்னிக்கு ராத்திரியே ட்ரெயினப் பிடிச்சு நம்ம ஆத்துக்கு வந்துடப் போறேன்.. ஒரு நாள் தானே மா, கொழந்தையும் ரயிலப் பார்த்துண்டு ஆசையாய் வரும்.. நான் மீராவையும் அழைச்சுண்டு போறேனே ம்மா.” என்றான்.
“சரி சரி டா.. எல்லாரும் பெரிவாளாயிட்டேள்.. உங்க இஷ்டத்துக்கு ஆடுங்கோ.. என்னத்தை சொல்றது?” என்றவள் “ஹ்ம்” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே, “சீக்கிரம் சாப்பிட வாங்கோ.. ஒரு வா(வாய்) சாத்தை(சாதத்தை) சாட்டுட்டு போய் ஊருக்கு வேண்டியதை அடுக்கி வைங்கோ.” என்றபடியே அடுக்களைக்குள்(கிச்சன்) சென்றார்.
அவர் சென்றதும் தன்னருகில் நின்றுக் கொண்டிருந்த பவியை அவசரமாக இழுத்தணைத்து அவளின் பட்டு கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தவுடன் தான் சாப்பிட சென்றான் கண்ணன். அதையெல்லாம் தான் இப்பொழுது கண்ணன் நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அதுவரை பழைய நினைவில் மூழ்கியிருந்த கண்ணனை, திடீரென்று கேட்ட தன் தங்கையின் குரல் தன்னிலை மீள வைத்தது.
“ம்மா சித்த சும்மா இருங்கோ.” என்று தன் அன்னையை கடிந்துக்கொண்டிருந்தாள் காயத்ரி.
“காயு” என்று அதட்டினான் கண்ணன்.
“அண்ணா, நீங்க சும்மா இருங்கோ.. என்னை பேச விடுங்கோ.. இல்லைன்னா, நம்ம அம்மா மன்னியை ஆத்துக்கே வரவிடமாட்டா..” என்றவளின் குரல் கோபத்துடன் ஒலித்தது.
தங்கை காயத்ரி எப்பொழுதுமே நியாயவாதி என்று அவனுக்குப் புரிந்தப் படியால், காயத்ரி குரலை ஒசத்தி பேசியும், அவளை அதட்டாமல், தன் அன்னையை கேள்வியாய் நோக்கினான் கண்ணன்.
காயத்ரியின் உடல் நிலையை மனதில் கொண்டு, “காயு” என்று அழைத்துக் கொண்டே அவளின் கையைப் பிடித்து அமைதியாய் இருக்கும்படி ஜாடை செய்தாள் சுமி.
“சுமிக்கா, நான் நன்னாத்தான் இருக்கேன்.. நீங்க பயப்படாதீங்கோ..” என்று தன் மன்னியின் அக்காவை சமாதனப்படுத்திய காயத்ரி, “அண்ணா, நம்ம அம்மா நோக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சாலும் வச்சுடுவாண்ணா.. ஒருவேளை அதுக்காகத்தான் அம்மா இப்படியெல்லாம் பேசிண்டிருக்காளோ, என்னமோ?” என்று கண்ணனைப் பார்த்துக் கூறியவள்,
“அம்மா இதுக்கு அண்ணா சம்மதிச்சாக் கூட, நான் ஒத்துக்க மாட்டேன் மா, மன்னியை நம்ம ஆத்துக்கு நீ அழைச்சுண்டு போலன்னா, உன் பொண்ணும் இனிமே அந்த ஆத்து வாசப் படிய மிதிக்க மாட்டாமா..”
“காயு என்னப் பேச்சுமா பேசற நீ? சித்த நாழி சும்மா இருடா கொழந்தே.. நான் அம்மா கிட்ட பேசறேன்.” என்ற கண்ணனைப் பார்த்த காயத்ரிக்கு அழுகை எட்டிப் பார்த்தது.
“அண்ணா, ம..ம..மன்னி ய விட்டுடா..தீங்..கோ.. “ என்றாள் சிறு கேவலுடன். அதைப்பார்த்துக்கொண்டிருந்த சுமிக்கும் அழுகை வந்தது.
சிறுவயதிலேயே பெற்றவர்களை இழந்த அந்த சகோதரிகளுக்கு தூரத்து உறவான மாமாவின் வீட்டில் தான் வாசம். உண்ண உணவும், இருக்க இடமும் கிடைத்தாலும், அன்பும் பாசமும் தான் கிடைக்கவில்லை சுமித்ராவுக்கும், பவித்ராவுக்கும்.
சுமி, பவியை விட ஏழு வயது மூத்தவள் என்பதால், அவள் தான் பவித்ராவிற்கு தாய், தந்தை எல்லாமும். சுமிக்கு திருமண வயது வந்ததும், மாமா அவளை கிருஷ்ணனுக்கு வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து வைத்தார்.
அவளின் திருமணம் முடிந்ததுமே பவித்ராவையும் சுமியின் ஆத்துக்கே அழைத்து செல்ல சொல்லிவிட்டார். அவர் அப்படி கூறுவதற்கும் காரணம் இருந்தது.
சுமியின் மாமாவிற்கு அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்து தருவதில் அவ்வளவு விருப்பம் இல்லை. அதனால் தன் பெண்ணிற்கு மாப்பிள்ளைப் பார்க்க தொடங்கினார். அந்த மாப்பிள்ளை தான் கிருஷ்ணன். சுமியின் மாமாப் பெண்ணைப் பார்க்க வந்த கிருஷ்ணன், அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்கு முன்னாலேயே சுமியை பார்த்ததால் சுமி தான் மணப்பெண் என்று நினைத்து விட்டார். பார்த்தவுடனேயே அவருக்கு சுமியைப் பிடித்தது.
பெண் பார்க்கும் படலத்தில் வந்தப் பெண்ணைப் பார்த்து அதிர்ந்த கிருஷ்ணன், யோசிக்க சில நொடிகள் எடுத்துக் கொண்டு, உடனேயே சுமியின் மாமாவிடம், அவர்களின் ஆத்தில் தான் வேறு பெண்ணைப் பார்த்ததாகக் கூறி அவளையே தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டு, பின் தன் குடும்பத்தினரையும் சமாதனப் படுத்தி, சுமியின் கையைப் பிடித்தார் கிருஷ்ணன். கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கும் சுமி, பவி இருவரின் அமைதியும், அழகும் பிடித்ததால், சுமியை தன் பிள்ளைக்கு கல்யாணம் செய்து வைத்து, பவியை தங்கள் வீட்டுப் பெண்ணாகவே அழைத்து சென்றனர்.
சுமிக்கும், பவிக்கும் அந்த வீட்டில் அன்பும், பாசமும் நிறையவே கிடைத்தது. பவிக்கு திருமண வயது எட்டியதும், கிருஷ்ணனின் தாய் வழி உறவின் மூலம் வந்த கண்ணனை பவித்ராவிற்கு பேசி முடித்தார்.
எல்லோருக்கும் கண்ணனையும், அவனின் தங்கை காயத்ரியையும் பிடித்த அளவிற்கு கண்ணனின் அம்மாவைப் பிடிக்கவில்லை.. இருந்தாலும், எதிலுமே நல்லதை மட்டுமே காணும் குணம் கொண்ட அந்த சகோதரிகளுக்கு கண்ணனையும் அவன் குடும்பத்தினரையும் பிடித்து விட்டது.
அதிலும் குறிப்பாக பவிக்கு, கண்ணனை மிகவும் பிடித்து விட்டதால், கிருஷ்ணனும் முழு மன நிறைவுடன் இனிதே அத்திருமணத்தை நடத்தினார்.
பவியும் புகுந்த வீட்டில் தன்னை நன்றாக பொருத்திக் கொண்டு வீட்டினர் அனைவரின் பிரியத்தையும் பெற்றது குறித்து, கிருஷ்ணன் சுமியிடம் பெருமையாக சொல்லாத நாளே கிடையாது.
மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த அவர்களின் வாழ்க்கையில் யார் கண் பட்டதோ? தெரியவில்லை.. குழந்தையையும் தொலைத்து, அடுத்து பிறக்க இருந்த வழியையும் அடைத்து விட்டதே என்று சுமி மனதிலேயே துடித்தாள். இது போதாதென்று பவியின் மாமியாரும் அவளை வீட்டுக்கு அழைத்துப் போக மறுப்பதும் சுமிக்கு மிகுந்த வேதனையை அளித்தது.
“ம்மா, இப்போ என்ன சொல்ல வரேள்?” என்ற கண்ணனின் குரலில் நிமிர்ந்த சுமி தன் கண்களை துடைத்துக் கொண்டு அவர்களை கவனிக்கலானாள்.
“அம்பி, கொஞ்சநாள் பவி அவ அக்கா ஆத்துல இருக்கட்டும் டா, நேக்கு இருக்கும் கோபத்தில் அவளை வையரச்சே(திட்டுவது) அவ உடம்பும் மனசும் ரொம்ப படுத்திடும் கண்ணா.. அதான் அவளை அவ ஆத்துக்கே அழைச்சுண்டு போக சொன்னேன்.. ஆனா அதை நேக்கு நைச்சியம்மா பேச தெரியலை.. ரொம்ப கடுப்பா பேசிட்டேன்.. என் நாட்டு பொண்ணு இங்க இருந்திருந்தா நம்ம காயு மாதிரி என்னை திட்டிருக்க மாட்டா, சிரிச்சுண்டே என்னை சமாதானப் படுத்திருப்பா..
என் குணம் கோபம்ன்னா, பவிக்கு அன்பும் சிரிப்பும் தான்.. அவ இப்படி நினைவில்லாம கிடக்கிறது நேக்கும் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு.. ஆனா, என் சொல் பேச்ச கேட்காம குழந்தையை இப்படி அழைச்சுண்டு போய் தொலைச்சுட்டேளேன்னு நினைக்கறச்சே கோபம் பொத்துண்டு வந்துறது..
நான் என்ன செய்ய? நம்ம காயு சொல்ற மாதிரி நோக்கு வேற கல்யாணமெல்லாம் பண்ற எண்ணமெல்லாம் நேக்கு இல்ல டா அம்பி.. நம்ம ஆத்து மாட்டுப்பொண்ணு பவி மட்டும் தான் டா.. பவி மட்டும் தான்..” என்று கைகளால் தன் முகத்தை மூடி அழ ஆரம்பித்தார்.
அவரை “மாமி” என்றழைத்த சுமியின் கையைப் பிடித்துக்கொண்ட கண்ணனின் அம்மா, “டி சுமி, நேக்கு கோபம் நிறய வரும்டிம்மா.. ஆனா, அது பவி வாழ்க்கையை கண்டிப்பா கெடுக்காதுடி.. “ என்றவரின் குரல் மிகவும் உடைந்திருந்தது..
சுமியும் ஒன்றும் பேசாமல் அவரின் கையைப் பிடித்து கண்ணில் ஒத்திக்கொண்டாள். காயத்ரியும் தன் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டாள். இருவரையும் ஒரு சேர தன் இருகைகளால் கட்டிக்கொண்ட அப்பெரியவருக்கு துக்கம் சிறிதளவு கூட குறையவில்லை.
"இங்க கண்ணன் யாருங்க?” என்ற குரலில் அவர்கள் அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கே போலீஸ் இன்ஸ்பெக்டருடன் ஒரு கான்ஸ்டபிளும் நின்றுக் கொண்டிருந்தனர்.
“சார், நான் தான் கண்ணன் என்ன விஷயம் சார்?”
“உங்க குழந்தையை காணோம் என்று உங்க உறவினர் கிருஷ்ணன் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரே, அது உண்மையா?”
“ஆமாம் சார், உண்மை தான்.. குழந்தைக்கு ஒரு வயது ஆகிறது சார், கொஞ்சம் சீக்கிரம் கண்டுப் பிடித்து தாங்கோ சார்.”
“நாங்களும் முயற்சி செய்துக்கொண்டு தான் இருக்கோம்.., அங்கே ஒருவர் கூட குழந்தையைப் பற்றி சொல்லவில்லை.. ஒரே ஒருத்தர் மட்டும், அங்கே பெண் குழந்தையை கையில் வைத்துக்கொண்டே ஒருவர் உதவி செய்துக்கொண்டிருந்ததாக சொன்னார்.. ஆனால் அதுவும் அந்த குழந்தை அவரோடது தானாம்..
இவர் தான் குழந்தை ரொம்ப அழுகிறாள் என்று அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்து இருக்கிறார்.. அவரிடம் விசாரிக்கலாம் என்றாலோ, அவர் யார், எவர்? என்றே தெரியவில்லை.. அவரின் முகவரியும் கிடைக்கவில்லை.. பார்க்கலாம் கூடிய சீக்கிரம் கண்டுப்பிடிச்சுடுவோம்னு நினைக்கிறேன்.., நாங்க கிளம்பறோம் சார் குழந்தை போட்டோ ஏதாவது இருந்தா எங்க கிட்ட கொண்டு வந்து கொடுங்க..” என்ற படியே அவர் இடத்தை காலி செய்தார்.
குழந்தை போட்டோ பற்றி சொன்னதும் தான் கண்ணனுக்கு தாங்கள் கொண்டு சென்ற கூடையில் மீரா குட்டியின் ஆயுஷ்ஹோம ஆல்பம் இருப்பது நினைவிற்கு வந்தது.
உடனேயே கிருஷ்ணனிடம் திரும்பி, “எங்க கூடை எங்க இருக்கு? அதுல கொழந்த போட்டோ இருக்கு.. அவா கிட்ட இப்போவே கொடுத்திடலாம்ன்னு பார்க்கிறேன்.. கூடை இங்க இருக்கா, இல்லை ஆத்துலேயே வச்சிட்டேளா?” என்றான்.
“இல்லை கண்ணா, எங்களுக்கு இருந்த பதட்டத்தில் உன்னோட பையைப் பற்றி தோணவேயில்ல, அதுல வேற ஒண்ணும்மில்லையோன்னோ?” என்ற கிருஷ்ணனைப் பார்த்து வெற்றுப்புன்னகைப் புரிந்தான் கண்ணன்.
“என் தங்கத்தையே தொலைச்சிட்டு இப்படி நின்னுண்டிருக்கேன்.. இதுல காசு பணம் போனாத்தான் என்ன?” என்று தவித்தவன், “இப்போ போட்டோ எடுக்க ஊருக்குத்தான் போணும் போலிருக்கு..” என்றவனை சுமியின் “மாப்பிள்ளை” என்ற குரல் தடுத்தது.
“மாப்பிள்ளை, நேக்கு போன் செஞ்சவர் கூடைலே இருந்த நம்பர் பார்த்து தான் செஞ்சேன்னு சொன்னார்.. பஸ்ல வந்தவாளோட சாமானெல்லாம் வெளில இருக்குன்னு சொல்லிண்டு இருந்தா.. சித்த இருங்கோ, நான் போய் பார்த்தட்டு வரேன்.” என்றவளிடம் “சுமிக்கா, வாங்கோ நானும் வரேன்.” என்று காயத்ரி கூற இருவரும் வெளியே சென்றார்கள்.
அங்கே அவர்களின் கூடை தேடிய சிறிது நேரத்திற்கெல்லாம் கிடைத்தது. பவியின் கை அலங்காரத்தில் இருந்த கூடையை உடனேயே அடையாளம் கண்டனர் அவ்விருவரும்.
உள்ளே எடுத்து வந்த கூடையில் எத்தனை முறை தேடியும் போட்டோ ஆல்பம் தவிர மற்ற அனைத்தும் இருப்பது கண்ணனுக்கு புரிந்தது.
“கிருஷ்ணன், எல்லாமே இருக்கு ஆனா, ஆல்பம் மட்டும் தானில்லை.. நேக்கு நன்னா நினைவிருக்கு, சுமிக்காக்கு ஆல்பம் காண்பிக்கனும்ன்னு சொல்லிண்டே தான் பவி ஆல்பத்தை எடுத்து வச்சிண்டா.. ஒருவேளை கொழந்தையை எடுத்தவாளே அதையும் எடுத்துண்டு போய் இருப்பாளோ? வாங்கோ நாம உடனே ஸ்டேஷன் க்கு போய் சொல்லிட்டு வரலாம்.”
“வா கண்ணா போலாம்..” என்ற கிருஷ்ணனுடன் கிளம்ப எத்தனிக்கையில் “ஏ..ண்..ணா, ந..ம்..ம கொ..கொ..ழந்..த..” என்று பவித்ரா அழைப்பது கேட்டதால் கண்ணன் பவியின் அருகே சென்றான்.
“பவிமா” என்ற படியே அவளின் கையைப் பிடித்துக்கொண்டு தலையை தடவி கொடுத்தான். தன் கணவனின் ஸ்பரிசம் உணர்ந்ததாலோ அல்லது குரலை கேட்டதாலோ, பவி மனதில் இதமாக உணர்ந்தாளோ, என்னவோ? அது அவளைப் படைத்த பகவானுக்கே வெளிச்சம். பவி சிறிது கண்ணை முழித்து கண்ணனைப் பார்த்து மிக லேசாக புன்னைகை புரிந்தவள் மீண்டும் மயக்க நிலையையே அடைந்தாள்.அவளின் நிலையறிந்து கொள்ள கண்ணன் உடனேயே டாக்டரிடம் சென்றதால், போட்டோ பற்றியும், ஸ்டேஷன் செல்வது குறித்தும் (அப்பொழுது மட்டும்) மறந்து போனான்.
கண்ணனுக்கு முழுவதுமாக குணம் அடையவில்லை என்ற காரணத்திற்காக கண்ணன் கூடவே கிருஷ்ணனும் சென்றார். அதனால் கிருஷ்ணனும் குழந்தை விஷயத்தை மறந்தார்.
இருவரும் சிறிது நேரம் டாக்டரிடம் பேசிவிட்டு பவி இருந்த அறைக்கு திரும்பும்போது பவி முழுவதுமாக மயக்கம் தெளிந்து தன் அக்காவிடம் பேசி கொண்டிருந்தாள். அந்நிலையே கண்ணனுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.
“பவி” என்று அழைத்தப்படியே அவளின் அருகில் சென்று அமர்ந்தான். பவியும் தன் கண்களால் அவனுக்கு வேறு ஏதும் அடி பட்டிருக்கா? என்று ஆராய்ந்த படியே பேசி கொண்டிருந்தாள்.
“ஏண்ணா, கொழந்தை மீரா எங்க? அவளுக்கு ஏதேனும் அடி பட்டிருக்கா? என்னண்ட எதையும் மறைக்காதீங்கோ.. நேக்கு அக்கா கிட்ட கேட்க தெம்பில்லை.. அதான் நீங்க வந்தோன்னே கேட்டுக்கலாம்ன்னு விட்டுட்டேன்.. இப்போ நீங்க சொல்லுங்கோ.. அவ..அவளுக்கு அடி ஒண்ணும் பலமில்லையே.. அவளை வேற ரூம் ல வச்சிருக்காளா? இங்க காணலியே? கொழந்தை நன்னாயிருக்காளோன்னோண்ணா? நேக்கு பயமாயிருக்கு?” என்ற பவித்ராவின் கைகளைப் பிடித்த கண்ணன், இந்த இரண்டு நாட்களாக நடந்ததை கூறினான்.
அதுவரை கேட்டுக்கொண்டிருந்த பவித்ரா, குழந்தையை காணவில்லை என்றதும் கைகளால் முகத்தை மூடி அழுதபடியே “மீரா..கு..ட்டி..மா..” என்று புலம்ப ஆரம்பித்தாள்.
“பவிமா கவலைப்படாதே, போலீஸ்ல சொல்லிருக்கு.. அவா போட்டோ கேட்டா..” என்றதும் தான் ஆல்பம் தொலைந்தது குறித்து நினைவிற்கு வந்தது.. “பவி இப்போ நாங்க ஸ்டேஷன்க்கு போய்ட்டு வந்துடறோம்..நீ உடம்ப பார்த்துக்கோ.. வாங்கோ கிருஷ்ணன் போலாம்.”
“போய்ட்டு வாங்கோ.. சீக்கிரம் கொழந்தய அழைச்சுண்டு வந்துடுங்கோ.” என்ற பவித்ராவிற்கு கண்ணனால் பதிலேதும் கூற இயலவில்லை அதனால் மெளனமாக தலையை ஆட்டியபடியே சென்றான்.
அவர்கள் ஸ்டேஷனுக்கு செல்லும்போது அவர்களின் கெட்ட நேரமும் கூட சென்றதோ என்னமோ.. அங்கே இருந்தவர்கள் அனைவருமே மிகுந்த பரபரப்புடன் இருந்தார்கள்.
கிருஷ்ணன் அவர்களின் அருகே சென்று “சார்” என்றழைத்ததற்காண எதிரொலி போலீசாரிடம் அறவே இல்லை..
மாறாக “ஆறுமுகம், சீக்கிரம் ஜீப் ரெடி பண்ணுங்க.. ஸ்டேஷன் ல இரண்டு பேர் இருந்தா போதும்.. மீதி பேர் எல்லாம் எங்களோட வந்துடுங்க.. இந்தியாவின் மொத்த பார்வையும் நம்ம ஊர் மேல தான் இருக்கும்.. இதுக்கும் மேலயும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்க கூடாதுன்னு மேல் இடத்திலிருந்து உத்தரவு.. சீக்கிரம் கிளம்புங்க..” என்ற குரலே ஓங்கி ஒலித்தது. இன்ஸ்பெக்டருடன் ஹாஸ்பிட்டல் வந்திருந்த கான்ஸ்டபிளை அடையாளம் கண்டுகொண்ட கண்ணன் அவரின் அருகிலே சென்று, “சார், ஒரு நிமிஷம்.” என்றான்.
“யாரு சார் நீங்க? யாராயிருந்தாலும் இப்போ எங்களுக்கு வேலை நிறைய இருக்கு.. சீக்கிரம் இடத்தை காலி செய்யுங்க.. போங்க..போங்க.. “ என்றார் அவர்.
“சார், என்குழந்தை காணாம போனது சம்பந்தமா பேசணும்.. கொஞ்சம் உதவி பண்ணுங்க சார் ப்ளீஸ்” என்று கெஞ்சினான் கண்ணன்.
“யோவ், உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா? இங்க எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்குன்னு தெரியாம, குழந்தை அது இது ன்னு பேசிக்கிட்டே கிடக்கிற.. போய்யா.. போ முதல்ல இடத்தை காலி பண்ணு..” என்று கோபத்துடன் பேசினார்.
“சார் ப்ளீஸ், நாங்க ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கணும்.” என்று கேட்டார் கிருஷ்ணன்.
“இங்க பாருங்கய்யா, இந்த ஸ்ரீபெரும்புதூருல பேச வந்திருந்த பெரிய அரசியல்வாதியை மனித வெடிகுண்டு மூலமா கொன்னுட்டாங்க.. இப்போ ஸ்டேட்லேர்ந்தும், சென்ட்ரல்லேர்ந்தும் நிறைய பெரிய மனுஷங்க எல்லாரும் வந்துகிட்டு இருக்காங்க.. அவங்களை பாதுகாக்கிறதுக்கும், இதுமாதிரி வேற அசம்பாவிதம் நடக்காம இருக்கிறதுக்கும் எங்களுக்கு பிரஷர் ஜாஸ்தியா இருக்கு.. இதுல நீங்க வேற வந்து உயிரை வாங்கிக்கிட்டு இருக்கீங்களே?.. போய்யா கிளம்பற வழியை பாரு..
இந்த நிலைமை சரியாக எத்தனை நாள் ஆகுமோ? உங்க கேஸ் மாதிரி இருக்கிற சின்ன கேசெல்லாம் இப்போதைக்கு மூட்டை கட்டி வச்சாச்சு.. கிளம்புற வழியைப் பாருங்க..” என்றவாறே கிருஷ்ணனின் தோளைப் பிடித்து வெளியே தள்ளினார்.
“சார்” என்று பல்லைக் கடித்து கோபப்பட்ட கண்ணனை, “என்னய்யா, என்ன? கிளம்பற வழியைப் பாருங்க” என்று அவனையும் தள்ளி விட்ட கான்ஸ்டபிள் “யோவ் 301, ஜீப் ரெடின்னு சார் கிட்ட சொல்லிட்டு கிளம்புயா.. இன்னிக்கு நாம வீட்டுக்கு போன மாதிரி தான்..” என்று புலம்பியபடியே உள்ளே சென்று விட்டார்.
கண்ணனும், கிருஷ்ணனும் மிகுந்த வருத்தத்துடன் ஹாஸ்பிடலை நோக்கி சென்றார்கள்.
கண்ணனின் மனதில் குழந்தை இப்போதைக்கு கிடைக்காது என்ற அவநம்பிக்கை தோன்றி, மனதை அரித்தது.
அதே நேரம் கோயம்புத்தூரில் இருந்த பேகம் குழந்தை மீராவை கொஞ்சி கொண்டிருந்தார். “சமீராவா நீங்க, இல்லை சமீரு குட்டியா? என் ராசாத்திய எப்படி கூப்பிட? மீரான்னே சொல்லட்டுமாடா செல்லகுட்டி? வாப்பா அடுத்த மாசம் இங்க வந்துடுவாங்க.. மீரு குட்டிக்கு நிறைய மிட்டாயெல்லாம் வாங்கியாருவாங்க.. அப்புறம் பொம்மைங்க எல்லாமும் தான்..” என்ற படியே குழந்தையின் கன்னத்திலே கன்னம் வைத்து குறுகுறுப்புட்டினார் பேகம்.. குழந்தையும் அப்பொழுதான் வளர தொடங்கியிருந்த தன் இரண்டு பற்களை காட்டி அழகாக சிரித்தது..
“மீரா கண்ணு, நீ வந்த வேளை என் வயித்துல ஏதாவது ஒரு பூச்சி, புழு உண்டாகட்டும்.. உன்னை நானே உங்கம்மா கிட்ட கொண்டு சேர்த்து அவங்க கிட்டக்க மன்னிப்பு கேட்பேண்டா குட்டி தங்கம்.” என்ற பேகத்தின் வாக்கும் பொய்த்து போனது..
அவர் எதிர் பார்த்தபடி அவர் வயிற்றில் புழு பூச்சி உருவாகவும் இல்லை.. தன் கணவனிடம் சொன்னபடி ஒரு வருடம் கழித்து குழந்தையை பெற்றவர்களிடம் ஒப்படைக்கவும் இல்லை..
அது தான் ஒரு வருடம் ஆகி விட்டதே இனி மேலும் யாரும் இவளை தேடி வரமாட்டார்கள்... நாமே குழந்தையை வச்சுக்கலாம் என்று தன்னையும் தன் கணவனையும் சமாதனப் படுத்தி அவர்களே குழந்தை மீராவை வைத்துக் கொண்டார்கள்.
குழந்தையின் பெற்றவளைப் பற்றி கவலைப் படாமல் அவர்கள் எடுத்த முடிவு, பவித்ராவின் அத்தியாயத்தையும் முடித்தது.
இது குறித்து இப்ராஹீமிருக்கோ, பேகத்திற்கோ தெரிய வந்திருந்தால், ஒரு வேளை இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்களோ? விதியின் விளையாட்டு அவனன்றி வேறு யாருக்கு தெரியும்?
 
ஆக்சிடென்ட் ஆன எவ்வளவு கஷ்டம். பாவம் பவி. என்ன ஆனது.
 
Top