Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Karisal Kaathal - epilogue

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
கரிசல் காதல் முடிவு:

தனப்பாண்டி குணப்பாண்டி திருமணம்.... நல்ல முறையில் நடந்து முடிந்திருந்தது. முகிலனும், மதியும் முன்னின்று அனைத்தையும் செய்ய..அதைப் பார்த்து அரசியே வியந்து போனார்.

“தான் அவளுக்கு செய்தது என்ன...? பதிலுக்கு அவள் செய்வது என்ன..?” என்ற கேள்விதான்... அரசியை, மதியின் பக்கம் விழ வைத்தது.மதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதே விட்டார் அரசி.

“என்ன பெரியம்மா..? எதுக்கு கண்கலங்குறிங்க..?” என்றாள் மதி.

“இல்ல மதி...! நான் உன்னை அவ்வளவு பேசியும்..கொஞ்சம் கூட முகம் சுளிக்காம..எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்ற...உனக்கு இருக்குற பக்குவம் கூட எனக்கு இல்லாமப் போய்டுச்சே மதிம்மா..” என்றார் தழுதழுத்த குரலில்.

“விடுங்க பெரியம்மா...எங்க அண்ணனுக கல்யாணம்..நான் செய்யாம, யார் செய்வா...? நீங்க எப்படி இருந்தாலும்,என் கல்யானத்துல எல்லா வேலையும் அண்ணணுக தான இழுத்துப் போட்டு செஞ்சாங்க...! அதை நான் மறப்பேனா பெரியம்மா...!” என்றாள்.

“அது என்னவோ..முதல்ல இருந்தே அவனுகளுக்கு உன்மேல ஒரு பாசம் மதி. நான் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டாணுக... சொத்துப் பிரச்சனை வந்தப்ப கூட...அவங்களுக்கு சேர வேண்டியதை குடுத்துடுங்கன்னு தான் சொன்னானுக. நான் தான் மடச்சி...கேட்கக் கூடாதவங்க பேச்சைக் கேட்டு, அறிவுகெட்டத்தனமா நடந்துகிட்டேன்..! என்னை மன்னிச்சிடும்மா..!” என்றார்.

“பழசை எல்லாம் மறந்துடுங்க பெரியம்மா..! நான் அதெல்லாம் மறக்கத்தான் நினைக்கிறேன்...நாளைக்கு நமக்கு ஒண்ணுன்னா...அந்த சொத்து சுகமா ஓடி வரும்..சொந்த பந்தம் தான் பெரியம்மா ஓடி வரும்...! எதை நினைச்சும் கவலைப் படாதிங்க..! அடுத்து நடக்க வேண்டியதைப் பார்ப்போம்..!” என்று முடித்து விட்டாள் மதி.

“சரிம்மா..! நான் போய்..நைட்டுக்கு தேவையான எற்பாட பண்ணுறேன்..!” என்றபடி சென்று விட்டார் அரசி.

அவளுக்கு அருகில் வந்த முகிலன்...

“நம்மளும் போய்..நைட்டுக்குத் தேவையான ஏற்பாட்டைப் பண்ணலாமா..?” என்றான்.

“மணி மாமா..!” என்று அவள் பல்லைக் கடிக்க... அவனோ அதையெல்லாம் சட்டை செய்யாமல்..அவளின் இதழ்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

காலையில் இருந்து..பட்டுச் சேலையில் அழகியாய் சுத்திக் கொண்டிருந்த மனைவியின் மீது..அந்த அழகனின் பார்வை விழாமல் இருந்தால் தான் அதிசயம்.

“காலையில இருந்து என்னை உன் பின்னாடியே சுத்த வைக்கிறியே...? என்னைய என்ன சொக்குப் பொடி போட்டு மயக்குனடி..?” என்றான் சரசமாய்.

அவனின் புறம் திரும்பியவள்..அவன் சட்டை பட்டனைத் திருகிக் கொண்டே...

“நான் எங்க சொக்குப் பொடி போட்டேன்..நான் தான் மயங்கிக் கிடக்குறேன்..!” என்றாள்.

“அது தான் ஊருக்கேத் தெரியுமே...?” என்ற குரல் கேட்க,

“ஏன் மாமா குரலை மாத்திப் பேசுறிங்க..?” என்றபடி அவள் நிமிர...அங்கே முத்து சிரித்தபடி நின்றிருந்தான். அவனைப் பார்த்தவுடன், முகிலனின் சட்டையில் இருந்து பட்டென்று கைகளை எடுத்துக் கொண்டாள் மதி.

“உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா..? இப்படியா நடு வீட்ல நின்னு ரொமான்ஸ் பண்ணிட்டு இருப்பிங்க...? சுத்தி இருக்குற எங்க நிலைமையும் கொஞ்சம் யோசிக்கணும். எங்க...? அதைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை...?” என்று முத்து சொல்ல...

“டேய்...! கரடி மாதிரி வந்தது நீ.. பேசுறது எங்களையா...? நாங்க சும்மாதான் பேசிட்டு இருந்தோம்....நான் என்ன இப்படி முத்தமா குடுத்துட்டு இருந்தேன்...?” என்றபடி அவள் எம்பி, முகிலனின் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு...“ம்கும்..” என்று ஒரு வெட்டு வெட்டிவிட்டு சென்றாள்.

“ஆத்தாடி...! பார்த்து கழுத்து சுளுக்கிக்கப் போகுது..!” என்ற முத்து...முகிலனைப் பார்த்து சிரிக்க, முகிலனோ..மனைவி சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சுத்தம்...” என்றான் முத்து.

“என்னடா...?” என்றான் முகிலன்.

“ஒன்னும் இல்லண்ணா..! நீங்க பாருங்க..? உங்களை யாரு கேட்பா..?” என்றான் சிரிப்புடன்.

அப்போது பார்த்து அங்கே வந்தாள் சுமதி. எதையோ எடுக்க வந்திருப்பாள் போல.

“அக்கா எங்க மாமா...?” என்றாள்.

“உள்ள இருக்காம்மா...!” என்று முகிலன் சொல்ல..முத்துவோ வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். அவனுக்கு சுமதியைப் பார்க்கவே முடியவில்லை. அவனுக்கு ஆச்சர்யம்...அவனைக் கட்டிக்கொள்ள எப்படி சம்மதித்தாள் என்று. சுமதியும் அவன் பார்ப்பான் பார்ப்பான்..என்று நின்று பார்த்தாள். கதைக்கு ஆவதைப் போல் தெரியவில்லை.

“என்னவாம்..?” என்றாள் முகிலனிடம் ஜாடையில்.

“தெரியலை..!” என்று முகிலனும் சைகையில் சொல்ல...

“முத்து மாமா..!” என்றாள். ஆனால் அவனுக்குக் கேட்கவில்லை. அவன் அந்த உலகத்தில் இருந்தால் தானே கேட்கும். அவளின் பொறுமை சில நிமிடங்களில் பறந்தது.

“யோவ் முத்து மாமா..!” என்றாள் அதட்டலாய்.

அந்த அதட்டலில்...பட்டென்று நிமிர்ந்தான் முத்து.

“என்னது யோவ்வா...?” என்றான் அதிர்ச்சியாய்.

“ஆமா..! இப்ப அதுக்கென்னா..? நானும் பார்க்குறேன்..எப்பப் பார்த்தாலும் நான் பார்த்தா..அப்படியே முகத்தைத் திருப்பிக்கிறிக..என் மூஞ்சி அவ்வளவு அகோரமாவா இருக்கு...?” என்றாள்.

“இல்லை..அப்படியில்லை...” என்று முத்து திணற... அவன் திணறலைப் பார்த்து சிரித்த முகிலன் அந்த இடத்தை விட்டு காலி செய்திருந்தான்.

“வேற எப்படி...?இங்க பாரு முத்து மாமா...நான் எங்க அக்கா மாதிரி படிக்கலை தான். ஆனா...அதுக்காக மக்கும் கிடையாது. பேசி முடுச்சு பூ வச்சுட்டாங்க...இன்னும் மூஞ்சியப் பார்க்கவே யோசிக்கிறிக...இப்படி இருந்தா..நாளைக்கு கல்யாணம் பண்ணி எப்படி குடும்பம் நடத்துவிங்க...என்ன மொதப் பொண்டாட்டியை மறக்க முடியலையா..?” என்றாள் அதிரடியாய்.

“ஐயோ..அப்படியெல்லாம் இல்ல சுமதி...!” என்றான்.

“பிறகென்ன...? எனக்கு பொறுமை ரொம்ப கம்மி. இப்படியே இருக்காதிக. எனக்கு கொறஞ்சது நாலு பிள்ளையாவது பெத்துக்கணும். கல்யாணத்துக்கு அப்பறமும் இப்படியே இருந்தா.., எங்கிட்டு இருந்து நாலு பிள்ளை பொறக்கும்...அடுத்து என்ன செய்யனும்ன்னு யோசிங்க. போனதைப் பத்தி யோசிக்காதிக...இருக்குற வாழ்க்கையும் சந்தோசம் இல்லாமப் போய்டும்..!” என்றபடி, அவனை முறைத்துப் பார்த்துவிட்டு சென்று விட்டாள்.

இப்போது திகைத்து நிற்பது முத்துவின் முறையாயிற்று. சின்ன பெண் என்று அவன் நினைத்திருக்க...அவள் போட்ட போட்டில் கதி கலங்கி நின்றிருந்தான் முத்து.

இவர்கள் சம்பாஷணையை..அறைக்குள்...முகிலனின் கையணைப்பில் இருந்து கொண்டு..கேட்டுக் கொண்டிருந்தாள் வண்ண மதி. அவளுக்கும் அதிர்ச்சி தான்.

“என்ன மாமா...? சின்னப் பிள்ளைன்னு பார்த்தா...இந்த பேச்சுப் பேசுறா..?” என்றாள் வியப்பில்.

“சுமதி பேசுறது தான் சரி. அவ முடிவுல அவ உறுதியா இருக்குறா..? உன்னை மாதிரி தத்தியாவா இருப்பா.. அவ சொன்னதைக் கேட்ட தான...நாலு பிள்ளை வேணுமாம்....நீயும் தான் இருக்க...?” என்றான்.

“வேண்டாம் மாமா...ஓவரா பேசாதிங்க..!நானா வேண்டாம்ன்னு சொன்னேன்..” என்று அவள் முனங்க...

“நீ வேனும்ன்னும் சொல்லலையே..? எப்பப் பார்த்தாலும் முகத்தைத் தூக்கி வச்சுக்க வேண்டியது...?” என்று முகிலன் சிரிக்க,

“நீங்க செய்றதுக்கு உங்களைக் கொஞ்சுவாங்களா...?” என்றாள்.

“நான் கொஞ்ச வேண்டாம்ன்னா சொன்னேன்...!” என்று அவன் இழைய..

“இந்த ஒரு மாசமும்...இதே வேலையாத்தான் திரியறிங்க...?” என்றாள்.

“அப்படி இல்லைன்னா தாண்டி தப்பு. இத்தனை வருஷத்துக்கும் சேர்த்து ஈடு கட்ட வேண்டாம்...!” என்று அவளை மீண்டும் தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தான்.

“உன்னை எப்படிப் பார்த்தாலும்....அன்னைக்குப் பார்த்த மாதிரி இல்லை..!” என்றான்.

“என்னைக்கு...?”

“அதான்...! அன்னைக்கு காலையில....நைட்டியில அரைகுறையா...” என்று அவன் ஏதோ சொல்ல வர, அவன் வாயை மூடியபடி முறைத்தாள்.

“இது எப்ப...?” என்றாள்.

அவளின் கையை எடுத்து விட்டு சிரித்தவன்...

“நிஜமா உனக்குத் தெரியாது...?” என்றான்.

“நிஜமா..!”

“சென்னைக்கு போன அன்னைக்கு...உன்னை பார்த்துட்டு போகலாம்ன்னு வெயிட் பண்ணேன். நீ வெளிய வரவே காணோம். சரின்னு வீட்டுக்கு உள்ளே வந்தேன். அம்மணி நல்லா தூங்கிட்டு இருந்திங்க....எழுப்ப மனசு வரலை. ஆனா, செம்ம போஸ்ல தூங்கிட்டு இருந்தியா...? அதான் சும்மா போக மனசு வராம..ஒரு டேர்ட்டி கிஸ் குடுத்துட்டுப் போனேன். சும்மா சொல்லக் கூடாது... அன்னைக்கு அப்படியே ஜிவ்ன்னு இருந்துச்சு..!” என்றான்.

“அப்போ...! அன்னைக்கு நான் கனவு காணலையா....?” என்றாள் வாயைப் பிளந்தபடி.

“என்னது கனவா..? மாமன் பெர்பாமன்ஸ் உனக்கு கனவு வேற மாதிரி இருந்ததா...?” என்று முறைத்தான்.

“நிஜமா மாமா...! நான் கனவுன்னு தான் நினச்சேன்..!” என்றாள்.

“நீ நினைப்படி..! உன்னையப் பார்த்துட்டுப் போய்ட்டு..திரும்பி எப்படா வருவோம்ன்னு இருந்தது. வேகவேகமா வந்தா...மேடம் காய்ச்சல் வந்து படுத்திருந்த....இதுக்கு மேல பொறுக்க முடியாதுன்னு தான்...உன்னைத் தூக்கிட்டு வந்துட்டேன்..!” என்றான்.

“அப்போ...நீங்க ஊர்லையே இல்லையா...?” என்றாள்.

“ஆமா...!” என்றவன்...

”ஏன்...?” என்றான்.

“அது...! நீங்க இங்க இருந்துகிட்டே...என்னைக் கூப்பிட்டு போகலைன்னு நினைச்சுட்டேன். உங்களைப் பார்க்காமா...எனக்கு கோபம் கோபமா வேற வந்தது. ரொம்ப அழுதேன். அதான் காய்ச்சல் வந்துட்டது. நீங்க சென்னை போன விஷயமே இப்ப தான் தெரியும்..!” என்றாள்...அவனின் அணைப்பில் நின்று கொண்டே.

“அடிப்பாவி..! அதுக்குன்னு காய்ச்சல் வர அளவுக்கா அழுவ. வந்து பார்த்த எனக்கு எப்படி இருந்தது தெரியுமா...? நீ என் சட்டையைப் பிடிச்சு கேட்டிருக்கலாம்ல..?” என்றான்.

“இப்பதான் சேர்ந்திருக்கோம்..! மறுபடியும் ஒரு பிரச்னையை ஆரம்பிக்க வேண்டாமான்னு விட்டுட்டேன்..!” என்றாள்.

“மாமன் மேல இம்புட்டு லவ்வா மதி....!” என்று மந்தகாசமாய் சிரிக்க...

“சிரிக்காதிங்க மாமா...!” என்றவளை... மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டான் மணி முகிலன்.அந்த அணைப்பில் அவனுக்கு அப்படி ஒரு நிறைவு.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு.....

அனைவரும் முகிலனின் குலசாமிக் கோவிலில் இருந்தனர். முகிலன்- மதியின் குழந்தைகளுக்கு...காதணி விழா. ரம்யா, ரக்சன் என்ற இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தாள் வண்ண மதி.

அதிலும் மூத்தவள் ரம்யா...அப்படியே முகிலனை உரித்து வைத்துப் பிறந்திருந்தாள். ரக்சன் அப்படியே மதியை உரித்து வைத்திருந்தான்.இருவருக்கும் ஒரு வருட இடைவெளி மட்டுமே.

“எங்க மதி...முகிலன் தம்பியைக் காணோம்..?” என்று பார்வதி கேட்க,

“இங்க தாம்மா இருப்பாரு...!” என்றபடி அவள் தேட, தூரத்தில் ஒரு குடத்தை..ஒரு கையால் தூக்கிக் கொண்டு வந்தான் முகிலன். வேகமாய் சென்ற பார்வதி...

“நீங்க எதுக்கு தம்பி...இதெல்லாம் பண்றிங்க...? இவளுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது...?” என்று மகளைத் திட்ட ஆரம்பித்தார்.

“நான் தான் தூக்கிட்டு வந்தேன் அத்தை. பொங்கல் வைக்க வேணும்ல. அவ ஒன்னும் சொல்லலை. இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு சட்டம்மா என்ன...?” என்றவன் அழகாய் புன்னகைக்க, அவனின் சிரிப்பையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அக்கா...! இங்க பாரு...! நிறைய வேலை இருக்கு. எங்க போனாலும்... உன் புருஷனை சைட் அடிக்கிற வேலையை மட்டும் தான் பார்க்குற...?” என்றாள் சுமதி. சுமதி இப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தாள்.

“யாரு நான் சைட் அடிக்கிறேன்..! அதை நீ சொல்லாதடி...! இந்த பிள்ளையோடயாவது நிறுத்துவிங்களா....இல்லையா...?”என்றபடி அவளைப் பார்த்து சிரிக்க,

“வாய்ப்பில்லை..! இது மூணாவது. இன்னும் ஒன்னு கண்டிப்பா பெத்துப்பேன்...!” என்றாள் சுமதி, முத்துவைப் பார்த்துக் கொண்டே.

“சொன்னா, எங்க கேட்குறாங்க மதி...? இந்த காலத்துல இத்தனைப் பிள்ளைங்க தேவையா...?” என்றார் முத்துவின் அம்மா.

“இங்க பாருங்க அத்தை..! பெத்துக்கற நானே கவலைப் படலை. நீங்க ஏன் கவலைப் படுறிங்க...?” என்றாள் சுமதி. ஏற்கனவே அவளுக்கு, அபி நந்தன், சிபி நந்தன் என்ற இரட்டை ஆண்குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்திருந்தனர். இப்போது மீண்டும் கருவுற்று இருக்கிறாள்.

“நீ சொல்லக் கூடாதா முத்து...?” என்றார் பார்வதி.

“அவளுக்கு அதான் விருப்பம்ன்னா விட்டுடுங்க அத்தை..!” என்றபடி சிரித்தான் முத்து.

“டேய்..! என்னமோ உனக்கு பங்கில்லாத மாதிரி பேசுற...கில்லாடிடா நீ..!” என்று முகிலன் சொல்லி சிரிக்க...அங்கிருந்த அனைவரின் முகத்திலும் சிரிப்பலைகள்.

ரம்யாவும், ரக்சனும்.... தனபாண்டி மடியிலும், குணப்பாடி மடியிலும் அமர்ந்திருந்தனர். சொந்தங்கள் கூடியிருக்க, நல்ல நேரத்தில் அவர்களுக்கு மொட்டை எடுத்து, காது குத்தினர்.

கொஞ்ச நேரம் அழுதவர்கள்...பிறகு சகஜமாகிவிட்டனர். குழந்தைகள் நால்வரும் விளையாடிக் கொண்டிருக்க.... முகிலனும், மதியும்...முத்துவும், சுமதியும் ஜோடியாய் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

சுமதியின் கைகளை தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்ட முத்து...

“ரொம்ப சந்தோஷமா இருக்கு சுமதி. என்னையும் மனுசனா மதிச்சு...கல்யாணம் பண்ணி...அப்பன்கிற இடத்தைக் கொடுத்து, இன்னைக்கு கவுரமா நடமாட வச்சதுக்கு..!” என்றான் கலங்கிய கண்களுடன்.

“என்ன மாமா..? இப்படி பேசுறிங்க...! வேற யாரையும் கல்யாணம் பண்ணி இருந்தாலும்...நான் இவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பேனான்னு தெரியாது. ஆனா, இப்ப சொல்றேன்..நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்...தேவையில்லாததை நினைச்சு மனசைப் போட்டுக் குழப்பிக்காதிங்க..!” என்றாள்.

முத்துவையும், சுமதியும் பார்த்து மதிக்கும் அப்படி ஒரு சந்தோசம். சில சமயங்களில், மதியே பொறாமைப் படும் அளவிற்கு இருக்கும் அவர்களின் அந்யோனியம்.

“இப்ப எதுக்குடி அவங்களை இப்படிப் பார்க்குற...?” என்றான் முகிலன்.

“எப்படி மாமா...இப்படி இருக்காங்க ரெண்டு பேரும். நம்ம கூட சில நேரம் சண்டை போடுறோம். ஆனா, சுமதியைப் பார்த்தா..எனக்குப் பெருமையா இருக்கு..” என்றாள்.

“ஒரே ஒரு விஷயம் தான் மதி. சுமதி, முத்துவை நல்லா புரிஞ்சு வச்சிருக்கா...அவனும் மனைவிகிட்ட தோத்துப் போறான். மனைவி கிட்ட தோத்துப் போற எவனும், வாழ்க்கையில் தோற்றதா சரித்திரம் இல்லை..” என்றான் மதி.

“அப்ப, நீங்க மட்டும் ஏன் அப்படி இல்லை..!” என்றபடி அவள் முறைக்க,

“ஆரம்பிச்சுட்டாடா...?”என்றவன்...

“நான் தான்..முழுசா உனக்குள்ளே வந்துட்டேனேடி..அப்பறம் எங்க இருந்து தோத்துப் போக...?” என்றான் காதலாய்.

“அது என்னவோ நிஜம் தான் மாமா...” என்றபடி... அவன் தோள் சாய...

இவர்களைப் இப்படிக் குடும்பம், குழந்தைகள் சகிதம் பார்த்த...மலர்- பெரியசாமிக்கும் சந்தோசம் என்றால், பார்வதி- மனோகரருக்கு இரட்டிப்பு சந்தோசம்.

இவர்கள் இதே மகிழ்ச்சியுடன் வாழ ...வாழ்த்தி விடை பெறுவோம்..!!!
 
Last edited:
ஹாய் பிரண்ட்ஸ்...

இது கொஞ்சம் வித்யாசமான எபிலாக். நிறைய பேர் சட்டுன்னு முடுச்சுட்டிங்க அப்படின்னு சொல்லி இருந்திங்க. அவங்களுக்காக.

படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்....அடுத்த கதையுடன்..விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்...

ப்ரியமுடன் நன்றிகள்.....
 
Top