Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
கரிசல் 15:

தன் பத்தாம் வகுப்பின் இறுதித் தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்தாள் மதி.ஏதோ உலகத்தையே வசப்படுத்திய உணர்வு.காலையில் முகிலனைப் பார்த்ததில் இருந்து அவளின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்து கொண்டே தான் இருந்தது.

அந்த ஒருவித சுகமான மனநிலையை ஒதுக்கி வைத்துவிட்டு பரீட்ச்சையை எழுதி முடிப்பதற்குள் அவளுக்குள் போதும் போதும் என்ற நிலைதான்.பேப்பரிலும் மணி முகிலனின் முகம் வந்து போக.. என்னவென்று அறியாமல் குழம்பித்தான் போனாள்.

அப்போது எல்லாம்...பிஞ்சிலேயே பழுத்த கதை எல்லாம் இல்லையே. மூக்கைத் தொடுவதற்கே தலையை சுற்றி தொட்ட காலம்..மனதில் இருக்கும் உணர்வை இனம் காணத் தெரியவில்லை அவளுக்கு.

இதுவரை பார்த்து பயந்த...பேச பயந்த ஒரு முகம்..மனதிற்குள் மீண்டும் மீண்டும் வந்து போனால் அவளும் தான் என்ன செய்வாள்.கவனத்தை சிதறவிடாமல் ஒரு வழியாக எழுதி முடித்து வெளியே வந்து விட்டாள் வண்ண மதி.

அவளின் முகத்தில் இருந்த அந்த சந்தோசம் அங்கே பலரின் முகத்திலும் இருந்தது.எதையோ வென்ற உணர்வு..ஏதோ பாதி வாழ்க்கையை கடந்த உணர்வு.பப்ளிக் எக்ஸாம் என்ற காய்ச்சலுக்கு அன்றோடு விடை கொடுத்தனர் அந்த மாணவர்கள்.

தோளில் கைப்போட்டப்டி அவர்களின் ஆராவாரம் மற்றவர்களின் காதுகளை அடைக்க செய்ய..மிச்சம் மீதி இருந்த பேனா மையும்...மற்ற மாணவர்களின் சட்டைகளில் வண்ணங்களாய் மாற...ஒருவருக்கு ஒருவர் ஓடி ஓடி..பேனா மையை சட்டையில் தெளித்துக் கொண்டிருந்தனர்.

அனைவரும் அந்த பள்ளியை விட்டு வெளியே வர...வெளியில் தன் நண்பர்களுக்காக காத்திருந்தான் முத்து.

“என்ன முத்து இங்க வந்து நிக்குற...? அதுக்கு நீ ஒழுங்கா பரீட்சையே எழுதி இருக்கலாம்..” என்று செல்வி வசை பாட...

“உன்னோட அறிவுரைக்கு ரொம்ப நன்றி.எனக்குத் தெரியும்..நான் என் தோஸ்த்களை பார்க்க வந்தேன்...உன் வேலையைப் பாரு..!” என்று பட்டென்று சொன்னான்.

“என்ன முத்து இப்படி பேசுற..?” என்று மதி கேட்க...

“இனி இப்படித்தான்..!” என்றவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு போக...

“அவனுக்கு வேற வேலை இல்லை..நீங்க வாங்கடி..!” என்று கங்கா சொல்ல..

“ஏய்..! நீங்களும் நம்ம ஸ்கூல் வரைக்கும் வாங்கடி...போயிட்டு டீச்சரை பார்த்த உடனே வந்துடலாம்...!” என்று மதி கூப்பிட...

“என்ன விளையாடுறியா மதி..! நான் தான் காலைலயே சொன்னேன் தான...? வேணுமின்னா செல்வியை கூட்டிட்டு போ..!” என்று கங்கா சொல்ல..

“மறுபடியும் பள்ளிக் கூடத்துக்கா..என்னால முடியாது...! அதுவும் அந்த டீச்சருக்கு என்னைக் கண்டாலே ஆவாது..!” என்று செல்வியும் கழண்டு கொள்ள..

“சரி..! நானே போயிட்டு வரேன்..!” என்றபடி நடந்து சென்றனர்.

இவர்களின் பேச்சை பின்னால் இருந்து முத்து கேட்டுக் கொண்டே வர..

“நான் வேணுமின்னா வரவா மதி..!” என்றான்.

“இல்லை முத்து..! வேண்டாம்.நானே போயிட்டு வரேன்..!” என்றபடி அப்போது வந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டனர்.

“நான் அடுத்த ஸ்டாப்ல இறங்கி ஸ்கூலுக்கு போயிட்டு வந்திடுறேன் கங்கா..! எங்கம்மாகிட்ட மட்டும் சொல்லிடு..!” என்று மதி சொல்ல..

“சரிடி..” என்று அவர்கள் சொல்ல..அவள் மட்டும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கினாள்.

உள்ளே நுழையும் போதே... அவளுக்கு கஷ்ட்டமாக இருந்தது.அந்த பள்ளியில் பத்தாவது வரைதான்.அதற்கு மேல் வேறு பள்ளிக்குத்தான் போக வேண்டும்.இனி இப்படி இங்க வர முடியாது என்று நினைத்தபடி டீச்சரைத் தேடி செல்ல...

“குட் ஆப்டர்நூன் டீச்சர்..!”

“வா மதி..எக்ஸாம் எப்படி எழுதியிருக்க..? ஸ்கூல் பர்ஸ்ட் வந்துடுவியா..?” என்றார்.

“ரொம்ப நல்லா எழுதி இருக்கேன் டீச்சர்.கண்டிப்பா பர்ஸ்ட் வந்துடுவேன்..!” என்றாள் நம்பிக்கையாய்.

“வெரிகுட்..” என்றபடி அவளிடம் இருந்த அந்த வருட புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார் அவர்.

“இன்னிக்கு நீங்க எக்ஸாம் ஹாலுக்கு போகலையா டீச்சர்..?” என்றாள்.

“இல்லம்மா..! இன்னைக்கு எனக்கு ஹால் இல்லை..அதான் உன்னைய வர சொன்னேன்..!” என்று பேசிக் கொண்டிருக்க..மற்ற சில மாணவர்கள், ஆசிரியர்கள் என அங்கங்கே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

“அடுத்தும் நல்லா படிக்கணும் மதி..அப்ப தான் நீ நினைச்ச மாதிரி டீச்சர் ஆக முடியும்...எப்பவும் கவனம் படிப்பில் மட்டும் தான் இருக்கணும்...!” என்று ஒரு ஆசிரியராய் அவர் அறிவுரை சொல்ல..

“கண்டிப்பா டீச்சர்...எதிர்காலத்துல நானும் கண்டிப்பா டீச்சர் ஆகிடுவேன்..!” என்றாள் முகம் முழுவதும் புன்னகையாய்.ஏனோ அந்த ஆசிரியருக்கு கூட மதியின் புன்னகை முகம் பிடித்து விட்டது போல..அவளை வாஞ்சையுடன் பார்த்து வைத்தார்.இத்தனை வருடங்களில் அவளைப் பற்றி நன்கு தெரிந்தவர் ஆயிற்றே.

அவரிடம் விடை பெற்றவள்...அங்கே மேலும் சில சகாக்களைப் பார்த்து பேசிவிட்டு,நேரம் ஆவதை உணர்ந்து கிளம்பினாள்.அவளுடைய கெட்ட நேரமோ என்னமோ..அந்த நேரத்திற்கு வர வேண்டிய பஸ்சும் வராமல் போக...மதிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

“அப்படியே நடப்போம்..பஸ் வந்தா இடையில நிப்பாட்டி ஏறிக்கலாம்..” என்று மனதில் நினைத்தவள்..அப்படியே மெதுவாக நடக்கத் தொடங்கினாள்.

அதற்காகவே காத்திருந்தவன் போல்...சைக்கிளை உருட்டிக் கொண்டே வந்தான் முத்து.

“என்ன முத்து..? இன்னும் நீ வீட்டுக்கு போகலையா..?” என்றாள்.

“எங்க போறது...! சைக்கிள் பஞ்சர் ஆகிடுச்சு..! அதான் சைக்கிள் கடைக்கு போனேன்..அங்க கடையும் பூட்டியிருக்கு.இனி நம்ம ஊரு கடைல தான் போய் வேலை பார்க்கணும்...அதான் உருட்டிட்டே போய்டலாம்ன்னு போயிட்டு இருக்கேன்..!” என்றான்.

“அச்சச்சோ..!” என்று அவனுக்காக பரிதாபப் பட்டாள் வண்ண மதி.அதைத் தாண்டி அவள் வேறு எதையும் யோசிக்கவில்லை.

இருவரும் சிறிது தூரம் அமைதியாய் நடக்க...அந்த அமைதியை விரும்பாத முத்து...

“அப்பறம் மதி..! அடுத்து என்ன செய்ய போற..?” என்றான் வாய் பேச்சாய்.

“அடுத்து என்ன செய்ய முத்து..? மேல படிக்க போறேன்..!” என்றாள்.

“மேல படிச்சு என்ன செய்ய போற...? பேசாம மத்த பொண்ணுக மாதிரி நீயும் கல்யாணம் பண்ணிக்கோ..உனக்கு பிடிச்சவனா பார்த்து...!” என்றான் கீழ் கண்ணால் நோக்கி.

“ஐய..! ஆளையும் மூஞ்சியையும் பாரு..! எல்லாரையும் மாதிரி கிடையாது இந்த வண்ண மதி.எனக்கு நிறைய படிக்கணும்...அப்பறம் பெரிய டீச்சர் ஆகணும்...நம்ம ஸ்டெல்லா டீச்சர் எப்படி சூப்பரா சொல்லித் தருவாங்க..அதே மாதிரி நானும் சொல்லித் தரனும்...” என்று அவள் பட்டியல் நீண்டு கொண்டே போக..

“போதும்..போதும்..கேட்க முடியலை..!”என்றான் நக்கலாய்.

“உனக்கு இப்ப நக்கலாய் இருக்கலாம்.ஆனா பாரு ஒரு நாள் டீச்சர் ஆகி இந்த ஊருக்குள்ள சும்மா கெத்தா நடந்து வருவேன்..!” என்ற அவள் வார்த்தைகளில் கனவுகள் மிதக்க..அவளின் முகமோ..அந்த நாளுக்கே சென்று விட்டதைப் போன்ற சந்தோஷத்தைக் காட்டியது.
“கேட்க நல்லா இருக்கு மதி...ஆனா நம்ப ஊரைப் பத்திதான் உனக்குத் தெரியுமே..!” என்றான்.

“அதைப் பத்தி எல்லாம் எனக்கு கவலை கிடையாது.எங்கம்மா என்னை கண்டிப்பா படிக்க வைக்கிறேன்னு சொல்லி இருக்காங்க..!” மதி.

“என்னவோ போ மதி...! எனக்கென்னமோ இது சரியா வரும்ன்னு தோணலை..!”

“உனக்கு சரியா வந்தா என்ன? தப்பா வந்தா எனக்கென்ன..? எனக்கு படிக்க பிடிக்குது நான் படிக்கிறேன்..!” என்றாள்.

“நான் படிக்காதவன்னு கிண்டல் பண்றியா..?” என்றான்.

“நான் அப்படி சொல்லலை.அப்படி நினைச்சிருந்தா உன்கூட பேசி இருக்கவே மாட்டேன்..!” என்றாள்.

“நீ,வா,போன்னு சொல்லாதன்னு சொன்னேன்ல காலைலயே..!”என்றான்.

“என்னால திடீர்ன்னு எல்லாம் மாத்த முடியாது..!” என்றாள்.

“திடீர்ன்னு அந்த முகிலனை எல்லாம் அன்பா பார்க்கத் தெரியுது..!”

“நான் எப்ப அப்படிப் பார்த்தேன்..?”

“காலைல பார்த்தியே..! நானும் பார்த்தேனே..!”

“இல்லை..”

“ஆமா...உண்மை...அவனும் என்னமோ அப்படி பார்க்குறான்...! முன்னாடி எல்லாம் அவனைக் கண்டாலே பயப்படுவ..? அவன் கூட பேசவே யோசிப்ப..?இப்ப என்னடான்னா..அவன் கூட சிரிச்சு எல்லாம் பேசுற..?” என்றான்.

“முத்து..அவங்க எனக்கு அத்தை பையன்..அவங்ககிட்ட எப்படி பேசாம இருக்க முடியும்..?” என்றாள்.
 
“அப்ப நான் என்ன பெரியம்மா பையனா..? நானும் அத்தை பையன் தான..?” என்றான்.

“நீ எனக்கு பிரண்டு முத்து.உன்கூட தினமும் பேச தான செய்யுறேன்..!” என்றாள் பாவமாய்.

“என்கூட மட்டும் பேசுன்னு சொல்றேன்..!” என்றான்.

“அப்படி எல்லாம் என்னால முடியாது..!” என்று அவள் சொல்ல.. அவர்களைத் தாண்டி டிவிஎஸ் பிப்டியில் சென்ற துரைப்பாண்டி அவர்களைப் பார்த்துக் கொண்டே சென்றான்.

“என்ன ரெண்டும் தனியா நடந்து வருதுங்க...! அதுவும் நல்லா இருக்குற சைக்கிளை உருட்டிகிட்டு..!” என்று யோசித்தபடி சென்றவன்...அப்படியே சென்று அவன் அம்மாவிடம் சொல்லவும் மறக்கவில்லை.

“என்னைய உனக்கு பிடிக்கலையா மதி..?” என்றன மொட்டையாய்.

“உனக்கு என்னமோ ஆகிடுச்சு முத்து.உன்னைப் பிடிக்காமத் தான் உன்கூட பேசிட்டு வரேன்னா...!” என்றாள் வெகுளியாய்.

“இப்ப முகிலன் வந்து கூப்பிட்டா என்ன செய்வ..?” என்றான்.

“அவங்க எதுக்கு இங்க வரப் போறாங்க..?” என்றாள் கேள்வியாய்.

“கூப்பிட்டா என்ன செய்வன்னு கேட்டேன்..!” என்றான்.

“தெரியலையே..கூப்பிட்டு போகலைன்னா அவங்களுக்கு கோபம் வந்துடுமே..!” என்றாள்.

“அப்ப நான் மட்டும் தனியா நடந்து வருவேன்..! நான் பாவமில்லையா..?” என்றான்.

“அட ஆமாமில்ல...! நீ தனியா வருவ..உனக்கு துணைக்கு நடந்து வரேன்னு சொல்லிடுவேன்..!” என்றாள்.

அவளின் பதில் அவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்க...சன்னமான சிரிப்பும் கூட வந்தது.

“இப்ப எதுக்கு இப்படி கேட்ட..? முகிலன் மாமா இங்க எதுக்காக வரணும்..?” என்றாள்.

“இல்ல..சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்..! மாமா மாமான்னு சொல்லாத..! எரிச்சலா இருக்கு..!” என்று அவன் சொல்லி முடிக்க..

“அப்படித்தான் சொல்லுவேன்..! மாமா..மாமா..மாமா...மணி மாமா..!” என்று அவள் மீண்டும் மீண்டும் சொல்ல..ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க மாட்டாமல்..

“நான் தான் சொல்றேன்ல....அப்படி சொல்லாதன்னு..!” என்று ஒரு கையால் அவளின் கையைப் பிடித்து திருப்ப....அந்த செய்கையில்...இருவருக்கும் இருந்த இடைவெளி சற்று குறைந்து காணப்பட...

“ஸ்ஸ்...வலிக்குது முத்து...கையை விடு..!” என்றாள்.

“விட மாட்டேன்..! விடு முத்து மாமான்னு சொல்லு விடுறேன்..!” என்று அவனும் பிடிவாதம் பிடிக்க....

“நீ முதல்ல கையை விடு..!” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க...

“கையை எடுடா முதல்ல..” என்ற குரலில் அவன் முன்னே பார்க்க..அவர்களுக்கு முன் நின்றிருந்தான் முகிலன்.

இவர்கள் பேசிக் கொண்டு வந்ததில்,...அவர்கள் ஊர் அருகில் வந்ததை கவனிக்கவில்லை.

அவளின் கையைப் பிடித்து,அவளை வேதனைப் பட வைக்க வேண்டும் என்பது முத்துவின் எண்ணம் கிடையாது.அதே சமயம்...முகிலன் முன்னால் தாழ்ந்து போகவும் அவனின் மனது இடம் கொடுக்க வில்லை.

“விட முடியாது..! என்னடா செய்வ..?” என்றான் தெனாவெட்டாய்.

“என்கிட்டயே தெனாவெட்டா பேசுறியா..? மரியாதையா சொல்றேன்..! கையை எடு..!” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

“மணி மாமா...முத்து ஒரு பிரச்சனையும் பண்ணலை...விட்ருங்க..!” என்று முத்துவுக்காக பரிந்து கொண்டு வர...முகிலன் அவளை முறைத்த முறைப்பில்...அவள் அரண்டு தான் போனாள்.

இவ்வளவு விஷயத்திலும் மதி தனக்காக பேசியதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தது முத்துவின் மனம்...அந்த எண்ணமே அவனுக்கு உற்சாகத்தை கொடுக்க...

“மதியே சொல்றால்ல...அப்பறம் உனக்கு என்ன பிரச்சனை..! அவ கையைப் பிடிச்சது அவளுக்கே தப்பா தெரியலை..உனக்கென்னடா வந்தது..?” என்று கேட்டான் முத்து.

“அடப்பாவி..! நான் எப்ப அப்படி சொன்னேன்..! முகிலன் மாமா இவன் கூட சண்டைக்கு போய்..அவனை அடிச்சிட கூடாதுன்ற நல்ல எண்ணத்துல தான் அப்படி சொன்னேன்..!” என்று மனதில் நினைத்த மதி...பயத்துடன் மணியைப் பார்க்க....அவனோ வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தான்.

“கையை எடுன்னு சொன்னேன் முத்து..!” என்றான் முகிலன் இறுதியாக. அவனுக்கும் பொறுமை பறந்து கொண்டு இருந்தது.

அவனுடைய கோபம்..முத்துவிற்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுக்க... ”எடுக்க முடியாது...இன்னும் நல்லா பிடிப்பேன்..!” என்றபடி அவள் கையை இறுக்கிப் பிடிக்க..

அவ்வளவு தான் முகிலனின் பொறுமை பறந்தோடியது.எடுடான்னு சொல்லிட்டு இருக்கேன்...மரம் மாதிரி நிக்குற..? என்றபடி அவனை அடிக்கப் போக..

“நீ அடிக்க வந்தா..என் கை பூப்பறிக்குமா..?” என்றபடி முத்துவும் சண்டைக்கு தயாரானான்.இடையில் மதி தான் மாட்டிக் கொண்டாள். முத்து இப்படி செய்வான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை. முத்துவுக்கும் இப்படி செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லை. முகிலனுக்கும் அவனை அடிக்க வேண்டும் என்ற நோக்கமில்லை.

ஆனால்...அந்த நேர ஈகோ..அந்த நேர கோபம்..அவர்களுக்குள் சண்டையை ஏற்படுத்த ..போவோர்,வருவோர் வந்து விலக்கி விடும் அளவிற்கு சென்று விட்டது சண்டை.

மதிக்கு முகம் பயத்தில் அப்பிக் கிடக்க..”வேணாம் மணி மாமா...! விடுங்க மணி மாமா..! விடு முத்து...!” என்று இருவரையும் விலக்கி விட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் முடியவில்லை.கடைசியாக முத்து துவண்டு விழ...அய்யனாராய் காலை விரித்து நின்றான் முகிலன்.

“இனி இவகூட உன்னப் பார்த்தேன்...வெட்டி பொலி போட்டுடுவேன். ஜாக்கிரதை...!” என்றவன் மதியைப் பார்க்க...அவனின் இன்னொரு பரிமானத்தைப் பார்த்த அதிர்ச்சியில் விழி விரித்து நின்றாள் வண்ண மதி.

லேசாக அரும்ப ஆரம்பித்து இருந்த அந்த உணர்வு, பயத்தின் காரணமாக உடனே பொசுங்கிப் போனது அவளுள்.

அவளின் விலகல் அவனுக்கு மேலும் துன்பத்தை தர...அந்த துன்பம் கோபமாய் மாறியது.

“இன்னேர வரைக்கும் அவன் கையைப் பிடிச்சுட்டு இருந்தான்...! அப்பல்லாம் உனக்கு இனிச்சது...நான் கோபமா பார்த்தாலே உனக்கு கசக்குதோ..!” என்று எரிந்து விழுந்தவன்...

“வாடி...!” என்றபடி அருகில் இழுத்தவன்...அவளை இழுத்துக் கொண்டு நடக்க...

“கையை விடுங்க மணி மாமா..நானே வரேன்..!” என்ற அழும் குரலில் சொல்லவும் பட்டென்று கையை விட்டான் முகிலன்.

“நீங்க முத்துவை அடிச்சிருக்க கூடாது..! பாவம் அவன் வேணுமின்னு செய்யலை..!” என்று அவள் மீண்டும் ஆரம்பிக்கவும்...

“நீயெல்லாம் இந்த ஜென்மத்துக்கு திருந்த மாட்ட..! ஒருத்தன் எதுக்கு பார்க்குறான்..! எப்படி பார்க்குறான்னு கூட தெரியாம..படிச்சு கிழிச்சு என்ன செய்ய போற...? வாய்ல நல்லா வந்துடும்..போடி..!” என்றபடி விறுவிறுவென சென்று விட்டான்.

இருவரும் மாறி மாறி பிடித்ததில்..அவள் கையே சிவந்து போயிருக்க.. பார்வதியிடம் என்ன சொல்வது? எப்படி சொல்வது..? என்று தெரியாமல் குழம்பி போய் சென்றாள்.

அவள் வீட்டிற்குள் சென்ற கொஞ்ச நேரத்திலேயே..அவள் சொல்ல அவசியமே இல்லாமல்...முத்துவின் அம்மா...விரிந்திருந்த முடியை அள்ளிக் கொண்டை போட்டபடி....முகிலனின் வீட்டிற்கு சண்டைக்கு சென்றிருந்தார்.

“ஊர்ல இருக்குறவன் எல்லாம் அடிக்கிறதுக்கா..ஒத்த பிள்ளைய பெத்து வச்சிருக்கேன்..அடிச்சவன் கை விளங்காம போக..அவன் கட்டைல போக..!” என்று அவர் ஆரம்பிக்க..சிறியதாய் முடிய வேண்டிய சண்டை..பெரியதாக உருவெடுத்தது.

அவரின் சத்தத்தில்..விஷயம் புரியாமல் மலர் வெளியே வர... ”வாம்மா..மலரம்மா..! பிள்ளைய பெத்து வையின்னா..ரவுடிய பெத்து வச்சிருக்க...உன் மகன் அடிச்ச அடியில...என் மவனுக்கு தாவாங்கொட்டை எல்லாம் வீங்கிப் போயிருக்கு...டாக்டருக்கு படிச்சா...அவன் பெரிய இவனா..?” என்று சண்டையை ஆரம்பிக்க..

“என்ன நடந்துச்சு...?” என்றார் புரியாமல்.

“அஆகா..உனக்கு உண்ணுமே தெரியாது...ஒன்னும் தெரியாத பாப்பா...ஒரு மணிக்கு போட்டாளாம் தாப்பா..! (சென்சார் மக்களே.!)..அந்த கதையாவுல இருக்கு..நீ கேக்குறது...” என்று அவர் விடாமல் பேச..

அந்த சத்தத்தில் அக்கம்,பக்கம் இருந்த அனைவரும் கூட....பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

அவர்களுக்குள் பேசிக்கொண்டனர் இப்படி...

“என்ன பிரச்சனை..?”

“முகிலன் அந்த முத்துப் பயல போட்டு அடிச்சு போட்டானாம்..!”

“அந்த மதியையும் முத்துவையும் ஒண்ணா பார்த்துட்டு அடிச்சானாம்..”

அந்த மதி புள்ள முத்துப் பையல விரும்புதாம்...அது தெரிஞ்சு அடிச்சானாம்..!”

“அவளும் முத்துவும் சோளக்காட்டுக்குள்ள இருந்து வந்தாங்களாம்..!”

“திருவிழால கூட ஒன்னாவே சுத்துனாங்கலாம்..”

“தினமும் இந்த கூத்து தான் நடக்குது போல...இன்னைக்கு துரை கூட பார்த்தானாம்...!” என்று இறுதியாக திலகாவின் வாயில் வந்து முடிந்தது.

சம்மந்தப்பட்ட மூவரும் அங்கு இல்லை.ஆனால் அவர்களுக்கு சம்மந்தமே இல்லாத விஷயங்களை எல்லாம் கோர்வையாக்கி...பின்னி முழு வடிவம் கொடுத்து....ஒரு கதையையே தயார் செய்திருந்தனர் அவ்வூர் மக்கள்.

இதை அறியாத முகிலன் அப்போது தான் வீட்டுக்கு வர....வீட்டின் முன் முத்துவின் அம்மா கத்திக் கொண்டிருப்பது தெரிந்தது.

“எதுக்கு கத்திட்டு இருக்கீங்க..?” என்றான் கோபமாய்.

“உனக்கு ஒண்ணுமே தெரியாது..!பகுமான கோழி பந்தல்ல முட்டை போட்டுச்சாம்..அந்த கதையா இருக்கு..!” என்று அவர் மீண்டும் ஆரம்பிக்க..

“கோழி எங்க முட்டை போட்டா எனக்கென்னா..?” என்றான் கடுப்பாய்.

“அவ மகன் பிடிச்சாலும் பிடிச்சான்..நல்லா வெடக்கோழியாவுல பிடிச்சு போட்டான்..!” என்று திலகா சொல்லி சிரிக்க..
“என்னம்மா பிரச்சனை..?” என்றான் மலரிடம் திரும்பி.

“நீ முத்துவை அடிச்சியா முகிலு..!” என்றார் மலர்.

“அது ஒரு சின்ன பிரச்சனைம்மா..!” என்றான் கொஞ்சம் அமைதியாக.

“எது..ரத்தம் வர அளவுக்கு அடிச்சிருக்க...அது சின்ன விஷயமா..?” என்றார் முத்துவின் அம்மா.

“அவன் மதியை கையைப் பிடிச்சான்..அடிச்சேன்..அவன்னு இல்லை வேற எவனா இருந்தாலும் அடிப்பேன்..!” என்றான் தைரியமாய்.

“ஹோ..இதுவெல்லாம் நடந்திருச்சா..!” என்று அங்கிருந்தவர்களின் வாய்க்கு அவுல் கிடைக்க...அதை சந்தோஷமாக மென்று துப்பிக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்த சூழ்நிலை முகிலனுக்கு புரியவில்லை.லேசாக ஒவ்வொரு வார்த்தையும் காதில் விழ...கேட்டவனுக்கு நெஞ்சே அதிர்ந்தது.

தன்னை அடக்கி இருந்தால்..இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதோ...? என்று முதன் முறையாக எண்ணினான் முகிலன்.

தன்னையே அடக்கத் தெரியாதவன்...எங்கிருந்து தலைவன் ஆவான்..? எங்கோ கேட்ட வரிகள்..அவன் மனதினுள்.


 
Top