Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode 3 - Unai Theendum Alaiyaai Naane

Advertisement

“அவ அவ அவசரத்துக்கு அரை நீளம் பொய் சொன்னா இவ ஏக்கர் கணக்குல அவிழ்த்துவிட்டுட்டு வந்திருக்கா. என்னால வாயே திறக்கமுடியலை. புது பிரின்ஸி முன்னால என்ன பேசமுடியும்?...” ரோஷிணி சொல்லிமுடிக்கவும்,

“ஏண்டி உன் வாய் ஒட்டே கிடக்காதா? உன்னை யார் காலையில அவங்க பாத்ரூம்ல போய் குளிக்க சொன்னா? போதாதுக்கு கந்தன் ஸார வேற மாட்டிவிட்டிருக்க...” வனமலர் பொரிய,

“ஏற்கனவே இல்லாத சேட்டையெல்லாம் செய்யறோம்னு தான் ஹாஸ்டல் ரூம்ல ஒண்ணா இருந்த நம்ம நாலு பேரையும் தனி தனி ரூம்ல வேற பேட்ச் கூட போட்டுட்டாங்க...” ராகினி சொல்ல,

“அதுக்குத்தான் அவ ரூம் பசங்களை படுத்தி வைக்கிறாளே இவ. அந்த பொண்ணுங்க இவளை பத்தி தெரியாம ஹெச்ஓடி கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுச்சுன்னு அந்த சின்னபசங்களை ரொம்பத்தான் படுத்தறா...” என சொல்லி ரோஷிணி முடித்தாள்.

இதையனைத்தையும் கேட்டும் முகத்தில் கண்டுகொள்ளா பாவனையோடு எதையோ நோட்டில் கிறுக்கிக்கொண்டிருந்தாள் நேத்ரா.

“கொஞ்சம் சீக்கிரம் எழுந்து தொலைக்கவேண்டியது தானே. லேட்டா எழுந்துட்டு இருக்கிற ஊர்வம்பை இழுத்துவிடற. கேட்டா கனவு வருது. தூக்கம் போகுதுன்னு கதை சொல்ற...”

“இங்க பாரு ராகி, எல்லாம் இவளாலதான். இவ கூப்பிட்டான்னு தான் நான் திருச்சிக்கு போனேன். அங்க போனதால தான் அந்த பழத்தையும் அவனோட பேமிலியையும் மீட் பண்ண வேண்டியதாச்சு...” ரோஷிணியை குற்றப்பார்வை பார்க்க,
“ஆஹ் படுத்துறாளே. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்டி?...” ராகினி வெடிக்க,

“நான் மட்டும் திருச்சிக்கு போகாம இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா? இல்லை நானும் தான் இப்படி கனவு கண்டு தூங்கிருப்பேனா? தூங்கினதால நம்ம பாத்ரூம் விட்டு அவங்களோடதை யூஸ் பன்னிருப்பேனா? எல்லாத்துக்கும் காரணம் ரோஸ் தான்...” என்றவள்,

“ஆனா அந்த பாத்ரூம்க்கு நம்மோடதே பெட்டர். பேசாம நம்ம பாத்ரூம்ல குளிச்சிருந்திருக்கனும் நான்...”

“தெரியுதுல அப்புறம் ஏண்டி போன?...” மலர் கத்த,

“அதான் சொன்னேனே. எல்லாத்துக்கும் காரணம் இவதான். இவ கூப்பிட்டான்னு நான் திருச்சிக்கு போய்ருக்க கூடாது...” என திரும்பவும் முதலில் இருந்து நேத்ரா தொடங்க ஹைய்யோ என்றானது மற்றவர்களுக்கு.

தன் பக்கமே சரி என சாதனையாக நின்று விதண்டாவாதம் பேசுபவளை கண்டு கொலைவெறியானது மூவருக்கும்.
“ப்ச், பழசை விடுங்க, இப்போ கந்தன் ஸார் பிரச்சனைக்கு வாங்க. இப்படி கோர்த்துவிட்டு வந்துட்டு ஒன்னும் தெரியாதவ மாதிரி இருக்கா பாரேன்...” மலர் சொல்ல,

“ஹைய்யோ அமேசான், அந்த கரண்டு தான் எல்லோருக்கும் ஷாக் கொடுக்கும். நேத்து கூட கரண்டு கம்பம் விநாயகத்துக்கு அந்த சம் தெரியலைன்னு எல்லோர் முன்னாடியும் திட்டிவிட்டாருல. இன்னைக்கு கரண்டுக்கே நான் கரண்ட் வச்சிட்டு வந்திருக்கேன். பாராட்டாம திட்டறீங்களே?...”

நேத்ரா சிணுங்கலோடு முறுக்கிக்கொள்ள அவ்வளவு தான் அத்தனை விஷயமும் மறந்து அவளை சமாதானம் செய்து மலையிறக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர்.

நேத்ரா, ரோஷிணி, வனமலர் ராகினி நால்வரும் இணைபிரியா தோழிகள். இவர்கள் கல்லூரியில் மட்டுமல்லாது ஹாஸ்டலிலும் இவர்களின் ரகளையை கூட்டி பட்டையை கிளப்பும் ரகம்.

ஹாஸ்டல் அறையில் இவர்கள் அடிக்கும் கொட்டம் தாளாது அனைவரையும் வேறு வேறு அறைக்கு மாற்ற அப்போதும் தங்கள் வால்தனங்களை கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அரங்கேற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

நேத்ராவிற்கு சற்றும் குறையாதவர்கள் தான் மற்ற மூவரும். ஆனாலும் பல நேரங்களில் வெளியில் தெரியாமல் அடக்கி வாசிப்பனர்.

மூவரையும் கெஞ்ச விட்டு கொஞ்சலில் இறக்கி அதில் கொஞ்சம் மிதந்து தவழ்ந்து தரையிறங்கியவள் புன்னகைத்தாள்.
“ஹப்பாடா, மனசிறங்கிட்டியா ஆத்தா. உன்னை வச்சிக்கிட்டு எங்களால ஒரு ஆணியும் புடுங்க முடியாது போலடி...” என வனமலர் சலிக்க,

“நாளைக்கு கந்தன் ஸார் கிளாஸ் இருக்கு தெரியும்ல. என்ன சொல்லி சமாளிக்க? எதாச்சும் ஐடியா குடுங்களேன்...” ரோஷிணி யோசனையாக கேட்க,

“இது என்ன பெரிய மேட்டர் க்ளாஸ் கட்டடிச்சிட வேண்டியது தான். கூழ்வண்டி கேண்டீன்ல நாளைக்கு என்ன ஸ்பெஷல்னு கேட்டு சொல்லேன்?...” நேத்ரா சொல்ல,

“அடிச்சேனா பாரு. ஏற்கனவே அவரை சிக்கவச்சிட்டு இப்போ அடுத்த ஆட்டமா? கொன்னுடுவேன். அவர்க்கிட்ட எக்ஸ்க்யூஸ் கேட்டுடுவோம்...” ராகினி சத்தம் போட நேத்ரா எதுவும் கண்டுகொள்ளவில்லை.

“இவளை திருத்தவே முடியாது...” என தலையில் அடித்துக்கொண்டு மற்ற மூவரும் அவளோடு அமர்ந்தனர்.

மறுநாள் வழக்கம் போல நேத்ராவின் சிலபல ஆர்ப்பாட்டத்துடன் ஹாஸ்டலில் இருந்து கல்லூரிக்கு வந்தவர்கள் சரியாக கந்தன் ஸாரின் வகுப்பு நேரத்தில் விட்டேனா பார் என்பது போல மூவரையும் இழுத்துக்கொண்டு கேண்டீனுக்கு வந்துவிட்டாள்.

“ஆனாலும் உனக்கிருக்கிற கொழுப்பு இருக்கு பாரேன். உடம்பு முழுக்க திமிர்டி...” என ராகினி அவளை சீண்ட சுடிதாரின் காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள் நேத்ரா.

“ஆண்ட்டி பேசினாங்களாம் அம்மாக்கிட்ட. நேத்து வீட்டுக்கு பேசினியா நீ?...” என ரோஷிணி கேட்க,

“ஆங் ஆங் எல்லாம் பேசினோம். பேசினோம்...” என சொல்லி,

“என்ன சொல்றாங்களாம் மிஸ்டர் & மிசஸ் ஆண்டாள்?. என்னை பத்தி வழக்கம் போல கம்ப்ளைண்டா?...”
ஆனியன் சமோசாவை வாயில் திணித்துக்கொண்டே நேத்ரா பேச,

“ஒழுங்கா அம்மான்னு சொல்லேன்டி. பாவமில்லையா அவங்க...” மலர் கண்டிக்க,
“அப்போ நான் பாவமில்லையா?...” முகம் கசங்க கேட்ட நேத்ராவின் குரலில் இருந்த சோகம் மற்றவர்களை கவ்விப்பிடிக்க நொடியில் முகத்தை மாற்றிக்கொண்டாள் அவள்.

“இதை சொல்லத்தான் ஆண்டாளு உங்க வீட்டுக்கு போன் பண்ணினாங்களா?...” நொடியில் அலட்சியம் விரவிய வார்த்தைகளால் கேட்க,

“முந்தாநாள் அக்கவுண்ட்ல இருந்து ஏழாயிரம் எடுத்திருக்க. எதுக்குன்னு ஆண்ட்டிகிட்ட சொல்லலை. அவங்க கேட்டதுக்கு சொல்லமுடியாதுன்னு வேற எடுத்தெறிஞ்சி பேசிருக்க. யாருக்கு பணம் குடுத்த?...”

உட்சபட்ச கண்டிப்போடு ரோஷினி கேட்க நேத்ராவின் முகத்தில் எரிச்சல் படர்ந்தது.
“இதென்ன இன்வெஸ்டிகேஷன் டைமா? நேத்தே கேட்கிறதுக்கென்ன?...”

விட்டேத்தியாக நேத்ரா கூற மற்ற இருவரும் ரோஷிணியின் கோபத்தில் அமைதியாக இருந்தனர்.
“அதான் இப்போ கேட்கிறேனில்ல. பதில் சொல்லு நேத்ரா...”

“நம்ம க்ளாஸ் ஆனந்த் அவசரமா பணம் வேணும்னு கேட்டான். அதான் எடுத்துக்கொடுத்தேன்...” என தோளை குலுக்க,
“அவனுக்கு என்ன அவசரமாம்? உன்கிட்ட எதுக்கு கேட்கனும்?...” மலர் படபடக்க,

“அதைப்பத்தி நான் கேட்கலை. எனக்கு தெரிஞ்சிக்கனும்னு இல்லை. இது ஒரு ஹெல்ப். அவ்வளோதான்...”
ரோஷிணியின் கோபத்துக்கு சற்றும் குறைவில்லாத காரத்தோடு இருந்தது நேத்ராவின் பதில்.

“உனக்கு பலதடவை சொல்லிட்டேன் நேத்ரா. இப்படி பணத்தை குடுத்து பழக்காதேன்னு. அவனுக்கென்ன ஹெல்ப் பண்ண ஆளா இல்லை...” ராகினி கூற,

“இப்போ உனக்கு என்ன பிரச்சனை? நான் பணம் குடுத்ததா? இல்லை ஆனந்துக்கு குடுத்ததா?...” என கூர்மையாக கேட்க ராகினி கப்சிப்.

“ஓகே, லீவ் இட். நீ ஹெல்ப்பிங் மைண்டோட பணம் குடுத்த. இப்போ அது பிரச்சனை இல்லை. அதை ஆண்ட்டிக்கிட்ட ஏன் சொல்லலை?...” ரோஷிணி கேட்க,

“ஏன் சொல்லனும்? எதுக்கு சொல்லனும்?...” என வெகுண்டவள்,
“ப்ச், விடேன்டா ரோஷிணி. எனக்கு சொல்லனும்னு தோணலை...” என இறைஞ்சுதலாக பேச அவளின் முக மாறுதலில் அவர்களுக்குள் மௌனம் ஒட்டிக்கொண்டது.

சில நொடி நிசப்தத்தை கூட பொறுத்துக்கொள்ளமுடியாத நேத்ரா,
“அடடா இதுக்கா கிளாஸ் கட் அடிச்சிட்டு நாம இங்க வந்திருக்கோம். உங்களை வச்சிட்டு ஒரு சமோஸா நிம்மதியா சாப்பிடமுடியுதா?...” என கேலிகுரலில் கூற அவளுக்காகவே தங்களை வலிய இயல்பாக்கிக்கொண்டார்கள் அந்த ஆருயிர் தோழிகள்.

“ஆமா நாங்களும் உன்னோடவே தானடி சுத்திட்டு இருந்தோம். நீ எப்போ அந்த சோடாபுட்டிக்கு பணம் குடுத்த?...” மலரின் கேள்வியில்,

“அது ரகசியம். வலது கை குடுக்கிறது இடதுகைக்கு தெரியக்கூடாதாம். அதுவும் இல்லாம அவன் என்கிட்டே பணம் வாங்கினான்னு நான் பெருமையடிச்சுக்கவா? ஹெல்ப் பன்றது அவங்களுக்கு மட்டும் தெரிஞ்சா போதும்...”
கழுவுகின்ற மீனில் நழுவுபவளாக பேச,

“எல்லோரையும் ரொம்ப ஈஸியா நம்பிடாதே நேத்ரா. எந்த இண்டேன்ஷனோட அவன் உன்கிட்ட பேசறானோ?...” என ராகினி இழுக்க,

“இண்டேன்ஷன் இல்லாத ஆளுங்கன்னு இந்த உலகத்துல யாருமில்லை ராகி. உன்னையும் சேர்த்துதான் சொல்றேன்...” என சுருக்கென நேத்ரா கூற தலைகவிழ்ந்தாள் ராகினி.

இவளுக்கு தேவையா இது என ரோஷிணியும் மலரும் முறைக்க நேத்ராவின் தலைக்கு பின்னால் கேட்ட,
“ஹலோ...” என்ற குரலில் தூக்கிவாரிப்போட திரும்பினாள்.

அங்கே ரிஷிவந்த் முறைப்போடு நின்றிருந்தான். அவனை பார்த்து தலை சுற்ற அவளின் வாய் அவளறியாமல்,
“அம்மாடியோவ் பழம்...” என அலறியேவிட்டது.

அவளின் அலறலில் மற்ற மூவரும் நேத்ராவை பார்க்க அவள் இவர்களிடம் திரும்பி,
“அவனே தாண்டி. தம்பி தங்கதுரைக்கு இங்கென்ன வேலை?...” என கூறியபடி அவனின் பின்னால் பார்வையை ஓட்டினாள்.
“நல்ல வேலை ஃப்ரூட் ஃபேமிலி வரலை...” என நிம்மதிகொள்ள அவன் இவளை நோக்கி வந்துகொண்டிருந்தான்.
அலை தீண்டும்...
Nice
 
Top