Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Daisy maran's Neethaan Enthan Anthaathi

Advertisement

daisemaran

Well-known member
Member
வணக்கம் நட்புக்களே...

நான் உங்கள் டெய்சி மாறன். நான்கு வருடமாக நாவல்கள் எழுதிகொண்டிருக்கிறேன். ஆனால் போட்டிக்கென்று எழுதுவது இதுதான் முதல் முறை. உங்களுடைய ஊக்கத்தையும், ஆதரவையும் எனக்கு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என் கதையின் பெயர்
"நீதான் எந்தன் அந்தாதி ...!"

நன்றி...வணக்கம்.

நாவல்

“நீதான் எந்தன் அந்தாதி ...!”

அத்தியாயம்-1

மகாபலிபுரம்.

சுமார் எட்டு வருடத்திற்கு பின்பு அந்த ஊரில் காலடி எடுத்து வைக்கிறாள் அபிநயா. குண்டும் குழியுமாக இருந்த சாலையைத் தவிர மற்ற எல்லாமே முற்றிலுமாக மாறியிருந்தது.

சாலையின் இருபுறமும் திருவிழாவில் முளைக்கும் திடீர் கடைகள் போல புதிது புதிதாய் தோன்றியிருந்த கடைகளும். அதிகப்படியாக வாகனங்களும் மனிதர்களும் அதிகரித்திருந்தார்கள்.

தான் வந்த அரசாங்க வாகனத்தை ஒரு இடத்தில் நிறுத்தச்சொல்லி விட்டு இறங்கி கொண்டாள். கூடவே இறங்கிய டிரைவரை கையமர்த்தி தேவை என்றால் கூப்பிடுகிறேன் சண்முகம். என்று சொல்லிவிட்டு, சுமார் இருபதடி தூரம் நடந்து சென்றவள் சாலையில் போன ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டாள்.

"எங்கம்மா போகணும்?" ஆட்டோகாரர் தலையை திருப்பி கேட்க,

"பீச்சுக்கு போங்க..."

"இந்த நேரத்துக்கா? அம்மா... வெயில் மண்டைய பொளக்குதே! அங்கெல்லாம் இந்த நேரத்துக்கு யாரும் போகமாட்டாங்க வெயில் தாழ்ந்துப் போனிங்கன்னா நல்லா இருக்கும்."
அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே தோள்களை குலுக்கி விட்டு ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணினான்.
பத்து நிமிடப் பயணத்திற்குப் பிறகு அலைகளோடுக் கூடிய கடல் தென்பட்டது.

“இங்கேயே நிறுத்திக்குங்க இறங்குகிறேன்.”
அவளை வினோதமாக பார்த்தபடி அவள் கொடுத்த காசை வாங்கிக்கொண்டு கிளம்பினான் ஆட்டோகாரன்.

கடலை நோக்கி நடந்தாள். சுள்ளென்று வீசிய கடும் வெப்பத்தையும் தாண்டி சில்லென்ற காற்று அவள் உடலை தழுவிச்சென்றது. லேசான சிலிர்ப்போடு புடவை முந்தானையை இழுத்து போர்த்திக் கொண்டாள்.
கடல் அருகில் வந்து ஈர கரையில் நின்றபடி அலைகளை வெறித்துப் பார்த்தாள். எப்போதுமே கடல் புனிதமானதுதான் மாசுமருவற்று இருக்கும். மனிதர்களைப் போல அவ்வப்போது தன் குணங்களை மாற்றிக் கொள்வதில்லை. கடல் எப்போதும் தன் இயல்பிலிருந்து மாறாமல் ஒரே மாதிரியான குணத்தோடு தான் இருக்கிறது. ஆனால் இந்த மனிதர்களோ...எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இடத்திற்கு தகுந்தமாதிரி மாறும் பச்சோந்தியைப்போல மனிதர்கள் தன் குணத்தை மாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள். அதுமட்டுமல்ல தன்னை நம்பியவர்களுக்கு துரோகம் பண்ணுகிறார்கள், நம்ப வைத்து கழுத்தை அறுக்கிறார்கள், ஒருவருக்கொருவர் பொறாமை, பழிவாங்கும் குணம், விட்டுக் கொடுக்காத தன்மை இன்னும் பல...பல...குணங்கள் இந்த பாழாய்ப் போன மனித இனத்திற்கு மட்டுமே இதெல்லாம் படைக்கப்பட்டு இருக்கிறதே.

காலணிகளை கழற்றி விட்டு விட்டு வெற்றுப்பாதத்தோடு நடந்தாள். கடல் ஓரத்து நண்டுகள் தன் வளையிலிருந்து வெளியில் வருவதும் அனல் காற்றுக்கு பயந்து திரும்பவும் வலைக்குள் நுழைந்து கொள்வதுமாய் அவற்றின் செயல் ரசிக்கும்படியாக இருந்தது. சற்று தூரம் நடந்தவளுக்கு எங்கோ தூரத்தில் உலர வைக்கப்பட்டிருந்த கருவாட்டின் மணம் நாசியை தடவிச்சென்றது.
முன்பானால் இந்த வாசனை வயிற்றை குமட்டிக்கொண்டு வரும். இப்போதெல்லாம் அப்படியில்லை. இவள் முகம் சுளிக்கவில்லை. காரணம் இந்த சுவை அவனுக்கு அதாவது அந்த வேழவேந்தனுக்கு மிகவும் பிடித்த உணவு. அதனாலொ என்னவோ அந்த வாசனையை பல வருடங்களுக்கு முன்பே பழகிக்கொண்டிருந்தாள்.

"கீரை கடைசல் கருவாட்டுத் தொக்கு இதை எங்க அம்மாவின் கையில் சாப்பிடுவதற்கு கொடுத்து வச்சிருக்கணும் அபி. அதற்கு இணை இந்த உலகத்துல வேற எதுவுமே இல்லை." என்று ஒருமுறை சொன்னான்.

"ஓ!... அப்படியா?"

"ஆமா... நீ எங்க வீட்டுக்கு மருமகளா வந்த பிறகு இதெல்லாம் சமைக்க பழகிக்கணும். புரியுதா? ‘நான் சாப்பிட மாட்டேன். எனக்கு இதெல்லாம் சமைக்க தெரியாது.’ அப்படின்னு எதையாவது சொல்லி மறுக்க கூடாது. ஏன்னா நான் ஒரு சாப்பாட்டு ராமன்." என்று சொல்லிவிட்டு உரக்க சிரித்த அந்த முகம், சிரிக்கும்போது பளிச்சிட்ட வெண்ணிற பற்கள் இன்றும் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது.

சைவக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் காதலனுக்கு பிடித்த உணவை சமைக்க பழகிக்கொள்ளவேண்டும் என்ற முடிவோடு,

"வேறு என்னென்ன உணவெல்லாம் உங்களுக்கு பிடிக்கும்?"

“அது பெரிய லிஸ்டே இருக்கு...’தக்காளி ரசம் என்றால் பொரித்த மீன்’, ‘மிளகாய் கிள்ளிப்போட்ட தண்ணி சாம்பாரு நெத்திலி கருவாடு ப்ரை, ‘மிளகுத்தூள் தூங்கலாம் போட்ட மட்டன் குழம்பு கோஸ் பொரியல்..." என்று அடுக்கிக் கொண்டே போனான்.

இவள் ஆச்சரியத்தோடு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் ஆசைப்பட்டதை எல்லாம் சமைத்துப்போட பழகிக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தாள்.

அவனைப் பார்க்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் கல்லூரியை கட் அடித்துவிட்டு மகாபலிபுரம் வந்துவிடுவாள். அவனும் கடைப்பையனிடம் கடையை ஒப்படைத்துவிட்டு தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு வந்து அவள் வரும் வழியில் காத்திருப்பான். யாராவது பார்த்து விட்டால் என்ன பண்ணுவது என்ற பயத்தில் துப்பட்டாவால் முகத்தை மூடியபடி இரண்டு பக்கமும் இரண்டு கால்களைப் போட்டு அவனை கட்டித் தழுவிக்கொண்டு பைக்கில் செல்வது அபிநயாவுக்கு மிகவும் பிடிக்கும்.
அபிநயாவை பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவன் முகத்தில் பல்பு ஒளிரும். அதிக ஆர்வத்தோடும் ரசனையோடும் அவளிடம் பேசுவான். நீ கிடைத்தது நான் செய்த புண்ணியம் என்பான். அபிநயாவுக்கோ அவனை விட்டு விலகவே மனசு வராது. ஒவ்வொரு முறையும் விருப்பம் இல்லாமல் தான் விடைபெற்றுச் செல்வாள்‌. இருவருக்குள்ளும் புரிதலோடு கூடிய அழகான காதல் உருவாகியிருந்தது. தங்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டுதான் பழகினார்கள். அதுவும் அபிநயாதான் சற்று நெருக்கமாக பழகினாளே தவிர வேழவேந்தன் எப்பொழும் ஒரு கண்ணியத்தோடுதான் பழகினான்.
இதுவே அபிநயாவுக்கு அவன் மேல் ஆழமான காதலை உருவாக்கிவிட்டிருந்தது. சில நேரங்களில் அவனை ஒட்டி உரசி பேசும்போது,

“எனக்கு மட்டும் ஆசை இல்லாமல் இல்லை அபி, ஆனால் பெரியவர்கள் திருமணம் என்ற ஒரு சம்பிராயத்தை எதற்காக வைத்திருக்கிறார்கள் தெரியுமா? எதெது எப்போப்போ நடக்கனுன்னு கால நேரம் இருக்கு. அதெல்லாம் நம்மைப்போல் இளசுகளின் மனம் தடுமாறி தப்பு செய்துவிடக்கூடாது என்பதற்காதான். நீ என்னை இப்படி சோதித்தால் அப்புறம் தவம் கலைந்த விசுவாமித்திரர் நிலைதான்.” என்றான்.

நினைவுகளை மனம் அசைபோட்டது.
வெயிலின் தாக்கம் குறைந்து கடற்கரை வெப்பத்தில் ஈரம் பரவத்தொடங்கியது. எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்பதற்காக தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்தாள் அபிநயா.

இதே கடற்கரையில்தான் அவனை முதல் முதலில் சந்தித்தாள். அந்த இனிமையான நினைவுகளுக்குள் மனம் சென்றது.

அது ஒரு மாலை நேரம் மணி 5:௦௦ மகாபலிபுரம் கடற்கரை.
அந்த அழகான கடற்கரையை பார்த்தோமா! அழகை ரசித்தோமா! ஆசைக்கு ஒரு முறை கால்களை நனைத்தோமா! என்று அத்தோடு திரும்பி இருக்கலாம். அதை விட்டுவிட்டு சிறு வயதிலிருந்து பத்தொன்பது வயதாகியும் நிறைவேறாத ஆசையை நிறைவேற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே என்று எண்ணியதுதான் தப்பாகி போனது அபிநயாவுக்கு.

அபிநயாவும் நினைவு தெரிந்த நாட்களிலிருந்து அப்பா அம்மாவுடன் பீச்சுக்கு வந்தால் இவளுடைய கைகளை ஆளுக்கு ஒருவராக பிடித்துக் கொண்டுதான் வருவார்கள். கடல்நீரில் கால் வைக்கக்கூட இவளை அனுமதித்ததில்லை.
'வேணாம் சளிப்பிடிக்கும் கிட்ட போக வேண்டாம் கடலலை இழுத்துடும்.' என்ற குரல்களை தான் அதிகமாக கேட்டிருப்பாள். போதாக்குறைக்கு தெருவில் போன ஒரு கிளி ஜோசியக்காரனின், 'இந்தப் பொண்ணுக்கு தண்ணில கண்டம் இருக்குங்க' என்று சொன்ன சொல்லையே தேவ வாக்காக பிடித்துக் கொண்டாள் அம்மா.

போன வருடம் குற்றாலம் போனபோது கூட குளிக்க விடாமல் இழுத்து வந்த பெற்றோர்களை எண்ணி அழுவதா கோபப்படுவதா? என்று புரியாமல் தடுமாறினாள்.
ஆனால் இன்று அப்படிப்பட்ட எந்த தடையுமில்லை. ஆறு மணி வரை ஆசை தீர கடலில் குளிக்கலாம். அலைகளோடு விளையாடலாம். ஏனென்று கேட்க ஆளில்லை.

“ ஏய்...அபி ஷார்பா ஆறு மணிக்கு பைய்ரதாஸ் கிட்ட வந்துடு.” என்ற கண்டிஷனோடு அனுப்பி வைத்திருந்தாள் தோழி மேகலா.

மேகலாவை பற்றி சொல்ல வேண்டுமென்றால், மேகலா அபிநயாவின் நெருங்கிய தோழி இருவரும் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் வருடம் படிக்கும் மாணவிகள். மேகலாவின் அம்மாவுக்கு பிளட் கேன்சர் இருந்ததால் இரண்டு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார்கள். தாயை பிரிந்த துக்கம் மேகலாவை அதிகம் பாதித்துவிட்டது.கல்லூரிக்கு’ கூட வர பிடிக்காமல் அறையிலே அடைந்து கிடந்தாள். அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக்கொண்டிருந்த நிலையில், பிடித்த பிடியாய் மூன்று மாதத்திற்குள் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று ஒத்த காலில் நின்றார் மேகலாவுடைய அப்பா.

ஒருவழியாக மாப்பிள்ளையும் கிடைத்தார். எங்கேஜ்மென்ட் முடிவானது. அதே தேதியில் உறவுக்காரரின் திருமணம் இருந்ததால் அபிநயாவால் மேகலாவின் எங்கேஜ்மென்ட் போக முடியவில்லை.
வர முடியவில்லையே என்று சாரி சொல்வதற்காக கால் பண்ணினாள் அபிநயா.

“உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும் உடனே வீட்டுக்கு வா..” என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டாள் மேகலா.

எப்படியோ அப்பா அம்மா கிட்ட பர்மிஷன் வாங்கித் கால்டாக்ஸி புக் பண்ணி மேகலா வீட்டுக்கு வந்தால் இங்கே நிலைமை தலைகீழாக இருந்தது.
நிச்சயம் பண்ணின கல்யாணம் நின்று போய்விட்டது என்று பெரிய குண்டை தூக்கி போட்டாள் மேகலா.

“என்னடி சொல்றே...?” என்று இவள் அதிர்ச்சியோடு கேட்க,

“அது சம்பந்தமாக டீடெய்லா பேசணும் என்கூட மகாபலிபுரம் வரைக்கும் வா...” என்றாள்.

“இல்லை...முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு அதுக்கு அப்புறம் வரேன்.”

“சொல்லுறேன்...அம்மாவுக்கு பிறகு நானும் அப்பாவும்தான். நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டா அவர் பாடு என்ன ஆவுறது? அதற்காகத்தான் வீட்டோடு மாப்பிள்ளையா பார்த்தோம். முதலில் சம்மதிச்சவர்கள் பிறகு முடியாது. என்று மறுத்துவிட்டார்கள். அப்படியென்றால் கல்யாணத்தையும் நிறுத்திவிடுங்கள் என்று நான் எங்கள் உறவுக்காரர்களிடம் சொன்னது எப்படியோ அவர்கள் காதுக்கு எட்டிவிட்டது. கல்யாணத்தையும் நிறுத்திவிட்டார்கள். நிச்சயம் பண்ணின கல்யாணம் நின்றுப்போனால் பாக்குறவங்கள் பலவிதமா பேசுவாங்கன்னு அந்த கவலையிலே அப்பா படுத்த படுக்கையாகிவிட்டார். நான் மாப்பிளைக்கு கால்பண்ணி பேசினேன். அவர் சொல்லித்தான் என்ன நடந்தது என்பதே எனக்கு புரிந்தது.

அதாவது பொண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று தவறாக யாரோ அவரிடம் சொல்லிருக்கிறார்கள். அதை கேட்டுக்கொண்டுதான் அவரும் இதற்குமேல் இந்த கல்யாணம் வேண்டாம். என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். ஒரு முறை நேரில் சந்திச்சி பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார். அதனால்தான் உன்னை துணைக்கு அழைத்தேன்.

“ஆனால்...வேறு எங்காவது போகலாமே? மகாபலிபுரம் எதுக்கு?” என்று இவள் எவ்வளவு கேட்டும் பதில் சொல்லாமல்,

“வருவியா... வரமாட்டியா...?” என்று கோபத்தோடு கேட்டவளுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் உடன் கிளம்பினாள் அபிநயா. அங்கே தனக்கு நிச்சயம் பண்ணின மாப்பிள்ளை இவர்தான் பெயர் குமரேசன் என்று ஒருவரை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

“கல்யாணம் நின்று போயிடுச்சுன்னு சொன்னேன்ல அது சம்பந்தமாக பேசத்தான் இவர் இங்கே கூப்பிட்டார். நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கோம். நீ வேணா கொஞ்ச நேரம் சிற்பங்களையும் கடற்கரையையும் சுத்தி பார்த்துட்டு ஷார்ப்பா ஆறு மணிக்கு இந்த ஃபைவ்ரதாஸ் கிட்ட வந்துடு என்று சொல்லி அனுப்பி வைத்தாள் மேகலா.
சிவபூஜை கரடியாக நாம ஏன் அங்க இருக்கணும் என்று எண்ணிய அபிநயா,

“சரிடீ...ஆறு மணிக்கு இங்கே வந்துடுறேன். என்று கையசைத்துவிட்டு நேராக கடற்கரைக்கு வந்து சேர்ந்தாள்.

மாலை 5 மணி..
இளஞ்சூடான அலைகளில் கால் நனைத்த போது இதமாக இருந்தது. வெள்ளிப் பாளங்களாய் ஏறி இறங்கிய அலைகளை பார்த்தவளுக்கு இன்னும் சற்று ஆழம் சென்று கடல் நீரில் குளிக்க வேண்டுமென்ற ஆசை தோன்றியது. சிறுவயதில் அப்பா அம்மாவின் கட்டாயத்திற்காக கற்றுக்கொண்ட நீச்சல் நினைவுக்கு வர, பயம்மெல்லாம் ஒன்னுமில்லை. அப்படியே அலை இழுத்துக்கொண்டு போனாலும் கத்துக்கொண்ட நீச்சல் கைகொடுக்கும். என்ற தைரியத்தில் தோளில் இருந்த துப்பட்டாவை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் இறங்கினாள். ஆனால் அபிநயா நினைத்தது போல் நடக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்பு விருப்பமில்லாமல் அரைகுறையாக கற்றுக்கொண்ட நீச்சலை கிட்டத்தட்ட அவள் மறந்தே போயிருந்தாள்? அல்லது விருப்பமின்றி கற்றுக்கொண்டதால் மனதில் பதிய வில்லையோ? என்னவோ புரியவில்லை. எப்படியோ ஆபத்தில் கூட அது கை கொடுக்கவில்லை. என்பதுதான் நிதர்சனமான உண்மை.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஆண் அலை, பெண் அலை, என்று மாறி மாறி வந்து மொத்தமாய் அவளை சுருட்டிக்கொண்டு சென்ற போது அப்பா அம்மாவின் பேச்சை கேட்காதது தப்போ? என்று தோன்றியது. நினைக்காமலே கண்முன்னால் வந்துப்போனான் அந்த கிளி ஜோசியக்காரன். மூக்கு வழியாகவும் வாய் வழியாகவும் சுவாசிக்க முயற்சி செய்து பதிலுக்கு தண்ணீரை குபு குபு என்று குடித்து நிலைதடுமாறி நினைவிழக்கும் முன் அந்த கடைசி நிமிடம் அவள் தலைமுடியை கொத்தாக பற்றி யாரோ மேலே இழுத்தது போல் தோன்றியது. அதுதான் அவளுக்கு நினைவு இருந்த கடைசி நிமிடங்கள்.

தொடரும்...
 
Last edited:
உங்களுடைய "நீதான் எந்தன்
அந்தாதி"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
டெய்சி மாறன் டியர்
 
Last edited:
Top