Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

7. Ivan Vasam Vaaraayo!

Advertisement

Annapurani Dhandapani

Well-known member
Member
7.


தமிழும் முகிலும் முகிலின் வீட்டில் அமர்ந்து சேலம் போகாமல் சென்னைக்கு வந்த நிரஞ்சனாவைத் தேடுவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க,

"ஒரு ஊர்ல.. ஒரு காக்கா இருந்துச்சாம்.. அந்த காக்கா அங்க வடை சுட்டுகிட்டிருந்த பாட்டி கிட்ட போய் வடை வேணும்னு கேட்டுச்சாம்.. அந்த பாட்டி அந்த காக்காவ வெரட்டி வுட்டாங்களாம்.. உடனே அந்த காக்கா பறந்து போய் ஒரு மரக்கிளையில உக்காந்து கிட்டு பாட்டி பாக்காதப்ப பாட்டி சுட்ட ஒரு வடைய சுட்டுகிட்டு வந்துச்சாம்.." என்று மதுரை தாண்டி ஒரு சிறிய கிரமத்திலிருந்த ஒரு பால்வாடியில் தன் முன்னால் அமர்ந்திருந்த சின்ன சின்ன குழந்தைகளின் முன் தானும் அமர்ந்து அவர்களைப் பார்த்து ரைமிங்காக கதை சொல்லிக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா!

"இல்ல நிரஞ்சனா! இந்த காக்கா வடை சுட்ட கதைய சொல்லாதம்மா.. இதனால யாருக்கும் எந்தப் பயனும் இல்ல.. பாட்டி சுட்ட வடைய காக்கா சுட்டுட்டு போறதும் காக்கா சுட்ட வடைய நரி கவ்விகிட்டு போறதும் சொன்னா, ஒருத்தர ஏமாத்தி, அவங்க பொருளை திருடினாதான் இந்த உலகத்தில பிழைக்க முடியும்னு ஒரு தப்பான பாடத்தை இந்த குழந்தைகளோட பிஞ்சு மனசில நாம பதிய வெக்கிறோம்.. வேண்டாம். நல்ல கதைகளை நம்ம குழந்தைகளுக்கு சொல்லி குடுப்போம். சின்ன வயசிலயே அவங்க மனசில திருடறது பொய் சொல்றது எல்லாம் தப்புன்னு சொல்லி குடுத்தாதான் அவங்க நாளைக்கு பெரியவங்களா வளர்ந்த பிறகும் இந்த மாதிரி தவறுகளை செய்யாம இருப்பாங்க.." என்று சொல்லிக் கொடுத்தாள் அந்த பால்வாடியின் தலைமை ஆசிரியை தேவகி.

"சரிங்க டீச்சர்." என்று மறு பேச்சு பேசாமல் ஒப்புக் கொண்டாள் நிரஞ்சனா.

அவள் சொல்லிக் கொண்டிருந்த கதையை கொஞ்சம் மாற்றிச் சொன்னாள் நிரஞ்சனா.

"பாட்டி பாக்காதப்ப வடைய சுட்டுடலாம்னு காக்கா பார்த்துகிட்டிருந்துச்சு.. ஆனா பாட்டி கவனமா இருந்தாங்க.. பாட்டிய ஏமாத்தி காக்காவால ஒரு வடை கூட திருட முடியல.. காக்கா வருத்தத்தோட அங்கிருந்து பறக்க ஆரம்பிச்சது.. அப்ப பாட்டி, ச்சூ.. கா.. கா.. அப்டீன்னு கூவிகிட்டே ஒரு வடைய பிச்சி காக்கா பக்கமா தூக்கி போட்டாங்க.. இதிலிருந்து என்ன தெரியுது.. நம்ம பொருளை நாமதான் ரொம்ப பத்திரமா பார்த்துக்கணும்.. யாரு வேணும்னாலும் நம்ம பொருளை திருடற நோக்கத்தோட நம்ம கிட்ட வரலாம்.. நம்ம கவனத்தை சிதறடிக்கலாம்.. ஆனா நம்ம என்ன நிலையில இருந்தாலும் நம்ம கவனத்தை விட்டுடக் கூடாது.. அதே நேரத்தில.. யாராவது பசின்னு வந்தா நம்மளால முடிஞ்ச சாப்பாட்டை அவங்களுக்கு போடணும்.. புரியுதா.." என்று பழைய கதையை மாற்றிக் கூறினாள் நிரஞ்சனா. குழந்தைகள் எல்லாம் புரிந்ததாகத் தலையாட்டினார்கள்.

பள்ளி முடிவடைந்தது என்பதை அறிவிக்கும் மணியடிக்க,

"எல்லாரும் நாளைக்கு வாங்க.. வேற ஒரு சூப்பர் கதை சொல்றேன்!" என்று குழந்தைகளை அவர்களுடைய பெற்றோருடன் அனுப்பி வைத்த நிரஞ்சனா, தேவகியின் அறைக்கு வந்தாள்.

"குட் நிரஞ்சனா! சொன்னதும் புரிஞ்சிகிட்டு அந்த பழைய கதைய அழகா மாத்தி சொல்லிட்டம்மா.." என்று அவர் பாராட்ட,

ஹூம்.. எதை என்ன சொல்லி மாத்தினா எல்லாரும் ஏத்துக்குவாங்கன்னு இப்பதான் புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்கேன் மேடம்.. என்று தன் மனதில் நினைத்தபடியே அவரிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

தமிழ் நிரஞ்சனாவை சென்னையின் மூலை முடுக்கெல்லாம் தேடித் தேடி அவள் கிடைக்காமல் சோர்ந்து போனான். அவனுடைய சோர்ந்த மனதுக்கு ஒரே வடிகால் முத்தழகிதான்.

அவள் தன் தளிர் நடையால் அவனிடம் ஓடி வருவதும் செப்பு வாயால் மாம்மா.. மாம்மா.. என்று அவனை விளித்து அவனுடன் விளையாடுவதும் அவன் மனப்புண்ணுக்கு மருந்தாக அமைந்தன.

முகிலும் கயலும், அவனிடம் இதைப்பற்றி எதுவும் கேட்காமல் இருந்தாலும் அவன் தங்களுடனேயே தங்கும்படி பார்த்துக் கொண்டனர்.

வேலை விஷயமாக வெளியூர் செல்லும் நாட்கள் தவிர, அவன் கயல் வீட்டிலிருந்து அலுவலகம் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான். ஆனாலும் நிரஞ்சனாவைத் தேடும் வேலையை அவன் கை விடவில்லை.

ஒரு வேளை நிரஞ்சனா சென்னைக்கு வரவே இல்லையோ.. என்று அவனுக்குத் தோன்ற தொடங்கும் போது நிரஞ்சனா காணாமல் போய் ஒரு வருடம் முடிந்திருந்தது.

இந்த ஒரு வருடத்தில் முத்தழகியின் தளிர் நடை ஓட்டமாக மாறியிருக்க, அவளுடைய ஒற்றை வார்த்தைப் பேச்சுக்கள் வாய் ஓயாத பேச்சுக்களாய் மாறியிருந்தன. அவளுடைய குறும்பும் துறுதுறுப்பும் கூடிப் போயிருந்தன.

முத்தழகியின் விளையாட்டுக்களைக் கண்டு களிப்பதற்காகவே கயல்விழியின் பெற்றோர், மதுரம் மற்றும் சொக்கலிங்கமும், முகிலனின் பெற்றோர் வளர்மதி மற்றும் ஈஸ்வர பாண்டியும் அவ்வப்போது சென்னை வந்து பேத்தியின் விளையாட்டுகளை கண்டு மகிழ்ந்தனர்.

பெரியவர்களும் இவர்களுடன் தங்குவதால் சிறிய வீடு போதவில்லை என்று கொஞ்சம் பெரிய வசதியான வீடாகப் பார்த்து குடியேறினார்கள். முகிலனுக்கும் தாம்பரம் அலுவலகத்திலிருந்து சென்னை எழும்பூர் அலுவலகத்துக்கு மாற்றல் வர, அவர்கள் வீடு மாறுவது அவசியமாகியது. அவர்கள் கில் நகர் பகுதியில் வசதியான குடியிருப்பு ஒன்றைப் பார்த்து அதில் குடியேறினார்கள்.

சரியாக அப்போது கயல்விழிக்கு தமிழ் வேலை செய்யும் செய்தித்தாள் நிறுவனத்தின் தொலைக்காட்சி சேனலில் நல்ல வேலைக்கு வாய்ப்பு வர, முகிலன் கொடுத்த ஊக்கத்தினால் அவள் அந்த வேலையில் சேர்ந்தாள்.

வீட்டில் முத்தழகியை வளர்மதியும் மதுரமும் கவனித்துக் கொள்ள, வீட்டுப் பொறுப்புகளையும் அவர்களிடம் கொடுத்து விட்டு இளையவர்களான, கயல், முகில் மற்றும் தமிழ் மூவரும் நிம்மதியாக வேலைக்குச் செல்லத் தொடங்கினர். ஈஸ்வர பாண்டியும் சொக்கலிங்கமும் ஊரில் கொஞ்ச நாள் சென்னையில் கொஞ்ச நாள் என்று மாறி மாறி இருக்கத் தொடங்கினர்.

மொத்தத்தில் எல்லாருடைய வாழ்க்கையிலும் இந்த ஒரு வருடம் குறிப்படும்படி நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருந்தது எனலாம்.


********


இந்த ஒரு வருடத்தில் நிரஞ்சனாவும் நிறைய கற்றுக் கொண்டிருந்தாள்.

சொல்லிக் கொடுக்கற புத்தியும் கட்டிக் கொடுக்கற சோறும் மூணு நாளைக்கு மேல தாங்காது.. ஆனா சுயமா கத்துக்கறது ஒரு நாளும் மறக்காது.. என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.

தன் வாழ்க்கையை சிக்கலில்லாமல் ஓட்டுவதற்காக அவள் பல சிரமங்களை அனுபவித்துக் கடக்க வேண்டியிருந்தது. எப்போதும் குறும்பும் சிரிப்புமாக இருந்தவளுக்கு இப்போது கொஞ்சம் பொறுப்பும் வந்திருந்தது.

தன்னை உதாசீனம் செய்து ஓடிப் போன கணவனை அவள் மறந்தும் கூட நினைக்கவில்லை. முதலில் அவள் அவனை கணவனாகவே நினைக்கவில்லை. அவனோடு வாழ்ந்த அந்த மூன்று மாதங்கள், அவள் அன்பு, பாசம் மட்டுமல்ல, ஒரே வீட்டுக்குள் வாழும் இருவரிடையே தோன்றக் கூடிய யதார்த்தமான நட்பையும் கூட அவள் உணரவில்லை!

இதெல்லாம் அவள் பிறந்தகத்திலும் அனுபவிக்கவில்லை, அதனால் இது அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை! அதே நேரத்தில் கணவனிடமிருந்து அனுபவிக்கக் கூடிய காதல், காமம் போன்றவற்றையும் அவள் அனுபவிக்கவில்லை! அந்த மூன்று மாதங்கள் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தனர். எப்போதும் எதையாவது யோசித்துக் கொண்டே தன்னுள் மூழ்கியபடி உம்மென்ற முகத்துடன் வளைய வரும் அவனிடம் இவளால் ஒட்டுதலுடன் பழக முடியவில்லை! இவளுடைய சிரிப்பும் குறும்புகளும் அவனை எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை! சில நேரம் மட்டும் அவனுடைய உணர்ச்சிகளுக்கு இவள் வடிகாலாய் இருந்தாள். மற்றபடி இவளுடைய நகைகளைத் தவிர அவனுக்கு இவள் வேறு எந்த வகையிலும் தேவைப்படவில்லை!

திருமணமான முதல் நாளிலிருந்தே மெது மெதுவாக ஒவ்வொரு நகையாக அவளிடமிருந்து வாங்கிச் செல்ல ஆரம்பித்தான். அதன் பிறகு அவளிடம் கேட்காமல் எடுத்துச் சென்றான். அவள் இதை என்னவென்று கேட்கப் போக, இவளிடம் சண்டை போட்டான். அக்கம் பக்கத்தினர் வந்து சமாதானம் செய்ய, எங்கே இவனுடைய குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று நினைத்தவன், நிரஞ்சனாவுக்கு கொஞ்சமாக மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்துவிட்டு அவளுடைய எல்லா நகைகளையும் பணத்தையும் வீட்டிலிருந்த சாமான்களையும் மொத்தமாகச் சுருட்டிக் கொண்டு போயே விட்டான்.

இதையெல்லாம் கூட நிரஞ்சனா பொருட்படுத்தவில்லை. ஆனால் இவளைக் காப்பாற்றுகிறேன் என்று அழைத்துச் சென்ற அவளுடைய அம்மாவும் அண்ணனும் தினம் தினம் வார்த்தைகளால் அவளை வசை பாடியதைத்தான் அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தப்பு செய்து விட்டு தன் வீட்டுப் பெண்ணை ஏமாற்றிவிட்டு ஓடியவனைத் திட்டாமல் அவனால் வஞ்சிக்கப்பட்டு வாழ்விழந்து நிற்கும் வீட்டுப் பெண்ணை கரித்துக் கொட்டினார்கள். அவளுக்கு சரியாகச் சாப்பாடு போடாமல் அவளை வேதனைப் படுத்தினார்கள்.

அதுதான் நிரஞ்சனாவால் தாங்க முடியாமல் போனது.

"நீ எதுக்கு மாப்ள கிட்ட சண்டை போட்ட? அதனாலதான அவரு உன்ன வுட்டு ஓடினாரு.." என்று கேட்ட கேள்வியையே மாற்றி மாற்றிக் கேட்டு அவளை வேதனைப்படுத்தினாள் அவளுடைய அம்மா.

"ஒதவாக்கரையான உனக்கு போய் அம்பது பவுன் நகை போட்டு கட்டி கொடுத்தோமே.. ஒழுங்கா வாழத் தெரிஞ்சிதா.. நீல்லாம் இனிமே எங்க உருப்படப் போற.." என்று சொல்லிச் சொல்லி அவளுடைய அண்ணன் அவளை துடிக்க வைத்தான்.

எல்லாவற்றுக்கும் மேல் அவளுடைய விருப்பமின்றியே அவள் கருத்தரித்திருக்க, இதை அவளுடைய அண்ணனும் அம்மாவும் சேர்ந்து அழிக்க முயன்றனர்.

என்னதான் இந்த கர்ப்பம் அவளுக்கு பிடிக்கவில்லையென்றாலும் அவள் இதை பாரமாக நினைக்கவில்லை.

இதை அவள் தனக்கு வந்த வேதனை என்று நினைக்காமல் இது தன்னுடைய வாழ்வின் அடுத்த திருப்பம் என்றே நினைத்தாள்.

இத்தனை நாள் எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு தூக்கிப் போடும் டிஸ்யூ காகிதம் போன்று நடத்தப்பட்டு விட்டோம்! இனி இப்படி இருக்கக் கூடாது! எல்லார் முன்னாலும் சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று மனதில் தெளிவாக முடிவெடுத்துக் கொண்டு பிறந்தகத்தை விட்டு வெளியேறினாள்.

அந்த வீட்டில் வாழ்வது எவ்வளவு கடினமாக இருந்ததோ, அதே போல அங்கிருந்து வெளியேறுவதும் மிகக் கடினமாகவே இருந்தது.

நிரஞ்சனாவின் அண்ணியும் உற்ற தோழியுமான பைரவி மட்டும் இல்லையென்றால் அவளால் அங்கிருந்து வெளியேறியிருக்கவே முடியாது.

ஹூம்.. அன்றே பைரவியின் பேச்சைக் கேட்டிருந்தால் இந்தக் கொடுமையெல்லாம் அனுபவித்திருக்கவே வேண்டாம் என்று அவளுக்கு அவ்வப்போது தோன்றினாலும் இதை அனுபவித்ததனால்தானே தனக்கு பல உண்மைகள் தெரிய வந்தன; அம்மா மற்றும் அண்ணனின் உண்மை முகம் தெரிய வந்தது; கணவன் என்பவன் எப்படி இருக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது; எல்லாவற்றுக்கும் மேலாக, வீட்டுக்கு வெளியே நடமாடும் மனித மிருகங்களின் கள்ளப் பார்வையை இனம் கண்டு கொள்ள முடிந்தது என்றெல்லாம் நினைத்து அவள் தன்னைத் தானே தேற்றிக் கொள்ளப் பழகியிருந்தாள்.

இந்த பால்வாடியில் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து வாழ்க்கை கொஞ்சம் இயல்புக்கு வந்தது போலத் தோன்றியது நிரஞ்சனாவுக்கு!

பள்ளியில் பெரிய வேலை இல்லை. இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கும் பிள்ளைகளுக்கு கதை சொல்ல வேண்டும்! அதுதான் முக்கியமான வேலை. அதுவும் தலையை ஆட்டி கண்களை விரித்து உருட்டி கைகளை அசைத்து முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டு குழந்தைகளுக்கு கதை சொல்வதுதான் இவளுடைய பணி. அது இவளுக்கு நன்றாகவே வந்தது. குழந்தைகளோடு குழந்தையாய் பேசிச் சிரித்து தன் மன வேதனைக்கு மருந்தாகவும் இந்த வேலை அமைந்து விட்டபடியால் அவளுக்கு இந்த வேலை மிகவும் பிடித்து விட்டது.

காலை முதல் மதியம் வரை மட்டுமே பள்ளி வேலை! சொற்ப வருமானம்தான் என்றாலும் பல நாட்கள் கழித்து நிம்மதியை உணர்ந்தாள்.

அன்றும் அப்படிதான். பிள்ளைகள் கிளம்பியதும் , பால்வாடியின் மூத்த ஆசிரியரான தேவகியின் அறைக்கு வந்தாள். அறையின் மூலையில் தொங்கிக் கொண்டிருந்த தூளியிலிருந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அதன் தூக்கம் கலைந்து விடாமல் எடுத்துத் தன் தோளில் போட்டுக் கொண்டு அவரிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

இரண்டு தெரு தள்ளி, அவள் தங்கியிருந்த குடிசைக்கு வரும் போது குழந்தை முழித்துக் கொண்டு அழத் தொடங்கியது. அழும் குழந்தையை சமாதானம் செய்தபடியே பாலைக் காய்ச்சினாள். சூடு குறைய ஆற்றி பாட்டிலில் விட்டு குழந்தைக்குப் புகட்டினாள்.

பாலைக் குடித்த குழந்தை தன் கை கால்களை உதைத்து விளையாடத் தொடங்க, இவள் சென்று காலையில் செய்து வைத்திருந்த உணவை மெதுவாக சாப்பிட்டாள்.

"ரஞ்சனி! ஏய் ரஞ்சனி!" என்று யாரோ அழைக்கும் குரலைக் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தாள்.

"ஏய்! தண்ணி வருது.. அதான் கூப்ட்டேன்.." என்று ஒரு பெண் எட்டிப் பார்த்து விட்டு,

"ஓ.. சாப்பட்றியா.. சரி.. சரி.. உன் குடத்தை குடு.. நானே தண்ணி புடிச்சி வெக்கறேன்.. நீ வந்து எடுத்துக்க.." என்று கூறிக் கொண்டே அங்கிருந்த இரண்டு காலிக் குடங்களை எடுத்துக் கொண்டு போனாள்.

ஹூம்.. இங்க தண்ணி பிரச்சனை இல்ல.. ஆனா நேரம் கெட்ட நேரத்துக்கு தண்ணி வுடறாங்க.. எங்க போனாலும் எதாவது பிரச்சனை இருந்துட்டேதான் இருக்குமோ.. என்று நினைத்தபடியே சாப்பிட்டாள்.

அவள் சாப்பிட்டு முடித்து கை கழுவிக் கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு குழாயடிக்குச் சென்றாள்.

"அந்த கொழந்தயை வீட்லயே வுட்டுட்டு வரதானே.. இப்ப குடத்த எப்டி தூக்குவ.." என்று அதட்டினாள் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி.

"அதான் நீ இருக்கியே.. புள்ளைய ரெண்டு நிமிசம் வச்சிக்க.. நான் குடத்த எடுத்து உள்ள வெச்சிட்டு வரேன்.." என்று கூறிக் கொண்டே குழந்தையை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு ஒரு குடத்தை எடுத்துப் போய் வீட்டுக்குள் வைத்து விட்டு வந்து அடுத்த குடத்தைத் தூக்க,

"என்ன ரஞ்சனி.. நா இருக்கும் போது நீ ஏன் கொடத்த தூக்கற.. பச்ச ஒடம்புக்காரி.." என்று சொல்லிக் கொண்டே ஒருவன் அவளிடமிருந்து குடத்தை வாங்கினான்.

"என் குடத்தை நானே தூக்குவேன்.. எனக்கு யார் உதவியும் வேணாம்.." என்று வெடுக்கென்று கூறியபடி வேகமாக நடந்தவளை வழி மரித்தான் அவன்.

"ஏய்.. என்னா.. ஏதோ பாவம் தனியா இருக்கியே.. உதவி பண்லாம்னு வந்தா.. இவ்ளோ சிலுத்துக்கற.." என்று கோவம் போலக் கேட்டான்.

"எனக்கு உதவி வேணும்னா அப்ப கேக்கறேன்.. இப்ப வழிய விடு.." என்று கோபமாகச் சொன்னாள் நிரஞ்சனா.

"ஹூம்.. நீயும் எங்கிட்ட உதவி கேக்க மாட்டியான்ன்னு நா காத்துட்டிருக்கேன்.." என்று அவளின் காதருகே சன்னமான குரலில் வழிசலுடன் கூறிவிட்டு அவன் நகர, கடுகடுத்தபடியே குடுத்தைக் கொண்டு போய் உள்ளே வைத்துவிட்டு குழந்தையை கிழவியிடமிருந்து வாங்கிப் போக வந்தாள் நிரஞ்சனா.

ஆனால் அவளிடம் வம்பு செய்தவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அதைக் கொஞ்சுகிறேன் பேர்வழியென்று பூடகமாக நிரஞ்சனாவை அசிங்கமாக வர்ணித்துக் கொண்டிருந்தான்.

"என்னா கலருடா நீயி.. உங்கம்மாவாட்டமே.. செக்கச் செவேல்ன்னு.. கண்ணு ரெண்டு நவாப்பழமாட்டமா.. வாய்.. கோவைப்பழமாட்டமா.."

"ஏய்.. குழந்தைய குடு.. நீ எதுக்கு என் குழந்தைய தூக்கின.." என்று கோபமாகக் கேட்டுக் கொண்டே குழந்தையை அவள் வாங்கப் போக, அவன் குழந்தையைக் கொடுக்காமல் வம்பு செய்தான்.

"ஐய.. என்ன.. கொஞ்ச நேரம் கொஞ்ச வுட மாட்ற.."

"ம்.. வேணும்னா.. நீ ஒண்ண பெத்துட்டு அத கொஞ்சிக்க.. என் குழந்தைய குடு.."

"அதுக்குதான் வரேங்கறேன்.. நீதான் பிடி குடுக்க மாட்ற.." என்றான் அருவருப்புடன்.

"ச்சீ.. இது மாதிரி எதாவது உளறிகிட்டு என் பின்னால வந்த.. செருப்பு பிஞ்சிடும்.." என்று கோபமாகக் கூறிவிட்டு குழந்தையை அவனிடமிருந்து பிடிங்கிக் கொண்டு போனாள் நிரஞ்சனா.

ஒரு பொம்பள தனியா இருந்துடக் கூடாதே.. ஒடனே வந்துடுவானுங்க.. எங்கேந்துதான் வரானுங்களோ.. வரட்டும்.. இவனெல்லாம் நெஜமாவே செருப்பால அடிச்சி வெரட்டினாதான் அடங்குவானுங்க.. என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே தன் குடிசைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டாள்.

ஆனால் அவளை அன்றிரவே சூறையாடிவிடக் கறுவிக் கொண்டு அவன் காத்திருக்கிறான் என்பது அப்போது அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை!



- தொடரும்...



 
பொண்ணு தனியா இருந்தா போதுமே இப்படி கழிசடைகள் உதவி செய்ரோமுனு வந்துடுவானுக
 
அப்போ நிரஞ்சனாவின் கணவர் தமிழ் இல்லையா?
இப்போ தனக்கு வந்த ஆபத்திலிருந்து நிரஞ்சனா எப்படி தப்பிக்கப் போகிறாள்?
அந்த கயவனை அடித்து போட்டு விட்டு தப்பித்து விடுவாளா?
இல்லை அவனைக் கொலை செய்து விடுவாளா?
 
Last edited:

Advertisement

Top