Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

19. Ivan Vasam Vaaraayo!

Advertisement

உண்மை தெரிந்த பின்னர் தமிழும் அவன் குடும்பமும் அந்தக் குழந்தையை ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

  • ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    Votes: 8 100.0%
  • ஏற்றுக் கொள்ளக் கூடாது.

    Votes: 0 0.0%

  • Total voters
    8

Annapurani Dhandapani

Well-known member
Member

19. இவன் வசம் வாராயோ!



தமிழின் அறையில் அவன் தூங்காமல் ஏதோ யோசனையாய் படுத்திருந்தான்.

அவனுடைய அலைபேசி மெலிதாய் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான், அவனுடைய காவல்துறை நண்பன், அந்த அங்காடித் தெரு சம்பவத்தை நேரில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் ராபர்ட், தமிழை அழைத்தான்.

"சொல்லு ராப்! அந்த ஆளுங்களப் பத்தி எதாச்சும் தெரிஞ்சிதா.."

"தமிழ்! இவனுங்க நீ நெனச்ச மாதிரி பொண்ணுங்கள கடத்தறவங்கதான்.. ஆனா.. உன் உட்பீய அவங்க ஏதேச்சையா பிடிச்சி வெக்கலன்னு நெனக்கிறேன்.." என்றான் ராப்.

"என்ன சொல்ற.. கொஞ்சம் புரியும்படி சொல்லு.."

"தமிழ்.. இது என்னோட நம்பகமான இன்ஃபார்மர் கிட்டேந்து வந்த தகவல்.. என்னன்னா.. உன் உட்பீய ரொம்ப நாளா சிலர் தேடிட்டிருக்காங்க.. அவங்கள பார்த்ததும் போட்டுத் தள்ளணும்கறது இவங்களுக்கு கிடைச்ச ஆடர் போல.."

"என்ன சொல்ற.." அதிர்ந்து போய்க் கேட்டான் தமிழ்.

"ம்.. ஆமா தமிழ்.. அவங்கள கொஞ்சம் கேர்ஃபுல்லா பாத்துக்கோ.. கொஞ்ச நாள் அவங்கள எங்கியும் தனியா அனுப்பாத.." என்ற ராப் வேறு சில தகவல்களையும் சொன்னான்.

"ஷ்யூர்..நீ சொல்ற மாதிரியே கவனமா இருக்கேன்.. இவ்ளோ ரிஸ்க் எடுத்து எனக்காக நீ கலெக்ட் செய்திருக்க.. ரொம்ப தேங்க்ஸ் ராப்.." என்று நன்றி சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

தன் அலைபேசியில் யாருடைய எண்ணையோ வேக வேகமாகத் தேடி எடுத்தான். அந்த எண்ணுக்கு அழைத்து,

"ஹலோ.. நா தமிழ்வாணன் பேசறேன்.."

".."

"ஆமா.."

அவர்களிடம் ஏதோ விவரம் கேட்க, அவர்கள் ஏதோ சொல்ல, எல்லாவற்றையும் மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டான்.

"உங்க உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ்.."

".."

"கண்டிப்பா.. தேங்க்யூ.. பை.." என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

கைப்பேசியில் அப்போதைய நேரத்தைப் பார்த்தான். இரவு பத்து என்று காட்டியது கைப்பேசி. அடுத்ததாக தன் தந்தையை அழைத்தான்.

"சொல்லுப்பா தமிழு.. இன்னும் தூங்கலயா?"

"அப்பா.. நா சொல்றத கவனமா கேளுங்க.." என்று ஆரம்பித்து எதையோ சொல்ல, சொக்கலிங்கமும் மகன் சொல்வதை கவனமாகக் கேட்டுக் கொண்டார்.

"சரிப்பா.. நீ சொல்ற மாதிரியே செஞ்சிடறோம்.. நீ டீடெய்ல்ஸ் எல்லாம் அனுப்பு.." என்றார்.

தந்தையின் அழைப்பை துண்டித்து விட்டு அவருக்கு வாட்ஸ்அப்பில் ஏதோ தகவல்களை அனுப்பினான்.

தன் மெத்தையில் படுத்து விட்டத்தை வெறித்தபடி, இது சரியா நடக்கணும்.. கடவுளே.. அவ இவ்ளோ நாள் பட்ட கஷ்டம் எல்லாம் போதும்.. இனிமேலயாவது அவள பத்திரமா காப்பாத்து.. நானும் அவளும் நல்லபடியா எங்க வாழ்க்கைய தொடங்கணும்.. நிறைய வருஷம் சந்தோஷமா வாழணும்.. கடவுளே.. என்று நினைத்தபடி கண் மூடிக் கிடந்தான்.

மறுநாள் காலை வழக்கம் போல நிரஞ்சனா தன் வேலைகளை முடித்துவிட்டு வேலைக்குக் கிளம்ப, தமிழ் அவளுடன் கிளம்பினான்.

"நீங்க எங்க வரீங்க?"

"இல்ல.. இனிமே உன்ன தனியா விட முடியாது.. உனக்குன்னு புதுசு புதுசா பிரச்சனைங்க கௌம்பி கௌம்பி வருது.. உனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா.. அதான்.." என்றான்.

"என்னங்க.. இதுக்கு போயி.. நேத்தி எதேச்சையா நடந்துச்சு.. அதுக்காக தினமும் அதே நடக்குமா.." என்றாள் நிரஞ்சனா.

"எல்லாம் எனக்கு தெரியும்.. வா.." என்று அவளை அழைத்துக் கொண்டு அவள் வேலை செய்யும் படபிடிப்புக்கு அழைத்துச் சென்று அவளை விட்டுவிட்டு தன் வேலைக்குப் போனான் தமிழ்.

அங்கு போனால் நேற்று ஜவுளிக் கடையில் நிரஞ்சனாவை வம்புக்கிழுத்தவன் படப்பிடிப்பு நடைபெற விடாமல் தகராறு செய்து கொண்டிருந்தான்.

"நா மேக்கப் மேனா வேல பண்ணிட்டிருந்த எடத்தில ஒரு பொண்ண இட்டாந்து வேலக்கி வெச்சா என்னா மீனிங்கு.. அந்த பொண்ணுக்கு என்னாட்டம் எஸ்ப்ரின்ஸ் ருக்குதா.. இந்த படத்தில நடிக்கிதே.. இந்தம்மாக்கு கூட நாந்தா மொத தபா மேக்கப் போட்டேன்.. நா போட்ட மேக்கப்புனாலதா அந்த டைரட்டர் இந்தம்மாவ நல்லாருக்குன்னு ஒத்துகிட்டு நடிக்க வச்சாரு.. இத்தினி வர்சமா நா போட்ட மேக்கப்புனாலதான இந்தம்மா இம்மாம் பெரிய நடிகையா வளந்தாங்க.. இப்ப என்ன.. என்னிய கயட்டி வுட்டுட்டு.. இந்தப் பொண்ண இட்டாந்துட்டா.. நா சோத்துக்கு இன்னா பண்ணுவேனாம்.." என்று தன்னை விலக்கி நிரஞ்சனாவை வேலைக்கு எடுத்துக் கொண்டதால் தனக்கு ஏற்பட்ட இழப்பைக் கூறி குற்றப்பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தான்.

"இப்ப என்ன பண்ணனும்ங்கறீங்க.." என்று அந்த முன்னணி நடிகை கோபமாகக் கேட்டாள்.

"இந்த பொண்ணு இங்க வேல செய்யக் கூடாது.. இது ஊனியன்ல உன்னும் சீட்டு வாங்கல.. ஆனா சூட்டிங்கு ஊனிட்ல சாப்புடுது.. ஜூஸு குடிக்கிது.. ஊனிட்டு வண்டில சூட்டிங் வருது.. சூட்டிங் முடிஞ்சி போவுது.. இதெல்லாம் நாயமே இல்ல.." என்றான் மீண்டும்.

அந்தத் திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் எல்லாம் கூடிவிட்டனர்.

"ராஜாண்ணே.. என்ன பிரச்சனை.. ஏன் இப்டி தகராறு பண்ணிட்டிருக்கீங்க.." என்று இயக்குனர் கேட்க, அவன் திரும்பவும் தன் குற்றப்பத்திரிகையை வாசித்தான்.

"என்னம்மா இதெல்லாம்.. நீங்க ஏன் உங்க மேக்கப் ஆர்டிஸ்ட்டை மாத்தினீங்க.." என்று இயக்குனர் கேட்க,

"சார்.. நீங்களே பாக்கறீங்கல்ல.. தினமும் ஃபுல்லா குடிச்சிட்டுதான் வராரு.. குடிக்காம வாங்கன்னு சொன்னாலும் கேக்க மாட்றாரு.. சரி தொலையுதுன்னு சகிச்சிகிட்டா.. குடிச்சிட்டு வந்து.. நாதாரி.. நாசமாப் போறவன்னு திட்டிகிட்டே.. அசிங்கமா கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி யாரையாவது குறை சொல்லிகிட்டே.. மேக்கப் போடறாரு.. மனசு விட்டுப் போகுது சார்.. இது நாமல்லாம் தொழில் செய்யற இடம்.. கோவில் மாதிரின்னு நா நெனக்கிறேன் சார்.. ஆனா இவர் வாயில சாக்கடைதான் சார் இருக்கு.. அதான் சார் நா என் மேக்கப் ஆர்டிஸ்ட்டை மாத்திகிட்டேன்.." என்றாள் அந்த நடிகை.

"ம்.. வாஸ்த்தவமான பேச்சு.." என்ற இயக்குனர், அந்த ஆளிடம் திரும்பி,

"ராஜாண்ணே.. அவங்க சொல்றதும் நியாயம்தானே.."

"சரி சார்.. இன்மே நா குடிக்காம வரேன்.. ஆனா இந்த பொண்ணு இத்தினி நாளா நம்ம ஊனிட்டுல வாங்கி முளுங்கினதுக்கு காசு கலெட் பண்ணுங்க.." என்றான்.

"என்னண்ணே.. ஏதோ பாவம்.. ரெண்டு வேளை சாப்பிட்டாங்க.. விடுங்கண்ணே.." என்று இயக்குனர் கடுப்புடன் சொல்ல,

"குறுக்க பேசறதுக்கு மன்னிச்சிக்கங்க சார்.. இந்த பொண்ணு நம்ம யூனிட்ல போடற சாப்பாட்ட சாப்பிடல சார்.. அது வீட்லேர்ந்துதான் எடுத்தாந்து சாப்பிட்டுச்சு.. தண்ணி கூட வீட்லேர்ந்து பாட்டில்ல எடுத்தாந்துச்சு சார்.. நடு நடுல டீ காபி பிஸ்கட்லாம் குடுக்கறச்சே கூட இந்த பொண்ணு எதையுமே வாங்கிக்காது சார்.." என்று திரைப்படத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சாப்பாட்டுக்கு பொறுப்பேற்றிருக்கும் நபர் வந்து கூறிவிட்டுப் போக,

"வண்டியும் என் சொந்த வண்டிலதான் இவள கூட்டிட்டு வந்தேன் சார்.. யூனிட் வண்டியில இவங்க வந்ததில்ல.." என்றாள் அந்த நடிகை.

"ஆங்.. அப்ப மேக்கப்புக்கு சம்பளம் யார் குடுத்தாங்களாம்.." என்று அவன் மீண்டும் குற்றம் சொல்ல,

"என் சொந்த காசுதான் குடுத்தேன்.. அது மட்டுமில்ல இந்த யூனிட்ல இவ என்னைத் தவிர வேற யாருக்கும் மேக்கப் போடல.." என்றாள் அந்த நடிகை.

"இல்ல பொய்.. போன வாரம் குரூப்பு டான்சுக்கு கூட ஆடற டான்சருங்க அல்லாருக்கும் இதுதான் மேக்கப்பு போட்டுச்சு.. என் கண்ணால பாத்தேன்.." என்றான் அவன்.

"ஆமா சார்.. இவரு ஃபுல்லா குடிச்சிட்டு வந்து மட்டையாகிட்டாரு.. இங்க ஷூட்க்கு டைம் ஆயிடுச்சி.. அதனால எல்லா டான்சர்களுக்கும் மேக்கப் போட்டா.. நாந்தான் போட சொன்னேன்.."

"ம்.. பாத்தீங்களா.. நா ஒன்யும் பொய் சொல்லல.."

"ஆமா சார்.. அவ மேக்கப் போட்டா.. ஆனா அதுக்கு பேமன்ட் வாங்கிக்கல சார்.." என்று கூறினான் ஊழியர்களுக்கு கணக்கு பார்த்து பணம் தருபவன்.

"என்ன சொல்ற.." என்று கேட்டார் இயக்குனர்.

"ஆமா சார்.. அதுக்கு இந்த பொண்ணு பணம் வாங்கல.. கேட்டதுக்கு.. இத அவருக்கே குடுத்துடுங்க.. அவரு வயித்தில அடிக்காதீங்க.. பாவம்.. எவ்வளவோ வருஷமா வேலை செய்யறவரு.. என்ன மனசு கஷ்டமோ.. குடிச்சிட்டு வராரு.. பாவம்.. இது அவருக்கு சேர வேண்டிய காசுன்னு சொல்லி பணம் வேணாம்னு சொல்லிடுச்சு.. நீ செய்த வேலைக்குதானேம்மா சம்பளம் வாங்கறன்னு கேட்டதுக்கு.. அவரு பாவம் எங்கப்பா மாதிரி இருக்காரு.. அப்பாவுக்கு ஒரு மக மாதிரி உதவி செய்தேன்.. இதுக்கு போய் யாராச்சும் பணம் வாங்குவாங்களான்னு சொல்லிட்டு போய்டுச்சு சார்.." என்றான் அவன்.

"என்ன ராஜாண்ணே.. அந்த பொண்ணு நீங்க சொன்ன எந்த தப்பையும் செய்யல.. சொல்லப் போனா உங்களுக்கு உதவி செய்திருக்கு.. அதப் போய் இவ்ளோ குத்தம் சொல்லிகிட்டு திரியறீங்களே.. போங்கண்ணே.. போய் வேலைய பாருங்க.. இதுக்காக இன்னிக்கு எல்லாருடைய நேரத்தையும் வீண் செய்துட்டீங்க.. ஏதோ நீங்க சீனியர் ஆர்டிஸ்ட்டா இருக்கறதால நா இவ்ளோ பொறுமையா நின்னு விசாரிச்சேன்.. இதே வேற யாராவது இப்டி தகராறு பண்ணியிருந்தா நடக்கறதே வேற.. போங்க.. கமான்.. எல்லாம் போய் ரெடியாகுங்க.." என்று கண்டிப்பும் கோபமும் கலந்து சொல்லிவிட்டுப் போக, அந்த நடிகை நிரஞ்சனாவைத் தன் கேரவனுக்கு அழைத்துச் சென்றாள்.

நிரஞ்சனா அந்த வம்பு செய்த மேக்கப் மேனிடம் வந்து,

"அண்ணா! உங்க சோத்தில நா மண்ணள்ளிப் போடலண்ணா.. போடவும் மாட்டேன்.. ஏன்னா பசின்னா என்னன்னு எனக்கும் தெரியும்ண்ணா.. நானும் பல நாள் பட்டினி கிடந்தவதாண்ணா.. பெத்த குழந்தைக்கு கூட பால் வாங்க முடியாம பல நாள் அழுதிருக்கேன்.. ஆனாலும் யாருடைய காசையும் அடிச்சி பறிக்க மாட்டேண்ணா.." என்று சொல்லி விட்டுப் போக, அந்த ஆளுக்கு ஏற்றிய போதையெல்லாம் இறங்கியது போலானது.

போகும் அவளையே பார்த்துக் கொண்டு நின்ற அவனருகில் வந்த ஒரு வயது முதிர்ந்த துணை நடிகை,

"ஏண்ணே.. எப்டி கெத்தா நிப்ப.. இப்ப பாரு.. இந்த சின்ன வயசு டைரட்டருல்லாம் உன்னிய கோவமா பேசற அளவுக்கு ஆயிடுச்சு.. எதுக்குண்ணே உனுக்கு இந்த குடி.. இந்த குடிய வுடுண்ணே.. அப்பதான் உனுக்கு மரியாத.. நீ அந்த காலத்தில ஊனிட்டுக்குள்ள வந்தாலே அல்லா ஆட்டிஸ்ட்டும் எய்ந்து நின்னு வணக்கம் வப்பாங்க.. இப்ப பாரு.. இந்த அப்ரன்டிசெல்லாம் வெட்டி நாயம் பேசுதுங்க.." என்று கூறிவிட்டுப் போனாள்.

அவன் திருந்தினால் சரி! குடி ஒரு மனிதனை கோபுரத்திலிருந்து குப்பை மேட்டுக்குத் தள்ளி விடும்! நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்தால் குப்பையில் இருப்பவனை கோபுரத்திலும் ஏற்றி வைக்கும்!

நடிகர் சங்கத்திலிருந்து அந்த இயக்குனருக்கு இந்த ராஜாவின் புகாரை விசாரிப்பதாகக் கூறி அழைப்பு வர, இயக்குனர் நடந்ததை தெளிவுபடுத்தினார்.

சங்கத்திலிருந்து அவனை அழைத்து, இது போல பொய்ப்புகாரை பதிவு செய்து படப்பிடிப்பில் தகராறு செய்தால் அவனுடைய உறுப்பினர் சீட்டு ரத்து செய்யப்படும் என்று கண்டித்து அவனுடைய புகாரை தள்ளுபடி செய்தது.

அதன்பிறகு வந்த நாட்களில் எல்லாம் அவன் குடிக்காமல் இருந்தானோ இல்லையோ படப்பிடிப்பு முடியும் வரை அடங்கி ஒடுங்கி இருந்தான் எனலாம்.

நடிகர் சங்கத்திலிருந்து நிரஞ்சனாவை உறுப்பினராகச் சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. நிரஞ்சனா யோசித்து முடிவு செய்கிறேன் என்று பதில் சொல்லி அந்த விஷயத்தை தள்ளிப் போட்டாள்.

படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விட பத்து நாட்கள் முன்னதாகவே முடிந்து விட, நிரஞ்சனா தன் திருமணத்திற்காக தன்னுடைய மற்றும் கயல், மதுரம், வளர்மதி, குழந்தை முத்தழகி என எல்லாருக்கும் ரவிக்கை, சட்டைகளை டிசைன் செய்வதில் மும்முரமானாள்.

இதற்கிடையே சில முறை பைரவியும் நரேனும் வந்து நிரஞ்சனாவைப் பார்த்துவிட்டுப் போனார்கள்.

நரேன் நிரஞ்சனாவிடம் அன்பாகப் பேசவில்லையென்றாலும் கோபமாகவும் பேசவில்லை.

அப்படி ஒரு நாள் பைரவியும் நரேனும் வந்துவிட்டுப் போக, அவர்களை வழியனுப்ப தெருக் கோடி வரை நிரஞ்சனா சென்றுவிட்டுத் திரும்ப, தனியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருப்பவளை வழிமறித்தது ஒரு கும்பல்.

ஆனால், தமிழ் ஏற்பாடு செய்திருந்த தனியார் காவல் ஆட்கள் (private security persons) அவளை பத்திரமாக அவர்களிடமிருந்து காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

வீட்டில் விஷயமறிந்த அனைவரும் நிரஞ்சனாவைக் கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.

"என்னதான் பிரச்சனைன்னு சொல்லு ரஞ்சீ.. ஏன் இப்டி எல்லாரும் உன்ன தொரத்தறாங்க.. எங்க கிட்ட சொன்னா உன்ன வெறுத்திடுவோம்ன்னு நெனக்கறியா.. இவ்ளோ நாளா இந்த வீட்ல இருக்கியே.. இன்னுமா எங்கள நீ புரிஞ்சிக்கல.." என்று தமிழும் கயலும் முகிலும் மாறி மாறி கேட்டனர்.

வேறு வழியின்றி நிரஞ்சனா மெதுவாக சொல்ல ஆரம்பித்தாள்.

"அவங்க என்னத் தேடி வரல.. என் குழந்தைய தேடி என்ன தொரத்தறாங்க.." என்றாள்.

"வாட்.. எதுக்கு.." என்று முகில் அதிர்ந்து போய்க் கேட்க,

"எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.. அது என் குழந்தை இல்ல!" என்று சொல்லி அழத்தொடங்கினாள்.




அப்படியானால் அது யாருடைய குழந்தை? அது எப்படி நிரஞ்சனாவிடம் வந்தது? அதை எதற்காக அவர்கள் தேடுகிறார்கள்? எல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில்..




- தொடரும்....

 
ரொம்ப நல்லா இருக்கு.
யார் குழந்தை
 
Top