Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

17. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
நாதன் சொன்னபடி அனைத்தையும் விற்க ஏற்பாடு செய்து அன்றே எல்லாவற்றையும் பரமன் விற்று விட்டார். மேலிருந்து நடப்பவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உருவமோ வெறி கொண்டு காத்துக் கொண்டிருந்தது, நாதனின் வரவை எண்ணி.

ஆனால் அன்று பகல் பொழுது முழுதும் நாதன் அந்த அறைக்குச் செல்லவே இல்லை. எப்படியும் ஏதேனும் அந்த உருவத்தினால் இன்று நடக்கும் என்று தெரியும் அவருக்கு, இருந்தும் மேலே செல்வதை தவிர்த்திருந்தார் அவர்.

நேரம் இரவை நெருங்கி கொண்டிருந்தது, அகிலன் முகிலன் கடையிலிருந்து இன்னும் வீடு திரும்பவில்லை. எப்படியும் வர வெகு நேரம் எடுக்கும், தனாவும் வீட்டில் இல்லை. மருமகள்கள் கீழே மகாவுடன் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் கவனித்து விட்டு, ஒரு திட்டத்துடன் மேலே சென்றார் நாதன்.

ஒரு உறுதியுடன்.

இன்று அவர் கதவை திறக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வாசலிலேயே நின்று கொண்டார். எப்போதும் போல நாதன் வந்து நின்றதும் கதவு தானாகவே திறந்து கொண்டது.

ஒரே நாளில் நிறைய மாறியிருந்தார் நாதன். பலவாறு சிந்தித்து என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாக அந்த உருவத்தை எதிர்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

அவர் உள்ளே நுழைந்ததும், அதன் கொடூர முகத்தோடு முன்னே வர, அதுவரை பின்னே மறைத்து வைத்திருந்த கோழியை அதன் முன் தூக்கி பிடிக்க, பட்டென்று அதன் இரத்தத்தை உறிஞ்சிவிட்டு தூக்கி எறிந்தது அந்த உருவம்.

நடந்ததை கண்டு அசராமல் நிற்கும், நாதனை அந்த உருவம் அதன் பழுப்பு நிற விழியில் கூர்ந்து கவனிக்க, நாதனோ....

இனி தினமும் உனக்கு ஒரு உயிர் கண்டிப்பா நானே கொண்டு வந்திடுவேன். ஆனா பதிலுக்கு எனக்கு நீ ஒரு உதவி பண்ணனும். எக்காரணம் கொண்டும் இந்த அறைய விட்டு நீ வெளிய வரவேக் கூடாது. நானும் உன்ன பத்தி வெளிய சொல்ல மாட்டேன். என்ன நம்பு. இதுக்கு மேல சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல. நான் வரேன்.

நில் தரணி நாதா. இன்று முழுதும் பலவாறு யோசித்து முடிவெடுத்து வந்திருக்கிறாய் போல. உனக்கு இன்னுமொரு நல்விஷயம் கூறட்டுமா.

என்னால் உனக்கு பல அதிசய அற்புத நிகழ்வுகள் நடக்கும் தரணி நாதா.... காத்திரு ஒவ்வொன்றாய் உன்னை வந்து சேர....

ஆச்சர்யம் கொள்ளாமல் நிதானமாக அறையை பூட்டி விட்டு கீழே இறங்கி வந்துவிட்டார். ஏனெனில் இது அவர் எதிர்பார்த்த ஒன்று தானே. என்னென்ன நிகழ போகிறது என காண மன திடத்துடன் அவரும் காத்திருந்தார்.

எல்லோரும் எப்போதும் போல நாட்களை கடக்க, தினம் தினம் நாதனுக்கு மட்டும் விதவிதமான சோதனைகள் வந்து கொண்டு தான் இருந்தது. அத்தோடு பணமும். போகும் இடமெல்லாம் பணம் வரவாய் வந்து கொண்டிருக்க, அதன் மீது துளியும் நாட்டம் இல்லாமல், அதற்கான காரணத்தையும் வெளியே யாருக்கும் சொல்லாம் தன்னைத் தானே மாற்றியும் கொண்டார் நாதன்.

இப்பொழுதெல்லாம் தேடித்தேடி கோவில்களுக்கு புறப்பட ஆரம்பித்தார். அதில் தான் சித்தன் ஐயாவின் அறிமுகம் நாதனுக்கு கிடைத்தது. ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும் அந்த உருவத்திடம், அவரது தொழிலையே காரணம் காட்டினார். உருவமும் தனக்கு கிடைக்கும் பலிகள் ஆசையில் அவரை சந்தேகிக்கவில்லை. நாதன் அந்த உருவத்திடமிருந்து எப்படியேனும் விடுதலை அடைய வேண்டும் என எல்லா ஊர்களுக்கும் சென்றார். நாட்கள் கரைந்து ஓடியதே தவிர வழி ஒன்றும் கிடைத்த பாடில்லை.

அப்படி இப்படி என்று மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் வீட்டில் நல்ல விஷயம் நடக்க, வீடே கோலாகலமாக இருந்தது.

அகிலன் அப்பா ஆக போகிறான் என்ற செய்தி இதுவரை சோகத்தில் இருந்த நாதனை துள்ளி எழ வைக்க, பேரன் பேத்தி வர போகும் சமயம் அதை ஒழித்தே ஆக வேண்டும் என முழுமூச்சாக இறங்கி, அதில் ஒரு சிறு வெற்றியும் கண்டார். சிறுமலைக் கோயில் அடியார் ஒருவர் அதற்கான ஓர் வழியை சொல்ல,

மறுநாளே கிளம்பி விட்டார் அந்த ஊரை நோக்கி.

நாகர் மலை.

ஊரை பற்றி பல விஷயங்களை அந்த அடியார் கட்டளையாய் கூறியிருந்தார். அதாவது,

அங்கு இருக்கும் ஒவ்வொரு மலை மேடும் நாகத்தின் ஒவ்வொரு தலையை குறிக்கும் அடையாளமாகும். அங்கிருக்கும் ஐந்து மேடுகளில் மத்திய மேட்டில் தான் உனக்கான பதில் பொதிந்திருக்கிறது நாதா. அந்த மலையின் வடிவமே நாகராஜனின் வடிவம் போலத்தான் இருக்கும்.

முதல் மேட்டில் இருக்கும் புல் அருவியில் நீராடிய பின்பே நீ உன் பயணத்தை தொடங்க வேண்டும். உனக்கான பயணம் மிகவும் கடினமானது நாதா. உன் குடும்பம் தப்பிக்க வேண்டுமெனில் நீ அங்கே போய் தான் ஆக வேண்டும். ஒரு போதும் உன் பயணத்திலிருந்து பின் வாங்கி விடாதே, ம்ம் செல்.. இங்கேயே நின்று வீணாக நேரத்தை கடத்தாதே.. புறப்படு இப்பொழுதே... என கட்டளை இட்டிருந்தார்.

வீட்டிற்க்கு வந்தவர் மகாவிடமும், மகன்களிடமும் தகுந்த காரணங்களை சொல்லி அந்த உருவத்தையும் சமாளித்து கிளம்பினார் நாகர் மலை நோக்கி.

தொடர்ந்து இரண்டு நாள் பயணம். இரண்டாம் நாள் அந்தி மாலை நேரம் தான் ஊர் எல்லையை அடைந்தார். கட்டிய ஆடை கையில் கொஞ்சம் பணம் இதை தவிர, வேறு எதுவும் அவர் கொண்டு வரவில்லை. அது தான் அடியாரின் கட்டளையும் கூட. ஊருக்குள் நடந்து அங்கிருந்த கோயில் சத்திரத்திலேயே இரவு தங்கி விட்டார். உணவு எதுவும் தேவையில்லை. எனக்கு தீர்வு ஒன்றே வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படியே அமர்ந்திருக்க,

புதியமனிதரை கண்டதும், கோயில் பூசாரி என்னவென்று கேட்டார். அவரது பயணத்தை பற்றி முழுதும் கூறாமல் மேலோட்டமாக கூறி அவரிடம் உதவியும் கேட்டார்.

என்னோட பிரச்சனைக்கு தீர்வை தேடி தான் நான் இங்க வந்திருக்கேன். பயணம் ரொம்ப கடினமா இருக்கும்னு அடியார் சொல்லியிருக்கார். ஆனா எனக்கு இங்க இருக்குற இடத்தை சரியா அறிய முடியுமான்னு தெரியல. நீங்க கொஞ்சம் உதவி செய்ய முடியுமா?

சிறிது நேர யோசனைக்கு பின் சரி என்ற பூசாரி, காலையில் நேரத்தை குறிப்பிட்டு தயாராக இருக்குமாறு சொல்லி விட்டு கிளம்பினார்.

உதவி கிடைத்த திருப்தி, தீர்வு காண போகும் நிம்மதி என , கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு அன்று தான் நல்ல தூக்கம் தூங்கினார் நாதன். பஞ்சு மெத்தையில் கிடைக்காத ஆழ்ந்த தூக்கம், சத்திரத்தில் கட்டாந்தரையில் அமோகமாக கிடைத்தது அவருக்கு..

நாளை நாகர் மலையுடன் பயணத்தை துவங்குவோம்....



விடை தேடி பயணம் தொடரும்....
Prabhaas....
 
Top