Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

15. Ivan Vasam Vaaraayo!

Advertisement

Annapurani Dhandapani

Well-known member
Member


15. இவன் வசம் வாராயோ!




"கொஞ்சம் நில்லுமா!" என்ற ஈஸ்வர பாண்டியின் குரல் விரக்தியுடன் தன்னுடைய அறைக்குத் திரும்பிய நிரஞ்சனாவைத் தடுத்து நிறுத்தியது.

அவள் நின்று அவர்கள் புறமாகத் திரும்பினாள்.

"இவ்ளோ நேரம் நீ ஒரு கதை சொன்ன! நாங்கல்லாம் கேட்டோம்! இப்ப நா ஒரு கதை சொல்றேன்.. நீ அத கவனமா கேக்கணும்.. சரியா.." என்று பீடிகையுடன் ஆரம்பித்தவரை இளையவர்கள் நால்வரும் விநோதமாகப் பார்த்தனர்.

ஈஸ்வர பாண்டி சொக்கலிங்கத்தைப் பார்க்க, அவர் ஒப்புதல் வழங்குவது போல தலையசைக்க, ஈஸ்வர பாண்டி கதை சொல்லத் தொடங்கினார்.

"ஒரு ஊர்ல.. ஒரு அநாதைப் பையன் இருந்தான். அவனுக்கு படிப்புல ரொம்ப ஆர்வம் இருந்தது. அதுக்காகவே அந்த ஊர் பெரிய மனுஷங்க வீட்ல எல்லாம் ஓடி ஓடி போய் வேலை செய்து அவங்கள தன்னோட படிப்புக்கு உதவ சொன்னான்.

அவங்களும், இந்த காலத்தில இப்டி ஒரு நல்ல பையனா அப்டீன்னு நெனச்சாங்க!

ஊர் கூடி தேர் இழுக்கறதுன்னு சொல்வாங்களே.. அது மாதிரி அந்த பையனை அந்த ஊர் மக்கள் ஒவ்வொருத்தரும் தன் வீட்டு பிள்ளையா நெனச்சி படிக்க வெச்சாங்க.

அவனும் ரொம்ப நல்லா படிச்சான். பள்ளிக்கூடத்தில எல்லா வகுப்புலயும் முதல் மாணவனா வந்த அவனுக்கு ஆசிரியர்களும் சேர்ந்து உதவி செய்ய, அவனுக்கு படிக்கறதுக்கு அரசாங்கத்தில இருந்து உதவித்தொகை கிடைக்க ஆரம்பிச்சது.

அந்த பையனோட நல்ல குணங்களால ஈர்க்கப்பட்டு அவனுக்கு நிறைய பசங்க நண்பர்களா கிடைச்சாங்க. அதுல ஒருத்தன் அவனோட ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்டு ஆனான்.

நல்ல நண்பர்கள், ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும், ஊர் மக்களோட உதவிகள், அரசாங்கத்தோட உதவித் தொகை, இது மாதிரி பல நல்ல விஷயங்களால இன்னும் உற்சாகமான அந்த பையன் பத்தாவது பொதுத் தேர்வில பள்ளிக்கூடத்தில முதல் மாணவனா வந்தான். பன்னிரெண்டாவது பொதுத் தேர்வில மாவட்டத்தில முதல் மாணவனா வந்தான்.

ஊர் மக்களுக்கும் அந்த மாணவனோட பள்ளித்தலைமை ஆசிரியருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. எல்லாரும் திரும்பவும் ஒண்ணு சேர்ந்து அவனை அவனோட லட்சியமான மருத்துவப் படிப்பில சேர்த்தாங்க. அங்கயும் அவன் தன் திறமைய நிரூபிச்சி ரொம்ப நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணி டாக்ராகிட்டான்.

ஊர் மக்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். எல்லாருமா சேர்ந்து அவனுக்கு சின்னதா ஒரு க்ளீனிக் வெச்சி குடுத்தாங்க. தன் ஊர் மக்களோட காசில கிடைச்ச படிப்புன்னு அவனும் அந்த மக்களுக்கு இலவசமா மருத்துவம் பார்க்க ஆரம்பிச்சான்.

ஆரம்பத்திலிருந்தே அவனுக்கு நல்ல பெயர் இருந்ததாலயோ என்னமோ சீக்கிரமே அந்த ஊரோட கைராசிக்கார டாக்டர்ன்னு பெயர் வாங்கிட்டான்.

அவனுக்கு ஒரு நண்பன் கிடைச்சான்னு சொன்னேன்ல.. அந்த நண்பன் இவன மாதிரி டாக்டருக்கு படிக்கல.. சாதாரண பி.காம்தான் படிச்சான்.. ஆனா பாவம்.. அவனும் தன் குடும்ப சூழ்நிலை காரணமா தன் படிப்பை பாதியில நிப்பாட்ட வேண்டிய நிலை வந்துடுச்சி.. ஆனா ஒரு நல்லெண்ணம் கொண்ட ஒரு பொண்ணு அவனோட படிப்பு தொடர உதவி செஞ்சது.. அதுக்கப்றம் அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் செஞ்சி குழந்தை குட்டின்னு குடும்பம் நடத்த ஆரம்பிச்சிட்டாங்க..

அந்த டாக்டரோட க்ளீனிக் கொஞ்ச கொஞ்சமா வளர்ந்தது.. அங்கியே தங்கி மருத்துவம் பாத்துக்க பெட் வசதி, பரிசோதனை செய்துக்க லேப் வசதி, மருந்து வாங்கிக்க பார்மசி.. இப்டி கொஞ்ச கொஞ்சமா வளர்ந்துச்சி.. அதுல வேலை செய்ய நர்ஸ் வார்ட் பாய்.. ஆயான்னு நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு அமைஞ்சது..

எப்பவும் எவனாவது தன் வாழ்க்கையில முன்னுக்கு வந்தா அதக் கெடுக்க சில வில்லனுங்க வருவாங்கல்ல.. அது மாதிரி இந்த கதையிலயும் ஒரு வில்லன் இருக்கான்.. ஜாதி வெறி பிடிச்ச.. பதவி வெறி பிடிச்ச மனித மிருகம்..

அந்த வில்லனும் ஒரு டாக்டரு..

நா கஷ்ட்டப்பட்டு பணம் செலவு பண்ணி டாக்டருக்கு படிச்சிருக்கேன்.. என்ன இந்த ஊர்க்காரங்க மதிக்கல.. ஆனா அவன்.. என்ன சாதி.. என்ன குலம்.. என்ன கோத்திரம்னு தெரியாத அப்பன் ஆயி பேர் கூடத் தெரியாத ஒரு அநாதைப் பய..அப்டீன்னு நெனச்சான்..

ஒரு அநாதைப் பையன் இவ்ளோ தூரம் முன்னுக்கு வந்தது அவனுக்கு பிடிக்கல.. அந்த அநாதைப் பையனுக்கு ஊர் பெரிய மனுஷங்கல்லாம் சப்போர்ட்டா இருக்கறது சுத்தமா பிடிக்கல.. அவனோட சின்ன க்ளீனிக் இப்ப பெரிசா வளர்ந்து ஆஸ்பத்ரியா மாறினது அத விடப் பிடிக்கவேயில்ல..

அந்தப் பையனை எப்டியாவது கவுத்துடணும்னு ப்ளான் போட்டான்.

இருக்கறதுலயே மோசமானது என்னன்னா பகைவனை உறவாடிக் கெடுக்கறதுதான்னு பெரியவங்க சொல்வாங்க.. நம்பிக்கை துரோகம்.. அததான் அந்த வில்லன் இந்த பையனுக்கு செய்ய ஆரம்பிச்சான்.

முதல்ல டாக்டரோட எப்பவுமே நட்பா இருந்து அவனுக்கு தேவையானத தேவைப்பட்டப்பல்லாம் செய்து கொடுத்து அந்த டாக்டரோட நம்பிக்கைக்கு ஆளாக ஆரம்பிச்சான்..

அந்த டாக்டர் பையனும் ஊர் பெரிய மனுஷன், அதுவும் ஒரு டாக்டர்.. தன் மேல இவ்ளோ பாசம் வெச்சிருக்காரேன்னு ரொம்ப ரொம்ப விசுவாசத்தோட இருந்தான்..

அந்த விசுவாசம் எந்த அளவுக்கு இருந்ததுன்னா.. தான் காதலிக்கறதப் பத்தி தன் உற்ற நண்பர்களை விடவும், இந்த வில்லன் கிட்டதான் முதல் முதல்ல சொல்ற அளவுக்கு விசுவாசம்.. அவ்ளோ விசுவாசமா இருந்தான்..

அந்த டாக்டர் தன்னோட ஆஸ்பத்ரில வேலை செய்யற நர்சைதான் லவ் பண்ணினான்.

அத அந்த பெரிய மனுஷன் கிட்ட சொல்லி, அவரையே தனக்காகப் பேசறதுக்கு அந்த நர்ஸ் வீட்டுக்கு கூட்டிட்டும் போனான்.

இந்த நேரத்துக்காகத்தானே அந்த வில்லன் வெயிட் பண்ணினான்.. கல்யாண ஏற்பாட்டையெல்லாம் நல்ல பக்காவா செய்தான்..

டாக்டர் தன்னை ஆதரிச்ச ஊர் மக்களையே தன் சொந்தங்களா நெனச்சி ஊருக்கெல்லாம் பத்திரிகை வெச்சி எல்லாரையும் முறைப்படி தன் கல்யாணத்துக்கு அழைக்கறான்.. தன் உற்ற நண்பனையும் தன் கல்யாணத்துக்கு அழைக்கறான்..

எல்லா ஏற்பாடும் நடந்துகிட்டிருக்கும் போது டாக்டருக்குத் தெரியாம பெண் வீட்டுக்கு போயி பத்து பவுன் நகையும் ரொக்கமா இருபத்தி அஞ்சாயிரம் ரூபா பணமும் குடுத்தாதான் டாக்டர் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவாராம்ன்னு அந்த வில்லன் சொல்ல.. பொண்ணப் பெத்தவங்க இடிஞ்சி போனாங்க..

இல்ல.. டாக்டர் இப்டிலாம் கேக்கற ஆள் இல்ல.. இதுல ஏதோ தப்பிருக்கு.. நா போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்னு சொல்லிட்டு அந்த நர்ஸ் டாக்டரப் பாக்க போயிருக்காங்க..

அங்க போய் டாக்டர்கிட்ட கேட்டு.. அவரு இல்லன்னு மறுத்து அவள சமாதானம் செய்யறாரு.. அந்த பொண்ணும் சமாதானம் ஆகி அங்கிருந்து கிளம்பி தன் வீடு போய் சேர்ந்திடுது.. நகை எதுவும் டாக்டர் கேக்கல.. அது அந்த பெரிய மனுஷன் கிளப்பி விட்டது.. நீங்க பயப்படாதீங்கன்னு தன் பெத்தவங்களையும் சமாதானம் செய்யுது..

சரியா கல்யாணத்துக்கு முதல் நாள் அந்த டாக்டர் தன்னை ஆதரிச்ச ஊர்க்காரங்களோட தன் கல்யாணத்துக்கு கிளம்பறான்.. அந்த வில்லன் வந்து, டாக்டர தனியா அழைச்சிட்டு போய், அந்த பொண்ணுக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்லயாம்.. இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்ல.. டாக்டர் இத நம்பல..

இல்ல.. நீதானே அன்னிக்கும் நா நகையும் பணமும் கேட்டதா பொண்ணு வீட்ல போய் சொன்ன.. நா நம்ப மாட்டேன்னு சொல்ல, அந்த வில்லன் டாக்டர மயக்க ஊசி போட்டு படுக்க வெச்சிட்டு ஊர்க்காரங்க கிட்ட.. கல்யாணப் பொண்ணுக்கு இந்த கல்யாணத்தில இஷ்டம் இல்லயாம்.. கல்யாணம் நின்னுடுச்சின்னு சொல்லி எல்லாரையும் திருப்பி அனுப்பிடறான்..

அவங்கல்லாம் போனதும் பொண்ணு வீட்ல போய் நீங்க நகை போடல.. அதனால டாக்டர் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலன்னு சொல்லிட்டு வந்திடறான்..

மகளோட கல்யாணம் நின்ன விரக்தியில அந்த பொண்ண பெத்தவங்க பொண்ண கூட்டிட்டு ஊரை விட்டே போயிடறாங்க..

கல்யாணம் நின்னது ஊர் மக்களுக்கு ரொம்ப வருத்தமாவும் வேதனையாவும் இருக்கு.. நமக்கே இவ்ளோ வேதனையா இருக்கும் போது அந்த டாக்டருக்கு இருக்காதான்னு நெனச்சாங்க.. அதனால டாக்டரைப் பார்த்து சமாதானம் செய்யலாம்னு டாக்டரத் தேடி வராங்க..

வந்து பார்த்தா டாக்டர் அவரு க்ளீனிக்ல செத்து கிடக்கறாரு..

அதிர்ந்து போய் போலீஸ்ல சொல்றாங்க.. பிரேத பரிசோதனை ரிப்போர்ட்ல, அதிமான அளவு மயக்க மருந்துனால அவர் இறந்திட்டாருன்னு சொல்ல.. கல்யாணம் நின்ன வேதனை தாங்காம தற்கொலை செய்துகிட்டாருன்னு சொல்லி ஃபைல் க்ளோஸ் ஆகிடுது..

இதை நம்பாத டாக்டரோட உற்ற நண்பன், ரொம்ப கஷ்டப்பட்டு உண்மைய கண்டு பிடிக்கறான்..

ஆனா அந்த வில்லன் தன்னோட பண பலத்தை வெச்சி இந்த கேஸ்லேர்ந்து தப்பிச்சிடறான்..

இதான் மா நீ சொன்ன கதையோட முன் கதை!

அந்த டாக்டர்தான் உங்கப்பா ராம்மோகன். அந்த நர்ஸ் உங்கம்மா குணசுந்தரி. அந்த டாக்டரோட உற்ற நண்பன், இந்த என் மாப்பிள்ளை சொக்கலிங்கம்.. அதாவது தமிழோட அப்பா..

நல்லா புரிஞ்சுக்கம்மா.. உங்கப்பா தப்பானவர் கிடையாது.. ஏமாத்துக்காரர் கிடையாது.. உங்கப்பா உண்மையாவே ஒரு நல்லவரு.. அவர் பண்ணின ஒரே தப்பு அந்தப் பாவி தர்மராஜை நம்பினதுதான்.. அந்த தர்மராஜ் இப்ப வரை நல்லாதான் இருக்கான்.. ஆனா அவன் பண்ணின பாவத்துக்கு கண்டிப்பா அனுபவிப்பான்.. உங்கம்மா அப்பா விட்ட உயிருக்கும், நீ விட்ட கண்ணீருக்கும் அவன் பதில் சொல்லுவான்.." என்று சொல்லி முடித்தார் ஈஸ்வர பாண்டி.

நிரஞ்சனாவால் அவர் சொன்னதை நம்பவே முடியவில்லை.

முகில் கயலின் கையில் மெதுவாகச் சுரண்டினான். அவள் திரும்பி அவனைப் பார்க்க, அவன் அவள் காதில் கிசுகிசுத்தான்.

"எனக்கு ஒரு டௌட்டுடீ.."

"என்னங்க.." அவளும் அவனைப் போலவே கிசுகிசுப்பாகக் கேட்டாள்.

"இவ்ளோ சொன்ன அப்பா, இந்த டாக்டரு எந்த கேப்ல (gap) போய் மேட்டர முடிச்சாருன்னு சொல்லவேயில்லயே.."

"சும்மா இருங்க.." என்று முறைத்தாள் அவள்.

"ஹேய்.. கரெக்ட்டாதானேடீ கேக்கறேன்.." என்று வேறு கேட்டு வைத்து அவளிடம் இரண்டு அடிகளை இலவசமாக வாங்கிக் கொண்டான்.

"அதுவும் சரிதான்.. அந்த டாக்டர் பண்ணினது நம்ம அப்பாவுக்கு எப்டி தெரியும்.." என்று அவள் காதில் மீண்டும் கிசுகிசுத்துவிட்டு தன் வாயைப் பொத்திக் கொண்டான்.

"உங்கள.. உள்ள வாங்க பேசிக்கறேன்.." என்று அவளும் அடிக்குரலில் கோபமாகக் கூறிவிட்டு திரும்பிக் கொண்டாள்.

சொக்கலிங்கம் எழுந்து சென்று சில புகைப்படங்களை எடுத்து வருகிறார். அதில் ராம்மோகனும் சொக்கலிங்கமும் இருக்கும் புகைப்படங்கள்.. பள்ளி கல்லூரியில் எடுத்தவை, சொக்கலிங்கத்தின் திருமணத்தின் போது, தமிழ் பிறந்த போது, முகில் பிறந்த போது, கயல் விழி பிறந்த போது, என இவர்கள் குடும்பத்துடன் நெருங்கிய சொந்தமாக வாழ்ந்திருப்பதற்கு அடையாளமாக நிறைய புகைப்படங்களைக் காட்டினார்.

கூடவே, அவருடைய க்ளீனிக் திறப்பு விழா புகைப்படம், அது பெரிய ஆசுபத்திரியாக வளர்ந்தது.. என அதுவும் இருந்தன.

கடைசியாக ராம்மோகன் குணசுந்தரியின் நிச்சயதாம்பூலத்தின் புகைப்படங்களும் இருந்தது.

எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நிரஞ்சனா, கண்ணீர் விட்டு அழுதாள்.

எப்டியிருந்திருக்க வேண்டிய மனுஷன்.. இப்டி.. கடவுளே.. எங்களுக்கு ஏன் இவ்ளோ கஷ்டத்த குடுத்த.. என்று எண்ணி எண்ணி அழுதாள்.

மதுரமும் வளர்மதியும் கயல்விழியும் அவளை சமாதானம் செய்தனர்.

"அந்த பத்திரிகைய அன்னிக்கு பார்த்ததுமே எங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்திச்சும்மா.. அத தெளிவுபடுத்திக்கதான் நாங்க ரெண்டு பேரும் ஊருக்கு போனோம்..

உங்க பெரியம்மா ராஜாத்திக்கு ஆரம்பத்திலிருந்தே தன் தங்கைய அதாவது உங்கம்மாவ பிடிக்காது.. உங்கம்மா பெயருக்கேத்த மாதிரி நல்ல குணவதியாகவும் அழகும் அறிவும் நிறைஞ்சவளாகவும் இருக்கறதால வந்த பொறாமை!

தனக்கு படிப்பு வரல.. ஆனா தன் தங்கச்சி மட்டும் படிச்சி நர்சாகி வேலைக்கு போய் சம்பாதிக்கறாளேன்னு பொறாமை!

அது போறாதுன்னு இப்ப டாக்டர் மாப்ளை வந்துட்டாரேன்னு பொறாமை.. அவ கல்யாணம் நின்னப்றம் தன்னோட அப்பாவும் அம்மாவும் அவள கை கழுவி விடலயேன்னு கோவம்.. எல்லாத்துக்கும் மேல தன் புருஷன் தன் கிட்ட அபிப்ராயம் கேக்காமலேயே தன் தங்கச்சிக்கு தாலி கட்டினாரேன்னு கோவம்.. ஆத்திரம்.. ஆற்றாமை.. எல்லாமா சேர்ந்து மொத்த கோபத்தையும் உன் மேல காட்டியிருக்காங்க.. என்ன வருத்தம்னா.. இத்தன வருஷமாகியும் அவங்களோட கோவம் துளி கூட குறையல.. அது இன்னும் இன்னும் அதிகமாதான் ஆகிட்டு வருது.." என்றார் சொக்கலிங்கம்.

தமிழுக்கு இதெல்லாம் அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஒருத்தன் நல்லவனா வாழறது அவ்ளோ தப்பா.. தன் சுய முயற்சியில முன்னுக்கு வரது அத விட தப்பா.. இதுக்காகவே நிரஞ்சனாவை எதாவது பெரிசா சாதிக்க வெக்கணும்; பிறந்ததிலிருந்து இவ அனுபவிக்காத சந்தோஷத்த எல்லாம் இவளுக்கு நான் தரணும்; இவ கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வராம என் கண்ணுக்குள்ள வெச்சி பத்திரமா பாத்துக்கணும்; என்று தன் மனதுக்குள் நினைக்கத் தொடங்கினான்.

"இப்ப சொல்லுமா.. என் நண்பனோட மகளான உனக்கு, என் மருமகளா வர சம்மதமா?" என்று கேட்டார் சொக்கலிங்கம்.

நிரஞ்சனா ஓடி வந்து அவருடைய பாதங்களில் விழுந்து கதறினாள்.

"நீ உன் குழந்தைய வளர்க்க யார் கிட்டயும் அனுமதி வாங்க வேணாம்.. புரியுதா.." என்று சொல்லி அவளுடைய தலையில் கை வைத்து ஆசி வழங்கினார்.

இனிமேலாவது இவ வாழ்க்கை நல்லா இருக்கணும் என்று பெரியவர்கள் நால்வரும் நினைத்துக் கொள்ள, முகிலும் கயலும் தமிழின் கை பிடித்து கை குலுக்க, தமிழ் அவர்களைப் பார்த்து புன்னகைத்தான்.





ஆனால் இனிமேல் தான் நிரஞ்சனா பெரிய பெரிய சூறாவளிகளைச் சந்திக்கப் போகிறாள் என்பதை நிரஞ்சனா உட்பட இவர்கள் யாருமே அறிய மாட்டார்கள்.






- தொடரும்....


 
Nice mam ஏதாவது சஸ்பென்ஸ் வைக்கறீங்க மேம்
 
Mukil doubt enakum
Epdi Dr kulandai edum
armam iruko
Innum puyal ah hoom
Niranchana samalipa nu thonudu parkalam
Waiting annam
 
வில்லத்தனம் பண்ணிணவன் நல்லா இருக்கான்
பாவம் இந்த பிள்ளை கஷ்டப்பட்டு வாழ வேண்டிய நிலை இருந்தது
 

Advertisement

Top