Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 13

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 13

மறுநாள் காலை சௌம்யாவின் அப்பாவும், அம்மாவும் வந்தார்கள்.
சௌம்யா பேக்கோடும், அழுது சிவந்து போன முகத்தோடும் சிஸ்டரின் அறைக்கு வந்தாள். கூடவே சுமதி. வார்டன் சிஸ்டரும், ரோஸி சிஸ்டரும் சேர்களில் அமர்ந்திருக்க, வந்த சௌம்யாவைக் கண்டதும், அவளது அப்பா கோபம் கொண்டு அவளது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.
விவசாயம் செய்து காய்த்துப் போன கை என்பதால், அவரது கைவிரல்கள் சௌம்யாவின் கன்னத்தில் ஜெராக்ஸாய் விழுந்தன.
சுமதி 'அங்கிள்' என, அவர் அவளை ஒரு முறை முறைத்தார். பின்பு தன் மனைவியிடம் திரும்பினார்.
'எல்லாம் இவள சொல்லணும். மொறப்பையன் தான எங்க போயிடப் போறான்னு புள்ளைட்ட சொல்ல துப்பில்ல. லெட்டர் எழுதுன்னு தன் அட்ரஸ் எழுதியிருந்த லெட்டர வேற குடுத்திருக்கா. மாப்ளைக்கு இப்பவே சப்போர்ட்!' என்று இரைந்தார்.
அவரது கோபக் குரலைக் கேட்டு ஆங்காங்கே மாணவிகள் கூடியதைப் பார்த்த வார்டன் சிஸ்டர் 'சரி சரி உங்க சண்டய வீட்ல வச்சிக்கங்க. சின்னப் புள்ளைங்க கிட்ட என்ன சொல்றதுன்னு தெரியாம சொல்லி வச்சிர்றது. அது இப்படி வளந்து நிக்கறப்போ, என்ன பண்ணா பித்தம் தெளியும்னு கதற வேண்டியது. சீக்கிரம் கூட்டிட்டுப் போங்க. எல்லாம் எடுத்துட்டியா சௌம்யா' என, சௌம்யா கன்னத்தைப் பிடித்தவாறே மெல்ல தலையை ஆட்டினாள்.
சௌம்யாவின் அப்பா குழைந்தார்.
'தப்பு நடந்துருச்சி சிஸ்டர். அவன லெட்டர் போடாம நாங்க பாத்துக்குறோம். ஊர்ல தெரிஞ்சா பேர் தப்பா பேசுவாங்க. இன்னும் ரெண்டு வாரம் தானே புள்ள இங்க இருந்து பரீச்ச எழுத ஹெல்ப் பண்ணுங்க சிஸ்டர்.' என்று கெஞ்சினார்.
'சாரி சார். என்னால எதுவும் பண்ண முடியாது. அவ நல்லா படிக்கிற பொண்ணு. அவளே படிச்சிருவா. நீங்க கூட்டிட்டு போங்க.' என்றார் வார்டன் சிஸ்டர்.
சௌம்யாவை ஒரு முறை முறைத்தார் அவர்.
'ம்! வா!' எனவே, சௌம்யாவின் அம்மா அவள் பக்கம் வந்து கைத்தாங்கலாய் அணைத்துக் கொண்டாள்.
'வா சௌமி, போகலாம்.'
சுமதியின் கையில் இருந்த ஒரு சூட்கேஸை வாங்கிக்கொண்டு,
'வரென் சுமதி' என்று கண்ணீருடன் சொல்லி விட்டு வார்டன் சிஸ்டரிடம் 'வரென் சிஸ்டர்' என்று சொன்ன சௌம்யா ரோஸி சிஸ்டரை கண்டு கொள்ளவே இல்லை.
'மம்மி! பசிக்குது' என்ற யஜுவின் குரல் அவளை நிகழ்காலத்திற்கு மீட்டது.
ஃப்ரிட்ஜைத் திறந்து பாலை எடுத்து காய்ச்சி சாக்கோலக் போட்டு கலக்கி ஒரு கிண்ணத்தில் ஸ்பூன் போட்டு கொடுக்க, யஜு அதை எடுத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்து டிவி போட்டு சோட்டா பீம் பார்த்துக் கொண்டே சாப்பிடத் துவங்கினான்.
அவள் டைமைப் பார்த்தாள். பன்னிரண்டாகியது.
சுமதி இன்னும் வரவில்லயே. ஃபோன் பண்ணலாமா? ட்ராஃபிக் ஆ இருக்கும்!
அப்ப விட்ட சுமதிய அப்புறம் எப்ப மீட் பண்ணோம்?
ஸ்கூல் ஃபங்க்ஷன்ல...
சௌம்யாவின் கண்களில் அந்த ஃபங்க்ஷன் பசுமையாய் முன் வந்து நின்றது.
ஹாஸ்டல் விட்டு வந்ததும் வீட்டில் அத்தயும் சந்துருவும் நின்றிருந்தார்கள். சௌம்யா அழுதபடி தனது ரூமுக்குப் போய் விட்டாள்.
'அவ பரீச்ச முடியற வர நீ இனிம இந்த பக்கம் வராதெ' என்று சொல்லி விட்டு 'என்னண்ணே இப்டி சொல்ற' என்ற தங்கச்சி பக்கம் திரும்பாமல் வெளியே போய் விட்டார் சௌம்யாவின் அப்பா.
அத்தையும் என்ன பண்ணுவது என்று தெரியாத சந்துருவும் வெளியே மெல்ல நகர்ந்தார்கள்.
மறுநாள் காலை.
பக்கத்து வீட்டு இசக்கியம்மாள் சௌம்யாவைப் பார்க்க வந்தாள்.
'சௌம்யா! இன்னும் அழுதுட்டே இருந்தா எப்படி?' என்று அவளருகே படுக்கையில் அமர்ந்தாள்.
பின்பு கிசுகிசுப்பாய் 'இங்க பாரு உங்க மாமா குடுத்து விட்டிருக்கு' என்று இடுப்பில் சொருகி இருந்த, மடிக்கப்பட்ட வெள்ளை காகிதத்தை நீட்டினாள்.
சௌம்யா சட் என்று அதை வாங்கி பக்கத்தில் இருந்த புத்தகத்தில் செருகினாள்.
'தாங்க்ஸ் டி' என்றாள்.
பின்பு இசக்கியம்மாள் அறை வாசலில் நின்றவாறே உள்ளே கிச்சனில் வெண்டைக்காய் நறுக்கிக் கொண்டிருந்த சௌம்யாவின் அம்மாவிடம் கேட்டாள்.
'சித்தி! சாயந்திரம் சௌம்யாவும், நானும் கோயிலுக்கு போயிட்டு வரட்டுமா?'
'அவ அப்பா திட்டுவாருடி!'
'நானும் கூட போயிட்டு சீக்கிரம் கூட்டிட்டு வந்திர்றென். பரீச்சைக்கு அதுவும் வேண்டிக்கணும்ல'
சௌம்யாவின் அம்மாவிற்கு புரியாமல் இல்லை. அவளும் பருவ வயதைத் தாண்டி தானே வந்திருக்கிறாள். அழுது கொண்டே இருக்கும் மகளைக் காண சஹிக்க வில்லை. சந்துரு நல்ல பையன். ஏதாவது புத்திமதி சொல்லட்டும்.
'சரி! சாயந்திரம் நாலு மணிக்கு போயிட்டு அஞ்சு மணிக்கு வந்திரணும்.' எனவே, இசக்கியம்மாள் அறையின் உள்ளே திரும்பி சௌம்யாவைப் பார்த்து கண்ணடித்தாள்.
'சரி சித்தி.நான் வரென் சௌமி.'
என்று மின்னலாய் வெளியெ போக, சௌம்யா சிறிது நேரம் கழித்து இசக்கி கொடுத்த வெள்ளைப் பேப்பரை எடுத்து ஜாக்கெட்டின் நடுவில் சொருகிக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.
கதவை சாத்திக் கொண்டு வெள்ளைப் பேப்பரை எடுத்துப் பிரித்தாள்.
'இசக்கியம்மாவுடன் கோவிலுக்கு வரவும். இன்று முழுவதும் கோவில்ல தான் காத்திருப்பேன். ஐ லவ் யூ. சந்துரு'
சௌம்யாவிற்கு குப் என்று சந்தோஷம் பொங்கியது. முகம் ப்ரகாசம் அடைந்தது.
எப்போது 4 மணி ஆகும் என்று காத்திருந்து இசக்கியம்மா வந்தவுடன் அம்மாவிடம் சொல்லி விட்டு கிளம்பினாள்.
சந்தி சுடலை கோவிலில் அவளை விட்டு இசக்கியம்ம்மாள் 'நான் பக்கத்துல இருக்கிற பார்வதிய பாத்துட்டு அஞ்சு மணிக்கு வந்திர்றென். ரெடியா இரு' என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.
கோவிலில் சந்துரு நின்றிருந்தான்.
சௌம்யாவின் கண்கள் நீர் சொரிந்தன.
சௌம்யாவின் பக்கம் வந்து 'சாமி கும்பிட்டுட்டு வந்து ரோட்டு முக்குல நில்லு. சைக்கிள்ல வந்து கூப்டுக்கறென்' என்றான்.
சௌம்யா தலையை ஆட்டி விட்டு சாமியிடம் எல்லா ப்ரச்சினையையும் சரி ஆக்கணும் என்று வேண்டிக் கொண்டு வெளியே வந்து தெரு முக்கில் நின்றாள்.
சந்துரு சைக்கிளில் வந்து ஓரமாய் நிற்கவே கேரியரில் ஏறிக் கொண்டாள்.
சந்துருவின் அருகாமையும் வேர்வை வாசமும் அவளது மனக் கவலைகளை எல்லாம் தூக்கி வீசியது.
கொஞ்ச தூரம் வந்து ஆள் இல்லாத ரோட்டின் ஓரமாய் கிடந்த மரத்தினடியில் சைக்கிளை நிறுத்தினான். வயல் வெளிகளுக்குச் செல்லும் ரோடு என்பதால், விவசாயிகள் பொழுது சாயும்போதே அந்த வழி வருவார்கள்.
'ஏன் சௌமி! ஒனக்கு ரொம்ப கஷ்டம் குடுத்திட்டனா?'என சந்துரு கேட்க, சௌம்யா 'சட்'என்று 'அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல மாமா.' என்றாள்.
'அத்தை லெட்டர்னா படிக்க வாய்ப்பில்லன்னு நெனச்சென். என் பேர்ல லெட்டர் போட்டிருந்தா படிப்பாங்களோன்னு பயந்துட்டேன். என் மேலயும் தப்பு இருக்கு'
'அத விடுங்க மாமா.' என்று சௌம்யா சலித்துக் கொள்ள, சந்துரு உறுதியுடன் கூறினான்.
'எங்க நீ அவமானப்பட்டு அழுதியோ அங்க நீ சிரிச்சிகிட்டு நிக்கறத நான் பாக்கணும். இனி நான் ஒன்ன எக்சாம் முடிஞ்ச பிறகு தான் பாப்பேன். நீ நல்ல படிச்சு நல்ல மார்க் எடுக்கணும், என்ன'
சௌம்யா நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.
'சரி மாமா. காலேஜ்லாம் நான் போக ஆச இல்ல. படிப்பு இதோட போதும்.'
'என்ன இது. வேதாளம் மறுபடி முருங்க மரம் ஏறுது? காலேஜ் படிக்கிறப்ப தான் நானும் திருநெல்வேலி வந்துருவேம்ல. ஏன் பயப்படுற?'
அவன் கண்களையே பார்த்தாள்.
'இப்படி பார்த்தா நான் சரின்னு சொல்லிடுவேன்' என்று சந்துரு சொல்லவே சிரித்தாள்.
'இப்படி சிரித்தாலும் தான்'
டக் என்று வெட்கத்தோடு திரும்பிக் கொள்ள,
'இப்படி வெட்கப் பட்டாலும் தான்.'
என்று சந்துரு சொல்ல, செல்ல கோபத்தோடு திரும்பினாள்.
'அப்ப என்ன தான் பண்றது மாமா?' என்று சிணுங்கினாள்.
'இப்படி சிணுங்கினாலும் தான்' எனவே பக்கத்தில் இருந்த ஒட்டுப் புல்லை கிள்ளி அவனை நோக்கி எறிந்தாள். அது அவனது சட்டையில் ஒட்டவே அவன் அதை கவனியாது சைக்கிளில் ஏறினான்.
'சரி வா. இசக்கி காத்திட்டு இருக்கும். அது தான் நமக்கு இனிமே போஸ்ட் வுமன்.'

என்று கீழ்வரிசைப் பற்கள் பளிச்சிட சிரிக்க, சௌம்யாவும் சிரித்தாள்.
 
Nice epi.
Yedi penne intha edabadathi (mediator)
vela romba danger,maattuna antha randu ennamum thapichu odidum unn nilamai kanthal aagidum sutharichuko, Easkkiamma.
Hmmmm...interesting.
 
அப்பா கோப படுறாரே. சந்துரு நல்ல மார்க் எடுக்கனும் என சொல்றார் :love: :love: :love:
 
Top