Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 11

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 11

'மாமாவுக்கு போட்டோ குடுத்தேன். அப்புறம் முருகன் கோயிலுக்கு போய் வேண்டிகிட்டோம். சைக்கிள்ல பின்னால உக்காந்து மாமா கூட போறது எவ்ளோ சுகம் தெரியுமா?'
சுமதி சௌம்யா கொண்டு வந்திருந்த அதிரசத்தை சுவைத்துக் கொண்டே கதை கேட்டாள்.
'சீக்கிரம் ப்ளஸ் டூ முடிக்கணும். அப்புறம் காலேஜ் மூணு வருஷம். அப்புறம் ஏதாவது வேல கெடச்சிரும். மாமாவ கட்டிகிடணும். அப்புறம்...'
'அப்புறம் என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். நீ சொல்ல வேண்டாம்.' என்று சுமதி குறும்பாய் சிரிக்கவே, ஒரு அழகான சீயை உதிர்த்தாள் சுமதி.
அடுத்து வந்த மூன்று மாதங்கள் படிப்பிலேயே கரைந்தன.
ரோஸி சிஸ்டரிடம் இருந்து மட்டும் ஒதுங்கிக் கொண்டாள் சௌம்யா.
கேட்ட கேள்விக்கு மட்டும் பதில். ஆனாலும் கணக்கில் விட வில்லை. ரோஸி சிஸ்டர் மார்க் குறைக்கவே இடம் கொடுப்பதில்லை.
அதுவரை வைத்த அனைத்து பரீச்சைகளிலும் நூற்றுக்கு நூறு எடுத்தாலும் ஒரு பாராட்டு.. ம்ஹூம்.. அவளும் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொண்டாள்.
ஆனாலும் அனைத்து பாட ஆசிரியர்களும் அவள் மார்க்கை, பேப்பரை சிலாகித்து கூறும்போது அவளுக்கு பிடித்த மேத்ஸ் சப்ஜெக்ட் ஸ்டாஃப் பாராட்டாதது அவளுக்கு ஒரு குறையாகவே இருந்தது.
சுமதி நிறைய அடி வாங்கினாள்.
சௌம்யாவின் முயற்சியால் எல்லா பாடங்களிலும் பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் சுமதி அறுபதிற்கு மேல் எடுக்கும் மாணவியானாள்.
இடையில் சுமதியைப் பார்க்க வந்த அவளது பெற்றோர் சௌம்யாவிற்கும் சேர்த்து வடை பாயாசம், தோட்டத்தில் விளைந்த வேர்க்கடலையை வறுத்து எடுத்து வந்திருந்தனர். ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிடும் சுமதிக்கு ஒரு சேஞ்ச் இருக்கட்டுமே என்று அவளது அம்மா எண்ணெய் கத்திரிக்காய் குழம்பும் அரிசி வத்தலும் கைக்குத்தல் அரிசி சாப்பாடும் கொண்டு வந்திருந்தாள்.
சௌம்யாவையும், சுமதியையும் உட்கார வைத்து சோற்றைப்பிசைந்து ஆளுக்கு ஒரு உருண்டை என்று கொடுத்தாள். அந்த அன்னையின் பாசத்தில் மயங்கிப் போனாள் சௌம்யா.
இன்னொரு மாத வீக் எண்டில் சௌம்யாவின் அம்மா வந்து நெய் உருண்டையும், ஊறுகாய் பாட்டிலும் குடுத்து விட்டுப் போனாள்.
இவ்வாறு பரஸ்பரம் சுமதியும், சௌம்யாவும் மிகவும் நெருங்கிப் போனார்கள்.
காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளில் மாற்றி மாற்றி லெட்டர் போட்டுக் கொண்டார்கள்.
முழு ஆண்டு லீவில் சௌம்யா ஊருக்கு சுமதியும், சுமதி ஊருக்கு சௌம்யாவும் விசிட் அடித்தார்கள்.
'நேர்ல உங்க மாமா ரொம்பவே நல்லா இருக்கார்டி. ரொம்ப கண்ணியமாவும் நடந்துக்கறாரு.'
என்று கமெண்ட் அடித்தாள் சுமதி.
'எப்பிடிடி சொல்ற?'
'நம்ம மூணு பேரும் நாகர்கோவில்ல குமார் தியேட்டர்ல வால்டர் வெற்றிவேல் படம் பாக்க போணோம் இல்ல. அப்ப நம்ம பால்கனில வரிசையாதான உக்காந்திருந்தோம். அவர் உங்கிட்ட ஒரு குறும்பும் பண்ணலயே'
சௌம்யா பெருமிதமாய் முறைத்தாள்.
'அப்போ நீ படம் பாக்கல்ல. எங்களயே தான் பாத்திருக்க.'
'அப்டி இல்ல' என்று அசடு வழிந்தாள் சுமதி.
ப்ளஸ் டூவில் இருந்து வீட்டிற்கே போகக் கூடாது என்று கட்டுப்பாடு போட்டார்கள்.
அரசு விடுமுறை நாட்களில் கூட ஊருக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
எப்போதும் படிப்பு படிப்பு என்று புத்தகத்துடன் மாரடித்தார்கள்.
சௌம்யா திருட்டுத் தனமாய் ரூமில் புத்தகத்தின் நடுவே போர் அடிக்கும்போது அனுராதா ரமணன், சிவசங்கரியை ஒளித்து வைத்து படிப்பாள்.
சுமதி அவைகளை வாங்கி சினிமா துணுக்குகளை மட்டும் படித்து விட்டு 'இவ்ளொ பெரிய கதை எல்லாம் எப்படி தான் படிக்கிறயோ' என்று தந்து விடுவாள்.
ஊருக்குச் செல்ல முடியாததால், லெட்டர் போடுமாறு அம்மாவிடம் சொல்லி இருந்தாள். தீபாவளி, மற்றும் கிறிஸ்துமஸ்க்குத் தான் விடுமுறை தந்தார்கள். அதுவும் இரண்டே நாட்கள். நியூ இயர் கூட ஹாஸ்டலில் தான்.
சௌம்யாவிற்கு இயல்பாகவே படிப்பில் ஆர்வம் இருந்ததால் இன்னும் மூன்று மாதம் தானே என்று பல்லை கடித்துக் கொண்டே பாலகுமாரன், சுஜாதா நாவல்களில் மூழ்கி பொழுதைப் போக்கிக் கொண்டாள்.
ப்ராக்டிகல் எக்ஸாம் தொடங்கி வரப் போகும் பப்ளிக் தேர்வுக்கு எச்சரிக்கை மணி அடித்தது.
ப்ராக்டிகல் எக்ஸாம் எல்லாம் முடிந்து ஸ்டடி லீவ் விட்டிருந்தார்கள்.
எல்லா ப்ராக்டிகலிலும் அம்பதுக்கு அம்பது உறுதி என்று எல்லா டீச்சரும் சொல்லி இருந்தார்கள்.
நம்பிக்கையோடு படிக்க ஆரம்பித்தாள் சௌம்யா.
ஹாஸ்டலின் வார்டன் சிஸ்டர் அவளுக்கும், அவளைப் போன்ற நல்ல மதிப்பெண் எடுக்கப் போகும் மாணவிகளுக்கும் பன்னிரண்டு மணி வரை படிக்க ஒரு அறையும் பிளாஸ்க்கில் சுடச் சுட டீயும் ஏற்பாடு செய்திருந்தார். எல்லா க்ரூப்பில் இருந்தும் மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு படித்தனர். அந்த அறையில் அவளுக்கு மிகவும் நெருக்கமான கரோலினும் இருந்தாள்.
ஒரு நாள்...
ஸ்டடி ஹாலில் 'கேர்ள்ஸ்' என்று உரக்கக் கத்தியவாறு கையில் பிரம்புடன் ஹாலின் நடுவே வந்து நின்றார் ரோஸி சிஸ்டர்.
புத்தகங்களில் மூழ்கி இருந்த அனைவரும் ஒரு கணம் நிமிர்ந்து என்னவோ என்று அதிர்ச்சியுடன் சிஸ்டரைப் பார்த்தனர்.
'நான் படிக்கிறத எல்லோரும் கேளுங்க.' என்று சொல்லியவாறு ஒரு இன்லாண்ட் லெட்டரை எடுத்தார்.

அனைவருக்கும் வயிற்றில் புளியை கரைத்தது.
 
Nice epi.
Mark factory ah. Aanalum Sowmiya pol girls ku nalla arrangement. Atleast her generation onwards will come up from their village.
Ellam seri ah than povunu ithilu mama eppola miss aagi poyathu??
 
Top