Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 4

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 4

எதிரே திடீரென்று ஒரு உருவம் வந்து குதித்ததும் இரு சிறுமிகளும் பயத்தில் அலறினர்.
கருப்பாய் தாட்டியாய் லுங்கியும், பனியனும் மட்டுமே அணிந்திருந்த அந்த ஆள் மீசையை முறுக்கி விட்டிருந்தான். கண்ணில் கபடம் தெரிந்தது. தலை கலைந்திருந்தது. இவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.
நித்யாவும் கல்யாணியும் பயத்தில் விறைத்து அவனையே பார்த்தனர். பயத்தில் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டனர். மழை இன்னும் நின்ற பாடில்லை.
கல்யாணி தான் வாயைத் திறந்தாள்.
'எங்கள விட்டுடுங்கண்ணா. மழ வந்ததால ஒதுங்கி நிக்கிறோம். எங்களுக்கு பயமா இருக்குண்ணா.'
அவன் கல்யாணியைப் பார்த்தான். பின்னர் நித்யாவைப் பார்த்தான்.
'பாப்பா! அந்த காதுல கெடக்குற கம்மல கழட்டித் தா. விட்டுர்றென்.' என்றான் கர கர குரலில்.
நித்யாவுக்கு திக் என்றது.
கல்யாணி 'அவங்க அம்மா திட்டுவாங்கன்னா. வேண்டாம்னா. நாங்க ரொம்ப தூரம் நடந்து வந்து படிக்கிறொம்னா. அவங்கம்மா இப்படி ஆச்சுன்னா இவள ஸ்கூலுக்கு போக வேண்டாம்னு சொல்லிருவாங்கண்ணா' என்று சொல்ல அவன் அதைக் கேளாது நித்யாவை நோக்கி கையை நீட்டினான்.
'ம்ம் கழட்டு.'
நித்யா ஒரு கையை மெதுவாக வலது காதை நோக்கி நகர்த்த நீட்டிய கையை பலமாய் ஒரு கடி கடித்தாள் கல்யாணி.
அவன் 'அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆ' என அலறியபடி கல்யாணியின் தலையைப் பிடிக்க அவள் அவன் கையை விட்டு விட்டு 'நித்யா! ஓடு! ஓடு! ' என்றாள்.
நித்யா டக் என்று மரத்தை விட்டு நகர்ந்து மழைக்கு வந்தவள் மறுபடியும் மரத்தின் அடியில் வந்து 'நீ வந்தா தான் போவேன்' என்றாள். அந்தத் திருடன் கல்யாணியின் தலையில் இருந்து கையை எடுத்து கடிபட்ட கையை 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' என்றவாறு பார்க்க கல்யாணி நித்யாவின் கையைப் பிடித்து இழுத்தவாறு ஓடினாள்.
மழை அவர்கள் இருவரையும் முழுதும் நனைக்க அவர்கள் மண் பாதையில் தேங்கி இருக்கும் தண்ணீர்ப் பகுதிகளில் எல்லாம் காலை வைத்து பளக் பளக் என்று ஓடினார்கள். வெறுங்காலில் மழைச் சேறு பட்டு பாவாடையில் பின்பக்கம் தெறிக்க அதை எல்லாம் கவனம் கொள்ளாது ஓடினார்கள். மூச்சு இரைக்க அரை மைல் ஓடி சந்திரா டாக்டர் தோட்டப் பக்கம் வந்தார்கள். அங்கு மம்பட்டியால் சேரும் தண்ணீரை மடை மாற்றம் செய்து கொண்டிருந்த சுப்பையா ஓடி வரும் இவர்களைக் கண்டதும் 'என்னாச்சு புள்ளைங்களா?' என்று மம்பட்டியுடன் நிமிர்ந்தான்.
நித்யா மூச்சு வாங்கிக் கொண்டே சொன்னாள்.
'தி.. திருடன்.. அ... அங்க.. ஆ...ஆலமரத்துல... கம்மல் ... கேட்..டான்...'
'திருடனா?' என்ற சுப்பையா 'ஏல பாண்டி!' என்று கத்த திமு திமு வென்று அங்கங்கே இருந்த ஆட்கள் திரண்டனர்.
'நீங்க ரெண்டு பேரும் அந்த பம்ப் செட் ரூம்ல நில்லுங்கம்மா' என்று சொல்லி விட்டு நாலைந்து ஆட்கள் அந்த ஆலமரம் நோக்கி ஓடினார்கள். காட்டில் வேலை செய்து கொண்டிருந்த பொம்பளை ஆட்கள் பம்ப் செட் ரூமிற்குள் வந்து இந்தப் புள்ளைகளிடம் விஷயத்த கேட்டு 'உச்' கொட்டிக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில் முகத்தில் கடவாயில் ரத்தம் ஒழுக கைகள் பின்னால் துண்டால் இறுக்கி கட்டப்பட்டிருக்க, அந்தத் திருடன் அங்கு இழுத்து வரப்பட்டான்.
செய்தி காட்டுத்தீயாய் அந்த மழையிலும் ஊருக்குள் பரவ கிராமமே சந்திரா டாக்டர் தோட்டத்துப் பக்கம் கூடியது. தலையில் துண்டைப் போட்டவாறும், குடையைப் பிடித்தவாறும் ஆட்கள் அங்கு நிறைய ஆரம்பித்தனர்.
மேரி டீச்சர் குடையுடன் வந்து நித்யாவையும், கல்யாணியையும் இரு கைகளால் அணைத்துக் கொண்டார்.
'ஒங்களுக்கு ஒண்ணும் ஆகலியே?' என்றார்.
நித்யா 'இல்லம்மா! கல்யாணி தான் அந்த ஆள் கைய கடிச்சா. அவன் கைய எடுக்கவும் ஓடி வந்துட்டோம்.' என்றாள்.
ஒரு மினி பஞ்சாயத்து அங்கு டக் என்று உருவானது.
ஊர் பண்ணையார் ஒரு ஆள் குடை பிடிக்க நின்று கொண்டிருந்தார்.
'எந்த ஊர்ல ஒனக்கு?'
அந்தத் திருடன் கண்கள் செருக வாயைத் திறவாமல் கோழை வடிய தலை குனிந்து நின்றிருந்தான்.
'கேட்கறாருல்ல சொல்லுல.' என்றான் அவனது கையை இறுகப் பிடித்திருந்தவன்.
அவன் மெல்ல வாய் திறந்து அடுத்த மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊரைச் சொல்ல பண்ணையார் கடுப்பானார்.
'ஒங்க ஊர்ல குழந்தைங்க கிட்ட தான் திருடச் சொல்லி சொல்லிக் குடுக்குறாங்கலா? கொஞ்சம் கூட அறிவே இல்ல. படிக்கிற பொம்பள புள்ளைங்க கிட்ட ஒன் திமிர காமிச்சு பயமுறுத்தி நகைய கேக்கற? இப்படி சின்னப் புள்ளைங்க நகைய பறிச்சு தான் இந்த உசுர வளக்கணுமா? ஒங்க ஊர் எவ்ளோ மானம் மரியாதயான ஊரு! உங்க ஊரு செல்லமுத்து எனக்கு நல்லா தெரிஞ்சவரு தான். அவருலாம் இத தெரிஞ்சா என்ன துடி துடிப்பாரு தெரியுமா? ஊருக்கு கௌரவம் தேடித் தர வேண்டாம். அவ மரியாத தேடித் தராம இருக்கலாம்ல? அதென்ன வயசான பாட்டி பாம்படத்த அறுக்கறதும், கொழந்தைங்க காதுல கழுத்துல கெடக்கறத உருவிக்கிறதும்! ஆம்பள தான நீ? கையும் காலும் நல்லாத்தான இருக்கு? ஒழச்சு சம்பாதிக்கிறதுக்கு என்ன? நீ செய்ற விசயத்துனால எங்க ஊர் பொம்பளங்க புள்ளைங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாம போயிட்டாங்கன்னா நாலெழுத்து தெரியாம போயிடுமுல்ல. ஏங்க டீச்சர்? என்ன சொல்றிய?' என்றார்.
'இவனுக்கெல்லாம் பயந்து அனுப்பாம இருக்க மாட்டென். கல்யாணி மாதிரி புள்ளங்க இருக்கறப்ப எனக்கு எதுக்கு பயம்? பெரியவங்க இருக்கறாங்கன்னு பாக்கறென். இல்ல செருப்பு பிஞ்சிடும் ஆமா. சின்ன புள்ளைட்ட திருட துணியறவம்லாம் மனுசனா?' என்று கோபப்பட்டார் மேரி டீச்சர்.
'நல்லா சொன்னீங்க டீச்சர். ஏ சுப்பையா! இன்னைலருந்து ஏழு நாளைக்கு நம்ம தோட்டத்துல இவன வேலைக்கு வச்சிரு. கூலி கெடயாது. ரெண்டு வேள சாப்பாடு மட்டும் போட்ரு. ஒரு வாரம் முடிஞ்சதும் தொரத்தி விட்ரு. ஒழைக்கத் தெரியாதவனுக்கு ஒழைக்க கத்துக் குடுத்ரலாம். நாளைக்கு அத வச்சாவது திருட்ட விட்டுட்டு ஒழைக்க கத்துகிடட்டும் அறிவு இருந்தா? மத்தவங்கள்லாம் என்ன சொல்றீங்க?'
'சரி பண்ணயாரே!'
'சரி தான் பண்ணயாரே!'
'நல்ல தீர்ப்பு தான்!'
'அப்படியே பண்ணிரலாம்.'
கலவையான குரல்களோடு கூட்டம் கலையத் துவங்க, மழை நின்றிருந்தது.
'பண்ணையாருக்கு ஒரு வாரத்துக்கு கூலி குடுக்காம வேல செய்ய ஒரு ஆளு' என்று கிசுகிசுத்தான் ஒருவன்.
'அப்படி எல்லாம் சொல்லாத. ரெண்டு வேள அரிசி சாப்பாடு போடறாரில்ல. நம்மலாம் வேலைக்கு வரப்ப கூழ் தான கொண்டு வர்றோம்.'
மற்றொருவன் மடக்கினான்.
மேரி டீச்சர் கல்யாணியையும் நித்யாவையும் கூட்டிக்கொண்டு வந்தார். வரும் வழியில் எதிர்பட்டாள் முத்தம்மாள். முகம் கோபத்தில் சிவந்திருந்தது.
'அந்த நாயி எங்க இருக்கான் டீச்சர்? பச்ச புள்ளய்ட்ட வீரத்த காட்ட வந்திருக்கானே? என் கையால ரெண்டு போடு போட்டாதான் என் மனசு அடங்கும்! பிச்சக்கார நாயி!' என உறுமினாள்.
'அதெல்லாம் பண்ணயார் சரி பண்ணிட்டாரு முத்தம்மா. இத மறந்துட்டு இனி ஆக வேண்டியத பாக்கலாம். சீக்கிரம் ஒரு சைக்கிள் வாங்கச் சொல்றேன் சார. இவங்களுக்கு ஓட்ட கத்துகுடுத்துரலாம். மாறி மாறி ஓட்டிட்டு ஸ்கூல் போயி வரட்டும்.'
'நல்லது டீச்சர். நான் வரேன்' என்று கல்யாணியை கூட்டிக்கொண்டு ஓரளவு சமாதானத்துடன் கிளம்பினாள் முத்தம்மாள்.
மறுநாள் ஆகஸ்ட் 15.
ஸ்கூலுக்குச் சென்று சங்கே முழங்கு பாடலுக்கு ஆடி முடித்து விட்டு கை நிறைய ஆரஞ்சு மிட்டாய் வாங்கினர் நித்யாவும் கல்யாணியும்.
'பக்கத்து பாய்ஸ் ஸ்கூலுக்கும் போயிட்டு வரலாம் நித்யா' என்றாள் கல்யாணி.
'வேணாம் கல்யாணி! வீட்டுக்கு போலாம்.'
'நீ பயப்படாத! புள்ளைங்களும் அங்க போகும்.' என்று சொல்லியபடி பாய்ஸ் ஸ்கூல் நோக்கி நடக்கும் புள்ளைங்க கூட்டத்துடன் அவளையும் கூட்டிச் சென்றாள் கல்யாணி.
அங்கு விழா முடிந்து ஆசிரிய ஆசிரியைகள் கை நிறைய ஆரஞ்சு மிட்டாய்கள் எடுத்து வரும் மாணவ மாணவிகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர்.
நித்யாவும், கல்யாணியும் அந்த வரிசையில் நின்று ஆரஞ்சு மிட்டாய்களுடன் திரும்பினர்.
வரும்போது ஒவ்வொரு ஆரஞ்சு மிட்டாயாய் வாயில் அதக்கி அதன் சுவையில் மெய் மறந்தனர்.
கூட்டத்தோடு கூட்டமாய் ஊரைப் பார்க்க திரும்பினர்.
மத்தியானம் சாப்பிட்டு முடிந்ததும் கல்யாணி நித்யாவைப் பார்க்க வந்தாள்.
'கல்யாணி' என்று கூப்பிட்டாள் மேரி டீச்சர்.
'டீச்சர்!'
'நான் பைசா தரேன். முக்குக்கட மணி சைக்கிள் கடைல போய் சைக்கிள் வாடகைக்கு எடுத்துட்டு வாங்க.'
'சரி டீச்சர்'
நித்யாவும் கல்யாணியும் போய் மணி சைக்கிள் கடையில் டீச்சர் பேரைச் சொல்லி ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் என்று வாடகை சைக்கிள் நீலக்கலரில் பிடித்து வந்தனர்.
மேரி டீச்சர் அந்த வீதியில் நின்று அவர்களுக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தார்.
முதலில் ரெண்டு பேரும் பொதுக் பொதுக் என்று விழுந்தனர். பின்னர் கல் ஒன்றின் பக்கம் தள்ளிச் சென்று அதைத் தாங்கி சைக்கிளில் ஏறி மிதித்தனர். முதலில் குறுக்கு ஒரு பக்கமாய் இழுத்துச் சென்றது. பின்னர் டைம் முடியவே அடுத்த நாள் மீண்டும் ஓட்டினர்.
ரெண்டு நாட்கள் கழித்து நல்லாவே ஓட்டக் கற்றுக்கொண்டு வீதிகளில் உலா வந்தனர்.
ஒரு நாள்..
சைக்கிளை மிதித்தாள் நித்யா. பின் சீட்டில் உட்கார்ந்திருந்தாள் கல்யாணி. ஊருக்கு வெளியே ஓட்டிக்கொண்டு சென்றனர். குளக்கரை அருகே வரும்போது எதிரே அந்தத் திருடன் இவர்களைப் பார்த்து வரவே பயந்து ஹாண்டில்பாரைத் திருப்பினாள் நித்யா. சைக்கிள் குளக்கரையைக் கடந்து குளத்தின் உள் சென்றது. சைக்கிளோடு அவர்களும் குளத்தில் மூழ்கினர்.

(தொடரும்)
 
திருடன்ட தப்பித்து இப்பையும் அவன்ட்டையே மாட்டுறாங்களே.கல்யாணி கொஞ்சம் தைரியம் தான். அருமை
 
Interesting epi.
Aaraju mittaya??? Hahaha.
Thirudanai kaditha veera sirumi Kalyani.....
Enna intha oor thirudan ivalavu greenbaby ah irrukan.
Antha pullarayaye kalatri koduka solluran.
30 years mumbae ulla scenario mathari irruku katha.
Any how story is very interesting.
Author ji , engine romba slow aagiduchu 3rd story la ye. Daily oru epi than kodukuringo.
 
Top