Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழுது 1

Advertisement

Sakthi bala

Active member
Member
அம்பாசமுதிரம் – அகஸ்தியர் பட்டி – பாபநாச எல்லையோரம்

ஒரு பொன் மாலை பொழுதினிலே, கதிரவன் தன் கதிர்களை உள்ளடக்கி கொண்டிருந்தது. பறவைகள் தங்கள் கூட்டை நோக்கி பறந்து கொண்டிருந்தன. மெல்ல மேகங்கள் எல்லாம் ஒன்று திரண்டு கருப்பு மை பூசியது போல் காட்சியளிக்க ஆரம்பித்தது. சிறு சிறு மழை துளிகள் விழ ஆரம்பித்தது.

வெகு தூரத்தில் பாபநாசம் அருவி ஒரு மெல்லிய வெள்ளை கோடாய் காட்சியளித்தது. அந்த பிரதேசம் முழுவதும் குளிர்ந்த காற்று பரவ ஆரம்பித்தது.இந்த காட்சிகளை எல்லாம் ரசித்தபடி மதிவதனி நின்று கொண்டிருந்தாள். இரு கைகளையும் உயர்த்தியபடியே கண்களை மூடி கொண்டு மழையை ரசித்துக் கொண்டிருந்தாள்.

காற்றிலே அவள் கூந்தலும், அவள் காதில் அணிந்திருந்த ஜிமிக்கியும் அவளுடன் சேர்ந்து ஆடியது. இந்த சமயத்தில் அவளை பார்க்கும் யாராலும் கண்களை அவளைவிட்டு அசைக்க முடியாது. அத்தகைய இருபத்து இரண்டு வயது அழகு சிலை தான் மதிவதனி.

“ஏய் மதி...அங்க என்ன பண்ணிட்டு இருக்க? உள்ள வா. அப்புறமா சளி புடிச்சிருச்சு, காய்ச்சல் வந்துருச்சுனு என்கிட்ட வந்தா நான் கண்டுக்கவே மாட்டேன் ஆமா...” மதிவதனியின் அத்தை காமாட்சி தன் குரலை உயர்த்தி கத்தினார்.

‘அடச்சே! இந்த அத்தை என்னை ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க விட மாட்டாங்க. என்னவோ எனக்கு உடம்பு சரியில்லேன்னா இவங்க கவனிச்சிக்கிற மாதிரி தான்! எப்படி இருந்தாலும் நான் தான் என்னை பார்த்துக்கணும். இந்த சின்ன சந்தோஷத்தை கூட அனுபவிக்க விட மாட்டிக்கிறாங்க. ச்சே ....’ மனதிற்குள்ளேயே தனது அத்தையை திட்டி கொண்டே உள்ளே போனாள் மதிவதனி.

இதற்கு மேலும் அவள் வெளியே நின்றால் அத்தையிடம் நன்றாக திட்டு வாங்க வேண்டியிருக்கும் என்று அவளுக்குத் தெரியும்.

மதிவதனி அம்பை ஆர்ட்ஸ் காலேஜில் பி.காம் படித்து முடித்திருந்தாள். அழகில் மட்டுமல்ல திறமையிலும் அவளை மிஞ்ச ஆள் கிடையாது. அவளுக்கு உடைகளை வடிவமைப்பதில் ஆர்வம் அதிகம். பேஷன் டெக்னாலஜி படிக்க வேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டாள். ஆனால் அவள் ஆசைப்பட்டால் மட்டும் போதுமா, அதற்கு அவர் அத்தை ஒத்துகொள்ள வேண்டுமே! வெளியூர் எல்லாம் சென்று படிக்கக் கூடாதென்று அவள் கனவுகளுக்கு அணை போட்டு விட்டார்.

எது செய்தாலும் அதை திறம்பட செய்ய வேண்டுமென்று நினைக்கும் அவள், தான் படித்த படிப்பை மேலும் மெருகேற்றி சில பல கம்ப்யூட்டர் கோர்ஸ்களை படித்து முடித்தாள். அது மட்டும் நில்லாது, தன் அத்தையிடம் போராடி சென்னையில் ஒரு கம்பெனியின் நேர்முக தேர்விலும் கலந்து கொண்டாள். அந்த தேர்வின் முடிவுக்காகக் காத்து கொண்டிருந்தாள்.

மதிவதனிக்கு அவள் பிறந்த ஊரான அம்பாசமுத்திரத்தை விட்டு போக மனமில்லை, இருந்தாலும் சொந்த காலில் நிற்க வேண்டும், யாரையும் சார்ந்து வாழ கூடாது என்று லட்சியத்துடன் இருந்தாள். அவள் சென்னைக்கு செல்லாமல் அம்பாசமுத்திரத்தில் இருந்தால் அவள் லட்சியம் நிறைவேறாது என்பது அவளுக்குத் தெரியும். அதனால் தன் ஊரை விட்டு செல்வதற்கு மனதளவில் தயாராகிக் கொண்டிருந்தாள்.

இந்த வேலை கிடைத்து விடும் என்பதில் எள்ளளவும் மதிவதனிக்கு சந்தேகம் இல்லை. அந்த மகிழ்ச்சியான எண்ணத்துடனே அவள் அன்று தூங்க போனாள், நாளை புலர போகும் நாள் அவள் வாழ்க்கையில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தும் நாள் என்பதை அறியாமலே.....

பாபநாசம் – அகஸ்தியர் அருவி

சிவ பெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த போது கைலாசத்தில் நிறைந்திருந்த கூட்டத்தால் பூமி ஒரு பக்கமாக சாய்ந்தது. அத்தை சமன் செய்வதற்கு அகஸ்திய முனிவரை சிவபெருமான் பாபநாசத்துக்கு அனுப்பினார். அதனால் அகஸ்திய முனிவரால் அவர்களது திருமணத்தை சரியாக பார்க்க முடியவில்லை.அகஸ்தியர் சிவபெருமானிடம் திருமண கோலத்தில் காட்சி தருமாறு வேண்டி கொண்டார்.

அவர் வேண்டி கொண்டதற்கேற்ப சிவபெருமானும், பார்வதியும் திருமண கோலத்தில் அகஸ்தியர் முன்பு காட்சி தந்தனர். அந்த இடம் தான் அகஸ்தியர் அருவி. அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரம் போல இந்த அருவி வருடம் முழுவதும் அதன் வெண்சிறகுகளை விரித்து பறந்து கொண்டே இருக்கும்.

அப்படிப்பட்ட அகஸ்தியர் அருவியை கண்டு களிக்கும் நோக்குடன் ஐவர் குழு ஒன்று மலை ஏறி வந்து கொண்டிருந்தது.

“டேய் மனோ, என்ன இடம் டா இது. டூர் வரதுக்கு வேற இடமே கிடைக்கலியா உனக்கு? சுத்தி பாரு, ஒரே மரமும் மட்டையுந்தான் இருக்கு. கண்ணுக்கு குளிர்ச்சியா ஒன்னும் இல்லை” அந்த ஐவர் குழுவில் இருந்த ஒருவன் கூறினான். அவன் பெயர் வினோதன்

“உளறாத டா. இந்த இடம் குளிர்ச்சியா எவ்ளோ அழகா இருக்கு. இதை போய் நல்லா இல்லைனு சொல்ற” சொல்லிவிட்டு நண்பனை குழப்பமாக பார்த்தான் விநோதனால், மனோ என்று அழைக்கப்பட்ட மனோரஞ்சன்.

“டேய், நான் இந்த குளிர்ச்சியை சொல்லலை டா...” என்று கூறிவிட்டு மனோரஞ்சனை பார்த்து கண்ணடித்தான் அவன் நண்பன் வினோதன்.

“ஆமா மனோ, வினோ சொல்றது கரெக்ட் தான். வருசா வருஷம் நாம ஏதோ ஊட்டி கொடைக்கானல் னு போவோம். அங்க ஏதோ கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியா பொண்ணுங்க வரும். அப்படியே சைட் அடிக்கலாம். ஆனால் இங்க பாரு அப்படி ஒன்னை கூட காணோம். அப்படியே ஒன்னு ரெண்டு கண்ணுல பட்டாலும் லைட்டா ஒரு பார்வை பார்த்தாலே, அருவாளிலே வெட்டுற மாதிரியே பார்த்துட்டு போராளுங்கா. பயமா இருக்கு டா” அந்த குழுவில் இருந்த மற்றொருவனான பாலச்சந்திரன் விநோதனுக்கு ஒத்து ஊதினான்.

“அது என்னோவோ உண்மை தாண்டா. சாமி படத்துல விக்ரம் சொல்வாரே அது மாதிரி திருநெல்வேலி கார பொண்ணுங்க புடவை தூக்கி கட்டுறதே ஏதோ அருவா தூக்கிற மாதிரி தான் இருக்கு. அதனால ஒழுங்கா ஊர் போய் சேரணும்னா கொஞ்சம் அடக்கியே வாசிங்க டா. உங்க சேட்டை எல்லாம் சென்னைல போய் வச்சிகோங்க.” இது மனோரஞ்சனின் மற்றுமொரு நன்பன் கார்த்திகேயன்.

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டும் கேட்காதது போல வந்து கொண்டிருந்தான் மனோரஞ்சன். அவனை பின் தொடர்ந்து சிரிப்பை அடக்கி கொண்டு அவன் தம்பி ரிதுநந்தன் சென்று கொண்டிருந்தான்.

“என்னடா ரித்து? ஒண்ணுமே பேசாம வரே. நீ என்ன நினைக்கிற. பாலா சொல்ற மாதிரி திருநெல்வேலி பொண்ணுங்க கிட்ட வச்சுக்க வேண்டாம்ங்கிறியா?”அவன் வாயை புடுங்கும் நோக்குடன் வினோதன் கேட்டு விட்டு குறும்புடன் சிரித்தான்.

ரிதுநந்தன் திரும்பி விநோதனை பார்த்து பேய் முழி முழித்துவிட்டு அவனிடம் ரகசிய குரலில்,”ஐயோ வினோ அண்ணா...நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு புடிக்கலையா? ஏன்னா இப்படி மனோ அண்ணா கிட்ட போட்டு குடுக்குறீங்க? பாருங்க பாருங்க அவன் திரும்பி என்னை முறைக்கிறான். அவ்ளோ தான் இன்னைக்கு நான் செத்தேன். அட்வைஸ் பண்ணி கழுத்தை அறுக்க போறான்.”

“அவன் கிடக்குறான் விடு டா. லைஃபை என்ஜாய் பண்ண தெரியாத ஆளு”
அவர்கள் குசுகுசுவென்று பேசிகொண்டிருக்கும் போதே மனோரஞ்சன் அவர்கள் எல்லோரையும் திரும்பி எரிக்கும் விதமாக பார்த்துவிட்டு,” டேய், கொஞ்சம் நேரம் வெட்டியா பேசாம வரீங்களாடா. கொஞ்சம் கூட இயற்கையை ரசிக்கும் உணர்வே இல்லாதவங்க. ச்சே. பேசாம இங்க நான் மட்டும் தனியா வந்திருக்கணும்” என்று பொரிந்து கொண்டே மேலே ஏறினான்.

“ஹ்ம்ம்....ஏன் சொல்ல மாட்டே? எல்லாம் எங்க நேரம்! உன் கூட வந்தோம் பாரு! சரி, இந்த இடத்தை யாரு உனக்கு சொன்னாங்க? அந்த கிழம் ரங்கராஜன் தானே? அதான் இப்படி இருக்கு”

வினோதன் சொன்னதை கேட்டு எல்லோரும் சிரித்தனர். மனோரஞ்சன் மட்டும் சிரிக்காமல் விநோதனை முறைத்தான். உடனே வினோதன் அமைதியாகி விட்டான்.

மனோரஞ்சன் ஒரு இளம் தொழிலதிபர். நகரில் மிக பிரபலமான பல கிளைகளைக் கொண்ட ‘வானவில்’ நிறுவனத்தின் எம்.டி. ஆடைகளை தயாரித்து விற்கும் நிறுவனம் அது. மனோரஞ்சனின் தாத்தா ஆரம்பித்தது. மனோரஞ்சனின் தந்தை அந்த நிறுவனத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தார். அதன்பின் மனோரஞ்சன் அதை மிக பெரிய அளவில் வளர்ச்சியடைய வைத்தான்.

மனோரஞ்சன் எந்த வேலையை செய்தாலும் அதை முழு நிறைவுடன் எந்த குறையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் அவனுடைய உயிர் நண்பன் வினோதன் அதற்கு நேர் எதிர். விளையாட்டு தனம் மிக்கவன்.

மனோரஞ்சனின் தம்பி ரிதுநந்தன் தன் அண்ணனை போல வேலை என்று வந்தால் மிகவும் பொறுப்பாக இருப்பான். இருந்தாலும் அவனுக்கு இன்னும் விவரம் பத்தவில்லை என்று மனோரஞ்சன் அடிக்கடி கவலை படுவான். இவர்களுடன் இவர்கள் நண்பர்கள் பாலசந்தர் மற்றும் கார்த்திகேயன் வந்திருந்தனர்.

வினோதன், பாலசந்தர் மற்றும் கார்த்திகேயன் மூவரும் மனோரஞ்சனின் கம்பெனியில் தான் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.வினோதன் சொன்ன ரங்கராஜன் என்பவர் மனோரஞ்சனின் தாத்தா காலத்திலிருந்து வேலை பார்க்கிறார்.

வருடத்திற்கு ஒரு முறை அவர்கள் ஐவரும் சேர்ந்து சுற்றுலா செல்வது வழக்கம். இந்த வருடம் பாபநாசத்திற்கு செல்ல யோசனை தெரிவித்தது ரங்கராஜன் தான். அதை தான் வினோதன் சொல்லிக் கொண்டிருந்தான்.

அகஸ்தியர் அருவியை சென்று அடையும் முன் சிறிது மழை தூர ஆரம்பித்து விட்டது. அகஸ்தியர் அருவியின் அழகை ரசித்து கொண்டு அங்கு நின்று போட்டோ எடுத்து கொண்டனர். அங்கு உள்ளவர்கள் அகஸ்தியர் அருவியின் மேல் இருக்கும் பானதீர்த்ததை பற்றியும், கல்யாண தீர்த்தத்தை பற்றியும் கூறினார். அதை கேட்டதும் அதை பார்க்க வேண்டுமென்ற ஆவல் மனோரஞ்சன் மனதில் எழுந்தது.

காலையில் இருந்து அவர்கள் சுற்றி கொண்டே இருப்பதால் ஐவரும் சோர்வடைந்து போய் விட்டனர். மழையும் தூர ஆரம்பிக்கவே அவர்கள் தீர்த்தத்தை நாளைக்கு பார்க்கலாம் என்று முடிவு எடுத்தனர். ஆனால் மனோரஞ்சன் அதற்கு ஒப்பவில்லை. ஆதலால் அவன் மட்டும் தனியாக மேலே செல்வதென்று முடிவு ஆயிற்று.

அவன் மேல அந்த சென்று அடைந்ததும் அதன் தீர்த்தத்தின் அழகை கண்டு மெய் மறந்து விட்டான். அதன் அழகை ரசித்து கொண்டே புகைப்படம் எடுத்து கொண்டிருந்தபோது ஒரு அலறல் சத்தம் அவன் காதில் ஒலித்தது....

புலரும்
 
:D :p :D
உங்களுடைய "பொன்
மாலைப் பொழுது"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சக்தி பாலா டியர்
 
Last edited:
ஆரம்பமே சூப்பர், சக்தி டியர்
மதிவதனிக்கு பெற்றோர் இல்லையா?
அத்தைதான் ஆதரவா?
மனோரஞ்சனின் "வானவில்" கம்பெனிக்குத்தான் மதி வேலைக்கு போகப் போறாளா?
யாரு அலறியது? மதியா?
ஏன்? என்ன காரணம்?
 
அழகான ஆரம்பம். மதிவதனி மனோரஞ்சன் அருமையான பெயர் பொருத்தம். மனோ கேட்ட சத்தம் யாருடையது எதனால்.
 
Top