Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூவாசம் மேனி வீசுதம்மா - final

Advertisement

Super story
ஹாய் பிரண்ட்ஸ்..

அனைவர்க்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

"பூவாசம் மேனி வீசுதம்மா.." கதைக்கு நீங்க கொடுத்த சப்போர்ட் அண்ட் கம்மன்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி.. தனி தனியா பதில் போட முடியலைன்னாலும், உங்க எல்லாரோட கருத்துக்களையும் நான் படிச்சிட்டு தான் இருப்பேன்.. ரொம்ப சந்தோசம்.. ரொம்ப ரொம்ப நன்றியும் கூட..

---------------------------

பூவாசம் மேனி வீசுதம்மா – 12

கஸ்தூரி மனதினுள் கோபம் என்றால் கோபம். யாராவது இனியொரு வார்த்தை அவள் முன்னே பேசியிருந்தால் கூட, கொன்று போட்டாலும் போட்டிருப்பாள். அப்படித்தான் இருந்தது அவளுக்கு அப்போது.

அங்கே தான் இருந்தால், தன்னையும் மீறி எதுவும் பேசிவிடுவோம் என்று எண்ணியே, கிளம்பிவிட்டாள். கோபித்துக்கொண்டு செல்வது போல் எல்லாம் இல்லை. தன் கோபத்தினை மாற்றிடவே அவள் கிளம்பியது.

அது முருகேஸ்வரிக்கு அப்படித் தெரிந்துவிட்டது..!!

‘ஐயோ.. என்னவோ நெனச்சுக்கிட்டா போல..’ என்றெண்ணியவர், கமலாவிடம் “இங்க பாரு கமலா... நாங்க ஒன்னும் எதுவும் தெரியாம கட்டிக்கிட்டு வரல.. கஸ்தூரி இங்க எங்க முன்னாடி வளந்தவ.. அவளப் பத்தி எங்களுக்குத் தெரியும். எங்களப் பத்தி அவளுக்கும் தெரியும்.. இனி இந்த பேச்செல்லாம் இங்க வேணாம்..” என்று சொல்லி அனுப்பியும்விட்டார்.

நேரம் செல்ல செல்ல, கஸ்தூரி வராது போகவும் தான் மனம் பதை பதைக்கத் தொடங்கிவிட்டது. எங்கே இதனை கஸ்தூரி பெரிதுபடுத்தி மகன் எதுவும் பேசிடுவானோ என்று பயம் வந்துவிட, முதலில் சந்திரபாண்டிக்குத்தான் அழைத்துச் சொன்னார்.

அவரோ முருகேஸ்வரியைத் திட்ட, “என்னங்க.. நா எதுவுமே சொல்லல...” என்றார் முருகேஸ்வரி பாவமாய்.

“ஆமா இதுக்கு முன்னனாலும் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசின..”

“ஏன் நீங்க அப்போவே உங்க தங்கச்சிக் குடும்பத்தோட உறவா இருந்திருக்க வேண்டியதுதான..” என்று முருகேஸ்வரியும் பதிலுக்கு பேச,

“முன்ன எப்புடியோ இப்போ அவ நம்ம வீட்டு பொண்ணு..” என்றவர், “உம்மவனுக்கு போன போட்டு சொல்லு.. அவன் பேசி கூட்டிட்டு வரட்டும்.. நம்ம பேசினா பிரச்சனை வேறமாதிரி ஆகிடும்..” என்று சொல்லிவிட்டார்.

முருகேஸ்வரிக்கோ இருப்புக்கொள்ளவில்லை. கஸ்தூரி எதையாவது அவளின் அப்பாவிடம் சொல்லிவிட்டால், அதுவேறு மனதில் கிடந்து உறுத்த, இனியும் தாமதம் செய்யக்கூடாது என்றுதான் மகனுக்கு அழைத்துச் சொன்னார்.

அவனுக்கோ அனைத்தையும் கேட்டு ஒருவித அலுப்பாய் இருந்தது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த பேச்சுக்கள்..!!
ஒருத்தியை நிம்மதியாய் வாழ்வே விடமாட்டார்களா??! அவள் அம்மா செய்த தவறுக்கு அவள் எப்படிப் பொறுப்பாவாள்??!
பேச்சுக்களில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு அடிப்படை நாகரீகம் கூடவா யாருக்கும் தெரியாது போய்விடும் என்று.

இப்போதுதான் கஸ்தூரி அவனோடே மனம் விட்டுப் பேசிட ஆரம்பித்து இருந்தாள். இப்போதுதான் அவள் அவனிடம் தன்னை வெளிப்படுத்தவே ஆரம்பித்து இருந்தாள்.

அதிலும் அவளின் அம்மாவினைப் பற்றிய பேச்சு, கமலக்கண்ணனே இன்னும் பேசியிருக்கவில்லை. அவளாக ஆரம்பித்தால் தான் அதைப்பற்றி பேசவேண்டும் என்ற முடிவினில் இருந்தான். இல்லையெனில் இல்லைதான். அவளுக்கு வேண்டாத பேச்சு எனக்கு மட்டும் ஏன் என்ற எண்ணம்.

இப்போதோ நினைக்கவே சங்கடமாய் இருந்தது. என்ன சொல்லி சமாதானம் செய்வான்??!! இதனை சிந்தித்தே அப்படியே தலை பிடித்து அமர்ந்துபோனான்.

மனம் முழுக்க ‘அவள் என்ன நினைத்தாளோ...’ என்பதிலேயே இருக்க, கஸ்தூரிக்கு அழைத்தும் பார்த்தான். பதிலேயில்லை. ஆம்..!! அவளுக்கென்று தனியாக ஒரு அலைபேசி வாங்கிக் கொடுத்திருந்தான்.

“எனக்கு பட்டன் வச்ச போனுதான் வேணும்..” என்று அடம் பிடித்தாள் கஸ்தூரி.

“அதெல்லாம் ஓல்ட் டி...” என,

“ம்ம்ஹும் இதான் வேணும்.. உன்னோட பேசுறதுக்குத்தான் போனு. அதனால இதுபோதும்.. அப்புடியே வேற எதுனா பாக்கனும்னா உன்னோடதுல பாத்துக்கிறேன்..” என்று அவளும் சொல்ல,

“இதெல்லாம் எப்போப் பழக போற..” என்றான் அவனும் பிடிவாதமாய்.

“பட்டன் போனு பழகி முடிக்கவும் அடுத்து அத பாப்போம்..” என்று முடித்துவிட,

“இதுக்கு நானே வாங்கிட்டு வந்திருக்கணும்..” என்றபடிதான் அவளுக்கு பட்டன் வைத்த செல்போன் வாங்கிக் கொடுத்தான்.

அவன் மில் செல்லும் நாட்களில் தினமும் மதியம் அவளே அழைத்துவிடுவாள் “சாப்பிட்டியா??” என்றுகேட்டு.

“ஆமா டி தினமும் இதையே கேளு..” என,

“உன்னோட பேசத்தான இது.. வேறாரு கூட பெருசா பேசிட போறேன்..” என்பாள்.

இதுவே கமலக்கண்ணனுக்கு பெறும் மாற்றமாய் இருந்தது அவளிடம். சந்தோசமாகவும் இருந்தது. ‘உன்னைய ரொம்ப பிடிச்சிருக்கு..’ என்று அவள் வாய்விட்டு சொன்னதே பெரிது என்று நினைத்தானே.

இப்போதோ அவன் எத்தனை முறை அழைத்தும் அவள் எடுக்கவும் இல்லை, என்றானதும், மில்லில் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

ஊர் வந்து சேரும் வரைக்கும் மனதில் பலவேறான எண்ணங்கள், செல்லப்பாண்டியிடம் கேட்கலாம் என்றால், என்னவோ ஏதோ என்று நினைத்திடுவார். என்ன செய்வது என்று யோசித்தபடி ஊரினுள் வர, எதிரே வடைபாட்டி கையில் ஒரு கூடையோடு வர,

“என்ன பாட்டி.. வண்டியில ஏறு..” என,

“இல்லய்யா.. கஸ்தூரி கீர வட வேணும்னு கேட்டா.. கடைல சுட்டு வச்சிருந்தேன் அதான் வீட்டுக்கு கொண்டுட்டு போறேன்..” என,

‘கீர வடையா.. அடியே கஸ்தூரி..!!’ என்று பல்லைக் கடித்தவன், “நீ கடைக்கு போ நான் கொண்டு போயி தர்றேன்..” எனவும்,
பாட்டியும் சரியென்று அவனிடம் கூடையை கொடுத்துவிட்டு கடைக்குத் திரும்பிவிட்டார்.

‘ஏன் டி அதரி பதறி நான் வந்தா.. நீ கீரை வடை கேக்குறியோ..’ என்றெண்ணிக்கொண்டே தான் அங்கே போனான்.

பைக்கினை சற்று தள்ளியே நிறுத்தியவன், நடந்துதான் போனான். வீடு உள் பக்கமாய் தாழ் போட்டிருக்க, சத்தம் கொடுக்காது கதவினை மட்டும் தட்ட “ந்தா வர்றேன் கெழவி..” என்று உள்ளிருந்து கஸ்தூரியின் குரல் கேட்டு அடுத்து கதவும் திறக்கப்பட, கஸ்தூரி நிச்சயமாய் இந்நேரத்தில் கமலக்கண்ணனை எதிர்பார்க்கவில்லை.

அது அவளின் திகைத்த பார்வையிலேயே தெரிய, மௌனமாய் பையை நீட்டினான்.

"உள்ள வா..” என்று கஸ்தூரி வழி விட, “பரவால்ல, இதை சாப்பிட்டு என்னோட வா..” என்றான் இறுகிய குரலில்.

கஸ்தூரி அவன் நீட்டிய பையை வாங்காது அவனைப் பார்க்க “அடிச்சு பிடிச்சு வந்திருக்கேன்.. சாப்பிட்டு கிளம்பி வா.. அங்க அம்மா வேற டென்சனாருக்கு..” என்று கோபத்தை அடக்கித்தான் சொன்னான்.

‘முடியாது...’ என்ற வார்த்தைகளை சொல்ல நினைத்தாலும், அது அவளால் முடியவில்லை.

அப்போதும் அவள் மௌனமாய் நிற்க “அங்க நம்ம வீட்ல வந்து எதுனாலும் பேசிக்க.. இங்க வச்சு என்னையும் பேச வைக்காத..” என,

“ஏன்.. நீயும் எதுவும் பேசணும்னு காத்திருக்கியா..” என்றாள் பட்டென்று.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் “என்ன டி பேசிட்டேன்.. இல்ல இத்தன நாளா உன்னைய நோகடிக்கிற மாதிரி எதுவும் பண்ணிருப்பேனா பேசிருப்பேனா. ஒன்னொன்னும் உனக்காக யோசிச்சு யோசிச்சு பண்ணிட்டு இருக்கேன். தெரிஞ்சோ தெரியாமலோ கூட உன்னைய நான் கஷ்டப்படுத்திடக் கூடாதுன்னு பார்த்து பார்த்து பேசிட்டு இருக்கேன்.. அது புரியலையா உனக்கு..” என்று கத்த,

“ம்ம்ச் இப்போ என்ன உனக்கு..” என்றாள் அவளுமே கோபமாய்.

ஒரு வேகத்தில், கோபத்தில் கிளம்பி அவள்பாட்டில் வந்துவிட்டாள். அது தப்பென்றும் புரிந்துதான் இருந்தது. இருந்தும் என்னவோ ஒன்று தடுக்க, கமலக்கண்ணன் பார்த்த ஒருவித பயமாய் கூட இருந்தது கஸ்தூரிக்கு.

‘அவசரப்பாட்டுட்டோம்...’ என்று தோன்றினாலும், அவளால் நகர்ந்திட முடியவில்லை. எங்கே அங்கே போய், மறுபடியும் தன் அம்மா பற்றி பேசிட நேருமோ என்று பயமாய் இருந்தது.

ஆம்..! பயம்தான். இதற்கு முன்னே இவ்வுணர்வு இல்லை. இப்போது அவளின் திருமணத்தின் பின், அவளின் அம்மா பற்றிய சிந்தனையைக் கூட அவள் விரும்பிடவில்லை என்பதுதான் நிஜம். யாரேனும் எதுவும் பேசிடுவார்களோ என்று நினைத்து நினைதே அவளுக்கு இப்போது ஒருவித பயம் வந்துவிட்டது.

அந்த பயமே, அவளை கண்ணனோடு போகவிடாது செய்ய “வர்றியா இல்லையா கஸ்தூரி??!!” என்றான் அங்கே நின்றபடியே, அப்போதும் அவள் தயங்கிப் பார்க்க,

“இனி நீயா வந்தாதான் ஆச்சு...” என்றவன் கிளம்பிவிட்டான்.

இவ்வளோதான்.. இதற்குமேல் அவனால் இறங்கிப் போக முடியாது. கெஞ்ச முடியாது. முடியாது என்றெல்லாம் இல்லை வராது, தெரியாது. இத்தனை தூரம் இத்தனை நாள் பார்த்து பார்த்து என்று அவன் பக்கம் அனுசரிப்புகள் நிறைய இருக்க, அதெல்லாம் இன்று கரைகடந்து விட்டது.

‘அப்போ எனக்காக இவள் பார்க்கமாட்டாளா??!!’ இதுதான் இப்போது அவனுள்.

‘நான் வேணும்னு நினைச்சா வரட்டும்..’ என்ற பிடிவாதம் தோன்ற கிளம்பிவிட்டான்.

கஸ்தூரி அப்போதும் பார்த்துத்தான் நின்றாள். போகாதே என்றோ, வருகிறேன் என்றோ சொல்லிடவில்லை.

திருமணம் செய்து அவனோடு வாழ்வும் ஆரம்பித்தாகிவிட்டது. அதுவும் சந்தோசமாகவே, அவனை பிடித்திருக்கிறது என்றும் சொல்லியாகிவிட்டது. வீடு என்றால் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அப்படியிருக்கையில் அவள் கிளம்பி வந்துவிட்டால் சரியாய் போய்விடுமா??!

இல்லை, இது சரியா.. ஒவ்வொருமுறையும் இதனையே அவள் செய்தால், அவன் ஒவ்வொரு முறையும் வந்து நிற்பானா..??!
இல்லைதானே...

மகனின் வண்டிச் சத்தம் என்றதுமே முருகேஸ்வரி வாசலுக்கு வந்துவிட, “என்னடா கஸ்தூரி எங்க..” என,

“ஆமா போகவிட்டுட்டு என்னைய கேளு..” என்று அவரிடமும் எரிந்து விழுந்தவன், உள்ளே வர, முருகேஸ்வரிக்கு பெரிய
பிரச்சனை எதுவும் செய்துவிட்டாளோ என்று தோன்றிவிட்டது.

“கண்ணா.. நா.. நான் வேணா போயி கூட்டிட்டு வரவா..” என, “வேணாம்..” என்றான் இடுத்தமாய்.

“ஏன்டா..??”

“அவளே வருவா.. வரணும்..” என்றவன், “அங்க போகக் கூடாது..” என்று அம்மாவிடம் கண்டிப்பாய் சொல்லிவிட்டு மேலே சென்றுவிட, முருகேஸ்வரி இதென்ன இப்படி என்று பார்த்து நின்றார்.

பொதுவான ஒரு பிரச்சனை இப்போது கணவன் மனைவி பிரச்சனை ஆகிவிட, அங்கே கஸ்தூரிக்கோ கண்கள் கலங்கியது. விபரம் தெரிந்த பின்னே இதுநாள் வரைக்கும் அவள் அம்மாவை நினைத்து அழவில்லை. ஆனால் இப்போது அழுகை வந்தது.

நிறைய நிறைய. கத்தி அழவேண்டும் போல. யாரிடமாவது சொல்லி அழவேண்டும் போல.. ஆனால் யாரிடம் சொல்வாள்.
அப்பாவிடம் இதனை சொல்லவே முடியாது. வடைபாட்டி அதுவே பாவம்..

அவளுக்கு நெருக்கமாய் வேறு யார் இருக்கிறார்கள் கமலக்கண்ணனைத் தவற. அவனும் இப்போது வந்தான் தானே.
அவனிடமாவது மனதில் இருப்பதை சொன்னாளா??!! இல்லையே..

தன்னைத் தானே தேற்றிக்கொள்ள முயன்றால் அது முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் அழுத்தம். அதனை ஒரு நாளில் தனியாய் அதுவும் அவளால் முடியவே முடியாது என்று திடமாய் தோன்ற,

‘போ கஸ்தூரி.. போ.. உன் புருஷன்கிட்ட போ.. அவனோட பேசு.. மனசுக்குள்ள இருக்கிறது எல்லாம் கொட்டு..’ என்று அவள் மனம் போட்டு உந்த, அவளால் தன் உணர்வுகளின் அழுத்தத்தை தாங்கிட முடியவில்லை.

எத்தனை பெருமூச்சுக்கள் எடுத்தாலும், எதுவும் சமன் ஆகுவது தெரியாது போக, முகத்தை அழுத்தத் துடைத்தவள், வீட்டைப் பூட்டிவிட்டு, சாவியை எப்போதும் வைக்கும் இடத்தினில் வைத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.

‘அவன்கிட்ட நான் என்ன பிகு செய்யணும். அவன் செஞ்சானா.. முன்ன செஞ்சது எல்லாம் தப்புன்னு புரிஞ்சதுமே எங்கிட்ட பேசணும்னு வந்தான் தான.. இப்போ எனக்கு மட்டும் என்னவாம்..’ என்று முனங்கியபடியே வீட்டிற்கு எட்டுபோட, கஸ்தூரியைப் பார்த்த பின்னே தான் முருகேஸ்வரிக்கு நிம்மதியானது.

இல்லையெனில் சந்திரபாண்டி வந்து என்ன ஆட்டம் போடுவாரோ என்று இருந்தது. நல்லவேளை இன்றேன பார்த்து ஒரு விசேசம் என்ற பக்கத்து ஊர் சென்றிருந்தார்.

“யப்பாடி..!! வந்துட்டியா...” என்றவர், பின் என்ன நினைத்தாரோ “இதுதான் முதலும் கடசியுமா இருக்கணும்.. உனக்கு பிடிக்கலான்னா எதுனாலும் இங்கன சொல்றதுக்கு உனக்கு உரிமை இருக்கு.. அதவிட்டு இப்புடி கிளம்பிப் போற சோலி எல்லாம் இனி எங்கிட்ட வச்சுக்கக் கூடாது..” என்று குரலில் ஒரு அதட்டல் கொடுத்துச் சொல்ல,

“ம்ம் சரிங்கத்த..” என்றவள் வேறேதுவுமே சொல்லவில்லை.

‘அ.. என்னடா பொசுக்குனு சரின்னு சொல்லிப்புட்டா..’ என்று முருகேஸ்வரி பார்க்க, கஸ்தூரியோ கண்ணன் எங்கே என தேட
“மேல போயிருக்கான் உர்ருன்னு.. போயி கொஞ்சம் பதவிசா பேசு..” என்று சொல்லியே அனுப்பினார்.

அதற்கும் சரி என்றவள், மேலேறி போக, கமலக்கண்ணோ முதுகு காட்டி படுத்திருந்தான். அவன் கோபமாய் இருப்பது தெரிந்தது. தான் தான் பேசிடவேண்டும் என்றும் புரிந்தது. ஆனால் எப்படி ஆரம்பிக்க. நின்று பார்த்தவளுக்கோ, இன்னும் அழுகை முட்டியது.
‘அதான் வந்துட்டேன்ல.. என்னன்னாவது கேக்கலாம்ல..’ என்று.

பொறுத்து பொறுத்துப் பார்த்தவள், அதற்குமேல் தாளமுடியாது போக, அவனருகே படுத்தவள், அவனின் முதுகில் முகம் புதைத்து அழ, அவ்வளோதான், அதுமட்டும் தான் அவளுக்குத் தெரிந்தது.

கமலக்கண்ணன் எப்போது எப்படித் திரும்பினான். எப்படி அணைத்தான்.. இதெல்லாம் தெரியவேயில்லை. அவனின் பிடியில் அப்படியொரு அழுத்தம் இருக்க, “ஏன் டி ஏன்... இங்க ஒண்ணுன்னா என்கிட்டே சொல்லனும்னு கூடவா உனக்குத் தோனல.. அவ்வளோ கூடவா நான் உன் மனசுல பதியல.. எத்தன தடவ சொல்லிருக்கேன்.. எதுன்னாலும் என்கிட்ட சொல்லுன்னு.. கிளம்பிப் போவியா நீ.. அவ்வளோ தைரியமா உனக்கு..” என்று கேட்டவனோ அவளை ஒரு வழி செய்துவிட, அவளாய் விலகுவாள் என்று பார்த்தால் அது நடக்கவேயில்லை.

மேலும் மேலும் அவனோடு ஒன்றிட, “ஏ.. கஸ்தூரி....” என்றான் அவனே பின் தன் தளர்த்தி.

அவளோ திரும்ப தானாகவே அவனை ஒண்டிக்கொண்டு, இறுக அணைத்துக்கொண்டு அழ, விட்டுவிட்டான் அழட்டும் என்று. அவளின் கரங்கள் அவனைத் தன்னோடு இறுக சேர்த்திருக்க, கமலக்கண்ணன் ‘இனியாவது இவளின் மன பாரங்கள் குறையட்டும்..’ என்று அவளுள் கண்டுட்டே இருக்க, எத்தனை நேரம் அவள் அழுவதைப் பொறுப்பது.

“போதும் டி...” என்று ஆறுதலாய் சொல்ல, அவளோ மேலும் அவனை தன்னோடு இறுக்க, “என்னைய மனுசனா நீ இருக்க விடுவியா??!” என்றான்.

“நீ நல்லாத்தான் இருக்க.. ஆனா நான்தான்..” என்றவள், இப்போது பிடியைத் தளர்த்த,

“ஏன் உனக்கென்ன..” என்றான் ஆதுரமாய் அவள் முகம் தடவி. அழுததில் அப்படிச் சிவந்து போயிருந்தது.

“ம்ம்ச் எனக்கு நெஜமா அந்த நேரம் என்ன செய்றதுன்னு தெரியலை.. கோபம் ரொம்ப வரவும் எதுவும் பேசிடுவேனோன்னு தான் கிளம்பிட்டேன்..” என,

“பேசணும்னா பேசிடனும்.. மனசுல வச்சிட்டு இப்புடி அழுதுட்டு வந்து நிக்கக் கூடாது..”

“இல்ல நா பேசி.. அதுவேற பிரச்சனை பெருசானா..??!!”

“அப்போ நீ கிளம்பிப் போனது மட்டும் சின்ன விசயமா..??” என்றவன் “என்கிட்ட உனக்கு ஏதாவது சொல்லனும்னா சொல்லிடு கஸ்தூரி..” என்றான்.

இன்று இதோடு அவள் எதுவாக இருந்தாலும், கடந்த கால கசப்புகளை பேசி முடித்து அவளே ஒரு தெளிவிற்கும் வந்துவிடட்டும் என்று.

அவன் எதை சொல்கிறான் என்றும் அவளுக்குத் தெரிய, சில நொடிகள் அமைதியாய் இருந்தவள் “இப்போல்லாம் யாரும் எங்கம்மா பத்தி பேசிடுவாங்களோன்னு ஒரு பயமாவே ஆகிடுச்சு..” என, “எதுக்கு பயம்..??” என்றான் இவன் தீவிரமாய் அவளின் முகம் பார்த்து.

“தெரியல.. யாரும் கேட்டிடுவாங்களோ.. சொல்லிடுவாங்களோ.. அப்.. அப்புறோ..” என்று இழுத்தவள், அவனைத் தயக்கமாய் பார்க்க, “ம்ம் சொல்லு..” என்றான், சற்று தள்ளிப் படுத்து.

“இல்ல.. தள்ளி எல்லாம் போகாத..” என்றவள், அவளே அவனை ஒட்டிக்கொள்ள, “இவ்வளோ பாசமிருக்குல.. பின்ன நான் கூப்பிடுறப்போவே வந்தா என்ன??” என்றவனுக்கு பேச்சில் ஒரு துள்ளல் தெரிய,

“நான் யோசிக்கிறதுக்குள்ள நீ கிளம்பிட்ட..” என்றாள் பிகுவாய்.

“உன்னைய எல்லாம் எப்பவும் யோசிக்கவே விடக்கூடாது. அப்படியொரு பீசு நீ..” என்றவன், “சரி சொல்லு..” என,

“ம்ம்ம்..” என்று அவனின் கழுத்தில் இருந்த சங்கிலியை திருகியபடி இருக்க “உங்கப்பா போட்டது தான் டி.. அதையேன் திருகுற..” என்று அவளின் விரலைப் பிடிக்க,

“நம்ம வாழ்கையில எங்கயும் எப்பவும் எங்கம்மாவோட பேச்சோ இல்லை நெனப்பு கூட வந்திடக் கூடாதுன்னு இருக்கேன்..” என, அவள் பட்ட காயத்தின் ஆழம் தெள்ளத் தெளிவாய் புரிந்தது அவனுக்கு.

இதற்குமேல் அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் இதுதான் நிஜம்..

அவள் அம்மா.. எப்போதோ இல்லை அவளுக்கு. பின் அவர் பற்றிய பேச்சினைக் கூட அவள் பேச பிரியப்படவில்லை. இப்போதும்..
கஸ்தூரி இப்படிச் சொன்னது கேட்டு, அவளின் முகத்தினை வியப்பாய் பார்த்தவன் “நம்ம வீட்ல யாரும் எதுவும்
சொல்லமாட்டாங்க கஸ்தூரி.. அதுக்கு நான் உறுதி..” என்றவன்,

“ஆனா பேசணும்னு நினைக்கிற மத்தவங்களை நம்ம எதுவும் செய்ய முடியாது.. நீ என்ன பேசினாலும் அது என்னை பாதிக்காதுன்னு நீதான் உன்னைய திடம் பண்ணிக்கணும்.. நாளைக்கு நமக்கு பசங்க வர்றப்போ அவங்களுக்கு நீ நல்ல எடுத்துக்காட்டா இருக்கணுமே தவற, இப்படி உடைஞ்சு போற அம்மாவா இருக்கக் கூடாது.. ஊர் வாய் என்னிக்கும் மூடாது.. வாழ்ந்தாலும் பேசும். தாழ்ந்தாலும் பேசும்.. ஆனா நம்ம வாழ்கை நம்மதான் வாழ முடியும்..” என்று அவளுக்கு ஆறுதலாகச் சொல்ல,

“ம்ம்..” என்று சம்மதமாய் தலையை ஆட்டினாள்.

“உனக்கு நான் இருக்கேன் புரியுதா.. அதை மனசுல வச்சுக்கப் பாரு. அதைவிட்டு இனி இப்படி கோவிச்சுக்கிட்டு கிளம்பிப் போன மவளே கொன்னுடுவேன்..” என்று இப்போது கண்ணன் மிரட்ட,

“ரொம்ப மிரட்டாத..” என்றாள் இப்போது பிகுவாய்.

“ஆமா டி.. மிரட்டுறேன்.. எதுவா இருந்தாலும்.. சண்டையோ என்னவோ எல்லாமே இங்கதான் புரிஞ்சதா.. ஏன் டி அவ்வளோ பேசின எங்கம்மாவையே இப்போ உறவு கொண்டாடுறோ.. எவளோ என்னவோ பேசிட்டு போறான்னு விடுவியா..” என,

“சொல்லிட்டல்ல.. நாளைக்கு இருந்து பாரு என் கச்சேரிய.. உங்கம்மாவ மிரள விடுறேன்..” என்று கஸ்தூரி வேண்டுமென்றே சொல்ல, “அடிப்பாவி..!!” என்று பார்த்து வைத்தான்.

“ம்ம் அது..” என,

“உன்னைய யோசிக்க மட்டுமில்ல, பேசவும் விடக்கூடாதுன்னு இப்போதான் தெரியுது..” என்றவன், பின் சிறிதுநேரம் அவள் பேச்சினை நிறுத்த,

“இப்புடி பண்ண அடுத்து நான் ரொம்ப பேசுவேன்..” என்றாள், சிரித்தபடி.

“பேசு டி.. இப்போ பேசிப் பாரு..” என்றவன், அவளிடம் எதையோ சொல்ல, அதனைக் கேட்டவளோ “ச்சீ இப்புடியா பேசுவ நீ.. ரொம்ப மோசம்..” என்றவள், வேகமாய் அவனிடம் இருந்து விலகி, அவன் சுதாரிக்கும் முன்னமே தன்னை சரி செய்துகொண்டு கீழே விரைய,

“ஓய் நில்லு கஸ்தூரி ..” என்றபடி கமலக்கண்ணனும் தட தடவென படிகளில் இறங்கிவர, கிட்டத்தட்ட இருவரும் ஓடி பிடித்து வருவது போல் வர, கீழே சந்திரபாண்டி யாரோடோ பேசிக்கொண்டு இருக்க, தன்னப்போல் இருவரின் வேகமும் மட்டுப்பட, கமலக்கண்ணன் முன்னே போக, கஸ்தூரி தள்ளி நின்றாள்.

சந்திரபாண்டி திரும்பி கஸ்தூரியைப் பார்த்தவர், வந்தவரிடம் “இந்தா இதான் எம்மருமவ.. இந்த புள்ள பேரத்தான் ரேஷன்கார்டுல சேக்கணும்...” என,

முதல் முறையாய் கேட்கிறாள் கஸ்தூரி அவர் அவளை மருமகள் என்று சொல்வதை. இனி அவர் நேரடியாய் பேசினால் என்ன பேசாது போனால் என்ன.. இது போதுமே..

சட்டென்று மனதில் ஒருவித நிறைவு..!!

கமலக்கண்ணனைப் பார்க்க, அவனுமே கூட அப்பாவினை வியந்து பார்த்தவன் பின் பார்வையைத் திருப்பிக்கொள்ள, முருகேஸ்வரி அங்கே தள்ளி அமர்ந்து பூ கட்டிக்கொண்டு இருந்தவர் “போ கஸ்தூரி எல்லாருக்கும் டீ போடு..” என, அவளும் சரியென்று போட்டுக்கொண்டு வர, கண்ணன் அங்கில்லை.

“போன் வந்துச்சுன்னு மேல போயிருக்கான்..” என்று முருகேஸ்வரி சொன்னவர், "இந்தா.." என்று மல்லியும் முல்லையும் கலந்து கட்டிக் கொடுக்க, பூவினை வாங்கி தலையில் வைத்தவள், இருவருக்குமான டீயை எடுத்துக்கொண்டு கஸ்தூரி மீண்டும் அவர்களின் அறைக்குச் செல்ல, போன் பேசி முடித்திருந்தவன், “என்ன கஸ்தூரி.. இப்போ சந்தோசமா..” என,

“ம்ம்..” என்றபடி அவனிடம் டீயை நீட்ட, அதை முகர்ந்து பார்த்தவன்,

“இந்த டீயில கூட நீ வக்கிற பூ வாசனத்தான் டி தெரியுது எனக்கு..?” என்று வேண்டுமென்றே அவன் வம்பிழுத்தான்.

“அ..!! தலைக்கு வைக்கிற பூவ உனக்கு போடுற டீயில கொஞ்சம் போட்டு கொதிக்கவிட்டுத் தர்றேன் அதான்..” என,

“நீ செஞ்சாலும் செய்வ..” என்று இவனும் சொல்ல, “இரு.. உங்களோட சண்டை போடுன்னு என்னைய படுத்துறன்னு உங்கம்மாக்கிட்ட சொல்லிவிடுறேன்..” என்று கஸ்தூரி இப்போது சீண்ட,

“எங்கம்மாவோட என்ன, எங்கம்மாவோட பையன் கூட சண்டை போடு டி...” என்று கமலக்கண்ணன் சரசமாய் நெருங்க,

இப்போதோ பூவாசம் இருவரின் மேனியிலும்..!.








super story mam
 
சூப்பர் சூப்பர்.... என்ன இருந்தாலும் டக்குனு முடிந்த பீல்.... இன்னும் ஒரு எபி கொடுங்க பிலீஸ்...
 
Top