Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 39

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻





அத்தியாயம் 39

பெரிய அலையொன்று சீறிக் கொண்டு வந்து கரையை ஆவேசமாக மோதி விட்டு, வந்த வேகத்துடனேயே காணாமலும் போயிற்று. நுப்பும் நுரையுமாக ஊறிய உப்புநீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ரேகா.



கம்பெனி மீட்டிங் முடிந்து நடைபெற்ற விருந்தில் கலந்து கொள்ள விரும்பாமல் வெளியே வேடிக்கை பார்ப்பதாக சொல்லி வெளியேறி இருந்தாள்.

மேல்தட்டு விருந்துகள் எப்படியிருக்கும் என்று அவளுக்கு தெரியாதா என்ன?

ஆனால் நல்லவேளை இந்த கம்பெனியின் எம் டி கொஞ்சம் கண்ணியவானாக இருந்தது அவளுடைய அதிர்ஷ்டம் தான்.

முரளி போல் இருந்திருந்தால் அடுத்தொரு வேலை தேடி அலைய வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கும்.



அலைகளை ஆர்வத்துடன் பார்த்தவளுக்கு தன் மகன் தீபக்கின் நினைவு வந்தது.

அவன் மட்டும் இந்நேரம் இங்கே வந்திருந்தால் அலைகளில் அலைந்து கொண்டு இருந்திருப்பான். சின்னஞ்சிறுவனாக துறுதுறுவென எந்நேரமும் ஓடிக் கொண்டேயிருப்பான்.



"அடக்கமான உங்களுக்கு இப்படியொரு விஷமக்காரப் பிள்ளையா? நம்பவே முடியலை மோகன்…."



ஏன் வாசுதேவருக்கு பிறந்த கிருஷ்ணர் குறும்பு செய்யலையா? என் மகனும் அப்படித்தான்."



மகனைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு மோகனின் உடனடி பதில் இதுவாகத் தானிருக்கும்.

அவனுக்குத் தான் தீபக் மீது எவ்வளவு ப்ரியம்? குழந்தைக்கு சிறு காயம் பட்டாலும் துடித்துப் போவானே? தெய்வமே அவள் துயரம் கண்டு பொறுக்காமல் தான் மோகனை அவளுக்கு துணையாக அனுப்பி வைத்ததோ?



"சார்! நீங்க வேணா பாருங்க.என் வாக்கு நிச்சயம் பலிக்கும். அடுத்த வருஷம் நீங்க இங்கே உங்க குழந்தையோட தான் வருவிங்கனு ஜக்கம்மா சொல்றா…."



கடற்கரை ஓரத்தில் குறி சொல்லும் பெண்ணொருத்தி தேனிலவு தம்பதியரிடம் கதை சொல்லிக் கொண்டிருந்தாள். இதே பெண் முன்பொரு நாள் அவள் முரளியுடன் வந்தபொழுதும் இதையே தானே சொன்னாள் என்ற நினைப்பில் கண்கள் ஈரமாகின. முரளி அன்று விளையாட்டுபோல் அந்தப் பெண்ணிடம் கை நீட்ட அவளோ அவர்களிருவரையும் தேனிலவு தம்பதியராய் நினைத்து இஷ்டத்திற்கு குழந்தை அது இது என்று ரீல்ரீலாக அள்ளிவிட, முரளி அவளை பார்த்து விஷமமாக கண் சிமிட்டினான்.



"ஏன் ரேகா! குழந்தையைப் பற்றி சொன்னவள் ஆண் குழந்தையா இல்ல பெண்குழந்தையானு சொல்ல மறந்துட்டாளே."



ஹோட்டல் அறையில் தனிமையில் அன்று அவன் கொஞ்சியதும், அதற்கு அவள் வெட்கப்பட்டு கன்னம் சிவந்ததும் இப்பொழுது நினைவிற்கு வர , ஒரு ஆழ்ந்த பெருமூச்சில் மூக்கு விடைத்தது.



'ரேகா! ஐ லவ் யூ ஹனி! என்று என்னமாய் கொஞ்சினான்? எப்படியெல்லாம் சிரிக்க சிரிக்கப் பேசினான்? அந்தப் பேச்சிற்கும் சிரிப்பிற்கும் பின்னால விஷமம் இருப்பது அவளுக்கு ஏன் தெரியாமல் போனது?

அவனை நம்பியவள் கொஞ்சமாகவா ஏமாந்தாள்? தன் கற்பையே அவனிடம் களவு கொடுத்தாளே.அந்தக் குறி சொன்ன பெண் வயிற்றுப்பிழைப்பிற்காக அவர்களிடம் கதையளந்திருந்தாலும் அவளைப் பொறுத்தவரை அது நிஜமானதே.தீபக் பிறந்தானே….



ஏதேதோ யோசனையில் மூழ்கியவளாக , ஹோட்டலை நோக்கி நடந்த ரேகா போர்டிக்கோ புல்வெளியைக் கடந்து வரவேற்பறையை அடைந்த பொழுது தான் அவனைப் பார்த்தாள்.

வரவேற்புப் பெண் நீட்டிய அறையின் அடையாள அட்டையை கையில் வாங்கி மறுகையில் கார் சாவியை சுழற்றியபடி முன்னேறிய முரளியை சுலபமாக அடையாளம் கண்டு கொண்ட ரேகாவால் அவனைத் தொடர்ந்து நடந்த பெண்ணைத் தான் அடையாளம் தெரியவில்லை.

காட்டன் சேலையில் குடும்பப்பாங்கான தோற்றத்தில் இருந்தவளைக் கண்டு முரளியின் அடுத்த பலியாடோ என்று தான் பரிதாபப்பட்டாள் ரேகா.



திடீரென்று முரளி அந்தப் பெண்ணிடம் என்னவோ சொல்லிவிட்டு மீண்டும் வாயிலை நோக்கி வந்தான். எங்கே அவன் தன்னை பார்த்து விடுவானோ என்ற பயத்தில் ரேகா அவசரமாய் திரும்பி நின்று கொண்டாள். அவளைத் தற்செயலாக தொடுவது போல் தோளை இடித்து விட்டு முகம் பார்க்காமலேயே சாரி சொல்லிவிட்டு போனவனின் செயல் எரிச்சலையும் சிரிப்பையும் ஓருங்கே கிளப்பியது.



தான் ஏற்கெனவே தொட்டு சீரழித்த பெண் தான் என்று தெரிந்திருந்தால் இவள் பக்கம் திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டானே என்ற நினைப்பில் சிரிப்பும், மனுஷன் இன்னும் மாறவேயில்லையே என்ற நினைப்பில் எரிச்சலும் எழுந்தன.

தான் அவனுடன் பார்த்த பெண் அவன் மனைவியாயிருக்கக்கூடும் என்ற சந்தேகம் கூட ரேகாவிடம் அப்போதில்லை. தன்னைப் போல் இன்னொரு பெண் அவனிடம் ஏமாந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் அவன் அறை எண்ணை வரவேற்பு பெண்ணிடம் விசாரித்து தெரிந்து கொண்டு அவனறைக்குச் சென்றாள். வரவேற்புப் பெண்ணின் பார்வையிலிருந்த கேலியோ "எப்படித்தான் இவனைத் தேடி வந்து விழறாங்களோ "

என்ற முணுமுணுப்பையோ கூட லட்சியம் செய்யாமல் விரைந்தாள்.

அறைக்கதவை தட்ட எத்தனித்தவள் உள்ளிருந்து கேட்ட விசும்பல் சத்தத்தில் திகைத்தாள்.



"ப்ளீஸ் சார்! என்னை விட்டுடுங்க. நான் நீங்க நினைக்கற மாதிரி பொண்ணு இல்லை…."

யாரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறாள் இவள்? முரளி கூட வெளியே போய் விட்டானே…

ரேகாவின் மனதில் முளைத்த கேள்விக்கு உள்ளேயிருந்து கரகரப்பான ஆண்குரல் பதில் சொல்லியது.



"லுக்…உன் புருஷனே சம்மதிச்சு தான் உன்னை இங்கே விட்டுட்டுப் போயிருக்கான்.முரளிக்கு தேவை பிரமோஷன்.எனக்குத் தேவை நீ…இப்போ எங்க டீல் என்னனு உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்."



கடவுளே! இது என்ன கொடுமை? மாற்றானின் கையில் மனைவியை ஒப்படைத்து அதற்கு பலன் பெற நினைக்கும் முரளியும் அந்த கேவலத்தைச் செய்ய தூண்டி விடும் இவனும் தூத்தெரி! இவர்களெல்லாம் மனிதர்கள் தானா?



ரேகாவிற்கும் ராதாவிற்கும் ஒரே சமயத்தில் தோன்றிய எண்ணத்தின் விளைவாக, அவனைக் கொலையே செய்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் ராதா சூழ்நிலையை புத்தியுடன் கையாண்டாள்.



"சாரி சார்! உங்க டீலிங் எனக்கு விருப்பமில்ல.நான் போலீஸ்க்கு சொல்றதுக்கு முன்னால நீங்க வெளியே போய்டறது உங்களுக்கு நல்லது..என் கைப்பையிலிருக்கும் பெப்பர் ஸ்ப்ரேக்கு வேலை வைக்க மாட்டிங்கனு நம்பறேன்…"

என்று ராதா அசாத்திய துணிச்சலுடன் எதிர்த்து நிற்க,

"என்னடி பெரிசா சீன் போடறே? உன்னை மாதிரி எத்தனை பெண்களை பார்த்திருப்பேன்? "

என்று அந்த ஆண் மல்லுக்கட்ட, அதற்கு மேல் ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை ரேகா. படபடவென்று ஓங்கி கதவை தட்டினாள்.



"வூ இஸ் தெட்? …"என்று கத்தியவண்ணம் கதவைத் திறந்தவரை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தவள் ராதாவின் அருகில் நெருங்கி அவள் கையைப் பற்றிக் கொண்டாள்.



"சாரி பார் டிஸ்டர்பிங் யூ சர். இவ என்னுடைய பள்ளித்தோழி தான்

ரொம்பநாளைக்குப் பிறகு ரிஷப்ஷனில் இவளைப் பார்த்தேனா? சரி பேசலாம்னு தொடர்ந்து வர்றதுக்குள்ள இவ இங்கே வந்துட்டா. எனி ப்ராப்ளம் சர்?"



சமயத்திற்கு ஏற்றார் போல் மனதில் தோன்றியதை இட்டுக்கட்டி ரேகா பேசவும்

ஒன்றுக்கு இரண்டாய் பெண்கள் அதுவும் துணிச்சலுடன் இருக்கவும் இப்போ எதுவும் செய்ய வேலைக்காகாது என்ற நினைப்புடன் நத்திங் என்று முணுமுணுத்தபடி அவர்கள் வெளியேற வழிவிட்டார் அந்த பெரிய மனிதர்.



இத்தனைக்குப் பிறகும் அங்கிருக்க பெண்கள் இருவருக்கும் பைத்தியமா என்ன?

அவசரமாய் வெளியேறினாலும் நடந்ததை நினைத்து அதிர்ந்து போயிருந்தனர் இருவரும்.



கம்பெனி சேர்மனிடம் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும் என்று மல்லுகட்டிய முரளி சில நாட்களாக அதைப் பற்றிய பேச்சே எடுக்காதிருக்கவும், நல்லவேளையாக புருஷன் அதை மறந்து விட்டதாக எண்ணி இவள் சந்தோஷப்பட்டது தவறாகிப் போயிற்றே. அந்த மறதியும் மௌனமும் புயலுக்கு முன் வரும் நிசப்தம் போன்றது என்று அவளுக்கு ஏன் புரியாமல் போயிற்று?

மாமாவை திருப்திபடுத்த சினிமாவிற்கு அழைத்து சென்றது போல இப்பொழுது ரிசார்டுக்கும் அழைத்து வந்திருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருக்க, கணவன் இப்படியொரு சூழ்ச்சி செய்திருப்பான் என்று அவள் கனவிலும் எண்ணியதில்லையே.

ஷர்மாவிடம் நீ மன்னிப்பு கேட்கலேன்னா நானே உன்னை அவரிடம் ஒப்படைப்பேன்.ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக எனக்கு பிரமோஷனும் கிடைக்கும்.உன்னை விவாகரத்து செய்ய காரணமும் கிடைக்கும், என்று

அன்று அவன் சொன்னதை நிஜமாக்கத் துணிவான் என்று ராதா சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை.



நடக்கவிருந்த பெரிய விபரீதத்திலிருந்து தன்னை காப்பாற்றியவள் தன் கணவனால் ஏற்கெனவே ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டவள் என்ற உண்மை புரிந்த பொழுது ரேகாவிடம் நன்றியும் சகோதரி மீதான வாஞ்சையும் தோன்றியது.

ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் சந்தித்த அவ்விரு பெண்களின் பழக்கம் நாளடைவில் நட்பாக மலர்ந்தது.



தன் மண வாழ்க்கையின் சோகத்தை ரேகாவின் மனம் கனிந்த நட்பில், தீபக்கின் கள்ளமற்ற கிள்ளை மொழி பாசத்தில், ராதா மறந்து விடுவது வழக்கம்

ஆனால் அதற்கும் விதிவிலக்காக, அன்று ரேகாவின் வீட்டிற்கு வந்த ராதாவின் முகம் வாடியிருந்தது .தீபக்கின் விளையாட்டும் கொஞ்சலும் கூட அவளை வசப்படுத்தவில்லை. ரேகா தூண்டித் துருவி விசாரித்ததில் தான் முரளிக்கு அவன் தாய் வாரிசுக்காக

மறுமணம் செய்ய உத்தேசித்திருப்பது தெரிய வந்தது.



"குறை அவங்க பிள்ளைட்ட தானிருக்குனு

நீங்க அந்த அம்மா கிட்ட சொல்லிடலாமே ராதாக்கா…"



ரேகா கோபமாய் சொல்ல, ராதா வருத்தத்துடன் மறுத்தாள்.

"வேண்டாம் ரேகா. அந்த தாயோட நம்பிக்கையை நான் கெடுக்க விரும்பலே. தன் அண்ணா பெண்ணை தான் மருமகளாக்கிக்கனும்ங்கற அத்தையோட ஆசையை நான் தெரியாமல் ஒரு முறை கெடுத்துட்டேன். இப்போ அவங்க ஆசையை நிறைவேற்ற நான் என் வாழ்க்கையை விட்டுக் கொடுக்க தயாராயிருக்கேன்."



"ஆமா! பொல்லாத வாழ்க்கையை வாழ்ந்துட்டிங்க. முரளியோட வாழ்வதை விட பிரிந்து போவது உத்தமம் தான்.ஆனால் அவனோட குறையை சொல்லிட்டு தான் நீங்க விலகி வரனும்.ஒரு குறையுமில்லாமல் மலடின்ற அவப்பெயரை நீங்க ஏன் சுமக்கனும்? நோ! நீங்க அவனை சும்மா விட்டாலும் நான் விடறதாயில்ல…"



தீர்மானமாய் சொன்ன ரேகா முரளியிடம் வாஸ்தவத்தில் நியாயம் கேட்கத் தான் போனாள். ஆனால் நியாயம் கேட்கப் போன இடத்தில் தானே குற்றவாளியாக நிற்கும் சூழ்நிலை உருவாகும் என்ற உண்மை தெரிந்திருந்தால் அவள் முரளியை சந்தித்திருக்க மாட்டாளோ என்னவோ?.
 
Top