Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்- அத்தியாயம் 21

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 21
இன்போடெக் சொலுஷன்ஸ்
விவேக் அன்று காலை தனது அணியினர் அனைவரையும் மீட்டிங்கிற்கு அழைத்தான்..
“ஹலோ.. குட் மார்னிங் கைஸ்.. உங்களுக்கு ஒரு இன்ட்ரஸ்டிங் நியூஸ் சொல்லப்போறேன் …
இந்த ஃப்ரைடே குன்னூர்ல நாம அவுட்பாண்ட் ட்ரைனிங் போறோம்.. டிக்கெட்ஸ்லாம் கம்பெனி புக் பண்ணிடுவாங்க, வியாழன் நைட் ட்ரெயின்ல மேட்டுப்பாளையம் ரீச் ஆனதும் அங்க இருந்து பிரைவேட் ட்ராவல்ஸ்ல குன்னூர்க்கு போறோம்.. டூ டேஸ் அண்ட் டூ நைட்ஸ் ஸ்டே பண்ணப்போறோம், சண்டே மார்னிங் ஊருக்கு வந்துடலாம்..ஆல் ஆஃப் யூ மஸ்ட் அட்டென்ட் தி ட்ரைனிங் இன்குலூடிங் மீ.. யாரும் எந்த சாக்கும் சொல்லகூடாது… இது ஆர்டர் புரியுதா..? மத்த டீடெயில்ஸ நான் மெயில் பண்றேன் பார்த்துக்கோங்க.. யூமே கோ நௌ…”
என்றான் விவேக்
அனைவரும் விவேக்கின் அறையை விட்டு வெளியே வந்து அவரவருக்கு தோன்றியவிதமாக விவேக் கூறிய விஷயங்களை பற்றி விவாதித்துக்கொண்டே சென்றனர்…
விக்கி மிகவும் உற்சாகமாக காணப்பட்டான்..
“வாவ் அவுட் பாண்ட் ட்ரைனிங் ஃபர்ஸ்ட் டைம் போகப்போறேன் அதுவும் குளு குளு குன்னூர்ல… கேட்டாலே சும்மா அதிருதுல்ல…” என்றான் ஆர்வமிகுதியில்
“போடா லூசு.. நீ என்ன வெகேஷன்க்கா போற என்ஜாய் பண்றதுக்கு..?அது என்ன இடம் தெரியுமா? மிலிட்டரிக்கு ட்ரைனிங் குடுக்கற இடம் மலையேறுறது,மரம் ஏறுறது, கயிறுமேல நடக்கறது, மைண்ட் கேம்ஸ்ன்னு சும்மா பென்டா கழட்டிடுவாங்க..” என்றாள் பூர்ணா ஏளனமாக..
“ஐய்யய்யா.. நான் என்ன சர்க்கஸ்லயா சேர போறேன்..? கயிறுமேல நடக்கறதுக்கு.. நான் வரலைப்பா..” என்றான் விக்கிமுகத்தை சுளித்து
“அதான் விவேக் கண்டிப்பா அட்டென்ட் பண்ணனும்னு சொன்னாருல நீ எஸ்கேப் ஆகா முடியாது ராஜா..” என்றாள் பூர்ணா விளையாட்டாக
“கவலை படாதடா.. நைட்ல பார்ட்டி, டான்ஸ். கேம்ப் பயர்ன்னு செமையா என்ஜாய் பண்ணலாம்…” என்று அருண் அவனைத்தேற்றினான்..
“அப்பாடா.. இப்பதான் என் கண்ணுல ஒரு ஒளியே தெரியுது…” என்று விக்கி பெருமூச்சுவிட்டு அங்கே ஒரு சிரிப்பொலி பரவியது..
ஆனால் இந்த சம்பாஷணை எதிலும் கலந்து கொள்ளாமல் அபி மட்டும் ஏதோ யோசனையாக மெதுவாக நடந்து பின்தங்கி இருந்ததை அருண்கவனிக்கத் தவறவில்லை, அவன் அவளது வேகத்திற்கு தன்னுடைய நடைவேகத்தை குறைத்துக்கொண்டு அவளுடன் மெதுவாக நடந்தபடி..
"என்ன..? ட்ரைனிங்க்கு வரலை அதானே..?”என்றான் ஏளனமும் கடுப்புமாக..
இவனுக்கு எப்படி தெரிந்தது என்பது போல் அதிர்ந்து விழித்தாள் அபி..
“இங்க பாரு.. உன்னை யாரும் இங்க ஒப்பீனியன் கேக்கலை, இது ஆர்டர், நீ ஒபே பண்ணி தான் ஆகணும், ஒழுங்கா ட்ரைனிங்க்கு கெளம்பர வழியப்பாரு..” என்று கட்டளையிட்டுவிட்டு தன் வேக நடையுடன் முன்னோக்கி சென்றான்..
அவன் செல்வதையே கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அபி…

அன்று வீடு திரும்பிய அபி அருகில் இருந்த சூப்பர்மார்கெட்டிற்கு பொருட்கள் வாங்க சென்றாள்.. அவர்களின் மறுநாள் பயணத்திற்கு சில அத்யாவசிய பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது, சாமான்களை வாங்கி பில் போட்டவள் பணம் தருவதற்காக பர்ஸை தேடினால் கைப்பையில் பர்ஸ் இல்லை.. முகத்தில் கலவரத்துடன் பையின் உள்புறம் வரை தேடினாள், வெறும் பை மட்டுமே இருந்தது.. எங்கும் கீழே விழுந்திருக்கவும் வாய்ப்பு இல்லை அவள் கைப்பை திறக்கப்படாமல் அப்படியே அவள் கொண்டுவந்தது போலவே இருந்தது… வீட்டிலேயே மறந்து விட்டிருந்தாள் ..கார்டு, போன் எதுவுமே கொண்டுவரவில்லை..
செய்வதறியாது அவள் கவுண்டரில் இருந்த பெண்ணை பார்த்து விழித்தாள்..
அதற்குள் பின் வரிசையில் நின்றிருந்த ஒருவர்..
“அதான் அவங்ககிட்ட பணம் இல்லைல நகர சொல்லுங்க.. நாங்க எவ்ளோ நேரம் லைன்ல நிக்கறது..” என்றார் பொறுமை இழந்து
கவுண்டரில் இருந்த பெண்ணும் நிலைமையை அறிந்து "என்ன மேடம் பணம் கொண்டுவரலையா, வீட்டுக்கு போய் கொண்டுவந்துட்டு பொருளை எடுத்துக்கோங்க, இப்ப கொஞ்சம் நகருங்க மத்தவங்க வெயிட் பன்றாங்க..”என்றாள் அவள் குரலில் சிறிது ஏளனம் கலந்து ஒலித்ததோ அபி கூனி குறுகி போனாள், அபிக்கு அந்த பெண்ணுக்கு நன்றாக திருப்பி தரவேண்டும் என்றும் தோன்றியது, ஆனால் தவறு அவளுடையது.. அதுமட்டுமல்லாமல் அந்த இடத்தில களேபரம் செய்யவும் அவளுக்கு சங்கடமாக இருந்தது.. எனவே மற்றவர்களுக்கு ஒரு கேலிப்பொருளாக அங்கே நிற்காமல் கிளம்ப எண்ணி ,"சாரி..” என்று நகர முயன்றவளை ஒரு கரம் தடுத்து நிறுத்தியது..
யார் என்று நிமிர்ந்து பார்க்கும் போதே அருண்
"இந்தாங்க இங்க கார்டுல பில் பண்ணுங்க..”என்று தனது கார்டை நீட்டினான் அந்த பெண்ணிடம்..
அபிக்கு ஆறுதலும் அதே சமயம் இவன் முன்னர் இப்படி தர்மசங்கடமான சூழ்நிலையில் நிற்கிறோமே என்ற அவமானமும் ஒருங்கே தோன்றியது..
அந்த பெண் அவனது கார்டை வாங்கி பில் போட்டுமுடிக்கவும் ,அருண் அவளிடம்..
"பணம் இல்லாம ஒன்னும் வாங்க வரலை.. பர்ஸை வீட்லையே மறந்து விட்டுட்டு வந்துட்டாங்க, இது யாருக்கு வேணா நடக்க கூடிய தவறு தான்.. அதுக்காக கஸ்டமர்கிட்ட இப்படி தான் இன்டீசென்ட்டா நடந்துக்குவீங்களா? யாரு இங்க மேனேஜர்..? ஐ வாண்ட் டு மீட் தி மேனேஜர்..” என்றான் அதிகார தொனியில்
அந்த பெண் உடனே பயந்து விட்டாள்…
“சாரி சார்.. கஸ்டமர் வெயிட் பண்ணாங்க அதான்.. சாரி மேடம்.. மேனேஜர் கிட்ட கம்பளைண்ட் பண்ணிடாதீங்க.. எனக்கு வேலை போய்டும்..” என்று கெஞ்சினாள் ..
“இனிமேலாவது பணத்தை மட்டும் மதிக்காம கொஞ்சம் மனுஷங்களையும் மதிங்க…” என்றவன் திரும்பி பின்னால் வரிசையில் நின்றவனை பார்த்து, “என்ன சார் அப்படியென்ன தலைபோற அவசரமா..? கொஞ்சம் பொறுத்து போனாதான் என்ன..?”என்று கேட்டுவிட்டு.. பொருட்களை வாங்கிக்கொண்டு அபியையும் ஒரு கையில் பற்றிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான், கடையின் வெளியே வந்ததும் அருண் அவளது கையை விட்டான், சிறிது நேரம் அமைதியாக நடந்தவள்,
“நீ எதுக்கு எனக்காக பணம் தர..?” என்று கேட்டாள்..
“அம்மா தாயே, இன்னொரு சண்டையை ஆரம்பிக்காத, இந்த பணத்தை என்னோட அக்கௌன்ட்க்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடு, நான் கூகிள் பே நம்பர் தரேன் போதுமா..?” என்றான் எரிச்சலாக ..
“சரி..” என்றாள் மெதுவாக..
கொஞ்ச தூரம் நடந்ததும் அவர்களின் எதிரில் வந்த ஒரு நடுத்தர வயது மனிதர் அபியை பார்த்து "என்னமா அபி..அபி தானே?” என்று சந்தேகமாக கேட்டார்…
அபி ஒருகணம் திகைத்துபோனவள் மறுகணமே சமாளித்துக்கொண்டு "ஆமா மாமா அபி தான், நல்லா இருக்கேன் மாமா நீங்க எங்க இங்க?” என்று விசாரித்தாள்.
"என் பையன் இங்கதானே வேலைல இருக்கான், பார்க்க வந்தேன், வழில எங்கையோ பார்த்த முகமா இருக்கேன்னு பார்த்தா நீ..,”என்றார் பெருமையாக ஏதோ அறியப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியது போல் அப்படி ஒரு பூரிப்பு மனிதருக்கு.. அருகில் நின்ற அருணை ஓரக்கண்ணால் அளவெடுத்தபடி.. “ஆமா… நீ இங்க என்ன பண்ற?”என்றார்…
"நான் இங்க தான் மாமா தங்கி இருக்கேன்..” என்றாள் எதிரில் இருந்த அவளது அபார்ட்மெண்டை காட்டி ..
"அதில்லைம்மா கல்யாணத்தை வச்சிக்கிட்டு இங்க என்ன பண்ற..? ஊருக்கு போகலையா..?”என்றார் யோசனையாக..
“அது.. இன்னிக்கு தான் மாமா டிக்கெட் புக் பண்ணி இருக்கேன் கெளம்பனும்..” என்றாள் குரலில் பதற்றத்துடன்..
"சரிம்மா.. ..கல்யாணத்துல பார்க்கலாம் நான் வரேன்..” என்று அருணை சந்தேக பார்வையால் துளைத்தபடி விடைபெற்று சென்றார் அவர் ..
அதன் பிறகு அபி ஏதோ சிந்தனையாக நடக்க அருண் சிறிது பொறுத்து பார்த்தான்.. அவளாக ஏதாவது சொல்லுவாள் என்று.. அவள் வாய் திறப்பதாக தெரியாததால் அவனே பேசினான்..
"யாருக்கு கல்யாணம் அபி ?” என்றான்
திடுக்கிட்டு நிமிர்ந்தவள்,. "அது… ஊருல தெரிஞ்சவங்களுக்கு கல்யாணம் அதை தான் சொல்றாரு.. " என்றாள் தடுமாற்றத்துடன்..
அபி அவனது சந்தேகமான பார்வையை தவிர்ப்பதற்காக வேகமாக நடந்தாள்..
“பர்ஸை மறந்து விட்டுட்டு வர்ற அளவுக்கு எந்த உலகத்துல இருக்க..?”என்றான் அவளையே ஊடுருவி பார்த்தபடி…
அவனது பார்வையை சந்திக்காமல் தவிர்த்து "அது மறந்துட்டேன்..” என்றாள்…
“ஓஹ் ஓகே..” என்றான் யோசனையாக அவன் அதற்குமேல் அவளை தோண்டி துருவ விரும்பவில்லை..அந்த மனநிலையிலும் இல்லை, அவளாக சொல்லட்டும் என்று விட்டுவிட்டான்..
ஆனால் வீட்டிற்கு வந்தும் அவன் அபியின் வினோதமான நடவடிக்கையை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான்.. எவ்வளவு முயன்றும் அவனால் அதிலிருந்து மீழமுடியவில்லை..
“யார் அந்த ஆளு..? யாரோட கல்யாணத்தை பத்தி பேசினார்..? அபி ஏன் இவ்ளோ பதற்றம் ஆகணும்..?” என்று அதிலேயே மனம் உழன்றது, அதைப்பற்றி யோசிக்க யோசிக்க அவனுக்கு குழப்பம் தான் மிஞ்சியது, இது ஏதோ அவளது குடும்பத்திற்கு சம்மந்தப்பட்டது என்பது மட்டும் அவனது உள்ளுணர்வுக்குக்கு தெரிந்தது…
இந்த புதிருக்கெல்லாம் விடை அபியிடம் தான் இருக்கிறது ஆனால் ஒரு நாளும் அவனாக போய் அவளிடம் கேட்க போவது இல்லை, அவன் இன்னும் அவள் மேல் கோபமாக தான் இருக்கிறான்.. ஆனால் அவளாக அவனிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினால் செவிமடுக்க தயாராக அவன் எப்போதும் அவளுக்கு அருகில் தயாராக இருப்பான்.. இப்படி பலவாறு எண்ணங்கள் ஓட டிவி திரையில் ஏதோ ஒரு பாடல் ஓடிக்கொண்டிருக்க அதை வெறித்து கொண்டிருந்தான் …
அப்போது திடுமென அழைப்புமணி ஒலித்தது, இந்த நேரத்தில் யார் என்று யோசனையோடு கதவை திறந்தான்.. அங்கே அபி வெளிறிய முகதோடு நின்றிருந்தாள்.. அவன் கேள்வியாக புருவும் உயர்த்த..
"இந்த நேரத்துல உன்னை டிஸ்டர்ப் பண்றதுக்கு சாரி.” என்றாள் மன்னிப்புக்கோரும் தொனியில்..
“ஏதாவது பிரச்சனையா..” என்றான் கரிசனையாக…
“உள்ள வரலாமா..?” என்றாள் தயக்கமும் நம்பிக்கையும் நிறைந்த கண்களுடன் அந்த கண்களிடம் எதை மறுக்கவும் அவனால் எப்படி முடியும்?
அவள் உள்ளே வருவதற்கு வழி விட்டு சற்று விலகி நின்றான்..
அவள் உள்ளே சென்றதும் கதவை சாத்திவிட்டு அவனும் அவளை பின்தொடர்ந்தான், அபி மிகவும் களைத்து ஓய்ந்து தெரிந்தாள்,அவளே விஷயத்தை சொல்லட்டும் என்று காத்திருந்தான் அருண்..
“நான் இன்னிக்கு ஒரு நாள் இங்க தூங்கலாமா?”என்றாள் எழும்பாத குரலில்
அருணின் புருவங்கள் உச்சிமேட்டிற்க்கே சென்றது, அவனது அதிகப்படி ஆச்சர்யத்தை பார்த்து லேசாக முகம் கன்ற..
“காவ்யா வேற ஊருல இல்ல தனியா தூங்க ஒரு மாதிரி பயமாயிருந்தது அதான்..” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு..
“காவ்யா ஊருக்கு போய் ரெண்டு வாரம் ஆச்சு..” என்றான் ஏளனமாக
அவனை பார்த்து உதட்டை பிதுக்கினாள் "இன்னிக்கு கொஞ்சம் பயமா இருக்கு அதான்..”
"இன்னிக்கு என்ன திடீர் பயம்..? ஏதாவது பேய், பிசாசு வரேன்னு கால்சீட் குடுத்திருக்கா?”
என்றான் மேலும் நக்கலாக.
இதுவே வேறொரு நாளாக இருந்திருந்தால் அவள் அவனுக்கு சரிக்கு சரியாக திருப்பி கொடுத்திருப்பாள், ஆனால் இன்று அவளுக்கு அவனுடைய தயவு தேவைப்படுகிறதே.. அதை மனதில் கொண்டு, துடித்துக்கொண்டிருந்த நாவை அடக்கிக்கொண்டு பொறுமை காத்தாள்..
“எனக்கு ஹை ஃபீவரா இருக்கு, அதான் ரொம்ப வீக்கா ஃபீல் பண்றேன்..சந்தேகம் இருந்தா நீயே தொட்டு பாரு..” என்று அவன் கையை எடுத்து தன் நெற்றியில் வைத்தாள்..
ஆனால் அவன் சட்டென்று தன் கையை இழுத்துக்கொண்ட வேகத்தில் அபிக்கு முகத்தில் அறை வாங்கியது போல் வலித்தது, இதையே தான் அவள் அருணுக்கு செய்தாள் அவனுக்கும் இப்படித்தானே வலித்திருக்கும்.. என்று எண்ணி அதற்காகவும் வருந்தினாள்..
அவள் அவன் மனதில் ஏற்படுத்திய காயத்தை என்றேனும் அவன் மறந்து அவளை மன்னிப்பானா என்று கவலையடைந்தாள்..
ஒரு வினாடிக்கு குறைவான நேரமாக இருந்த போதிலும் அபியின் நெற்றியை தொட்டுவிலகிய தன் கரத்தில் அவளது கொதிக்கும் உடல் சூடு உரைத்தது அருணுக்கு…
“ஃபீவரா இருந்தா டாக்டர் கிட்ட போக வேண்டியது தானே..? இங்க எதுக்கு வந்த?” என்றான் அருண்..
“இந்த நேரத்துல எந்த டாக்டர் இருப்பாங்க..?”
“அதுக்காக அப்படியே விடுறதா..? எத்தனை 24 மணி நேர ஹாஸ்பிடல்ஸ் இருக்கு… நான் கூட்டிட்டு போறேன் வா..?”
என்று கண்டிப்பான குரலில் கூறிய போதும் அதில் மறைந்திருந்த அவனது கரிசனம் தான் தெரிந்தது அபிக்கு..
“நான் டேப்லெட் போட்டிருக்கேன்.. காலைல சரி ஆகிடும்..” என்றாள் அபி..
“ஓஹ் நீங்க டாக்டர் அபிராமி MBBS ன்னு சொல்லவே இல்லை..!!” என்றான் அதிகபடியான ஆச்சர்யம் காட்டி..
“பாராசிட்டமால் சாப்பிட்டா ஃபீவர் குறையும்ன்னு தெரிய டாக்டர்க்கு படிக்க தேவை இல்லை..” என்று வாதாடினாள் அபி..
“பட் ஃபீவர் வெறும் சிம்டம்தான் ரூட்காஸ் என்னன்னு ப்ரொபெஷனல் தான் சொல்லமுடியும்..” என்றான் அருண்..
“நான் ப்ரொபெஷனல் இல்லைதான்.. ஆனால் இந்த ஃபீவருக்கு காரணம் என்னன்னு எனக்கு தெரியும், நான் ரொம்ப டென்சன் ஆனா, ரொம்ப எமோஷனல் ஆனா இப்படி ஃபிவர் வரும், நல்லா தூங்கி எழுந்தா சரி ஆகிடும்..”என்றாள்..
அப்போது இருவருக்குமே சொல்லிவைத்தார் போல அபிக்கு உடம்பு முடியாமல் போன தினம் நினைவுவந்தது.. அதனோடு சேர்ந்த கசப்பான நிகழ்வுகளும் ஒருங்கே நினைவுவர அருணின் முகம் கடுத்தது.. அபி அவனை கவலையாக பார்க்க அவன்சிறு எரிச்சலுடன்
"அப்போ தூங்க வேண்டியது தானே..” என்றான்..
“அதுக்குதான் இங்க வந்தேன்..” என்று சட்டென்று அவள் பதிலளிக்கவும்..
"லூசு மாதிரி பேசாத அபி.. இந்த நேரத்துல நீ என் பிளாட்க்கு வர்ரதை யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..?”என்று கடிந்தான்..
“ஏன் நீ கூடதான் அன்னிக்கு என் வீட்ல நைட் ஸ்டே பண்ணினே..”
“ஓஹ் இப்போ நீயும் ஒரு நைட் என் வீட்ல வந்து தூங்கினாதான் அந்த கணக்கு நேர் ஆகுமா..?”
“ப்ளீஸ் அருண்.. எனக்கு தனியா இருக்க ஒரு மாதிரி டென்சனா இருக்கு அதான் கேக்குறேன்.. ப்ளீஸ்..”
என்று மன்றாடும் குரலில் கேட்கவும் அதற்ககு மேலும் மறுக்க அவனுக்கு மனம் வரவில்லை…
“ஓகே நீ பெட்ல படுத்துக்கோ.. நான் சோபால படுத்துகிறேன்..” என்று அவனது அறையை அவளுக்குக் காட்டிவிட்டு சோபாவில் உறங்க தயாரானான்..
“இல்லை நான் சோபால தூங்கறேன்.. உன்னோட ஹைட்டுக்கு அது செட் ஆகாது..” என்று மறுத்துப்பேச தொடங்கியவளை ஒரு பார்வையில் வாயடைக்க செய்து..
"நான் சோபால தூங்கறேன் தட் ஈஸ் பைனல்..” என்றான் உறுதியான குரலில்..
அவனுடைய முதுகுக்கு பழிப்பு காட்டிவிட்டு, போர்வையை தலைவரை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்க முயன்றாள் அபி…
அபி புரண்டு புரண்டு படுத்தும் அவளுக்கு தூக்கம் வரவில்லை, ஏதேதோ நியாபகங்கள் அலைக்கழிக்க கொட்ட கொட்ட விழித்திருந்தாள், அந்த இரவின் அமைதியில் அருண் சீராக மூச்சுவிடும் சத்தம் மட்டும் மனதிற்கு சிறிது திடம் தர ,படுக்கையிலிருந்து எழுந்து அவனருகில் சென்று தரையில் அமர்ந்தாள், அவன் ஆழ்ந்து உறங்குவதையே சிறிது நேரம் பார்த்துவிட்டு, பின்னர் அவனது மடியில் தலைசாய்த்து அவனது ஒரு கையை துணையாக பற்றிக்கொண்டு அப்படியே உறங்கிப்போனாள்..
நடுவில் தன் தொடையின் மேல் ஏதோ சூடாக உணர்ந்து அருணின் தூக்கம் கலைந்தது, கண்விழித்து பார்த்தவன் அபி அவன் மீது தலை சாய்த்துபடுத்திருப்பதை கண்டு திடுக்கிட்டான்
"இவ ஏன் இங்க வந்து தூங்குறா ?"
அவளை எழுப்ப நினைத்தவன், அயர்ந்து உறங்கும் அவளைக்கண்டு ஒருகணம் தாமதித்தான், வாடி வதங்கிய முகத்துடன் அபி உடலை சுருக்கிக்கொண்டு படுத்திருந்த தோற்றம் அவனது இதயத்தை கசக்கி பிழிவதாக இருந்தது.. அபியின் தூக்கம் கலையாதவாறு அவன் மெதுவாக எழுந்து அவளைத்தூக்கி தன் கரத்தில் ஏந்தியபடி சென்று படுக்கையில் மெதுவாக படுக்கவைத்தான், கழுத்துவரை போர்வையை இழுத்து போர்த்தியவன், கறந்த பால் போன்ற தூய்மையான அவள் முகத்தையே சிறிதுநேரம் பார்த்திருந்து விட்டு பின்னர் தன் இடத்திற்கு திரும்பினான்..
அபி அடுத்தநாள் கண்விழித்த போது ஏதோ புது இடத்தில் இருப்பதை அறிந்தாள், என்ன நடந்தது என்று யோசிக்கும் போதே சட்டென்று இரவு நிகழ்வுகள் யாவும் நினைவிற்கு வர, கண்கள் தானாக அறை முழுவதும் தேடியது, அவள் விரும்பிய முகத்தை காணாமல் மனம் சோர்ந்தது..
மணி 12 காட்டியது.. இவ்வளவு நேரமா தூங்கினோம் என்று அவள் ஆச்சர்யமாக புருவம் உயர்த்தும் போதே, வெயில் உள்ளே வராதபடி நன்றாக இழுத்து மூடப்பட்டிருந்த ஜன்னல் திரைகள்,அதை செய்தவனின் அன்பை பறைசாற்ற ,கண்கள் லேசாக கசிந்தது அவளுக்கு..
மெதுவாக எழுந்தவள் கண்களில் டேபிளின் மேல் வைக்கபட்டிருந்த சிறிய காகிதத்துண்டு பட்டது..
"நான் ஆபீஸ் போறேன்
பிரேக் ஃபாஸ்ட் அண்ட் லஞ்ச் டைனிங் டேபிள்ல இருக்கு
சாப்பிட்டுட்டு மறக்காம மெடிசின் எடுத்துக்கோ…
நீ இன்னிக்கு ஆபீஸ்க்கு வர வேணாம்…”
என்று எழுதி இருந்தது..
அனுப்புனர் , பெறுநர் பெயர் இல்லாமல் வெறும் மொட்டையாக ஒரு சிறு குறிப்பு.. அவன் அவளை “அன்புடைய” என்று அழைப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை, வெறும் ஒரு அபி மட்டுமாவது போட்டிருக்கலாம் அந்த அளவுக்கா அவனுக்கு நான் வெறுத்து போய் விட்டேன்..? என்று வருந்தினாள்..
அபி இதை எண்ணி மனம் கலங்கிக்கொண்டிருக்கையில் அவளது மொபைல் ஒலித்தது.. அவன்தான்..
"ஹலோ.." என்றாள் அபி கனத்த இதயத்துடன்…
"எப்படி இருக்க?” என்று நலம் விசாரித்தான்..
"பரவால்ல.."
“பிரேக் பாஸ்ட் சாப்பிட்டியா..?”
“ம்ம்..”
“சரி இப்போ முழிச்சிட்டுதானே இருக்க..?”
என்றான்..
“ம்ம்..” என்றாள் கம்மல் குரலில், அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு நின்றது, அவனது கரிசனம் ஒருபுறம் இதமாக இருந்தபோதும் அவன் இப்படி யாரோ போல் பேசுவதும் அவளை வதைத்தது…
மறுபுறம் ஒரு கணம் தயங்கியவன்…
“கொஞ்சம் டோர் ஓபன் பண்ண முடியுமா..? நான் வெளிய நிக்கறேன்..” என்றான்..
அபி ஆச்சர்யத்தில் பாய்ந்தோடிப்போய் கதவின் லென்ஸ் வழியே பார்த்தாள்.. அருண் வெளியே நின்றிருந்தான்…
“சாவி எங்க இருக்கு..?” என்ற அபியின் குரலில் புது தெம்பு வந்திருந்தது..
"கதவுக்கு பக்கதுல இருக்கற கப்போர்ட்ல இருக்கு ஸ்பார் கீ..”
அபி சாவியை எடுத்து கதவை திறந்தவள்.. அவனை மலர்ந்த விழிகளில் ஆச்சர்யமாக பார்த்தாள், அவள் மனம் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தது, அவன் அவளுக்காக திரும்ப வந்திருக்கிறான், அவள் எவ்வளவு சொதப்பினாலும் அதனால் அவனுக்கு எவ்வளவு எரிச்சல் மூட்டினாலும் அவன் ஒரு நாளும் அவளை விட்டுவிட்டு போக போவதில்லை, என்ற புதிய நம்பிக்கை பிறந்து அவளது முகத்தை மலர்ந்து விகசிக்க செய்தது..
அவன் அவள் பைத்தியக்காரத்தனமாக “ஈ..ஈ..” என்று இவனை பார்த்து பல்லைகாட்டி நிற்பதைக் கண்டு "என்ன..?” என்று சிறு எரிச்சலாக கேட்ட போதும் அவளது முகம் வாடவில்லை பதிலாக மேலும் பிரகாசமுற்றது.
“உன்கிட்ட தான் சாவி இருக்குல்ல அப்புறம் எதுக்கு என்னை கதவை திறக்க சொன்ன?” என்று கேட்டாள்..
“ஒரு பொண்ணு தனியா இருக்கற எடத்துக்கு அப்படி ஜஸ்ட் லைக் தட் நுழையறது அவ்ளோ மேன்னர்ஸ் இல்லை..” என்றான் உணர்ச்சியற்ற குரலில்..
அபிக்கு ஒரு கணம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை, இவனைப் போய் தப்பாக நினைத்தோமே என்று மீண்டும் தன்னையே நொந்துகொண்டாள்..
இருப்பினும் அந்த எண்ணத்தை அப்போதைக்கு தள்ளி வைத்துவிட்டு,
“என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட ..?” என்று கேட்டாள்
“ஆபீஸ்ல பெருசா வேலை ஒன்னும் இல்லை, மோர் ஓவர் இன்னிக்கு ஊருக்கு கிளம்ப பாக்கிங் பண்ணனும்.. அதான் சீக்கிரம்வந்துட்டேன்..” என்றான் அவளை தவிர வேறு எங்கெங்கோ பார்த்தபடி..
அவளுக்கு தெளிவாக விளங்கியது அவன் அவளுக்காக தான் சீக்கிரம் வந்திருக்கிறான் ,இருப்பினும் அவளிடம் அதை ஒப்புக்கொள்ள அவனது ஈகோ இடம் தரவில்லை
அவளுக்கு ஒரே சிரிப்பாக இருந்தது..
அதே நேரம் ஹாட் பாக்ஸை திறந்து பார்த்தவன் கோபமாக திரும்பி
"என்ன சாப்பாடுலாம் அப்படியே இருக்கு, அப்போ சாப்பிட்டேன்னு பொய் சொன்னியா..?” என்றான்
“இப்போ தான் முழிச்சேன்.. இனிமேல் தான் சாப்பிடணும்..” என்றாள் அவன் பார்வையில் சிறிது நடுங்கியபடி..
“சரி நீ போய் பிரெஷ் அப் பண்ணிட்டு வா.. நான் டிஃபன சூடு பண்றேன்..” என்றான்..
அபி அமைதியாக உணவருந்த அருண் ஒரு கிளாசில் ஜுஸை உறிஞ்சியபடி அமர்ந்திருந்தான்…
அபிக்கு தொண்டை அடைத்தது , என்னதான் கோபமாக வெளியே காட்டிக்கொண்ட போதும் அவன் மனதில் அவள் மேல் கொண்ட அன்பு மட்டும் மாறவில்லை என்பதை அறிந்து அவள் ஒருபுறம் உள்ளம் உவகையடைந்தது.. ஆனால் அதே சமயம் அவனை காயப்படுத்திய குற்றவுணர்ச்சி மறுபுறம் அவளைப் பிடுங்கித்தின்றது.. கண்கள் முழுவதும் ஏக்கமும், வேதனையும் நிறைந்து வழிய அவனைப் பார்த்து அவள் ஏதோ சொல்ல தொடங்கவும் அருண்சட்டென்று எழுந்துவிட்டான்..
இதற்கு மேல் தான் இங்கிருந்தால் நிச்சயம் அவளிடம் தோற்றுவிடுவோம் என்று உறுதியாக தெரிந்தது..
“அருண்..” என்று அவள் காற்றாகிவிட்ட குரலில்அழைத்தபோது, அவன் முழுவதும் திரும்பாமல் பக்கவாட்டில் மட்டும் லேசாக திரும்பி பார்த்தான்..
"ஐ அம் சாரி..” என்றாள் அழாக்குறையாக
அவன் மறுவார்த்தை பேசாமல் திரும்பிச்செல்லவும் அவள் அவனருகில் வந்து..
"ஐ அம் ரியலி சாரி அருண்.. ஐ மீன் இட்..” என்றாள் உணர்ச்சி பொங்க..
“இவ்ளோ சீக்கிரம் சாரி கேட்டுட்ட..!!! நான் இன்னும் ஒரு வருஷமாவது ஆகும்ன்னு எதிர்பாத்தேனே..?” என்றான் அவன் ஏளனமாக..
அந்த குத்தலான குரலின் பின்னால் தெரிந்த வேதனை அவளை கழிவிரக்கம் கொள்ள செய்ய தலை கவிந்து நின்றாள்.. அப்போது அவள் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் தரையில் பட்டு தெறித்தது.. அதை கண்டு ஒருகணம் கண்மூடி திறந்தவன் …
"லெட் இட் பீ அபி, என்னாலலாம் உன்னை மாதிரி நிமிஷத்துக்கு ஒரு முறை மனச மாத்திக்க முடியாது, எனக்கு நார்மல் ஆகா கொஞ்சம் டைம் ஆகும், பட் கவலை படாத நான் சரி ஆகிடுவேன், நீ உன்னோட ஹெல்த்த பார்த்துக்கோ..” என்றுவிட்டு..
திரும்பி நடக்க போனவன் அபியின் "அருண்..” என்ற தீனமான குரலில் சட்டென்று திரும்பி பார்த்தான், மயங்கி சரிந்து கொண்டிருந்தவளை நொடியில் தாங்கி தன் கைகளில் மாலையாக ஏந்தினான்..
அவளை சுமந்து கொண்டு படுக்கையில் கிடைத்துவதற்காக நடக்கையில் அபி லேசாக கண்திறந்து அவனை கள்ளத்தமாக பார்த்ததை அவன் கண்டுகொண்டான்..
அவள்பால் கொஞ்சம் இளகிய மனம் திரும்ப இரும்பாக இறுக..
அவளை தொப்பென்று பெட்டில் போட்டான், இதை சற்றும் எதிர்பார்க்காத அபி “ஆ…” என்று தன் இடுப்பை பிடித்துக்கொண்டு வலியில் அலற..
ஏளனமாக உதட்டை சுளித்தவன்..
"இந்த ட்ராமாலாம் என்கிட்ட வேண்டாம்.." என்று எச்சரித்துவிட்டு சென்றான்…
தொடரும்

































































































































 
அடடா இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சரியான ஜோடிதான்
இப்போ என்ன இரண்டு பேரும் குன்னூர் போகப் போறீங்களா? இல்லையா?
யாருக்கு கல்யாணம்?
அபிக்கு ஏன் திடீர்னு காய்ச்சல் வந்தது?
 
Last edited:
Top