Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நலங்கிட வாரும் ராஜா - final

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் - 10

“அடி மது... என்ன டி வர வர ரொம்ப அழகாகிட்டே போற...என்ன விஷயம்???” என்று சோபனா கேட்ட கேள்விக்கும் அவளது கிண்டலான கண் சிமிட்டலுக்கும், மதுவின் லேசாய் செம்மையும் வெட்கமும் கலந்த புன்னகையே பதிலாய் கிடைத்தது.

“அட என்ன டி கேள்வி கேட்டா பதில் சொல்லு. அதை விட்டு ஒரு மார்கமா சிரிச்சா என்ன அர்த்தம்?? இந்த சிரிப்பெல்லாம் அண்ணனோட வச்சிக்கோம்மா...” என்று தோழியாய் மேலும் அவளை கிண்டல் செய்தபடி இருக்க, பதிலுக்கு மதுஸ்ரீயும் பேசிக்கொண்டு இருந்தாள்.

“சரி டி நான் கிளம்புறேன்.. அடிக்கடி போன் பண்ணு....” என்றுவிட்டு சோபனா கிளம்ப, மதுஸ்ரீ தன் அக்காக்களின் வரவுக்காய் காத்திருந்தாள்.

கந்தவேலுக்கு விருந்துக்கு நாள் குறித்து, தன் மூன்று மகள்களையும்ம் மாப்பிள்ளைகளையும் நேரில் சென்று அழைத்துவிட்டும் வந்தார். பாக்கியமும், கந்தவேலுவும் எழிலின் வீட்டிற்கு வந்தபோது மதுவிற்கு அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது. கோவம் ஒருபக்கம் மனதில் இருந்தாலும், முதன் முதலில் தாயும் தந்தையும் வந்திருக்கும் போது அதையெல்லாம் பிடித்து வைத்துக்கொண்டா இருக்க முடியும்.

மகள் முகத்தில் இருக்கும் புன்னகையே அவள் புகுந்த வீட்டில் எப்படி வாழ்கிறாள் என்பதை உணர்த்திவிட்டது அவளை பெற்றவர்களுக்கு.

எழிலும் கடை பொறுப்பிற்கு வேறு ஆள் வைத்துவிட்டு இவர்களை காண வீட்டிற்கு வந்துவிட்டதால், இன்னும் சந்தோசமாய் இருந்தது. பார்த்து பார்த்து கவனிக்கும் மகள், அவளை பார்த்து பார்த்து கவனிக்கும் மருமகன். எந்த பெற்றோருக்கு தான் இதை காணும் பொழுது நிம்மதியாய், சந்தோசமாய் இருக்காது.

பாக்கியத்திற்கு மனம் நிறைந்து போனது. மதுவின் திருமணத்தின் போது கூட மனதில் அத்தனை செழிப்பு இல்லை. ஆனால் இன்றோ எழிலரசன் மீது பெரும் மதிப்பே கூடிவிட்டது. என்னதான் விவரம் தெரிந்தவன் என்றாலும் எவ்வொரு விசயத்திற்கும் மதுவிடமும் ஒரு வார்த்தை கேட்பதில் அவன் தயங்குவதே இல்லை.

அவளுக்கு கூடமாட வேலை செய்வதிலும் ஆண் என்ற கௌரவம் பார்ப்பதில்லை.

“என்னங்க நானே எல்லாம் எடுத்து வச்சுப்பேன்... டேபிள் தானே...” என்று மது கூறினாலும்,

“கிச்சனுக்கும் டேபிளுக்கு எத்தனை தடவை நடப்ப...” என்று அவளுக்கு உதவி செய்யும் மருமகனை காண கந்தவேலுக்கு பெருமையாய் இருந்தது.

மற்ற இரு மருமகன்களும் அப்படியில்லை. மணிகண்டனிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியாது. நான் மாப்பிள்ளை, அதுவும் மூத்த மாப்பிள்ளை இப்படித்தான் இருப்பேன் என்பது போல திரிவான். சில நேரம் வீட்டிற்கு போனால் வாருங்கள் என்றுகூட கேட்க மாட்டான்.

பாஸ்கரனோ வேறு ரகம். மரியாதை எல்லாம் டன் கணக்கில் வரும். ஆனால் காசு செலவு என்று ஏதாவது ஒரு விசயம் வந்தால் அவ்வளவு தான், முகம் இறுகி ஒதுங்கிவிடுவான்.

ஆனால் இவர்களை போலல்லாமல் எழில் பெருந்தன்மையாய், எளிமையாய் நடப்பது மதுவின் பெற்றோர்களுக்கு அத்தனை நிம்மதியாய் இருந்தது. பெண்ணை பெற்று, வளர்த்து, கட்டிக்கொடுத்த ஒரே காரணத்திற்காக அவர்கள் தங்கள் சுயமாரியாதையை இழக்க வேண்டும் என்பது இல்லையே.

மதுவின் வீட்டிற்கு சென்று வந்ததும், கந்தவேலு ஸ்ரீதரனிடம் எழிலை பற்றியும், மதுவை அவர்கள் பார்த்துக்கொள்ளும் விதம் பற்றியும், தங்களை எப்படி நடத்தினர் என்பதையும் சந்தோசமாய் கூற அவனுக்குமே மதுவை காண வேண்டும் என்று தோன்றியது.

ஆனால் லட்சுமியை அழைத்துச் சென்றால் நிச்சயம் ஏதாவது வம்பு பேசி வருவாள், தேவையில்லாமல் ஏதாவது பிரச்சனை வரும். அதனால் அமைதியாய் இருந்துக்கொண்டான்.

ஆனால் மதுவோ விருந்துக்கு வந்தவள், “என்னண்ணா இப்படி ஒரு தங்கச்சி இருக்கிறதே மறந்து போச்சா???” என்று கேட்கவும் அவனுக்கு முகம் விழுந்துவிட்டது.

“இல்ல மது.. அது... ” என்று அவன் தயங்கி நின்ற நொடி,

லட்சுமி “என்ன அண்ணி சண்டை போட தான் அங்கிருந்து வந்தீங்களா?? பாருங்க இவருக்கு முகமே ஒரு மாதிரி ஆகிடுச்சு...” என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்தாள்.

ஆனால் மது பதில் சொல்வதற்கு முன்பு, “ம்ம்ச் லட்சுமி.. அடுத்தவங்க பேசும் போது ஆளுக்கு முன்ன வராதன்னு எத்தனை தடவை சொல்றது.. அதுவுமில்லாம மது என் தங்கச்சி... எனக்கும் அவளுக்கும் பேச ஆயிரம் இருக்கும்.. ” என்று சொல்லவும் லட்சுமிக்கு மட்டுமில்லை, மதுஸ்ரீக்குமே ஆச்சரியாமாய் போனது.


இதற்குமேல் பேசினால் அவ்வளவு தான் ஸ்ரீதரன் பொறுமை காற்றில் பறக்கும் என்பது லட்சுமிக்கு தெரியும்.
படக்கென்று உடனே பேச்சை மாற்றிவிட்டாள், “என்ன அண்ணி வந்த உடனே உங்க அண்ணன்கிட்ட பேசணுமா... சாவகாசமா சாப்பிட்டு பேசலாமே... பெரிய அண்ணிங்க எல்லாம் வந்திடுவாங்க... வாங்க வாங்க உள்ள போகலாம்... என் புள்ளைக்கு உங்களை பார்க்காம காய்ச்சலே வந்திடுச்சு...” என்று மதுவின் கரங்களை பிடித்து இழுத்துக்கொண்டே சென்றுவிட்டாள்.

எழிலரசன் அனைத்தையும் அமைதியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் இருந்தான். சில நேரம் அவனுக்கு தோன்றும் இந்த பெண்களுக்கு என்ன தான் பிரச்சனை என்று. நன்றாக இருக்கும் உறவை மிக சுலபமாய் பிரித்துவிடுவதும், பழங்காலத்து பகையை கூட ஒன்றுமில்லாமல் செய்து, உறவை ஏற்படுத்திவிடுவதும், இவர்களால் மட்டுமே முடிந்திடும் விஷயம்.
தனக்கு தானே மெல்ல புன்னகைத்துக்கொண்டான்.

“என்ன மச்சான் நீங்களா சிரிக்கிறீங்க...??” என்றபடி ஸ்ரீதரன் வந்து அருகினில் அமர, முதன் முறையாய் அவன் இத்தனை இயல்பாய் பேசுவது கண்டு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ஆனாலும் அதையெல்லாம் வெளிக்காட்டி கொள்ளாமல், இயல்பாய் இருப்பது போல, “ஒண்ணுமில்ல மச்சான், இந்த லேடீசை நினைச்சேன் சிரிச்சேன்... ஒவ்வொரு நேரம் ஒரு மாதிரி இருக்காங்க....” என்று பதில் கூற,

“ஆமா மச்சான்.. நடுவுல மாட்டிக்கிட்டு நாம தான் முழிக்கிறோம்...” என்று ஸ்ரீதரன் கூற, மேற்கொண்டு இருவருக்கும் பேச்சு சுவாரசியமாய் சென்றது. ஸ்ரீதரனுக்கு உள்ளுக்குளே ஆச்சரியம் தான் எழில் அனைத்தையும் மறந்து இத்தனை இயல்பாய் பேசியது.

தன் அக்காக்களின் கணவர்களோடு இப்படியெல்லாம் சிரித்து பேசிட முடியாது. எப்பொழுதும் ஒரு இறுக்கம் இருக்கும். இப்போதானால் இவனோடு ஒரு தோழமையோடு பேசிடவும் ஒரு உறவு கிடைத்தது மகிழ்ச்சியாய் இருந்தது.
மனதினில் எதனையும் வைத்துக்கொள்ளாமல் மன்னிப்பு கேட்டான்.

ஆனால் எழிலோ, “அட என்ன மச்சான்.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்... உறவுக்குள்ள சண்டை வர்றது சட்டை கிழியுறது எல்லாம் சகஜம் தான்...” என்று சுலபமாய் அவனை சமாதானம் செய்துவிட்டான்.

சில நேரம் பெண்கள் ஒன்றாய் கூடி பேசும் போது கூட கலகலப்பாய் இருக்கும், ஆனால் ஆண்கள் கூடினால் எப்பொழுது சண்டை வருமோ என்பது போல் ஓர் சூழல் இருக்கும். அதுபோலானது சுபஸ்ரீயும் அவள் கணவனும் வந்த பிறகு.

மணிகண்டனால் இத்திருமணத்தை நிறுத்த முடியவில்லை என்றாலும், அதன் பிறகு தான் தான் இவ்வீட்டின் முதல் மருமகன், தனக்கு பிறகு தான் மற்றவர்கள் என்ற பாவனை ஜாஸ்தியானது. அதே போல் தான் இப்பொழுதும் நடந்துக்கொண்டான்.
சுபஸ்ரீ, நித்யஸ்ரீக்கு தங்களை போல் அல்லாமல், தாமதமாய் திருமணம் ஆனாலும் மதுஸ்ரீயின் வாழ்வு நிம்மதியாய் எவ்வித பிக்கலும் பிடுங்கலும் இல்லாமல் செல்வது குறித்து ஒருபக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், தங்களின் வாழ்வும் இப்படி ஒருநாள் மாறாதா என்ற ஏக்கம் இருந்தது.

அது அவ்வப்போது பேச்சில் தெரிந்தாலும் மதுஸ்ரீ அதையெல்லாம் பெரிதாய் எடுக்கவில்லை.

பாஸ்கரனும் வந்து எழிலிடம் சகஜமாய் பேச, மணிகண்டன் தான் ஒரு இறுமாப்போடு சுற்றிக்கொண்டு இருந்தான். ஆனால்

அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை அது வேறு விஷயம்.

இப்படி அனைவருக்கும் ஒவ்வொரு விதமாய் கழிய, அந்த விருந்து வேறெந்த பிரச்சனைகளும் இல்லாமல் சிறப்பாகவே முடிந்தது. அன்று மாலையே மதுஸ்ரீ, எழிலரசன் தங்கள் வீட்டிற்கு கிளம்ப, அனைவரும் இருந்துவிட்டு தான் போகவேண்டும் என்று கூற, அவளோ என்ன செய்வது என்று எழில் முகம் பார்த்தாள்.

இவர்களோடு வேதாச்சலமும் வந்திருந்ததால் அவனுக்கு தங்குவதில் வேறு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.
இரண்டு நாட்கள் பிறந்தவீட்டில் தங்கி மகிழ்ச்சியாகவே தன் கணவனோடு அவள் வீடு திரும்பினாள் மதுஸ்ரீ.

“என்னங்க இந்த சேலை புதுசா எடுத்து அம்மா குடுத்துவிட்டாங்க... நல்லாருக்குல..” என்று தன் மீது அந்த சேலையை வைத்து காட்டியவளை கிண்டலாய் பார்த்தான் எழிலரசன்.

“என்ன அப்படி பாக்குறீங்க... நல்லா இல்லையா??” என்று லேசாய் முகம் சுருக்கி உதடுகளை சுளித்து கண்ணாடி பார்த்தவளுக்கு சேலை அவளுக்கு பொருத்தாமாய் இருப்பதாகவே தெரிந்தது.

“இப்போ எதுக்கு இப்படி பாக்குறீங்க.. அதெல்லாம் எங்கம்மா எடுத்து குடுத்தா நல்லாத்தான் இருக்கும்...” என்று நொடித்தவளை வேகமாய் தன்னருகே இழுத்து நிறுத்தினான் எழிலரசன்.

“என்.. என்னங்க...” என்று பதற்றமாய் மது வினவ,

“ஹ்ம்ம் இல்லை போகும் போது இருந்த மது தானான்னு பார்த்தேன்...” என்றான்.

“ஏன் என்னவாம்...???”

“இல்லை, கிளம்பி போறப்ப, என்னைய எங்க அப்பா அம்மா மறந்துட்டாங்க... அது இதுன்னு சொல்லிட்டு வேண்டா வெறுப்பா கிளம்பின... இப்போ என்னடானா வார்த்தைக்கு ஒருதரம் அவங்க பேச்சுதான் வருது... அதான் பார்த்தேன்...”

“ஓ!!! அதுவா... அது....” என்று லேசாய் அசடு வழிந்தவள்,

“ஆமா எங்க அக்காங்களுக்கு கல்யாணம் ஆகும் போது வீட்ல நான் இருந்தேன். பொறுப்பா எதுனாலும் பார்த்துப்பேன். அதுனால அப்பா அம்மா அவங்களை போய் பார்த்துட்டு வருவாங்க. இப்போ அங்க லட்சுமிக்கே எங்கம்மா தான் எல்லாம் செய்யணும். அப்படி இருக்கும் போது பொசுக்கு பொசுக்குனு இங்க வர முடியுமா?? ஏன் எனக்கு அவங்களை எல்லாம் பாக்கணும் போல இருக்குனு சொன்னா நீங்க கூட்டிட்டு போக மாட்டீங்களா என்ன??” என்று மூச்சு விடாமல் பேச,

“அம்மாடியோ... தெரியாம கேட்டுட்டேன்...” என்று கையெடுத்து கும்பிட்டான் எழிலரசன்.

“ம்ம் அது... இந்த அடக்கம் எப்பவுமே இருக்கனும்...” என்று இடுப்பில் கை வைத்து, புன்னகையுடன் கூறியவளை, காதை பிடித்து லேசாய் திருகினான்..

“என்ன பேச்சு பேசுற... வர வர வாய் ரொம்ப ஜாஸ்தியா போச்சு மது உனக்கு...”

“அது சரி... இந்த வாய் தான் டி உனக்கு அழகேன்னு மிலிட்ரி எப்பயோ சொன்னதா நியாபகம்...” என்று வேண்டுமென்றே அவனை உசுப்பேற்றினாள்.

“ம்ம்ஹும் இது உனக்கு சரியே இல்லை மது....” என்று இன்னும் அவளை தன்னோடு இறுக்க,

“சரி சரி போதும் போதும் இதோட விடுங்க...” என்று அவனிடம் இருந்து தப்பிச் சென்றாள்.

மதுவிற்கும் சரி, அவள் பிறந்த வீட்டினருக்கும் சரி மனதில் இப்பொழுது எந்தவித குறையும், பிணக்கும் இல்லை. இது அனைத்துமே எழிலரசனால் தான் என்று மதுவிற்கு நன்றாய் தெரியும்.

அவன் மட்டும் சற்று பிடிவாதம் செய்திருந்தால், உன் வீட்டினர் வந்தார்களா?? நாம் மட்டும் ஏன் செல்லவேண்டும்?? என்று நினைத்திருந்தால் என்னாகும்?? இல்லை, என்னை எப்படியெல்லாம் உன் வீட்டினர் நடத்தினர், பேசினர் என்று அவளை ஏதாவது குத்திக்காட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்.

ஆனால் அதெல்லாம் இல்லாமல் நடப்பவற்றை அதன் போக்கில் விட்டு, பொறுமையாய் அதே நேரம் நீ என்னவேண்டுமானாலும் செய்துகொள், சொல்லிகொள் அதெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது என்ற தன்னம்பிக்கையோடு அவன் இருந்ததற்கான பலன் தானே இது.

தங்கள் பெண்ணை கொடுத்துவிட்டோம் என்பதற்காக மட்டும் மாப்பிளை மீது மதிப்பும் அன்பும் வந்துவிடாது, திருமணம் செய்துகொடுத்த பெண்ணை எப்படி வைத்துக்கொள்கிறான் என்ற அடிப்படையிலேயே ஒருவன் மீது மருமகன் என்ற மதிப்பும், பிரியமும் வரும்.

அந்த இரண்டையுமே எழிலரசன் தன் செய்கைகளால் பெற்றுவிட்டான்.

இதையெல்லாம் எண்ணி எண்ணி மதுஸ்ரீக்கு அத்தனை மகிழ்வாய் இருந்தது.

விருந்துக்கு கிளம்பும் போது கூட மனதில் லேசான சஞ்சலம்.அண்ணன் என்ன சொல்வானோ ??

லட்சுமி என்ன இடக்கு செய்வாளோ?? அக்காவின் கணவர்கள் எப்படி நடந்துகொள்வார்களோ?? என்றெல்லாம் அஞ்சியவளுக்கு,
இவர்கள் அனைவரையும் விட நீ எனக்கு முக்கியம். ஆகையால் எது நடந்தாலும் உன் மனம் நோகும் படி எதையும் நடந்திட விடமாட்டேன் என்று தன் சிறு சிறு செய்கைகளால் எழிலரசன் உணர்த்திய தன் கணவன் மீது அளவிட முடியாத காதல் பெருகியது.

அனைவரும் உண்டுக்கொண்டு இருக்கும் போது, லட்சுமி எதோ சொல்ல, அதற்கு வேகமாய் பதில் அளிக்க மது திரும்ப, மேலும் மேலும் இருவரும் பேசியிருந்தால் என்னாகியிருக்குமோ,

ஆனால் எழில், “மது வரும் போதே தலை வலிக்குதுன்னு சொன்னல. அமைதியா சாப்பிட்டு போய் தூங்கு...” என்று சற்றே அழுத்தமாய் கூற, அவளும் மேற்கொண்டு பேசாமல் அமைதியாய் உண்டுவிட்டு எழுந்து சென்றாள்.

மது மட்டும் லட்சுமிக்கு ஏதாவது பதில் சொல்லி அது ஒன்றோடு ஒன்று தொடர்ந்து அது பெரிய சண்டையாகி இருக்கும். கணவன் ஒருவார்த்தை சொன்னதும் மறுபேச்சு பேசாமல் கேட்கும் மகளை கண்டு ஆச்சரியமாய் போனது பாக்கியத்திற்கு.

மகளிடம் தனியே பேசும் பொழுது, “பரவாயில்ல மது.. உன் கல்யாணம் நடக்கும் போது மனசுக்கு அவ்வளோ சந்தோசமில்ல ஆனா இப்போ மனசு நிறைஞ்சு இருக்கு.. மாப்பிள்ள சொல்றத கேட்டு நட.. பொறுப்பா இருந்துக்கோ...” என்று கூறினார்.அதையும் கூட தன் கணவனிடம் மறைக்கவில்லை மதுஸ்ரீ..

இவை அனைத்தையும் நினைத்தபடியே வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அறைக்குள் சென்றால் அங்கே எழிலரசனோ காலுக்கு எண்ணெய் தடவி ஒத்தடம் கொடுத்துக்கொண்டு இருந்தான்.

அதை கண்டவள், “எத்தனை தடவை சொல்றது. நான் வந்து இதெல்லாம் செஞ்சு விட மாட்டேனா??? அதுக்குள்ள என்ன அவசரம்....” என்றபடி அவன் காலில் கை வைக்க,

“ம்ம்ச் மது... நீயே வீட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு இப்போதான் வர.. இதெல்லாம் செஞ்சா தான் பொண்டாட்டியா சொல்லு... நீ படு.. நான் இதை முடிச்சிட்டு வரேன்... ” என்று தன் வேலையை தானே செய்தான்.

“அதானே ஆளுக்கு தக்கன பேசி, எல்லாரையும் கவுத்துடுங்க..”என்றபடி படுக்க,

அவனும் சிறிது நேரத்திலேயே தன் மனைவியின் அருகில் சாய்ந்து அமர்ந்தவன்,

“அப்படி யாரெல்லாம் கவுத்தேனாம்...?? எனக்கு தெரிஞ்சு என்னைய தான் ஒருத்தி கவுத்துட்டா...” என்றான் சிரித்தபடி அவளை தன் மேல் சரித்து..

“ஓ!!!! அப்போ தெரியாம எத்தனை பேர் கவுத்தாங்க???”

“அந்த கணக்கு எல்லாம் எனக்கு தெரியாதுமா...”

“ம்ம் அப்போ வேற எந்த கணக்கு தெரியும்??? ” என்று புருவம் உயர்த்தி அவன் முகம் பார்த்து கேட்க,

“ம்ம் சொல்லித்தரேன் புரிஞ்சுகோ... ” என்று எழிலும் மதுவை இறுக அணைத்துக்கொண்டான்.

அவனது அணைப்பே அவளுக்கு ஆயிரமாயிரம் கணக்குகளையும், விடைகளையும் புரிய வைக்க, எழிலிட்ட முதங்களோ அவளை மொத்தமாய் மயங்க வைத்தது.

மதுவிற்கு மாலையிட்டவன் அவள் இதயத்திற்கு அரசனாக, எழிலரசன் நெஞ்சதிலோ மதவின் ஆட்சியே. தனக்கு நலங்கிடு மாலை சூடியவன் பெயரில் மட்டும் அரசனாக இல்லை, என்னிதயத்தை ஆளும் அரசனாகவே ஆனான் என்று அவள் லயித்திருக்க, என் நெஞ்சமெனும் அரியணையில் நீயே மகாராணி என்று அவளை அணைத்திருந்தான் எழிலரசன்...

நலங்கு முடிந்தது....
 
Top