Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல் 3....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 3.

திருமணமாகி இரு வாரங்கள் ஓடி விட்டன. அப்பா திருச்சிக்குப் பயணப்பட்டு விட்டார். மறு வீடு என்று அவர்களை அழைத்து பலகாரம் கொடுத்து சேலை வேட்டி வாங்கிக்கொடுத்த பின்னரே கிளம்பினார். இது வரையில் அப்பாவை புரிந்து கொள்ளாமல் போய் விட்டோமே என வருந்தினாள் சங்கரி. ஆனால் அதற்கும் அவளுக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை. புகுந்த வீடு வந்த சில நாட்களிலேயே தான் வந்த வீடு எத்தகையது என்பதைப் புரிந்து கொண்டாள் அவள். மாமியார் தங்கத்துக்கு சுத்தமாக பொறுப்பு என்பதே இல்லை என முதலில் நினைத்தாள். பிறகு தான் தெரிந்தது அவளுக்கு வீட்டு வேலைகள், குடும்பம் நடத்துதல் போன்ற எந்த விஷயத்திலும் ஆர்வமே இல்லை என்பது. சமையல் என்பதே வாரத்தில் ஒரு நாள் அல்லது இரு நாட்கள் நடந்தது. அதுவும் முக்கிக்கொண்டும் முனகிக் கொண்டும் ஏதாவது ஒரு குழம்பு பொரியல் கூட்டு மொத்தமாக செய்து வைத்து வாரம் முழுக்க அதைப் பயன்படுத்தினர். அப்படிச் செய்து பழக்கமில்லாததால் உணவு செரிக்காமல் வாந்தி வந்தது சங்கரிக்கு. பழைய உணவைச் சாப்பிட முடியாத ஆண்களும், ராணியும் ஹோட்டலில் இருந்து வரவழைத்துச் சாப்பிட்டார்கள். செவ்வாய் வெள்ளி தவிர இதர நாட்கள் எல்லாம் அசைவம் தான்.

வீட்டில் வாங்கிப்போடும் காய்கறி, மளிகை சாமான்களுக்கும் பஞ்சமில்லை. ஆனாலும் ஹோட்டல் சாப்பாடு தான் அனைவருக்கும் பிடித்தது. இப்படியே இருந்தால் குடும்பத்துக்கு நல்லதல்ல என ஒரு நாள் தன் கணவனிடம் பேசினாள் சங்கரி.

"என்னங்க! நம்ம வீட்டுல ஏன் சமைக்காம ஹோட்டல்ல வாங்கணும்? உங்களுக்கு வெளிச்சாப்பாடு தான் பிடிக்குமா?" என்றாள் மெல்ல.

அவளுக்கு இன்னமும் கணவனின் சுபாவம் பிடிபடவில்லை. ஒன்றும் கோபமாகவோ, முரட்டுத்தனமாகவோ நடந்து கொள்ளவில்லை என்றாலும் மனதின் ஓரத்தில் மெல்லிய பயமும், தயக்கமும் இருந்தது. எது அவனைக் கோபப்படுத்தும் என புரியாத நிலை.

பேசிய மனைவியை ஏற இறங்கப் பார்த்தான் சபா.

"ஏன் கேக்குற? உங்க அண்ணி கேக்கச் சொன்னாங்களா?" என்றான் சுள்ளென்று.

உண்மையிலேயே பயந்து போனாள் சங்கரி. நான் கேட்டதில் அண்ணி எங்கிருந்து வந்தாள்?

"இல்லீங்க! எங்க அண்ணி கிட்ட நான் ஏன் நம்ம வீட்டு விவகாரத்தைப் பேசப் போறேன்? நானா கேட்டது தான்."

"உனக்கு சமைக்கத் தெரியுமா?" சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்ட கணவனைப் பார்த்து சிரிப்பு வந்து விட்டது.

"என்ன இப்படிக் கேக்குறீங்க? எங்க அண்ணன் வீட்டுல நான் தான் எல்லாமே செய்வேன். அசைவம், சைவம் ரெண்டும் சூப்பரே செய்வேங்க" என்றான் நகைத்தபடி. அவளை தன் பக்கம் திருப்பினான் சபா.

"ஓ! சூப்பர்! அப்ப நாளைக்கு ஒரு நாள் நீ சமையல் செய்யுறியா? சிக்கனை வறுத்து வெச்சிடு. ஏதாவது குழம்பும் செய்யி. ஹோட்டல்ல சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துப் பொச்சு" என்றான் ஆர்வமாக.

"அதுக்கென்னங்க? செஞ்சாப் போச்சு! பிரிஞ்சியும், சிக்கன் ஃபிரையும் செஞ்சிடறேன்" என்றாள். அவளைத் தூக்கிச் சுற்றிக் கீழே இறக்கினான்.

"ஏங்க? வீட்டுல நான் சமையல் செய்யறேன்னு சொன்னதுக்கா இத்தனை சந்தோஷம்? இனிமே தினமும் நானே செய்யறேன் போதுமா?" என்றாள் சிரிப்போடு.

ஒரு நிமிடம் மௌனம் காத்தான் சபா.

"நிஜமாத்தான் சொல்றியா? தினமும் செய்ய முடியுமா உன்னால? அப்புறம் கல்யாணம் பண்ணிக் கூட்டிக்கிட்டு வந்து கொடுமைப்படுத்துறான்னு உங்க பொறந்த வீட்டுல சொல்லிக் காட்டப் போறாங்க" என்றான்.

மீண்டும் சிரிப்பு வந்தது.

"ஏங்க? சமையல் செய்யுறது ஒரு கொடுமையா? அதைத்தான் என்னைப் போல எல்லாப் பெண்களும் செய்யுறாங்களே? நான் மட்டும் என்ன அதிசயம்?" என்றாள்.

"மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு சங்கரி! இனிமே தினமும் வீட்டுச் சாப்பாடு, அதுவும் உன் கையாலன்னு நினைக்கும் போது ரொம்பப் பெருமையா இருக்கு" என்றான். இதுக்குப் போயா? என்று நினைத்துக்கொண்டாள்.

அன்றைய மதியமே கிச்சனுக்குள் புகுந்து என்ன பொருட்கள் இருக்கின்றன? என்னென்ன தேவை? என்பதை ஆராய்ந்தாள். அநேகமாக எல்லாமே இருந்தன. ஆனால் சில பொட்டலங்கள் பிரிக்கப் படாமல் அதனுள்ளே பூச்சிகள் இருந்தன. கழிக்க வேண்டியவற்றைக் கழித்து, வெயிலில் காய வைக்க வேண்டியதைக் காய வைத்து, நல்ல நிலையில் இருப்பவற்றை பாத்திரங்களில் போட்டு என வேலை நெட்டி வாங்கி விட்டது. சங்கரி வேலை செய்யும் போது ஒரு முறை ராணி வந்து "என்ன அண்ணி?" என்று கேட்டு விட்டுப் போய் விட்டாள். மாமியார் தங்கம் அதுவும் கூட வரவில்லை. இது ஒன்றும் தனக்குப் புதிதல்லவே என நினைத்தபடி வேலை செய்தாள் அவள்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேர உழைப்புக்குப் பின்னர் சமையற்கட்டு புழங்கும்படியான ஆனது. மிக்சியைத் துடைத்து, கிரைண்டரைத் துடைத்து, கரப்பான் பூச்சிகளுக்கு மருத்து அடித்து என வேலை மேலும் ஒரு மணி நேரம் நீண்டது. இரவு உணவு வீட்டில் செய்து விடலாம் என நினைத்தவள் இப்போது வேண்டாம் என முடிவெடுத்தாள். காரணம் உடலெங்கும் வலி அதோடு அசதி வேறு. இரவுக்கு மட்டும் ஹோட்டலில் வாங்கி விட்டு மறு நாளிலிருந்து செய்து கொள்ளலாம் எனத் திட்டமிட்டு அறையில் போய்ப் படுத்தாள். கணவன் வந்து எழுப்பிய பின்னரே தூக்கம் கலைந்தது அவளுக்கு.

வேலை செய்யும் போது அணிந்த நைட்டி, கலைந்த தலை அழுக்கு நாற்றம் என நின்ற மனைவியைப் பார்த்துக் கத்தினா சபா.

"இது என்ன இப்படி இருக்கே? ரூமுக்குள்ள நுழையும் போதே நாறுது. நான் தான் வேலை செஞ்சேன்னு காட்டிக்கிறியா? இதெல்லாம் எங்கிட்ட நடக்காது. உன்னை நானா சமைக்கச் சொன்னேன்?" என்றான்.

கண்கள் கரித்தன சங்கரிக்கு.

"இப்ப என்ன செஞ்சிட்டேன்னு கத்தறீங்க?" என்றால் தைரியமாக.

"இன்னும் என்ன செய்யணும்? கல்யாணம் கட்டி இன்னும் முழுசா ஒரு மாசம் கூட முடியல்ல! அதுக்குள்ள புதுப்பொண்ணை வேலை வாங்குறாங்கன்னு எல்லாரும் எங்களைக் கேலி பண்ணனும், இரக்கமத்தவங்கன்னு சொல்லணும்னு தானே இப்படி செஞ்சே?" என்றான் கடுமையாக.

விக்கித்துப் போனாள் சங்கரி. இப்படி ஒரு கோணம் இருக்கிறது என்பதே அவளுக்கு அப்போது தான் தெரிந்தது. ஆனால் வாயில்லாப் பூச்சியாக இருந்தால் இந்த வீட்டில் காலம் தள்ள முடியாது என்பதை உணர்ந்து கொண்டாள். அதே நேரம் கணவனை அதிகக் கோபமும் படுத்தக் கூடாது எனப் புரிந்து கொண்டது அவளது புத்திசாலித்தனம். அதனால் நிதானமாக அணுகினாள்.

"இப்ப என்ன? நான் இப்பப் போயி குளிச்சுட்டு வரேன். ஏங்க? வேலை செஞ்சா எனக்கு களைப்பாவே இருக்கக் கூடாதா என்ன?" என்று சொல்லி விட்டு போய் குளித்து விட்டு வந்தாள்.

அப்போதும் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான் சபா.

"ஏங்க! நான் ஒண்ணு கேக்கவா?"

"என்ன?"

"நீங்க வெளிய போயி வேலை செஞ்சா உங்களுக்குக் களைப்பா இருக்காதா?"

"இருக்குமே? ஏன் கேக்குற?"

"அப்ப ஏன் வேலை செய்யணும்? வீட்டுலயே ஓய்வு எடுத்துக்கலாமே?"

"லூசாடி நீ? நம்ம வீட்டுல எத்தனை பேரு இருக்கோம்? அவங்க எல்லாரும் எப்படி சாப்பிடுவாங்க? நான் இப்ப ஒரு காண்டிராக்டுக்கு அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். அது மட்டும் கிடைக்கட்டும். நம்ம வீடு எங்கியோ போயிரும்" என்றான்.

"ரொம்பக் கஷ்டமான வேலைன்னானும் நீங்க அதை செய்வீங்க அப்படித்தானே?"

"ம்ச்! போரடிக்காதே சங்கரி. உனக்கு இப்ப என்ன வேணும்?"

"உங்களை மாதிரி தானே நானும். என் வீட்டுக்காக நான் வேலை செய்யுறதுல என்ன தப்பு? அதுல களைச்சுப் போயி தூங்குனா என்ன பேச்சுப் பேசுறீங்க?" என்றாள் சிணுங்கலாக.

ஹாஹா வெனச் சிரித்தான் அவன்.

"ஓ! இதுக்குத்தான் இத்தனை கேள்வியா? சரி சரி உன் இஷ்டம். ஆனா ஒரு முக்கியமான விஷயம்"

"சொல்லுங்க"

"நீ தாராளமா சமையல் வேலை செய், தோட்ட வேலை செய். நான் வேண்டாம்னு சொல்லல்ல. ஆனா தங்கச்சி ராணி உதவிக்கு வரல்ல, அம்மா திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேங்குறாங்கன்னு எங்கிட்ட புகார் சொல்லக் கூடாது. எனக்கு அது பிடிக்காது. ஏன்னா என் தங்கச்சி எங்களுக்கு ராணி. அவ வீட்டு வேலை செஞ்சு கஷ்டப்படக் கூடாது. எங்கம்மா வயசானவங்க. அதனால நீ தான் செய்யணும். அதுவும் நான் உன்னைக் கட்டாயப்படுத்தல்ல. "

"இல்லைங்க! நான் செய்யுறேன். ஆனா பாத்திரம் விளக்க, வீடு பெருக்க மட்டும் ஒரு ஆளை ஏற்பாடு செஞ்சுக்கறேன். என்ன?"

"உம்..உம்..அதுக்கு இப்ப நம்ம கிட்டப் பணம்..." என இழுத்தான்.

"ஹூம்! ஹோட்டலுக்குக் குடுக்குற காசை மிச்சம் பிடிச்சாலே மூணு வேலைக்காரங்களுக்கு சம்பளம் கொடுக்கலாமே?" என்றாள். '

அதன் படியே வயதான ஒரு அம்மாளை ஏற்பாடு செய்து கொண்டாள் சங்கரி. காலை 11 மணிக்கு வந்து எல்லா வேலையும் செய்து விட்டு போய் விடுவாள். மீண்டும் 9 மணிக்கு வந்து இரவுப் பாத்திரங்களைத் தேய்த்துக் கொடுத்து விட்டுப் போய் விடுவாள். அவள் வீடு பக்கத்தில் இருந்ததால் பிரச்சனை இல்லை. மூன்று வேளை சப்பாடு போக மாதம் 1000 ரூபாய் சம்பளம் எனப் பேசிவிட்டாள்.

வீடு ஒரு நிதானத்துக்கு வந்தது. ஹோட்டல் பண்டங்களின் வரவு அறவே நின்றது எனச் சொல்ல முடியாவிட்டாலும் வாரம் முழுவதும் இல்லாமல் மாதம் இரு முறை அல்லது மூன்று முறை வரவழைத்தார்கள். வீட்டில் அனைவருக்கும் சங்கரியின் சமையல் ருசி பிடித்து விட்டது. மாமனாரின் உடல் நிலையும் ஓரளவு முன்னேறியது. தங்கம் எதிலும் தலையிடுவதும் இல்லை. திட்டுவதும் இல்லை. நன்றாகச் செய்தால் பாராட்டும் இல்லை. சிறிய மைத்துனர்கள் இருவரும் அதிகமாகப் பேசுவதும் கிடையாது. ராணி மாத்திரம் அண்ணி என்று வந்து ஏதாவது பேசுவாள். அதுவும் என்றாவது தான். இது என்ன? இந்தக் குடும்பம் இப்படி இருக்கிறது? என எண்ணிக் கொண்டாள் சங்கரி.

அவளுக்கும் மெல்ல மெல்லப் பழக ஆரம்பித்தது. ஆனால் ராணி இப்படிப் படிக்கவும் இல்லாமல் வீட்டு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனாலும் எதுவும் சொல்ல முடியாமல் தவித்தாள். ஏனெனில் கணவனின் உத்தரவு அப்படி. வயது வந்த பெண் இப்படி இருப்பது நல்லதல்ல என்று எண்ணிக் கொள்ள மாத்திரமே அவளால் முடிந்தது.

பிறந்த வீட்டிலிருந்து யாரும் வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை. திருச்சியில் இருந்து எப்போதாவது அப்பா பேசுவார். பொதுவாக நலம் விசாரித்து விட்டு வைத்து விடுவார். அண்ணனும் அண்ணியும் அதுகூடச் செய்வதில்லை. இவற்றையெல்லாம் பெரிதாக நினைக்காமல் குடும்பத்தோடு ஒன்றி விட்டாள் சங்கரி. அப்போது தான் திடீரென ஒரு நாள் ராணி தான் மேற்கொண்டு படிக்கப் போவதாகக் கூறினாள். இதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியாமல் விழித்தாள் சங்கரி.
 
Top