Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-11

Advertisement

Bhavatharini

Tamil Novel Writer
The Writers Crew
26f_A7y6xLZ_n2dRP9H8_cLTLirCdhfVVrPFd7-mghMtK1pgdRvSy2NbOUIfqfPRdpeq6en5koth9p7hazyUHBK-zznqPIJCJWisV2cBdfnV6nPlZeH150_SmYtZankEDd3IksFc


அன்புள்ள தோழர்களே!

உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி!.

படித்து விருப்பம் மற்றும் கருத்துகள் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!. உங்களது மேலான கருத்துகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.


சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-11..


அகிலனும் , யாழினியும் பேருந்து நிலையத்தில் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு கார் அவர்கள் முன்னர் வந்து நின்றது. இருவரும் திகைத்துப் போய் காரை பார்க்க கண்ணாடியை கீழிறக்கி "யாழினி கம் இன்" என்றார் அவளது மாமா. யாழினிக்கும் போக மனமில்லாமல் எதுவும் கூற முடியாமல் அகிலனை விட்டு நகர, அவளது மாமா கார் கதவை திறக்க ஏறி அமர்ந்துக் கொண்டாள். அகிலனுக்கோ அவரை கொலைசெய்யும் அளவுக்கு கோவம் வந்தது, அவரை வெளியே இழுத்து அறையலாம் போலிருந்தது. முன்பின் தெரியாதவர் மேல் நமக்கென்ன இவ்வளவு கோவம் என்று அவனையே கடிந்து கொண்டான். அதற்குள் கார் பளிங்கு போல் வழுக்கிச் சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் கண்ணைவிட்டு விலகியது.


நீ என்னவள் என்று தெரிந்தும்

நான் ஊமையாக இருக்கிறேன்!

வெகுண்டெழுந்து வருகிறது

அழுகை!..

நிலவை

நின்று தொடும் அளவிற்கு

கட்டிய காதல் கோபுரம்..

சித்தெரும்பை விட

சிறியதாக சிதறி போனதே இன்று! ..


அவருக்கு முன்னால் சென்று யாழினி எனக்கு சொந்தமானவள் என்று கையை பிடித்து வைத்திருக்க வேண்டும் என்றும் தோன்றியது. காத்திருந்தவனை விட்டு நேத்து வந்தவன் கொத்திக்கொண்டு போகிறான் என்பது போல் என்னவளை அவனுடன் அனுப்பிவைத்து மரம்போல் நிற்கிறேன் என்று மருகினான். மறு பக்கம் முட்டாளாக யோசிக்கிறோம் என்று எண்ணி வேகமாக பைக்கை எடுத்துக் கொண்டு தடம் போன போக்கில் போனான் எதுவும் செய்ய இயலாதவனாய்.



இன்று….

ஹைதராபாத் சென்று கொண்டிருந்த பேருந்து சென்னை வந்தடைந்தது. அகிலனுக்கு இன்றும் அன்று யாழினியின் முன்பு நடந்த இயலாமையை எண்ணிப் பார்க்கும் போது கண் ஓரத்தில் சிறு துளிகள் தானாக துளிர்த்தது. யாருக்கும் தெரியாத வண்ணம் ஜன்னல் ஓர காற்றில் அதைக் கரைத்தான்.

மேனேஜர் அனைவரையும் பார்த்து "ஹலோ டுயூட்ஸ்(dudes) டுமாரோ சண்டே! ஹாலிடே! எல்லாரும் ரெஸ்ட் எடுத்துவிட்டு மண்டே! ஆபீஸ்க்கு வந்துருங்க" என்று கூறிவிட்டு அவருடைய இல்லத்திற்கு அருகாமையில் பேருந்தை நிறுத்த சொல்லி இறங்கிக் கொண்டார்.

"டேய் மச்சி, பெரிய கண்டுப்படிப்பு சண்டே லீவாம்!!, ரெஸ்ட் வேற எடுத்துகிறதாம்!! இவன் எல்லாம் எப்படிடா மேனேஜர் ஆனான்?" என்றான் செல்வம்.

"கொஞ்சம் கம்முன்னு இரு, ரேட்டிங் போடுற டைம்! அந்த ஆளு காதுல விழுந்துற போகுது" என்றான் அகிலன்.

"யாரு அவனுக்கா? பாதி ஆம்பளைங்களுக்கு வீடு கிட்ட வந்தாலே, காது ரெண்டும் அடைச்சுக்கும். அதுக்கப்புறம் இடியே விழுந்தாலும் இவனுங்க காதுல எதுவும் விழுகாது".

" இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும் ?" என்று கேட்டான் அகிலன்.

"கல்யாணம் ஆகப் போகுதுல்ல, இதெல்லாம் ஒரு ஜெனரல் நாலேஜ். அதெல்லாம் உனக்கு புரியாது"

அகிலன் திரும்பி முறைக்க 'சரி அதை விடு!, உன் மிச்ச கதையை கேட்க நான் வேணா ரூமுக்கு வரட்டுமா" என்றான் செல்வம்.

அகிலன் சோகம் கலந்த புன்முறுவலுடன் " என் வாழ்க்கை உனக்கு கதையா போச்சு, ஒன்னும் வேண்டாம், இன்னொரு நாள் டைம் இருக்கும்போது சொல்றேன்" என்று கூறிவிட்டு அகிலன் இறங்கிக் கொண்டான்.

அதன் பின் அடுத்த அடுத்த நிறுத்தத்தில் ஒவ்வொருவராக அனைவரும் இறங்கினார்கள்.

சுற்றுலா போனதால் அதிகமான வேலைகள் அலுவலகத்தில் நிலுவையில் இருந்தது. அதனால் அடுத்தடுத்த நாட்களில் ஒரு இம்மி அளவு கூட அகிலனால் நகர முடியவில்லை, செல்வம் ஒரு சில முறை முயன்றும் அகிலன் எதையும் கூற முன்வரவில்லை. அன்று இருந்த மனநிலையே அகிலன் அனைத்தையும் கூறுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். நேரம் வரும்! அப்பொழுது அவனே சொல்லுவான்" என்று செல்வம் காத்திருந்தான்.

ஒரு வாரம் கழித்து இன்றாவது பூங்காவிற்கு போய்விட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு வரலாம் என்று அகிலன் கிளம்பினான்.

பூங்காவில் அகிலனுக்கு முன்பே தாத்தாவும் அவருடைய செல்ல பேத்தியும் அங்கே இருந்தார்கள். அகிலனை பார்த்தவுடன் தாத்தா, தன் கையை உயர்த்தி அசைத்து காண்பித்தார். அகிலன் நேராக அவரிடம் சென்று அமர்ந்தான் என்ன தம்பி பார்த்து ரொம்ப நாளாச்சு நான் கூட நீங்க ஆபீஸ் மாறிட்டீங்க என்று நினைத்தேன் உங்க போன் நம்பர் குடுங்க தம்பி. அதகூட நான் வாங்கி வைக்க மறந்துட்டேன்" என்றார்.

அகிலனும் "நாங்க டூர் போய் இருந்தோம். அதுக்கப்புறம் ஆபீஸ்ல வொர்க் அதிகம், அதான் வர முடியல, இவங்க உங்க பேத்தியா?" என்றான்.

'ஆமாம்பா! இன்னைக்கு கராத்தே கிளாஸ் சொல்லித் தருகிற வாத்தியார் வரல்லை வீட்டுக்கு போலாம்னா, பேத்தி கொஞ்ச நேரம் விளையாடிட்டு தான் வருவேன்னு சொல்லிட்டாள்"

" நீ என் பேத்தி பேசிக் கேட்டதில்லையே தொண தொண வென்று பேசிட்டே இருப்பாள்" என்று பேத்தியை அருகில் அழைத்தார்.

" அகல்யா இங்க வா கண்ணு "என்று பேத்தியை அழைத்தார்.

" பரவாயில்லையே ஐயா இந்த காலத்துல பேத்திக்கு தமிழ் பேரை வச்சிருக்கீங்க" என்றான்.

அகிலன் "இது என் பொண்ணு வெச்சது, நியூமராலஜி பார்த்து வைக்கலாம்னு சொன்னதுக்கு வேண்டாம்னு, இந்தப் பெயர்தான் வைப்பேன் என்று வைத்தாள்."

அகிலனும் தனக்கு ஒரு பெண் பிறந்தால் தன் பெயரையும் யாழினி பெயரையும் சேர்த்து அகல்யா என்று பெயர் வைக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. ஆனால் அதை ஒருபோதும் யாழினியிடம் சொன்னதில்லை. காதலை சொல்லாதவன், குழந்தைக்கு வைக்கும் பெயரையா சொல்லி விடுவான்.

பெயரின் ஈர்ப்போ, என்னவோ பார்த்த முதல் நாளே அகல்யாவை அவனுக்கு மிகவும் பிடித்துப்போனது." குட்டி இங்க வா! உனக்கு என்ன விளையாட்டு பிடிக்கும்? என்று கேட்டான்.

" எனக்கு ஹைட் அண்ட் சீக் பிடிக்கும் அங்கிள்" என்றாள்.

தாத்தா உடனே "இவங்க நம்ம ஊரு, மாமான்னு கூப்பிடு. எல்லாத்தையும் அங்கிள் ஆன்ட்டின்னு கூப்பிட்டா நல்லாவா இருக்கு" என்றார்.

"சரிங்க தாத்தா, மாமான்னே கூப்பிடுறேன்" என்றது மழலை மாறாத அந்த சிறுமலர்.

உனக்கு என்ன ஐஸ்கிரீம் பிடிக்கும் " எனக்கு ஐஸ்கிரீம் பிடிக்காது மாமா, டெய்ரி மில்க் சாக்லேட் தான் பிடிக்கும்" என்றாள். அந்த மாமா என்று குரலில் மயங்கித் தான் போனான்.


யாழ் இனிது குழல் இனிது என்பர் தம்மக்கள்

மழலைச் சொல் கேளாதோர்



திருவள்ளுவரின் வரிகள் அவனின் நினைவுக்கு வந்தது. அப்படியே அந்த மலர் மொட்டை வாரி எடுத்துக் கொண்டு "சரி வா நீயும் நானும் விளையாடலாம்" என்றான்.

அகல்யாவுடன் சிறு குழந்தை போல் சிறிது நேரம் ஹைட் அண்ட் சீக் எனப்படும் கண்ணாமூச்சி விளையாடி விட்டு பிரிய மனமில்லாமல் ”எனக்கு டைம் ஆகுது நாளைக்கு வந்து பார்ப்போம்” என்று கூற குழந்தையும், ஆனந்தத்தில் கழுத்தை இறுக்கிப் பிடித்து அகிலன் கன்னத்தில் முத்தமிட்டாள் .

காதலும் காமமும் இல்லாத மழலையின் அதீத அன்பு முத்தம் எதற்கும் இணையில்லை என்று தோன்றியது. யாழினியின் முத்தத்திற்குப் பிறகு கிடைக்கும் அடுத்த முத்தம் இதுதான்.

அகிலனின் அண்ணனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் திருமணமாகி, இப்போது அண்ணியின் குழந்தைக்கு எட்டு மாதம் ஆகிறது. குழந்தையும், அம்மாவும் அவர்கள் தாய் வீட்டில் இருப்பதால் அதனுடனும் அவன் அதிகமாக கொஞ்சியது இல்லை. வீட்டிற்கு சென்றால் கல்யாணப் பேச்சு எடுப்பதால் அவன் வீட்டிற்கு செல்வதையே குறைத்துக்கொண்டான்.

குழந்தையின் முத்த இதழ் ஈரத்தை கூட துடைக்காமல் "நாளைக்கு வா குட்டி! விளையாடலாம்" என்று சொல்லிவிட்டு கையை அசைத்து விடை பெற்றுச் சென்றான்.

"ஓகே மாமா!" என்று போனஸாக ஒரு பிளையிங் கிஸ் கொடுத்தாள்.

அகிலனும் அதை பறந்து சென்று பிடிப்பது போல் செய்கை செய்து விட்டு கிளம்பினான்.

இருந்தாலும் அகல்யாவை மிகவும் பிடித்துப் போனதால் அருகில் இருந்த ஒரு கடையில் டெய்ரிமில்க் சாக்லேட் வாங்கி கொண்டு வந்து அவளிடம் கொடுத்துவிட்டு அதற்கு இன்னொரு முத்தத்தையும் பரிசாகப் பெற்றுச் சென்றான். பூங்காவில் இருந்து அலுவலகம் செல்லும் பொழுது இதே சாக்லேட்டை யாழினிக்கு வாங்கி கொடுத்ததும், அன்று பேருந்தில் யாழினியிடம் வாங்கிய முத்தமும் அவன் நினைவுக்குள் ஒரு நிமிடம் வந்து சென்றது.

'சிந்தையை மறக்கடிக்க -

விந்தை செய்யும்

உன் இதழ் சேர்ந்த முத்தம் -

மறக்கடித்து- மறந்து நிற்கிறேன்

செய்வதறியாது மெய்மறந்து

என்றும் உன் நினைவுடன்.'

அலுவலகத்தில் நுழையும் போதே முகத்தில் அப்படி ஒரு பிரகாசம், புன்முறுவலுடன் நுழைந்தான் அகிலன். அதைப்பார்த்த செல்வத்திற்கு ஆச்சரியம் "மச்சி, உன்ன நான் இப்படி பார்த்ததே இல்லடா! முகத்தில் என்ன ஒரு வெளிச்சம் , டார்ச் அடிக்குது! இவ்ளோ அழகாடா நீ! கண்ணு பட்டுற போது" என்றான்.

பல வருடங்களுக்குப் பிறகு அகல்யா தன்னை மீட்டெடுத்து இருக்கிறாள் என்பதை அகிலன் உணர்ந்தான்.

" வேற ஒன்னும் இல்லடா! ஒரு குட்டி பாப்பா கூட கண்ணாம்பூச்சி விளையாடிட்டு வந்தேன். அதுக்கு என்ன ரொம்ப பிடிச்சிருக்கு. மாமா, மாமான்னு சுத்தி சுத்தி வந்தது. நானும் அது கூட சேர்ந்து சின்ன பிள்ளை மாதிரி ஆயிட்டேன்" என்றான் அகிலன்.

"ஆமாண்டா சாகுற வயசுல சங்கீதாங்கிற மாதிரி! உனக்கு கல்யாணம் பண்ணியிருந்தா, இந்நேரம் ரெண்டு பிள்ளைங்க அப்பா அப்பான்னு தலை மேல ஏறி இருக்கும், இப்பதான் அக்கா மகளோட விளையாடிட்டு வர்றாரு, கல்யாணம் பண்ணிக்க பொண்ணை கூட்டிக்கிட்டு வாடான்னா, ஐஸ் பாய் விளையாடிட்டு வர! உருப்பட்டுரும்." என்றான் செல்வம்.

"போடா! போ உனக்கு மனுசங்க சந்தோசமா இருந்தா புடிக்காது. இருக்கும்போது விட்டுட்டேன் இப்ப எங்க போய் தேடுவேன்."

"எதையாவது முழுசா சொன்னாதானே நான் எதாவது சொல்றதுக்கு" என்றான் செல்வம் கடுப்பாக .

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் உன் வேலையை பாரு, உட்கார்ந்து தட்டிக்கிட்டே இருக்கிற, ஒரு ப்ரோக்ராம் கூட சரியான ரிசல்ட் வந்த பாட்டைக் காணோம், அவ்வளவு தப்பு உன் புரோக்ராமில், உன்னை எல்லாம் எவன்டா டெவளப்மண்ட்ல போட்டான். " என்று பதிலுக்கு நடுக்கினான் அகிலன்.


"நம்ம மேனேஜர் தான்! நான் தான் அப்பவே சொன்னேன்ல, அவருக்கு அறிவு இல்லை என்று ஹி! ஹி! என்று அசடு வழிந்து சிரித்துக்கொண்டே டேய் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா" என்றான் செல்வம்.

உனக்கு பார்த்து வச்ச பொண்ணு " அண்ணா, அண்ணான்னு எனக்கு ரெண்டு தடவை போன் பண்ணிடுச்சு."

"ஆமாம் மச்சி! எனக்கும்தான் காலையிலிருந்து நாலு தடவை போன் பண்ணிவிட்டாள். மாலுக்கு கூட்டிட்டு போகணுமா! நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒருவழியாய் ஆகிடுவேன் போல "என்றான் செல்வம்.

" நல்ல பொண்ணுடா ராஜி, பாவம் கிராமத்துல இருந்து உனக்காக தானே சென்னை வந்திருக்கா, எங்கேயாவது வெளிய கூட்டிட்டு போடா "என்றான் அகிலன் .

" சொல்லுங்கடா அடுத்தவங்களுக்குன்னா அட்வைஸ் அள்ளிவிடுங்கள், ஆனா, நீங்க மட்டும் நிலாவையும், வானத்தையும் பார்த்துக் கொண்டே வாழ்க்கையை செலவில்லாம ஓட்டுவீங்க. நாங்கலாம் கிரெடிட் கார்டும், டெபிட் கார்டும் கிழிச்சு கிழிச்சு ஓட்டணுமா" என்றான் செல்வம்.

" பொண்ணு கிடைக்கிற வரைக்கும் ஊரெல்லாம் அலைகிறது, கிடைச்ச உடனே அவர்கிட்டயே செலவுக்கு வாங்கி கல்யாணத்தையும் பண்ணிட்டு, அவளையே கிண்டல் பண்றது. உங்களுக்கெல்லாம் பொண்ணு கொடுக்கிறார்களே அந்த பெரியவங்களை சொல்லணும்" என்றான் அகிலன்.

"சாமி உங்கிட்ட எங்க மாமனாரை கண்ணுல காமிக்க மாட்டேன். நீ சூர்யா மாதிரி பேசியே கல்யாணத்தை நிறுத்திடுவே! நான் கெளம்புறேன்! எனக்கு கொஞ்சம் வொர்க்க முடித்து குடுத்துடு "

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் நான் உன்னோடு டீடெயில்ஸ் குடுத்து மேட்ரிமோனியலில் அப்டேட் பண்ணி இருக்கேன். ஏதாவது ரெக்வஸ்ட் வந்தா கொஞ்சம் பாரு " என்று கூறிவிட்டு நடந்தான் செல்வம்.

"நான் உன்னை கேட்டனா? நீ எப்ப மாமாவான" என்றான் கோபமாக

"உன்ன மாதிரி ஒரு பிரண்டு இருந்தா மாமா வேலை செய்து பார்க்க வேண்டியதுதான் வேற என்ன பண்றது எனக்கு டைம் ஆச்சு, ராஜி கொன்னுடுவாள். நான் கிளம்புறேன்" என்று செல்வம் ஓட்டமும் நடையுமாக சென்றான்.

செல்வத்தின் வேலையும் சேர்த்து முடித்துவிட்டு, கைபேசியில் குறுஞ்செய்தி சத்தம் வர போனை எடுத்துப் பார்த்தான் அகிலன்.


தொடரும்...
 
தோழி அகல்யா யாழினி மகள்தானே ...... அப்படின்னு நான் கேட்டா நீங்க சொல்ல மாட்டீங்க....... அப்போ அகல்யா யாருனு எப்படி கேட்க ........:unsure::censored::censored:

குறுஞ்செய்தி என்று சஸ்பென்ஸ்........யாழினியா.....:unsure:
 
தோழி அகல்யா யாழினி மகள்தானே ...... அப்படின்னு நான் கேட்டா நீங்க சொல்ல மாட்டீங்க....... அப்போ அகல்யா யாருனு எப்படி கேட்க ........:unsure::censored::censored:

குறுஞ்செய்தி என்று சஸ்பென்ஸ்........யாழினியா.....:unsure:
அப்பாடா.. நானும் ஒருவழியாக கதையில் சிறு சஸ்பென்ஸ் வெச்சுட்டேன். ??
 
Top