Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 1

Advertisement

Priya

Well-known member
Member
மகிழ்ச்சி பொங்கி, தித்திப்பு கூடிட அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

கள்வன் - 1

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்…

என்று காயத்ரி மந்திரம் அக்காலை வேலையில் மிதமாக அதே சமயம் மனதிற்கு தெம்பூட்டும் விதமாய் ஒலித்துக்கொண்டிருக்க, அவ்வீட்டின் தலைவி கீதாவும் அதனுடன் சேர்ந்து ஸ்லோகத்தை முணுமுணுக்க, அவர் கைகளோ அன்றைக்கு தேவையான உணவுகளை சமைத்துக் கொண்டிருந்தது. காலை சிற்றுண்டியோடு சேர்த்து மதியம் வீட்டினர் எடுத்துச் செல்ல ஏதுவாய் ஆரோக்கியமான காய்கறிகள் நிறைந்த உணவை சமைப்பதில் எவ்வித அவசரமோ, சலசலப்போ இன்றி மிக இயல்பாய் செய்து கொண்டிருந்தார். அது தான் அவர். எவ்வித இடர் வருமினும் தன் நிதானத்தை இழக்காமல் அதற்கான தீர்வு களைவதில் ஈடுபடுபவர்.

“ஏங்க… அவளை எழுப்புங்க… இப்போது எழுந்து கிளம்ப ஆரம்பித்தால் தான் ஆபிஸ் செல்ல சரியாக இருக்கும். இல்லையென்றால் காலை உணவை சாப்பிடாமலேயே சென்று விடுவாள்.” என்று இடையில் தன் கணவருக்கு ஒரு வேலையை ஏவிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தார். அவர் கணவரோ கீதாவை தேடி சமயலறைக்கே வந்துவிட்டார்.

“பாப்பா இன்னும் சிறிது நேரம் தூங்கட்டும் கீதா. மணி ஆறரை தானே ஆகிறது.” மகளுக்கு துணை நிற்காத தந்தை இவ்வுலகில் உண்டோ?... இருக்கிறார்கள் சிலர்; மனிதத்தின் புனிதம் உணராதவர்கள். ஆனால் ரமேஷ், மகளின் கைப்பாவை.

“ம்க்கும்… உங்க பாப்பாக்கு ஏழு கழுதை வயசாகுது இன்னும் பாப்பா… பாப்பானு கூவிகிட்டு… கல்யாணம் செய்து வேறு வீட்டிற்கு செல்பவளை இப்படி செல்லம் கொடுத்தே கெடுக்கிறீர்கள்.” என்று தன் கழுத்தை நொடித்துக் கொண்டாலும், தந்தை, மகளின் பாசப் பிணைப்பை எப்போதும் இரசிப்பவரே.

பேசிக்கொண்டே கணவருக்கு போட்ட காபியை நீட்ட அவரும் உதட்டை சுழித்துக் வாங்கிக் கொண்டு தொடர்ந்தார், “ஐய… பாப்பாவை ஏதாவது சொல்லிட்டே இருக்கணும் உனக்கு… எத்தனை முறை சொல்வது… எம் பொண்ணுக்கு எவ்வளவு வயசானாலும் அவள் எனக்கு பாப்பா தான்… ஆனாலும் ஏழு கழுதை வயசாகுற உன் புள்ளையை கண்ணே, மணியே ராஜானு இன்னும் நீ கொஞ்சிட்டு இருக்கின்றதெல்லாம் எந்த கணக்கில் வரும் என்று தெரியவில்லை.” என்று தன் மனைவியை வாரினார்.

“ம்க்கும்… உங்க பொண்ணே பாப்பானா என் ராஜா இப்போ தான் காலேஜ் இரண்டாம் வருடம் படிக்கிறான்… அவனை நான் எப்படி வேண்டுமென்றாலும் கொஞ்சுவேன்… ஆனாலும் அவனையும் என்னையும் எதுவும் சொல்லவில்லை என்றால் உங்களுக்கு தொண்டையில் சாப்பாடு இறங்காதே…” என்று கீதாவும் குறை பட்டுக்கொண்டே தன் கணவரை பார்க்க அவரும் ஒரு புன்முறுவலோடு அவரை தான் பார்த்துக் கொண்டிருந்தார். இருவருக்குள்ளும் தினமும் நடக்கும் செல்ல சண்டை இது.

“என்ன பார்வை இது? சும்மா வெட்டியாக நிற்காமல் நான் நேற்று சொன்னதை பற்றி யோசித்தீர்களா என்று சொல்லுங்கள்.”

கீதாவின் கேள்வி அவர் முகத்தில் தீவிரத்தை கூட்டியது. அமைதியாக ஒரு மிடறு காபி அருந்தியவர் மென் குரலில், “நீ சொன்னது சரி தான். பாப்பா நம் கூடவே இருக்க முடியுமா என்ன? அவளுக்கும் வயது இருபத்தைந்து ஆகிறது. முன்னரே வரன் பார்க்க ஆரம்பித்திருக்க வேண்டியது தோஷத்தினால் தாமதமாகி விட்டது. இப்போது பார்க்க ஆரம்பித்தால் தான் ஒன்றிரண்டு ஆண்டுகளில் நல்ல இடம் அமையும்.”

“இன்றைக்கே நாள் நன்றாக இருக்கிறது. நீங்கள் ஒரு அரைநாள் விடுப்பு போட்டுவிடுங்கள்… நாம் வரன் மையத்திற்கு சென்று எல்லா விவரங்களையும் பதிந்து விடுவோம்.” என்று ஒரு ஆர்வத்துடன் தன் கணவர் புறம் திரும்ப, அவரோ ஆர்வம் துளியுமின்றி கீதாவை கண்டிப்புடன் நோக்கினார்.

“இப்பொது எதற்கு இவ்வளவு அவசரம்? பாப்பாவிடம் அவளது விருப்பம், எதிர்பார்ப்பை கேட்க வேண்டும். பிறகு தான் எல்லாம்.”

“அப்படியே உங்கள் பாப்பா உடனே சம்மதம் சொல்லப் போகிறாள் பாருங்கள்… அவளுக்கு என்ன தேவை என்று நமக்கு தெரியாதா என்ன? அவள் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்கப் போவதில்லை பிறகென்ன? நான் பெயர் பதியத் தான் சொல்கிறேன். நாளையே ஒன்றும் மாப்பிள்ளை கிடைத்து திருமணம் நடக்கப் போவதில்லை.” என்றார் நிதர்சனம் உணர்ந்தவராய்.

“இருந்தாலும் அவளிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு செய்யலாம்.” என்றதோடு தன் வாதத்தை முடித்தார் என்று சொல்வதை விட மனைவியின் முறைப்பை கண்டுகொண்டு சாதுவாய் அங்கிருந்து நகர்ந்துவிட்டார். உபயம் அவரின் சீமந்த புத்திரியே…

வீட்டின் அனைத்து சுவர்களும் விரிசல் விடுமளவிற்கு சில நாட்களுக்கு முன் பிரபலமான ரௌடி பேபி வீறிட்டு காயத்ரி மந்திரத்திற்கு போட்டியாய் கத்திக் கொண்டிருந்தது.

நிதானம் தவறாத கீதாவை சடுதியில் நிதானமிழக்கச் செய்வது அவர் மகளின் இந்தப் பழக்கமே…

தாயின் ஆன்மீக மார்க்கத்திற்கு சற்றும் பொருந்தாத மகள்...

எந்தப் பாடல் பிரபலமாயினும் அது தான் அந்த வீட்டின் இளவரசிக்கு சுப்பிரபாதம். அடுத்த பாடல் பிரபலமாகும் வரை முந்தின பாடலே அவளின் தற்காலிக சுப்பிரபாதம். தற்போதோ இருவேறு பாடல்கள் அந்த இளவரசிக்கு பிடித்துவிட ரௌடிபேபியை தொடர்ந்து சிங்கப்பெண்ணே பாடல் ஒலிக்கத் தயாராக வரிசையில் நின்றது. அதனோடு சேர்ந்து கீதாவும் தம் சுப்பிரபாத்தை தொடங்கத் தயாரானார்.

“காலையிலேயே ஏன் தினமும் இப்படி அலற விடுகிறாய்? சௌண்டை குறைடி… எனக்கென்று வந்திருக்கிறாள் பார்… காலையில் எழுந்து குளித்தோமா, சாமி கும்பிட்டோமா, காயத்ரி மந்திரத்தை பாடினோமா என்று இருப்பதில்லை… ஏதோ அர்த்தமற்ற பாடல்களை காலையிலேயே அலறவிடுகிறாய்…”

பாடல் சத்தத்தில் அவரின் திட்டுக்கள் எங்கே விழப் போகிறது. கூடத்தைக் கூட அவர் திட்டுக்கள் தாண்டவில்லை.

“அம்மா இன்றைக்குமா? நீ எவ்வளவு கத்தினாலும் அவள் கேட்கப் போவதில்லை. நீ ஏன் உன் சக்தியை தினமும் வீணடிக்கிறாய்?” என்றபடியே வந்தான் கீதாவின் செல்ல ராஜா, இனியன்.

“பின்னே என்னடா… தினமும் இதைத் தான் செய்கிறாள். எனக்கென்ன அவளை திட்ட வேண்டுமென்று ஆசையா? நாளை வேறு வீட்டிற்கு செல்லப்போகும் பெண். பொறுப்பு வேண்டாமா? நான் திட்டுவதற்கே அப்பாவும் பையனும் இப்படிச் குதிக்கிறீர்கள். நாளை வேறு யாரும் சொல்லக் கூடாது என்பதற்கு தான் நானே சொல்கிறேன் என்று ஏன் புரியவில்லை உங்களுக்கு?”

“அம்மா இன்றைக்கு என்ன அறிவுரை தூக்கலாக இருக்கிறது? நீ ஏன் இன்னமும் பழைய பஞ்சாங்கமாய் அவளையே அனுசரித்து போ என்று கட்டுப்படுத்துகிறாய்? காலம் மாறிவிட்டது. அவள் மட்டுமே அனுசரித்து வாழ வேண்டும் என்ற அவசியம் ஒன்றும் இல்லை. அவள் விருப்பப்படி இருக்க முடியாது என்றால் எதற்கு திருமணம்? நம்முடனே இருந்து விட்டு போகட்டுமே…” பெரிய மனித தோரணையில் தன் அக்காளுக்கு பரிந்து பேசினான் அந்த பாசமிகு தம்பி.

“நல்ல கதையா போய்டுச்சு போ… விட்டால் நீயே உன் அக்காவின் மனசை கெடுத்து விடுவாய் போலிருக்கே… நல்லது சொன்னால் கட்டுப்படுத்துகிறோம் என்று பெரியவர்கள் சொல்வது அனைத்தையும் ஒதுக்கி விடுகிறீர்கள். காலம் மாறிவிட்டது, எங்களுக்கு எல்லாம் தெரியும். எங்கள் சார்ந்த முடிவை நாங்களே எடுத்துக் கொள்வோம் என்று கூறும் நீங்கள், பெரியவர்கள் சொல்வதை என்ன, ஏது, எதற்கு சொல்கிறார்கள் என்று ஆராயாமல் அர்த்தமற்றது என்று ஒரே வார்த்தையில் ஒதுக்கி விட்டு பின்னர் கஷ்டப்படுகிறீர்கள்.

நம் விருப்பம் மற்றும் பழக்கங்கள் மற்றவர்களை பாதிக்காத வரையில் தான் அது நம்முடைய சுதந்திரம். பாதித்தால் நாம் அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுகிறோம் என்று தான் அர்த்தம்.

இப்போது உன் அக்காள் ஊருக்கே கேட்கும் அளவில் அலறவிட்டு பாட்டு கேட்கிறாளே, அது நம் பக்கத்து வீட்டின் அமைதியை குலைக்க வில்லையா? அவர்கள் அமைதியாக வாழ விருப்பப்பட்டால் அவர்களின் சுதந்திரத்தில் நாம் தலையிடுகிறோம் என்று தானே பொருள்? அவர்களின் சுதந்திரத்தில் தலையிட நமக்கு யார் உரிமை கொடுத்தது? என்றும் நம் விருப்பம் நம் எல்லைக்குள் இருக்க வேண்டும்.

பெரியவர்கள் சொல்லும் ஒவ்வொன்றிற்கும் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. சிலர் மூடநம்பிக்கையில் சில விஷயங்கள் செய்கிறார்கள் தான் அதற்காக நம் முன்னோர்கள் வகுத்து வைத்த கோட்பாடுகள் அனைத்தும் போலி ஆகிடாது.

என் பெண்ணும் பாரதி கண்ட புதுமை பெண்ணாய், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாய், துணிச்சலாய் இருக்க வேண்டுமென்று தான் ஆசைப்படுகிறேன். அதற்காக பெரியவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளாமல், அவர்கள் மனம் மகிழ ஒரு சில விஷயங்கள் செய்யாமல் இருப்பது முட்டாள்தனம்.

இவ்வளவு பேசுகிறாயே நீ சொல் உனக்கு எப்படிப்பட்ட மனைவி வேண்டுமென்று எதிர்பார்கிறாய்?” என்று கேள்வியை தன் மகன் புறம் திருப்பினார்.

இனியனோ அவர் சொல்ல வருவது கொஞ்சம் புரியும்படியாய் இருக்க மெல்லிய குரலில் பதிலளித்தான், “உங்களையும், என்னையும் புரிந்து கொண்டு, அக்காவையும் விடாமல், ஒத்தாசையாக இருக்க வேண்டும்.”

“ஒரு கண்ணில் வெண்ணையும்; மறு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கக் கூடாது ராஜா.. நம் வீட்டிற்கு வரப் போகும் பெண்ணிடம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதே எதிர்பார்ப்பு நம் வீட்டு பெண் மீதும் இருக்கும். நான் அவளை புகுந்த வீட்டிற்கு சேவகம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை, தன் குடும்பத்திற்கு என்ன தேவையோ அதை தெரிந்து வைத்துக்கொள். நேரம் வரும்போது செய்ய உதவியாக இருக்கும் என்று தான் விருப்பப்படுகிறேன். நம் குடும்பத்திற்கு செய்வது என்றும் வற்புறுத்தி கட்டாயப் படுத்துவது ஆகாது. நாம் ஒன்றும் விசாரிக்காமல் வீம்பு பிடித்து குரூர குணம் படைத்த குடும்பத்தில் அவளை கட்டிக் கொடுக்கப் போவதில்லை. எங்கு நம் பெண்ணை அவர்கள் பெண்ணாக கருதுகிறார்களோ அங்கு தான் சம்பந்தம் செய்வோம். அதே போல் நம் பெண்ணுக்கும் அவர்கள் குடும்பத்தை தன் குடும்பம் போல் நேசிக்க தெரிந்திருக்க வேண்டும்.”

“அம்மம்மா… தெரியாமல் அந்த லூசுக்கு சார்பாக பேசிவிட்டேன், அதற்காக என்னை வைச்சு செய்யாதே… போதும் அழுதுடுவேன்…” வடிவேல் பாணியில் இனியன் கதற, அவனின் கடைசி வரிகளை மட்டும் கேட்ட அவனின் தமக்கை கொல்லென்று சிரித்தாள்.

“ஏய்… என்ன… கேக்கப்புக்கனு சிரிக்கிற… வாயை மூடு...” அவளின் கேலிச் சிரிப்பில் கடுப்பாகி இனியன் எரிந்து விழுந்தான்.

“இனியன்… அக்காவை பார்த்து என்ன பேச்சு இது?” என்று கீதா ஒரு அதட்டல் போட, இருவரும் கப்சிப். அதை கூடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் அமைதியாக சிரித்துக் கொண்டார்.

தன் சொல்லுக்கு தம் பிள்ளைகள் கட்டுப்பட்டு அமைதியை கடைபிடிக்க, அவர்களை மனதில் மெச்சிக்கொண்டு தன் மகள் புறம் திரும்பி, “இனியா சீக்கிரம் கிளம்பி வா. உன்னிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும்.”

இனியா இனியனிடம் கண்ணாலே என்னவென்று வினவ, அவனோ உதட்டை பிதுக்கி கைவிரித்தான்.

“இனியா நேரத்தை கடத்தாமல் சீக்கிரம் வா. அப்புறம் மணியாகி விட்டதென்று பரபரப்புடன் கிளம்புவாய்.” என்று கீதா மகளை விரட்டினார்.


*^*^*


எழுத வாய்ப்பளித்த தளத்திற்கும், அதை படித்து கருத்து தெரிவிக்கவிருக்கும் உங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்!
 
உங்களுடைய "கள்வனே
கள்வனே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சிவப்பிரியா டியர்
 
Last edited:
Top