Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை-24

Advertisement

praveenraj

Well-known member
Member
பாரதி சாரின் படத்தையே பார்த்துக்கொண்டிருந்த திருக்குமரனுக்கு திடீரென்று ஒரு யோசனை வந்தது. டாக்டர் சந்தான பாரதியின் ஆராய்ச்சி பணிகளில் அவருடன் ஈடுபட்ட மற்ற எல்லோரையும் விசாரிக்கலாம் என்று எண்ணி அந்த லிஸ்டை எடுத்தான். டாக்டர் ஜீவா, டாக்டர் கமலக்கண்ணன், டாக்டர் சமுத்திரன், டாக்டர் நீரஜா டாக்டர் ஸ்டெப்பி, டாக்டர் உபேந்திரன் என்று அறுவரின் பெயர் அதிலிருந்தது. இதில் டாக்டர் ஜீவாவைத் தவிர யாருமே இப்போது இந்த மருத்துவமனையில் இல்லை. எல்லோரும் தனித்தனியே வேலை செய்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இவர்கள் அனைவரும் ஒரே ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள் என்பது தான். இவர்கள் எல்லோரையும் ஸ்பான்சர் செய்து படிக்க வைத்தவர் டாக்டர் சந்தான பாரதி. இவர்களோடு மகேந்திரனும் திருக்குமரனும் அடக்கம். இவர்கள் எல்லோரையும் தனித்தனியே அவனுக்கு நன்கு தெரியும். இப்போது இவர்களை எப்படிச் சந்தேக கண்ணோட்டத்தில் பார்ப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஏனோ இந்த விஷயத்தை மஹேந்திரனுடன் கூட அவன் சொல்லவில்லை. சொல்ல வில்லை என்பதைக் காட்டிலும் சொல்ல முடியவில்லை என்பது நிஜம். அதேநேரம் இவர்கள் அனைவரும் ஒரே நேரத்திலும் பாரதி சாரிடம் பணியாற்றவில்லை. இவர்கள் எல்லோரும் தனித்தனியேவும் ஏன் சிலர் இணைந்தும் கூடப் பணியாற்றியிருகிறார்கள். ஒருவேளை இவர்களில் யாருக்கேனும் ஏதேனும் தெரிந்தும் இருக்கலாம் இல்லை தெரியாமலும் இருக்கலாம்.

அப்போது திருக்குமரனுக்கு அவனின் டிடெக்டிவ் நண்பனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. ஐராவதியைப் பற்றியும் அவளின் காதலனைப் பற்றியும் தெரியப்படுத்தியவர் அவள் தினமும் அதிகநேரம் பேசும் நபர் ஜோன்ஸ் எனவும் அவன் அவளை விரும்புவதைப் போல் நடிக்கிறான் என்றும் குமாரனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மற்ற விஷயங்கள் தெரியவர காலதாமதம் ஆகுமென்று சொல்லிவிட்டு கட் செய்தான். கூடவே ஐராவதியும் ஜோன்ஸும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வர ஏனோ அந்த ஜோன்ஸை பார்த்த மாத்திரமே அவனுக்கு ஒரு எரிச்சலும் நம்பிக்கையின்மை தான் தோன்றியது.

பாரதி சார் என்ன தான் எல்லோரையும் நன்றாக படிக்க வைத்திருந்தாலும் மேற் சொன்ன யாரையும் தன் குடும்பத்தோடு அறிமுகம் செய்ய வில்லை. காரணம் அவர் தன் குடும்பத்துடன் செலவழிக்கும் நேரமே சொற்பம் தான். இதில் அவர் குடும்ப உறுப்பினர்கள் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அதனாலே ஐராவதியை குமாரனால் புரிந்துகொள்ள முடியாமல் போனது.
*******************
வண்டியை ஸ்டார்ட் செய்யமுடியாமல் கடுப்பானவன் குகனிடம் கத்த அதற்குள் வண்டி ஸ்டார்ட் ஆக இருவரும் அந்த மருத்துவமனையிலிருந்து பயணித்தனர். எப்போதும் எதையாவது பேசும் குகன் இம்முறையும்,"பாஸ் இந்த கேஸ்ல ஏன் நமக்கு தலையும் கிடைக்க மாட்டேங்குது வாலும் கிடைக்க மாட்டேங்குது? இந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனதுக்கு அப்புறோம் தான் அந்த ஸ்ரீயும் சிந்துவும் இறந்திருக்காங்க. பாருங்க அந்த அம்மாவும் இதையே தான் சொன்னாங்க. அவங்க பொண்ண இங்க அட்மிட் பண்ணதும் இறந்து போயிட்டாங்களாம்..." என்று குகன் தன் பாட்டிற்குப் பேசிக்கொண்டு வர அவனின் இறுதி வார்த்தையைக் கேட்டவன் வண்டியை சடன் பிரேக் போட்டான். அதற்குள் அவர்களுக்கு பின்னால் வந்த கார் மற்றும் பைக் எல்லாம் ஹாரன் அடிக்க வண்டியை ஓரம் கட்டியவன்."டேய் ஒரு வேளை இந்த ஹாஸ்பிடல்ல ஏதும் தப்பு நடக்குமோ?"

"ஆம் இப்போ கேளுங்க... அது தான் அந்த பாட்டிமாவை வெச்சி ஏதாவது விசாரிக்கலாம்னு இருந்தேன். போங்க பாஸ்..." என்று குகன் சொல்ல,
"டேய் இதை நீ அப்போவே சொல்லியிருக்க வேண்டியது தானே? இப்போ ஏன்டா சொல்ற?" என்று எரிந்து விழுந்த தருண் உடனே வண்டியைத் திருப்பினான். மீண்டும் அந்த ஹாஸ்பிடல் வந்தவர்கள் இறங்கி அந்தப் பெண்மணியைத் தேட அவரோ காணவில்லை என்றதும் தருணிற்கு தன் மீதே கோவம் வர வேகமாக சென்று முகத்தைக் கழுவியவன் கொஞ்சம் அமர்ந்தான். அவன் மனம் மெல்ல சாந்தமடைந்தது. பெரும்பாலும் இப்படித் தன்னையே வருத்திக்கொள்ளும் ஆள் தருண் இல்லை தான் என்றாலும் இன்று இப்படி இருந்ததால் கிடைத்த ஒரு சின்ன க்ளூவையும் இப்படி மிஸ் செய்து விட்டோமே என்று ஆதங்கத்தில் இருந்தான்.

"பாஸ், விடுங்க பாஸ். யானைக்கும் அடி சறுக்கும். நான் எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் இருக்காரு அவருகிட்ட இந்த ஹாஸ்பிடலை பற்றிக் கேட்கலாமா?" என்றதும்,

யோசித்தவன்,"இல்ல வேணாம். வா, எனக்குத் தெரிஞ்ச ஒரு டாக்டர் இருக்காரு. அவரை மீட் பண்ணா எல்லாமும் கிடைக்கும். லீவ் இட். எவெரிதிங் ஹபென்ஸ் பார் எ ரீஷன். வா போலாம்..." என்று அவர்கள் செல்ல அப்போது சுபத்திரா அவர்களை அழைத்தாள்.

"ஹலோ சுபி... சுபத்திரா சொல்லுங்க..." என்றான் தருண்.

"தருண் இப்போ த்ரீ தேர்ட்டி ஆகுது. எனக்கு ஐந்து மணிக்கு பிளைட். நாம ஈவினிங் செவனோ க்ளாக் மீட் பண்ணலாமா? இது நேர்ல மீட் பண்ணி பேச வேண்டிய விஷயம். என்ன ஓகே வா?"

"ஓகே சுபத்திரா. எனக்கும் கொஞ்சம் வேலையிருக்கு. நான் ஏழு மணிக்கு உங்கள உங்க ஆபிஸ்ல மீட் பண்றேன்..."

"இல்ல ஆபிஸ் வேணாம். வீட்டுக்கு வாங்க..."

"ஓகே..." என்று அழைப்பைத் துண்டித்தான்.

"இப்போ என்ன பாஸ் பண்றது?"

"உனக்குத் தெரிஞ்சு இங்க நல்ல நான்வெஜ் ஹோட்டல் எது டா?"

"பொன்னுசாமி ஹோட்டல் நுங்கம்பாக்கம் பாஸ்..."

"அப்போ வா அங்க போலாம்..." என்று உணவு உண்ணச் சென்றனர்.
*********************
நார்மல் ஆனவன்,"அங்கிள் அப்போ இவ்வளவு தெரிஞ்ச உங்களுக்கு இந்த விஷயத்தை செஞ்சது யாருன்னும் தெரிந்திருக்கும். சொல்லுங்க..." என்றவன் கிட்டத்தட்ட அவரிடம் கெஞ்சினான். அவனின் நிலையைப் பார்த்த தாமோ,
"இந்திரா எனக்கு உங்க தாத்தாரைத் தெரியும். அவரை நான் நேர்லயே பார்த்திருக்கேன். ஏன் அவருடன் பேசியிருக்கேன். அவரோட பலம் என்ன தெரியுமா? அவரோட இந்த அபரீதமான வளர்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா?" என்றவர் சிறிது இடைவெளி விட்டு,"அவரோட கான்பிடென்ஸ். எதுக்கும் பயப்பட மாட்டார். அவ்வளவு துணிவு. ஒரு விஷயத்தைச் செய்யணும்னு முடிவு பண்ணிட்டா அதை எக்காரணத்திற்கும் நிறுத்த மாட்டார். நீ அவரோட டிட்டோ இந்திரா. உன்ன நான் சின்ன வயசுல இருந்து இன்னும் குறிப்பா சொல்லனும்னா நீ பிறந்தப்ப இருந்து எனக்குத் தெரியும். உன்னோட ஒவ்வொரு அங்க அசைவிலும் உன் தாத்தா தான் தெரிவார். அண்ட் உன்னோட பலம் என்ன தெரியுமா? உங்க தாத்தார் கிட்ட இருந்த அதே தைரியமும் துணிச்சலும் தான்..."
"ஐயோ அங்கிள் இந்த உலகத்துலயே ரொம்ப கொடுமையானது என்ன தெரியுமா? மரணம். அதும் நம்மோட மரணமில்ல. நமக்கு ரொம்ப வேண்டியவங்களோட மரணம். அவங்க இல்லைனு தெரிஞ்சும் வாழனும் பாருங்க அது தான் பெரிய தண்டனை..." என்று இந்திரன் சொல்லி,"இப்போ நான் என் அப்பா அம்மா கமலேஷ் எல்லோரும் இதைத் தான் அனுபவிக்கிறோம். இந்தச் சூழ்நிலையில என்னால அப்படித் துணிச்சலா இருக்க முடியில அங்கிள். என்னால மட்டுமில்ல யாராலையும் முடியாது. மஹாபாரத போர்ல அதிகம் துன்பப்பட்டது யாருனு நினைக்கறீங்க? இல்ல அதுல யாரு ஜெயிச்சாங்கனு நினைக்கிறீங்க? உண்மையிலே கௌரவர்கள் கூடசி நிம்மதியா செத்துப் போய்டாங்க. ஆனா பாண்டவர்கள்? அவங்க பெத்த பிள்ளைகளை இழந்து வேண்டிய உறவுகள் எல்லோரையும் இழந்து அந்த இழப்பை வாழ்நாள் முழுக்க அனுபவிச்சு... அப்பப்பா... அவங்கதான் உண்மையிலே தோத்தவங்க..."
"உன் நிலைமை புரியுது இந்திரா. எனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியில..."
"சரி அங்கிள், இதுல என் சித்தப்பா பங்கு ஏதாவது இருக்கா?"
"வெளிப்படையா எதுவும் இல்ல..."
"புரியில?"
"எனக்குத் தெரிஞ்சு அவர் நேரடியா இதுல தலையிடல ஆனா மறைமுகமா இருக்கானு எனக்கு இன்னும் தெரியில..."
"கதிரா பங்கு இருக்கும்னு...?" ஏனோ இதை கேட்கும் போதே அவன் முகம் மாறியது.
"இந்தா இது இந்த ஆறு மாசத்துல அவனோட போன் கால் ஹிஸ்டரி. இதுல அவன் அதிகம் பேசினது..." என்று சொல்ல,
"அசோக் சௌனி, ரைட்?"
"உனக்கு எப்படி?"
"நானே அவன் போனை தற்செயலா பார்த்தேன்..."
"இன்னொன்னு கதிரவன் மூலமா இதுவரை நம்ம கம்பெனி சம்மந்தமா மூணு டாகுமெண்ட்ஸ் அசோக் சௌனிகிட்ட ட்ரான்ஸ்பெர் ஆகியிருக்கு..."
அவன் நிமிர்ந்து அவரைப் பார்க்க,
"பயப்படாதா அதுனால பெருசா ஒன்னும் இழப்பில்லை..."
அமைதியாக அப்படியே அமர்ந்தான். இதற்கு மேல் என்ன கேட்பது? அவனுக்குத் தேவையான பதில்கள் எல்லாமும் கிடைத்து விட்டதைப் போல் தோன்றவும் அவன் சோர்ந்தான்.
"அங்கிள், இப்போ ஒரு கேள்வி கேட்பேன்... அதுக்கான பதில்... அதாவது உண்மையான பதில் எனக்குத் தெரியணும்..."
"கேளு..."
"அப்பாக்கு இந்த பிசினெஸ்ல சித்தப்பாவைத் தவிர வேற யாராவது எதிரிங்க இருக்காங்களா? ஏதோ ஒரு இன்சிடென்ட்... ஏதாவது முன்பகை?"
அவர் புரியாமல் பார்க்க,
"ஓகே வெளிப்படையா ஒரு பிசினஸ்மேனா கேட்கறேன், ஏதாவது ஆதாயத்துக்காக யாரையாவது இல்ல எந்தச் சொத்தையாவது ஏமாற்றி...?" ஏனோ அதற்கு மேல் வெளிப்படையாக அவனுக்குக் கேட்க மனம் வரவில்லை. அவரைப் பார்க்க,
இல்லை என்பது போல் தாமோ தலையை மட்டும் ஆட்டினார்.
கோவத்தில் அருகே இருந்த தண்ணீர் குவளையைத் தூக்கி எறிந்தவன்,"எப்படி அங்கிள்? எப்படி ஒரு ரீசனும் இல்லாம யாரு கார்ல கார்பன் மோனாக்சைடு வெச்சி எங்களைக் கொல்ல முயற்சி செஞ்சு இருக்கனும்? நான் இன்னும் உயிரோட இருக்கேன். கமலேசும் இன்னும் உயிரோட இருக்கான். அப்படினா சிந்துவுக்கோ இல்லை ஸ்ரீகோ தான் டார்கெட் வெச்சியிருக்கணுமா? அண்ட் அவங்களைக் கொல்லணும்னு முயற்சி செஞ்சியிருந்தா இப்படிக் கஷ்டப்பட வேண்டியதில்லையே? எனக்கு ஒன்னுமே புரியில. நாங்க ஓகே அங்கிள். பிசினெஸ் மோட்டிவ் இருக்கலாம். ஆனா ஸ்ரீ என்ன அங்கிள் பண்ணா? அவ ஒரு அப்பாவி அங்கிள். உங்களுக்குத் தெரியாதா என்ன?"
"இந்திரா காம் டவுன். நானும் பல வழியில ஆஃபீசியலாவும் அன்-ஆஃபீசியலாவும் எவ்வளவோ விசாரிச்சிட்டேன். எல்லாமும் கதிரவன் மேல தான் வந்து நிக்குது..." என்றவர் தயாளனை வைத்து கண்டுபிடித்ததை எல்லாம் காட்டினார். "ஒருவேளை கதிரவன் எதையாவது வாயைத் திறந்தா உண்டு. இதை நான் மறைமுகமா அப்பா கிட்டயும் சொல்லிட்டேன். அவரு தான் இதைப் பெருசாவே எடுத்துக்க மாட்டேங்குறாரு. நீ சம்மதம் சொன்னா கதிரவனை நாம விசாரிக்கலாம்..."
அப்போது தான் இந்திரனுக்கு அது ஞாபகம் வந்தது."இல்ல அங்கிள் கதிரவன் மட்டுமில்லை இன்னோரு ஆளும் இருக்காங்க. நானும் ரொம்ப நாளா பொறி வைத்தியிருக்கேன் ஆனா இன்னும் சிக்கலை..."
"புரியில இந்திரா... நீ யாரைச் சொல்ற?"
"சொல்றேன். கூடிய சீக்கிரமே தெரிஞ்சிடும்..." என்றவன்,
"அங்கிள் இன்னும் ஒரே ஒரு கேள்வி..." ஏனோ இதைக் கேட்க வேண்டும் என்றும் மனம் சொன்னது அதேநேரம் அவனுக்கு இதைக் கேட்க மனமும் வரவில்லை.
"என்ன இந்திரா?"
"அது..."
*********************
ஹோட்டலுக்குள் சென்றவர்கள் ஏனோ தங்களின் கொடூரப் பசியின் காரணமாகவும் மணி நான்கை கடந்து விட்டதாலும் காஞ்ச மாடு கம்பில் மேஞ்சத்தைப் போல இருக்கும் எல்லாவற்றையும் ஒரு பிடி பிடித்தனர். குகன் தீவிரமாக சாப்பாட்டில் கவனம் செலுத்தினாலும் தருண் மட்டும் அவன் தவறவிட்ட அழகிய வாய்ப்பை நினைத்து வருந்தியபடியே தான் சாப்பிட்டான். குகன் தான் தன் பாஸ் ஏதோ யோசனையில் இருப்பதைப் புரிந்து அந்த இன்ஸ்பெக்டரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரியுமா என்று தன் நண்பனுக்கு குறுந்செய்தி அனுப்பினான்.

"டேய் குஹா, எனக்கு ஒரு சந்தேகம்?"

"என்ன பாஸ்?"

"இப்போ ஒரு பொருள் பல பேர் கிட்ட நல்ல படியா இருந்து திடீர்னு கடைசியா உன் கையில வந்ததும் தான் மிஸ் ஆகிடுச்சினா அப்போ எல்லோருக்கும் உன் மேல சந்தேகம் இருக்கும் தானே?"

"என்ன பொருள் பாஸ்?"

யோசித்தவன்,"இப்போ நான் ஒரு சிக்கன் பிரியாணியை ஒருத்தர் கிட்டக் கொடுக்கச் சொல்லி உன்கிட்ட தரேன்னு வெச்சிக்கோ. கடைசியில அவர் கிட்ட அந்த சிக்கன் பிரியாணி வரும்போது அதுல இருந்த முட்டையும் பீசும் மிஸ் ஆகிடுச்சினா அப்போ நான் உன்னைத் தானே சந்தேகப் படுவேன்?" என்று சீரியசாகக் கேட்ட தருணிற்கு,

"பாஸ் என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது? பீஸையும் முட்டையையும் திருடி சாப்பிடுறவேன் மாதிரியா இருக்கு?" என்றவன் தன்னுடைய மட்டன் பிரியாணியின் பீஸை கடித்தான்.

"ஒரு எக்சாம்பிளுக்கு டா..."

"ஆமா பாஸ். அது தானே இயல்பு? என் கைல இருந்து மாறியதுக்கு அப்றோம் மிஸ் ஆகியிருந்தா அப்போ அதுக்கு நான் தானே பொறுப்பு? இதுல என்ன பாஸ் சந்தேகம் உங்களுக்கு?"

"அப்போ நீ தான் அந்த பீஸையும் முட்டையையும் எடுத்தவன்னு கண்டுபிடிச்சு நான் உன்னைத் தான் தேடி வருவேன்னு கெஸ் பண்ணி நீ அப்ஸ்காண்ட் ஆவ தானே?"

"அப் கோர்ஸ் பாஸ். ஆனாலும் உங்க பிரியாணி எல்லாம் நான் திருடி சாப்பிட மாட்டேன் பாஸ். அப்பப்போ நீ உங்க ட்ராவ்ல வெச்சியிருக்கும் போலோ, சீவிங் கம் ஹால்ஸ், சென்டர் ப்ரெஷ்னு இந்த மாதிரி சில்லறை ஐட்டம் தான் பாஸ் நான் திருடியிருக்கேன். அதுகூட நம்ம பாஸ் தானேங்கற ஒரு உரிமையில தானே தவிர வேற எதையும் நான் திருடியதில்லை பாஸ். என்னை நம்புங்க ப்ளீஸ்..." என்று குகன் சீரியஸாகவே சொல்ல, அவனைக் கேவலமாக முறைத்தான் தருண்.

"சாரி பாஸ். மதியம் நேரத்துல சும்மா உட்கார்ந்திருந்தா தூக்கம் தூக்கமா வரும். அதுக்கு தான் வாயில இப்படி சாக்கிலேட் போடுவேன்..."

"ஷட் அப்! நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீ என்ன பேசிட்டு இருக்க?" என்று குகனின் அலட்சியத்தைக் கண்டு கத்த,

"இந்த பழமொழி பேசுறது ஜாடைமாடையா பேசுறது எல்லாம் எனக்கு சுத்தமா புரியாது பாஸ். எதுனாலும் வெளிப்படையாகவே பேசுங்க. ப்ளீஸ்..." என்றான் குகன்.

"எனக்கென்னமோ அந்தப் பொண்ணுங்க சாவுல சந்தேகம் இருக்கு?"

"எந்தப் பொண்ணுங்க பாஸ்?"

"இப்போ நாம என்ன கேஸ் விசாரிச்சிட்டு இருக்கோம்?" என்று கோவமாக குகனை வினவினான் தருண்.

"பாஸ் ஒரு கேள்வி கேட்டா அதுக்கு நீங்க பதில் சொல்லணும். அதை விட்டுட்டு அந்தக் கேள்விக்கு விடையா இன்னொரு கேள்வி கேட்கக் கூடாது. ஏன்னா எனக்கு அவ்வளவு அறிவெல்லாம் இல்ல. சோ ப்ளீஸ், உங்க புத்திசாலித்தனத்தை என் கிட்ட ப்ரூவ் பண்ணாதீங்க. அது லிட்டரேல்லி வேஸ்ட்..." என்றான் குகன்.

"நாம இந்திரனோட ஆக்சிடெண்ட்டை விசாரிக்கரோமில்ல? அப்போ இந்திரன் கூட கார்ல ட்ராவல் பண்ண ரெண்டு பொண்ணுங்க செத்துப் போனாங்க இல்லையா? அவங்களைப் பற்றித் தான் கேட்டேன். விளக்கம் போதுமா இல்ல இன்னும் வேணுமா?"

"பாஸ் எனக்கு ஒன்னே ஒன்னு தான் புரியமாட்டேன்குது. நீங்க ஏன் தேவை இல்லாததைப் பற்றியெல்லாம் விசாரிக்கறீங்க? இதுக்கெல்லாம் அந்தக் கதிரவன் நமக்கு பீஸ் கூடத் தர மாட்டான். அந்தாளு ரெண்டு நாளா நம்மகிட்ட பேசக்கூட இல்ல. நீங்க ஊம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க உங்களுக்கு புது கேஸ் ஒன்னை தரேன்..." என்றவனுக்கு 'என்ன' என்பதைப் போல் தருண் ஒரு பார்வைப் பார்க்க,

"அது இந்த புது படம் ஷூட்டிங் நடக்கும் போதே திருட்டுத்தனமா வீடியோ எடுக்கறாங்க இல்ல? கூடவே முதல் நாளே இந்த தமிழ் ராக்கேர்ஸ் சினிமாவை ரிலீஸ் பண்றாங்க இல்ல? அவங்க யாருனு கண்டுபிடிக்கச் சொல்லி ஒரு பெரிய ப்ரொடெக்சன் கம்பெனி தீவிரமா இருக்காம். வாங்க போய் உடனே அட்வான்ஸ் வாங்கிடலாமா?" என்று கேட்ட குகனை எதைக் கொண்டு அடிக்கலாம் என்று கொலைவெறியில் இருந்தான் தருண்.

"எப்பப்பாரு சினிமா சினிமா தானா? வேற எதுவுமே இல்லையா உன் மூளையில?"

"சாரி பாஸ். ஆமா நீங்க ஏன் பாஸ் அப்படிக் கேட்டீங்க? அதுதான் அந்தப் பொண்ணுங்க சாவுல சந்தேகம்னு?"

"டேய் எனக்கு இந்த கேஸ்ல பயங்கரமா இடிக்கிறது என்ன தெரியுமா? இந்திரனைக் கொல்லணும்னு யாரோ முயற்சி பண்ணியிருக்காங்க. நீ சொன்ன மாதிரி அட்டகட்டியில நடந்தது ரெண்டாவது அட்டெம்ப்ட்டா இருந்தா முதல் அட்டெம்ப்ட்ல அவன் தனியா இருக்கும் போது ஈஸியா எக்ஸ்சிக்கூட் (செயல் படுத்தி) பண்ணியிருக்கலாம். ஏன்னா மூணு பேரு இருக்கும் போது ஒருத்தனைக் கொல்ல முயற்சி பண்றதுக்கும் ஒரே ஒருத்தனைக் கொல்ல முயற்சி பண்றதுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு. அண்ட் முன்னது ரொம்ப ரிஸ்க் பின்னதைக் காட்டிலும். அவங்க ஏன் இந்த ரிஸ்க் எடுக்கணும்? அப்போ வெறுமனே இந்திரனைக் கொல்லுறதுல மட்டும் அவங்க மோட்டிவ் இல்ல. அதாவது அதுக்கும் மேல ஏதோ இருக்கு. புரியுதா?"

"சூப்பர் பாஸ். உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி மூளை வேலை செய்யுதோ? ஆனா நீங்க சொல்றது ஒரு சாதரண ஆளுக்கு ஓகே. இவங்க குடும்பமோ ரொம்ப பிரபலமானது. அண்ட் அந்த இந்திரன் இன்னைக்கும் அவன் தான் பேப்பர்ல ஹாட் நியூஸா இருக்கான். இந்த நேரத்துல இப்படி ஒரு விஷயம் பண்ணா அது அவனோட எதிரிங்க தான்னு ஈஸியா தெரிஞ்சிடும் இல்ல? எல்லோருக்கும் அவங்க மேல ஈஸியா சந்தேகம் வந்திடும் இல்ல? அப்போ அவன் மாட்டிப்பான் இல்ல?"

"நீ சொல்றது சரி குகன். ஒருவேளை இந்திரனைக் கொல்ல நினைச்சவன் அவனோட பிசினெஸ் எதிரிங்களா இருந்தா இதெல்லாம் கண்டிப்பா யோசிச்சிருப்பான் தான். பட் அவனுக்கு பிசினெஸ்ஸை தாண்டியும் ஏதேனும் பெர்சனல் வெஞ்சேன்ஸ் இருந்திருந்தா?..."

"பாஸ் அப்போ இது பெர்சனல் மோட்டிவ்னு கெஸ் பண்றீங்களா?"

"வை நாட்டுன்னு தான் என் கேள்வி?" என்றவன் இடைவெளி விட்டு,

"நீ என்ன பண்ணு, அந்த வர்மா குரூப்ஸ் அதாவது இந்திரனோட தாத்தா, அவரோட பசங்க குடும்பம் அவங்க எங்க இருக்காங்க அவங்களுக்குள்ள இருக்கும் ரிலேஷன்ஷிப் எப்படி இருக்குனு எல்லாமும் கலெக்ட் பண்ற. எல்லாமும் எனக்குத் தெரியணும். நான் சொல்ற ஆளைப் போய் பாரு. எனக்கு எல்லா இன்பெர்மேஷனும் அவசியம். ஓகேவா?"

"ஓகே பாஸ்..."

"நான் போய் சுபியை மீட் பண்றேன்..."

"சுபியா?" என்று அதிர்ந்த குகனுக்கு,
" அட்வகேட் சுபத்திரா டா..." என்றதும் தருணை ஒரு மாதிரி விந்தையாகவே பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான் குகன். ஏனோ இப்போது தருணிற்கே ஒரு சிரிப்பு வந்து சென்றது. 'சுபி...' என்று மீண்டும் சொல்லிப் பார்த்தான்.
*********************
அன்று சந்திர வர்மன் தன் மகனான ஹர்ஷவர்மனை அழைத்தார்.
"உன்கிட்ட நான் கொஞ்சம் மனம் விட்டுப் பேசணும் ஹர்ஷா. இதுல எனக்கு உண்மை மட்டும் தான் தெரியணும். சொல்லு ஹர்ஷா, உனக்கும் இந்திரனோட ஆக்சிடெண்டுக்கும் இல்ல சிந்து அந்தப் பொண்ணு ஸ்ரீ இறந்ததுக்கும் ஏதும் கனெக்சன் இருக்கா? இல்ல இந்திரனை அட்டகட்டியில அட்டாக் பண்ண வந்த கூட்டத்துக்கும் உனக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கா?" என்று கேட்ட தன் தந்தையிடம்,

"அப்பா என்னப்பா பேசுறீங்க? நான் உங்க பையன். ஏதோ கொலைக்காரனை விசாரிக்கிற மாதிரி விசாரிக்கிறீங்க? என்ன ஆச்சுப்பா உங்களுக்கு?" என்று தன்னுடைய அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஒருசேர வெளிப்படுத்தினான் ஹர்ஷவர்மன்.

"ஹர்ஷா, உனக்கு எங்கண்ணனைப் பற்றி எதுவும் தெரியாது. எனக்குத் தெரிஞ்சு அவரு எதுக்கும் எதுக்கும் பெருசா அலட்டிக்க மாட்டாரு. ஆனா அப்பேர் பட்டவர் இன்னைக்கு நம்ம பிசினெஸை சுத்தமா முடக்கணும்னு முடிவு பண்ணியிருக்காருன்னா நிச்சயம் இதுல ஏதோ காரணம் இருக்கு. மரியாதையா சொல்லு, உனக்கு இதுல ஏதேனும் பங்கு இருக்கா?"

"அப்பா மைண்ட் யுவர் லேங்குவேஜ். நான் அப்படி எதுவும் பண்ணல. எனக்கு அந்த அவசியம் எதுவும் இல்ல. ஆனா இப்போ என் கையில அந்த இந்திரன் சிக்கினா அவனை நான் சும்மா விடமாட்டேன். நம்ம பிசினஸை மொத்தமா காலி பண்ணிடுவான் போல? எவ்வளவு கடன், எவ்வளவு லாஸ் தெரியுமா? ஷேர்ஹோல்டேர்ஸ் எல்லோரும் விலக்கலாம்னு இருக்காங்கலாம்..."

"தெரியும். அதுக்கு தான் இப்போ உன்ன கூப்பிட்டுப் பேசுறதே. இந்த வாரத்துல நாம குடும்பமா அங்க போவோம். நடந்ததுக்கும் நமக்கும் எந்த விதமானச் சம்மந்தமும் இல்லைனு சொல்லுவோம். என் அண்ணனோட கோவத்தை நான் குறைக்கனும். நான் திருப்பவும் சொல்றேன் இதுல உன் பங்கு ஏதாவது இருந்தா நடக்கிறதே வேற..." என்று எச்சரித்து விட்டுச் சென்றார் சந்திர வர்மன். (வானிலை மாறும்...)
இவை எல்லாம் ஒரே நேரத்தில் நிகழும் சம்பவங்கள் என்பதால் இவ்வாறு non- linear பாணியில் எழுதியுள்ளேன். இனி சில எபிஸோட்ஸ் இவ்வாறு தான் வரும்...
 
கடைசில அடப்பாவி இவனா அவன் அப்படினு சொல்ற மாதிரி யாரோ ஒருத்தர் தான் இதெல்லாம் பண்றது... அது யார் ???? இது உங்கள கேக்கல ரைட்டர் ஜி நானா தேடிப்பார்த்து யோசிக்கிறேன் ?????
 
என்ன கமெண்ட் போடலாம்...?????? :unsure: :unsure: :unsure: :unsure: :p
நல்லாயிருக்கு நல்லா இல்லை பிடிக்குது பிடிக்கல இது மாதிரி எது வேணுனாலும் போடலாம்... ???
 
நல்லாயிருக்கு நல்லா இல்லை பிடிக்குது பிடிக்கல இது மாதிரி எது வேணுனாலும் போடலாம்... ???

நான் போட நினைக்கும் கமெண்ட்ஸ் , ஜான்வி, ரியா இரண்டு பேரும்,
போட்டாச்சு.. வேற ஒண்ணும் தோணலை...:p
 
கடைசில அடப்பாவி இவனா அவன் அப்படினு சொல்ற மாதிரி யாரோ ஒருத்தர் தான் இதெல்லாம் பண்றது... அது யார் ???? இது உங்கள கேக்கல ரைட்டர் ஜி நானா தேடிப்பார்த்து யோசிக்கிறேன் ?????
அது தானே காலங்காலமா சஸ்பென்ஸ் கதையில் நடக்கும் செய்தி?? தேடிப்பார்த்து கொஞ்சம் எனக்கும் சொல்லுங்க?
 
Top