Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 13

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
ராத்திரி நேரம் கண்ணு முழிச்சு ud போட்டுருக்கேன்!! படிச்சுட்டு கமென்டிட்டு போங்கோ!!

அத்தியாயம் 13

“ஹா... அடிக்குது குளிரு... ஹோ... துடிக்குது தளிரு... ஹா...

அடிக்குது குளிரு.... ம்ம்ம்... துடிக்குது தளிரு...”

கண்ணாடியின் முன்னே நின்றுக்கொண்டு சீப்பை இந்த கைக்கும் அந்த கைக்கும் மாற்றி மாற்றி தூக்கிப்போட்டு பிடித்தபடி ‘ஹா... ஹோ...’ என ஏற்ற இறக்கங்களோடு பாடிக்கொண்டிருந்தவன் பேரின்பன் என நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை!!! பாடிக்கொண்டிருந்தது காண்டீபன்!!



அவன் ஏதோ குஷியான மூடில் இருக்கிறான் என்பது அவன் கடுப்பு முகத்தை கழட்டி வைத்துவிட்டு கசமுசா பாட்டை பாடுவதிலேயே தெரிந்திருக்கும். அவன் மெலிதாய் சிரித்தாலே, ‘உங்களுக்கு சிரிக்க வருமா?’ என கேட்கும் அவன் மனைவி அவனை இந்த நேரத்தில் பார்த்தால்....???



குளித்து முடித்து அறைக்குள் பிரவேசித்த சுசீலா, உலகம் மறந்து அவன், ‘ஹா... ஹோ’ என கிறக்கமாய் சுருதி சேர்த்து பாடிக்கொண்டிருப்பதில் ஆணி அடித்ததை போல நின்றுவிட்டாள். தெரிந்த நான்கு வரியையே அப்படியும் இப்படியும் புரட்டிப்போட்டு பாடிக்கொண்டிருந்த காண்டீபன், ‘போதும் பாடியது’ என மனமிரங்கி சீப்பை ஸ்டைலாய் தூக்கி வீசிவிட்டு திரும்ப, அங்கே சுசீலாவை கண்டதும், ஒரு நொடி அதிர்ந்து, மறுநொடியே விறைத்து நின்றுக்கொண்டான்.



அவள் அப்போதும் மெலிதாய் திறந்த உதடுகள் மூடாது அவனையே பார்த்துக்கொண்டு நிற்க, “என்ன?” என்றான் தோரணையாய்.



“என்னனு கேட்குறேன்ல?” அவன் அதட்ட, அவள் அசரவில்லை.



“உங்களுக்கு இதெல்லாம் கூட வருமா?” என்றாள் கேலி சிரிப்பை வெளிக்காட்டாது மறைத்து.



“என்ன, இதெல்லாம் வருமா? உனக்கு காலேஜுக்கு நேரமாகலையா? முதல் நாளே லேட்டா போகலாம்ன்னு எண்ணமோ? சீக்கிரம் கிளம்பு, உன்னை கொண்டு போய் விட்டுட்டு நான் மில்லுக்கு போகணும்!” என நீளமாய் பேசிவிட்டு அறையை விட்டு தப்பித்து ஓடியே விட்டான். தன் பின்னால் சுசீலாவின் நகையொலி கேட்பது தெரிந்ததும், ‘ஐயோ, கதவை சாத்த மறந்துட்டியேடா? இத்தனை வருஷம் நீ கட்டிக்காப்பாத்துன கம்பீரம் எல்லாம் புஸ்ஸுன்னு போச்சே’ என பலமாய் நொந்தபடியே போக, ‘பரவால, பொண்டாட்டி தானே பாத்தா!’ என ஒருவாறாய் மனதை தேற்றிக்கொண்டான்.



‘காலேஜுக்கு போக வேண்டும்’ என காண்டீபன் சொன்னதில் இருந்து ‘எனக்கு படிக்க பிடிக்கல, நான் போக மாட்டேன்’ என விதவிதமாய் மறுத்தவள், பின்னே அவனை காக்கா பிடிக்க ஆரம்பித்தாள். அவன் வீட்டில் இருக்கும்போது எந்நேரமும் அவனுடனே ஒட்டிக்கொண்டு சுற்றுவது, அவன் தேவைகளை அவனுக்கு முன்னே முந்திக்கொண்டு செய்வது, இப்படி ஏதேனும் நடக்கையில் அவன் கொஞ்சமாய் சிரித்துவிட்டால் கூட, ‘அத்தான், நான் காலேஜ் போகலை அத்தான்’ என அவன் தாடை பிடித்து கெஞ்ச ஆரம்பித்து விடுவாள்.



அவள் கேட்கும் அழகில், ‘போகவேண்டாம்’ என சொல்லத்தான் அவனும் எண்ணுவான். ஆனாலும் இந்த கொஞ்சல், ஒட்டல் எல்லாம் அதன் பின் கிடைக்காதே! என்ற எண்ணத்தில் காட்ஜில்லா, காண்டாமிருகமாகவே சுற்றிக்கொண்டிருந்தான். மனைவியுடனான இந்த இலகுத்தன்மை அவனை குஷியாக்க சில நாட்களாகவே ஒரு மார்க்கமாய் தான் அலைகிறான். இன்றுதான் கையும் களவும் பிடிபட்டு, மனையாளிடமே மாட்டிக்கொண்டான்.



தன் காரில் சுசீலாவை காலேஜுக்கு அழைத்து வந்தவன், வண்டியை நிறுத்த, ‘போயே ஆகணுமா?’ என்ற கேள்வியோடு முகத்தை படுபாவமாய் வைத்துக்கொண்டிருந்தாள் சுசீலா. அதெல்லாம் சில நொடிகளே!!



கல்லூரி வெளியே தன் தோழியர் கூட்டத்தை கண்டதும், கார் கதவை திறந்துக்கொண்டு ஓடியே விட்டாள், அவர்களிடத்தில்.



“ஹே செல்வி, ஜாஸ்மினு, கோமு! எப்படிடி இருக்கீங்க?” ஆசையாய் அவர்கள் கையை பிடித்துக்கொண்டு சுசீலா சிரிக்க, அவர்களுக்கோ ஆச்சர்யம்.



“என்னடி புதுப்பொண்ணு, காலேஜுக்கு வந்துருக்க?”



சிரித்த சுசியின் முகம் சட்டென வாட, “படிச்சே ஆகணும்ன்னு சொல்லிட்டாங்கடி!! எவ்வளவோ கெஞ்சிப்பார்த்துட்டேன்!!” என சொல்ல,



நமட்டு சிரிப்பு சிரித்த தோழிகள், “நீ அவரை கவனிக்குற விதத்துல கவனிச்சுருக்க மாட்ட! அதான் உன் கெஞ்சல் எடுப்படல!!” என்றனர் விஷமமாய்!



“ம்கும்! போடி! அந்த மனுஷன் சரியான கல்லு! கரைக்கவே முடியாது!!” சுசீலா சொன்னதும், மீண்டும் ஓர் சிரிப்பலை.



“உன் கல்லுல இருந்து ஜொள்ளு வடியுது! முதல்ல அங்க பாரு!!” என ஒருத்தி சுசியின் முகத்தை திருப்பி கார் பக்கம் காட்ட, டிரைவிங் சீட்டில் இருந்த காண்டீபன், வைத்த கண் எடுக்காமல் சுசீலாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.



“இவர் ஏன் இப்படி பார்க்குறாரு!?” என வாய்விட்டே கேட்டவள், “சரி நான் போய் அனுப்பிட்டு வரேன்” என்றாள் தோழியரிடம்.



“ம்ம்ம்... போ போ!!!” கோரஸாய் அவர்கள் சுசீயை வழியனுப்ப, ஓட்டமாய் ஓடி வந்தாள் கார் அருகே...!



அதில் அவன் பார்வையில் மையல் கூட, “இன்னும் கிளம்பலையா?” என்றாள் சுசீலா!



“உங்களைத்தான்...”

பார்வையை மாற்றாது, “அழகா இருக்க!!” என்றான் குழைந்த குரலில்.



“ஹான்...!!”



சுசீலாவின் முகத்தில் இருந்து பார்வையை திருப்பாதவன், மையல் சிரிப்புடன், “காலேஜ் முடிஞ்சதும் நானே வந்து கூட்டிட்டு போறேன்!” என்று சொன்னதோடு, அவளை பார்த்து ஒற்றை கண் சிமிட்ட, முகம் குப்பென சிவந்து போனது சுசீலாவுக்கு.



அதை திருப்தியாய் கண்டவன், மேலும் விரிந்த புன்னகையுடன் காரை உயிர்ப்பித்து, “வரேன்!” என்றான். அவள் திகைத்து போய் நிற்கவே, “ஏதாவது சொல்லனுமா?” என்றான் உல்லாசமாய்.



‘ஆம்!’ என தலையசைத்து அருகே சென்ற சுசீ, “என்ன பார்வை இது? வெளில இருக்கப்போ இப்படி பார்த்து வைக்காதீங்க!!” என அதட்டல் போல சொல்லிவிட்டு, “எனக்கு எண்ணமோ பண்ணுது!” என்றாள் வெகு தயக்கமாய்!!!



அவள் தயக்கம், இவனுக்கு எதையோ சாத்தித்த உணர்வை கொடுக்க, “ஏய்!” அவள் கையை எட்டிப்பிடிக்க வந்தவனை விட்டு சட்டென பின்னே நகர்ந்தவள், வெட்கசிரிப்புடன் கல்லூரிக்குள் ஓடினாள்.



காண்டீபன் காதல் மன்னன் ரேஞ்சுக்கு தன்னை நினைத்துக்கொண்டு காரை செலுத்த, “ஜின்ஜின் ஜின்ஜின் ஜின்ஜின் ஜின்ஜின் நெஞ்சமெல்லாம் காதல், தேகமெல்லாம் காமம், உண்மைசொன்னால் என்னை மன்னிப்பாயா!” என இசைத்துக்கொண்டிருந்தார் இசைப்புயல்.



உற்சாகம் குறையாமல் மின்னல் வேகத்தில் காரை செலுத்திக்கொண்டிருந்தவன், அவர்களின் துணிக்கடையை தாண்டி செல்ல, ‘சுசீக்கு புதுசா சுடிதார் கொண்டு போய் குடுத்தா என்ன? காலேஜுக்கு போட்டுப்பாளே!’ என்ற எண்ணம் வந்ததுமே, கார் தன்னால் கடையின் பார்கிங்கில் சென்று நின்றது.



கடையின் முதலாளியை எதிர்ப்பாராததால் சிப்பந்திகள் சற்றே பரபரப்பாக, சூப்பர்வைசர் ஓடி வந்து, “தம்பி, மில்லுக்கு போகலிங்களா?” என்றார் ஆச்சர்யமாய்.



“போகணும்... கொஞ்சம் துணி வாங்கிட்டு போகலாம்ன்னு வந்தேன்!!” என்றான் கடை முழுதும் கண் பதித்தபடி.



‘துணி யாருக்கு?’ என்பதை தன் வயதால் யூகித்தவர், “பாப்பாவையும் அழைச்சுட்டு வந்துருக்கலாமே!” என்றார்.



மிகமெலிதாய் மென்னகை புரிந்தவன், அதற்க்கு பதில் சொல்லாது, “அப்பா எங்கே?” என்றார் கண்களால் தேடியபடி.



“அப்பாவா? இன்னும் சின்னையா கடைக்கு வரலிங்களே!”



“இன்னும் வரலையா? காலைலேயே கிளம்பினாரே!!” என்ற காண்டீபனுக்கு ‘இன்னுமா கடைக்கு வரலை அவரு?’ என்ற யோசனை.



“அது... தம்பி!! இப்போலாம் ஐயா அடிக்கடி வெளில போயிடுறாரு!” என அவர் தலையை சொரிய, “புதுசா ஒரு நிலம் கைக்கு வருது, அது விஷயமா போயிட்டு இருக்காரு! இன்னைக்கு போக போறதா என்கிட்டே சொல்லல, அதான் கேட்டேன்!!” என தந்தையை விட்டுக்கொடுக்காமல் சமாளித்தவன், ‘பிறகு மனைவியுடன் வருவதாய்’ சொல்லி கிளம்பிவிட்டான்.



காரில் ஏறி அமர்ந்தவனுக்கு குழப்பம்! தாமதிக்காது அலைபேசியை எடுத்து தந்தைக்கு அழைத்தவன், அவர் எடுக்கும்வரை பொறுமையை நீட்டிப்பிடித்தான்.



மறுப்பக்கம், “சொல்லு காண்டீபா!!”



“எங்கப்பா இருக்கீங்க?”



சில நொடி மௌனத்தின் பின், “நம்ம கடைல தான்டா! ஏன்?” என்றார் பதட்டமாய்!



‘பொய் சொல்றீங்களா அப்பா!?’ என திகைத்தது மனது.

அந்தநொடி காண்டீபனுக்குள் எந்த மாதிரியான உணர்வுகள் சூழ்ந்தது என வார்த்தைகளில் சொல்ல இயலாது.



“ஒன்னுமில்லப்பா!” என்ற சொல்லோடு அழைப்பை துண்டித்தவன், உயிரற்ற உடலென மில்லை சென்று சேர்ந்தான். முதல்முறையாய் தந்தையின் நடத்தையில் சந்தேகம் உண்டானது.



சோளக்காட்டில் இன்பனுக்கு இப்படி எந்த கவலையும் இல்லை. வயலுண்டு தன் புது மனைவியுண்டு என நாட்களை நிறைவாய் தள்ளிக்கொண்டிருந்தான்.

ஊடலும் கூடலுமாய் பொழுது புலர்வதும், சாய்வதும் நான்கு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருந்தது அவனுக்கு. புதிதாக இரு கறவை மாடுகள் வேறு அவர்கள் வீட்டை அலங்கரிக்க, நாளுக்கு நாள் முன்னேற்றம் மட்டுமே...!!



என்ன ஒரே குறை! இன்னமும் பேங்க் லோன் மட்டும் கிட்டவில்லை. இது, அது என ஏதேதோ காரணம் சொல்லி தள்ளிப்போய்க்கொண்டே இருக்க, ஒண்டிவீரர் கொடுத்த வட்டியில்லா கடன் கையில் இருக்கவே பொருளாதார ரீதியில் எந்த தொந்தரவும் வரவில்லை.



தங்கமும் சிவகாமியும் நாள்தவறாது கோகிலாவுக்கு அழைத்துவிடுவர். ‘எப்போமா வீட்டுக்கு வருவ?’ என்ற கேள்வி இல்லாது அவர்கள் அழைப்பு முடியாது.



“எப்போ மாமா வீட்டுக்கு போவோம்? சித்தியும் அம்மாயியும் பீல் பண்றாங்க!” என கோகிலா கேட்டால், “அறுவடை முடிஞ்சு போலாம்டா” என்றுவிடுவான் பேரின்பன்.



இரவு உணவை சமைத்து வைத்துவிட்டு இன்பனுக்காக காத்திருந்தாள் கோகிலா. இன்பனிடம் இருந்து கொஞ்சகொஞ்சமாய் சமையல்கட்டை கைப்பற்ற ஆரம்பித்திருந்தாள்.



அமைதியான இடத்தை தன் ஹாரன் ஒலியால் தொந்தரவு செய்துக்கொண்டே தன் இண்டுசுசுக்கியில் வந்து சேர்ந்தான் இன்பன். கையில் அவளுக்கென வாங்கிய தட்டுவடை செட் இருந்தது.



மொறுமொறுவென இருக்கும் தட்டையான எள்ளடைக்கு நடுவே காரச்சட்டினியும், பீட்ரூட் கேரட் துருவலையும் வைத்து அதன் மீது மற்றொரு எள்ளடையை வைத்து பர்கர் போன்று அப்படியே வாய்க்குள் தள்ளி ருசிப்பது கோகிலாவுக்கு இந்த ஊருக்கு வந்த பின்னே மிகவும் பிடித்துப்போன சிற்றுண்டியாய் மாற, அவளுக்காய் அடிக்கடி அதை வாங்கிக்கொண்டு வருவான் இன்பன்.



கொஞ்சலும் மிஞ்சலுமாய் கழிந்தது இரவு உணவுவேளை. பழைய கயிற்று கட்டிலை தூக்கி வெளித்திண்ணையில் போட்டான் இன்பன்.



“கோக்கிமா, கொஞ்ச நேரம் வெளில உட்காரலாம் வாடா!”

கொசு கடியில் இருந்து தப்பிக்க, சிறு சிமன்ட்டு தொட்டியில் சில இலைகளை போட்டு நெருப்பிட்டு புகைய விட்டான்.



கோகிலாவின் மடியில் தலை வைத்து சௌகர்யமாய் படுத்துக்கொண்டவன், அவள் முகம் பார்த்து சிரிக்க, “என்ன சிரிப்பு இது? கழுதை வயசுல மடில படுத்துக்கிட்டு...” என அவன் சிகை கோதியபடி சீண்டினாள் கோகிலா.



“மடி வேணும்ன்னு ஏங்குன வயசுல கிடைக்கலம்மா!” சட்டென இன்பனின் கடைவிழி மெலிதாய் பளபளத்தது. அவனை அதற்குமேல் வருந்தவிடாமல், “இன்னைக்கு எங்க அம்மா பேசுனாங்க” என பேச்சை மாற்றினாள் கோகிலா.



“ஹோ!! எப்படி இருக்காங்க?” என்றான் இன்பன் இலகுபோல். அன்னை தந்தையிடம் பேசாதே என கோகிலாவிடம் ஒரு பொழுதும் அவன் சொல்லவில்லை. அவளாகவே விலகி நிற்கிறாள். தனக்கு பிரியப்படாத உறவுகள் எனும்போதும், ‘எப்படி இருக்காங்க?’ என கேட்கும் பண்பு அவன்பால் அவளை ஈர்த்தது.



“நல்லா இருக்காங்க... சென்னைல இருந்த எங்க கார்மெண்ட்ஸ சேல் பண்ணிட்டாங்களாம்! அதுல வந்த காசுல இங்கதான் ஈரோடு பக்கமா இருக்க ஒரு அனாதை விடுதியை வாங்கி, அங்கேயே குழந்தைகளை கவனிச்சுக்கிட்டு செட்டில் ஆகபோறாங்களாம்!” என்றாள்.



அவள் சொன்னதை கிரகித்தவன், “ஹோ, நல்ல விஷயம்” என்றான்.



“அதுப்போக மீதி இருக்க பணத்தை என் அக்கவுண்ட்ல போடுறேன்னு அப்பா சொல்லிருக்காங்க! நான் உங்ககிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன் மாமா”



வானத்து நட்சத்திரங்களை நோட்டமிட்டுக்கொண்டிருந்தவன், இந்த பதிலில் அவள் முகம் பார்த்து, “என்கிட்டே கேட்க என்னமா இருக்கு? அது உங்க அப்பா சம்பாத்தியம்! அவருக்கு பின்ன எல்லாம் உனக்கு தானே! உனக்கு விருப்பம்ன்னா குடுக்குறதை வாங்கிக்கோ!” என்றான் இயல்பாய்.



அவன் பதிலில் மேலும் ஈர்க்கப்பட்டாள் கோகிலா. ‘உன் உரிமைக்கு என்னோடம் உத்தரவு கேட்காதே!’ என சொல்லிவிட்டான். அவள் முகத்தில் ஜொலிஜொலிப்பு கூட, அந்த இருட்டிலும் அது அவன் கண்களை விட்டு தப்பவில்லை.



“என்ன கோக்கி, மூக்கு மட்டும் பளபளன்னு மின்னுது!!” என்றான் வேண்டுமென்றே! நொடியில் சுருங்கிய அவள் முகம், “சும்மா சும்மா என் மூக்க பத்தியே பேசாதீங்க, சொல்லிட்டேன்!!” என வாடிப்போனது.



மடியில் படுத்தபடி, தன் நீண்ட கரத்தால் அவள் மூக்கை செல்லமாய் நிமிண்டியவன், “ஆ வூன்னா இந்த மூக்கு மேல கோவம் வந்துடுமே!” என்றான் மீண்டும் சீண்டலாய்.



இப்போது உண்மையிலேயே அவன் கோவித்துக்கொள்ள, மடியில் இருந்தவனை தள்ளிவிட்டு எழுந்துக்கொள்ள முயன்றாள்.

முயன்றால் மட்டுமே! ஆனால் அவளால் முடியவில்லை!



இடையோடு அவளை இறுகக்கட்டிக்கொண்டவன், தன் முகத்தால் அழுந்த தேய்த்து அவளுக்கு குறுகுறுப்பு மூட்ட, ‘அச்சோ.... விடுங்க மாமா’ என முனகிக்கொண்டே கூசி சிலிர்த்தாள் கோகிலா. போதும் போதும் எனும் அளவுக்கு அவளை பாடாய்ப்படுத்தியவன் ஒருவழியாய் ஓய, அமர்ந்திருந்தவள் இப்போது அவனை மஞ்சமாக்கி அணைத்து படுத்திருந்தாள்.



ஓராள் கட்டிலில் அவன் உருவமே நிறைய, அவளின் முழு பாரமும் அவன் மீதே!! உச்சந்தலையில் அழுத்தமாய் முத்தம் ஒன்றை அவன் வைக்க, தன்னை மீறி, “ஐ லவ் யூ மாமா” என்றிருந்தாள் கோகிலா.



“நானும் தான்!!” என்றவன் லேசாய் அவள் புறம் சாய்ந்து தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக்கொள்ள, இரவின் ஏகாந்தம் அவர்களுக்கு சுகந்தத்தை வீசியது.



ஏனோ வாழ்க்கை நிறைவாய் தோன்றியது அவனுக்கு. அந்த நிறைவு அவனை உணர்ச்சிவசப்பட வைக்க, தன்னிலை மறந்துக்கொண்டிருந்தான்.



சிறுது மௌனத்தின் பின், “எனக்கே எனக்குன்னு ஒரு உறவு! எனக்காக ஒருத்தி இருக்காங்குற இந்த நினைப்பு!!” என்ற இன்பன், நொடிக்கும் குறைவாய் வார்த்தையை நிறுத்தி, “நான் எப்படி உணருறேன்னு சொல்லி புரிய வைக்க முடியாதுடா” என்றான் அணைத்திருந்த கைகளில் அழுத்தம் கூட்டி!



“எப்பவுமே ஒரு விஷயம் நமக்கு கிடைக்காத வரை அது இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோங்குற நினைப்பு மட்டும் இருக்கும். அதே நமக்கு கிடைச்சுட்டு இருந்தது, ‘இனி உனக்கு கிடைக்காது’ங்குற நிலை வரும்போது, அதோட வலி ரொம்ப அதிகம்” என்றான். பலமுறை அன்னையை பற்றி கேட்டும் மனம் திறக்காதவன், இப்போது அவனே தொடங்கினான்.



“ஆறு வயசு வரைக்கும் எனக்கு அம்மா தான் எல்லாமே! இதோ, இதே வீட்ல அவங்க புடவை ஓரத்தை பிடிச்சுக்கிட்டே நான் சுத்தி திரிஞ்ச காலமெல்லாம் இன்னும் மனசுல பசுமையா நிக்குது! காலைல எழுந்துரிச்சா என் கண்ணு முன்னாடி எங்கம்மா இருக்கணும், நைட் தூங்குறப்போ அவங்க வாசம் என் பக்கத்துல இல்லன்னா உடனே முழிச்சுக்குவேன்! எனக்கு என் அம்மான்னா அவ்வ்வ்வ்வளவு இஷ்டம்!!!” என்றான் அழுத்தமாய்.



நடுவே குறுக்கிடாது அவனை பேச விட்டாள் கோகிலா.



“அப்பா என்னை பாக்கும்போதெல்லாம் திட்டுவாரு! அவர்க்கிட்ட இருந்து என்னை தப்பிக்க வைக்கவே எந்நேரமும் என்னோடவே இருப்பாங்க அம்மா! அம்மா தான் என் உலகம், அவங்க மட்டும் எனக்கு போதும்ன்னு அந்த ஆறு வயசுல நான் முழுசா நம்பியிருந்த ஒருத்தர், திடீர்ன்னு ஒரு நாள் என்னை விட்டு போனா??? அதுக்கு நான்தான் காரணம்ன்னு எல்லாரும் என்னை ஒதுக்கி வச்சா?? நான் என்ன ஆகிருப்பேன்னு நினைக்குற கோக்கி?”



ஆழ்ந்த மௌனம் நிலவ, அவனை அணைத்திருந்த பிடியை மட்டும் அவள் தளர்த்தவில்லை. மனதில் இருப்பதெல்லாம் வரட்டும் என இருந்துக்கொண்டாள்.



“அம்மா இறந்த அன்னைக்கு அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு கூட என்னால முழுசா உணர முடியல! அவங்க போன பிறகு, அவங்களையே சுத்தி சுத்தி பழகுன எனக்கு, யார்க்கிட்டயும் பசிக்குதுன்னு கூட சொல்ல தெரியல! எனக்கு சாப்பாடு குடுக்கனும்ன்னும் யாருக்கும் தோணல! கிட்டத்தட்ட முழுசா ரெண்டு நாள்.... அழுது அழுது, தொண்டை வத்தி, பசியில நான் மயங்கி விழுந்தப்போ தங்கம் அத்தை கண்ணுல பட்டேன்!!

செல்லம் அத்தை வீட்டை விட்டு போனது, தங்கம் அத்தே வீட்டுக்கார் இறந்தது, அடுத்த கொஞ்ச நாள்ல எங்கம்மா தவறுனதுன்னு வீடே தலைகீழா மாறிடுச்சு! இருந்த வேதனைல யாருக்கும் என்னை கண்டுக்க தோணல!!

தங்கம் அத்தே புண்ணியத்துல சாப்பாடு மட்டும் கிடைச்சுது! ஆனா, அம்மா!! அவங்க இடத்தை இப்போவரைக்கும் யாரும் எனக்கு முழுசா குடுக்கலையே!?

தங்கத்தே எனக்காக இருக்காங்க!! ஆனா என் மனசு என் அம்மாவை தான் தேடுது! காலைல அவங்க முகத்துல முழிக்கணும்! நைட்டான அவங்க கை பிடிச்சு தூங்கனும்! மனசு சரியில்லனா அம்மா மடியில படுத்து அழனும்!! இப்படி நிறைய தோணுதே!!!



சில நேரம் நானும் காண்டீபன் மாறி இருந்துருக்கலாம்ன்னு தோணும் தெரியுமா? அம்மா போனப்போ அவன் ஒரு மாச கைக்குழந்தை. அவனுக்கு அம்மான்னா யாருன்னு தெரியாது, அவங்க பாசம் எப்டி இருக்கும்ன்னு தெரியாது!! ஆனா எனக்கு எல்லாம் தெரியுமே!! நான் அனுபவிச்சுருக்கேனே!!!



அவனுக்கு அம்மா மட்டும் தான் இல்லை!! எனக்கு அப்பாவும் தானே இல்லை!!!” இந்த வரியை சொல்கையில் அவன் முதுகு அழுகையில் குலுங்க, சிறு பிள்ளையாய் அன்பிற்கு ஏங்கும் அவனை கண்டு அவள் கண்களும் கசிந்து வழிந்தது.



“அம்மா பாசமாவது கொஞ்சநாள் அனுபவிச்சேன்! அப்பா பாசம்ன்னா என்னன்னு இப்போவரைக்கும் உணர முடியலையே என்னால!! கண்ணு முன்னாடி பெத்தவரை வச்சுக்கிட்டு எவனோ ஒருத்தன் மாறி ஏங்கிப்போய் தானே நிக்குறேன்? சின்ன வயசுல காண்டீபனுக்கு அவர் பார்த்து பார்த்து எல்லாம் பண்றப்போ நான் எந்த அளவுக்கு ஏங்கிப்போயிருப்பேன்னு நான் வார்த்தைல சொன்னா புரியுமா அவருக்கு???”



“12த் ல நல்ல மார்க் எடுத்தும், எஞ்சினியரிங் கவுன்சிலிங்க்கு வர மாட்டேன்னு அவர் பிடிவாதம் பிடிச்சப்போ, அவர் மனசு மாறும்ன்னு காத்திருந்து காத்திருந்து ஏமாந்து, கடைசி நேரத்துல வேற வழி இல்லாம உள்ளூர் காலேஜ்ல போய் கேட்டப்போ பில்லாசஃபி மட்டும் தான் இருக்குன்னு சொன்னாங்க!! இஷ்டம் இல்லன்னாலும் படிப்புன்னு ஒன்னு கிடைச்சா போதும்ன்னு முடிஞ்சவரை படிச்சேன்!!



மில்லு பொறுப்பை என்னை பார்த்துக்க சொல்லி தாத்தா சொன்னப்போ, கூடவே கூடாதுன்னு அப்பா எதிர்த்தாரு! அவருக்கு பிடிக்காததை செஞ்சு கெட்ட பேரு வாங்கிக்க கூடாதுன்னு அங்கேயே வேலைக்கு சேர்ந்தேன்!! அவர் மனசு மாறும் மாறும்ன்னு நான் காத்திருக்க காத்திருக்க, ஒவ்வொரு நிமிஷமும் ‘நீ ஒரு முட்டாள்டா’ன்னு அவரோட ஒவ்வொரு நடவடிக்கையிலும் காட்டிடே இருக்காரே!!

முழுசா ஏமாந்து போய் தானே நிக்குறேன்!!!”



“நானே வேண்டாம்ன்னு நினைக்குற அளவுக்கு அவர் போவாருன்னு கனவுல கூட நினைக்கல!!! அப்பா தம்பியை விட்டு ஒருநாளும் போய்ட கூடாதுன்னு அம்மா என்கிட்ட வாங்குன சத்தியம், என்னை அவங்க தூக்கி போட்டு மிதிச்சாலும் தன்மானத்தை விட்டு இறங்கி போக வைக்குதே!!!



இன்னும் என்ன என்ன பேசியிருப்பானோ... அவன் அழுவது பொறுக்காது, “மாமா, இனி அவங்க இல்ல, இவங்க இல்லன்னு எந்த கவலையும் வேண்டாம்!! உங்களுக்கு நான் இருக்கேன்!!! எப்பவும் இருப்பேன்!! நீ இப்படி அழுதா நல்லாவே இல்ல!!! என் பட்டுத்தங்கம் தானே!! அழுகையை விட்டுட்டு தூங்க போலாம் வாங்க!!!!” என அவனை சமன்ப்படுத்தி அழைத்து சென்றாள் கோகிலா.



-வருவான்...
 
Last edited:
இன்பனின் கஷ்டத்தைப் படிச்சு எனக்கு ஒரே அழுகையா வருது
யோவ் சத்தியராஜ்
உன்னோட கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே
பொண்டாட்டி போனதும் பள்ளிபாளையத்துல வேற உறவு தேடிக்கிட்டு நீ ஜாலியா இருந்துக்கிட்டுத்தான் இருக்கே
ஆனால் எங்கள் பேரின்பனுக்குத்தான் அம்மா பாசத்துடன் அப்பாவின் பாசமும் கிடைக்காமல் போயிடுச்சு
 
Last edited:
ஒருவேளை பள்ளிபாளையம் உறவு தெரிஞ்சுதான் இன்பனின் அம்மா இறந்துட்டாங்களோ?
இல்லை புதுப் பொண்ணு மயக்கத்துல இப்போ இன்பனை கொல்லத் துடிக்கும் சத்தியராஜ் அப்போ பொண்டாட்டியைவே கொல்லத் துணிஞ்சுட்டாரோ?
 
ஆனால் தான் பெற்ற மூத்த மகன்னு கூட நினைக்காமல் பேரின்பனை சத்தியராஜ் எதுக்கு கொலை செய்ய சொன்னாரு?
ஒருவேளை இன்பன் இல்லாவிட்டால் பள்ளிபாளையம் வாரிசை மூத்த மகன்னு சொல்லிக்கலாம்ன்னு சத்தியராஜுக்கு பள்ளிபாளையம் ஐடியா கொடுத்திருப்பாளோ?
 
பள்ளிபாளையத்தின் துர்போதனையால்தான் பேரின்பனை ராசியில்லாதவன்னு சத்தியராஜ் நினைக்கிறாரோ?
உண்மை தெரியும் பொழுது சத்தியராஜ் என்ன செய்வார்?
 
Last edited:
Top