Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கண்ட கணமே பாகம் 2

Advertisement

பிரேமாமகள்

Well-known member
Member
பாகம் - 2

இடம்: அதே லண்டன் முருகன் கோயில்

நேரம்: எனக்கு ரொம்ப நல்ல நேரம்


தீபாராதனை எடுக்கும் போது, தெரியாமல் விரலைச் சுட்டுக் கொண்டேன். குங்குமம் வைக்கும் போது கை நடுங்குகிறது. ‘அய்யோ அமுதினி உனக்கு என்னமோ ஆச்சு! பறக்காத, பறக்காத, தரைக்கு வா! நீ சைட் அடிச்ச பல பேரில் அவனும் ஒருவன். அவன் கிண்டலா பார்த்தப் பலபேரில் நீயும் ஒருத்தி’ ன்னு என் மனசாட்சி அறிவுரை சொன்னதை நான் கேட்கும் நிலையில் இல்லை. இன்றென்னவோ, பிரகாரத்துக்கும் அன்னதான மண்டபத்துக்கும் பல மைல் தூரம் இருப்பதுபோல் நடந்தேன், நடந்தேன், சுவற்றில் நெற்றி முட்டிக் கொள்ளும் வரை பப்பரக்கான்னு நடந்திருக்கிறேன்.

லெக்கின்ஸ் ஆன்டிதான், ‘’என்னம்மா, சாமிக்கிட்ட பலமான வேண்டுதல் போல, சுவறெல்லாம் தொட்டு கும்புடுற’’ என்று என்னை நிதானத்துக்குக் கொண்டுவந்தார். ‘’ஈஈஈ’ ன்னு பல்லைக் காட்டி சமாளித்தபடி, அவரோடு சேர்ந்து பிரசாதம் வாங்க வரிசையில் நின்று புளியோதிரை வாங்கினேன். இன்றென்னவோ எனக்கு மிளகு இனித்தது, நிலக்கடலை கசந்தது. ஸ்பூனால் தட்டில் கோலம் போட்டபடி, ‘நம்மாளு’ எங்கேயும் இருக்காரா என்று ஓரக்கண்ணால் தேடினேன். தோ, தோ… அந்த கருப்புச்சட்டை, அவன் தான்! அவனே தான். ஒருக்களித்து நின்றவாறு யாரோ ஒரு அங்கிள்கிட்ட தீவிரமா பேசிக்கொண்டு இருக்கிறான்.

‘’டேய், திரும்புடா, உன்னை முழுசா பார்க்கணும். உன் கண்கள்ல வர்ற தீயை, மறுபடியும் என் கண்களால் தீண்டனும்’’.

கிடைத்த இடைவெளியில், மிக நிதானமாய் புளியோதரை சாப்பிட்டபடி (சோறு முக்கியம்ல) அவனை அளக்க ஆரம்பித்தேன்.

ராட்சஸன்! அப்படி கூப்பிடத்தான் என் மனசு துடிக்குது. பனமரம் மாதிரி நெடுநெடுன்னு வளர்ந்திருக்கிறான். அதற்கு ஏற்ற எடை. ஆறடி உயரத்தில் செதுக்கிவைச்ச கிரேக்க சிலை மாதிரி செம கட்டை. ரொம்ப கருப்பில்ல. ஆனா மூக்கும் முழியும் கத்தி மாதிரி கூர்மையா குத்தி எடுக்குது.

இப்படி ஒரு ஆண் பிள்ளையை வெட்கமே இல்லாமல் வெறிக்க வெறிக்க பார்க்கறது இதுவே இரண்டாவது முறை. (அந்த முதல் நபர், 12 ல எங்க இங்கிலீஷ் டீச்சர் கோபாலகிருஷ்ணன். புல்லாங்குழல் மட்டும்தான் இல்ல. அந்த காந்தக் குரலாலேயே எங்களைக் கட்டிக் போடுவார். எம்.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் முடிச்ச கையோடு எங்க பள்ளிக்கு ஆசிரியரா வந்தார். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வகுப்புமே கல்லுண்ட நரியாய், அவரிடம் மயங்கிக் கிடந்தோம். அந்த வயதில் அது தப்பாகத் தோன்றவில்லை).

‘’ஏம்மா! வெறும் தட்டை எவ்வளவு நேரம்தான் தடவுவாய்? வா, கை கழுவ போகலாம்’’ என்று லெக்கின்ஸ் ஆன்டி, என் சைட்டிங் சீனுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆச்சு, சாப்பிட்டு முடிச்சாச்சு. இனி கிளம்ப வேண்டியதுதான். ஆனாலும் போக விருப்பமில்லை. என் தானைத்தலைவன் இன்னும் அந்த அங்கிள்ட்ட கடலை போட்டுக்கொண்டு இருந்தான். ஆனா அந்த கண்கள் மட்டும் என்னைத் தொட்டுத் தொட்டு தடவிக் கொண்டிருந்தது எனக்கு தெரியாது.

‘அய்யோ சொக்கா! எனக்கில்லை, இவன் எனக்கில்லை’ என்று தருமி மாதிரி புலம்ப ஆரம்பித்துவிட்டேன். எதாவது செஞ்சாகனுமே! ஆங்.. ஐடியா! லெக்கின்ஸ் ஆன்டியிடம், ‘ இந்த டிரஸ்ல நீங்க அவ்வளவு அழகா இருக்கீங்க, வாங்க செல்பி எடுக்கலாம்’ என்று கூப்பிட்டு நிக்கவைத்து , பேக்ரவுண்ட்ல அவன் தெரியுமாறு போட்டோ எடுக்க முயற்சித்தேன். ‘’டேய், வளர்ந்து கெட்டவனே! கொஞ்சம் முன்னாடி வாயேன். கேமரா கட்டத்துக்குள் உன்னைக் கொண்டுவர முடியவில்லை’’.

இந்த ஆன்டி வேற, ‘கேமராவை கீழ பார்த்தமாதிரிப் புடி, என் டிரஸ் டிசைன் ஒழுங்கா தெரியலை’ன்னு புலம்பல்ஸ். ‘ரொம்ப முக்கியம்’ன்னு மனசுக்குள் திட்டிக்கொண்டே போட்டோ எடுத்தால், என் கிரகம், ஆன்டி என் தலையில் கொம்பு வைக்க முயற்சித்ததில், ராட்சஸன் முகம் சரியா தெரியவில்லை. மறுபடியும் போட்டோ எடுக்கப் பார்த்தால், அவன் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

கூட்டம் முக்கால்வாசி கலைந்துவிட்டது. இனியும் இங்க நின்றுகொண்டு படம் ஓட்ட முடியாது. வழக்கமாக பிரதோஷம் வரும் எல்லோருக்கும், என்னை நல்லா தெரியும். இனி நடையைக் கட்ட வேண்டியதுதான். ஆன்டி ஏதோ பேசிக்கொண்டு வந்தாங்க. நானும் மண்டையை ஆட்டியபடியே அவரோடு சேர்ந்து வெளியே வந்தேன்.

பேருந்து நிறுத்தத்தில் டிசம்பர் மாத குளிர் என்னைக் கொன்று தின்னும் வேகத்தோடு தாக்கியது. அவன் வரும் வரைக்கும் இங்கேயே நிற்கலாம்தான். ஹலோ சொல்லலாம்தான். பேரு தெரிஞ்சா முகநூலில் தேடிப்பிடிச்சு கடலை போடலாம்தான். ஆனா இதெல்லாம் சினிமாலதான் நடக்கும். நான் ஒன்றும் ஹீரோயின் கிடையாது. சிலபல நிமிடங்கள் பார்த்த (பார்க்க மட்டுமா செஞ்சேன்???) ஒருத்தனை நினைத்து ஏங்கும் அளவுக்கு நான் முட்டாளில்லை. ஆனாலும் மனசு ஏனோ கிடந்து தவிக்கிறது.

பஸ் வர, ஏறி அமர்ந்ததும் என் மொபைல் ரிங்டோன் பாடியது,

ஆனாலும் இந்த மயக்கம் ஆகாதே நெஞ்சே உனக்கு.

போனாலும் நின்னு சிரிக்கும், போகாது இந்த கிறுக்கு.’

காதல் வளரும்
 
Last edited:
என்னடா இது இப்படி நீ பாத்துட்டு இருக்கும் போது கூட அவன் பார்த்ததை நீ கவனிக்கலை.... என்ன மா நீ பாகுறத்தை ஒழுங்கா பாக்க வேண்டாமா....
 
என்னடா இது இப்படி நீ பாத்துட்டு இருக்கும் போது கூட அவன் பார்த்ததை நீ கவனிக்கலை.... என்ன மா நீ பாகுறத்தை ஒழுங்கா பாக்க வேண்டாமா....

ஹா ஹா… ஹா… புள்ள மயக்கத்தில் இருக்கு. அதான் கவனம் ஒரு நிலையில் இல்லை. :LOL:
 
Top