Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப் பாவை 5....

Advertisement

அத்தியாயம் 5:



ஓவியப்பெண்ணின் முகம் கூடத் தெரியாதவாறு கருப்பாக மாறி இருந்ததை அதிர்ச்சியோடு கவனித்தாள் ஸ்வேதா. அந்தப் பழங்காலப் பெட்டியின் அதிர்வு வேறு அவளை பயமுறுத்துயது. ஏனோ அதைத் திறந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இத்தனை நாட்கள் அவ்வளவு ஏன் வருடங்கள் அந்தப் பெட்டி அங்கேயே தான் இருந்திருக்கிறது. ஆனால் அதைத் திறந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றியதில்லை. கைகள் நடுங்கின. மனத்தை திடப்படுத்திக்கொண்டாள். கூடத்தை எட்டிப் பார்த்தாள் அம்மா டி வியில் ஆழ்ந்திருந்தாள். தம்பி எங்கேயோ வெளியில் போய் விட்டான் போலிருக்கிறது.



அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தால் என்ன? அப்பா இருக்கும் போது கூட இந்தப் பெட்டியை அவர் திறந்து பார்க்கவில்லை என்று நிச்சயமாக மனதில் ஏதோ ஒன்று சொன்னது. அப்படி இருக்க அதைத் தான் திறக்கலாமா என்ற பதற்றம் தொற்றிக்கொண்டது.



"நீ தான் திறக்கணும் இதை ஸ்வேதா! இது செண்பகவல்லியோட சொத்து! அதனால இனி இது உன் சொத்து! உம் திற" என்று யாரோ குரல் கொடுப்பது போல இருக்க திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்தாள். யாரையுமே காணோம். தன்னை அறியாமல் ஓவியப்பாவையின் படத்தைப் பார்த்தவள் மீண்டும் திடுக்கிட்டாள். இப்போது அவள் முகம் முன்னிலும் பொலிவாக சிரித்தபடி இருந்தது. கருமை காணவில்லை. பயத்தில் வியர்த்துக் கொட்டியது ஸ்வேதாவுக்கு. தன்னைச் சுற்றி என்னென்னவோ நடக்கிறதே? இவை அனைத்தும் நன்மைக்கா தீமைக்கா? எனக்கு வழி காட்டுவது போல இருக்கும் இந்த ஓவியப்பாவை என் தெய்வமா அல்லதா பேயா? செண்பகவல்லி யார்? அவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? பயத்தில் கூட இத்தனை கேள்விகள் எழுந்தன. யாரையாவது கேட்டுத்தான் செய்ய வேண்டும். மனம் அவளை அறியாமல் ராகுலைக் காண விழைந்தது. ஃபோனைச் சுற்றி அவனிடம் பேச ஆரம்பித்தாள் ஸ்வேதா.



அங்கே தொழிலதிபர் ராஜலிங்கத்தின் வீட்டை தனது கூச்சலால் இரண்டு செய்து கொண்டிருந்தான் அருண்.



"என்ன நெனச்சுக்கிட்டு நீங்க யார் வீட்டுக்கோ பொண்ணு கேட்டுப் போனீங்க? நான் எந்தப் பொண்ணையும் பார்க்கவும் இல்லை ஆசைப்படவும் இல்லை! உங்க மரியாதையைக் குறைச்சுக்கிட்டு நீங்க ஏம்மா போனீங்க? எனக்குக் கல்யாணம் செஞ்சு வைங்கன்னு நான் கேட்டேனா?" என்று கத்தினான். வீட்டு வேலைக்காரர்கள் அவன் முன்னால் நிற்க பயந்து வீட்டுக்குள் பதுங்கி விட்டனர். அம்மா ராஜேஸ்வரியோ இது என்ன புதுக்கதை? என்பது போலப் பார்த்திருந்தாள்.



"என்னங்க? நம்ம தம்பி எந்தப் பொண்ணையும் சொல்லலையாமே? அப்ப நாம பொண்ணு கேட்டது யாரை? உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்?" விடாமல் துளைத்தாள்.



தாய்க்குமே விஷயம் தெரியாது என்பதைப் புரிந்து கொண்ட அருண் மேலும் கத்தினான்.



"என்னப்பா நடக்குது இந்த வீட்டுல? அம்மாவுக்கும் தெரியல்ல எனக்கும் தெரியல்ல! ஆனா நீங்க பொய் சொல்லி அவங்க கிட்ட கிட்டத்தட்ட பிச்சை கேட்டிருக்கீங்க? அப்படி எனக்கு என்ன குறைச்சல்? இதுக்கு பதில் சொல்லாம நான் விட மாட்டேன்" என்றன்.



இரு தலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தார் ராஜலிங்கம். தன் மகன் அருண் மேல் அவருக்கு எப்போதுமே பாசம் மட்டுமல்ல மரியாதையும் உண்டு. மிகவும் கெட்டிக்காரன். வெளி நாட்டில் போய் படித்து விட்டு வந்து அவன் பிசினசைக் கவனிக்கத் தொடங்கிய பிறகு தொழில் பல மடங்கு வளர்ந்திருக்கிறது. மனிதர்களை தரம் பிரிக்கத் தெரிந்தவன். பொய் சொன்னால் எளிதில் கண்டு பிடித்துவிடுவான் என நினைத்து பேசாமல் இருந்தார்.



அப்பாவின் சங்கடம் கலந்து அமைதி மகனை வேதனைக்குள்ளாக்கியது. கத்துவதை நிறுத்தி விட்டு அமைதியாக தந்தையின் அருகில் வந்தான்.,



"அப்பா! எனக்கு விபத்து நடந்து நான் பொழைச்சதுல இருந்து நீங்க நீங்களாவே இல்ல! எனக்குத் தெரியாம என்னென்னவோ செய்யறீங்க? எங்கேயோ போறீங்க வரீங்கன்னு கேள்விப்படறேன். உங்களுக்கு என்னப்பா பிரச்சனை? யாராவது உங்களை பிளாக்மெயில் பண்றாங்களா?" என்று சரியாக பாயிண்டைப் பிடித்தான்.



என்ன பதில் சொல்வது எனத் தோன்றாமல் விழித்தார் ராஜலிங்கம்.



"எதுன்னாலும் சொல்லுங்கப்பா! என்ன பிரச்சனை உங்களுக்கு? எதுக்காக முன்ன பின்ன தெரியாத வீட்டுக்கு பொண்ணு கேட்டுப் போய் அவமானப்பட்டீங்க? எங்களுக்குத் தெரியாத ரகசியம் ஏதாவது உங்க வாழ்க்கையில இருக்கா? சொல்லுங்கப்பா! நாம மூணு பேரும் ஒருத்தருக்கோருத்தர் உண்மையா இருக்கோம்னு தான் இத்தனை வருடமா நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். என் நினைப்புல மண்ணைப் போட்டுடாதீங்க" என்றான். அவன் குரல் கம்மி தொண்டை கரகரத்தது.



"அருண் கண்ணா! உடம்பை அலட்டிக்காதப்பா! இப்பத்தான் நீ பொழைச்சு எழுந்து வந்திருக்க! எல்லாத்தையும் நான் விவரமா அப்புறமா சொல்றேன். அந்தப் பொண்ணை உனக்குக் கட்டி வெச்சுட்டேன்னா என் கவலை எல்லாம் தீர்ந்திரும்" என்றார்.



மீண்டும் கோபம் வந்தது அருணுக்கு.



"அப்படி என்னப்பா அந்தப் பொண்ணு கிட்ட ஸ்பெஷல்? இந்த உலகத்துல அவளை விட்டா வேற பொண்ணா இல்லை? எனக்குத் தெரிஞ்சாகணும் சொல்லுங்க! இல்லை நான் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன். திரும்ப அமெரிக்கா போயிருவேன். " என்றான். அவனது கரங்களைப் பிடித்துக்கொண்டார் ராஜலிங்கம். அவர் கண்களில் இருந்து கண்ணீர் பொங்கியது. அதைக் கண்ட தாயும் மகனும் திடுக்கிட்டனர். பிசினசில் எத்தனையோ பிரச்சனைகள் வந்திருக்கின்றன. அருண் பிறந்த புதிதில் தொழிலே நசிந்து போகும் நிலை வந்தது. அப்போது கூட மனம் தளராமல் துணிந்து போராடியவர் ராஜலிங்கம். இப்படி கண்ணீர் விடுவதைப் பார்க்க முடியாமல் திகைத்தனர்.



தந்தை அமர்ந்திருந்த நாற்காலின் கீழே அமர்ந்து அவரது கரங்களைப் பிடித்துக்கொண்டான்.



"எனக்கு உங்களை நல்லாத் தெரியும்! சாதாரண விஷயத்துக்கு இப்படி கலங்கறவர் நீங்க கிடையாது. என்னவோ பெரிய விஷயம் இருக்கு. எதுவானாலும் சொல்லுங்கப்பா! அப்புறம் நான் எதுக்கு மகன்னு இருக்கணும்?" என்றான் மெதுவாக.



"அருண்! நீ உயிரோட இருக்கணும்னா நாம இந்தக் கல்யாணத்தை செய்யுறது தான் ஒரே வழி" என்றார்.



வாயைப் பிளந்தான் அருண்.



"அப்ப நான் நினைச்சா மாதிரி இது ஏதோ பிளாக் மெயில் தான். யாருப்பா அவங்க? உங்களை இப்படி பிளாக் மெயில் பண்றது? இப்பவே நாம போலீசுக்குப் போவோம் வாங்க! அவ்வளவு பெரிய ரவுடியா அவங்க?" என்று படபடவெனப் பொரிந்தான்.



"என்னங்க! அவன் இவ்வளவு சொல்றான் இல்ல? போங்க போயி போலீஸ்ல புகார் குடுங்க! மிரட்டிக் கல்யாணம் பண்ண இது என்ன விளையாட்டா?"



"நீங்க ரெண்டு பேரும் விஷயம் புரியாம படபடன்னு பேசாதீங்க! என்னை ஒருத்தர் மிரட்டுறது உண்மை தான், ஆனா அவரு ரவுடி இல்ல சாமி" என்றார்.



மீண்டும் வாயைப் பிளந்தான் அருண்.



"சாமியா?"



"ஆமா ராஜி! நம்ம மகன் இன்னைக்கு உயிரோட இருக்கக் காரணமே அந்த மகான் தான். அவரு தான் அருணுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தாரு"



"டாக்டருங்களோட கடும் முயற்சியாலயும் உங்க பிரார்த்தனையாலயும் தான் நான் உயிர் பிழைச்சனே தவிர எந்த மகானாலயும் இல்ல"



"இல்லப்பா! அன்னைக்கு என்ன நடந்ததுன்னு உனக்குச் சொன்னாத்தான் புரியும்! நீயும் கேளு ராஜி" என்று மூன்று மாதத்துக்கு முந்தைய நினைவில் தொலைந்தார் ராஜலிங்கம்.



அன்று வெள்ளிக்கிழமை மனைவியின் கையால் காலை உணவை அருந்தி விட்டு மிகவும் மகிழ்ச்சியாக அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் ராஜலிங்கம். அவரது மகிழ்ச்சி இப்போது இரட்டிப்பு ஆகி விட்டது. காரணம் மகன் அருண் படித்து விட்டு பிசினசை மிகவும் நன்றாகக் கவனித்துக்கொள்கிறான். இன்னும் இரு ஆண்டுகளில் அவனிடம் முழுப்பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு பேரனையும் பேத்தியையும் கொஞ்சிக்கொண்டு காலத்தைக் கழிக்கலாம் என திட்டமிட்டார் அவர். தந்தையும் மகனும் வேறு வேறு நேரங்களில் தான் அலுவலகம் கிளம்புவார்கள். காலை ஒன்பது மணிக்கெல்லாம் அருண் ஆபீசில் இருக்க வேண்டும் என்பதை ஒரு சட்டமாகவே கடைப்பிடித்து வந்தான் அவன். அப்போது தான் கீழே வேலை செய்யும் பணியாளர்களும் சரியான நேரத்தில் வருவார்கள் என்பது அவன் கணக்கு. அன்றும் காலை எட்டு மணிக்குகிளம்பிப் போய் விட்டான்.



பத்து மணி வாக்கில் ராஜலிங்கம் கிளம்பும் போது அவரது செல்பேசி சிணுங்கியது.



"சார்! நான் மேனேஜர் சம்பந்தம் பேசுறேன். நம்ம தம்பிக்கு ஆக்சிடெண்ட் ஆயிரிச்சு. இங்க பெரிய ஆஸ்பத்தியில வெச்சிருக்கோம். உடனே வாங்க" என்றார் சம்பந்தம். அந்த வினாடியில் மூச்சே என்று விடும் போலிருந்தது அவருக்கு.
Nice ep
 
Top