Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை 7....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 7:



ராஜலிங்கம் சற்றே யோசிக்கவும் ராஜேஸ்வரி முந்திக்கொண்டாள்.



"இந்தப் பொண்ணுக்கு மாங்கல்ய பலம் ரொம்ப நல்லா இருக்கும் போல இருக்குங்க! அதான் அந்த மகான் இந்தப் பொண்ணையே அருணுக்கு முடிக்கணும்னு சொல்லியிருக்காருன்னு நினைக்கறேன்" என்றாள்.



அவளது பதிலால் வாயடைத்துப் போயினர் தந்தையும் மகனும். ஆனாலும் ராஜலிங்கத்தின் மனதில் ஒரு வண்டு குடைந்து கொண்டே இருந்தது. அதை வாய் விட்டும் சொன்னார்.



"அப்படீன்னா தாலி கட்டுன உடனே நம்மை எதுக்கு புலிப்பட்டிக்கு வரச் சொன்னாரு? சாந்தி கல்யாணம் கூட நடக்கக் கூடாதுன்னு ஏன் சொன்னாரு?" என்றார்.



"எல்லாத்துக்கும் ஏதோ காரணம் இருக்குங்க! எல்லா ரகசியத்தையும் சித்தர்கள் நம்ம கிட்ட சொல்ல மாட்டாங்க! இதை எங்கிட்ட நீங்க முதல்லயே சொல்லியிருந்தீங்கன்னா நான் அந்தப் பொண்ணு கால்ல விழுந்தாவது இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சிருப்பேனே?" என்றாள்.



தாயை இமைக்காமல் பார்த்தான் மகன்.



"என்னடா அப்படிப் பார்க்குற? நீ கெடந்த கெடை எனக்கு நினைப்பிருக்குடா! எல்லா டாக்டரும் கையை விரிச்சப்புறமும் நீ இப்படி எங்க கிட்டப் பேசிக்கிட்டு இருக்கேன்னா அதுக்கு அந்த சித்தரோட அருள் தான் காரணம். சும்மா நிக்க்காம அந்தப் பொண்ணுக்கு உன் மேல அன்பு வரும்படியா செய்" என்றாள்.



அதற்கு மேல் தாங்க முடியாமல் கோபம் வந்தது அருணுக்கு. மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டான். தாயின் அருகில் அமர்ந்து அவரது தோளை அணைத்துக் கொண்டான்.



"அம்மா! என் மேல இருக்குற பாசத்துல நீங்க இப்படிப் பேசுறீங்கன்னு எனக்குப் புரியுது. நீங்களும் நல்லாப் படிச்சவங்க தான் நான் சொல்றதையும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கம்மா"



"என்னப்பா சொல்லப் போற சொல்லு அதையும் கேப்போம்"



"அம்மா இந்தக் காலத்துல ஏமாத்துற சாமியார்கள் ரொம்ப ஜாஸ்தியாயிட்டாங்க! டிவியைப் போட்டா அவங்க கதை தான் சிரிப்பா சிரிக்குது. அப்படி இருக்கும் போது இந்த சாமியாரை எப்படிம்மா நம்பச் சொல்ற?"



ஏதோ சொல்ல வந்த தாயை கையைக் காட்டி நிறுத்தி விட்டு மேலும் பேசினான்.



"நான் இன்னும் பேசி முடிக்கல்லம்மா! அப்பா சொல்றது எல்லாமே கண்கட்டு வித்தை தான். பொருட்காட்சியிலயும் மத்த இடங்கள்லயும் மேஜிக் பண்றவனால கூட இந்த மாதிரி பொருட்களை வரவழைக்க முடியும். எனக்கு தலையில ஏற்பட்ட காயம் ஆறுனது அந்த ஆள் கொடுத்த மூலிகைனால தான்னு எப்படி நம்புறது? அது உங்க பிரார்த்தனைக்கு இரங்கி கடவுள் செஞ்ச கருணையாகவும் இருக்கலாம் இல்ல?"



ராஜலிங்கம் யோசிக்கத் தொடங்கினார். அருண் தொடர்ந்தான்.



"எப்படி எனக்கு விபத்து நடக்கப் போற எடத்துக்கு அவரு சரியா வந்தாரு? என்னை இடிச்ச லாரிக்காரன் எங்கே? இப்படி நிறையக் கேள்வி வருதும்மா! நீங்க சொல்ற லாஜிக் படி அவரு மிகப்பெரிய ஆளாவே ஏன் மகானாகவே இருக்கட்டும். அப்ப அவரால முடியாத காரியம்னு ஒண்ணு இருக்குமா? இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ஏன் அவரே தன்னோட மந்திர சக்தியை பயன் படுத்தாம இருக்காரு? அதுவும் போக புலிப்பட்டிங்குற ஊரோட பேரே ஏன் வரக்கூடாதுன்னு சொல்றாரு?"



அருண் ஆணித்தரமாகக் கேட்ட கேள்விகள் அறிவைத் துளைத்தன. தனது வாதம் எல்லாம் அடிப்பட்டுப் போய் விட்டதை உணர்ந்து பேசாமல் அமர்ந்திருந்தனர் பெரியவர்கள் இருவரும்.



"அப்பா! அந்த சாமியார் சொல்றா மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்தப் பொண்ணை உடனே அவரோட ஊருக்கு அழைச்சுக்கிட்டு வரச் சொல்லுறதைப் பார்த்த அந்தப் பொண்ணைக் குறி வெச்சி தான் ஏதோ சதி பின்னப்பட்டிருக்குன்னு நினைக்கறேன். " என்றான்.



"ராஜி! எனக்கும் இவன் சொல்றது சரீன்னு தான் படுது! அவரு பணத்தையோ பொருளையோ பெரிசா நினைக்காதவரா இருக்கலாம். ஆனா வேற ஏதோ ஒண்ணு அவருக்குத் தேவைன்னு நினைக்கறேன். நீ சொல்றா மாதிரி நம்ம மகனோட நீண்ட ஆயுள் தான் அவரது குறிக்கோள்னா அதை நம்ம கிட்ட சொல்லிட்டே செய்யலாமே? இந்தப் பொண்ணைத்தான் கட்டணும்னு ஏன் சொல்லணும்? மாங்கல்ய பலம் நிறைஞ்ச பொண்ணு இவ ஒருத்தி தானா என்ன?" என்றார் தன் பங்குக்கு.



"இப்பத்தான் நீங்க சரியா யோசிக்கறீங்க" என்றான் அருண் பாராட்டாக.



"இப்ப என்ன செய்யறதுங்க?"



"நாம பொண்ணு கேட்டுப் போன விவரத்தை அப்படியே மறந்துருவோம். நல்ல வேளை அவங்க வீட்டுலயும் இதுக்கு சம்மதம் சொல்லல்ல! கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணை அவர் கிட்ட ஒப்படைக்குறது என்னக்கென்னவோ சரியாப்படல்ல" என்றார் ராஜலிங்கம்.


"அப்பா சொல்றது தாம்மா கரெக்ட்! நாம இந்த விஷயத்தை இத்தோட மறந்துருவோம். அந்தப் பொண்ணோட வாழ்க்கையில இனி நாம குறுக்கிடவே கூடாது" என்றான் அருணும்.



வேறு வழியே இல்லாமல் இருவரும் சொல்வதை சரியென அரை மனதாக தலையசைத்து ஏற்றுக்கொண்டாள் ராஜேஸ்வரி.



வாரம் ஒன்று ஓடி மறைந்தது. ராஜலிங்கத்தின் வீட்டில யாரும் ஸ்வேதா வீட்டுக்குப் போய் தொந்தரவு செய்யவில்லை. அவர்களும் நாகரீகமாக இவர்களை அழைத்துப் பேசவும் இல்லை. நல்லவேளை பெரிய குழப்பம் தானாக சரியாகி விட்டது என நினைத்துக்கொண்டாள் ராஜேஸ்வரி. அவள் அப்படி நினைக்கவும் அலுவலகத்திலிருந்து அவள் கணவன் அழைக்கவும் சரியாக இருந்தது.



"என்னங்க?"



"நீ உடனே கிளம்பி பெரிய ஆஸ்பத்திரிக்கு வா! அருணுக்கு திரும்ப உடம்புக்கு முடியல்ல" என்றார். அவரது குரலில் இருந்து எதையும் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் அந்தச் செய்தி ராஜேஸ்வரியை அசைத்துப் பார்த்தது.



"சாமி! நாங்க தப்பு பண்ணிட்டோம் சாமி! எங்க மகனை காவு வாங்கிடாதீங்க! நீங்க சொல்றபடியெல்லாம் கேக்குறோம்" என அலறினாள். அடித்துப் பிடித்துக்கொண்டு விரைந்தாள்.



"என்னங்க என்ன ஆச்சு அருணுக்கு? திரும்பவும் ஆக்சிடெண்டா? சொல்லுங்க" என்று கத்தியபடி மயங்கி விழுந்தாள். தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தி அவளை கண் விழிக்க வைத்தனர். கண் திறந்தவள் பக்கத்து அறையில் முழுசாக அருண் படுத்திருப்பதைப் பார்த்ததும் தான் மூச்சே வந்தது அவளுக்கு.



"ஏங்க இப்படிப் பொய் சொல்லிப் பதற வெச்சீங்க? " என்று அழுது கொண்டே கேட்டாள்.



"இல்லை ராஜி! உன்னைப் பதற வைக்கணும்னு நான் சொல்லல்ல! மதியம் நீ குடுத்து விட்ட சாப்பாட்டை நானும் அருணுமா சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். அப்ப திடீர்னு அருணுக்கு விக்கல் வரவே தண்ணி குடிப்பான்னு சொல்லி நான் பார்க்குறதுக்கள்ள ரத்த வாந்தி எடுத்து அப்படியே மயங்கி விழுந்துட்டான்."



"ஐயையோ"



"எனக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல! அப்படியே வாரித்தூக்கிப் போட்டுக்கிட்டு இங்க வந்துட்டேன். வந்து கொஞ்ச நேரத்துல இவன் கண் முழிச்சுட்டான், ஆனா அதுக்குள்ள நீ வந்து ..." என்று டாக்டர் வர நிறுத்தினார்.



"சார்! உங்க மகனுக்கு வயத்துல புண்ணு வந்திருக்கு. ஆக்சிடெண்டுல அடிபட்டு நிறைய மாத்திரை மருந்து சாப்பிட்டார் இல்லியா அதனால இப்படி வரது சகஜம் தான். அதுக்காக நீங்க பயப்பட வேண்டாம். காரமில்லாத சாப்பாடு, எண்ணெய் இல்லாம சாப்பிட்டா ஒரு மாசத்துல சரியாயிரும், நீங்க எப்ப வேணும்னாலும் அவரை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போகலாம்" என்று சொல்லி நகர்ந்தார்.



விலாவில் இடித்தாள் ராஜேஸ்வரி.



"என்னங்க! எனெக்கென்னவோ பயம்மா இருக்கு"



"அதான் பயப்பட ஒண்ணுமில்லேன்னு டாக்டரே சொல்லிட்டாரே"



"அது இல்லீங்க! இத்தனை நாள் இல்லாமல் இப்ப திடீர்னு ஏன் நம்ம மகன் ரத்த வாந்தி எடுக்கணும்? இது அந்த சாமியார் பேச்சை நாம கேக்காததுக்கு கடவுள் குடுத்த தண்டனையா இருக்குமோன்னு மனசு அடிச்சுக்குது"



"ஏதாவது உளறாம இரு" என்று சொல்லி விட்டு மகனின் அறையில் நுழைந்தனர் பெற்றோர்.



கண்களை மூடி படுத்திருந்த மகனைப் பார்த்ததும் நெஞ்சுக்குள் ஏதோ ஒரு துக்கம் அடைத்தது. வாழ வேண்டிய வயதில் இப்படி ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறானே? இவனுக்கு மட்டும் ஏன் இப்படிக் கடவுள் சோதனைகளைக் குடுக்கிறார் என எண்ணியபடி மகனின் நெற்றி முடிகளை ஒதுக்கி விட்டார் ராஜலிங்கம். கண்களைத் திறந்தான் அருண்.



"பேசாம படுப்பா! ரொம்ப களைப்பா இருக்கா?" என்றார்.



"அப்படி ஒண்ணுமில்ல! வயத்துல தான் லேசா வலி. அதுவும் இப்ப இல்ல! வாங்கப்பா வீட்டுக்குப் போகலாம்" என்று எழுந்தான்.



மூவரும் வீடு வந்து சேர்ந்தன. அப்போது கூட ராஜேஸ்வரி எதுவும் பேசவில்லை.



"ஏம்மா! ஒரு மாதிரி இருக்கீங்க? எனக்கு ஒண்ணுமில்ல! கவலைப்படாதீங்க" என்றான் மகன். அவனையே வெறித்துப் பார்த்தார் அன்னை.



"ராஜி! சும்மா இருக்க மாட்ட? அவனைக் குழப்பாம போ" என்று திட்டினார் ராஜலிங்கம்.



"அப்பா! அம்மாவுக்கு என்ன குழப்பம்? சொல்லுங்க? ஆஸ்பத்திரியியல் வெச்சும் சரி இப்ப வீட்டுக்கு வந்துட்ட நிலையிலயும் சரி அவங்க பேசவே இல்லையே? என்னம்மா ஆச்சு?" என்றான்.



"வந்துப்பா அருண் வந்து நான் எதுவும் சொல்லலைப்பா! சொன்னா உங்களுக்கு கோவம் தான் வரும்"



"இல்ல சொல்லுங்க"



"உனக்கு உடம்பு சரியில்லாமப் போனதுக்குக் காரணம் நாம அந்த சாமியார் பேச்சை மதிக்காதது தான்னு தோணுதுப்பா! நான் வேணும்னா அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போயி அவளையே உனக்குப் பேசி முடிச்சிடட்டுமா?" என்றாள். அவளது கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன.



தாயின் தவிப்பை உணர்ந்து கொண்டான் அருண். தனக்கு ஏதேனும் ஒன்று என்றால் அதைத் தாங்க இருவராலும் முடியாது என்ற நிலை தெற்றெனப் புரிந்து கொண்டது அவன் உள்ளம். மேலும் சிந்தனையைத் தவிர்த்தவன் தாயை நோக்கினான்.



"அப்படி செஞ்சா நீங்க நிம்மதியா இருப்பீங்கன்னா அப்படியே செய்ங்கம்மா" என்றான். மகனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள் ராஜேஸ்வரி. அதே நேரம் நிலைப்படியில் ணெங்கென்று தலையை இடித்துக் கொண்டாள் ஸ்வேதா.
 
Top