Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை 4....

Advertisement

Nice ep
அத்தியாயம் 4:



வீட்டின் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த தம்பதிகளை நம்பவே முடியாமல் பார்த்தாள் காமாட்சி. நடப்பதெல்லாம் கனவா நினைவா என்றே தெரியவில்லை. இன்று காலையில் கோயிலுக்குப் போகும் போது கூட என் மகளுக்கும் மகனுக்கும் நல்ல வழி காட்டு என்று பிரார்த்தித்தாள் அந்தத் தாய். ஆனால் அது இத்தனை சீக்கிரம் நிறைவேறும் என அவளும் நினைக்கவே இல்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை. ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றுவது காமாட்சியின் பழக்கம். வீட்டில் நிவவும் குழப்பம், மகனின் மெடிக்கல் ஆசை, மகளின் திருமணம் என பல கோரிக்கைகளை இரண்டே இரண்டு எலுமிச்சம் பழத்தில் முடிக்கப்பார்த்தாள் காமாட்சி. எல்லாம் தெரிந்த அந்த உலக மாதாவும் மௌனச் சிரிப்போடு அமர்ந்திருந்தாள். வீட்டினுள் நுழைந்த அவளை ஃபோன் கூப்பிட்டது. ஃபோனில் யார் பேசினார்கள் என்றே தெரியவில்லை ஆனால் சொன்ன விவரம் இது தான். இன்னும் சிறிது நேரத்தில் ஸ்வேதாவைப் பெண் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்பது தான் அதன் சாராம்சம்.



யாரோ தங்களது நிலை தெரிந்து இப்படி ஒரு வேடிக்கை விளையாட்டை நடத்துகிறார்கள் என்று தான் நினைத்தாள் காமாட்சி. ஆனால் அந்த ஃபோன் வந்து அடுத்த பத்தாவது நிமிடம் இரு ஆட்கள் வந்தனர்.



"ஐயா அனுப்பினாரம்மா! வீட்டுல ஒட்டடை அடிக்குற வேலை கடைக்குப் போகுற வேலை இப்படி ஏதாவது இருந்தா சொல்லுங்கம்மா. ஐயா வரதுக்குள்ள வீட்டை நல்லா ஆக்கச்சொல்லியிருக்காங்க" என்றான் வயதானவன்.



வாயடைத்துப் போயிற்று காமாட்சிக்கு. வந்தவர்கள் மட மடவென ஹாலில் இருந்த பொருட்களை சுத்தம் செய்து ஒட்டடை அடித்து என வேலையில் இறங்கினர். ஸ்வேதாவுக்கும் பிரசாந்துக்கும் எதுவும் புரியவில்லை.



"அம்மா! எதுக்கு இப்ப வேலையாட்களை வரச் சொன்ன? இவங்களுக்கு சம்பளம் குடுக்க பணம் இருக்கா? நானும் தம்பியும் இந்த வேலையைச் செய்ய மாட்டோமா" என்று படபடத்த ஸ்வேதாவை வெறித்தார் அன்னை.



"அப்ப நீ யாரையும் வரச் சொல்லையா?" என்ற மொட்டையான கேள்வி மகளை மிரட்டியது.



"அம்மா! என்ன சொல்ற நீ? நான் யாரையும் வரச் சொல்லல்ல! யாரு வரேன்னு சொல்லியிருக்காங்க? எதுக்கு இத்தனை அமர்க்களம்? சொல்லும்மா" என்றாள் அழுத்தமாக. இருவரையும் அடுப்பங்கரைக்கு அழைத்துச் சென்றாள் காமாட்சி.



"இப்பத்தான் கொஞ்சம் முன்னால யாரோ ராஜலிங்கம்னு ஒருத்தர் பேசினாரு. அவரு உன்னைப் பெண் கேட்டு வரதா சொன்னாரு ஸ்வேதா! நானும் கூட நம்ம ராகுல் தம்பியயோட அப்பான்னு நெனச்சி சரின்னு சொல்லீட்டேன். அப்புறம் பார்த்தா இவங்க ஐயா சொன்னாங்கன்னு வந்து நிக்கறாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல்ல" என்றாள் பரிதாபமாக.



"என்னம்மா நீ? இந்தக் காலத்துல யாரையாவது நம்ப முடியுதா? நான் ராகுல் வீட்டு ஆளுங்களை வரச் சொன்னா உங்கிட்ட சொல்லாம இருப்பேனா? இவங்களை முதல்ல வெளிய அனுப்பு! எனக்கு என்னவோ பயம்மா இருக்கு" என்றாள்.



பிரஷந்த் போய் அவர்களை டீ குடித்து விட்டு ஐயா வந்த உடன் வருமாறு அனுப்பி வைத்தான். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே தங்க நிற பென்ஸ் கார் ஸ்வேதா வீட்டு வாசலில் நின்றது. வாயை மூடவும் மறந்து பார்த்திருந்தனர் தாயும் மக்களும். ஜரிகை வழியும் சேலை அணிந்த ஒரு பெண்மணி நகைக்கடையையே அணிந்து வந்தவள் போல காணப்பட்டாள். அவரது அருகில் கோட் சூட்டில் கம்பீரமாக இறங்கினார் ராஜலிங்கம். வா என்று கூடச் சொல்லத் தோன்றாமல் அப்படியே பார்த்தனர் மூவரும். சுவாதீனமாக உள்ளே நுழைந்த அவர்கள் சோஃபாவில் அமர்ந்து கொண்டனர்.



"வணக்கம்! என் பேரு ராஜலிங்கம்! இண்டஸ்டிரியலிஸ்ட் ராஜலிங்கம்னா எல்லாருக்கும் தெரியும்" என்றார்.



அயர்ந்து போனாள் ஸ்வேதா.



குளிர் பான ஃபேக்டரி, சமையல் மசாலா ஃபேக்டரி, காரின் உதிரி பாகங்கள் செய்யும் தொழிற்சாலை, என்று ராஜலிங்கம் கால் வைக்காத துறையேயில்லை. தென்னிந்தியாவின் விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களில் ஒருவர் என கேள்விப்பட்டிருந்தாள் ஸ்வேதா. அவரது ஃபோட்டோக் கூட எப்போதோ பத்திரிக்கையில் பார்த்த நினைவு. அவரா என்னைப் பெண் கேட்டு வந்திருக்கிறார்? என மலைத்துப் போனாள்.



"என்னங்க! இவங்க என்ன இப்படி முழிக்கறாங்க? நாம வரதை நீங்க சொல்லையா? வந்தவங்களை வான்னு சொல்லக் கூட ஆளில்லையா இங்க?" என்று எரிந்து விழுந்தாள் அந்த அம்மாள்.



சட்டென சுதாரித்துக்கொண்டு “வாங்க வாங்க” என வரவேற்றாள் காமாட்சி.



"இதைப்பாருடி! வந்தகிருக்கறவங்க பெரிய இடமாட்டம் தெரியுது. நீ என்ன பேசணும்னாலும் அப்புறமாப் பேசிக்கலாம். முதல்ல தலையைச் சீவி நல்லா பின்னிக்கிட்டு பட்டுப்புடவையை எடுத்துக்கட்டிக்கிட்டு பொண்ணா லட்சணமா வா!" என்றாள் காமாட்சி.



"உக்காருங்க! நீங்க திடீர்னு இப்படிக் கிளம்பி வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல்ல! காப்பி சாப்பிடுங்க" என்று உபசரித்தாள். ஏதோ வாயைத் திறக்கப் போன மகளை கண்களால் மிரட்டி உள்ளே அனுப்பி வைத்தாள்.



"இதைப்பாருங்கம்மா! எனக்கே எதுவும் புரியல்ல! திடீர்னு பெண்ணு பார்க்கப் போறோம் கிளம்புன்னாங்க நானும் அப்படியே வந்துட்டேன். " என்றாள் அந்த அம்மாள் வெகுளியாக.



தொண்டையைக் கனைத்துக்கொண்டூ ராஜலிங்கம் ஆரம்பித்தார்,



"உண்மை தான் தங்கச்சி! உங்க அண்ணிக்குக் கூடச் சொல்லல்ல! என் மகன் பேரு அருண். வெளி நாட்டுல போயி படிச்சுட்டு வந்துட்டு இப்ப என்னோட பிசினசைக் கவனிச்சுக்குறான்., அவன் நம்ம பாப்பாவை எங்கியோ வெச்சுப் பார்த்திருக்கான். அப்பலருந்து கட்டுனா இவளைத்தான் கட்டுவேன்னு அடமா இருக்கான். எங்களுக்கு இருக்குறது ஒரே மகன். அதான் உடனே பொண்ணு கேட்டு வந்துட்டோம்" என்று அளந்து விட்டார்.



காமாட்சியின் முகத்தில் வெளிச்சம். இறந்து போன தன் கணவனால் தான் இந்த யோகம் தன் மகளுக்குக் கிடைத்திருக்கிறது என நினைத்துக்கொண்டாள்.



"ரொம்ப சந்தோஷம்! என் மக வெறும் டிகிரி தான் படிச்சிருக்கா! வேலைக்குப் போயி சம்பாதிக்குறா! எங்களால முடிஞ்சதை நாங்க செய்வோம்"



"எங்கிட்ட அளவுக்கு அதிகமாவே பணம் இருக்கு. என் மகன் கல்யாணத்துக்கு லட்சக்கணக்குல செலவழிக்கத்தான் ஆசை. ஆனா பாருங்க அவனோட ஜாதகத்துல கல்யாணம் சிம்பிளா நடக்கணும்னு இருக்கு. காதும் காதும் வெச்சா மாதிரி கல்யாணத்தை முடிச்சிருவோம். அப்புறமா கொஞ்ச நாள் கழிச்சு ரிசப்ஷனை தாஜ் கோரமண்டல்ல வெச்சு குடுத்திடலாம். " என்றார்.



கல்யாணமே முடிவானது போலப் பேசிக்க்கொண்டிருந்த இருவரையும் பார்த்தாள் ராஜலிங்கத்தின் மனைவி.



"என்னங்க இன்னும் பொண்ணையே நாம பார்க்கல்ல! அதுக்குள்ள நீங்க எங்கியோ போயிட்டீங்க?" என்று நினைவு படுத்தினாள்.



"இதோ வரச் சொல்றேங்க" என்று வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருக்குமாறு மகனைப் பணித்து விட்டு மகளிடம் ஓடினார். சாதாரண சிந்தெடிக் புடவையில் நின்றிருந்தாள் மகள்.



"என்ன ஸ்வேதா நீ? பட்டுப்புடவை இல்ல கட்டிக்கிட்டு வரச் சொன்னேன். சரி பரவாயில்ல! இந்த நகைகளைப் போட்டுக்கோ! என்று ஒரு செயினையும் இரு மோதிரங்களையும் அணிவித்தாள் காமாட்சி.



"அம்மா! நீ என்ன நினைப்பில இருக்க? யாரோ எவரோ? பொண்ணு கேட்டு வந்தா உடனே சம்மதம் சொல்லிடுவியா? என் விருப்பம் என்னன்னு தெரிய வேண்டாமா உனக்கு? விடும்மா என்னை" என்று கோபக்குரலில் பேசினாள் ஸ்வேதா.



"எல்லாம் எனக்குத் தெரியும்! வந்தவங்க முன்னாடி நீ பத்ரகாளி மாதிரி கத்தாதே! பொண்ணா லட்சணமா அடக்க ஒடுக்கமா வா! மீதத்தை நான் பார்த்துக்கறேன்" என்று அதட்டி விட்டு மகளை அழைத்துக்கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தாள். எளிய புடவையில் மிகவும் லட்சணமாக ஜொலித்த ஸ்வேதாவை அந்த அம்மாளுக்கு முதல் பார்வையிலேயே பிடித்து விட்டது.



"நீ தான் என் மகன் ஆசைப்பட்ட பொண்ணா? நல்லாத்தான் இருக்கே? உன் பேர் என்ன?"



"ஸ்வேதா"



"பேரும் அழகாத்தான் இருக்கு. என்னங்க நாம வாங்கிட்டு வந்த நகையை பொண்ணுக்குக் கொடுங்க" என்றாள் அந்த அம்மாள்.



இனியும் சும்மா இருந்தால் இப்போதே மகனை வரவழைத்துத் தாலி கட்டி வீட்டுக்குக்குக் கூட்டிப் போகக் கூட இவர்கள் தயங்க மாட்டார்கள் என நினைத்துக்கொண்டாள் ஸ்வேதா. ஜாடையாக தம்பியின் முகத்தைப் பார்த்தாள். அவனுக்கும் அப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும். தலையை ஆட்டினான் அவன்.



"சார்! என்னை மன்னிக்கணும்! திடீர்னு வந்தீங்க! உங்க மகன் என்னை விரும்புறாருன்னு சொல்லி நிச்சயம் வரைக்கும் போயிட்டீங்க! ஆனா எனக்கு எந்த விஷயமுமே தெரியாது. உங்க மகனை நான் பார்த்தது கூட இல்லை. "



"அதனால என்னம்மா? இதோ ஃபோட்டோவில பாரு! ஆறடி உயரத்துல அம்சமா இருப்பாம்மா என் மகன்" என்றார் ராஜலிங்கம்.



"அது மட்டும் இல்லைங்க! நான் தான் இப்ப எங்க வீட்டோட பிரெட் வின்னர். அதாவது என் சம்பளத்தை நம்பித்தான் எங்க வீடே இருக்கு. என் தம்பியை மெடிக்கல் படிக்க வைக்கணும். எங்க அம்மாவுக்கு ஆப்பரேஷன் செய்யணும். இதுக்கெல்லாம் தான் என் மனசுல இடமிருக்கு. கல்யாணத்தைப் பத்தி நான் நெனச்சுக்கூடப் பார்த்ததில்லை" என்றாள்.



அம்மாளின் முகம் சுருங்கியது. ஆனால் ராஜலிங்கம் சமாளித்துக்கொண்டார்.



"அதனால என்னம்மா? கல்யாணமாயிட்டா அவங்களும் எங்களுக்கு சொந்தக்காரங்க தானே? உன் தம்பியையும் அம்மாவையும் நாங்க பார்த்துக்க மாட்டோமா?"



"வெறும் பேச்சுக்கு வேணும்னா அது நல்லா இருக்கும். ஆனா நடைமுறைக்கு ஒத்து வராது. என் அம்மாவும் தம்பியும் முன்னபின்ன சம்பந்தமில்லாதவங்க தர்ர பணத்துல காலம் கழிக்க சம்மதிக்க மாட்டாங்க" என்றாள்.



"உன்னை மருமகளா ஏத்துக்கிட்டப்புறம் நாங்க முன்னைப் பின்ன தெரியாதவங்களம்மா? உன் கழுத்துல தாலி ஏறினதும் நம்ம கம்பெனியிலயே உன்னை பெரிய போஸ்டுல உக்கார வெச்சிடுவேன். அதுல வர பணத்தை உங்க அம்மாவுக்கும் தம்பிக்கும் குடேன். அது உன் பணம் தானே? நான் உன்னை அவசரப்படுத்தல்ல! மூணு நாள் டயம் தரேன். நிதானமா யோசிச்சு இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணு" என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டனர் இருவரும். அவர்கள் போனதும் காமாட்சி பிடித்துக்கொண்டாள்.



"உன் மனசுல என்னடி நெனச்சுக்கிட்டு இருக்கே? நம்மால இது மாதிரியான எடத்தைக் கற்பனை செஞ்சு கூடப் பார்க்க முடியாது. படியேறி வந்து கேக்குறாங்க! திமிராப் பேசுற? " என்றாள்.

எதுவும் பேசாமல் காப்பி டம்ளர்களை உள்ளே கொண்டு போய் வைத்தாள்.



"அம்மா! கொஞ்சம் நடைமுறை உலகத்துக்கு வம்மா! அவங்க எவ்வளவோ பணக்காரங்க! பெரிய பெரிய எடத்துல இருந்து பொண்ணு கொடுக்க போட்டி போடுவாங்க! ஆனா அவங்க ஏன் நம்மைத் தேடி வரணும்? அவங்க மகனை நான் பார்த்ததே இல்ல! அப்படி இருக்க அவரு என்னை எங்கே எப்படி பார்த்தாராம்? அதையும் சொல்ல மாட்டேங்கறாங்க"



மகளின் கேள்விக்கு பதில் இல்லாமல் மௌனமானாள் காமாட்சி.



"அது மட்டும் இல்லம்மா! என்னவோ கடைக்குப் போயி திடீர்னு சேலை வாங்குறா மாதிரி அந்தம்மாவைக் கூட்டிக்கிட்டு வந்திருக்காரு. கல்யாணம்னா அவ்வளவு சின்ன விஷயமா? எனக்கு எங்கியோ நெருடுது" என்றான் பிரஷாந்த்.



"ஏன் ஸ்வேதா! ராகுல் தம்பியை மனசுல வெச்சுக்கிட்டு இவங்களை வேண்டாம்னு சொல்லிட்டியா கண்ணு?"



தலையில் அடித்துக்கொண்டாள் ஸ்வேதா.



"அம்மா என் மனசுல காதல் இல்ல! எனக்கு ராகுலைப் பிடிக்கும். நாங்க நல்ல நண்பர்கள் அவ்வளவு தான்." என்றாள். அப்போது யாரோ லேசாக சிரிக்கும் சத்தம் கேட்டது ஸ்வேதாவுக்கு. தாயின் முகத்தைப் பார்த்தாள். அது இறுகி இருந்தது. தம்பியோ எங்கேயோ வெறித்தபடி இருந்தான். அப்படியானால் சிரித்தது யார்? மனதில் எழுந்த நடுக்கத்தை மறைத்துக்கொண்டு அம்மாவைப் பார்த்தாள் ஸ்வேதா.



"எக்கேடோ கெட்டுப் போங்க! நான் சொல்றதை கேட்டாத்தானே? இப்படி ஸ்ரீதேவி தேடி வரும் போது முகத்தை திருப்பிப்பாங்களா யாராவது?" என்று புலம்பியபடி சோஃபாவில் அமர்ந்து விட்டாள்.



குழப்பமான சிந்தனைகளோடு சாமி அறைக்குப் போன ஸ்வேதாவை அதிர்ச்சி தாக்கியது. அந்த ஓவியப்பெண்ண்ணின் முகம் முழுவது கருப்பாக மாறி இருக்க அவளது வாளால் ராகுல் என்ற எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன. அதன் அருகே இருந்த பழங்கால மரப்பெட்டி அதிர்ந்து அடங்கியதை நம்ப முடியாமல் வெறித்தபடி இருந்தாள் ஸ்வேதா.
 
Top