Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 17

Advertisement

niranjana subramani

Well-known member
Member
17.



ஆயிற்று இதோடு ஆதிலிங்க மூர்த்தி யோகாம்பிகை திருமணம் முடிந்து நான்கு வருடங்கள்.

“ ஆதி சீக்கிரம் போயி யோகத்தை கூட்டிடுவாடா.
சாயங்காலம் 5.30 மணிக்கு கோவிலுக்கு போனவ. இப்போ மணி ஏழரை ஆகப்போகுது இன்னும் வீட்டுக்கு வரல. இருட்டுருச்சு எப்படி வருவா????. போடா போய் கூட்டிடுவாடா” என வடிவழகி ஆதியிடம் கூற

“ ம்ப்ச் அம்மா உங்க மருமகளுக்கு வேற வேலை இல்ல. இந்நேரத்துக்கு அந்த ஒற்றை கால் மண்டபத்துல உட்கார்ந்துருப்பா. இல்லைன்னா அந்த குளத்து கரையில உட்கார்ந்து எத்தனை மீனு இருக்குன்னு எண்ணிகிட்டு இருப்பா.


இந்த ஆறு மாசமா உங்க மருமகளை சாயங்காலம் கோவில்ல இருந்து கூட்டிட்டு வருவதுதான் என் வேலையா இருக்கு. சரி போயி கூட்டிட்டு வரேன்” என சலித்துக்கொண்டே ஆதிலிங்க மூர்த்தி கிளம்ப,

“ பார்த்தியாடி உன் மகனுக்கு கொழுப்பை. நீ போயி கூட்டிட்டு வர சொல்லலைனாலும் முதல் ஆளா போயி அவன் பொண்டாட்டிய கோவிலில் இருந்து கூட்டிட்டு வந்து, பொண்டாட்டி கையால சாப்பிட்டாத்தான் அவனுக்கு சாப்பாடே இறங்கும். இப்போ என்னடான்னா என்னமோ உனக்காகத்தான் போயி கூப்புடுறமாதிரி சலிச்சுக்கிட்டு போறான்” என சன்ன சிரிப்புடன் குலசேகரன் கேட்க,

“ கண்ணு வைக்காதிங்க. இவுங்க ரெண்டுபேரும் இப்படி அன்னியோன்னியமா இருக்குறத பார்த்து யாரு கண்ணு பட்டுச்சோ. இவுங்க கல்யாணம் ஆகி நாலு வருஷமாகியும் இன்னும் ஒருவாரிசும் வரல.

அந்த கவலைலையே தினமும் கோவிலுக்கு போயிடுறா. பாவம்ங்க யோகம் எல்லா விரதமும் இருக்கா. தினமும் கண்ணீர் விட்டுட்டே இருக்கா.

எங்க ஆதிக்கு இவ அழகுறது தெரிஞ்சா சத்தம் போடுவான்னு இவன் வீட்டுல இல்லாத நேரமா பார்த்து பூஜை அறையில உட்கார்ந்து அழறா. நாம எவ்வளவு சமாதானம் பண்ணினாலும் கேட்கமாட்டேங்குறா”
என வடிவழகி புலம்ப

“ என்ன செய்ய சொல்ற வடிவு. குழந்தை செல்வம் கடவுளா பார்த்து கொடுக்குறது. இதுக்கு நாமளோ இல்ல நம்ம மருமகளோ கவலை பட்டு ஒன்னும் ஆகப்போறது இல்ல.

அந்த ஆண்டவன் கொடுக்குறப்ப கொடுக்கட்டும். அதுவரைக்கும் நாம கவலை இல்லாம, இருக்குற ஒரு வாழ்க்கையை நமக்காக சந்தோசமா வாழணும்ன்னு நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன்
கேட்டதானே” என குலசேகரனும் தன பங்குக்கு வடிவழகியிடம் புலம்ப

“ நீங்க என்ன சொல்லி என்னங்க செய்றது. மருமக சாதாரணமா இருக்க நினைச்சாலும் சொந்தகாரங்க ஊருகாரங்க எல்லாம் விசேஷம் இருக்கா, மருமக இன்னும் சும்மாதான் இருக்காளான்னு கேள்வி கேட்டு நம்ம வேதனையை அதிகப்படுத்துறாங்க. உடமைப்பட்டவங்க நாமளே சும்மாதானே இருக்கோம் மத்தவங்களுக்கு என்னவாம்???” என தன் வடிவழகி ஆதங்கத்தை வெளிப்படுத்த

“ சரி நீ கவலைப்படாம போய் சாப்பிட்டு தூங்கு. அதான் ஆதிபோயிருக்கான்ல யோகத்தை கூட்டிட்டு வந்துடுவான்” என கூறி குலசேகரன் தன் அறைக்கு செல்ல, வடிவழகியும் எழுந்து சென்றார்.

ஒற்றை கால் மண்டபத்தில் கலங்கிய விழிகளால் எங்கோ வெறித்து கொண்டு அமர்ந்து இருந்த யோகாம்பிகையின் அருகில் அமர்ந்த ஆதிலிங்க மூர்த்தி,

“ என்னம்மா இன்னைக்கு என்ன நடந்தது ????. யாரு என்ன சொன்னாங்க???” என மிருதுவான குரலில் ஆதி வினவ

“ ஒண்ணுமில்லை மாமா” என கலங்கிய விழிகளை துடைத்துக்கொண்டு,

“ ரொம்ப நேரமாகிடுச்சா!!! வாங்க போகலாம்” என கூறி யோகாம்பிகை கிளம்ப எத்தனிக்க,

“ ஒரு நிமிஷம் இரு. நான் கொஞ்சம் உன்கிட்ட பேசணும்” என ஆதி கூற பதில் எதுவும் கூறாது அமைதியாக அமர்ந்தாள் யோகாம்பிகை.

" இங்க பாரு யோகா சும்மா குழந்தை குழந்தைன்னு அதை பத்தியே ரொம்ப யோசிக்காத. ஆண்டவன் நமக்கு எப்போ கொடுக்கணுமோ அப்போ கொடுத்துட்டுப்போறான் சரியா. எனக்கு நீதான் முக்கியம். வர வர ரொம்ப கவலைப்பட்டு சாப்பிடாம உன் உடம்பை கெடுத்துகிட்டு எல்லாரையும் கஷ்டப்படுத்துற”

“ ஏன் மாமா உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா???”

“ இங்கப்பாரு நான் உன்னைய கல்யாணம் செஞ்சுக்கிட்டது எனக்கு ஒரு வாரிசு வரணும்ன்னு இல்ல.

என்னோட வாழ்க்கையை உன்னோட சந்தோசமா வாழ்றதுக்குத்தான். நானும் இப்பவரைக்கும் சந்தோசமாதான் இருக்கேன்.

அதோட அறுபது வயசுலயே எத்தனையோ பேரு குழந்தை பெத்துக்குறாங்க. உனக்கு இப்போதான் இருபத்தி ஆறு வயசு.

அதனால ரொம்ப கவலைப்படாம மாமா நாளைக்கு டெல்லி போறதுக்கு, எல்லா ஏற்பாட்டையும் பண்ண சமத்தா இப்போ கிளம்புற சரியா” என ஆதிலங்க மூர்த்தி கூற

“ என்னது டெல்லிக்கா!!!!!... எதுக்கு மாமா????. நாளைக்கு போறத இப்போதான் சொல்றிங்க. அத்தை மாமா கிட்ட சொல்லிட்டீங்களா???.


வர எத்தனை நாள் ஆகும்???. நீங்க இல்லாம நான் மட்டும் எப்படி தனியா இருக்குறது????. நானும் வரேன் மாமா…….” என யோகாம்பிகை கெஞ்ச

“ அடியே கொஞ்சம் கொஞ்சமா கேள்வி கேளு. டெல்லிக்கு நாளைக்கு காலைல 5 மணிக்கு கிளம்புறேன். அம்மா அப்பா கிட்ட இப்போ போயிதான் சொல்லணும்.

அப்புறம் போயிட்டு நாலு நாளல்ல வந்துடுவேன். நான் போறது சிவலிங்க மூர்த்தியை பார்குறதுக்குடா.”

“ சிவா மாமாவையா???. என்ன மாமா திடீர்ன்னு போறீங்க???”

“ என்னன்னு தெரியல காலையில ஒரு தந்தி வந்துச்சு. அதுல உங்கள பார்க்கணும் சீக்கிரம் வாங்க அண்ணேன்னு எழுதிருந்திச்சு அதான் என்னன்னு பார்த்துட்டு வரலாம்ன்னு இருக்கேன்.

உன்னையும் கூட்டிட்டு போறது கஷ்டம்டா. அங்க என்ன நிலைமைன்னு தெரியல.

அப்புறம் அம்மா அப்பாகிட்ட சிவாவை பார்க்க போறதா சொல்லமாட்டேன். நீயும் சொல்லாத. நான் என் நண்பனை பார்க்க போறேன்னு சொல்லிடுறேன்.”

“ சரி மாமா. நீங்க பார்த்து போயிட்டு வாங்க. அப்படியே கையோட சிவா மாமாவையும், அவுங்க குடும்பத்தையும் கூட்டிட்டு வாங்க”

“ சரிங்க பொண்டாட்டி நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். இப்போ வீட்டுக்கு போவோமா????. எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பிட்டு தூங்குனாதான் காலையில டெல்லி ரயில பிடிக்க முடியும்” என ஆதிலிங்கமூர்த்தி கூற

“ சரிங்க மாமா. வாங்க போலாம்” என சிரித்துக்கொண்டே யோகாம்பிகை ஆதிலிங்க மூர்த்தியுடன் கிளம்பினாள்.

காலை 5 மணிக்கு டெல்லிக்கு கிளம்பி, அதற்கு அடுத்த நாள் மாலை டெல்லியை வந்தடைந்தான் ஆதிலிங்க மூர்த்தி.
பின் இரவு 8 மணிபோல் தனக்கு வந்த தந்தியில் இருந்த முகவரிக்கு சென்றான்.

அந்த முகவரியில் இருந்த வீட்டின் முன் நின்று அழைப்பு மணியை அடிக்க ஒரு 30 வயதுள்ள இளைஞன் கதவைத்திறந்து,

“ tum kaun ho ( யாரு நீங்க )??” என ஹிந்தியில் வினவினான்.

“ I am Athilinga murthi. Can I see sivalinga murthi ???”
என ஆதி வினவ

“ நீங்க சிவாவோட அண்ணனா???” என தமிழில் அந்த இளைஞன் வினவினான்.

“ ஆமா. நீங்க யாரு”

“ நான் சிவாவோட நண்பன் சார். என் பெயரு அஜய். முதல்ல உள்ள வாங்க சார்” என கூறி அஜய் அழைக்க ஆதி வீட்டினுள் நுழைந்தான்.

“ நானும் சிவாவும் காலேஜ் நண்பர்கள் சார். நான் இங்க ஒரு கம்பெனில வேலைபார்க்குறேன். சிவாவுக்கு விடுமுறைன்னா இங்கதான் வருவான்.தந்தியும் அவன்தான் கொடுக்க சொன்னான் ”

“ ஓ!!! ஆமா அஜய் எங்கே என் தம்பி” என ஆதி கேட்க

“ அது…. அது…. வந்து சார்” என அஜய்
தயங்கினான்

“ என்ன தயங்குறீங்க???. என்ன சொல்லுங்க”

“ இல்ல சார் சிவாவுக்கு நேற்று காலையில ஒரு விபத்து அதனால தீவிர சிகிச்சை பிரிவில சேர்த்துருக்கோம்” என மெல்லிய குரலில் கூற

“ என்னது விபத்தா!!!!!!...... என்ன உளறுறீங்க!!!!...”
என அதிர்ச்சியாகி சத்தமாக ஆதி வினவ

“ இல்ல சார் நிஜமாவே விபத்துதான். சிவா போன வண்டியும் இன்னொரு வண்டியும் மோதுனதுல……” என அஜய் கூறிக்கொண்டிருக்கையில்

“ இப்போ…. இப்போ…. என் தம்பி எப்பிடி இருக்கான்????. ஒண்ணும் ஒண்ணும் பிரச்சனையை இல்லையே” என பதட்டமாகவும் பயத்தோடும் ஆதி வினவ

“ இல்ல சார் இன்னும் 12 மணி நேரம் கழிச்சுத்தான் சொல்ல முடியும்ன்னு டாக்டர்ஸ் சொல்லுறாங்க”

இதனை கேட்ட ஆதிலிங்க மூர்த்தி கலங்கிய தன் விழிகளை மூடி தன் உணர்ச்சிகளை அடக்கி,

“ அஜய் இப்போ நான் என் தம்பிய பார்க்கணும். எந்த ஆஸ்பத்திரின்னு சொல்ல முடியுமா????” என உணர்ச்சி துடைத்த இறுகிய குரலில் வினவ

“ சார் அது…. வந்து….. சிவா…” என மீண்டும் தயங்கினான் அஜய்

“ என்ன அஜய் சீக்கிரம் எதுனாலும் சொல்லுங்க. நான் என் தம்பிய இப்போ பார்த்தாகனும்” என ஆதி அவசரப்படுத்த

“ இல்ல சார் நீங்க சிவாவை பார்க்குறதுக்கு முன்னாடி, இதோ இந்த கேசட் விபத்து ஆன அப்புறம் தீவிர சிகிச்சை பிரிவுக்கு போறதுக்கு முன்னாடி உங்ககிட்ட எதோ பேசணும்ன்னு சொல்லி இதுல பதிவு பண்ணினான்.

நீங்க வந்தவுடன் உங்க கிட்ட குடுக்க சொன்னான். அதோட இதை முழுசா நீங்க கேட்ட அப்புறம் தான் அவனை பார்க்க வரணும்ன்னு சொன்னான்” என கூறி அஜய் சிவா பேசி பதிவு செய்த கேசட்டை ஆதியிடம் கொடுத்தான்.

“ என்ன அஜய் இது நேரம் காலம் தெரியாம” என சலித்துக்கொண்டே

“ சரி சீக்கிரம் இதை போடுங்க” என கூறி ஆதி அஜய்யிடம் அந்த கேசட்டை குடுத்துவிட்டு அங்கு இருந்த சோபாவில் தன் இரு கைகளிலும் முகத்தை மறைத்து குனிந்து அமர்ந்தான்.

‘ சிவா ஒரு விஷயம் செஞ்சா நிச்சயம் அதுக்கு பின்னாடி ஒரு காரணம். இருக்கும் இப்போ இந்த கேசட்ல என்ன சொல்லிருப்பான்.

இறைவா என் தம்பிக்கு எந்த பிரச்சனையும் இல்லாம நல்ல படியா பிழைச்சு வரணும் ’ என தன் போக்கில் யோசனையில் இருந்த ஆதிலிங்க மூர்த்தியின் சிந்தனையை ,

“ அண்ணே” என்ற சிவாவின் குரல் கலைத்தது.

வேகமாக குரல் வந்த திசையை நோக்கிய ஆதிலிக மூர்த்தியின் பார்வையில் சிவா பதிவு செய்த கேசட் ஒலித்து கொண்டிருந்தது விழ, அதனை கவனிக்க ஆரம்பித்தான்.

“ அண்ணே நீ என்மேல கோவமா.. இல்ல!! இல்ல!! என் மேல வருத்தமா இருப்பன்னு தெரியும். ஏன்னா நான் உன்கிட்ட பேசி அஞ்சு வருசத்துக்கு மேல ஆகுதே.

அண்ணே நீ நினைச்சு இருந்தா நான் ராணுவத்துல இருந்தப்போ சதாசிவம் அண்ணன் மூலமா பேசி இருக்கலாம் ஆனா நீ பேச முயற்சிக்காத போதே தெரியும் நீ என் மேல எவ்வளவு வருத்தமா இருக்கன்னு.

அதுக்கு காரணமும் எனக்கு தெரியும். நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டதையோ இல்ல என் குடும்பத்தை பத்தியோ நான் உன்கிட்ட சொல்லலைனு தானே” என நிறுத்தி.

“ ஹா…. ஹா…. ஹா….” என விரக்தியாக சிரித்து “ எனக்கு கல்யாணம் ஆனாதானே உன்கிட்ட சொல்றதுக்கு” என கூறி அமைதியானான்.

‘ என்னது கல்யாணம் பண்ணலையா!!!!...’ என ஆதிலிங்க மூர்த்தி எண்ணுகையில்

“ என்ன அண்ணே கல்யாணம் பண்ண போறதா ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்துட்டு கல்யாணம் பண்ணலைன்னு சொல்றேன்னு நினைக்குறியா” என மீண்டும் சிவாவின் பேச்சு தொடர ஆதி அதனை கவனிக்க ஆரம்பித்தான்.

“ அண்ணே உனக்கே தெரியும் நான் ராணுவத்துல சேரணும்ன்னு எவ்வளவு துடிச்சேன்னு. அம்மா அப்பா எல்லாரையும் மீறி உன்னோட ஆதரவுலதான் நான் ராணுவத்துல சேர்ந்து என் கனவை நினைவாக்குனேன். அப்போ திடீர்ன்னு ஷீலா
என்னை கடிதம் மூலமா தொடர்புகொண்டாள். அவ யாருன்னு நினைக்குறீங்களா????” என கேட்டு மீண்டும் அமைதியானான்.

அதோடு சிவா மூச்சு விட சிரம்மபடுவது அவனின் மூச்சு காற்றின் ஒலி மூலம் நன்கு கேட்டது.

“ ஷீலா, நான் விரும்புன பொண்ணு. நாலு வருசமா காதலிச்சோம். வேற வேற மதமானாலும் எங்க காதல் எப்படியும் கைகூடும்ன்னு நம்புனோம்.”
என மீண்டும் ஆரம்பித்தான்

“ ஒரு நாள் அவ அனுப்புன கடிதத்துல அவளுக்கு அவுங்க வீட்டுல வேற யார் கூடவோ கல்யாணம் செஞ்சுவைக்க போறதாகவும். என்ன செய்றதுன்னும் கேட்டிருந்தா. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியாம அவளை வீட்டை விட்டு வரச்சொல்லி நானும் விடுமுறை எடுத்துக்கிட்டு அவளை கூட்டிகிட்டு நம்ம வீட்டுக்கு வந்தேன்.

ஆனா அம்மா ஒத்துக்கல. சரின்னு அடுத்ததா ஷீலாவோட அப்பாவை பார்த்து பேசினோம். அவுங்க அப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாரு. ஆனா ஒரு நிபந்தனையோடா.

நான் ராணுவத்துல இருந்து விலகி அவுங்க வீட்டோட மாப்பிளை ஆகணுமாம். எனக்கு என்ன செய்றதுன்னே புரியல என் கனவா இல்ல என் காதலான்னு ஒரே குழப்பம்.

அப்போ ஷீலாவோட அப்பா சொன்ன காரணம் என்ன தெரியுமா???. ராணுவத்துல இருக்குற என் உயிருக்கு உத்தரவாதம் இல்லையாம். அதான் என்னைய ராணுவத்தில் இருந்து விலக சொன்னாராம். அதுக்கு ஷீலாவும் ராணுவத்தில இருந்து விலகுனா என்னைய கல்யாணம் செஞ்சுகுறேன்னு சொன்னா.

எனக்கு ஒரு விஷயம் புரியல அண்ணே என்னைய விரும்புனா என் கனவையும் சேர்த்துதானே விரும்பிருக்கணும்.
அப்போ நான் வேணும், ஆனா என் கனவு என் உணர்வுகள் வேணாமா???.

நான் என்ன என் நாட்டுக்கு சேவையா செய்றேன். என் நாட்டுக்கு ஒரு குடிமகனா என் கடமையை செய்றேன்.
ஒவ்வொருத்தரும் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமை நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாத்துறது.

ராணுவம் நாட்டோட எல்லைப்பகுதியில இருந்து நாட்டை பாதுகாக்குறாங்கன்னா, இங்க இருக்குற ஒவ்வொரு குடிமகனும் குழந்தைகள் பெண்கள்ன்னு இந்த சமுதாயத்தை பாதுகாக்கனும்.நாம கடமையை சரியா செய்றோமோ இல்லையோ அடுத்தவங்க செய்றதை தடுக்காம இருக்கணும்.


என்னோட கடமையை செய்ய வேணாம்ன்னு சொல்ற அதிகாரத்தை என்னோட காதல் ஷீலாவுக்கும் அவுங்க அப்பாவுக்கும் கொடுத்துருக்குன்னா அப்படிப்பட்ட காதல் தேவையில்லைன்னு முடிவு பண்ணி நான் என்னோட விடுமுறை முடியுறத்துக்கு முன்னாடியே ராணுவத்துக்கு வந்துட்டேன். அப்புறம் வருஷம் ஓடிடுச்சு அண்ணே.

எனக்கு எப்போ விடுமுறைன்னாலும் அதிகபட்சம் இங்க அஜய் வீட்டுக்குத்தான் வருவேன். நேத்து என்னோட அவசரதுனாலதான் விபத்து நடந்துச்சு.

என்னோட வண்டில மோதின இன்னொரு வண்டில ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு சின்ன குழந்தையும் இருந்தாங்க அவுங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.

அவுங்கள கண்டுபிடிச்சு என்னால ஆனா இந்த விபத்துக்கு என் சார்பா மன்னிப்பு கேட்டுரு அண்ணே. இது என்னோட கடைசி ஆசைன்னு கூட வச்சுக்கோ.

எனக்கு முச்ச்ச்……..சு வி….. டவே சிரம…..மா…. இருக்கு கண்டிப்பா… நான்…. என கூறியதோடு சிவாவின் குரல் நின்றுவிட்டது.

ஆனால் ஆதி எங்கோ வெறித்துக்கொண்டு அமர்ந்திருக்க,

“ சார்… சார்….” என அஜய் ஆதியை உலுக்கி சுயத்திற்கு கொண்டு வந்தான்.

பின் இருவரும் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
அங்கு மருத்துவர் சிவலிங்க மூர்த்தி கடைசி நிமிடங்களில் இருப்பதாக கூற, ஆதிலிங்க மூர்த்தி சிவலிங்க மூர்த்தி இருந்த அறைக்குள் நுழைந்தார்.

அங்கு மருத்துவ உபகரணங்களோடு படுத்திருந்த தன் தம்பியை பார்த்து கண்கள் கலங்கி “ சிவா” என தழுதழுத்த குரலில் அழைக்க,

தன் அண்ணனின் குரல் கேட்டு சிவலிங்க மூர்த்தி மூடிய விழிகளில் இருந்து கண்ணீரும், உதட்டில்சிறு புன்னகையும் உதிர்த்தபடி உயிரை துறந்தான்.

அதன் பின் காரியங்கள் வேகமாக நடந்தேறியது. சிவலிங்க மூர்த்தியின் உடலை அங்கேயே தகனம் செய்துவிட்டு அஜயின் உதவியோடு விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்த்து மன்னிப்பு கேட்க சென்றனர்.

ஆனால் விபத்தில் அந்த ஆணும் பெண்ணும் இறந்துவிட அவர்களின் நிலவரசன் எனும் ஒரு வயது பையன் மட்டும் சிறு காயங்களுடன் பிழைத்ததாகவும். ஆனால் அவனை வளர்க்க அவனின் உறவுகள் யாரும் முன் வராததால் ஒரு ஆசிரமத்தில் அவனை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது.

அதனை அடுத்து ஆதிலிங்க மூர்த்தி அந்த ஆசிரமத்திற்கு சென்று தன் தம்பியால் இன்று தாய் தந்தையை இழந்து அனாதையாக இருக்கும் அந்த சிறு பையனை தத்தெடுத்து வளர்க்க முடிவெடுத்தார்.

அதனை தொடர்ந்து ஒருவாரம் கழித்து அரங்கநாதபுரத்திற்கு நிலவரசனுடன் திரும்பினார் ஆதிலிங்க மூர்த்தி. பின் வீட்டில் உள்ளவர்களிடம் நிலவரசன் சிவலிங்க மூர்த்தியின் பையன் என்றும் சிவாவும் அவன் மனைவியும் விபத்தில் இறந்துவிட்டதாகவும் பொய் சொல்லி நிலவரசனை அந்த வீட்டின் முதல் வாரிசாக்கினார் ஆதிலிங்க மூர்த்தி.

சிவலிங்க மூர்த்தியின் இறப்பாலும், ஆதிலிங்க மூர்த்தி யோகாம்பிகைக்கு வாரிசு இல்லை என்கிற கவலையாலும் இழந்திருந்த சந்தோசத்தை மீட்டெடுத்தான் நிலவரசன் .

தன் வாழ்க்கையில் இழந்திருந்த வசந்தத்தை மீட்டெடுத்து கொடுத்த நிலவரசன்தான் யோகாம்பிகைக்கும் ஆதிலிங்கத்துக்கும் உலகமே.

இவ்வாறாக காலங்கள் வேகமா செல்ல நிலவரசனின் ஆறாவது வயதில் கருத்தரித்தாள் யோகாம்பிகை.
குடும்பத்தின் சந்தோசம் இரட்டிப்பாக அனைவரும் மகிழிச்சியில் இருந்தனர்.

ஒருநாள் வீட்டில் எதோ யோசனையில் இருந்த யோகாம்பிகையிடம் “ என்ன யோகம் எதோ யோசனையில் இருக்க???. எங்க உன் புருசனும் மகனையும் காணோம்???”
என கேட்டுக்கொண்டே அவளின் அருகில் அமர்ந்து பழச்சாறை கொடுத்த வடிவழகியிடம்

“ ரெண்டு பேரும் வயலுக்கு போயிருக்காங்க அத்தை.”

“ ஓ!!! சரி என்ன யோசனைன்னு கேட்டேனே???”

“ நேத்து அம்மா வந்துருந்தாங்களா. அப்போ ஒரு விஷயம் சொன்னாங்க. அதான் அதை பத்தி யோசிச்சுகிட்டு இருந்தேன்.”

“ அப்படி என்ன அலமேலு சொன்னா???”

“ என் மாமன் பொண்ணு தாமரை இருக்காள்ல”

“ தாமரையா????”

“ அதான் அத்தை அந்த ஏழுமலை தங்கச்சி”

“ ஆமா இங்க அரங்கநாதபுரத்துல கூட ஆறு வருசத்துக்கு முன்னாடி கட்டி குடுத்தாங்களே”

“ ஆமா அத்தை அவதான். எதோ உடம்புக்கு ரொம்ப முடியாம டவுன் ஆஸ்பத்திரியில சேர்த்துருக்காங்களாம். அம்மா போய் பார்க்கப்போனதுக்கு சண்டை போட்டுருக்காங்க. அதான் அதை பத்தி யோசிச்சுகிட்டு இருந்தேன்”

“ அதுசரி ஏழுமலைக்கு உன்னைய கட்டிக்குடுக்கலைன்னு எத்தனை நாளுக்கு இப்படி சண்டை போட்டுட்டு திரியாப்போறாங்களாம்???.
ஆமா தாமரைக்கு எத்தனை பிள்ளைங்க??”

“ அஞ்சுவயசுல கதிரவன்னு ஒரு பையன் இருக்கான். அவன்கூட அம்மாவை பார்த்து முறைச்சுக்கிட்டு இருந்தானாம்”

“ அதுசரி சின்னதுலையே பகையை சொல்லி வளக்குறாங்களாக்கும். சரி சரி நீ இதை பத்தி எல்லாம் ரொம்ப யோசிக்காத. கர்ப்பமா இருக்கும் போது சந்தோசமான மனநிலையில் இருக்கணும் போய் கொஞ்ச நேரம் ஓய்வெடு” என கூறி எழுந்து சென்றார் வடிவழகி.





இனி ????????????..................................
 
அப்போ சிவலிங்க மூர்த்திக்கு கல்யாணமில்லை
குழந்தையுமில்லை
அப்போ வனிதா விசித்ரா இரண்டு பேருமே ஆதிலிங்கத்தின் மகள்களா?
மகள்கள் இருவரும் பிறந்ததும் யோகாம்பிகை இறந்து விட்டாளா?
யோகத்தின் இறப்பில் ஏழுமலையின் பங்கு இருக்கா?
இவனோட தங்கச்சி தாமரையின் மகன் கதிரவனால் என்ன பிரச்சனை வந்தது?
கதிரவன்தான் மயிலரசியை கொன்றானா?
ஆனால் நிலவரசனுக்கு எப்படி பைத்தியம் பிடித்தது?
அதுக்கும் இவன்தான் காரணமா?
யாருதான்ப்பா ஆதிலிங்கத்துக்கு இத்தனை கொடைச்சல் கொடுப்பது?
பிளாஷ்பேக் ரொம்பவே நல்லாயிருக்கு
ஆனால் சின்ன அப்டேட்டா இருக்கே, நிரஞ்சனா டியர்
 
Last edited:
Top