ஏழு ஸ்வரங்களும் மௌனம் 07

Advertisement

swarangal

New member
Member
இரவு உணவை முடித்துவிட்டு மாயவேல் அருகில் அமர்ந்து பொதுவாக பேசிக்கொண்டிருந்தான் செழியன்..

"ஏன் மாப்பிள்ளை, புள்ளைக்கு தாலிப்பிரிச்சி கோர்க்கணுமில்ல! அதைப்பத்தி வூட்டுல எதாவது சொன்னாங்களா?" என்று மாயவேல் கேட்க..

"ஆடி பெருக்கன்னைக்கு பண்ணலாம்னு அம்மா யோசிச்சியிருந்தாங்க மாமா!.. அப்பாத்தான் ஒருமாசம் போவட்டும்னு திருவிழா முடிஞ்சதுக்கப்பறம் தள்ளிப்போட்டாரு, கல்யாண செலவு திருவிழாவுக்கு வரி, கொடைன்னு செலவு கொஞ்சம் அதிகமாகிடுச்சி அதான்" என்று தயக்கத்துடன் தன்னிலை விளக்கம் கொடுத்தான் செழியன்..

"சரிங்க மாப்பிள்ளை, நா பேசாம இருக்காங்களேன்னு தான் யோசிச்சேன்.. நீங்க பேசி முடிவு பண்ணினது தெரியாது" என்றார் மாயவேல்..

"ஆவணியில நல்லநாளா பாத்து பண்ணுறதுக்கு முன்ன சொல்லிக்களாம்னு தான் மாமா பேச்சை எடுக்கல" என்றான் செழியன்..

"சரிங்க மாப்பிள்ளை"..

"அப்ப நா கிளம்புறேன் மாமா!.. உடம்ப பாத்துக்கோங்க, ஆடி முடிஞ்சதும் நானே ராகவியை வந்து அழைச்சிட்டு போறேன்" என்றான் செழியன்..

தலையசைத்த மாயவேல்.. "இருங்க ராகவியை கூப்பிடுறேன்" என்றதும் "நானே சொல்லிட்டு போறேன் மாமா" என்றுவிட்டு கிச்சனுக்கு வந்த செழியன் பாத்திரங்களை தேய்த்துக்கொண்டிருந்தவளிடம் செருமி தான் வந்திருப்பதை உணர்த்த, திரும்பி அவனை பார்த்தாள் ராகவி..

கைக்கடிகாரத்தை காட்டி வாசலைப்பார்த்துவிட்டு பின் அவளைபார்த்து தலையசைத்தான் செழியன்..

"போயிட்டு வாங்க" என்று அவனோடு வெளியே வந்தாள் ராகவி.. தமிழும் வந்துவிட்டான்..

"கிளம்பியாச்சா மாப்பிள்ளை" என்று கேட்டவன் தங்கையிடம் "சாப்பிட எதனா கொடுத்தியா" என வினவ,

"சாப்டாங்கண்ணா"..

"நா போயிட்டு வரன் தமிழ், மாமன்னே கூப்பிடு!.. மாப்பிள்ளை, பெரிய மனுஷத்தணமா இருக்கு" என்றான் செழியன்..

"சரிங்க மாமா வீட்டுக்கு போனதும் ராகாவுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்லிடுங்க" என்றான் தமிழ்..

செழியன் மனைவியை பார்க்க, தமிழ் வீட்டிற்குள் சென்றுவிட்டான்..

"ஃபோன்லையாவது தகவல் சொல்லுங்க, பேசத்தான் வாயி வர மாட்டங்கிது ஃபோன்ல ஒரு மெசேஜ் பண்ணுறதுக்கு கை வருமில்ல" என்று ராகவி கேட்க..

அவளை முறைத்துவிட்டு வண்டியை உயிர்ப்பித்து கிளம்பினான் செழியன்..

"உள்ளதைத்தானே சொன்னேன்!.. ஏன் பேசலன்னு கேட்டுருக்கணும் கண்ணை உருட்டி கத்தி முனை மாறி குத்துற பார்வை பாத்து நல்ல நாளையே கெடுத்திருப்பாருன்றதைவிட நா கேள்வியைக்கேட்டு கெடுத்துருப்பேன்.. ஹிம் பாக்கலாம் மெசேஜ் வருதான்னு" என புலம்பியபடியே வீட்டிற்குள் சென்றாள் ராகவி..

செழியன் வீட்டிற்க்கு வந்தான்.. திண்ணையில் அமர்ந்திருந்த சின்னப்பொண்ணு அவனைக்கண்டு "என்னடா பொண்டாட்டியை பாக்காம இருக்க முடியலையோ?.. என்ன சொன்னா உன் தையக்கார பொண்டாட்டி" என்று மேவாயை இடித்தவாரு கேட்டார்..

"என்ன சொன்னான்னு அவசியம் தெரிஞ்சே ஆகணுமா ம்மா" என்று செழியன் கேட்க..

"க்கூம்!. அதை தெரிஞ்சிக்கிட்டு நா என்னத்தை கழட்டப்போறேன்.. நீயி போயி தின்னுட்டு தூங்கு" என்றார் சின்னப்பொண்ணு..

"அங்கயே சாப்பிட்டு தான் வந்தேன்- ம்மா!"..

"ஏன் இங்க செஞ்சி வச்சிருப்பாங்கன்னு தெரியாதா செழியா இதென்ன புதுப்பழக்கம் அங்கப்போயி தின்னுட்டு வரது" என்று சின்னப்பொண்ணு சிடுசிடுப்புடன் ஆரம்பிக்க, விருட்டென உள்ளே சென்றுவிட்டான் செழியன்..

"நா ஒரு கேனச்சி எதையெதை எங்கருந்து கேட்கன்னு விவஸ்தை இல்லாம வாயைவுட்டுப்பிட்டேன்.. அம்புட்டு வாயடிக்கிற பொண்டாட்டியையே இவன் ஒத்தப்பார்வையில அடக்கிப்பிட்டு அமுக்கமா நிக்கிறான், நானெல்லாம் எம்மாத்திரம்.. ப்ச் என்னைக்கு இவன் என் பேச்சை கேட்டுருக்கான்" என்று தனக்குள் முனகியவாரு வீட்டிற்குள் வந்தார் சின்னப்பொண்ணு..

"என்ன சின்னா வரவர வரைமுறையில்லாம எங்க உக்காந்திருக்கன்றதையும் மறந்து வாயை விடுற?.. ஏன் அவன், மாமனார் வூட்டுல கையை நனைக்கக்கூடாதா" என்று வெங்கடாஜலம் கேட்க..

"வந்ததும் வத்திவச்சிட்டானா?.. ஏதோ அங்கன உக்கார்ந்து இருந்ததை மறந்து வாயை விட்டுப்பிட்டேன்.. அவன் மாமனார் வூட்டுல கையை நனைக்கட்டும் காலக்கழுவட்டும் நா வேண்டாம்னு சொல்லல, இங்க ஒருவார்த்தை தகவல் சொல்லிட்டு சாப்பிட்டுருக்களாமில்ல" என்றார் சின்னப்பொண்ணு..

"ஏன்- ம்மா அவனுக்குன்னு தனியாவா ஆக்குற?" என்று பிரகாசம் கேட்க..

"ஆக்கலத்தாண்டா!.. மீந்துப்போசின்னா அண்ணனும் தம்பியுமா தின்பிங்க? பொம்பளைங்க நாங்கத்தான் திங்கணும், தகவல் சொல்லிட்டா கணக்கா போட்டு ஆக்கிக்குவமில்ல" என்றார் சின்னப்பொண்ணு..

"ஒன்னும் சொல்லுறதுக்கில்லை ம்மா" என்று சடைத்துக்கொண்டு சாப்பிடும் இடத்தில் அமர்ந்தான் பிரகாசம்..

"சோறு திங்கலன்றது உனக்கு பிரச்சனையா? அவன், அங்கத்தின்னுட்டு வந்தது உனக்கு பிரச்சனையா சின்னா" என்று வெங்கடாஜலம் கேட்டதும் முகத்தை திருப்பிக்கொண்டு அறையை நோக்கி நடந்தார் சின்னப்பொண்ணு...

"உன் அம்மாக்காரி அடங்குவனான்னு இருக்கா செழியா, அவங்க அண்ணன் பேசலன்னா? அதுக்கு இங்கருக்குறவங்க! முக்கியமா உன் பொண்டாட்டித்தான் காரணம்ற மாறி பினாத்துறா?.. வயசானா அனுபவம் வளரும், உன் அம்மாக்காரிக்கு புத்தி மலுங்கிப்போவுது" என்றார் வெங்கடாஜலம்..

"அவங்களுக்கு பேசுறது தப்புன்னு தெரியுதுப்பா!.. வேணுக்குன்னு பேசுறது தான், ராகவியை இழுக்கலன்னா தூக்கம் எட்டாதில்ல" என்று சிறு புன்னகையுடன் கூறினான் செழியன்..

"எல்லாத்தையும் சரின்ற போக்குல எடுத்துக்கிட்டாத்தான் சண்டை சச்சரவு இல்லை செழியா!.. சரி, எப்ப மருமகளை கூட்டிட்டு வரலாம்னு இருக்க"..

"இன்னும் பத்து நாள் இருக்குல்லப்பா! போகட்டும் கூப்டுக்கலாம், மாமாக்கிட்ட நானே வந்து அழைச்சிட்டு போறேன்னு சொல்லிட்டு தான் வந்தேன்... வர வாரத்துக்கும் அடுத்த வாரம் திங்கக்கிழமை பள்ளிக்கூடம் போயிட்டு வரும்போது கூட்டியாந்திடறேன்" என்றான் செழியன்..

"சரிப்பா பாத்துக்கோ" என்று முடித்துக்கொண்டார் வெங்கடாஜலம்...

அறைக்கு வந்த செழியன் ஃபோனை பார்த்தபடியே கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான்..

அவளுக்கு மெசேஜ் அனுப்பலாமா வேண்டாமா என்று மனதுக்குள் ஆயிரம் முறை பட்டிமன்றம் நடத்தினான்..

'மெசேஜ்ல பேசிட்டா? அப்பறம் நேருலயும் பேசாத்தான் தூண்டும்!.. நீ பேசனன்னா, அவ சந்தோஷப்படுவாளா? இல்லை ஜடமா மாறிடுவாளான்னு தெரியாது!.. ஏற்கனவே சாமி முன்னாடி சொன்னவ, இப்போ நல்லா பேசுறா- ன்னு நம்பி ஏமாந்துடாத செழியா, அவக்கிட்ட பேசாம இருந்தாலும் மனசுக்குள்ள ரெண்டுப்பேருக்குமான நெருக்கம் உயிரோட்டமாத்தான் இருக்கு!.. நீ பேசி, பேச்சிவாக்குல நடந்ததை கேட்டு ஏன் சலுப்பு சங்கட்டம்.. காலத்துக்கும் கண்ணியத்தோட துணை வர உறவு!.. பேசாம ஜடம் மாறியிருக்கிறதால அந்த உறவை ஒட்ட வச்சிக்க முடியும்ன்னா பேசாம இருக்குறதுல தப்பில்லை" என்று மூளை எடுத்துக்கொடுக்க, ஃபோன் பிலின்க்கானது..

ராகவி தான் 'வீட்டிற்க்கு வந்தாச்சா மாமா' என்ற கேள்வியோடு மெசேஜ் அனுப்பியிருந்தாள்..

தம்சப் ஒன்றை தட்டிவிட்டு, மொபைல் டேட்டாவை ஆஃப் செய்த செழியன் அவளின் ப்ரோஃபைல் பிக்சரை டச் செய்து பார்த்தான்..

வார்த்தைகள் அற்ற உன் மௌனம்,
உயிரற்ற ஜடமாய் எனக்குத் தோன்றுகிறது!
பேசாமல் நீ நகர்வதால், பாறை ஒன்று என் அருகில் நிற்பதாக உணர்கிறேன்!- என்ற ஒரு கவிதை வரியை படித்தவனுக்கு சொல்லிலடங்காத உணர்வு வந்து தாக்கியது..

கண்கள் லேசாக கலங்க, "நீதானடி வாழ்க்கைய ஜடமா, வாழ்ந்து ஒட்டிக்கிறன்னு சொன்ன?.. நீயெதுக்கு ஜடமா இருக்கணும்னு தான் நானே அந்த மௌனத்தை தத்தெடுத்துக்கிட்டேன்.. எப்பவும் நீ சிரிச்சிட்டு சந்தோஷமா இருக்கணும் கட்டச்சி!.. அது ஒன்னுத்தான் என் ஒட்டுமொத்த ஆசையும்" என முனகியவனுக்கு சொட்டு சொட்டாய் கண்ணீர் திரையில் விழுந்து பார்வை மங்கியது.. ஃபோனின் திரையை விரலால் துடைத்துக்கொண்டான்..

திங்கக்கிழமை மாலை நேராக தையக்கடைக்கு வந்திருந்தான் செழியன், மனைவி தையமிஷினைத்தான் உதைத்துக்கொண்டிருப்பாள் என்பதை அறிந்து..

சுடிதாருக்கு சைடு, ஓரம் அடித்துக்கொண்டிருந்தாள் ராகவி..

"அக்கா, மாமா வந்திருக்காங்க" என்று குஷியான குரலில் ராதா சொன்னதும், நிமிர்ந்து பார்த்த ராகவி எழுந்து வெளியே வந்து "வாங்க" என்று அழைத்தாள்..

பத்துக்கு பத்தென்ற தீப்பெட்டி சைசிலான அறையில் தையமிஷின், ஓவர்லாக் மிஷின், ரேக்கென பாதிக்கடையை அடைத்துக்கொண்டிருந்தது..

"ராதா, டீ வாங்கிட்டு வா" என்று ராகவி பணத்தை நீட்டியதும் அவள் கையை பற்றிக்கொண்ட செழியன் ராதாவிடம்.. "அதெல்லாம் வேண்டாம்- மா! நீ வேலையை பாரு, அங்க ஆம்பளைங்க அம்புட்டு பேர் இருக்காங்க ஒண்டிக்கா போயிட்டு வருவியா" என்று கேட்டவன் மனைவியை முறைத்தான்..

"அவளுக்கு பழக்கம் தான்" என்று சன்னமான குரலில் கூறினாள் ராகவி..

"மாமா, நா ஒரு டீ பைத்தியம்!.. டீக்கடை வச்சிருக்கவரு எனக்கு உறவுமுறையில அண்ணன் தான்!.. நா போயி நின்னதும் மத்தவங்களை விட்டுட்டு எனக்கு போட்டுக்கொடுத்து அனுப்பி வச்சிடுவாரு.. நா போயி படக்குனு வாங்கிட்டு வந்துடறேன்" எனக்கூறிவிட்டு சிட்டாய் பறந்தாள் ராதா..

"மாமா, இங்க வந்திருக்கீங்க?" என்று ராகவி கேட்கவும், காலண்டரைப்பார்த்தான் செழியன்..

'அதானே பாத்தேன் இந்த மனுஷனாவது வாயை திறந்துட்டாவாவது!.. க்கூம் எனக்கு உடம்புக்கு ஒத்துவரலைன்னாக்கூட இவருக்கு வாய் வார்த்தையா என்னன்னு கேட்க வாய் வராது' என்று மனதுக்குள் முனகிக்கொண்ட ராகவி "இன்னைக்கு அழைச்சிட்டு போறீங்களா மாமா" என்று கேட்டாள்..

தலையசைத்தான் செழியன்..

அண்ணங்காரனுக்கு அழைத்து விசியத்தை கூறினாள் ராகவி..

"மாமா நேத்தைக்கே ஃபோனை போட்டு சொல்லிட்டாரு ராகா!.. நா அமலாவை வரச்சொல்லி எல்லாம் தயாரா எடுத்து வச்சிட்டு தான் கடைக்கு வந்தேன்.. நா கிளம்பி வரன், அப்படியே கிளம்பி போயிடாதிங்க" என்றுவிட்டு ஃபோனை வைத்தான் தமிழ்..

"அண்ணன் வீட்டுக்கு வரச்சொன்னது மாமா" என்று ராகவி சொன்னதும் சரியென்பதாய் தலையசைத்தான் செழியன்..

ராதா டீ வாங்கி வந்ததும், டீயைக்குடித்துவிட்டு மனைவியுடன் நடந்தே மாமனார் வீட்டிற்க்கு வந்திருந்தான்..

"ஏன் மாமா? பைக் என்னாச்சி" என்று தமிழ் அவனை வரவேற்றவாரு கேட்க..

"இழுத்து பிடிக்குது தமிழ் கடையில விட்டுருக்கேன்" என்றான் செழியன்..

அமலா கட்டைப்பையில் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருக்க, அவளுக்கு உதவினாள் ராகவி..

"ராகா ரொம்ப நன்றி" என்றாள் அமலா..

"எதுக்கு அண்ணி!".

"எதுக்கா? அவருக்கு எடுத்துச்சொல்லி, உனக்கு தெரிஞ்சவங்கட்ட நம்பிக்கைக்கொடுத்து பணம் வாங்கிக்கொடுத்ததுக்குத்தான்"..

'ஓ!.. அண்ணன் மாத்தி சொல்லிருக்கா?.. என்கிட்ட சொல்லவே வேண்டாம்னு சொல்லிட்டு பொண்டாட்டிட்ட அப்படியே மாத்தி ஒப்பிச்சாச்சி!.. இப்படி சொன்னன்னாவது வந்து ஒருவார்த்தை சொன்னாண்ணா!.. வரட்டும் பேசிக்கிறேன்' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் ராகவி..

"ராகா"..

"ஆங், அண்ணி! அது அண்ணனுக்கு துணிக்கடை வைக்கிறதை விட ஆட்டுப்பண்ணை வச்சி, கரிக்கடை வைக்கிறது சுலபமா வரும்னு சொல்லி உதவிக்கு என்கிட்ட பணம் கேட்டது.. அவசரத்துக்கு என்கிட்ட இல்லை, பொழப்பு பண்ணுறன்னு வந்து கேட்கவும் கையை விரிக்க மனசு வரலை அதான் தெரிஞ்சவங்கட்ட சொன்னேன்.. ம்.. உங்களுக்காக தான் அண்ணி, அண்ணன் புதுசா இறங்கியிருக்கு.. அவனுக்கு ஒத்தாசையா இருங்க" என்றாள் ராகவி..

"ஒத்தாசையா இருக்கமாட்டாமத்தான் நா இத்தனை வருஷம் உன் அண்ணனோட காலத்தை ஓட்டினன்னா ராகா.. ஒண்ணுமே பண்ணாம தினம் தினம் வெட்டிப்பயலுகளோட பேசியே நேரத்தை ஓட்டுறாரு!.. என் பின்னாடி வரப்பலாம் நல்லா சுகமா இருந்துச்சி, கட்டிட்டு வரவும் தான் காசில்லாமல் ஒண்ணுமே முடியாதுன்னு முகத்துல அறைஞ்சமாறி பதிஞ்சி போணுச்சி!.. எப்படியோ கெஞ்சிக்கூத்தாடி எங்க அப்பாவை சமாதானப்படுத்தி, அவரு கடை வச்சித்தரன் உன் புருஷனை மூணு லட்சம் ரெடி பண்ண சொல்லுன்னு சொல்லிக்கூட இரண்டு மாசத்துக்கு மேலாவப்போவுது.. பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு எத்தனை முறை சொல்லியும் கேட்கவே இல்லை!.. சட்டுனு நா ஆட்டுப்பண்ணை வைச்சி பொழப்பை பாக்குறேன்.. தினமும் ஆயிரம் ரூவா கையில தரன்னு சொன்னாரு!.. எப்படியோ முன்னேறினா சந்தோஷம் தான்" என்றாள் அமலா..

"நம்பிக்கை வைங்க அண்ணி!.. அப்பப்ப நீங்களும் கொஞ்சம் கடுபிடியா பேசுங்க, இல்லைன்னா அசால்ட்டுத்தனத்தோடயே சுத்த ஆரம்பிச்சிடும்" என்றாள் ராகவி..

"அமலா எல்லாம் தயாரா இருக்கா நேரமாச்சி" என்று தமிழ் கூறியதும், "முடிஞ்சதுங்க" எனக்கூறி இரண்டு கட்டப்பையையும் எடுத்து வைத்தாள் அமலா..

பிறந்த வீட்டின் சார்பாக கொடுக்கவேண்டிய சீர்வரிசை முறையாக கொடுக்கப்பட்டு வழியனுப்பி வைத்தனர்..

'இவங்க பைக்கை எடுத்துட்டு வந்துருக்கலாம்.. ரெண்டு பையும் கணக்குது, கையே இறுக்கிடும் போல வலிக்குது' என மனதில் நினைத்த ராகவி கணவனை பின்தொடர்ந்து நடக்க, அவளிடமிருந்து ஒருக்கட்டப்பையை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டான் செழியன்..

கையை உதறிவிட்டு நன்றியுடன் அவனை ஏறிட்டு பார்த்தாள் ராகவி..

அவளின் கையை பற்றியவாரு நடக்க ஆரம்பித்தான் செழியன்..

வீடுகள் அடங்கிய சந்தில் இருவரும் நடந்து போக, அங்கிருந்தவர்கள் சிரிப்புடன் அவர்களை பார்த்தனர்.. ராகவிக்கு கூச்சமாக இருந்தது... அதைவிட செழியன் கையை விடாமல் பிடித்தபடி வருவதுதான் சங்கோஜமாக இருந்தது..

"மாமா எல்லாரும் பாக்குறாங்க விடுங்க" என்று மெல்லிய குரலில் ராகவி கூறியதும் அவனின் கண்கள் அவள் இடையில் பதிய, 'ஆத்தி இவரு பண்ணக்கூடிய ஆள் தான்' என அவன் பார்வையை உணர்ந்து மனதுக்குள் நினைத்தவள் அவன் கையை அழுத்திப்பிடித்துக்கொண்டாள்..

நாட்கள் வழமை போல வேகமாக ஓடியது.. ஆவணி மாதக்கடைசியில் ராகவிக்கு தாலிப்பிரித்து கோர்க்கு
ம் நிகழ்ச்சி குறிக்கப்பட்டது... அன்றென்று பார்த்து செழியன் தான் ராகவிக்கு அஞ்சுப்பவுன் நகையை போட்டதென்ற செய்தி சின்னப்பொண்ணுவின் காதை எட்டியது..
 

Advertisement

Advertisement

Back
Top