என் ஆயுள் ரேகை நீயடி 10

Advertisement

Sagee Elumalai

Member
Member
Chapter 10
கூழாங்கல் நெஞ்சை
கொத்தி தின்ன பார்க்கும்
சிறு பறவை போல நீ
உன்னுள் ஒரு துளி
நேசம் பிறக்காதா என

ஏங்கும் சிறு மழலையாக நான்.

“இது எல்லாம் உன்னோட வேலை தானே, இல்லைன்னு மட்டும் சொல்லி என்கிட்டே இருந்து தப்பிக்க பார்க்காத” அறைக்குள் நின்று கர்ஜித்து கொண்டிருந்தார் சுகுமார்.

தலையணைக்கு உறையை போட்டு கொண்டிருந்த அருணா அவரை நிமிர்ந்து பார்க்காமலே, “நான் அப்படி சொல்வேன்னு நீங்களும் எதிர்பார்க்காதீங்க” என்றார்.

“ஓஹ் அந்தளவுக்கு உனக்கு திமிர் கூடி போச்சா, எவன் கொடுத்த தைரியத்திலே இதெல்லாம் செய்யற”

“தைரியம் எப்பவும் மனசுல இருந்துகிட்டு தான் இருக்கு, இத்தனை நாள் அமைதியா இருந்ததுக்கு காரணம் கோழைத்தனம் இல்லை. சூழ்நிலை மட்டும் தான். அப்படியே எனக்கு தைரியம் வர எவனோ காரணம்னு நீங்க நினைச்சா நினைச்சுட்டு போங்க. எனக்கு அதை பத்தி எல்லாம் கவலை இல்லை”.

“ச்சீ ஒரு குடும்ப பொம்பளை மாதிரியா பேசற நீ, பெத்த பொண்ணையே உன் அண்ணன் மகளுக்கு கூட்டி கொடுத்திருக்க, நீயெல்லாம்”

“ஜாக்கிரதை இன்னொரு வார்த்தை பேசுனீங்க”, என விரல் நீட்டி எச்சரித்திருந்தார், அருணா.

“நேர்ல தான் பொண்ணு பொண்ணுன்னு உருகறது, ச்சீ இந்த வார்த்தையை சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை. என் பொண்ணை சட்டப்படி என்னோட அண்ணன் மகனுக்கு கல்யாணம் செய்து தான் அனுப்பி இருக்கேன். வேணும்ணா சர்டிபிகேட் காட்டவா. மத்தவங்களை மாதிரி வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு ஊர் ஊரா மேயலை”

“ஏய் என்னடி பேசிக்கிட்டே போற” என்று அருணாவை அடிக்க வர, அப்பா என்று சஞ்சய் அவரை தடுத்து இருந்தான்.

“என்னப்பா இது அம்மாவை போய் தப்பு தப்பா பேசறீங்க, இது கொஞ்சம் கூட நல்லா இல்லை” என்றான் இருவருக்கும் இடையில் நின்றபடி.

“சஞ்சு நீ போடா” என்று அருணா மகனை விலக்க முனைய, “ஓஹ், பிள்ளையை எனக்கு எதிரா வளர்த்திருக்கோம்னு தைரியமா. அதான் இந்த துள்ளு துள்ளறியா நடந்தது எல்லாம் தெரிஞ்சா அவன் என் பக்கம் தான் நிப்பான் தெரியுமா” என்றார் தெனா வட்டாக.

“என்னப்பா தெரியணும், எனக்கு எல்லாமே அத்தான் சொல்லிட்டார். நீங்களும் உங்க ஈகோவும். அக்காவையாவது அவரோட சந்தோஷமா இருக்க விடுங்க, வாங்கம்மா போகலாம்” என்று அம்மாவை தனது அறைக்கு அழைத்து சென்றான்.

“சஞ்சு நில்லுடா, அவளை பத்தி உனக்கு தெரியாது டா, அவங்க குடும்பமே மோசமானது டா”, என்று அவர் சொல்லியது எல்லாம் காதில் விழுத்தி கொள்ளாதவன் அறைக்கு சென்று கதவடைத்து கொண்டான்.

“நீங்க ஏன்மா ஆரம்பத்திலேயே அப்பாவை எதிர்த்து பேசலை, அப்படி செய்திருந்தா இந்தளவுக்கு வந்திருக்குமா” என்றான்.
குட்டியாய் அம்மா புடவையை பிடித்து கொண்டு திரிந்த மகன் இன்று அம்மாவுக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டதை எண்ணி மகனை கனிவாக பார்த்தார் அருணா.

“என்னம்மா, தப்பே செய்யாதப்ப நீங்க ஏன் தான் இவ்வளவு அடங்கி போறீங்களோ தெரியலை” என்றான் சஞ்சய் சலிப்பாக.

“இது அடங்கி போறது இல்லை சஞ்சய், பொறுத்து போறது என்னோட பிள்ளைகளுக்காக பொறுத்து போனேன் அவ்வளவு தான்” விரல்களால் மகனின் தலையை கோதியபடியே சொன்னார்.

“ஆனாலும் நீங்க அப்பாவுக்கு ரொம்ப இடம் கொடுத்துட்டீங்கம்மா” என்றான் இப்போதும் விடாமல்.

“இதெல்லாம் உனக்கு வீராவா சொன்னான்”

“ஆமா ம்மா, நான் ஒண்ணும் பெரிய மனுஷன் இல்லை தான், ஆனா இது என்னோட குடும்பம் இங்கே நடக்கிறதை யாரோ ஒரு மூணாவது மனுஷன் மாதிரி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க என்னால முடியாது. அத்தான் கிட்டே எல்லாமே கேட்டேன் அவர் சொல்லிட்டார்” என்றான் வேகமாக.

“சரி நீ வீரா சொன்னதை நம்பறியா”

“நம்பாம, அத்தான் என்ன பொய்யா சொல்ல போறார், ஒருத்தரை பார்த்தாலே அவங்க பொய் சொல்றாங்களா, உண்மை சொல்றாங்களா தெரியாம இருக்குமா, எனக்கு தெரியும்” என்றான் உறுதியாக.
மகனை பெருமையாக பார்த்தவர்,

“வீரா வேற என்ன சொன்னான்” என்று கேட்டார்.

“அக்காவோட திங்க்ஸ் எல்லாம் எடுத்து கொரியர் பண்ண சொன்னார்”

“சரிப்பா, நான் அதெல்லாம் எடுத்து வைக்கிறேன், நீ கொரியர் பண்ணிட்டு வந்திரு” என்று விட்டு சென்றார்.

மகன் வீட்டில் இருந்தவரையில் சுகுமார் எந்த பேச்சும் பேசவில்லை, அவன் பள்ளிக்கு சென்றதும் ஆரம்பித்து கொண்டார், அதிலிருந்து அருணாவை வார்த்தைகளால் வதைத்து கொண்டிருந்தார்.

எதற்கும் அருணா வாயே திறக்கவில்லை, ஆனால் குட்ட குட்ட குணிந்தால் குனிய குனிய குட்டிகொண்டே தான் இருப்பார்கள் என்று வீரா சொன்னது நினைவுக்கு வர, இன்று எதிர் பேச்சு பேசி விட்டார். அதை சுகுமாரால் ஏற்று கொள்ள முடியவில்லை.
இப்போது எது கிடைக்கும் கடித்து குதறலாம் என்று காத்திருந்தவருக்கு, மகன் தனக்கு எதிராக பேசியது பெரிய அடி தான்.

அதுவும் அந்த வீரா சொன்னான் என்று கூறியதில் இன்னுமே கொதித்து கொண்டிருந்தார்.
ஆனால் இனி பொறுமை காத்து தான் ஆக வேண்டும், மகன் முன்னிலையில் மனைவியிடம் சண்டையிட்டு தனக்கு அவர்களிடம் இருக்கும் ஹீரோ அந்தஸ்தை குறைத்து கொள்ள அவர் விரும்பவில்லை.

மகளை அவன் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதை வைத்தே மகனுக்கு பேசி புரிய வைத்து விடலாம். ஆனால் அதற்காக மனையிடம் சண்டையிட்டால் தவறு இவர் மீது தான் என்று தெரிந்து போகும் என்று அமைதியாக இருந்தார்.
.....
குளித்து முடித்து வெளியே வந்த மேகவினி, கீழே இறங்கி வந்தாள். வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. எல்லாரும் எங்கே போய்ட்டாங்க, அவள் கூடத்தில் வந்து நிற்க, "சின்ன பாப்பா சாப்பிட எடுத்து வைக்கட்டுமா" என்று கேட்டாள் ஒரு பெண்மணி.
இரவு கூட ஒழுங்காக சாப்பிடாதது, வயிற்றில் எலி ஓடுவது போலவே இருந்தது, “ஹா என்ன இருக்கு” என்றாள்.

“வெண்பொங்கல் சட்னி சாம்பார், வேணும்ணா இட்லி தோசை ஏதாவது செய்து கொடுக்க சொல்லி தம்பி சொன்னாங்க” என்றாள்.

“ஓஹ் என்ன யாரையும் காணோம், எல்லாரும் எங்கே போய்ட்டாங்க” சுற்றிலும் பார்வையை ஓட்டியபடியே கேட்டாள்.

“அது.. எனக்கு தெரியதும்மா” என்று நழுவினாள் அவள்.

“அப்படியா சரி” என்று அத்தோடு பேச்சை நிறுத்தி கொண்டாள். அதற்கு மேல் வேலைக்காரர்களிடம் பேச்சை வளர்த்து விஷயத்தை வாங்கி கொள்ள அவளுக்கு விருப்பம் இல்லை.
வேண்டியதை வைத்து சாப்பிட்டு விட்டு, அறைக்கு வந்தாள். கல்லூரியில் இருந்து தோழிகள் அழைத்து இருந்தனர். ஏன் கல்லூரிக்கு வரவில்லை என்று கேட்டு. அவர்களுக்கு வீட்டில் இருந்தே படிக்க போகிறேன் என்று பொய்யை சொல்லியவள் போனை வைத்து விட்டாள்.

தேர்வுகள் நெருங்கி கொண்டு இருக்கிறது, புத்தகம் எதுவும் இல்லாமல் எப்படி படிக்க முடியம், இவன் என்ன என்னை படிக்க விட கூடாதுன்னு முடிவோடு இருக்கானா என்று நினைத்தாள்.

ஒரே அறைக்குள் பொழுதை நெட்டி தள்ளுவது அவளுக்கு அத்தனை எளிதாக இருக்கவில்லை. எவ்வளவு நேரம் தான் போனை பார்த்து கொண்டிருப்பது. அப்படி காலையிலேயே எல்லாரும் எங்கே தான் சென்றார்கள். அதுவும் வீட்டில் புதிதா வந்த ஒருத்தியை தனியாக விட்டு சென்று இருக்கிறோம் என்பது கூட இல்லாமல் இப்படியா செல்வது என்று கோபம் கோபமாக வந்தது.

யாரிடமும் சொல்லாமல் எங்காவது கிளம்பி சென்று விட்டால் என்ன என்றுகூட தோன்றியது. அவங்க மட்டும் என்ன என்கிட்டே சொல்லிட்டா போனாங்க என்ற கோபத்தில் வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.

அவள் வாசலுக்கு வரும்போதே, “சின்ன பாப்பா எங்கே போறீங்க” என்று கேட்டாள் வேளை செய்யும் பெண்.

“ஏன் உங்ககிட்டே சொல்லிட்டு தான் போகனுமா” என எரிந்து விழுந்தாள் இவள்.

“இல்லை பாப்பா, உங்களுக்கு இங்கே எந்த இடமும் தெரியாதே அதான் கேட்டேன்”

“இதோ பாருங்க போன வழியை நியாபகம் வச்சு திரும்ப வர அளவுக்கு எனக்கு தெரியும். ஒரு வேளை என்னை இங்கே இருந்து வெளியே எங்கேயும் போகாம பார்த்துக்கனும்னு இந்த வீட்டு ஆளுங்க சொல்லி இருக்காங்களா என்ன” என்றாள்.

"அய்யோ அப்படி எல்லாம் இல்லை பாப்பா, உங்களை பார்த்துக்க சொல்லி மட்டும் தான் சொன்னாங்க. வேற எதுவும் இல்லை” என்றாள் அந்த பெண் சற்றே மிரண்டவாளாக.

அதன் பிறகு இவளுக்கு வெளியே செல்லும் எண்ணமே மட்டு பட்டு போனது போல ஆனது. "எங்கேயும் போகலை, இன்னைக்கு அந்த வீரா வரட்டும் என்ன நினைச்சுட்டு இருக்கான் மனசுல, என்னை கூட்டிட்டு வந்து என்னவோ ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வைக்கிறானா” என முனகிகொண்டே மீண்டும் அறைக்கு சென்று விட்டாள்.

அறைக்குள் வந்தவள் போனை மெத்தையில் தூக்கி எரிந்து விட்டு, ஜன்னல் பக்கம் சென்று நின்று கொண்டாள்.

அப்போது அவள் போன் ஒலித்தது, யாரென்று தெரியாவிடினும் ட்ரூ காலர் ல் தெரிந்த வீரபத்ரன் என்று வந்த பெயரை பார்த்தவளுக்கு கோபம் தலைக்கு ஏறியது.
உடனே அட்டென்ட் செய்து காதில் வைத்தவள், “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல, நான் என்ன ஜெயில் கைதியா, இந்த வீட்டுக்குள்ள அடைச்சு வைக்க தான் கூட்டிட்டு வந்தீங்களா” என்று பொரிந்தாள்.

ஒரு நிமிடம் அந்த பக்கம் அமைதி நிலவியது, பிறகு “அப்படி யாரும் சொல்லவே இல்லையே” என்றான் அவன் கூலாக.

“அப்புறம் வேற எப்படி, வெளியே போகலாம்னு போனா அந்த வேலை செய்யறவங்க என்னவோ நான் ஊரை விட்டு ஓடி போக போற மாதிரி கேள்வி மேலே கேள்வி கேட்கிறாங்க. என்னை கேள்வி கேட்கிற உரிமை இங்கே யாருக்கும் இல்லை. உங்களுக்கு பயந்தோ இல்லை அடங்கியோ நான் உங்க கூட இங்கே வரலை. அதே மாதிரி என்னால யாருக்கும் அடங்கி எல்லாம் போக முடியாது” என படபடவென பேசினாள்.

அவள் அவ்வளவு பேசியும், நிதானமாக எதுவுமே நடக்காத மாதிரி, “இப்போ என்ன ஊருக்குள்ள சுத்தனுமா உனக்கு, தாராளமா போ, வழி தெரியலைன்னா நம்ம தாத்தா பேரை சொல்லு யார் வேணும்னாலும் கூட்டிட்டு வந்து விட்டு போவாங்க. ஆ அப்படியே மதியமும் என்ன வேணும்னு சொல்லிட்டு போ, ராணி அக்கா சமைச்சி வச்சிருவாங்க வந்து சாப்பிடு. நான் கொஞ்சம் வேலையா வெளியே இருக்கேன்” என்றவன் பேசி முடித்து விட்டேன் என்பது போல வைத்து விட்டான்.

அதில் இன்னுமே கொதிநிலைக்கு சென்று இருந்தாள் மேகவி, எவ்வளவு திண்ணக்கம் இருந்தா எங்கேயாவது போன்னு சொல்லுவான், என்ன நினைச்சுட்டு இருக்கான். இன்னைக்கு வரட்டும் அவனுக்கு இருக்கு என்று கருவி கொண்டே அமர்ந்து விட்டாள்.
என்னவோ அவன் கூறி வெளியே செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை, அதானால் வீட்டிலேயே இருந்து விட்டாள். அப்படியே சிறிது நேரம் அவள் அமர்ந்து இருக்க, கதவு தட்டப்பட்டது. சென்று பார்த்தாள் அவன் சொன்ன அந்த ராணி அக்கா தான் நின்று இருந்தாள்.

“பாப்பா மதியத்துக்கு என்ன சமைக்கட்டும்னு தம்பி கேட்டுக்க சொன்னாங்க” என்றாள்.
இருந்த கோபத்திலே எங்கே அவரை திட்டு விடுவோமோ என்று நினைத்தவள், “ஏதாவது செய்ங்க” என்றாள்.

“இல்லை பாப்பா உனக்கு என்ன வேணும்னு”..ராணி தயங்கி நிற்க, அதான் ஏதாவது செய்ங்க சொன்னேனே” என்றாள் சளிப்பாக.

“சரி பாப்பா” என்று அவர் நகர,

“கொஞ்சம் இருங்க எதுக்கு என்னை பாப்பா பாப்பான்னு சொல்லிட்டு இருக்கீங்க” என்றாள்.

“அது அப்படியே பழகிடுக்கச்சி பாப்பா” என்றார் அவர் வெள்ளந்தியாக.

ம்ச் பாவம் வெள்ளந்தியா பேசறாங்க யார் மேலேயோ இருக்கிற கோவத்தை இவங்க மேலே காட்டிடேனே என்று வருத்தமாக இருந்தது.
“சரிக்கா இனி கவி ன்னு கூப்பிடுங்க” என்றாள்.

“அய்யோ எனக்கு வராது பாப்பா” என்று சிரித்தார் அவர்.

“சரி போங்க” என்று அறைக்குள் வந்து அடைந்து கொண்டாள்.
மேலும் சிறிது நேரம் கடந்திருக்கும், மீண்டும் அறைகதவு தப்பட்டது. கொஞ்சம் சலிப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் என்ன இது எப்போதும் சளிப்பான மனநிலையோடு தான் இருப்பாயா என்று தனக்கு தானே சொல்லி கொண்டவள், கதவை திறந்தாள்.
அங்கே அகல்யா நின்று இருந்தாள், எடுத்ததும் அண்ணி என்று பேச வந்தவளை இடைமரித்தவள், “என்ன வேணும்” என்றாள் கத்தரிப்பாக.

அகல்யா முகம் மாறி போனாலும் கொஞ்சம் சமாளித்து கொண்டவள்,

“அண்ணி நீங்க சாப்பிட்டீங்களா, வாங்களேன் நாம சேர்ந்து சாப்பிடுவோம்” என்று அழைத்தாள்.

“ஏன் காலையிலே தனியா தானே சாப்பிட்டேன், இப்பவவும் தனியா சாப்பிட்டுக்க தெரியும் நீ போ” என்றாள் கோபமாக.

“அண்ணி நீங்க கோபமா இருக்கீங்கன்னு அண்ணா சொன்னார், அதான்”

“இங்கே பாரு, உனக்கு சொல்றது தான் உங்கண்ணனுக்கும், சேர்த்து சொல்லிடு, எங்க வீட்டுலே சாப்பாட்டுக்கு வழி இல்லாம நான் இங்கே வந்து இருக்கலை, ஒரு வீட்டுக்கு மருமகளா வந்தா முதல்ல அவளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுங்க. நான் ஏதோ இந்த வீட்டுக்கு வந்த வேண்டாத விருந்தாளி மாதிரி, எதுவுமே சொல்லாம உங்க இஷ்டத்துக்கு எல்லாரும் கிளம்பி வெளியே போய்விட்டீங்க. அனுமதி கேட்க வேண்டாம் தகவல் சொல்லிட்டு போகணும்னுற நாகரீகம் கூடவா தெரியாது. இவளுக்கெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு நினைப்பா. அவ்வளவு என்ன அலட்சியம். இப்போ வந்து என்னவோ நான் சாப்பாடே பார்க்காத நாட்டுல இருந்து வந்த மாதிரி சாப்பிடு சாப்பிடுன்னு சொல்றீங்க. யாருக்கு வேணும் உங்க சாப்பாடு” என எரிந்து விழுந்தாள்.

“அண்ணி அப்படி இல்லை அண்ணி” என அகல்யா துவங்கும் போதே, அகல் என குரல் கொடுத்து வந்தான் வீரா.

தங்கையையும், மனைவியையும் பார்த்தவன், “நீ போ அகல்” என தங்கையை அனுப்பி வைத்தான்.

“சரிண்ணா” என்று சொல்லி சென்றாலும் அவள் முகத்தில் வாட்டம் நன்றாகவே தெரிந்தது.
அவனை பார்த்ததும் கதவு நிலையில் நின்ற மேகவினி உள்ளே சென்று விட், அவள் பின்னோடு சென்றவன், நேராக குளிக்க சென்று விட்டான். இவள் சென்று சோபாவில் அமர்ந்து கொண்டு போனை பார்க்க துவங்கி இருந்தாள்.

குளித்து விட்டு வந்தவன், அவள் எதிரே வந்து அமர்ந்தான். “உனக்கு பொறுமையாவே பேச தெரியாதா” என்றான் சோபாவில் இரு கைகளையும் விரித்தபடி அமர்ந்து கொண்டு.

“தெரியாது” என்றாள் போனில் இருந்து கண்ணை எடுக்காமல்.

“ஓஹ் உங்கப்பா உனக்கு சொல்லிக்கொடுக்கலை போல” என்றான் நக்கலாக இதழ் வளைத்து.

“இங்கே பாருங்க எங்கப்பாவை பத்தி பேசாதீங்கன்னு சொல்லிறுக்கேன்” என்றாள் விரல் உயர்த்தி சீறலுடன்.

“அதென்னடி உங்கப்பாவை பத்தி பேசினா மட்டும் அவ்வளவு கோபம் வருது, ஆனா என்னோட வீட்டுலே இருக்கவங்களை இப்படித்தான் சகட்டுமேனிக்கு பேசுவியா” என்றான் அமர்த்தலாக.

“ஏன் நான் பேசினதுல என்ன தப்பு, வீட்டு உரிமைக்காரங்க வெளியூர் போகும்போது வீட்டுல இருக்கிற நாயை வாசல்ல கட்டி போட்டுட்டு தேவைக்கு சாப்பாடும் வச்சிட்டு போவாங்க. அதுகிட்டே இந்த ஊருக்கு போறோம் இப்போ தான் வருவோம்னு சொல்ல மாட்டாங்க. அது மாதிரி தானே சாப்பாடு மட்டும் கொடுத்தா போதும்னு எதுவுமே சொல்லாம போய்ட்டீங்க, அப்போ என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது” என்றாள் கோபத்தில் புசுபுசுவேன மூச்சு வாங்கியபடி.
அவள் நெஞ்சு கூடு மேலேறி இறங்குவதை பார்த்துகொண்டே நிதானமாக, “சரி சொல்லாம போனது தப்பா இருக்கலாம் ஆனா அதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்னு யோசிக்க மாட்டியா” என்றான்.

“நான் ஏன் யோசிக்கணும், தனியா விட்டுட்டு போனா என்ன நினைப்பான்னு நீங்க யாராவது என்னை பத்தி யோசிச்சீங்களா” என்றாள் அவனை மடக்கி.
சட்டென இருக்கையில் இருந்து எழுந்தவன், அவளை நெருங்கி நின்றபடி "யோசிச்சதால தான் ஃபோன் பண்ணி நீ என்ன பண்றேன்னு கேட்டேன், எல்லாரும் அவசரமா கிளம்பி போய் இருக்காங்களே என்ன விஷயம்னு நீ இப்போ வரைக்கும் கூட கேட்கலை. எப்பவும் உன்னை பத்தி மட்டும் யோசிக்காத அடுத்தவங்களை பத்தியும் அவங்க என்ன நிலைமையிலே இருக்காங்கன்னும் யோசி” என்றான்.

“அது,” அவள் மீண்டும் துவங்கும் முன், “இப்படி பக்கத்துல நின்னு உதட்டை சுழிச்சு சுழிச்சு பேசிக்கிட்டு இருந்தா, லிப் லாக் பண்ணணும்னு தோணுது உனக்கு ஓகே வா சொல்லு” என்றான் சுழிந்த அவள் உதடுகளையே பார்த்தபடி.

“என்னது” அதிர்ந்து போனவளாக அவள் விழி விரிக்க சிரித்து கொண்டே அகன்று சென்று விட்டான்.
 

Advertisement

Advertisement

Back
Top