இருளோடு தீபம் ஏற்றினாய் 16

Advertisement

ரமா

Active member
Member
அத்தியாயம் 16


தன் உடல் நடுங்க நின்றிருந்த சிவாவின் தோளில் அழுத்தமாய் தன் கரத்தை பதித்த நந்தினி,

"சிவா, என்னாச்சுடி உனக்கு? இப்போது எதுக்கு உன்னோட உடம்பு நடுங்குது? ஏதாவது சொல்லேன்டி..." என்றாள் பயமாக.

"நம்மோட ஸ்பான்சர் அவரா நந்து? ஆனா இத்தனை நாளா நாம வேற யாரையோ இல்லை நினைச்சிருந்தோம். அவர் தான் நம்மோட ஸ்பான்சர்னா நம்மளை எப்படி அவர் தேர்ந்தெடுத்தாரு நந்து? எனக்கு என்னவோ மனசெல்லாம் கொஞ்சம் பயமா இருக்குடி..." என்றாள் தோழியின் மேல் இருந்த பொய்க்கோபத்தை விட்டுவிட்டு.

அவள் கூறியதைக் கேட்ட நந்தினி அதிசயமாய் தன் தோழியைப் பார்த்துச் சந்தோஷப்பட்டவள்,

"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடி. ரொம்ப நாள் கழிச்சு நீ என்கிட்ட பேசிட்டடி. அதுவே ரொம்ப சந்தோஷம் எனக்கு..." என்று அவளை அணைத்துக் கொண்டவள்,

"சிவா, அவரைப் பாத்தா தப்பா தெரியலைடி. உன் மேல அவர் ரொம்பவே பாசம் வச்சிருக்காரு. இத்தனை நாளா அந்தப் பாசம் எதுக்குன்னு எனக்குத் தெரியலை. ஆனா இப்போ புரிஞ்சிருச்சிடி. அவர் உன்னைக் காதலிக்கிறாரு சிவா. அதுதான் உனக்காக அவர் இவ்வளவு இறங்கி எல்லாம் பண்றாரு. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடி. அவர் உன்னை ரொம்பவே விரும்புறாரு சிவா" என்று சந்தோஷமாய் தன் தோழியைக் கட்டி அணைத்தாள்.

ஆனால் முழுமையாகச் சந்தோஷப்பட வேண்டியவளின் விழிகளோ எதையோ நோக்கிக் காத்திருந்தது.

தன் சந்தோஷத்தில் பங்கெடுக்காமல் ஏனோவென்று இருக்கும் பெண்ணைப் பார்த்த நந்தினியோ அவளைத் தன்னிடமிருந்து விலக்கி,

"ஏய் சிவா, என்னடி இப்படி யோசிச்சிட்டு இருக்க?" என்றாள் கேள்வியாய்.

"இல்லை நந்து, எனக்கு என்னவோ பயமா இருக்கு. எனக்கு எதுவும் வேணாம். யாரும் வேணாம். நான் எங்கேயாவது போயிடுறேன் நந்து. இனி யாரையும் எதுக்காகவும் என்னால நம்ப முடியாது. நான் யாரையும் கல்யாணம் செஞ்சுக்க விரும்பலை..." என்று தன் போக்கில் சொல்லிக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.

அவளின் புலம்பலைக் கேட்ட நந்தினிக்கு கொஞ்சம் பயம் பிடித்தது.

"ஏய் சிவா, இதோ பாருடி... எதுவும் இல்லைடி... நீ பயப்படற மாறி எதுவும் நடக்காதுடி. நான் உன்னை அப்படியேவா விட்டுடுவேன். அப்படிலாம் பயப்படாத சிவா. சார் ரொம்ப நல்லவங்கடி. இதுவரைக்கும் அவரோட பார்வை தப்பா யாரு மேலேயும் படிஞ்சது இல்லை. ஆனா நீ ஏன்டி இப்படி நினைக்குற?" என்றாள் அவளின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி.

அதே நேரம் அங்கே சந்தோஷுடன் வந்த ருத்ராவோ கண்களில் கண்ணீருடன் இருக்கும் சிவாவை பார்த்தவன் யோசனையாய் நந்தினியை பார்த்தான்.

"என்னாச்சு?" என்றான் நந்தினியிடம்.

"தெரியலை சார், ஏதோ அவ மனசுல பயம்னு நினைக்குறேன். ஒரு மாதிரி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டா..." என்றாள் தன் தோழியின் நினைவில்.

அதைக் கேட்டவன் மெல்ல சிவாவின் அருகில் வந்தவன்,

"என் மேல என்ன பயம் யாழினி உனக்கு? எனக்கு உன்னை ரொம்பவே புடிச்சி போய் தான் உன்னோட தோழிகிட்ட சொன்னேன். நீ இந்தளவுக்கு பயப்படறேன்னா நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேணாம்" என்றவனின் முகத்தில் என்ன இருந்ததோ அவனே அறிவான்.

ஏனென்றே தெரியாமல் பெண்ணவள் அவனின் வதனத்தைச் சற்று பார்த்தவளின் கண்களில் உள்ள மிரட்சி மறைந்து அவனை நம்பிக்கை ஒளியுடன் கண்டாள் பேதையவள்.

அவனோ மெல்ல அவளின் கரத்தைப் பற்ற அதில் தன் கைகளைப் பாந்தமாக அவளின் கரத்தோடு கோர்த்துக் கொண்டவன் தன் இமையைச் சிமிட்டாமல் அவளையே பார்த்திருந்தான்.

இதுவரை பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அவளின் மென்னுடல் அப்போது தான் சற்று அடங்கியது.

தன்னிடம் இதுவரை பேசுவதற்குக் கூட நடுங்கிக் கொண்டிருந்த தன் தோழி இப்போது மெல்ல ருத்ராவின் அருகே நடுங்காமல் நின்றது அவளுக்கு விந்தையாய் போனது.

ஆனால் அதற்கு மேலும் அங்கே நின்று அவர்களை வேடிக்கை பார்க்க அவளின் நாகரிகம் கற்ற மூளை அறிவுறுத்த அங்கிருந்து சென்றவள் இருவரையும் அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்த சந்தோஷையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.

அவர்கள் சென்றதும் பெண்ணவளை தன்னை நோக்கி இழுத்தவன் இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

ஏனோ அந்த நொடி அவனின் உடல் நடுங்கியதையும் உணர்ந்து கொண்ட பெண்ணவள் மெல்லத் தன் கரத்தை உயர்த்தி அவன் முதுகைச் சற்று மென்மையாகத் தடவிக் கொடுத்தாள்.

"ஏய் நந்து, இப்போ என் கண்ணால நான் பாக்குறது பொய் இல்லையே! என்னோட பாஸாடி இது? நிச்சயம் எங்கேயோ அவருக்கு அடிபட்டிருக்குன்னு நினைக்குறேன்டி..." என்றான் சந்தோஷ்.

அவனின் வார்த்தைகளைக் கேட்டவளுக்குக் கோபம் வர அவனின் முதுகில் இரண்டு அடி வைத்தாள்.

"என்னடி இது எதுக்கு இப்போ அடிக்குற? நீ என்ன ரௌடியாடி?" என்றான் தன் முதுகைத் தேய்த்தபடி.

"இதோ பாரு, இந்த வாடி போடின்னு சொல்ற வேலையெல்லாம் வேற எங்கேயாவது வச்சிக்கோ இடியட். நல்ல விஷயம் பேசும்போது அபசகுனமா பேசுற மேன் நீ..." என்றாள் கோபமாய்.

"சாரி டார்லிங்... என்னோட பாஸ் ஒரு எந்திரம் மாறி... ஒரே நேர்கோட்டுல தான் போயிட்டு இருந்தாரு இத்தனை நாளும். ஏன் எத்தனையோ பொண்ணுங்க அவருக்கு வந்து பிரபோஸ் பண்ணியும்கூட நாட் இன்ட்ரஸ்டடுன்னு ஒரே வார்த்தையில் சொல்லிட்டு வந்துடுவாரு… அப்படிப்பட்டவர் இன்னைக்கு அதிசயமா ஒரு பெண்ணை அணைச்சு பிடிச்சிருக்கிறதை பார்த்தா எப்படி தோணும்? அதைத்தானே நானும் கேட்டேன். அதுக்கு நீ அடிக்குற. அப்புறம் உன்னை வாடி போடின்னு சொல்ற உரிமை என்னைத் தவிர இந்த உலகத்துல யாருக்குமே இல்லை. முதல்ல அதைப் புரிஞ்சிக்கோ நீ..." என்றபடி அவளிடம் பொரிந்து தள்ளியவன் ருத்ராவையும் சிவாவையும் மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

அதைக் கண்ட நந்தினியோ தன் தலையில் அடித்துக் கொண்டு, "அய்யோ கடவுளே! இந்தப் பைத்தியத்தை வச்சிட்டு என்னடா பண்றது..." என்றபடி புலம்பியவள் மெல்ல அவனைப் பார்த்தவள் அவனின் கைகளைப் பிடித்து இழுத்தபடி அங்கிருந்து சென்றாள்.

"ஏய்! என்னை விடுடி... இப்போ எதுக்குடி இப்படி என்னை இழுத்துட்டு வந்த?" என்றான் அவளிடம் கோபமாக.

"ஏய்! அறிவிருக்காடா உனக்கு? அங்க என்ன படமா ஓட்டிட்டு இருக்காங்க அதையே பாத்துட்டு இருக்க... போ, போய் ஏதாவது உருப்படியா வேலை இருந்தா பாரு. ஆளு தான் வளந்துருக்கே தவிர அறிவு வளரலைக் கொஞ்சமும்..." என்று அவனைத் திட்டியபடி அங்கிருந்து சென்றாள்.

போகும் அவளைப் பார்த்தவன் மெல்லச் சிரித்தபடி, "பாருடா! என் தக்காளிக்கு எப்படி கோவம் வருதுன்னு..." என்றான்.

ருத்ராவை திரும்பிப் பார்த்தவன் இன்னும் இருவரும் மோன நிலையை விட்டு வராததைக் கண்டுச் சிரித்தபடி,

"பாஸ்! நீங்க எப்பவும் இந்தச் சில்வண்டு கூட சந்தோஷமா இருக்கணும்" என்று மானசிகமாகச் சொல்லியபடி அங்கிருந்து சென்றான்.

"இப்போ சொல்லு என்னைக் கல்யாணம் செஞ்சுக்க சம்மதமா?" என்றான் அவளின் வதனத்தைத் தன் கையில் ஏந்தியபடி.

"நான் யாரு, எப்படிப்பட்ட பொண்ணுன்னு எதுவும் உங்களுக்குத் தெரிய வேணாமா?" என்றாள் பதில் கேள்வியாய்.

அதற்கு அவனோ சிரித்தபடி, "நீ யாரு, எப்படிபட்டவன்னு உன்னைவிட எனக்கு நல்லாவே தெரியும். எல்லாம் தெரிஞ்சு தான் உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க அனுமதி கேட்டேன்" என்றான் அவளின் கண்களைப் பார்த்தபடியே.

ஏனோ அவனின் அந்த நம்பிக்கையில் பெண்ணவளின் மனம் சாந்தமடைந்தது.

எப்படிப்பட்ட நம்பிக்கை இது! பெண்ணவளின் உடல் முழுவதும் சிலிர்த்துத் தான் போனது.

"கடைசி வரைக்கும் இதே நம்பிக்கையோட இருப்பீங்களா?" என்றாள் பதற்றமாக.

"சிவயாழினி ருத்ரதேவேஷுக்கு இன்னும் எத்தனை சந்தேகம் இருக்குன்னு தெரிஞ்சிக்கலாமா மிஸஸ்?" என்றவன் அவள் பெயருடன் தன் பெயரையும் இணைத்துச் சேர்த்துக் கூறினான்.

"இல்லை, அன்னைக்கு ஹாஸ்பிடல்ல அப்படி பேசுனீங்களே... அதுதான் கொஞ்சம் பயமா இருந்துச்சு" என்றாள் அவனைப் பார்த்தபடியே.

"அது ஏதோ நான் சொன்னதை நீ கேக்கலைன்னு கோபத்துல சொன்னதும்மா... அதுக்கெல்லாம் விட்டுட்டு போயிட முடியுமா என்ன?" என்றான் தன் கண்களைச் சிமிட்டி.

அவனின் கண் சிமிட்டலில் பெண்ணவளின் வதனத்தில் நாணத்தின் சிவப்பேற அவனை விட்டுத் தள்ளிச் சென்றாள்.

"ஹேய்! யாழினி போதும் இப்படியே கொஞ்ச நேரம் உட்காரு. என்னோட இன்னும் கொஞ்ச நேரம் பேசு" என்றபடி அவளின் கையைப் பிடித்துக்கொண்டான்.

"அச்சோ விடுங்க நந்தினி வந்துட போறா" என்று அவனை விட்டுப் புள்ளிமானாய் துள்ளி ஓடினாள்.

அவள் சென்ற பின்பு சற்று நேரம் அங்கேயே அமர்ந்து சிரித்தவன், அவளின் பிம்பம் மறைந்ததும் அவனின் சிரிப்பு எங்கேயோ தொலைந்து போனது. மெல்ல மெல்ல அது இறுக்கமாய் மாறியது.

"இல்லை, அவ்வளவு சீக்கிரம் நீ என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது" என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.


***


அந்த இருட்டு அறையில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தது அந்த உருவம்.

"ஆஆஆ..." என்று அந்த அறையே அலறும் சத்தம் கேட்டு வெளியே தடிமாடு போல் இருந்த ஒருவன் உள்ளே ஓடிவந்தான்.

"மாஸ்டர்..." என்று வந்தவன் அழைத்தான்.

"எப்படிடா... எப்படி அவளுக்கு இப்படி நடக்குது? நான் அவ யாருகிட்டே கிடைக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ இப்போ அவனோட, அவன் வீட்ல அவனோட காதலியாவும், வருங்கால மனைவியாவும் தங்கியிருக்கா. எப்படி அவன் அவளை நம்பினான்? இத்தனை வருஷமா இதுக்கா நான் காத்திருந்தேன்? இல்லை, நிச்சயம் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கக் கூடாது. அப்படி அது நடந்து நான் தோற்கக் கூடாது..." என்றான் அவன்.

"மாஸ்டர், பேசாம அவளைக் கொன்னுடலாமா?" என்றான் அவன்.

"ஏய் இடியட்! அவளைக் கொல்றது பெரிய விஷயம் இல்லைடா. அப்பவே அதை நான் செய்திருக்கணும். ஆனா அப்போ அவளை நான் பெருசா எடுத்துக்கலை. ஆனா இப்போ அதுதான் எனக்கு எமனா வந்து நிக்குது. அன்னைக்கு அவளைப் பாவம் பார்த்துவிட்டேன். ஆனா இன்னைக்கு அது எமனா இருக்குது" என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

"இதுக்கு வேற என்னதான் மாஸ்டர் வழி?" என்றான் அவன்.

"கூடிய சீக்கிரம் இதுக்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறேன். ஆனா அவகிட்ட இருக்கிற உண்மை அவனுக்கு எப்போதும் தெரியக்கூடாது" என்றான் ஆத்திரமாய்.


யார் இவன்? அப்படி என்ன உண்மை அவளுக்குத் தெரியும்? அந்த அவள் யார்?

அடுத்த பாகத்தில் பார்க்கலாம் செல்லம்ஸ்.

தீபம் ஏற்றும்...
✍️
 
அடேய்! யாருடா அந்த இருட்டுலேயே பேசுற உருவம்? 🧐
ருத்ரா வந்துதான் திறப்புவிழா பண்ணுவான் போல....
 

Advertisement

Advertisement

Back
Top