இருளோடு தீபம் ஏற்றினாய் 14

Advertisement

ரமா

Active member
Member
அத்தியாயம் 14


அமுதனும் நிகிதாவும் அப்போது தான் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தனர்.

நிகிதாவோ தன் கணவனின் இடுப்பைப் பற்றியபடி உள்ளே வர அவனோ கால்கள் தடுமாறியபடி வந்தான் அமுதன்.

அதைக் கண்ட பெரியவர்கள் அனைவரும் அதிர்ந்து தான் போயினார்கள்.

ஏனென்றால் அமுதனுக்குக் குடிப்பழக்கம் சுத்தமாய் கிடையாது. ஆனால் இப்போது வந்த இந்தப் புதுப்பழக்கம் அனைவருக்கும் அதிர்ச்சி தான்.

சௌந்திரம் தான் அவர்களின் முன்னே வந்து,

"டேய் அமுதா, என்னடா இது... உனக்குக் குடிப் பழக்கம் இருக்கா என்ன?" என்றார் அதிர்ச்சியாய்.

ஆனால் அவரின் கேள்விக்குப் பதில் சொல்லும் நிலையில் அவன் தான் இல்லை.

"பாட்டி அவர் குடிக்கலாம் இல்லை. சும்மா ஒயின் தான் எடுத்துகிட்டாரு. இது மாதிரி பிஸினஸ் வோர்ல்டுல இதெல்லாம் சகஜம் தான். அதனால நீங்க பெருசா எடுத்துக்காதீங்க..." என்றவள் மெல்ல அவனைத் தாங்கிக் கொண்டு தங்களது அறைக்குள் சென்றாள்.

வாசுதேவனும் தேவகியும் அந்தக் கேள்வியைக்கூட கேட்காமல் அதிர்ச்சியில் சிலையாய் இருந்தனர்.

"அடி ஆத்தே! என் பேரன் இப்படிக் குடிகாரனா ஆயிட்டானே... ஏன் வாசுதேவா இந்தப் பொண்ணு எதுவோ சொல்றாலே அதெல்லாம் உண்மையாப்பா?" என்றபடி தன் மகனிடம் கேள்வியை எழுப்பினார்.

ஆனால் அவருக்கோ தன் மகனை இந்த நிலையில் கண்டதை ஏற்க முடியாமல் தன் மனைவியின் வதனத்தைக் கண்டார்.

ஆனால் தேவகியோ கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தங்களின் அறைக்குள் சென்றுவிட்டார்.

மனைவியின் மனதைத் தெரிந்தவருக்கு எதுவும் பேசத் தோன்றாமல் அவரும் அவரின் பின்னே சென்றுவிட சௌந்திரம் மட்டுமே அங்கிருந்து புலம்பியபடி அமர்ந்திருந்தார்.

இங்கே தங்களின் அறைக்கு வந்த நிகிதா அமுதனைப் படுக்கையில் தள்ளிவிட்டு அவனைப் பார்த்துச் சிரித்தபடி அமர்ந்திருந்தாள்.

"பரவாயில்லை அமுதா, லைட்டா போதை மருந்து கொடுத்ததே உனக்கு எல்லாத்தையும் மறக்கடிச்சிடுச்சி போல. இட்ஸ் ஆல் ரைட் அப்படியே நைட் ஃபுல்லா இரு. எனக்கு அது தானே வேணும்." என்று அவனின் முகத்தைப் பார்த்துச் சொன்னவள் அவனை உள்ளே வைத்துக் கதவைச் சாத்திவிட்டு வெளியே வர அங்கே யாருமில்லாமல் போக சத்தமில்லாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்.

அவளை இருவிழிகள் தொடர்ந்ததை அவள் அறியவில்லை.


***

கட்டிலில் சாய்ந்து எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தவளைக் கண்ட நந்தினிக்கு மனம் மிகவும் வலித்தது.

"சிவா, இந்தா இதைக் கொஞ்சம் குடி மாத்திரை போடணும்" என்றபடி தன் கையில் இருந்த பால் டம்ளரை அவளிடம் கொடுத்தாள்.

"எனக்கு வேணாம் நந்து. இதை எடுத்துட்டு அந்தப் பக்கம் போ" என்று எரிந்து விழுந்தாள்.

அவள் கண் விழித்ததிலிருந்து இப்படித்தான் அனைவரிடமும் எரிந்து விழுகிறாள்.

யாரிடமும் சரியாய் முகம் கொடுத்துப் பேசவில்லை. எந்நேரமும் அவளின் கண்கள் கலங்கியே இருந்தது.

இப்போ உனக்கு என்னடி பிரச்சனை? யார்கிட்டேயாவது ஏதாவது சொன்னா தானே தெரியும். இப்படி உனக்குள்ளேயே இருந்தா எப்படிடீ புரியும்?" என்று திட்டினாள்.

ஆனால் அந்தத் திட்டுக்களைச் சுத்தமாய் மதிக்காமல் தன் போக்கில் தான் பெண்ணவள் அமர்ந்திருந்தாள்.

அதே நேரம் கதவைத் திறந்து உள்ளே வந்தனர் சந்தோஷும் ருத்ராவும்.

"என்னாச்சு, எதுக்கு நந்தினி இப்படி கத்திட்டு இருக்க? உன்னோட குரல் வெளியே வரைக்கும் கேட்குது" என்று சத்தமிட்டபடி வந்த ருத்ராவை விழி விரியப் பார்த்தாள் பெண்ணவள்.

"நீங்களே பாருங்க சார்... டிபன் கொடுத்தேன் எல்லாத்தையும் வாமிட் பண்ணிட்டா. சரி மாத்திரை போடணுமேன்னு பால் கொண்டு வந்து கொடுத்தா மேடம் குடிக்க மாட்டேங்கிறாங்க சார்..." என்றாள் கோபமாக.

அதைக் கேட்டவன் சிவாவை பார்க்க அவளின் பார்வையோ எங்கேயோ நிலைத்திருந்தது.

அதைத் தன் கையில் வாங்கியவன் சிவாவை பார்த்துக் கொண்டே,

"நீங்கக் கொஞ்சம் வெளியே இருங்க நந்தினி. நான் கொடுக்குறேன், கண்டிப்பா குடிப்பாங்க..." என்றான் அழுத்தமாய்.

அவளோ அவனை ஒரு பார்வை பார்த்தவள் என்ன நினைத்தாளோ அடுத்த நொடியே அங்கிருந்து வெளியேறினாள்.

அவள் சென்ற பின்பு தன் கையில் இருந்த பால் டம்ளரை அவளை நோக்கி நீட்டியவன்,

"கொஞ்சமும் உனக்குக் குற்றவுணர்ச்சி இல்லையா யாழினி?" என்றவனின் குரலில் இருந்த ஏதோவொன்று அவளின் பார்வையை அவனை நோக்கித் திருப்பியது.

ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தவளுக்கு அவனின் வார்த்தை எதையோ உணர்த்த அழுத விழிகளுடன் அவனைப் பார்த்தாள்.

அடுத்த அரைமணி நேரம் அவளிடம் என்ன பேசினானோ அவள் பால் குடித்து முடித்ததும் தான் வெளியே வந்தான்.

முன்பே வாடிய கொடியாய் இருந்தவள் இப்போது அவன் பேசிவிட்டுச் சென்ற பின்பு மேலும் வாடிப்போனாள் பெண்ணவள்.

அடுத்த இரண்டு நாளில் சிவா தேறி வர அவளை அழைத்துக் கொண்டு அவர்களின் விடுதிக்குச் சென்றான் ருத்ரா.

அனைவரிடமும் எரிந்து விழுந்தவள் அவனிடம் மட்டும் அடங்கிப் போனாள்.

விடுதி வந்த பின்பு அவள் இறங்கப் போக அவளின் கரத்தை பிடித்துத் தடுத்தவன் நந்தினியிடம் திரும்பி,

"நீ போய் உங்களோட திங்க்ஸ் எடுத்துட்டு வா. நாங்க இங்கேயே வெயிட் பண்றோம்" என்றபடி சிவாவின் கரத்தை இறுக்கமாய் பிடித்துக் கொண்டான்.

"தயவுசெஞ்சு என் கையை விடுங்க..." என்றாள் மெல்லிய குரலில்.

"இதோ பாரு, கொஞ்ச நேரம் அமைதியா இரு. ஏதாவது பேசுன நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது பாத்துக்கோ..." என்றான் மெல்லிய குரலில் அவளிடம் கோபமாய்.

அவனின் கோபக்குரலைக் கேட்டவளுக்குப் பயம் வர அப்படியே காரில் அமர்ந்து கொண்டாள்.

என்ன நடக்கும் என்று முன்கூட்டியே சந்தோஷிடம் சொல்லி அழைத்து வந்ததால் நடப்பவற்றை மட்டும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

அவனுக்கும் நடப்பவை எதுவும் முழுதாய் தெரியவில்லை என்றாலும்கூட தன் முதலாளி நிச்சயம் தவறாக எதுவும் செய்யமாட்டார் என்று நம்பியவன் பொறுமையாய் இருந்தான்.

பெண்ணவளோ குனிந்த தலை நிமிராமல் அமைதியாய் இருக்க ருத்ராவோ நடப்பதை ஏற்றுக் கொள்ளும் முடிவுடன் அமைதியாய் அமர்ந்திருந்தான்.

அவனின் வதனம் தான் அமைதியாய் இருந்ததே ஒழிய அவனின் மனதில் ஆழிப்பேரலையாய் சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது நடந்து முடிந்த நிகழ்வுகள்.

அதற்குள்ளாக இருவருக்கும் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள் நந்தினி.

இருவரையும் ஏற்றியபடி ருத்ராவின் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது கார்.

வெள்ளை நிறத்தாலான பளிங்கு மாளிகையைக் கண்ட பெண்கள் இருவரும் அதிசயமாய் அதைப் பார்த்தனர்.

ஆனால் நொடியில் சிவாவோ தன் வதனத்தை மாற்றிக் கொண்டவள் கேள்வியாய் ருத்ராவை பார்த்தாள்.

"வா, உள்ளே போலாம்" என்றபடி அவளின் கரத்தை பிடித்தபடி தன் வீட்டின் உள்ளே அடி எடுத்து வைக்கும் நேரம் எங்கிருந்தோ வந்த மாலை இருவரின் கழுத்திலும் விழுந்தது.

பெண்ணவளோ அதை அதிர்ச்சியாய் பார்க்க, ஆனால் ஆடவனுக்கு அப்படி ஒன்றும் அதிர்ச்சி இல்லை போலும்.

அந்த மாலையைச் சாதாரணமாக எடுத்து விட்டு அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்,

"போட்டோல இருந்து மாலை விழுந்துச்சு. வேற எதுவும் யோசிக்காத..." என்று அவளிடம் கூறியவன் கீழிருந்த ஓர் அறைக்கு அழைத்துச் சென்றவன்,

"இந்த ரூம்ல ரெண்டு பேரும் தங்கிக்கோங்க..." என்றபடி அவளை அங்கே விட்டவன் அந்த அறையிலிருந்து வெளியேறும் நேரம்,

"இந்த வீடு யாரோடது? எங்களை ஏன் இங்கே கூட்டிட்டு வந்தீங்க சார்?" என்றாள் நந்தினி.

ருத்ராவோ அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவளை முறைத்துப் பார்த்தான்.

அவளோ அவனின் பார்வையின் பொருள் புரியாமல், "இப்போ நான் என்ன கேட்டேன்னு இப்படி முறைக்கிறீங்க?" என்றாள் முணுமுணுத்தபடி.

அவனோ அவளின் கேள்வியை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், "உனக்குச் சமைக்கத் தெரியுமா?" என்றான் கேள்வியாய்.

அவளோ பாவமாய் விழித்தபடி அவனைப் பார்த்தவள் 'இப்போ நம்ம என்ன கேட்டோம் இவர் என்ன கேக்குறாரு? ஒரு கன்றாவியும் புரிஞ்சிக்க முடியலையே. இதுல இதோ ஒரு ஜீவன் இருக்குதே நம்மகிட்ட என்ன சண்டை போடுது, ஆனா அவரை பாத்தாவே அமைதியா இருக்கா. கடவுளே! இவங்களுக்கு நடுவுல என்னை வச்சி செய்யிறயே' என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள்.

"ஹலோ! என்ன உனக்குள்ள பேசிட்டு இருக்க? போ, போய் ஏதாவது சமைச்சு கொண்டு வந்து உன் பிரண்ட்கிட்ட கொடு" என்றவன் வெளியே வந்தவன் சந்தோஷை அழைத்துக் கொண்டு தன் அலுவலகம் சென்றான்.

நந்தினியோ அதற்கு மேலும் எதையும் யோசிக்காமல் சிவாவின் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டு அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து அறையை விட்டு வெளியே வந்தாள்.

மெதுவாய் சமையல் அறையைக் கண்டுபிடித்து அதன் உள்ளே சென்றவள் ஃபிரிட்ஜை திறந்து பார்க்க, அதில் இருந்த காய்கறிகளை வைத்து ஒரு சூப்பைத் தயார் செய்து தன் தோழிக்கு எடுத்துச் சென்றாள்.


***


தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்த அமுதனுக்கு ஒன்றும் புரியவில்லை. 'என்ன இது, ஏன் இப்படி நினைவே இல்லாம இருக்கேன்? நைட் நானும் நிகியும் தானே ஒரு பார்ட்டின்னு போனோம். அங்கே என்ன நடந்துச்சு? எப்படி வீட்டுக்கு வந்தோம்னு ஒன்னும் புரியலையே?

ஆமா நிகிதா எங்கே போனா?' என்று தன் மனைவியை நினைத்து அறையை விட்டு வெளியே சென்றவன் கீழே ஹாலில் அனைவரும் அமர்ந்திருக்க இவனும் கீழே சென்று அவர்களுடன் அமர்ந்தான்.

ஆனால் வாசுதேவனும், தேவகியும் அவனிடம் கொஞ்சமும் பேசாமல் அப்படியே அமைதியாய் இருந்தனர்.

"அம்மா, ஒரு காபி கொடுங்களேன். தலை ரொம்பவே வலிக்குது" என்றான் தலையில் கை வைத்தபடி.

அவரோ அவனின் குரலைக் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் எழுந்து தன் வேலையைப் பார்க்கச் சென்றார்.

இப்போது எல்லாம் அவர் இயல்பாய் பேசவில்லை என்றாலும்கூட அவன் கேட்ட அனைத்தும் செய்வார்.

ஆனால் இப்போது பேசாமல் அவன் கேட்ட காபியையும் தராமல் தங்களின் அறையை நோக்கிச் சென்றவரை கண்டவனுக்கு எரிச்சலாக,

"அம்மா, இப்போ என்ன நடந்துச்சுன்னு இப்படி ஆட்டிடியூட் காட்டிட்டு இருக்கீங்க? நான் அப்படி என்ன தப்பு பண்ணேன்னு இப்படி பேசாம ஒதுங்கித் தீண்ட தகாதவன் மாறி ட்ரீட் பண்றீங்க?" என்று கோபமாய் பேசியவன் கன்னம் தெறிக்க சப்பென்று ஓர் அறை வேகமாய் விழுந்தது.

தன் கன்னத்தில் கை வைத்து தன்னை அடித்தவரை அதிர்ச்சியாய் பார்த்தவன், அடுத்து அவர் கூறிய செய்தியை நம்பமுடியாமல் பார்த்திருந்தான்.


அப்படி யார் அவனை அடித்தது? அவர் அப்படி என்ன கூறியிருப்பார்?

அடுத்த பாகத்துல பார்க்கலாம் செல்லம்ஸ்.


தீபம் ஏற்றும்...
✍️
 
இந்த ரைட்டர் என்ன இப்படி வெச்சு செய்யறாங்க 🙄🙄🙄
ஒவ்வொரு எபிசோட் படித்த பிறகு குழப்பம் அதிகரிச்சுட்டே போகுது 🙆🙆
 
இந்த ரைட்டர் என்ன இப்படி வெச்சு செய்யறாங்க 🙄🙄🙄
ஒவ்வொரு எபிசோட் படித்த பிறகு குழப்பம் அதிகரிச்சுட்டே போகுது 🙆🙆
thanks for valuble comment
 

Advertisement

Advertisement

Back
Top