இருளோடு தீபம் ஏற்றினாய் 13

Advertisement

ரமா

Active member
Member
அத்தியாயம் 13


தன் அறையில் மயக்கத்தின் பிடியில் இருந்த ருத்ராவின் கண்கள் மெல்ல அசைய சிரமப்பட்டு தன் விழிகளை மலர்த்தினான். அவனின் முன்னே இருந்த சோபாவில் கவலை படிந்த முகத்துடன் கண்களை மூடி அமர்ந்திருந்தான் சந்தோஷ்.

என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்தவனின் முகத்தில் மெல்லிய வெற்று புன்னகை கீற்று உதித்தது.

அதைத் துடைத்து எறிந்தவன் மெல்ல எழுந்து அங்கிருந்த குளியல் அறைக்குள் சென்றான்.

அறைக்கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு கண்களைத் திறந்தான் சந்தோஷ்.

படுக்கை வெற்றிடமாக இருக்க அதைக் கண்டே ருத்ரா எழுந்ததை உணர்ந்து கொண்டவன் அவனும் எழுந்து வெளியே கிளம்பினான்.

வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் அலைபேசி அடிக்க அதை எடுத்து காதுக்குக் கொடுத்தவன்,

"எஸ் பாஸ், சொல்லுங்க பாஸ்" என்றான் இறுக்கமான குரலில்.

"சந்தோஷ் கேபின் வா" என்று ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டு வைத்தான்.

அவனும் தன் பாஸ் சொன்ன வேலையைச் செய்வதற்காக எழுந்தவனின் கண் முன்னே சற்று முன் ருத்ரா இருந்த நிலை தோன்றி கண்களில் கண்ணீர் வழிந்தது.

அதைத் துடைத்துக் கொண்டவன் ருத்ராவின் அறையை நோக்கிச் சென்றான்.

"சொல்லுங்க பாஸ்" என்றான் அவனின் கட்டளைக்குக் காத்திருந்தபடி.

"அந்த சிவயாழினியோட அத்தை வீட்டைக் கொஞ்சம் வாட்ச் பண்ண சொல்லு சந்தோஷ். எனக்கு என்னவோ அங்கே ஏதோ இருக்கும்னு டவுட்டா இருக்கு..." என்றான் எங்கோ பார்த்தபடி.

"ஆனா இதுவரைக்கும் நாம வாட்ச் பண்ணதுல அங்கே எதுவும் இல்லையே பாஸ்..." என்றான் யோசனையுடன்.

"இல்லை சந்தோஷ், சிவயாழினியை வீட்டை விட்டு துரத்துனதுல ஏதோ இருக்கு..." என்றான் முகத்தை இறுக்கமாய் வைத்தபடி.

"சரிங்க பாஸ், நான் இன்னும் நெருக்கமா விசாரிக்க சொல்றேன் பாஸ்" என்றவன் அங்கிருந்து வெளியேற முயன்றான்.

அதைக் கண்ட ருத்ராவோ, "சந்தோஷ், எல்லாத்தையும் எடுத்து வை. வீட்டுக்கு போலாம்" என்றபடி தன் முன் இருந்த கணினியை அணைத்தான்.


***


அந்த இரவு நேர வேளையில் மனமெங்கும் வலியே வியாபித்திருக்க பௌர்ணமியை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் சிவா.

ஏனோ மனமெங்கும் வலியே தோன்றியிருந்தது.

எந்தவொரு உறவும் எனக்கு நிலைக்காதோ? அப்படி என்ன தான் நான் பாவம் செய்தோனோ? என்று தன் மேல் இருந்த கழிவிரக்கத்தில் உழன்று கொண்டிருந்தாள்.

அப்போது கையில் ஏதோ சங்கிலியுடன் வந்த நந்தினிக்கோ தோழியின் நினைவில் இதயம் வலித்தது.

"சிவா, இந்தா உன்னோட பேக் துவைக்கும் போது இது இருந்துச்சு. ஆமா என்னடி இது? ஏதோ லாக்கெட் மாறி இருக்கு..." என்றபடி தன் கையில் இருந்த லாக்கெட்டை அவளிடம் கொடுத்தாள் நந்து.

அந்த லாக்கெட்டை கையில் வாங்கிய சிவா அதை உற்றுப் பார்க்க அது தன்னிடம் வந்து சேர்ந்த நொடியை நினைத்தவளின் கண்கள் இருட்டிக் கொண்டு வர அடுத்த நொடி உடல் நடுங்க மயங்கிச் சரிந்தாள் பாவை.

அவளையே பார்த்திருந்த நந்துவுக்கு அவள் மயங்கி விழுந்ததும் ஓடிச் சென்று அவளை அடிதாங்கினாள்.

"சிவா சிவா, உனக்கு என்னடி ஆச்சு? கண்ணைத் திறந்து பாருடி... அய்யோ! சிவா..." என்று அவள் கத்த அவளின் கதறலில் அந்த விடுதியிலிருந்து அனைவரும் அங்கே வந்து நின்றனர்.

அடுத்த நொடியே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கே அவசரப் பிரிவில் அவளைச் சேர்த்திருந்தனர்.

விடுதியில் உள்ள மாணவிகள் சென்றுவிட நந்து மட்டும் அங்கே தனித்து விடப்பட்டாள்.

அவளின் கையில் அந்த லாக்கெட் இருந்தது. அந்த இரவு வேளையில் அடுத்து யாரை அழைக்கவென அவளுக்குச் சுத்தமாய் தெரியவில்லை.

இந்த நேரத்தில் தேவகியை தொந்தரவு செய்ய முடியாது. அவளின் தாயும் முக்கிய சொந்தக்காரர்களின் விசேஷம் என்று சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.

அப்பொழுது தான் அவளுக்கு சந்தோஷ் நினைவு வந்தது.

ஏனோ அவனைப் பிடித்தாலும் இதுவரை அதை அவனிடம் அவள் எப்போதும் காட்டிக் கொண்டதில்லை.

ஆனால் இந்தச் சூழ்நிலையில் அவன் அருகில் இருந்தால் போதும் என்று நினைத்தவள் அடுத்து எதையும் யோசிக்காமல் அவனை அழைத்துவிட்டாள்.

அதே நேரம் ருத்ராவுடன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த சந்தோஷின் அலைபேசி அடிக்க அதை டாஸ்போர்டின் முன்னே வைத்திருக்க யாரென்று பார்த்த ருத்ராவின் விழிகள் யோசனையாய் சந்தோஷை பார்த்தது.

"என்னாச்சு பாஸ்?" என்றான் இயல்பாய் காரை ஓட்டியபடி.

"ஏய் இடியட்! அந்த நந்தினி பொண்ணு உன்னைக் கூப்பிடுது. எடுத்து என்னன்னு கேளுடா..." என்றான் அவனைப் பார்த்து.

"பாஸ், இத்தனை நாளா என்னை அவ பின்னாடி சுத்த விட்டா இல்ல... இன்னைக்கு என்னோட டர்ன்... அவ என் பின்னாடி சுத்தட்டும் பாஸ்..." என்றான் விளையாட்டாய்.

"உன்னோட விளையாட்டுத் தனத்துக்கு அளவே இல்லையா சந்தோஷ்? இந்த நேரத்துல என்ன எமர்ஜென்ஸியோ எடுத்துப் பேசுடா..." என்றான் உத்தரவாய்.

அதற்குள்ளாக அலைபேசியும் கட்டாகிவிட அப்படியே விட்டு விட்டான் சந்தோஷ்.

"பாஸ், அதுதான் கட் ஆகிடுச்சு இல்ல..." என்றான் சிரித்தபடி.

ருத்ராவோ ஒரு முறை முறைக்க அடுத்த நொடியே தன் அலைபேசியை எடுத்து நந்தினிக்கு அழைத்தான்.

அடுத்த நொடியே எடுத்தவள், "சந்தோஷ், சீக்கிரமா பவித்ரா ஹாஸ்பிடல் வா..." என்று விட்டு அணைத்தாள்.

'என்ன இவபாட்டுக்கு ஹாஸ்பிடல் வான்னு சொல்லிட்டு வச்சிட்டா...' என்று யோசித்தவனின் தோளைத் தட்டிய ருத்ரா,

"என்னாச்சு?" என்றான் கேள்வியாய்.

"தெரியலை பாஸ், பவித்ரா ஹாஸ்பிடல் வர சொல்லிட்டு வச்சிட்டா..." என்றான் யோசனையாய்.

"ம்ம்... ஓகே ஹாஸ்பிடல் போ, போலாம்..." என்றான எதையோ யோசித்தபடி.

அடுத்த நொடி எந்தவிதமான வாயாடலும் இல்லாமல் பவித்ரா மருத்துவமனையை நோக்கி தன் வண்டியைச் செலுத்தினான் சந்தோஷ்.

மருத்துவமனைக்கு உள்ளே வேகமாய் சென்ற இருவரும் அவசரப் பிரிவின் வெளியே அமர்ந்திருந்த நந்தினியை நோக்கிச் சென்றனர்.

முன்பே பரிதவிப்புடன் அமர்ந்திருந்த நந்தினிக்கு அந்த நேரத்தில் சந்தோஷை கண்டதும் பயத்துடன் ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

அவள் ஓடி வந்து அணைத்ததும் அந்த இடத்திலேயே சிலையாய் நின்று விட்டான் சந்தோஷ்.

ஏனோ அந்த நொடி இந்த உலகிலேயே அவனே அதிர்ஷ்டம் செய்தவனாய் உணர்ந்தான்.

இக்கட்டான நேரத்தில் தன்னை தேடி இருக்கிறாள் என்பதே ஆண்மையின் கௌரவமாய் தெரிந்தது அவனுக்கு.

அதே நேரம் ருத்ரா அவனின் தோளைத் தட்ட அதில் தெளிந்தவன்,

"ஹேய் நந்து, என்னாச்சு? எதுக்கு இந்த அழுகை? இங்கே எதுக்கு வந்துருக்க? யாருக்கு என்னாச்சுடி?" என்றான் அவளின் கண்களைத் துடைத்த படி.

"சிவா சிவா, மூச்சுப் பேச்சு இல்லாம கிடக்கா சந்தோஷ். எனக்குப் பயமா இருக்கு. அவளுக்கு ஏதாவது ஒன்னுன்னா நிச்சயம் நான் உயிரோட இருக்கமாட்டேன் சந்தோஷ். எனக்கு அவ வேணும் சந்தோஷ்." என்றாள் அழுத கண்களை அவனின் நெஞ்சில் துடைத்தபடி.

அவள் கூறியதைக் கேட்டு சந்தோஷ் மட்டுமில்லை ருத்ரா கூட அதிர்ந்துதான் போனான்.

"என்னம்மா சொல்ற? சாயந்திரம் ரெண்டு பேரும் நல்லாதானடி இருந்தீங்க. இப்போ என்னடி இப்படி சொல்ற?" என்று பதற்றமாய் கேட்ட சந்தோஷ் ருத்ராவின் முகத்தைப் பார்த்தான்.

அவனோ சிவாவின் நிலையைக் கேட்ட பின்பு தன் உணர்வே அவனுக்கு இல்லை.

"நந்து, டாக்டர் இப்போ என்ன சொல்றாங்க?"

"எனக்கு ஒன்னும் தெரியலை. டாக்டர் பாத்துட்டு இருக்காங்க" என்றாள் அழுகையுடன்.

"சரி, நீ அழாத... இதோ பாரு இப்படி உட்காரு. நான் போய் பெரிய டாக்டரை பாத்துட்டு வரேன்" என்றபடி அங்கிருந்த சேரில் அவளை அமர்த்தியவன் ருத்ராவை தான் பார்த்தான்.

அவனோ மூடியிருந்த அறையையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"பாஸ்..." என்றபடி அவனின் தோளில் கை வைத்து அழுத்தினான்.

அவனோ வெறுமையாய் அவனைப் பார்த்தபடி இருந்தவன் சட்டென தன் தலையைக் குலுக்கிக் கொண்டவன்,

"நீ போய் ரஞ்சனுக்கு கால் பண்ணு..." என்றவனின் குரலில் என்ன இருந்ததோ!

சற்று நேரத்தில் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவரான ரஞ்சன் அங்கே வந்தார் வேகமாய்.

வந்தவர் ருத்ராவிடம் சென்று, "சொல்லுங்க ருத்ரா சார். நீங்க வரச் சொன்னதா சந்தோஷ் கால் பண்ணாரு..." என்றார் பதற்றமாக.

"அந்த அறையில் இருக்குற பொண்ணு எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட பொண்ணு. அவளைக் கொஞ்சம் பாருங்க ரஞ்சன்" என்றான் வெறுமையாய்.

"ஓகே சார்..." என்றவர் வேகமாய் அந்த அறையைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார்.

நந்தினியோ நடக்கும் எதையும் உணராமல் சிவாவின் நிலையே அவளுக்கு அச்சுறுத்தியது.

சற்று முன்பு வெளியே வந்த செவிலியர்கூட இன்னும் சிவா கண் திறக்கவில்லை என்றே சொல்லிவிட்டுச் சென்றுவிட அதுவே அவளின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

சந்தோஷுக்கு இருவரையும் நினைத்து மனம் வருந்தியது.

அந்தப் பெண் மேல் இருவருமே அதிகப்படியான பாசத்தை அல்லவா வைத்திருக்கிறார்கள்.

அதை நினைத்து வியந்து தான் போனான்.

நந்தினி கூட சிறுவயதிலிருந்து ஒன்றாய் இருந்ததால் வந்த பாசமாய் இருக்கலாம். ஆனால் ருத்ரா எப்படி என்று தான் புரியவில்லை.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த அறையிலிருந்து வெளியே வந்த தலைமை மருத்துவர் ருத்ராவின் முன்னே நிற்க, அவனோ அவரின் முகத்தை பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"அவங்க இப்போ ஓகே சார். ஆனா எதுவோ பலமான அதிர்ச்சி அவங்களை தாக்கியிருக்கு. அதுதான் இப்படித் தன்னிலை இழந்து இருக்குறாங்க சார். இனி எந்தவிதமான ஆபத்தும் இல்லை. ஷீ ஈஸ் ஆல்ரைட்..." என்றவர் ருத்ராவின் தோளைத் தட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அப்பொழுது தான் மூவருமே சற்று நிம்மதியாய் உணர்ந்தனர்.

தன்னிலை அடைந்த ருத்ராவோ, நந்தினியை கேள்வியாய் பார்த்து,

"அப்படி திடீர்னு என்ன அதிர்ச்சி அவளுக்கு நடந்துச்சு நந்தினி?" என்றான் அழுத்தமாய்.

அவளோ அவனைப் புரியாத புதிராய் பார்த்தவள் சந்தோஷை கேள்வியாய் பார்த்தாள்.

அவனோ அவளிடம், "அவர் கேக்குறதுக்கு பதில் சொல்லு நந்து. அவருக்கு தெரிஞ்சிக்கிற எல்லா உரிமையும் இருக்கு நந்து" என்றான் சந்தோஷ்.

"இல்லை எனக்குப் புரியலை. அப்படி என்ன உரிமை இருக்கு இவருக்கு அவகிட்ட?" என்றாள் புரியாத புதிராய்.

"எல்லாமே உனக்கு சொல்றோம். அதை அப்புறம் பாத்துக்கலாம். இப்போ சிவாக்கு என்ன ஆச்சுன்னு சொல்லு" என்றான் அதட்டலாய்.

அதில் சற்று முகம் வாடியவள், "எனக்குத் தெரியலை. உங்களைப் பாத்துட்டு வந்ததுக்கு அப்புறம் நானும் அவளும் சாப்பிட்டோம். அப்போதான் அவளோட காலேஜ் பேக்ல ஜூஸைக் கொட்டிட்டேன். அதை வாஷ் பண்ணி போட்றலாம்னு தான் அதை எடுத்து அதுல இருந்த திங்க்ஸை எடுத்து வச்சிட்டு வாஷ் பண்ணப் போனேன். அப்போ அந்த பேக்ல இருந்து ஒரு லாக்கெட் கீழே விழுந்துச்சு. அதை எடுத்துட்டுப் போய் அவகிட்ட கொடுத்தேன்.

அதை பாத்துட்டே இருந்தவ கொஞ்ச நேரத்துல உடம்பு வேர்த்து நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. கொஞ்ச நேரத்துல மயங்க ஆரம்பிச்சிட்டா. அப்புறம் ஹாஸ்டல்ல இருந்தவங்களை வச்சி தான் ஹாஸ்பிடல் அழைச்சிட்டு வந்தேன். அப்புறம் தான் உங்களுக்குக் கால் பண்ணேன்." என்று நடந்ததை அப்படியே அவர்களிடம் கூறினாள்.

அதைக் கேட்டு நெற்றியைச் சுருக்கி அவளைக் கேள்வியாய் பார்த்து,

"எங்கே அந்த லாக்கெட்?" என்றான் அவசரமாய்.

அவளோ அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் சுடிதார் பாக்கெட்டில் வைத்திருந்த அந்த லாக்கெட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

அதைக் கண்டவனின் விழிகள் அதிர்ச்சியில் திளைத்தது.

தன் கரங்கள் நடுங்க அந்த லாக்கெட்டை வாங்கியவன் அதிர்ச்சியாய் சந்தோஷை பார்த்தான்.

ஏன் சந்தோஷுக்கும் அதே அதிர்ச்சி தான்!


அப்படி இருவரும் அதிர்ச்சி அடையும் அளவுக்கு அந்த லாக்கெட்டில் அப்படி என்ன இருக்கிறது?

அடுத்த பாகத்துல பார்க்கலாம் செல்லம்ஸ்.

தீபம் ஏற்றும்...
✍️

 
நைஸ் எபிசோட் 🤩🤩
ருத்ரா தங்கையின் லாக்கெட்டா...???!!!
 
க்ளூ கிடைச்சிடுச்சு ருத்ராவுக்கு 😍 இனி சிவாவை விசாரிப்பானோ? அவளையும் பத்திரமா பாத்துக்கணும்
 
க்ளூ கிடைச்சிடுச்சு ருத்ராவுக்கு 😍 இனி சிவாவை விசாரிப்பானோ? அவளையும் பத்திரமா பாத்துக்கணும்
thank you sis
 

Advertisement

Advertisement

Back
Top