Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-22

Advertisement

praveenraj

Well-known member
Member

"அப்றோம் என்ன? ரெண்டு பேரும் அதே சேட்டைகளோடு வளர்ந்தோம். அப்போ எட்டாவது படிச்சோம். அப்போ தான் ஆதிரா படிக்கிற ஸ்கூல்ல வந்து சேர்ந்தான் இளங்கோ..."

"இளங்கோ? யாரது?" என்று கேட்டாள் நிவே.

"அப்போதைக்கு ஒரு ஸ்ட்ரேஞ்சர். அப்றோம் எங்க கேங்ல சேர்ந்த நண்பன், பிறகு ஆதிராவின் காதலன். இப்போ ஆதிராவின் எக்ஸ் லவ்வர். எனக்கும் நண்பன் இல்ல..."

அவன் சொன்னதும் அவன் சொன்ன விதத்தைப் பார்த்துக் குழம்பி அதிர்ந்தாள் நிவேதிதா. "என்ன சொல்றீங்க? ஆதிராவோட காதலனா?"

"ஹ்ம்ம்" என்று சிரித்தான் செழியன்.

"புரியில?"

"அதுவரை ரெண்டு பேரா இருந்த எங்க கேங் மூணு பேரா மாறுச்சு. எல்லா விஷயத்திலும் எங்க கூடச் சேர்ந்தான் இளங்கோ. நாங்க நல்ல ப்ரண்ட்ஸ் நல்லா ஊரசுத்துவது அப்படி இப்படினு ஜாலியா போச்சு..."

"நீங்க ஆதிரா கிட்ட உங்க லவ்வை சொல்லலையா?"

சிரித்தவன்,"எனக்கும் போய் ஆதிரா கிட்ட என் லவ்வை சொல்லணும்னு பலமுறை தோணும்... ஆனா நான் அதைச் சொல்லி ஒருவேளை அவ அதைத் தப்பா எடுத்துக்கிட்டு என்கிட்டே பேசுவதைக் கூட நிறுத்திட்டா? உனக்கு ஒரு ப்ரொவெர்ப் தெரியுமா? நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்று கையிலிருந்கும் கிலாக்காய் எவ்வளவோ மேல்னு சொல்லுவாங்க... எனக்கு அப்போ அது தான் முக்கியமா இருந்தது. அவ கூடவே இருக்கனும். பேசணும். விளையாடனும். அதே மாதிரி நானும் இருந்தேன். சோ தனியா எனக்கு அவகிட்டப் போய் எனக்கு உன்ன பிடிக்கும் ஆதிரானு சொல்ல மனசு வரல..."

"அப்போ ஆதிரா எப்படி இளங்கோவை லவ் பண்ணாங்க?"

அந்த நாள் நினைவுக்குச் சென்றான் செழியன். செழி மற்றும் ஆதி அன்று டியூசன் செல்ல அங்கே வராமல் இருந்தான் இளங்கோ. அன்றைய தினம் கழிந்து அடுத்த இரண்டு தினமும் அவன் வரவில்லை. உடல் நலம் சரியில்லை. ஆனா அந்த மூன்று நாட்களும் செழியனைக் கேள்வியால் படுத்தியெடுத்து விட்டாள் ஆதிரா. அப்போதான் செழியனே அந்தக் கேள்வியைக் கேட்டான்.

"ஏன் ஆதி நீ இளங்கோவை அவ்வளவு மிஸ் பண்றியா?" என்றதும் அவளும் அவளின் குண்டு கண்களை உருட்ட செழியனுக்கு ஒன்று நன்றாகவே புரிந்தது. அது ஆதிராவுக்கு தன்னை விட இளங்கோ என்றால் விருப்பம் என்பது.

அப்போது சரியாக வெளியில் மழை வருவது போல் கருமேகங்கள் சூழ மண்வாசம் அவன் நாசியைத் தீண்ட ஏனோ சொல்ல முடியாத ஒரு நிலையில் இருந்தான் செழியன். மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஒலியெழுப்ப,"செழியன் செழியன் ஆர் யூ ஓகே?" என்றாள் நிவேதிதா.

"எஸ்..." என்றவன்,"இந்த மாதிரி ஒரு மழை நாள்ல தான் மேகம் கருத்திருக்க மின்னல் வெட்ட இடி முழங்க மண்வாசம் நாசியைத் தீண்ட அந்த பகல் மாலை பொழுது சட்டென தன் மஞ்சள் நிறத்தை விட்டு கரு நிறத்தைத் தழுவிக்கொள்ள அந்த ஒன்று ரம்மியமான மாலை வேளையில் பதினோராம் வகுப்பின் இறுதியிலிருந்த ஆதிரா என்கிட்டே வந்து என்னையே பார்த்து பார்த்து சிரித்தாள். எனக்கு ஒண்ணுமே புரியில... என்ன ஆதி ஏன் இப்படி வித்யாசமா இருக்க? என்ன ப்ரோப்லம்னு கேட்டேன்"

"செழி, இளங்கோ ஓகே சொல்லிட்டான் டா..." என்று சொல்லி அவனை இறுக்கி அணைத்தாள் ஆதிரா. அவள் சந்தோஷத்திற்காக மேகம் தன் இருப்பை மழையாய்க் கொட்டி தீர்த்து ஆர்பரித்ததோ? இல்லை இந்நேரம் தன் மனதில் உள்ளதை வெளியே சொல்ல முடியாமல் பொங்கிய கண்ணீரை எங்கே ஆதிரா கண்டுக்கொள்வாளோ என்று நினைத்த செழியனைக் காப்பாற்ற மழை பொழிந்து அவனுக்கு பதிலாக அழுத்ததோ? அது அந்த மேகத்திற்கே வெளிச்சம்...! மழை அவர்களை நனைக்க சந்தோசமாய் அவள் வீடு நோக்கிச் சென்றாள் ஆதிரா. சோகமாய்... சோகம் என்று கூடச் சொல்ல முடியாது. இது தான் அவளின் விருப்பம் அவளின் சந்தோசம் என்றால் எனக்கும் இதில் சந்தோசம் தான் என்ற மனதுடனே செழியனும் வீட்டிற்குச் சென்றான். சில அன்பு எதையும் எதிர்பார்க்காது. இது நமக்குக் கிடைக்கவில்லை என்று எண்ணி தீய எண்ணம் கொள்ளாது. பொறாமை கொள்ளாமல் அவர் நலம் வேண்டியே யோசிக்கும். செழியனுக்கு ஆதிரா மீதிருந்தது அப்படிப்பட்ட அன்பு தான். ஏன் இப்போது இருப்பதும் அதே அன்பு தான். அதில் மாற்றமேதும் இல்லை...

அன்று செழியனின் வாடிய முகத்தைக் கண்ட அவன் தந்தை அவனிடம் என்னவென்று கேட்க எதையும் வெளியே சொல்லமுடியாமல் அவரைக் கட்டிப்பிடித்து அழுத செழியனைக் கண்டு பதறித் துடித்தார் அவன் தந்தை. செழியனின் தந்தை ஒரு ஆசிரியர் என்பதாலோ இல்லை தன் மகன் மீதுள்ள பாசத்தினாலோ இல்லை செழியனின் குணநலன்களாலோ எதுவென்று சொல்லமுடியாத ஒன்றின் காரணமாய் அவனை எப்போதுமே ஒரு நண்பனாக மட்டுமே நடத்துவார். அவரிடம் அவனால் எல்லாமும் தைரியமாகப் பேச முடியும்.

'ஆதிரா' என்றாலே அவன் கண்களில் வரும் அந்த ஒளியைப் பற்றி அவருக்குத் தெரியாதா என்ன? மெதுவாக மகனிடம் பேச அவனும் எல்லாமும் சொன்னான். அவருக்கும் வருத்தம் தான். வருத்தம், இந்த வயதில் காதல் என்பதைக் கண்டு அல்ல... இது காதலா ஈர்ப்பா என்று அவருக்கும் தெரியும். எல்லாம் சொன்னவன் இறுதியாக, "இல்லப்பா ஆதிராக்கு இளங்கோவைத் தான் பிடிச்சிருக்கு. அவங்க தான் பர்பெக்ட். அவன் கூடத் தான் அவ சந்தோசமா இருப்பா... அவளுக்கு நான் என்னைக்குமே ஒரு ஃப்ரண்ட் மட்டும் தான். நான் ஒரு ப்ரெண்டா எப்பயும் அவ கூட இருப்பேன்..." என்றவன் அதன் பின் தன் மொத்த கவனத்தையும் படிப்பில் செலுத்தினான். அவன் நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சியடைய கவர்மெண்ட் கல்லூரியிலே இன்ஜினியரிங் சேர்ந்தான்.

ஆதிரா அவள் விருப்பமான ஜர்னலிசம் சேர இளங்கோவும் இன்ஜினியரிங் சேர்ந்தான். அவன் குடும்பம் மீண்டும் மாற்றலாகிச் செல்ல அவர்கள் காதல் வளர்ந்துகொண்டே இருந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் ஆதிராவை விட்டு தெரிந்தே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டான். என்ன தான் ஆதிரா சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவள் தனக்கில்லை என்ற அந்தக் கசப்பான உண்மை அவனை வாட்டியது மட்டும் நிச்சயம். கூடவே அந்தச் சமயத்தில் அவன் தங்கைகளும் வளர்ந்து வர அவன் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது தான் அவன் தந்தை திடீரென இறந்து விட்டார். 'என்ன நடந்தாலும் யார் எதிர்த்தாலும் நம்ம மனசு சொல்றதைச் செய்யணும் செழியா. அப்போ நமக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும் பாரு? அது அது தான் இங்க எல்லாம். inner peace (மன அமைதி) தான் இங்க முக்கியம். அது தான் பெரிய சொத்து. அது இருந்தா போதும் எந்தச் சூழ்நிலையையும் கடந்து வந்திடலாம். என்னோட ஆசை என்ன தெரியுமா? எனக்குச் சோறு போட்ட, போடுற இந்த டீச்சிங் வேலையைச் செய்யும் போதே என் உயிர் போயிடனும். அப்போ தான் நான் நிம்மதியா சொர்கம் போய்ச் சேருவேன்..." என்று தான் அவனிடம் அவர் அடிக்கடிச் சொல்லுவார். அவர் ஆசை படியே அவர் உயிரும் சென்றது.

தோளில் பாரம் கூடவும் அவனுக்கும் மேற்கொண்டு படிக்க ஆசை இருந்தது தான். இங்கே சிலருக்கு எதையும் ஆசைமட்டும் தான் பட முடியும்! படிப்பை முடித்ததும் வேலை, முதலில் காஞ்சனா படித்து முடித்தாள். பிறகு அவளுக்குத் திருமணம் முடிய அடுத்து இனியா என்று இப்படியே காலம் ஓடிவிட்டது. இளங்கோ ஒரு சுயநலவாதி என்று அவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும். ஆனால் இவ்வளவு சுயநலவாதியாக இருப்பான் என்று செழியன் கனவில் கூட நினைக்கவில்லை.

காதலுக்காக தன்னுடைய தந்தையின் அனுமதியைப் பெற அவரின் மனதை மாற்ற நிறைய போராடினாள் ஆதிரா. அவனும் தான் போராடினான்.அதில் தவறு சொல்ல முடியாது. எல்லாம் ஒரு அளவுக்குத் தான் முடியும். இங்கே குடும்பத்தோடு வளர்க்கப் படுபவர்களின் மொத்த பலமாகவும் பலவீனமாகவும் இருப்பது அதே குடும்பம் தான். ஆதிராவுக்கு அக்குடும்பம் பலமாக இருக்க இளங்கோக்கு அதுவே பலவீனமாகப் போக, வேறு வழியின்றி முயன்று மறுத்து காத்திருந்தாள். இளங்கோக்கு திருமணம் ஆகிவிட அத்தனை பெரிய ஏமாற்றத்தை ஆதிரா சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனும் போராடுவான் எதிர்ப்பான் என்றிருக்க அவனோ அதை எதையும் செய்யாமல் போகவும் அவளுக்கு மனம் வெறுத்தது. அப்போது தான் அவளுக்கு அடிக்கடி இளங்கோவைச் செழியன் சுயநலவாதி என்று சொல்லுவதன் அர்த்தம் விளங்கியது.

தன் தந்தையின் அரசியல் செல்வாக்கை அப்படியே உபயோகப் படுத்த நினைத்த அவள் மாமன் தர்மதுரை, அவளை இங்கிருந்து கிளப்ப அரவிந்திற்கு அவளைத் திருமணம் செய்து வைத்தார். அவளின் தந்தைக்கு அவளை வெளியே அனுப்ப மனமில்லை தான். ஆனால் அவள் இங்கே இருந்தால் தன்னால் காய்நகர்த்த முடியாது என்று தான் பிளான் பண்ணி அமெரிக்கா அனுப்பினார் அவள் மாமன்.

ஆதிரா வாழ்வில் இளங்கோ இல்லை என்றதுமே உண்மையில் வருந்தினாலும் செழியனுக்குள் கொஞ்சம் நிம்மதி குடிகொண்டது. அட்லீஸ்ட் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றதே என்ற எண்ணம் தான் அது. அந்நேரத்தில் செழியனின் அன்னை தான்,"நான் வேணுனா பெண் கேட்கட்டா?" என்று கூற, இரண்டு விஷயம் அவனைத் தடுத்தது. முதலில் தங்கைகளுக்குத் திருமணம் முடித்த பிறகு தான் அவன் திருமணமென்று இருந்த அந்த உறுதி. இரண்டாவது அவள் அவனை ஒருபோதும் அந்த இடத்திலிருந்து பார்க்கவில்லை என்பதும் அவனுக்குத் தெரியுமே. கூடவே அவன் குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை போன்றவைகள் அவனைத் தடுத்தது. எல்லோருக்கும் எல்லாமும் நினைத்த நேரத்தில் கிடைத்துவிடாதே? இனி ஆதிரா தன் வாழ்வில் இல்லை என்று நினைக்கும் போது தான் அவன் கண்ணில் மீண்டும் அவளே கிடைத்தாள். இப்போது தான் அவனுக்கு இன்னும் நெருடல் வலி எல்லாமும் வந்தது. ஒருவழியாக எல்லாமும் சொல்லிவிட்டு நிவேதிதாவைப் பார்த்தான் செழியன்.

அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 'காதலை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளே வைத்துக்கொண்டு இவ்வளவு காதலிக்க முடியுமா? அதும் காதலில் கண்ணியம் முக்கியம் தான். ஆனால் இத்தனை கண்ணியமாக?' என்று அவளால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை.

"நீங்க உங்க காதலை எப்போ தான் சொல்லுவீங்க செழியன்?"
அவன் சிரித்தான்.

"ஏன் சிரிக்கறீங்க? இப்போ தான் அவங்க வாழ்க்கையில யாருமே இல்லையே? சோ இப்போ சொல்லலாமே? என்ன தப்பு இருக்கு?"

"இப்போ நான் காதலைச் சொன்னால் என்ன நினைப்பா? இவ்வளவு நாள் இவ்வளவு வருஷம் எதையுமே சொல்லாதவன் இப்போ வந்து சொல்றானேனு தப்பா நினைக்கமாட்டாளா? அதுமில்லாம இப்போ அவ முழுசா என்ன டிபென்ட் பண்ணியிருக்கா. இப்போ நான் சொன்னா அது வேற மாதிரி ஆகிடும்... அதாவது அவளை நான் கார்னெர் செய்யுற மாதிரி..."

"சரி எப்போதான் சொல்லுவீங்க?"

"ஒருவேளை என்கூட இருக்க இந்த நாட்கள்ல எப்பயாவது அவ கண்ணுல எனக்கானக் காதலை நான் எங்கேயாவது எப்பயாவது பார்த்தா அப்போ வேணுனா சொல்லலாம்..."

"ஒருவேளை அவங்க அதை உணரவேயில்லைனா?"

"இப்போ எப்படி இருக்கோமோ அப்படியே இருப்போம்..."

"இது பைத்தியக் காரத்தனமா இல்லயா?"

"நீங்க எப்போ என் காதலுக்கு சப்போர்ட் பண்ண ஆரமிச்சிங்க நிவேதிதா?"

"செழியன் நீங்க ஒரு அபூர்வ பிறவி. ஆர்டர் பண்ணி செஞ்சாலும் உங்களைப் போல் ஒரு பீஸ் கிடைக்கறது சிரமம்... அப்போ ஒருவேளை அவங்க நோ சொல்லிட்டா எனக்கு எஸ் சொல்லுவீங்களா?" என்ற ஒரு எதிர்பார்ப்பு அவள் கண்களில் தெரிந்தது உண்மை.

"உண்மையைச் சொல்லனும்னா என் மனசுல ஆதிரா இருந்தா. அவ எனக்கு இல்லைனு தெரிஞ்சதும் அவளை விட்டு வெளிய வர முடிஞ்ச என்னால இப்போ வரை வேற யாரையும் நினைக்க முடியில. இப்போ திரும்ப என் லைப்ல ஆதிரா இருக்கா. இது எவ்வளவு நாளைக்கு இல்ல என்ன ஆகும்னு எனக்கே தெரியில? சோ நீங்க பெட்டெர் உங்க வீட்டுல சொல்லி வேற ஆளைப் பார்க்கலாம்..."

"ஓகே, ரெண்டு மாசம் டைம். அதுக்குள்ள நீங்க ஆதிரா கிட்ட உங்க லவ்வை சொல்லணும்..." என்று உறுதியாகச் சொன்னவளைக் கண்டு திகைத்தவன்,

"இல்லைன்னா?"

"நான் ஆதிரா கிட்ட என் லவ்வை சொல்லி உதவி கேட்பேன்..."

"இது பற்றி அவளுக்குத் தெரியும்..."

"ஓ சூப்பர்! அப்போ என் வேலை ரொம்ப ஈஸியா போயிடுச்சி..."

"பட் நான் உங்களுக்கு ஓகே சொல்லவே இல்லையே?"

"ஒருவேளை ஆதிரா உங்களுக்கு நோ சொன்னா நீங்க எனக்கு ஓகே சொல்லுவீங்க. சொல்ல வெப்பேன்..." என்று கண்ணடித்துவிட்டுச் சென்றாள் நிவேதிதா. செழியனுக்குள் தன்னையும் அறியாமல் ஒரு பயம் சூழ்ந்தது.

அங்கிருந்து சென்றவள்,'செழியன், நீங்க என் லைப்ல இல்ல எனக்குத் தெரியும். அட்லீஸ்ட் இப்போவாது நீங்க உங்க காதலை ஆதிரா கிட்டச் சொல்லுவீங்களானு பார்க்கலாம்னு தான் உங்களை இப்படி கார்னெர் பண்றேன்...' என்று நினைத்தபடியே சென்றாள் நிவேதிதா. அவளுள்ளும் பெரிய ஏமாற்றங்கள் இருக்கிறது தான். இருந்தும் செழி தன் மீது ஒருகாலும் காதல் வராது என்று அவன் பேச்சிலே அவள் அறிந்துகொண்டாளே! (தொடரும்...)
have you all voted today?
 
ரொம்ப ரேர் பீஸ் எல்லாம் ஆர்டர் கொடுத்து செஞ்சாலும் அதே மாதிரி கிடைக்காது ???
ha ha yes thank you??
 
Top