Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் 14.2

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
நகரின் முக்கியமான பகுதியில் பிரமாண்டமாய் அமைந்திருந்த அந்த மண்டபம் முழுவதும் அலங்கார விளக்காலும், வண்ண வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு, மணமகளின் வரவிற்காய் காத்திருந்தது. மண்டபத்தின் வாயிலில் வீற்றிருந்த பதகையில், " செழியன் வெட்ஸ் இதழினி " என்று தங்க நிற எழுத்துக்கள் மின்ன, அதனுள் இருவரின் புகைபடமும் இணைந்து வருவோரை பரவசபடுத்தி கொண்டிருந்தது.

குறைவான நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்று சொன்னால் நம்பிட இயலாத வகையில், அனைத்து விசயங்களும் மிக மிக பிரமாண்டமாய் செய்து முடிக்கப்பட்டிருந்தது, மதியின் அழகான திட்டமிடுதலில்….

சந்துருவும், செழியனும் வெளி வேலைகளோடு, அவர்களின் தொழிலையும் பார்க்க வேண்டி இருந்ததால், முக்கிய விசயங்களை மட்டும் அவர்களை கொண்டு முடித்தவர், மற்ற அனைத்தையும், அதற்கான ஏஜென்ட்டை கொண்டு சிறப்பாக செய்திருந்தார், தனது ஆசை மகனின் திருமணத்திற்காக…

வீட்டிலிருந்து புறப்பட்ட கணம் முதல், அபிதாவும், வினிதாவும், ஆனந்தோடு சேர்ந்து இதழினியை கலாய்த்த படி வர, அந்த ஏசி காரிலும் வேர்த்து போனது இதழினிக்கு..

அதே மனநிலையில், இதழினி இருக்கும் போது, மண்டபத்திற்குள் கார் நுழைய, அவளின் மனமோ படபடத்து போனது. அதனால் எதையும் பாராமல், வியர்வையால் ஈரமாகி போன கரத்தை ஒன்றோடென்று பிணைத்துக்கொண்டு, எங்கே தனது இந்த பதட்டம் தனக்கு மயக்கத்தை தந்திடுமோ?! அதனால் தனது தந்தைக்கு எதாவது அவப்பெயர் வந்திடுமோ?! என்ற குழப்பத்தோடு… காரிலிருந்து தரையில் கால் பதித்தாள் இதழினி..

வாசலில் அவள் இறங்கியதும், வாணவேடிக்கையோடு, வரிசையாக வந்த பலரும் பலவிதமான ஆலம் சுற்றி வரவேற்க, தன் குடும்பம் சூழ, அந்த மண்டபத்தில் வலது கால் எடுத்து வைத்து நுழைந்தாள் இதழினி.

அவள் வந்து இறங்கிய நொடியே அவளை பார்த்தவன், "எங்கே தன் விழியை மூடினால் கூட காட்சி மறைந்திடுமோ!" என்றவாறு சிலையாகி போனான், செழியன்.

சந்துருவோடு சேர்ந்த அவர்களின் நண்பர்களின் கேலியும், கிண்டலும் கூட அவனின் அந்நிலையை மாற்றவில்லை.
எத்தனை வருட கனவிது. அதிலும் தான் தேர்ந்தெடுத்த புடவையில், முழு மணமகள் அலங்காரத்தில்… தன்னவளின் அழகு மேலும் அவனை பித்தனாக்கி, சிலை போல நிற்க வைத்ததில் வியப்பேது.

"மச்சான், இவன இப்படியே விட்டா நாளைக்கு கல்யாணம் கூட பண்ணாம பார்த்துட்டே இருப்பான் போலடா. எதாச்சும் செஞ்சு அவள எழுப்பி விடுங்கடா, தூங்கறானா?! முழுச்சிருக்கானா.?! தெரியாத மாதிரியே நிக்கறானே.

மாப்பிள்ளை மாதிரியான.. "ஸ்டேச்சூ" ன்னு கொண்டு போய், என்ட்ரன்ஸ்ல, வரவேற்புக்கு வச்சிட போறாங்க" என்ற சந்துருவின் வார்த்தையில், நண்பர்கள் குழு சிரிப்போடு, செழியனை உசிப்பிவிட, அப்போது தான் நடப்பிற்கு வந்தவன்,

அவர்கள் முன்பு, தான் நின்ற நிலை புரிய சிறு சிரிப்போடு, வெக்கத்தை வெளிப்படுத்த.. "ஓ.. " என்ற நண்பர்களின் ஆர்ப்பரிப்பில், மேலும் முகம் சிவக்க நின்றான் செழியன்.

இதழினி, சரியாக மேடை ஏறும் போது, ஒரு புறம் கேட்ட பயங்கரமான ஆர்ப்பரிப்பில், தன் பார்வையை அந்த திசை நோக்கி திருப்பிட, அங்கிருந்த செழியனையும், சந்துருவையும் பார்த்த நொடி.. 'என்ன மாதிரி உணர்ந்தாள்!' என்பது புரியாத புதிர் தான்.

மனதில் இருந்த இறுக்கம் மெல்ல தளர, பிடிமானம் இல்லா படகாய் தடுமாறியவளை, நல்ல வேளையாக பின்னே வந்த அபிதா தாங்கி பிடித்திருந்தாள். முதலில் அதிர்ச்சியும், பின் அவனை பார்த்துவிட்ட ஆசுவாசமும் வெளிப்பட்ட அதே நேரம், அவன் இங்கே எப்படி?! எதற்கு வந்திருப்பான்?! என்ற சில நொடி அதிர்வுக்கு பின், அவனின் உடையும், அவனுடன் இருக்கும் சந்துருவினால், செழியன், மது மேடத்தின் மகனாய் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இனி தன் மனதில் வந்த நேசத்தை, பொய் முலாம் பூசி மறைத்திட வேண்டிய அவசியமில்லை என்ற நிம்மதியும் அடுத்தடுத்து தோன்றிட, செழியனிடமிருந்து தனது பார்வையை விலக்காது நின்றிருந்தாள், சில நிமிடங்களுக்கு முன் செழியன் நின்ற அதே கோலத்தில்….

அவளையே பார்த்திருந்த செழியனுக்கு, அவளின் கண்ணில் வந்த ஒரு நொடி வெளிச்சம், அவன், அவளிடம் இத்தனை வருடமாக எதை எதிர்பார்த்திருந்தானோ அதற்கு பதில் கிடைத்துவிட்ட போதும்,
அவளின் தடுமாற்றம், அடுத்தடுத்த பாவங்கள், அவளை எப்படியான மனஉளைச்சலை, தனது செயல் தந்திருக்கும் என்பது மிகவும் கால தாமதமாக உணர்த்தியதில், சிறு குற்ற குறுகுறும்பு எழுவதை தவிர்க்க தான் அவனால் முடியவில்லை.

அந்த குற்ற உணர்வு, அவனின் முகத்தில் இதுவரை இருந்த சிரிப்பை முற்றிலும் மறைத்திட, முகம் மெல்ல கடுமைக்கு மாறி போனது. அவனின் மாற்றத்தை முதலில் கவனித்த சந்திரு, "செழியா ஏன்டா, என்னாச்சு திடீர்ன்னு டல்லாகிட்ட?!" என்று மற்றவர் அறியாத வாறு மெதுவாக கேட்க,
 
அவனின் விழிகள், இதழினியின் பக்கம் செல்வதை கண்டு, அங்கு பார்த்தவனுக்கு பெரிதாய் யாதொரு மாற்றமும் தெரியாது போக, மீண்டும் கேள்வியாய் செழியனின் முகம் பார்த்தான். அதற்கு மேல் அங்கிருக்க முடியாது, விரைந்து அவர்களுக்கு அருகே இருந்த, மணமகன் அறைக்குள் நுழைந்தவனை, பின் தொடர்ந்த அனைத்து நண்பர்களையும், ஏதேதோ காரணங்கள் சொல்லி வெளியே நிறுத்திய சந்துரு, தான் மட்டும் உள்ளே செல்ல, தனது தொடையில் முழங்கைகளால் முட்டு கொடுத்து, தன் கரத்தில் முகம் புதைத்து, தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த செழியனை அதிர்ச்சியோடு பார்த்தான் சந்துரு.

"டேய், செழியா.. என்னடா? எதுக்கு இப்ப இப்படி உக்காந்திருக்க?!" என்று ஆறுதலாய் அவன் தோளில் கரம் வைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவனின் நிலை கண்டு, மேலும் எதையுமே கேட்காது, அவனை தன் வயிற்றோடு அணைத்து, அவனின் முதுகில் ஆறுதலாய் வருடி விட துவங்கினான்.

சந்துருவின் செயலில், சில நிமிடத்தில் தன்னை மீட்டுக்கொண்ட செழியன், "சந்துரு நான் தப்பு பண்ணிட்டேன் டா. பாவம்டா, என் லிப்.... இதழினி.. நான் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து செய்தது, அவளுக்கு எத்தனை ஹர்ட்டிங்கா இருந்திருக்குமில்ல.. ச்ச.. அவள எந்த விதத்திலையும் வேதனை படுத்தாம, காலம் பூரா சந்தோஷத்தை மட்டுமே, கொடுக்கணுமின்னு ஆசை பட்ட நானே, இப்ப அவளை கஷ்டப்படுத்தி பார்த்துட்டேனேடா.." என சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

அவனை தேடி அறைக்கு வந்த, அபிதா, "மாமா, நீங்க இவ்வளவு ஃபீல் பண்ற அளவுக்கு இதுல உங்க மேல எந்த தப்பும் இல்ல.." என்றதும், "என்ன அபி சொல்ற?!" என பரபரப்பாய் கேட்ட செழியனிடம் வந்தவள்,

"ஆமாம் மாமா, நீங்க வந்து போன அன்னைக்கே அக்காகிட்ட, உங்க போட்டோ காட்டியாச்சு, அதோட பத்திரிக்கையையும், நானே கொடுத்து பார்க்க சொல்லியும், அக்கா பார்க்காம போனது, அவ தப்பு தானே. அக்கா மனசுல இருந்த குழப்பத்தை எங்கிட்ட சொல்லியிருந்தா, அது அப்பவே தீர்ந்திருக்கும். அத விட்டுட்டு, அவங்களா தேடிக்கிட்ட கஷ்டத்திற்கு, நீங்க எப்பவும் பொறுப்பில்ல.

அதோட, இப்ப தான் என்கிட்ட, நீங்க ரூமுக்கு போனத பார்த்துட்டு, நீங்க இப்படி தான் ஃபீல் பண்ணுவீங்க. போய் சமாதானப்படுத்துன்னு அனுப்பிவச்சாங்க, அக்கா. ஆனா மாமா, சும்மா சொல்லக்கூடாது… நேருல பார்த்து பலவருஷம் பழகி, கல்யாணம் பண்ணிக்கிறவங்க கிட்ட கூட இத்தனை புரிதல் இருக்காது.

உங்க ரெண்டு பேருக்கும் இருக்கற புரிதலை பார்த்தா பெருமையாவும் இருக்கு, அதே சமயம் கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு.. சோ, தேவையில்லாத விசயத்தை நினைச்சு குழம்பாம ப்ரஷ்ஸ்ஸா ரெடியாகி வாங்க, எங்க அக்கா உங்களுக்காக வெயிடிங்…" என்றவளை நன்றியோடும், தந்தை போன்று பாசத்தோடும் தலையை வருடியவன், மனமார, "தேங்க்ஸ்டா.." என்றிட,

"மாமா, என்ன வெறும் தேங்க்ஸ் சொல்லி எஸ்கேப் ஆக பார்க்கறீங்க. அதெல்லாம் முடியாது… நீங்க எப்படி, எங்க அக்கா மேல உயிரா இருக்கீங்க, அப்படி ஒரு பையனை எனக்கு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கறது உங்க பொறுப்பு…" என்று கண்சிமிட்டியவளின் வேடிக்கை பேச்சிற்கு,

"அவ்வளவு தானேடா, டன்.. அடுத்த மூகூர்த்ததுலயே முடுச்சிடலாமா, மாப்பிள்ளை பார்த்து.." என்றதும், அதிர்ச்சியில் விழிவிரித்தவள், "கெட்டது குடி… மாமா நான், சும்மா விளையாட்டுக்கு சொன்னா... என் படிப்புக்கு தடா போட்டுடுவீங்க போலவே.. நான் எஸ்கேப்புப்பா… சீக்கிரமா வாங்க… மேடைக்கு.." என்ற படி அந்த அறையிலிருந்து ஓடினாள், தன் பேச்சால் ஒருவனை பித்தனாக்கி கொண்டிருப்பதை உணராமலேயே…..
 
Top