Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் 14.1

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
இதயம் கேட்கும் காதல்...

பகுதி 14.1

செழியன் ஆசையோடும், இதழினி தவிப்போடும் காத்திருந்த தருணம் அழகாய் துவங்க, இதழினியின் மனமோ நிலையில்லாது தவிக்க துவங்கியது. ஏற்கனவே மணமகன் பற்றிய குழப்பத்தில் இருந்தவளுக்கு, இனி இந்த வீடும் தனது உறவும், தன்னை விட்டு விலகி நிறுத்தப்படும் என்பது அவளின் வேதனையின் அளவை மேலும் பல மடங்காக்கிட, 'இப்படி ஒரு திருமணம் தனக்கு தேவையா?!' என்ற சிந்தனையிலேயே தனதறையில் வீற்றிருந்தாள் இதழினி.

தங்களின் அழைப்பை ஏற்று வந்திருக்கும் சில உறவுகளுக்காகவும், அருகே வசிக்கும் சில நல்ல உள்ளங்களின் வருகையாலும் இதழினியின் இல்லம் நிறைந்து வழிய, அபிதாவிற்கும், வினிதாவிற்கும் அவர்களுக்கு தேவையானதை செய்வற்கே தடுமாற்றம் இருந்து கொண்டிருக்க, அவர்களால் இதழினியை கவனிப்பது குறித்து சிந்திக்க கூட இயலவில்லை.

மாரியப்பனும், ஆனந்தும் வருவோரை வரவேற்பதிலும், மண்டபத்திற்கு எடுத்து செல்ல வேண்டியவற்றை பெரியோருடன் ஆலோசித்து எடுத்து வைக்கவுமே நேரம் சரியாக இருந்தது.

இதழினியை பார்க்கவென, எல்லாரும் அவளிடம் செல்ல, தனது தவிப்பை மறைப்பதற்காக, வெக்கம் எனும் போர்வையில், தலைகுனிந்தவள் யாரின் முகத்தையும் பார்க்கவும் இல்லை, அதே போன்று அவர்களின் கேள்விகளுக்கும் சுருக்கமான பதிலை சொல்லி நிறுத்த, இதழினியின் குணம் பற்றி நன்கு அறிந்திருந்தவர்களுக்கு, அவளின் இந்தவித பேச்சு, திருமண நாளை எதிர்நோக்கும் பெண்ணின் கூச்சத்தால் வந்ததாக எண்ணி, சிரிப்போடு அவர்களுக்குள் பேசிட துவங்கினர்.

மண்டபம் நோக்கி செல்ல வேண்டிய தருணம் நெருங்க, செழியன் வீட்டிலிருந்து முறையாக அனுப்பப்பட்ட புடவை, நகைகளும், சீர்வரிசையும் அவர்களை வந்தடைந்தது. சில சம்பிரதாயங்கள் முடிவு பெற, மணமகளாய் இதழினியை அலங்கரிக்கவென, செழியனால் ஏற்பாடு செய்யப்பட்ட, நகரின் மிகவும் பிரபலமான அழகு நிலையத்தை சேர்ந்தவர்கள், இதழினிக்கு அந்த புடவை நகைகளை அணிவிக்க ஆரம்பித்தனர்.

எந்த வித ஒப்பனையும் இல்லாமலேயே ஜொலித்த இதழினிக்கு, மேலும் அவளின் அழகை கூட்டுவது போன்று அலங்காரம் செய்வது என்பது, அவர்களுக்கே சவாலான ஒன்றாகி போனது. அனைத்தும் முடிந்து பார்த்த அவர்களாலேயே கண்ணை அவளை விட்டு விலக்கிட இயலாது இருக்க, தங்களின் இத்தனை வருட அனுபவத்தில், இது போன்ற அனைத்து லட்சணங்களும் நிறைந்த பெண்ணை கண்டதில்லை என்று சொல்லி, திருஷ்டிக்காக அவளின் இடது கன்னத்தில் கருப்பு மையால் பெட்டிட்டு அழைத்து வந்தனர்.

சாதாரண உடையில், எந்த ஒப்பனையுமின்றி இதுவரை பார்த்த பெண்ணை, பொன், வைர நகை பூட்டி அழைத்து வர, அவளின் அழகில் மாரியப்பனும், அபிதா, வினிதாவும் கூட அசந்து தான் போனார்கள்.

"அக்கா, சூப்பரா இருக்க போ. இப்படியே உன்னை மாமா பார்த்தாரு, அவ்வளவுதான், காலையில கட்ட வேண்டிய தாலி இப்பவே கொடுங்க கட்டிடுறேன்னு சொல்ல போறாரூ... " என் வினிவின் பேச்சில் எல்லாரும் சிரிக்க,

மனதில் சொல்ல முடியா தவிப்புடன் தலைகவிழ்ந்தாள் இதழினி. அங்கிருந்தோர் அனைவரும் அவளின் தலை குனிவை வெக்கமாய் நினைத்து, "ஏய் குட்டி, கம்முன்னு இரு.." என வினிதாவின் வாயை அடைத்தனர். இல்லாவிட்டால் மேலும் அவள் சீண்டிக்கொண்டி நேரம் கடத்துவாள் என்பதால்…

தனது தந்தையிடம் ஆசீர்வாதம் பெற வந்த மகளை கண்ட மாரியப்பன், தங்க சிலையாய் நின்ற தன் மகளின் தலையில் தன் நடுங்கும் கரம் கொண்டு வருடி, கண்ணில் நீர் வடிய, கரகரத்த குரலில் ஆசீர்வாதம் செய்ய, தந்தையை அனைத்துக்கொண்ட இதழினியின் கண்களும் கண்ணீரை பொழிய ஆரம்பித்தது..

தந்தையோடு சேர்ந்து, அபிதாவும் வினிதாவும் இதுவரை இருந்த நிலைக்கு எதிராய் கண்கள் கலங்க, இதழினியை அணைத்துக்கொண்டனர்.

அபி, வினிவோடு இதழினியின் இணைவை பார்த்திருந்த ஆனந்திற்கு, செழியனின் சொல் ஒவ்வொன்றும் நினைவில் ஆட, இதுவரை இந்த அனைத்து மனக்கசப்பும் மாறி, தனது அக்கா இன்றோடு தங்களை விட்டு பிரிய போகிறார், இனி அவர் இன்னொருவரின் மனைவி. தன்னோடு போராடும் அக்கா அல்ல.. என்பதோடு,

பெண்கள் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் மாற்றி நடப்படும் செடி போல, அவர்களின் வலி எத்தகையதாய் இருக்கும். யாரென தெரியா உறவுகளை இனி தன் உயிரான உறவாய் ஏற்று இறுதிவரை அவர்களின் சுயம் தொலைத்தாலும் அவள் வாழ வந்த இல்லத்தின் நிம்மதிக்காவும், சந்தோஷத்திற்காகவும் தினமும் பாடுபட்டு, அந்த குடும்பத்தோடும் தனது பிறந்த வீட்டு உறவை தொடந்து நல்ல முறையில் கொண்டு செல்ல ஓயாது போராடுவது என்பது எத்தனை சவால் நிறைந்தது' என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டான். அதனால் பெண்களின் மனநிலையும் தெளிவாக புரிய துவங்கியது, அந்த வளர்ந்த குழந்தைக்கு…

இதுவரை பெண்களின் உணர்வுகளை சரிவர உணர தவறிய தனது மடத்தனத்தையும் புரிந்து கொண்டவன், முதன் முதலாய் இதழினியை அவனாகவே நெருங்கி வந்து சேயாய் அவளின் கரம் பற்றி ஏக்கத்தோடு பார்க்க,
 
அதுவரை நால்வரும் இருந்த உலகிலிருந்து வெளிவந்தவர்கள், தங்களின் மற்றொரு உறவும், இனி தங்களை போன்றே என்றும் தங்களுக்குள் இருக்க போவதை உணர்ந்தது போன்று.. அவனின் இரு புறமும் அபி, வினி சென்று அவன் கரத்தினுள் தங்கள் கரத்தை கோர்த்துக் கொண்டனர் இதழினியின் சிறு கண்ணசைவில்….

மாரியப்பனோ, தனது மகனின் நெற்றியில் பாசமாய் தனது முத்திரையை முத்தமாய் பதிக்க, அனைவரிடமும் பேச கொள்ளை கொள்ளையாய் வார்த்தை இருந்தும் எதுவுமே தோன்றது.. அவர்களின் பாசத்தில் ஊமையாய் கண்ணீர் வடிய நின்றான் ஆனந்த்.

ஒரு உறவின் பிரிவில், ஒரு உறவு தங்களுடன் கூட வேண்டும் என்பது தான் விதியோ என்று மாரியப்பனும், இதழினியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

அவர்கள் நின்றிருந்த கோலம் கண்டு அங்கிருந்தோர் அனைவரும் நெகிழ்ந்திருந்த தருணத்தை கலைப்பது போன்று, அங்கு வந்த ஒருவர், அவர்கள் மண்டபம் செல்ல வேண்டிய காரும், உறவினர்களுக்காக வேனும் வந்து விட்டதாக அழைக்க, அவர்கள் அனைவரும் பாச மழையை கொஞ்சம் ஒத்தி வைத்து விட்டு கிளம்பினார்.. மண்டபம் நோக்கி….

இதழினி, செழியனை பார்க்கும் நேரம் அவளின் மனநிலை…..????!!!!

இந்த பகுதியின் தொடர்ச்சியை, மாலைக்குள் போட்டுட்டுறேன் ப்ரண்ட்ஸ்…
 
Top