Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 29

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 29

அஞ்சலியின் வீடு, அந்த நாள் மிக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மகேஷ் அவ்வளவு தூரம் அழைத்த காரணத்தினால், அர்ஜூனும், ரமேஷூம் அவர்கள் வீட்டிற்கு வர சம்மதம் தெரிவித்தனர். அன்றே அஞ்சலி போன் செய்து அர்ஜூனின் அம்மாவிடம் பேசிய போது, அவளும் கண்டிப்பாக வீட்டிற்க்கு வரச் சொன்னாள். அதனால், அவர்கள் மூவர் மட்டும் கிளம்பினர்.

அவர்கள் வீட்டிற்கு வருவதால், மதிய உணவைத் தயாரிக்கும் மும்முரத்தில் இருந்தனர் மீனாவும், கூடவே அஞ்சலியும். இந்த முறை பானுமதிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. முந்தைய நாள் நடந்த சம்பவத்திலிருந்து அவர் மீளவே இல்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று ரகுராமிற்கு தகவல் கொடுக்கப்பட்டதும், அன்று இரவே ஒரு விமானத்தில் வந்திறங்கினார்.

வந்ததும், வராததுமாக அனைவருக்கு ஒரே திட்டு. “அவளை ஏன் தனியா விட்டீங்க. அவளுக்கு ஏதாவதுன்னா என்ன பண்றது.? நீங்கள்லாம் இருக்கீங்கன்னு தானே நான் என் பிஸினஸ நிம்மதியா பார்த்துட்டிருக்கேன். ஆனா, நீங்க ஏதாவது பண்ணி என்னை டென்ஷன் பண்றீங்க.” என்று இன்னும் என்னவெல்லாம் பேச முடியுமோ, எல்லாவற்றையும் பேசினார்.

ஒருவரும் பதில் பேசவில்லை. அவர் திட்டும் வார்த்தைகளை சீரியஸாக எடுத்துக் கொள்பவர் எடுத்துக்கொள்வர். அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடுபவர் விட்டு விடுவர். மகேஷ் அவர் சொல்லும் எந்த விஷயங்களையும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார். அஞ்சலியோ எப்போதும் சீரியஸாகவே எடுத்துக் கொள்வாள்.

அடுத்து பானுமதிக்கு, “உன்னை யாரு தனியா கோவிலுக்குப் போகச் சொன்னது.? ஏன் இங்க பக்கத்துல கோவிலே இல்லையா.? ஃபங்க்‌ஷன்க்கு போனவ நேரா போயிட்டு வர வேண்டியதுதானே.? நீ மட்டும் தனியா கோவிலுக்கு போகணும்னு நினைச்சு இப்போ என்னாச்சுன்னு பார்த்தியா.?” என்று அவராக பேசிக்கொண்டே இருக்க, ஏற்கனவே பானுமதி பல கவலைகளை மனதில் சுமந்த வண்ணம் இருக்க, இவர் நிலைமை புரியாமல் பேசுவதை மகேஷ் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றார்.

ஒரு வழியாய் அவர் பேசி முடிக்க, அதன் பிறகு, மகேஷ் அவரை தனியாய் அழைத்துச் சென்றார். “மாமா, தயவுசெய்து அக்காவை எதுவும் சொல்லாதீங்க. ஏற்கனவே அக்கா பல கவலைகளை மனசுல போட்டு குழப்பிட்டு இருக்காங்க. அவங்களால எதையும் வெளிக்காட்ட முடியல. அந்த பிராப்ளம் சின்னதா இருந்து பெரிசாகி தான் மைல்ட் அட்டாக் வந்திருக்கு. இதெல்லாம் டாக்டர் சொன்னார். அவங்க மனச முடிஞ்ச அளவுக்கு ரிலாக்ஸா இருக்கற மாதிரி வைச்சுக்க சொன்னார். ஆனா, நீங்க இப்படி பேசினீங்கன்னா, அவங்க மனசு எப்படி ரிலாக்ஸா இருக்கும்.? அவங்களுக்கு இந்த மாதிரி ஆச்சுன்னு தெரிஞ்சா கொஞ்சமாவது ஆறுதலா பேசுவீங்கன்னு நினைச்சேன். ஆனா, இன்னமும் நீங்க கோபப்படறதுலயே தான் இருக்கீங்க. இவ்ளோ நாள் நான் எதுவும் அக்காவுக்காக பேசிருக்கேனா.? ஆனா, இன்னைக்கு நான் அவளுக்காகப் பேசித்தான் ஆகணும். அவளோட நிலைமை இப்போ ரொம்ப மோசமா இருக்கு. நீங்களும் இல்லை, அவ பெத்த பொண்ணுங்களும் கூட இல்லை. என்னதான் நாங்க அவங்ககிட்ட பேசினாலும், அவ எதிர்பார்க்கறது உங்க மூணு பேரையும் தான். நீங்க தான் அவளோட முதல் உலகம். அப்பறம் தான் நாங்க எல்லாம். அதனால, உங்க பிஸினஸ மட்டும் பார்க்காம, கொஞ்சம் அக்காவையும் கவனிங்க. அவளுக்கு உங்க எல்லாரோடையும் எப்பவும் இருக்கனும்னு தான் நினைச்சிட்டே இருப்பா. ஆனா, இப்போ வரைக்கும் அந்தக் குடுப்பினை எங்க அக்காவுக்கு கிடைக்கவே இல்லை.” என்று குரல் தழுதழுக்கப் பேசினார் மகேஷ். சற்று கண்களும் கலங்கி விட்டார்.

ரகுராமிற்க்கு ஆச்சர்யமாக இருந்த்து. மகேஷ் இதுவரை இதுபோல் எமோஷனலாகப் பேசியதைப் பார்த்ததே இல்லை. அவருக்கே சற்று சங்கடமாகிப் போனது.

“இதுவரைக்கும் நீங்க எப்படி இருந்தீங்களோ அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஆனா, இதுக்கப்பறம் நீங்க நடந்துக்கற விதம் தான் எங்க அக்காவோட உயிரைக் காப்பாத்தும். அத மட்டும் மனசில வைச்சுக்கோங்க.” என்றபடி சொல்லிவிட்டு சென்றார் மகேஷ்.

அவர் பேசியதில் ரகுராமிற்கு பல உண்மைகள் உரைத்தன. ஆனால், திடீரென்று ஞானோதயம் வருவதற்க்கு அவர் ஒன்றும் புத்தர் இல்லையே. அதனால், யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தார். மீண்டும் மகேஷ் வந்தார்.

“அக்கா இன்னைக்கு உயிரோட இருக்காங்கன்னா, அதுக்கு காரணம் அந்த ரெண்டு பசங்க தான். அவங்கள நாளைக்கு நம்ம வீட்டுக்கு கூப்பிட்டிருக்கேன். அவங்க வந்தா கொஞ்சம் பேசுங்க. முடிஞ்சா நன்றி சொல்லுங்க.” என்று சொல்லிவிட்டு மீண்டும் சென்றார் மகேஷ்.

ரகுராமிற்க்கு யார் அவர்கள் என்ற ஆவல் சற்று எழுந்ததே உண்மை. இதோ இன்று அவர்கள் வரவிருக்கிறார்கள். காலையிலிருந்தே, வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாய் ஒரு உணர்வு. ஆனாலும், வீடு எதையோ இழந்ததைப் போல் உணர்ந்தார் ரகுராம். அப்போதுதான் அவருக்கு ஒரு விஷயம் புரிந்தது.

பானுமதி. எப்போதும் அவர் வரும் போது பம்பரம் போல் சுற்றி, சுற்றி வேலை பார்க்கும் பானுமதி இல்லாத வீட்டைப் பார்க்கும் போது ஏனோ ஒரு மாதிரியாக உணர்ந்தார். அவர் உள்ளே ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தாலும், அவருக்கு அப்படித் தோன்றியது. முதன் முறையாக கவலை கொண்டார்.

அதே சமயம், கேட்டிற்கு உள்ளே கால் டாக்ஸி ஒன்று நுழைவதை கார்டனில் இருந்து பார்த்த வண்ணம் இருந்தார். டாக்ஸியில் இருந்து அர்ஜூனும், ஜானகியும், ரமேஷூம் இறங்குவதைப் பார்த்தார் ரகுராம். வந்து இறங்கிய உடனே, பங்களா போல் இருந்த வீட்டை சுற்றும், முற்றும் பார்த்துக் கொண்டிருந்தனர் மூவரும்.

மகேஷ் அவர்களைக் கண்டுகொண்டு, ஓடி வந்து வரவேற்றார். அஞ்சலி ஆவலுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். முக்கியமாக அர்ஜூனை. அர்ஜூன், மிக எளிதாக ஒரு டி-சர்ட்டில் ஸ்மார்ட்டாக இருந்தான். அவனைப் பார்த்ததும், அஞ்சலிக்கு உள்ளுக்குள் ஏற்பட்ட சந்தோஷத்தை அடக்கவே முடியவில்லை. அது, அவள் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

அர்ஜூனுக்கும், ஜானகிக்கும் தாங்கள் எப்போதும் செல்வோம் என்று, நினைத்துப் பார்க்க முடியாத இடத்திற்க்கு வந்திருப்பதாய் ஒரு உணர்வு. அஞ்சலி இவ்வளவு வசதியான வீட்டுப் பெண்ணா என்று அர்ஜூனுக்கு அப்போதுதான் தோன்றியது. ஆனாலும், அவள் ஒரு நாளும் அதைக் காட்டிக்கொண்டதே இல்லை என்று நினைத்தான். அப்போதுதான் தான் எத்தனை பெரிய தவறு செய்திருக்கிறோம் என்றும் தோன்றியது. தான் அவளைக் காதலிக்கத் தகுதியானவனா.? என்ற எண்ணம் மனதில் உதித்தது.

இவையெல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருக்க, அவர்கள் வீட்டிற்கு உள்ளே நுழையும் இடத்தில் அஞ்சலி ஒருவித எதிர்பார்ப்போடு அழகு தேவதையாய் நின்றிருந்ததைப் பார்த்தான் அர்ஜூன். அவளைப் பார்த்த போது அதுவரை தோன்றிய எந்த ஒரு விஷயமும் மனதில் நிற்கவில்லை. அவள் மட்டுமே கண்ணுக்குள் நின்றாள் அர்ஜூனுக்கு. இதுதான் காதலின் மாய வித்தையோ என்று தோன்றியது. எதையும் காட்டிக்கொள்ளாமல் ஒரு சிறு புன்னகையை மட்டும் உதிர்த்தபடி உள்ளே வந்தான் அர்ஜூன்.

அர்ஜூனின் அம்மாவைப் பார்த்ததும், “எப்படி இருக்கீங்க ஆண்ட்டி.?” என்று கூறிக்கொண்டே ஆசை தீர கட்டிக் கொண்டாள். அது அவனுக்கு ஏதோ ஒரு ஆறுதலைத் தந்தது.

“நல்லா இருக்கேன் கண்ணு. நீ எப்படி இருக்க.? அம்மாக்கு இப்போ எப்படி இருக்கு.? இப்போ பரவாலையா.?” என்று கேட்க, உள்ளே வந்தவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுத்து விட்டு, அதோடு ஜூஸூம் கொடுத்தாள் மீனா. நலம் விசாரித்துக் கொண்டவர்கள், நேரே பானுமதி இருந்த அறைக்கு கூட்டிச் சென்றனர்.

பானுமதி, கட்டிலில் படுத்திருந்தவர் அவர்கள் வந்ததும் எழுந்து உட்கார்ந்தார். “அம்மா, இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு.? பரவாலையா.?” என்று அக்கறையுடன் கேட்டான் அர்ஜூன்.

அவனின் உண்மையான அக்கறையைத் தெரிந்து கொண்டவர், “இப்போ பரவால்ல ப்பா. என்ன ஒரே இடத்துல படுத்துட்டே இருந்தா ஒரு மாதிரியா இருக்கு. எப்பவும் ஏதாவது ஒரு வேலைய செஞ்சிட்டே இருந்துட்டு ஒரேயடியா படுக்க வைச்சிட்டது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்று தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.

“என்னங்க பண்றது.? நமக்கெல்லாம் அது பழகிடுச்சு. திடீர்னு உடம்புக்கு ஏதாவது வந்து இந்த மாதிரி ஒரேயடியா படுத்தா ஒரு மாதிரி தான் இருக்கு. ஆனா, வேற வழியில்ல நம்ம கொஞ்சம் உடம்ப இந்த மாதிரி சமயத்துல பாத்துக்கிட்டா தான், பின்னாடி நமக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.” என்று ஆறுதல் வார்த்தைகள் கூறினார் ஜானகி.

“சரிதாங்க. ஆனாலும், ஒரு சில சமயம் மனசு அதை ஏத்துக்க மாட்டிங்குது. என்ன பண்றது.?” என்றார் பானுமதி சலித்துக்கொண்டே.

“அந்த மாதிரி சமயத்துல உங்க மனச லேசாக்குற மாதிரி விஷயங்கள நீங்க பண்ணா, கொஞ்சம் மாறுதலா இருக்கும். அது மாதிரி முயற்சி பண்ணிப் பாருங்க.” என்று திரும்பவும் ஜானகி சொல்ல, அவர் சொல்வதில் உண்மை உள்ளதாய் எண்ணி, “கண்டிப்பா முயற்சி செய்யறேங்க. நீங்க எல்லாரும் தானே என்னை நேத்து சிவன் கோவில்ல காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்த்தது.”

“ஆமாங்க, இவங்க ரெண்டு பேரும் தான் உங்கள ஹாஸ்பிடல்ல சேர்த்தது. இது என் பையன் அர்ஜூன், இது அவனோட தோழன் ரமேஷ். இவங்க வீட்டுக்கு வந்து நாங்க இருந்தப்ப தான் கோவிலுக்கு வந்தோம்.” என்றார் ஜானகி.

“ஓ.. அப்படியா. ரொம்ப நன்றி பா ரெண்டு பேருக்கும். சமயத்துல என்னைக் காப்பாத்தி உதவி பண்ணீங்க. இந்த உதவிய என்னைக்கும் மறக்க மாட்டோம்.” என்று நன்றி தெரிவித்தார் பானுமதி.

“அதெல்லாம் இருக்கட்டும் மா. இதையே தான் நேத்திலிருந்து உங்க தம்பியும், உங்க பொண்ணும் சொல்லிட்டே இருக்காங்க. கேட்டுக் கேட்டு எங்க காதுல ரத்தம் வராத குறை தான்.” என்று ரமேஷ் சொல்ல, அந்த அறை முழுக்க சிரிப்பலை.

“நீங்க ரெண்டு பேருமே அஞ்சலியோட ஃப்ரெண்ட்ஸ் ஆ. ஆனா, அஞ்சலி சொல்லவே இல்ல.” என்றார் பானுமதி.

“இல்லைங்க. எங்க பையன் அர்ஜூனும், அஞ்சலியும் தான் ஒரே வகுப்புல படிக்கிறாங்க. ஒரு நாள் இவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. அந்த நாள் என்னால மறக்கவே முடியாது.” என்று சிலாகித்தார் ஜானகி.

அந்த விஷயம் பானுமதிக்கு தெரியாது என்பதால், அஞ்சலியைப் பார்த்தவாறே தலையை மட்டும் ஆட்டினார் பானுமதி. அதே சமயம், அர்ஜூனையும் பார்த்தார். ஒரு நல்ல மகனுக்கான குணம் அவனிடம் இருப்பதை ஜானகியின் பேச்சின் மூலம் அறிந்து கொண்டார் பானுமதி. அஞ்சலியின் முகத்தில் இருந்த பொலிவையும் அவர் கவனிக்காமல் இல்லை.

இவர்கள் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, இவையனைத்தையும் கேட்டபடி அறையினுள் நுழைந்தார் ரகுராம். அவரின் பார்வையே அவரின் குணத்தை அவர்களுக்குக் காட்டியது. அர்ஜூனுக்கு அப்போது தான் அஞ்சலி ஏன் அவளது அப்பாவிற்கு அவ்வளவு பயப்படுகிறாள் என்ற காரணம் புரிந்தது. யோசித்தவாறே நின்று கொண்டிருந்தவனை அழைத்தார் ரகுராம். அஞ்சலிக்கு உள்ளுக்குள் பயம் தொற்றிக்கொண்டது.


(தொடரும்...)
 
Very nice epi dear.
Innum kojam neelamana epi kodukamudiyuma? Romba interesting ah pogum pol thodarum vanthuduthu.mudiyala suvarasiyam control panna mudiyala.
 
Very nice epi dear.
Innum kojam neelamana epi kodukamudiyuma? Romba interesting ah pogum pol thodarum vanthuduthu.mudiyala suvarasiyam control panna mudiyala.

எப்போதும், முடிந்த அளவுக்கு 1000 வார்த்தைகளுக்கு மேல் வருவது போல் தான் ஒவ்வொரு எபியும் இருக்கும் மா. ஒவ்வொரு எபியையும் அப்படித்தான் கொடுக்கிறேன். இதற்க்கு முந்தைய எபியெல்லாம் இன்னும் சின்னதா இருக்கும். இப்போதான் சொல்லப் போனால், பெரியதாக கொடுத்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் சஸ்பென்ஸ் இருந்தா தானே கதை நன்றாக இருக்கும். அதனால் தான் அப்படித் தருகிறேன். கண்டிப்பாக உங்களுக்கு பிடித்த மாதிரி தருவேன்.

கதையை இவ்வளவு சுவாரஸ்யமாக படிப்பதற்க்கு மிக்க நன்றி மா. தொடர்ந்து படித்து விமர்சனங்கள் அளியுங்கள்.

நன்றி...
 
Top