Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 27

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 27

நாட்கள் எப்பொழுதும் போல வேகமாக போய்க்கொண்டு தான் இருக்கும். ஆனால், மனிதர்கள் அதன் வேகத்திற்க்கு ஈடு கொடுத்து முன்னேறினால் மட்டுமே காலம் கை கொடுக்கும். அது அர்ஜூனின் விஷயத்தில் கடிகார ஊசலைப் போல் அங்குமிங்குமாக ஆடிக் கொண்டிருந்தது.

அவன் தன் நிலையை மறந்து எப்பொழுதும் அஞ்சலியின் நினைவாகவே இருந்தான். ஒரு முறையாவது பேச மாட்டாளா என்று ஏங்கிக்கொண்டே அவனது நாட்கள் போனது. வகுப்பறையில் கூட ஏதாவது ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்து விடாதா.? அவளிடம் பேசி விட மாட்டோமா.? என்று அவள் பின்னே அலைந்து கொண்டே இருந்தான்.

அஞ்சலிக்கு எல்லாமே தெரியும். ஆனாலும், அர்ஜூன் விஷயத்தில் மட்டும் அவள் ஏனோ அவனுக்கு எதிராகவே இருந்தாள். அவன் எதிரில் வந்தால் வேறு எங்காவது திரும்பிக் கொள்வாள். அல்லது தோழிகளிடம் பேசிக்கொண்டு வருவதைப் போல் நடிப்பாள்.

ஒவ்வொரு முறையும் அவன் தன்னை நாடி வருகிறான் என்று அவள் நன்றாகவே அறிந்திருந்தாள். ஆனால், எந்த நேரத்திலும் அவனிடம் பேசி விடக் கூடாது என்பதில் மிக கவனமாகவே இருந்தாள். எங்கே அவனிடம் பேசி விட்டால் மனது மாறி விடுமோ என்ற எண்ணம் மேலோங்கும். முடிந்த அளவு விலகியே இருந்தாள்.

அர்ஜூனை நினைக்கும் போது அவளுக்குப் பாவமாக இருக்கும். தேவையில்லாமல் அவனை இப்படி ஒரு நிலைக்குத் தள்ளி விட்டோமே என்று மனது அவளை படுத்தாத நாளே இல்லை. கனவில் கூட சில நேரத்தில் அவளது அப்பாவின் வார்த்தைகள் நிழலாய் வந்து செல்லும். நிம்மதி இழந்து தவித்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி.

இருவரும் கிட்டத்தட்ட ஒரே நிலையில் இருந்தாலும், அஞ்சலியை அது எந்த விதத்திலும் பாதிக்கப் போவது இல்லை. அவள் சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால் ஒருவேளை எதிர்கால வாழ்க்கை பிடிக்காவிட்டாலும், அவளால் ஒரு கட்டத்தில் வாழ முடியும் என்பது சாத்தியமே.

ஆனால், இந்த விஷயத்தில் அர்ஜூனின் நிலை வேறு. அவன் படித்து முன்னேறினால் மட்டுமே அவன் ஒரு நல்ல நிலைக்கு வர முடியும். அவன் எதிர்காலம் அவனது படிப்பை நம்பி மட்டுமே உள்ளது. அது தெரிந்தாலும் இப்போது அவன் இருக்கும் மனநிலையில் எதுவுமே பெரிதாகத் தோன்றவில்லை அவனுக்கு. காதல் படுத்தும் பாடு இதுதானோ என்று உணர்ந்தான்.

அடுத்து செமஸ்டர் எக்ஸாம் வந்தது.. அர்ஜூனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.. அவளைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்ததில் அவன் திணறினான்.. இதைப் பார்த்த ரவி அவனைத் திட்டினான்..

“நீ ஏன்டா இப்படி இருக்க.? உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா.? நீ நல்லபடியா படிச்சு முடிச்சு நல்ல மார்க் வாங்கினா தான் வேலை கிடைக்கும். நம்ம காலேஜ் பிரின்ஸிபல் உன்னை நம்பி தான் உன்னோட படிப்பு செலவ அவர் ஏத்துட்டிருக்கார். இதுவரைக்கும் நல்ல பெர்ஸன்ட்டேஜ் எடுத்த, இனியும் அப்படி எடுத்தா தான பரவால்ல. இல்லன்னா அவர் என்ன நினைப்பார்.?” என்று அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தான்.

“தெரில டா ரவி. என்னால எதுலயும் கான்ஸண்ட்ரேட் பண்ண முடியல. அஞ்சலி தான் கண்ணுக்கு முன்னாடி தெரியறா. என்னால நார்மலாவே இருக்க முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. அவ என்னை அவாய்ட் பண்றதுதான் தாங்க முடியல. ஜஸ்ட் பேசவாது செய்யலாமே. அதுவும் பண்ண மாட்டிங்கறா டா.” என்றான் அர்ஜூன்.

“டேய். என்னடா பேசிட்டிருக்க.? அஞ்சலி மட்டும் தான் உன் லைஃப்பா.? ஏன் அம்மா இல்ல.? உன்னையே நம்பிட்டு இருக்கற அம்மாவ யோசி டா. தயவு செய்து அஞ்சலியைப் பத்தி நெனைக்கறத விட்டுட்டு நல்லா படி. இன்னும் மூணு செமஸ்டர்லயும் நீ நல்லா ஸ்கோர் பண்ணனும். அதுக்கு நீ முதல்ல ஒரு நல்ல மனநிலைமைல இருக்கணும். வேற எதப் பத்தியும் யோசிக்கறத விட்டுடு. அம்மாவ மனசில நினைச்சிட்டு படி. அப்பறம் பாரு கண்டிப்பா உன்னால கான்ஸண்ட்ரேட் பண்ண முடியும்.” என்று அவனிடம் உறுதியாகச் சொன்னான்.

அவன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. தான், யாருக்காக இல்லை என்றாலும் தன் அம்மாவிற்காகவாது படிக்க வேண்டும் என எண்ணி வெறியோடு படிக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு முறை அஞ்சலியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றினான்.

தினமும், கோவிலுக்குச் சென்று தியானம் செய்தான். கடவுளிடத்தில் எல்லா பிரச்சினைகளும் விரைவில் தீர்ந்து விட வேண்டும் என்று மனமார பிரார்த்தித்தான். அம்மாவை மனதில் நினைத்து ஒவ்வொரு முறையும் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். இரண்டாம் செமஸ்டர் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்தன.

தேர்வுகளை அர்ஜூன் தைரியமாகவே எதிர்கொண்டான். அஞ்சலியோ எதற்க்காகப் படிக்கிறோம் என்ற வெறுப்பை மனதில் சுமந்து கொண்டே எழுதி முடித்தாள். அனைவரும் திரும்பவும் தேர்வு விடுமுறையில் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.

பத்மாவும், வெங்கடேசனும் இந்த முறை சிங்கப்பூருக்கு சென்று விட்டதால், மது அவர்களிடம் போனில் தொடர்பு கொண்டு சொல்லிவிட்டு கோயம்புத்தூர் சென்றாள். கூடவே, ஷாலினி எப்போதும் போல வந்தாள். இந்த முறை இருவரும் எதிர்பார்த்த்தைப் போல் அந்த நித்தின் ட்ரெயினில் வரவில்லை.

மது, “நல்ல வேளை ஷாலினி. இந்த டைம் மட்டும் அவன் வந்திருந்தா கண்டிப்பா எல்லாத்தையும் விசாரிக்கணும்னு நினைச்சிருந்தேன். ஆனா, அவங்க வராம போயிட்டாங்க. சரி விடு. நீ ஃபீல் பண்றியோ, அவங்களக் காணோம்னு.?” என்றாள் ஷாலினியின் பதிலை எதிர்பார்த்தவாறே.

“இல்ல மது. எனிக்கு எந்த எக்ஸ்பெக்டேஷனும் இல்ல. என்டே லைஃப் எண்ட அச்சன், அம்மே கையிலானு. ஞான் எதுவாங்கிலும் சம்மதிக்கும்.” என்றாள் ஒரு சிறு புன்னகையுடன்.

அவள் அப்படிச் சொன்னாலும், அவள் மனது இப்போது நித்தினை நினைப்பதை மது அறிந்தாள். அதே போல், அவர்கள் அறியாமல் நித்தின் அதே ட்ரெயினில் இருந்ததை அறியாமல் இருந்தனர் இருவரும்.

அஞ்சலியும், ரூபாவும் எப்பொழுதும் போல பஸ்ஸில் அவரவர் ஊருக்கு கிளம்பினர். அஞ்சலி பஸ்ஸில் செல்லும் போது அர்ஜூனைப் பற்றிய நினைவில் இருந்தாள். தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு இருந்து அவனிடம் பல மாற்றங்களைப் பார்த்தாள்.

அன்று, இருவரும் ஒரே பக்கமாக அமர்ந்து தேர்வு எழுதும் போது கூட, அவன் எந்த சலனமும் இன்றி தேர்வில் மட்டுமே கவனம் செலுத்தி எழுதிக் கொண்டிருந்தான். அவள் கூட சில நேரங்களில் அவன் மீது பார்வையை செலுத்தியிருப்பாள். ஆனால், அர்ஜூனோ கவனம் சிதறவே இல்லை. ஆச்சர்யமாக இருந்தது அஞ்சலிக்கு.

கடைசி தேர்வு அன்று அர்ஜூன் மதுவிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள் அஞ்சலி. அவள் அவர்கள் அருகில் வருகிறாள் என்பதை அறிந்தவன், மதுவிடம் அவசரமாக விடைபெற்றான். மதுவும் ஒரு நிமிடம் ஆச்சர்யப்பட்டாள்.

“பாத்தியா அஞ்சலி. அர்ஜூன் உன்னைப் பார்த்ததும் எப்படி ஓடறான்னு. நீ எப்படி அவன அலைய விட்ட. இப்போ அவன் உன்னக் கண்டாலே ஓடற மாதிரி நீ என்ன பண்ண.?” என்றாள் மது அவளைக் கிண்டலாகக் கேட்டபடி.

“நான் என்ன பண்ணேன்.? நான் எப்போதும் போல தான் இருக்கேன். அவன் ஓடுனா, அதுக்கு நான் என்ன பண்ண முடியும்.? அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியுமா.?” என்றாள் அஞ்சலி.

“ம்ம்.. ம்ம்.. இந்த காதல் கண்ணாமூச்சின்னு சொல்வாங்களே, அது உனக்கும், அர்ஜூனுக்கு தான் பொருந்தும். ரெண்டு பேரும் போட்டி போட்டுட்டு உங்கள ஏமாத்திக்கிறீங்க.” என்றாள் மது.

“மது.. ப்ளீஸ். சேன்ஜ் டாபிக். இதுக்கு மேல இதப் பத்தி பேச வேண்டாம்.” என்று முகத்தை சுருக்கியதும், அதோடு பேச்சை முடித்து விட்டாள் மது.

ஆனால், இன்று அஞ்சலிக்கு அதை நினைக்கையில் மது சொன்னதைப் போல் இருவரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதைப் போல் தான் தோன்றியது. அர்ஜூனின் இந்த மாற்றம் ஒரு வகையில் அவனுக்கு நன்மையே என்று நினைக்கும் போது நிம்மதியாக இருந்தது. ஏனென்றால், பித்து பிடித்தவனைப் போல் அவன் தன் பின்னாடி சுற்றும் போதெல்லாம் நெஞ்சம் தன்னையே வஞ்சித்துக் கொள்ளும் வேதனை அவளால் தாங்க முடியாது. எதுவோ நல்லதே நடக்கட்டும் என்று கண் மூடி சாய்ந்தாள் தன் இருக்கையில்.

அர்ஜூன், இப்போதும் அதே பகுதி நேர வேலைக்குச் சென்றாலும் அவனுக்கு ஒரு மன அமைதியும், ஓய்வும் தேவைப்பட்டது. அதனால், அம்மாவையும் அழைத்துக் கொண்டு பெங்களூருவில் உள்ள தன் நண்பன் ரமேஷின் வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டான். அதன் படியே இரண்டொரு நாட்களில் அதற்க்கான ஏற்பாடுகளையும் செய்தான்.

சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ட்ரெயின் டிக்கட் போவதற்கும், வருவதற்கும் புக் செய்தான். அடுத்த நாளே தன் அம்மாவுடன் கிளம்பி விட்டான். ரமேஷ் இவர்கள் பெங்களூரு வந்து இறங்கியதும் கூட்டிச் செல்ல காத்திருந்தான் ரயில்வே ஸ்டேஷனில்.

அவர்கள் வந்ததும், ஓடிச் சென்று அர்ஜூனைக் கட்டிக் கொண்டான் ரமேஷ். உயிர் நண்பன் ஆயிற்றே. அவனது அம்மாவை நலம் விசாரித்தவன், இருவரையும் கால் டேக்ஸியில் கூட்டிக் கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்றான்.

வீட்டிற்கு வந்ததும், ரமேஷின் பெற்றோர்கள் அவர்களை அன்புடன் வரவேற்றனர். இரவு உணவு முடிந்து அனைவரும் பல விஷயங்களை கலந்துரையாடிக் கொண்டிருக்க, ரமேஷ், அர்ஜூனை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்தான். அவர்கள் எப்போதும் அமரும் இடத்தில் சென்று அமர்ந்தனர்.

“டேய். என்னடா மாப்ள.? என்னாச்சு.? ஏன் ஒரு மாதிரியாவே இருக்க.?” என்றான் ரமேஷ்.

“நான் நல்லாதான் இருக்கேன் டா. எனக்கு ஒண்ணும் இல்லையே.” என்று நார்மலாக இருப்பதைப் போல் காட்டிக் கொண்டான் அர்ஜூன்.

ஆனால், ரமேஷிற்கு அர்ஜூனின் ஒவ்வொரு அசைவும் தெரியும். அவனின் மனதை நன்றாக புரிந்து வைத்திருப்பவன்.

“டேய். பொய் சொல்லாத. எனக்குத் தெரியாதா உன்னைப் பத்தி.? ஸ்டேஷன்ல இருந்து வரும் போது கூட பார்த்தேன். நீ எதையோ யோசிச்சுட்டே வர மாதிரி இருந்தது. அம்மா என்கிட்ட நல்லா தான் பேசிட்டு வந்தாங்க. ஆனா, நீ நார்மலாவே இல்லன்னு எனக்கு அப்போவே தோணுச்சு. அம்மா இருந்ததால எதுவும் கேட்கல. இப்போ ஒழுங்கா சொல்றியா, இல்லையா.?”

அதுவரை எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தவன், திடீரென்று ரமேஷைக் கட்டிக் கொண்டான். கிட்டத்தட்ட அர்ஜூன் அழுது கொண்டிருந்தான். ரமேஷ் பதறிவிட்டான்.

“டேய். என்னடா இது குழந்த மாதிரி அழுதுட்டிருக்க. நீ அழற அளவுக்கு என்னாச்சு டா அர்ஜூன்.?” என்று அவனைத் தட்டினான்.

அப்படியே அழுகையை அடக்கியவன், சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு அதுவரை நடந்த அனைத்தையும் சொல்லி விட்டான். தன் மனதில் இருந்த எல்லா கஷடங்களையும் கொட்டி விட்டதைப் போல் உணர்ந்தான் அர்ஜூன்.

“என்ன சொல்ற அர்ஜூன். இவ்ளோ விஷயம் நடந்துருக்கு. நீ ஏன், இதப்பத்தி என்கிட்ட சொல்லாம விட்ட.?”

அர்ஜூன் எதுவும் பேசாமல் இருந்தான். நண்பனின் வேதனையை உணர்ந்தவன், “இங்க பாரு அர்ஜூன். இதுவரைக்கும் நடந்தது எதுவோ, அதை விட்டுடு. இனிமேல் என்ன நடக்கப் போகுதோ அது எதுவா இருந்தாலும் ஏத்துக்கோ. தேவையில்லாத விஷயம் எதுவானாலும் அதைத் தூக்கிப் போடு. ரவி சொன்ன மாதிரி, அம்மாவ நினைச்சு எல்லா விஷயங்களையும் செய். சரியா. உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். நீ ரொம்ப ஃபீல் பண்ணாத.” என்று ஆறுதலாகப் பேசினான்.

ஏதோ அவனிடம் அனைத்தையும் சொன்ன பிறகு தான் மனதிற்கு ஒரு நிறைவு வந்தது அர்ஜூனுக்கு. அவனை எப்படி சமாதானம் செய்வது என்று யோசித்த போது தான் ரமேஷூக்கு ஒரு எண்ணம் வந்தது.

“சரி டா. நாளைக்கு நாம எல்லாரும் சேர்ந்து எங்காவது வெளில போலாம். இன்னைக்கு டேக்ஸில வரும் போது அம்மாவும் சிவன் கோவிலுக்குப் போகணும்னு சொன்னாங்க. அதனால போய்ட்டு வரலாம். உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். சரியா.?” என்று ரமேஷ் சொன்னதும், சரி என்று தலையாட்டினான் அர்ஜூன்.

ரமேஷூக்கு அப்போது அர்ஜூனைப் பார்த்த போது, கிட்டத்தட்ட அரவணைப்பைத் தேடும் குழந்தை போல் தெரிந்தான். நண்பனை எப்படியாவது தேற்ற வேண்டும் என்பதில் ஒரு முடிவாக இருந்தான் ரமேஷ்.


(தொடரும்...)

 
Top