Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 18

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 18

வெங்கடேசன் தன் மனைவியை ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டு, மதுவையும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். அப்போது தான் கொஞ்சம் பழைய நிலைமைக்குத் திரும்பினார் பத்மா. உள்ளே வந்ததும் அவரை ஷோஃபாவில் இருக்க வைத்து விட்டு, அவருக்குக் கொஞ்சம் பருக ஏதேனும் கொண்டு வருவதாய் சமையலறைக்கு ஓடினாள் மது.

“மது, இருமா. எங்க போற.? அவளுக்கு நான் வேணும்னா கடைல இருந்து ஜூஸ் வாங்கிட்டு வந்து கொடுக்கறேன். உனக்கு எதுக்குமா சிரமம்.?” என்றார் வெங்கடேசன்.

“அங்கிள். இதிலென்ன சிரமம் இருக்கு. சொல்லப்போனா இந்த டைம்ல வெளில இருந்து எதுவுமே வாங்கித் தரது அவ்வளவு நல்லதில்ல அங்கிள். முடிஞ்ச அளவுக்கு ஃபிரஷ்ஷா ஜூஸ் போட்டுக் குடிக்கறது ரொம்ப நல்லது.” என்று சொல்லிக் கொண்டே சில ஆரஞ்சு பழத்தை தோலுரித்தாள்.

பத்து நிமிடத்தில், ஆரஞ்சு ஜூஸ் பிழிந்து எடுத்து வந்தாள் மது. அவளின் அக்கறை மேலும் தெரிந்தது அவர்களுக்கு. அதைக் குடித்து முடித்த பத்மா, “மது, ரொம்ப நல்லா இருந்தது ஜூஸ். கொஞ்சம் தெம்பு வந்த மாதிரி இருக்கு. எனக்காக இன்னைக்கு முழுக்க நீ ரொம்ப மெனக்கெட்டிருக்க. உனக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியல.” என்று சற்று கண்கலங்கினார்.

“ஆண்ட்டி, எதுக்கு இப்போ அழறிங்க. இதுல என்ன இருக்கு.? என் அம்மாக்கு ஒண்ணுன்னா நான் எதுவும் செய்யமாட்டனா.? அப்படிதான் இதுவும். ஒருத்தருக்கு உதவி தேவைப்படும் போது அதை செய்யலன்னா அது மனுஷத்தன்மையே இல்ல. அவ்ளோதான் ஆண்ட்டி.” என்று சிம்பிளாக சொல்லிவிட்டாள்.

ஆனால், அது அவர்களுக்குப் பெரிய விஷயமாகத் தெரிந்தது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

“சரி ஆண்ட்டி அது இருக்கட்டும். நைட்டுக்கு டிஃபன் இட்லி பண்ணட்டா. டாக்டர் உங்களுக்கு இட்லி தான் கொடுக்க சொன்னார். தொட்டுக்க என்ன பண்றதுன்னு சொல்லுங்க.” என்றாள் மது.

“இல்லம்மா, டிஃபன் நானே பண்ணிடறேன். இப்போ எனக்கு பரவாயில்ல.” என்று எழுந்தார் பத்மா.

“ஆண்ட்டி எங்க போறீங்க.? நீங்க வாங்க, இப்படி உட்காருங்க.” என்று அவரை அமர வைத்தவள், “இப்போதான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்திருக்கிங்க. அதுக்குள்ள வேலையப் போய் பாக்கணுமா.? நான் எதுக்காக இங்க இருக்கேன். உங்களப் பாத்துக்கணும்னு தானே. நான் இருக்கற வரை நீங்க எதுவும் பண்ணக்கூடாது.” என்று தன் அன்பையும் கடினமாகக் காட்டினாள் மது.

“அதில்லம்மா. உன்ன சிரமப்படுத்தற மாதிரி தெரியுது. அதனாலதான் சொன்னேன்.” என்று இழுத்த பத்மாவைப் பார்த்து மது, “நீங்களும், அங்கிளும் இப்படி சொல்றது தான் எனக்கு கஷ்டமா இருக்கு. எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. நாங்க தினமும் சமைச்சுட்டு தானே இருக்கோம். நீங்க இந்த ரெண்டு நாளைக்கு எதுவும் செய்யாம இருந்தாலே போதும்.” என்றாள் திரும்பவும்,.

இதற்குமேல் அவளிடம் எதுவும் சொல்லத் தோணவில்லை இருவருக்கும். சிரித்துக்கொண்டே அவளின் அன்பான வார்த்தைகளில் கட்டுப்பட்டனர். மது சென்று டிஃபன் வேலைகளை கவனித்தாள். அப்போது செல்போன் மணி அடிக்க, பத்மா போனில் பேசுவதை கவனித்தாள் மது.

இட்லிக்கு தொட்டுக்கொள்ள, அதிக காரமில்லாத கொத்தமல்லிச் சட்னி செய்து பத்மாவுக்கு கொடுத்தாள் மது. ஆச்சர்யப்பட்டுப்போனார் பத்மா. தான் செய்யும் அதே கைப்பக்குவம், சிறிது சுவையாக இருந்தது. புன்னகை முகத்துடனே அவள் பறிமாற அதில் இன்னும் சுவை கூடியது.

“ரொம்ப நல்லா இருக்கு மது. பத்மா செஞ்ச மாதிரியே இருக்கு. இதே மாதிரி தான் பண்ணுவா.” என்று சிலாகித்துப் பேசினார் வெங்கடேசன்.

மது புன்னகைக்க, பத்மா, “ஆமா, மது என்ன சொல்றதுன்னு தெரியல. ரொம்ப ஆச்சர்யமா இருக்கு, என்னோட சமையல நானே சாப்பிடற மாதிரி இருக்கு. இப்போவே இவ்ளோ நல்லா சமைக்கற.” என்று புகழாரம் சூட்டினார்.

“சமையல்ல எனக்கு கொஞ்சம் இண்ட்ரெஸ்ட் ஆண்டி. அம்மா சின்ன வயசிலயே சமையல் பண்ண சொல்லிக்கொடுத்துட்டாங்க. அதுவும் இல்லாம நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதுபுதுசா சமைப்பேன். டிஃபரெண்டா ஏதாச்சும் ட்ரை பண்ணுவேன். இப்போ இங்க நாங்க தனியா இருக்கறதால எல்லாமே ட்ரை பண்ணுவேன். அதனால, டச் எதுவும் விடல.” என்று அவள் இதையும் சிம்பிளாகவே சொன்னாள்.

அவளுக்கு ஈடு, இணை அவளே என்று தோன்றியது அவர்களுக்கு. அனைவரும் சாப்பிட்டு முடிக்க. சிறிது நேரம் இளைப்பாறி விட்டு படுக்க சென்றனர். வெங்கடேசன் அவர்களது அறையில் பத்மாவுடன், மதுவை இருந்துகொள்ளச் சொன்னார்.

பத்மா சாப்பிட வேண்டிய மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தாள் மது. அவரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமர்ந்தாள். இன்னும் அவருக்கு அதன் கலைப்பு குறையவில்லை. அப்படியே சாய்ந்து படுக்கச் சென்றவரின் தலையைப் பிடித்து அவரை நேராக படுக்க வைத்தாள் மது. அப்படியே உறங்கிப்போனார் பத்மா.

மதுவின் செல்போன் சிணுங்க, அவளின் அப்பா, அம்மாவுடன் பேசினாள். பேசி முடித்து வைத்த அடுத்த நிமிடம் பத்மாவின் செல்போன் மணி ஒலிக்க. அதை அவசரமாக எடுத்துப் பேசினாள் மது.

எதிர்முனையில் அவரது மகன் பிரவீன். “ஹலோ மா. என்ன பண்ற.? சாப்பிட்டயா.? இப்போ எப்படி இருக்கு உடம்புக்கு.?” என்று அடுக்கடுக்காய் கேள்விகளை வைத்துக்கொண்டே போனவனிடம், “ஹலோ., ஹலோ., கொஞ்சம் நானும் பேச இடம் கொடுங்க.” என்றாள் மது.

“யாரு.? மதுவா.?” என்றான் கேள்விக்குறியுடன்.

“ஆமா, மதுதான் பேசறேன். அம்மா துங்கிட்டாங்க. அதனால தான் நான் கால் அட்டண்ட் பண்ணேன்.” என்றாள்.

“அம்மாக்கு இப்போ பரவால்ல தானே.? மெடிசின்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டாங்களா.? ஒண்ணும் பிரச்சினை இல்லையே.?” என்றான் சற்று கலக்கத்துடன்.

அவனின் கலக்கம் புரிந்தவளாக, “அம்மா இப்போ நார்மலா தான் இருக்காங்க. எல்லா மெடிசின்ஸூம் கொடுத்துட்டேன். சாப்பிட்டாங்க. நல்லா ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும். நீங்க ஒண்ணும் வொர்ரி பண்ணிக்க வேண்டாம்.” என்று ஆறுதலாக பேசினாள் மது.

“ரொம்ப தேங்க்ஸ் மது. அப்பாதான் எல்லாத்தையும் சொன்னாரு. நீங்க இல்லன்னா இன்னைக்கு அம்மாக்கு என்ன ஆயிருக்கும்னு தெரியல. நினைச்சாலே ரொம்ப பயமா இருக்கு. நன்றி சொல்றத விட ஒரு பெரிய விஷயம் இருக்குன்னா, அத உங்களுக்காக பண்ணத் தயாரா இருக்கேன். ஆனா, அது எதுன்னு எனக்குத் தெரியல. இப்போதைக்கு ஹார்ட்ஃபுல் தேங்க்ஸ் மது.” என்று சொன்னவனின் பேச்சில் சற்று கிறங்கித்தான் போனாள் மது.

“என்னால என்ன ஹெல்ப் பண்ண முடியுமோ அதைத்தான் பண்ணேன். அவ்ளோதான். இத ஏன் போய் நீங்க எல்லாரும் பெரிய விஷயமா பேசறிங்கன்னு தெரியல. சரி அதெல்லாம் இருக்கட்டும். எப்போ உங்க அம்மாவ பார்க்க வரலாம்னு இருக்கீங்க.?” என்று கேட்டாள்.

“வரனும்னு தான் எனக்கும் இருக்கு. ஆனா, இங்க எனக்கு நியூ ப்ராஜக்ட் வொர்க் போயிட்டிருக்கு. அதனால, இப்போதைக்கு வர முடியுமான்னு தெரியல.” என்றான் பிரவீன்.

“ஹூம்ம். அம்மாவ விட நியூ ப்ராஜக்ட் வொர்க்தான் இம்ப்பார்ட்டண்ட் இல்ல.?” என்று மது கேட்க, எதிர்முனையில் அவனிடம் பதிலில்லை.

“கடைசியா எப்போ வந்தீங்கன்னு நியாபகம் இருக்கா.?” என்று திரும்பவும் அவள் கேட்க, “ஒன் அண்ட் ஹாஃப் இயர் முன்னாடி. இடைல அம்மா, அப்பா வந்து ஒரு மாசம் இருந்துட்டு போனாங்க.” என்றான்.

“ம்ம்.. நான் ஒண்ணு சொல்லட்டுமா உங்க அம்மாவோட உண்மையான மருந்தே நீங்க தான். அவங்க மனசு சதா உங்களையே தான் நினைச்சுட்டு இருக்கு. அங்கிள் சொன்னாரு, உங்களுக்காக விரதம் இருந்து இருந்து, சரியா சாப்பிடாம, துங்காம தான் அவங்களுக்கு இந்த பிராப்ளமே வந்திருக்கு. உங்களுக்கு வேலை முக்கியம் தான். நான் அதை தப்பு சொல்லல. ஆனா, அதுக்கும் மேல, நமக்கு உயிர் கொடுத்த அம்மா, அப்பா முக்கியம் இல்லையா.? அது உங்களுக்கு ஏன் தோணாம போச்சு.?” என்று அவள் கேட்க வாயடைத்துப் போனான் எதிர்முனையில் பிரவீன்.

“நீங்க அவங்க கூட இருந்தா அவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது. நீங்க சிங்கப்பூர்ல உட்காந்துட்டு என்னதான் மணிக்கணக்கா பேசினாலும், அவங்க மனக்குறைய போக்க முடியாது. அட்லீஸ்ட் இயர்லி ஒன்ஸ் வந்து அவங்களோட நல்லா ஸ்பெண்ட் பண்ணிட்டாவது போகலாம் இல்ல.? அவங்க உங்கள ரொம்ப மிஸ் பண்ணறாங்க. அத நீங்க மொதல்ல புரிஞ்சுக்கோங்க. உங்களால உங்க அம்மாக்கு என்ன பண்ண முடியுமோ பாருங்க. நான் ரொம்ப பேசறேன்னு நினைக்க வேண்டாம். எனக்கு மனசில பட்டத சொன்னேன். அவ்ளோதான்.” என்று மது சொல்லி முடித்தாள்.

“இல்ல மது, நீங்க ரொம்ப சரியா தான் சொன்னிங்க. எனக்கு வரக்கூடாதுன்னு இல்ல. என்னோட வொர்க் அப்படி. நான் கண்டிப்பா அம்மாவ பார்க்க வரேன்.” என்றான் பிரவீன்.

“அவங்க உங்க அம்மா, ஏதோ என்னோட அம்மாவ பார்க்க வர மாதிரி வரேன்னு இன்பர்மேஷன் கொடுக்கறிங்க.? சீக்கிரம் வர ட்ரை பண்ணுங்க. சரியா.?” என்றாள் சிரித்துக்கொண்டே.

“கண்டிப்பா மது. கொஞ்சம் அம்மாவப் பாத்துக்கோங்க.” என்றான் அக்கறையுடன்.

“கண்டிப்பா, அதுக்காகத்தானே நான் இங்க இருக்கேன்.” என்றாள்.

“சரி, நான் காலைல பேசறேன்.” என்று போனை வைத்தான்.

“ம்ம்.. சரி.” என்று அவளும் போனை வைத்துவிட்டாள்.

பிரவீன் அந்த நிமிடமே ஒரு முடிவெடுத்தான்.


(தொடரும்...)
 
Katha super ah than irruku, aana epi tha romba romba late ah kodukuringo.ithu gnayamae kidayathu theriyuma
 
Katha super ah than irruku, aana epi tha romba romba late ah kodukuringo.ithu gnayamae kidayathu theriyuma

ரொம்ப சாரி மா.. இனிமேல் அப்படி இருக்காது.. வாரம் ரெண்டு ud கண்டிப்பா போட்ருவேன்.. ஓகே..??
 
Top