Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 7 1

Advertisement

Admin

Admin
Member


பகுதி – 7



இரண்டு நாட்கள் ஹரி வரவில்லை என்றதும் அனிக்கு ஹரியை பற்றி யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. மீனாவிடம் கேட்டாலும் ஒழுங்கான பதில் இல்லை.... ஹரியின் அத்தையிடம் பேச அனிக்கு பயம். அவர் தானே அவளுக்கு தலைமை ஆசிரியர்.

நான் என்னுடனே ஹரியை ஊருக்கு அழைத்து சென்று விடுவேன் என்று வைஷணவி கேலியாக கூறியதை உண்மை என்று நம்பி பயந்து கொண்டு இருந்தவள், ப்ரணவும் சதுரங்க வகுப்புக்கு வருவதால்... அவனிடம் ஹரியை பற்றி கேட்க....



ரொம்ப நாள் லீவு... என்பது மட்டும் தான் அவனுக்கு தெரிந்தது. ஹரி எப்போது மீண்டும் வருவான் என்பதை பற்றியெல்லாம் அவனுக்கு தெரியவில்லை...



“உனக்கு ஹரி சார் வீடு தெரியாதா....” அஸ்வத் கேட்க... “தெரியாது....” என்று பாவமாக சொன்னவள் “ஏன் கேட்கிற?” என்றதும் “தெரிஞ்சா அங்க போய் பார்க்கலாம்.” என்று அவன் சொன்னதும், அனிக்கு பளிச்சென்று ஒன்று தோன்றியது.



ஹரி அவளை அதிக முறை அழைத்து சென்ற இடம் தேவ்வின் உணவகம் தான். ஹரியும் தேவ்வும் நண்பர்கள் என்று அவளுக்கு தெரியும். அப்படியென்றால் தேவ்விடம் சென்று கேட்டால் ஹரியை பற்றி தெரியும். அவனிடம் ஹரியின் வீட்டிற்கு அழைத்து செல்ல சொல்லி கேட்கலாம் என்று நினைத்தாள்.



அனிக்கு ஹரியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. அதற்கும் இப்போது ஒரு வழி கிடைத்து விட.... உடனே கிளம்ப துடித்துக்கொண்டு இருந்தாள்.



அதற்கு ஏற்றார் போல் விஷ்வமும் வீட்டின் உள்ளே உறங்கிக்கொண்டு இருந்தார். அவர் எப்பவுமே அனி பள்ளியில் இருந்து வந்ததும் தான் சிறிது நேரம் சென்று படுப்பார்.



இது தான் நல்ல நேரம் என்று நினைத்த அனி அஸ்வதும், ப்ரணவும் விளையாடிக்கொண்டு இருந்த போது.... யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து மெதுவாக கிளம்பி விட்டாள்.



அரை மணி நேரம் சென்று எழுந்து வந்த விஸ்வம், அஸ்வதும் ப்ரணவும் மட்டும் இருப்பதை பார்த்து, அனி எங்கே என்று கேட்க....



“உள்ள இருப்பா...” என்றனர் இருவரும்.



“உள்ள இல்லையே....நான் அங்க இருந்து தானே வந்தேன்.” என்றவர், உள்ளே சென்று எல்லா இடங்களிலும் பார்த்து விட்டு வந்தார்.



அஸ்வதும் ப்ரணவ்வும் அனி எங்கே என்று தெரியாமல் இருவரும் முழித்தனர். விஸ்வம் ஒருவேளை அவள் வீட்டிற்கு சென்று இருக்கிறாளா என்று போய் பார்த்து விட்டு வந்தார். மீனா வேலைக்கு சென்றிருப்பதால் வீடு பூட்டி இருக்க... அங்கே வெளியில் கூட அனி இல்லை.



அந்த தெருவில் தேடி பார்த்துவிட்டு, ஒரு வேளை பள்ளியில் இருக்கிறாளோ என்று நினைத்து அங்கு தேடி சென்றார். ஹரி வகுப்பு எடுக்கும் சமயத்தில் தான் அவனோடு இருப்பாள் மற்ற நேரம் அங்கே செல்ல மாட்டாள்.



ஒருவேளை ஹரி இன்று வகுப்பு எடுக்க வந்திருப்பானோ என நினைத்து அங்கே சென்று பார்க்க... அங்கேயும் அனி இல்லை. அனியை காணாமல் விஸ்வத்துக்கு பதட்டத்தில் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது.



அவர் அந்த பள்ளி வளாகத்திலேயே தளர்ந்து போய் அமர்ந்து விட... அங்கிருந்த காவலாளி சென்று ஹரியின் அத்தையை அழைத்து வந்தார்.



ஹரியின் அத்தை விமலா விஸ்வத்திடம் விவரம் கேட்டவர் “இங்க தான் இருப்பா பயப்படாதீங்க.” என்றவர், அஸ்வத் மற்றும் ப்ரணவ்வை விசாரிக்க.... அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை....



“இருந்தாலும், அவர் விடாமல் அவர்களை மீண்டும் மீண்டும் விசாரித்தார். நீங்க மூன்னு பேரும் தான சேர்ந்து இருந்தீங்க. கடைசியா என்ன பேசுனீங்க? சண்டை போட்டீங்களா... என்று கேட்க, அஸ்வதும் ப்ரணவும் பயந்து விட்டனர்.



“இல்ல மிஸ்.... சண்டை எல்லாம் போடலை... அனி ஹரி சாரை பார்க்கனும்னு சொன்னா... அவரை தேடி போய்டாளோ....” அஸ்வத் சொல்ல... அதை கேட்ட மற்றவர்கள் திடுக்கிட்டனர்.



விமலா உடனே ஹரியை அழைத்து, அனி காணாமல் போனதை சொல்ல... அதிர்ச்சி அடைந்த ஹரி, ஒரு நொடி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றவன், தான் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அனிக்கு ஆபத்து என்பதை உணர்ந்து, அடுத்து என்ன செய்வது? என்று யோசிக்க ஆரம்பித்தான்.



ஏற்கனவே அனி சென்று அரை மணி நேரத்திற்கும் மேல் ஆனதால் உடனே அந்த பகுதியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்து அனியை பற்றி விவரம் சொல்லி தேட ஆரம்பிக்க சொன்னான். தன்னிடம் இருந்த அவளின் புகைப்படத்தையும் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தான்.



ஹரியின் குடும்பம் அதே ஊரில் பல வருடங்களாக இருப்பதால்... அதோடு ஹரிக்கும் உயர் காவல் அதிகாரிகளோடு தொடர்பு இருந்ததால்... அவனால் அந்த ஏற்பாட்டை செய்ய முடிந்தது.



ஹரி அப்போது வீட்டில் இருந்ததால் வைஷ்ணவியும் விஷயம் கேள்விப்பட்டு பதட்டமடைந்தார். அவரும் ஹரியுடன் கிளம்ப... இருவரும் அனியின் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.



விஸ்வம் அதிக பதட்டத்துடன் இருக்க... அவரின் மகன் மனோஜும் வேலை முடித்து வந்திருந்தான். அவர்கள் இருவரும் அக்கம் பக்கம் தேடிக்கொண்டு இருந்தனர்.



மீனாவிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வது என்று தெரியாமல்? விஸ்வம் இன்னும் மகளிடம் சொல்லாமல் இருந்தார்.



ஹரிக்கு அப்போது தான் மீனாவின் நினைவு வந்தது. தனக்கே இப்படி இருக்கும் போது... பெற்றவள் குழந்தையை காணோம் என்றால்... என்ன ஆவாள்? என்று யோசித்து கலங்கியவன்,




“மீனாவுக்கு இப்ப சொல்ல வேண்டாம். அவங்க வேலை முடிஞ்சு வர்றதுக்குள்ள எப்படியும் அனியை கண்டு பிடித்து விடலாம்.” என்றான்.



விஸ்வத்தையும் மனோஜையும் அந்த ஏரியாவின் காவல் நிலையத்திற்கு அனுப்பி முறையாக புகார் பதிவு செய்ய சொன்னவன், அவனே அனியை தேடிக்கொண்டு புறப்பட்டான்.



மகன் சென்றதும் வைஷ்ணவியும் சும்மா இருக்கவில்லை அவரும் அனியை தேடி புறப்பட்டார். நடந்தே போய் பார்ப்போம் சின்ன குழந்தை தான ரொம்ப தூரம் போய் இருக்க மாட்டாள் என்றே நினைத்தார். செல்லும் வழியெல்லாம் அங்கிருந்தவர்களிடம் அனியை பற்றி விசாரித்துக்கொண்டே சென்றார்.



ஹரிக்கு எங்கு செல்வது என்று ஒன்றும் தெரியவில்லை.... அவன் இதுவரை அவன் வீட்டிற்கு அவளை அழைத்து சென்றது இல்லை... தான் மட்டும் தனியாக இருப்பதால் தான் அவன் அழைத்து சென்றது இல்லை...



இப்போது தன்னை தேடி சென்ற குழந்தை எப்படி இருக்கிறதோ என்ற கவலை மனதை அரிக்க ... அனியோடு அடிக்கடி சென்ற பாதையிலேயே... சுற்றிலும் பார்வை அலையவிட்டபடி சென்றான்.



கிளை சாலைகள் முடிந்து முக்கிய சாலைக்குள் வந்தவனுக்கு அங்கிருந்த வாகன போக்குவரத்தை பார்ததும் மனதில் திக்கென்றது.



சின்ன குழந்தை வண்டியில் எதுவும் மாட்டி இருந்தால்.... நினைக்கவே அவனின் சர்வமும் நடுங்கியது. கடவுளிடம் பல வேண்டுதல்களை வைத்தபடியே சுற்றிலும் பார்த்துக்கொண்டே சென்றான்.



அப்போது அவனின் செல் அழைத்தது எடுத்து பார்த்தால் தேவ் தான் அழைத்தான். அவனுக்கு ஹரியின் அத்தை விஷயத்தை சொல்லி இருந்தார். எடுத்ததும் வேறு பேசி நேரத்தை வீணாக்காமல் “இதோ நான் இங்க இருந்து கிளம்புறேன். இங்க ஓட்டல்ல வேலை செய்றவங்களையும் தேட சொல்லி அனுப்பி இருக்கேன். கவலைப்படாதே கிடைச்சிடுவா...” என்றான்.



“ரொம்ப பயமா இருக்கு டா.... அப்பான்னு ஆசையா வந்த குழந்தைய விரட்டிட்டேன். ஆனா அவ என்னை தேடி போய் இருக்கா.... எங்க இருக்கா? என்ன ஆனானே தெரியலை....”



“இந்த நிமிஷம் அவ என்ன சொன்னாலும்... நான் கேட்பேன் டா.... எனக்கு அவ நல்லபடியா கிடைச்சிட்டா போதும்....கடவுள் எனக்கு திரும்ப ஒரு வாய்ப்பு கொடுப்பாரா....”



ஹரியின் வேதனை தேவ்வின் கண்களையும் கலங்க செய்ய... “ஒன்னும் ஆகாது சீக்கிரம் கிடைச்சிடுவா....” என்றவன், தானும் அனியை தேடி கிளம்பினான்.



ஹரி அணியோடு சென்ற பாதையில் எல்லாம் தேடி அலைந்த போதும் அவன் கண்களில் அனி படவே இல்லை... காவல் நிலையத்திற்கு அழைத்து கேட்டான். அவர்கள் நாங்களும் தேடிக்கொண்டு இருக்கிறோம் என்றனர்.



மீனா அலுவலகத்தில் இருந்து வரும் நேரம் ஆனதால்.... வண்டியை வீட்டிற்கு திருப்பினான். அவள் முகத்தை எப்படி பார்க்க போகிறோம் என்றே அவனுக்கு தெரியவில்லை.... ஆனால் இந்த அதிர்ச்சியை அவள் தனியே தாங்கும் படி விடக்கூடாது.



அனி காணாமல் போனதற்கு தானே பொறுப்பு என்று நினைத்தான். அதனால் அவள் தன்னை என்ன பேசினாலும் வாங்கிக்கொள்ள வேண்டியது தான் என்ற முடிவோடு தான் கிளம்பினான்.



மீனாவின் வீடு பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளே இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். தினமும் அவள் நடந்து தான் செல்வாள்.



அன்றும் அது போல் அலுவலகத்தில் இருந்து பேருந்தில் வந்து இறங்கியவள், முக்கிய சாலையில் இருந்து திரும்பி கிளை சாலைக்குள் நடந்து கொண்டிருந்தபோது “அம்மா...” என்ற குரல் கேட்டு, யாரோ யாரையோ அழைக்கிறார்கள் என்று நினைத்து, திரும்பி பார்க்க.... அனி தான் அவளை ஒரு கடையின் உள்ளே இருந்து அழைத்தாள்.



ஒரு நொடி மகளை அங்கு கண்டதும் அதிர்ந்தாலும், விஸ்வம் அல்லது மனோஜுடன் கடைக்கு வந்திருப்பாள் என்று நினைத்து சாதரணமாகத்தான் அந்த கடைக்குள் சென்றாள். ஆனால் அங்கே தெரியாதவருடன் அனி மட்டுமே இருக்க.... பதறி போய் மகளை ஆராய்ந்தாள்.



அதற்குள் அந்த கடைக்காரரே பேச ஆரம்பித்தார்.



“இந்த பாப்பா மட்டும் தனியே நடந்து வந்திட்டு இருந்தது. கூப்பிட்டு விசாரிச்ச போது தான் தெரிஞ்சது. வீட்ல சொல்லாம வந்திட்டதுன்னு. அது தான் யாரவது தேடி வருவாங்கன்னு பிடிச்சு இங்கயே உட்கார வச்சேன்.”



“பாப்பா உங்க போன் நம்பர் சொல்லுச்சு, போட்டு பார்த்தா.... நீங்க எடுக்கவே இல்லை....” என்றதும், மீனா பையில் இருந்த தன் கைபேசியை எடுத்து பார்த்தாள். அதில் அவளுக்கு தெரியாத எண்ணில் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள் வந்திருந்தது.



பேருந்தில் இருந்ததால் அவளுக்கு சத்தம் கேட்கவில்லை.... அவள் எப்போதுமே சத்தம் குறைவாகத்தான் வைத்திருப்பாள்.



“வழி கேட்டா அது சொல்ற வழி எனக்கு புரியவும் இல்லை.... கடையில வேற ஆள் இல்லை.... வந்ததும் நாமே விசாரிச்சு கூடிட்டு வருவோம்ன்னு நினைச்சேன்.” என்றார்.



அவர் சொன்னது காதில் விழுந்தாலும் மனதில் பதியவே இல்லை.... மீனா அவ்வளவு அதிர்ச்சியில் இருந்தாள். இன்னும் சற்று தூரத்தில் பெரிய சாலை இருக்கிறது, மகள் அங்கு சென்று அவளுக்கு எதுவும் ஆகி இருந்தால்... இல்லை யாரவது கெட்டவர்களிடம் அவள் மாட்டி இருந்தால்.... அதை எல்லாம் நினைக்கவே நடுக்கமாக இருந்தது.



மீனாவின் எண்ணங்களை அறியாத கடைகாரர் அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே இருந்தார்.



“ஏதேதோ சொல்லுச்சு மா... ஹரி அப்பாவை தேடி போறேன். அவர் தூரமா ஒரு ஹோட்டல்ல இருப்பார். அங்க ஊஞ்சல் சறுக்கு மரம் எல்லாம் இருக்குமாம்.” என்றதும், மீனா உச்ச கட்ட அதிர்ச்சிக்கு சென்றாள். மகள் ஹரியை தேடியா சென்றாள்.



அதுவரை மகளை தன் மீது சாய்த்து அவளின் தலையை கோதிக்கொண்டு இருந்தவளின் கை அப்படியே நின்றது. அந்த நேரம் சரியாக வைஷ்ணவியும் அங்கே வந்து சேர்ந்தார். அவரும் பல சாலைகள் சுற்றி திரிந்தவர், தூரத்தில் இருந்து இந்த கடையை பார்த்ததும், அங்கே சென்று விசாரிப்போம் என்று வந்தார்.



அங்கே எதிர்பாராமல் மீனாவையும் அவளுடன் அணியையும் பார்த்ததும் இன்ப அதிர்ச்சிக்கு சென்றார்.



“மீனா, அனி எப்படி உன்கிட்ட வந்தா?.....” அவர் கேட்க பதில் சொல்லும் நிலையில் மீனா இல்லை.... அதை கவனித்த கடைக்காரரே விஷயத்தை சொல்ல.....



“ரொம்ப நன்றிங்க, நீங்க மட்டும் பார்த்து அவளை பிடிச்சு வைக்கலைன்னா... நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு. நீங்க பண்ண உதவியை நாங்க என்னிக்கும் மறக்க மாட்டோம்.” என்றவர் அப்போது தான் நினைவு வந்து, ஹரிக்கு அழைத்து சொன்னார். அவனும் அப்போது அந்த பக்கமே இருந்ததால் அடுத்த இரண்டாவது நிமிடம் அங்கே இருந்தான்.



ஹரியை பார்த்ததும் மீனாவிடம் இருந்த அனி அவனிடம் ஓடி செல்ல..... அவளை தூக்கி அணைத்தவன் “எங்களையெல்லாம் தவிக்க விட்டு எங்க டா போன? இப்படி தனியா வரலாமா....” என்றதும்,



“நீங்க ஏன் வரலை? நான் அதனால தான் உங்களை தேடி தேவ் அங்கிள் ஓட்டலுக்கு போனேன்.” என்றாள் அனி.



“இப்படியெல்லாம் தனியே எங்கையும் வரக்கூடாது.” ஹரி அனியை கடிந்து கொள்ள...



“அப்ப நீங்க வாங்க.” என்றாள் அனி அப்போதும் பிடிவாதமாக. அவளுக்கு தான் எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்க இருந்தோம் என்று புரியவில்லை... அவள் சின்ன குழந்தை தானே.... அவளுக்கு என்ன தெரியும்.

வைஷ்ணவி நடந்ததை மகனிடம் சொல்ல.... ஹரி ஒருமுறை கடைகாரருக்கு நன்றி சொன்னதும் வெளியே வந்தனர். மீனா அப்போதும் அமைதியாக இருந்தாள். கடைக்காரரே அவளை ஒரு மாதிரி பார்த்தார். அவள் மனதில் இருக்கும் எரிமலையை பற்றி அவருக்கு என்ன தெரியும்?”



வெளியே வந்ததும், விஸ்வம், தேவ் மற்றும் காவல் நிலையத்திற்கு அழைத்து அனி கிடைத்து விட்டதை பற்றி ஹரி சொல்ல.... மகளை காணோம் என்று அனைவரும் ரொம்ப நேரமாக தேடி இருக்கிறார்கள் என மீனா புரிந்து கொண்டாள்.



அந்த வழியாக சென்ற ஆட்டோவை ஹரி நிறுத்த அதில் வைஷ்ணவியும், மீனாவும் ஏறிக்கொண்டனர். அனி ஹரியுடன் பைக்கில் சென்றாள். செல்லும் வழியில் வைஷ்ணவி நடந்ததை மீனாவிடம் சொல்லிக்கொண்டே வந்தார். மீனா பதில் எதுவும் பேசவில்லை.



இவர்கள் வீட்டிற்கு சென்ற போது.... அந்த தெருவே இவர்களை நின்று வேடிக்கை பார்த்தது. அனியை காணவில்லை என்ற செய்தி அதற்குள் காட்டு தீ போல் பரவி இருந்தது. விஸ்வம் பேத்தியை பார்த்ததும் ஓடி வந்து அவளை தூக்கிக் கொண்டார்.



“கொஞ்ச நேரம் கூட உங்களால குழந்தைய ஒழுங்கா பார்த்துக்க முடியாதாப்பா....” என வள்ளென்று தந்தையிடம் எரிந்து விழுந்த மீனா, அனியை கூட அழைக்காமல் மாடி ஏறி சென்று விட்டாள். அவள் பின்னே வைஷ்ணவியும் ரதியும் செல்ல.....



“போலீஸ் ஸ்டேஷன் போய் குழந்தை கிடைச்சிடுச்சுன்னு நேர்ல ஒரு தடவை சொல்லிட்டு கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கிட்டு வந்திடுங்க.” என ஹரி மனோஜிடம் சொல்ல... அவனும் சரி என்று கிளம்பினான்.



அவன் சென்றதும் ஹரியும் அனியோடு மாடி ஏறினான். அவனோடு விஸ்வமும் வந்தார். மீனா மகளுடன் இருக்க நினைப்பாள் என்று நினைத்து தான் ஹரியே அவளை அழைத்து வந்தான்.



ஆனால் அனியை பார்த்ததும் ஹரியிடம் திரும்பிய மீனா “இவளை இங்க இருந்து கூடிட்டு போய்டுங்க. நான் அடிச்சேனா அவ தாங்க மாட்டா...” என்றதும்,



என்ன என்ன என்பது போல் புரியாமல் பார்த்த ஹரிக்கு, அவள் சொன்னது புரிந்த நொடி அனியோடு விரைவாக அங்கிருந்து சென்று விட்டான். அவனுக்கும் தெரியும் தானே மீனா கோபம் வந்தாள் எப்படி அடிப்பாள் என்று....



அனிக்கு இப்போது தான் லேசாக தான் செய்த செயலின் விளைவு புரிய தொடக்கி இருந்தது. அவளும் மீனா சொன்னதை கேட்டுக் கொண்டு தானே இருந்தாள்.



“அம்மா ரொம்ப கோபமா இருக்காங்களா....” அனி மெதுவாக ஹரியிடம் கேட்க....



“நீ பண்ணது அப்படி தானே டா.... யார் கிட்டயும் சொல்லாம தனியா அப்படி போலாமா.... ரோட்ல எவ்வளவு வண்டி வருது.... அடிபட்டா உனக்கு தானே வலிக்கும். உன்னை யாரவது தூக்கிட்டு போய்ட்டா என்ன பண்றது? அப்புறம் அம்மா அனி பாப்பா காணோம்னு அழுவாங்க இல்ல.... பாவம் இல்ல அவங்க.”



இனி இன்னொரு முறை அனி இப்படி எதுவும் செய்ய கூடாது என்றால்.... அவள் செய்த செயலின் பின்விளைவுகளை பற்றி அவளுக்கு விளக்கி சொன்னால் தானே தெரியும் என்று தான் ஹரி விளக்கமாக சொன்னான்.



அதை கேட்ட அனி நிஜமாகவே பயந்து விட்டாள். அவள் ஹரியோடு இன்னும் ஒட்டிக்கொள்ள.... ஹரி அவளோடு அவன் அத்தை வீட்டிற்கு சென்றான்.



வீட்டிற்கு வந்த மீனா அவள் பாட்டிற்கு வேலை பார்த்துக்கொண்டு இருந்தாள். குளியல் அறை சென்று முகம் கைகால் கழுவி நைட்டி மாற்றிக்கொண்டு வந்தவள், அங்கிருந்தவர்களுக்கு டீ வைத்துக்கொடுத்தாள்.
 
Top