Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 16 1

Admin

Admin
Member

பகுதி – 16

ஹரியை திட்டும் மட்டும் திட்டிவிட்டு “நானும் அப்பாவும் கிளம்பி வரோம்.” எனச் சொல்லி வைஷ்ணவி போன்னை வைத்தார்.
டாக்டர் வந்து ஊசி போட்டு மருந்து மாத்திரை கொடுத்தவர் “சளி காய்ச்சல் தான், ரெண்டு நாள் காய்ச்சல் குறையலைன்னா வேற டெஸ்ட் எடுப்போம். இப்போதைக்கு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க.” எனச் சொல்லிவிட்டு செல்ல.... விஷ்வம் அதை ஹரிக்கு போன் செய்து சொன்னார்.

“மாமா, எப்படியும் அஸ்வத் சாயங்காலம் தான வருவான். அதுவரை நீங்களும் ரதியும் இங்க இருங்க. நாளைக்கு அம்மாவும் அப்பாவும் வந்திடுவாங்க. மீனா வீணா அலைய வேண்டாம்.” என்றான் ஹரி.

ஹரி சொன்னதை விஸ்வம் மீனாவிடம் சொல்ல...“ஐயோ ! அதுக்குள்ள அத்தை கிட்ட சொல்லிட்டானா... அவங்களுக்கு வேற அலைச்சல் என அவள் நினைக்கும் போதே... வைஷ்ணவி அவளைச் செல்லில் அழைத்துவிட்டார்.

“எப்படி இருக்கீங்க அத்தை?”

“நான் நல்லா இருக்கேன். நீ தான் நல்லாயில்லை போல... என்ன ஆச்சு?”

“ஒன்னும் இல்லை.... நேத்து மழையில நனைஞ்சேன், அது தான் லேசா காய்ச்சல். இப்ப டாக்டர் வந்து ஊசி போட்ட பிறகு பரவாயில்லை....”

“நானும் மாமாவும் கிளம்பி வரோம்.”

“வேண்டாம் அத்தை எனக்காக அலையாதீங்க. சாதாரணக் காய்ச்சல் தான்.”

“பரவாயில்லை மீனா நாங்க வரோம்.”

“வந்தா பத்து நாளாவது இருக்கணும். உடனே போகணும்னா வீணா அலையை வேண்டாம்.” மீனா கறாராகச் சொல்ல...“இப்ப வந்தா பத்து நாள் இருக்க முடியாது. இங்க மழை சீசன் ஆரம்பிச்சதும் அங்க வந்து ஒரு மாசம் இருக்கேன், ஓகே வா...

“ஓகே அப்படியே பண்ணுங்க அத்தை. நீங்க வந்திட்டு உடனே போனா கஷட்டமா இருக்கும்.”

மருமகளின் பாசம் வைஷ்ணவியை நெகிழ வைத்தது. மீனாவை உடம்பை பார்த்துக்கச் சொல்லிவிட்டுப் போன்னை வைத்த வைஷ்ணவி ஹரியை அழைத்து மீனா சொன்னதைச் சொல்ல....
“அம்மா, அவளுக்கு ரெண்டு நாளாவது ரெஸ்ட் வேண்டாமா.... நீங்க ஏன் அவ சொன்னதுக்குச் சரி சொன்னீங்க...” ஹரி அவரிடம் பாய....

“ஏன் நீ என்ன பண்ற? நீ அவளைப் பார்த்துக்கோ.... நான் வர முடியாது.” என வைஷ்ணவி கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போன்னை வைக்க.... ஹரி தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டான்.

மதியம் இரண்டு மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தவன், கடையில் இருந்தே ஒருவரை அழைத்து வந்திருந்தான். அவரிடம் காரை கொடுத்து விஸ்வத்தையும், ரதியையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தவன், மீனாவை தேடி செல்ல.... அவள் அரைகுறை உறக்கத்தில் இருந்தாள்.

ஹரி அவள் நெற்றியில் கைவைத்து பார்க்க காய்ச்சல் விட்டிருந்தது. மீனா லேசாகக் கண் திறந்து பார்ப்பதை கவனித்த ஹரி “இப்ப தான் உன் அப்பாவும், அண்ணியும் போறாங்க.” என்றதற்கு, சரி என்றபடி திரும்பி படுத்தாள்.

அவள் உறங்கட்டும் என ஹரி அறையில் இருந்து வெளியே செல்ல திரும்பிய நொடி “நீங்க சாப்டீங்களா...” என மீனாவின் குரல் கேட்டதும், அப்படியே நின்று விட்டான்.

உடம்பு முடியாத நிலையிலும் அதோடு தூக்க கலக்கத்தில் வேறு இருந்தாள்... அப்போதும் மறக்காமல் தன்னைப் பற்றிக் கேட்டது ஹரிக்குச் சந்தோஷமாக இருந்தது.

“ம்ம்... சாப்பிட்டேன்.” என்றதும், மீனாவின் விழிகள் தூக்கத்தில் சொருக.... ஹரி அவள் அருகிலேயே கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான்.

ஏனோ அவனுக்கு அங்கிருந்து செல்லவே மனம் இல்லை.... சிறிது நேரத்தில் உட்கார்ந்தபடியே உறங்க ஆரம்பித்தான்.


மாலை அனி வரும் நேரம் செல்லில் அலாரம் அடிக்க... ஹரி சென்று மகளை அழைத்து வந்தான். அனி வந்து மீனாவை தொட்டு பார்த்து நிம்மதி அடைந்தாள். மீனா அப்போது கூட எழுந்து கொள்ளவில்லை.... சரி அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என ஹரியும் அனியும் வெளியே வந்து விட்டனர்.

இரவு ஏழு மணி ஆன போது கூட மீனா எழுந்து கொள்ளவில்லை... ஒரு கட்டத்தில் அவள் உறங்குகிறாளா அல்லது மயக்கமா என ஹரிக்கு பயமே வந்துவிட்டது.
உறக்கத்தில் இருந்த மீனா தொடர்ந்து தன்னை யாரோ உலுக்குவதை உணர்ந்து கஷ்ட்டப்பட்டுக் கண் திறக்க... அவ்வளவு நெருக்கத்தில் ஹரியை பார்த்ததும் முதலில் பயந்து விட்டாள்.

மீனா கட்டிலின் நடுவில் படுத்திருந்ததால்.... ஹரி கட்டிலில் அமர்ந்து தான் அவளை எழுப்பும் படி ஆனது. அவள் பார்வையில் பயத்தைப் பார்த்ததும் ஹரி சட்டென்று எழுந்து விட்டான்.

“மணி எழாகுது, எதாவது சாப்டிட்டு தூங்கு.” ஹரி சொல்ல.... மீனா மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

ஹரி அவளுக்குக் குடிக்க ஹார்லிக்ஸ் கொண்டு வந்து கொடுக்க... அதைக் குடித்ததும் தான் மீனாவுக்குத் தெம்பாக இருந்தது.

வெளியே ஹாலுக்கு வந்தவள்,சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

“அம்மா... ஜுரம் சரி ஆகிடுச்சா.... பாவம் அப்பா, நீங்க தூங்கும் போது.... உங்களை வந்து வந்து பார்த்துட்டே இருந்தாங்க.”

மகள் சொன்னதைக் கேட்டதும் மீனா ஹரியை பார்க்க... “ரொம்ப நேரம் ஆச்சா... அது தான் தூக்கமா மயக்காமான்னு தெரியலை....” அவன் சொன்ன விதத்தில் மீனாவுக்குச் சிரிப்பு வந்து விட்டது, சிரிப்பை அடக்கி பார்த்தவள் முடியாமல் சட்டென்று எழுந்து கொள்ள.... ஹரி அவளை ஏன் என்பது போல் பார்த்தான்.

“ரொம்பக் கசகசன்னு இருக்கு. நான் குளிக்கப் போறேன்.”

மீனா சொன்னதைக் கேட்ட ஹரி “என்ன விளையாடுறியா நீ.... காலையில எல்லாம் காய்ச்சல் நெருப்பா அடிச்சது. இப்ப இந்நேரத்துக்குக் குளிச்சா.... திரும்பக் காய்ச்சல் வராதா....” என அவன் கோபப்பட....

“ஒன்னும் வராது... என்னால குளிக்காம இருக்கவே முடியாது.” எனச் சொல்லிவிட்டு மீனா உள்ளே செல்ல... ஹரி அவள் பின்னோடு உள்ளே சென்றான்.

மீனா அவனைக் கண்டுகொள்ளாமல் மாற்று உடைகளை எடுக்க.... ஹரி அவளையே முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்று இருந்தான். உடைகளை எடுத்துக்கொண்டு திரும்பிய மீனா “நான் கண்டிப்பா குளிக்கணும் ஹரி ப்ளீஸ்....” என்றதும்,

“சரி அஞ்சு நிமிஷத்துல வரணும்....” என்றபடி வழிவிட்டவன், இந்தப் பொண்ணுங்கலாமே இப்படித்தானா... இல்லைன்னா எனக்கு வர்றது எல்லாம் இப்படி வருதா.... எல்லாமே தான் நினைச்சது தான் பண்ணுதுங்க... என ஹரியால் புலம்ப மட்டுமே முடிந்தது.

அதிக நேரம் ஆக்காமல் மீனா உடனே வந்து விட்டாள். குளித்ததும் அவளுக்கு நன்றாகப் பசித்தது. சமையல் அறையில் சென்று அவள் உருட்ட.... அவள் பின்னே வந்த ஹரி “நீ போய் உட்காரு நான் சாப்பிட கொண்டு வரேன்.” என்றான்.

“நான் நல்லாத்தான் இருக்கேன். நானே பார்த்துக்கிறேன்.” என மீனா தன் வேலையைத் தொடர.... ஹரி அவளைப் பிடித்து வெளியே இழுத்து வந்து... உணவு மேஜையில் உட்கார வைத்து விட்டுச் சென்றான்.

“எனக்குத் திரும்பக் கஞ்சி வேண்டாம்.” மீனா சத்தமாகக் குரல் கொடுக்க.....

“எஸ் மேடம்...” எனச் சமையல் அறையில் இருந்து பதில் வந்தது.

ஹரி அவளுக்கு வேகமாக அப்போது தான் இட்லி ஊத்தி வைத்தான். சட்னி சாம்பார் எல்லாம் ஏற்கனவே தயாராக இருந்தது. ஐந்து நிமிடத்தில் இட்லி வெந்து விட.... அவளுக்குச் சூடாகக் கொண்டு வந்தான்.

“நானே செஞ்சிருப்பேன்....” எனச் சொல்லிக்கொண்டே மீனா தட்டிற்காகக் கை நீட்ட....

“இப்ப தான் காய்ச்சல் விட்டிருக்கு.... உடம்பை போட்டு ரொம்ப அலட்டினா திரும்பக் காய்ச்சல் வந்திடும்.” சொல்லிக்கொண்டே ஹரி தட்டை மேஜையில் வைக்க....

“எனக்கு இதெல்லாம் தனியா சமாளிச்சுப் பழக்கம் தான்.” எனச் சொல்லிவிட்டு மீனா சாப்பிட செல்ல.... ஹரி அவள் தட்டை தன் கையில் எடுத்துக்கொண்டான்.


மீனாவே ஏற்கனவே நல்ல பசியில் இருந்தாள், இதில் ஹரி வேறு சாப்பிட விடாமல் செய்ததும், அவளுக்குக் கோபமாக வந்தது.

“இதுவரை எப்படியோ... இப்ப நான் இருக்கேன். உன்னை அப்படி எல்லாம் விட மாட்டேன்.” என்றவன், மீண்டும் தட்டை அவளிடம் கொடுக்க....

“இதுக்கு முன்னாடி தனியா விட்டது மறந்து போச்சு போல....”
என முனங்கியபடி மீனா சாப்பிட தொடங்கினாள்.

அவள் சாப்பிடும் போதே... ஹரி அனிக்குத் தோசை ஊற்றிக் கொண்டு வந்து வைக்க... அனி வந்து சாப்பிட்டாள்.

மீனா சாப்பிட்டு முடித்துச் சமையல் அறைக்குச் செல்ல.... அவள் பின்னே உள்ளே வந்த ஹரி “நீ மட்டும் நல்லா அமுக்கிறியே.... அனி சாப்பிட்டாளான்னு ஒரு வார்த்தை கேட்டியா...” என அவளை வம்பிழுக்க....

“உங்க பொண்ணை நீங்க நல்லா பார்த்துப்பீங்கன்னு தெரியும்.” என்றாள் மீனா பதிலுக்கு....

“தேங்க்ஸ் அனியை ஆவது என் பொண்ணுன்னு ஒத்துகிறியே...”

“இதுல நான் ஒத்துக்க என்ன இருக்கு? அவ உங்க பொண்ணு தான். ஆகாஷ் வந்து கேட்டா கூட நான் அப்படித்தான் சொல்வேன்.”

மீனா குரலில் அத்தனை உறுதியும் அழுத்தமும் இருந்தது.

“ஹே மீனா.... கூல். நான் சும்மா உன்னை வம்பிழுத்தேன்.” எனத் தோசையை எடுத்துக்கொண்டு திரும்பியவன், வெளியே வரை சென்று விட்டு மீண்டும் உள்ளே வந்து “அப்புறம் அந்த ஆகஷோட பேர் கூட இனி உன் வாயில் இருந்து வரக் கூடாது.” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.

மீனா சிறிது நேரம் அப்படியே திகைத்து போய் நின்று விட்டாள். ஹான் நல்ல கதையா இருக்கே.... நான் ஆகாஷ் பேர் கூடச் சொல்லக் கூடாதாம். ஆனா இவர் மட்டும் பிருந்தாவை நினைச்சிட்டு இருப்பாராம். இது எந்த ஊர் நியாயம்? எனத் தனக்குள் பேசியபடி தோசை ஊற்றினாள்.

ஹரி சமையல் அறைக்கு வந்தவன் “நீ போ நான் ஊத்திக்கிறேன்.” என்றான்.“நீங்க ஊத்திட்டு சாப்பிடுறதுக்கு முன்ன ஆறிடும். நானே ஊத்துறேன்.” மீனா சொல்ல... ஹரி தட்டில் சட்னியும் சாம்பாரும் எடுத்துக்கொண்டு வந்து சமையல் அறை மேடையில் அமர்ந்து கொண்டான்.

சாப்பிட்டு முடித்துச் சமையல் அறைக்கு வந்த அனி அவர்கள் இருவரையும் வித்தியாசமாகப் பார்த்தபடி நிற்க.... ஹரிக்கும் மீனாவுக்கும் அவள் நின்ற தோரனையைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.

“என்ன டி அப்படிப் பார்க்கிற?” மீனா கேட்க....

“நீங்க ரெண்டு பேரும் இன்னைக்குத் தான் அம்மா அப்பா மாதிரி இருக்கீங்க. இப்படியே இருங்க.” எனச் சொல்லிவிட்டு சென்றாள்.

அவள் சொல்லி சென்றது ஒன்னும் மீனாவுக்குப் புரியவில்லை.... அவள் ஹரியை குழப்பத்துடன் பார்க்க.... “இன்னைக்குத் தான் நாம பார்க்க புருஷன் பொண்டாட்டி மாதிரி இருக்கோமாம். அதைத் தான் அப்படிச் சொல்லிட்டு போறா.... சின்னக் குழந்தை கூட நம்மைக் கவனிச்சு வச்சிருக்கு. இனி அனி முன்னாடி ரொம்பக் கவனமா இருக்கணும்.” என்றான் ஹரி.

 
SINDHU NARAYANAN

Well-known member
Member
:love: :love: :love:

அடடா மீனா ஹரிய இப்படி புலம்ப வச்சுட்டேயேம்மா...

இந்த கால பிள்ளைகள் எல்லா விஷயங்களிலும் நல்ல ஷார்ப்...
அவங்க முன்னாடி ரொம்ப
கவனமாக இருக்க வேண்டும்...

இனிமேலாவது அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்தா சரி...
 
Last edited:
Top