Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 97

Advertisement

SHALU shalu

Well-known member
Member
நல்ல நேரம் வந்ததும், முதல் வேளையாக தன் பெற்றோருக்கு அழைத்துச் சொல்லியவள், ருத்ராக்ஷியை அறையில் இருக்கச் செய்து விட்டு, மணமகன் வீட்டாரை வரவேற்கத் தயாரானாள் மஹாபத்ரா.

“நாம இப்போ கிளம்பலாம்” என்று அனைவருக்கும் பொதுவாக சொன்னார் கவிபாரதி.

உடனே அந்த நால்வரும் எழுந்து, தேவையானவற்றையும் எடுத்துக் கொண்டு சந்திரதேவ்வின் வீட்டிற்குக் கிளம்பினர்.

அதே சமயம், இங்கோ அறையில் இருந்தவளுக்குள் ஆர்வமும், தன்னவனைப் பார்க்கப் போகும் மகிழ்வும் ருத்ராக்ஷியின் முகம் மற்றும் அகத்தில் தாண்டவமாடியது.

அவளைத் தவிர்த்து மற்ற மூவரும் வாசலில் நின்று மணமகன் வீட்டாரை வரவேற்று உள்ளே அழைத்து வந்து அமர வைத்தார்கள்.

“என்ன‌ மாப்பிள்ளை சார், கொஞ்ச நேரம் முன்னாடி ருத்ராக்ஷியோட ஃபோட்டோ எதுவும் உங்களுக்கு வந்துச்சா?” என்று அவனிடம் கேலியாக வினவினாள் மஹாபத்ரா.

அதில் குழப்பமடைந்தவனோ,”ஃபோட்டோவா?” என்றான் ஸ்வரூபன்.

“ஆமாம். அப்பறம் எப்படி ருத்ராவோட டிரெஸ் கலரிலேயே மேட்சிங் ஆக டிரெஸ் போட்டு இருக்கீங்க!” என்று அவனிடம் சொல்லவும்,

“அப்படியா ங்க? எனக்குச் சத்தியமாக அவங்க டிரெஸ் கலர் தெரியாது!” என்று கூறி மெல்லிய புன்னகையை உதிர்த்தான்.

“பார்றா” என்று ஆச்சரியத்துடன் கூறினாள் மஹாபத்ரா.

“உங்களுக்குக் குடிக்கிறதுக்குக் காஃபியை எங்க வீட்டுப் பொண்ணுக்கிட்டே கொடுத்து அனுப்புறோம்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்த வீட்டிற்கு கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சனும் வந்து விடவே,

பூ வைக்கும் சடங்கை இனிதே நடத்த ஆயத்தம் செய்தனர்.

அதற்குள், அறைக்குச் சென்று,”ருத்ரா! உனக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் இருக்கே!” என்று அவளிடம் சொல்லி விட்டுக் கண்ணடித்தாள் மஹாபத்ரா.

“என்ன சர்ப்ரைஸ் அண்ணி?” என்று அவளும் ஆர்வத்துடன் வினவவும்,

“அதை வெளியே வந்தால் நீயே பார்த்து தெரிஞ்சுக்குவ” என்று கூறி விட்டு தன் கையிலிருந்த காஃபி டிரேயை நாத்தனாரிடம் தந்தவளோ,

“இதைக் கொண்டு போய் எல்லாருக்கும் கொடுத்துட்டு மாப்பிள்ளையை நல்லா பார்த்துக்கோ” என்று கூறி விட்டு அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் மஹாபத்ரா.

“பொண்ணு வந்தாச்சு!” என்று அனைவருக்கும் அறிவிப்பு கொடுத்தார் மிருதுளா.

“அந்தச் சேலையும், நகையும் அவளுக்குச் சூப்பராக இருக்கு!” என்று அவளைச் சிலாகித்துக் கூறினார் கனகரூபிணி.

அவள் நடந்து வந்து அனைவரையும் பார்த்துக் கைகளைக் கூப்பிக் கும்பிட்டாள் ருத்ராக்ஷி.

அவளது அலங்காரம் மற்றும் பண்பைப் பார்த்துக் காஷ்மீரன் மற்றும் சந்திரதேவ்வும் உவகை அடைந்து கொண்டனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மகிழ்வான உணர்வுகளில் இருக்க, இங்கே ஒருவனோ, ருத்ராக்ஷியின் புள் அழகைக் கண்களால் பருகிக் கொண்டிருந்தான்.

ஏனெனில், மஹாபத்ராவின் வாய்மொழியாக கேட்டதை இப்பொழுது தன் கண்களால் கண்டு கொண்டு இருக்கிறானே?

அவளது உடையின் நிறமும், தன்னுடையதும் ஒரே மாதிரியாக இருப்பதைப் பார்த்து விரிந்தப் புன்னகை செய்தான் ஸ்வரூபன்.

அதே போலவே, தன்னுடைய அழகான விழிகளை அசைத்து அவனது உடையை மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ருத்ராக்ஷி.

“நான் சொன்ன சர்ப்ரைஸ் இது தான் ம்மா” என்று போகிற போக்கில் அவளது காதில் ஓதி விட்டுச் சென்றாள் மஹாபத்ரா.

“தாங்க்ஸ் அண்ணி” என்றவளோ, ஸ்வரூபனை ஏறிட, அவளது மனதிலிருக்கும் உணர்வுகள் கண்களில் பிரதிபலித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மூச்சடைத்துப் போனது அவனுக்கு.

அதைப் புரிந்து கொண்டவளுக்குப் புன் சிரிப்பு வரவே உடனே அதை வெளிக் காட்டியவளோ,

தன்னிடமிருந்த டிரேயை அங்கேயிருந்த ஒவ்வொருவரது முன்னிலையிலும் கொண்டு போய் அவரவருக்கானக் கோப்பைகளை எடுத்துக் கொள்ள உதவி செய்தாள் ருத்ராக்ஷி.

அவர்களும் அவற்றைத் தங்களது கைக்கு இடமாற்றிக் கொண்டு முடித்ததும்,

இவர்களது காதல் நாடகத்தைக் கண்டும் காணாமல் இருந்த பெரியவர்களோ,”இங்கே வா ம்மா” என அவளைத் தன்னிடம் வரச் சொன்னவுடனேயே, அவரிடம் போனவளைத் தன்னருகே பாந்தமாக உட்கார வைத்துக் கொண்டார் கவிபாரதி.

அவளுமே எந்த விதமான சங்கட உணர்வுமின்றி அவருடன் அமர்ந்து கொள்ள, அனைவரது முகத்திலும் திருப்திப் புன்னகைப் படர்ந்தது.

“எங்கப் பொண்ணை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” என்ற கேள்வியைக் கேட்டு வைத்தாள் மஹாபத்ரா.

“மஹா!” என்று அவளை அடக்கப் போன மாமியாரிடம்,”ஊஹூம் அத்தை! உங்களோட மிரட்டல் எல்லாம் இங்கே செல்லுபடியாகாது! அவளுக்கு எல்லாருமே சப்போர்ட் தான் பண்ணுவாங்க” என்று புன்னகையுடன் உரைத்தான் காஷ்மீரன்.

“அப்படியா மாப்பிள்ளை?” எனக் கேட்டபடியே தங்களது மகளைப் பார்த்தார் கனகரூபிணி.

“ஹாஹா!” என்று அதைக் கேட்டுப் பெருமையாகச் சிரித்தாள் மஹாபத்ரா.

அவளுடன் இணைந்து அனைவரும் சிரித்து விட,”இங்கே வா” என அவளைத் தன்னுடன் இருத்திக் கொண்டவரோ,

தான் வீட்டிற்குச் செல்வதற்கு முன், இவளுக்கும், ருத்ராக்ஷிக்கும் மறக்காமல் திருஷ்டி சுத்திப் போட்டு விட்டுச் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டார் கனகரூபிணி.

“அங்கே ஊரில் இருக்கும் போது தான், உங்க ரெண்டு பேரையும் தனியாகப் பேச விடலை. இப்போதாவது நீங்கப் போய்ப் பேசிட்டு வர்றீங்களா?” என்று ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியிடம் வினவினார் மிருதுளா.

“என்னம்மா?” எனத் தன் மகளிடம் கேட்டார் சந்திரதேவ்.

“யெஸ் ப்பா” என்று அவர் கூறியதை ஆமோதித்தாள் ருத்ராக்ஷி.

“ஆர் யூ ஷூயர்?” என்று மீண்டுமொரு முறை அவளிடம் வினவினான் காஷ்மீரன்.

“ஆமாம் ண்ணா. இவருக்கு வீட்டைச் சுத்திக் காட்டிட்டு அப்படியே பேசிட்டு வர்றேன்” என்றாள் அவனது தங்கை.

“அப்போ ஓகே. போயிட்டு வாங்க” என்று அவர்களிடம் கூறி அனுப்பி வைத்து விட்டு,

அவர்கள் சென்றதும், மற்ற விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

“நீங்க முதல்ல யாரோட ரூமைப் பார்க்கனும்?” என்று அவனிடம் கேட்டாள் ருத்ராக்ஷி.

“உங்களோட ரூமையே காட்டுங்க” என்றான் ஸ்வரூபன்.

உடனே அவனைத் தனது அறைக்குக் கூட்டிப் போய் அங்கே இருந்தவற்றை அவனுக்குக் காட்டினாள்.

அதை முழுமையாகப் பார்த்து முடித்தவனோ,“உங்களை மாதிரியே அழகாகவும், அமைதியாகவும் இருக்கு” என்று பாராட்டிக் கூறி விட்டு,

“இன்னும் நிறைய பண்ணி வச்சிருக்கீங்களே?” என்று அவள் செய்து வைத்திருந்த அழகான மெழுகுவர்த்திகளைப் பார்த்து அவளிடம் வினவினான் ஸ்வரூபன்.

“எல்லாரும் கேட்டு இருக்காங்க‌. அதுக்கேத்த அளவுக்குச் செஞ்சு வைக்கனும்ல?” என்று அவனிடம் சொன்னாள் ருத்ராக்ஷி.

“அதுவும் கரெக்ட் தான்” என்றவாறு அவ்வறையை விட்டு வெளியேறினார்கள்.

அப்படியே அனைத்து அறைகளையும் பார்த்தவர்களோ, ஒரு விஸ்தாரமான இடத்தில் சென்று நின்று கொள்ள,

“ஆமாம். அன்னைக்கு ஏன் உன்கிட்ட தனியாகப் பேச எதுவும் இல்லைன்னு சொன்னீங்க?” என்று தான் ஞாபகம் வைத்திருந்ததை அவனிடம் கேட்டாள் ருத்ராக்ஷி.

“அதுவா? அப்போ நமக்கு இப்படி பூ வைக்கிற ஃபங்க்ஷன் கூட நடக்காமல் இருந்துச்சு ங்க. அதனால் தான், பேச வேண்டாம்னு இருந்தேன். ஆனால், இப்போ தான், நமக்கு தடை எதுவும் இல்லையே? அதான்” என்று அவளுக்கு விளக்கிக் கூறினான் ஸ்வரூபன்.

“ஓஹ்! சாரிங்க. நான் நீங்க வெட்கத்தில் என்கிட்ட பேசலைன்னு நினைச்சுட்டேன்” என்றதும், இப்போது தான் அவனுக்கு இலேசாக வெட்கம் வந்து விட்டது.

அதை அவள் ரசித்துக் கொண்டு இருக்கையிலேயே,”பேசி முடிச்சாச்சா?” என்று குரல் கொடுத்தாள் மஹாபத்ரா.

“ஹாங்! ஆமாம் ண்ணி” என்று அவளுக்குப் பதிலளித்தாள் ருத்ராக்ஷி.

“பூ வைக்கனும் டா ம்மா. சீக்கிரம் வாங்க” என்றார் சந்திரதேவ்.

உடனே அவ்விடத்திற்கு விரைந்தனர் இருவரும்.

இதுவரையில், ருத்ராக்ஷியின் வீட்டு உறவினராக வளைய வந்தவரோ, இப்போது மணமகனின் வீட்டாளாக மாறிப் போய்த் தன்னிடம் கொடுத்தப் பூவை ருத்ராக்ஷியின் தலையில் வைத்து விட்டார் மிருதுளா.

- தொடரும்
 
Superb பூ வச்சாச்சி, அடுத்து அடுத்து கல்யாண கொண்டாட்டங்கள் தான்.
🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
 
Top